நினைவு – 23

eiE6SA598903-68030bec

நினைவு – 23

மாணிக்கம் அர்ஜுனின் இயல்பான பேச்சில் திருதிருவென விழித்துக் கொண்டு வருணைத் திரும்பி பார்க்க அவனோ தனக்கு எல்லாம் தெரியும் என்பது போன்ற ஒரு தோரணையில் நின்று கொண்டிருந்தான்.

“என்ன மாமா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கீங்க? ஓஹ்! ஒருவேளை மாப்பிள்ளையை பார்த்த அதிர்ச்சியா?” அர்ஜுன் வேண்டுமென்றே அவரைப் பார்த்து நக்கல் கலந்த தொனியில் கேட்க வருணின் முன்னால் எதையும் காட்டிக் கொள்ள முடியாத நிலையில் தன் கையை பிசைந்து கொண்டு நின்றவர் யாராவது தங்களை கவனித்துக் கொண்டு நிற்கின்றனரா என்பதையும் கவனிக்க தவறவில்லை.

“உன.. உங்களுக்கு சரியா..கிடுச்சா?” மாணிக்கம் தடுமாற்றத்துடன் அர்ஜுனைப் பார்த்து வினவ

அவரைப் பார்த்து இயல்பாக புன்னகைத்து கொண்டபடியே ஆமோதிப்பாக தலையசைத்தவன்
“எந்தப் பிரச்சினைக்கும் ஒரு தீர்வு இருக்கும் தான் மாமா! அதே மாதிரி என்னோட பிரச்சினைக்கும் தீர்வு இல்லாமல் போய் விடுமா?” என்று கேட்க அவனின் கேள்வியில் அவரது முகம் காற்றிழந்த பலூன் போல நொடியில் சுருங்கிப் போனது.

“ஏன் அங்கிள் இவ்வளவு பெரிய விஷயத்தை எங்க கிட்ட இருந்து மறைச்சீங்க?” வருணின் கேள்வியில் தயக்கத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்தவர்

“நான் மறைக்கணும்னு எல்லாம் எதுவும் நினைக்கல தம்பி!” எனவும்

“அப்போ தொல்லை விட்டதுன்னு நினைத்து எதுவும் சொல்லாமல் விட்டீங்களா?” அர்ஜுன் சிறிது கோபத்துடன் அவரைப் பார்த்து வினவினான்.

“நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் எதுவும் இல்லை தம்பி! என் வைஃப் வர்ற நேரம் ஆகுது அவளுக்கு இந்த விடயம் எல்லாம் தெரிய வேண்டாம் ப்ளீஸ் தம்பி! இன்னொரு நாள் நான் உங்க கிட்ட எல்லாம் விலாவாரியாக சொல்லுறேன் இப்போ நான் கிளம்புறேன் என்னை மன்னிச்சுடுங்க! இந்த விஷயம் எல்லாம் நம்ம மூணு பேருக்கு உள்ளேயே இருக்கட்டும் ப்ளீஸ்!” மாணிக்கம் தன் இரு கரம் கூப்பி கெஞ்சலாக அவர்கள் இருவரையும் பார்த்து கூறி விட்டு அங்கிருந்து வேகமாக சென்று விடவும் வருண் அவரைப் பின் தொடர்ந்து செல்லப் போக அர்ஜுன் அவனது கையைப் பிடித்து கொண்டு வேண்டாம் என்று தலையசைக்க அவனோ சிறு சலிப்போடு தன் கையை விலக்கி எடுத்துக் கொண்டான்.

“ஏன்டா அவரை சும்மா விட்ட? இந்த ஏழு வருஷமாக நீ எவ்வளவு கஷ்டப்பட்டன்னு தெரியுமா? அப்போவே ஹரிணியைப் பற்றி ஏதாவது ஒரு தகவல் தெரிந்திருந்தாலும் உன்னை அப்போவே சரி பண்ணி இருந்து இருக்கலாம் ஆனா அதை எல்லாம் செய்ய விடாமல் இவரு தானே தடுத்து இருக்காரு! அப்படி நீ என்ன தப்பு பண்ணேன்னு இவ்வளவு பெரிய தண்டனையை உனக்கு கொடுத்தாரு அவரு? இன்னைக்கு இரண்டில் ஒன்று பார்த்து இருப்பேன் நீ தான் என்னை பேச விடாமல் தடுத்துட்ட!”

“கூல் டவுன் வருண் கண்ணா!”

“என்னத்த கூல் டவுன்? நீ எப்போ நடந்த விடயங்களை எல்லாம் சொன்னியோ அப்போ இருந்து அவர் மேல் எனக்கு கோபம் கட்டுப்பாடு இல்லாமல் வந்துட்டே இருக்கு!”

“என்ன இருந்தாலும் அவர் உன் மாமனார் டா!”

“வாட்? என் மாமனாரா? என்னடா உளர்ற?” வருண் அதிர்ச்சியாக அர்ஜுனைத் திரும்பி பார்க்க

அவனைப் பார்த்து வாய் விட்டு சிரித்துக் கொண்டே அவனது தோளில் தன் கையை போட்டு கொண்டவன்
“நிச்சயதார்த்தம் உனக்கு தானே நடந்து இருக்கு அப்போ அவர் உன் மாமனார் தானே?” எனவும்

“அர்ஜுன் விளையாடாதே! அது எல்லாம் வெறும் டிராமா! அந்த நிச்சயதார்த்தை எல்லாம் நீ எதுவும் பெரிதாக எடுக்க வேண்டாம்!” வருண் தவிப்போடு தன் நண்பனை பார்த்து கூறினான்.

“அது டிராமாவோ, இல்லையோ எனக்கும், பிரியாவுக்கும் நிச்சயதார்த்தம் நடக்கும் வரைக்கும் இந்த நிச்சயதார்த்தம் உண்மை தான்!”

“அர்ஜுன்! ஆனா..”

“ஆனாவும் இல்லை ஆவன்னாவும் இல்லை! வீட்டுக்கு போகலாம் வா அம்மா காத்துட்டு இருப்பாங்க!” அர்ஜுன் சிறு புன்னகையுடன் வருணின் கை பிடித்து காரில் ஏறி அமரச் செய்து விட்டு காரை இயக்க அந்த இடத்தில் இருந்து புழுதியை கிளப்பிக் கொண்டு கார் இலாவகமாக நகர்ந்து சென்றது.

மறுபுறம் மாணிக்கம் என்னவென்று சொல்ல முடியாத ஒரு மனநிலையோடு தன் வண்டியை செலுத்திக் கொண்டிருக்க அந்த வண்டியின் பக்க கண்ணாடி வழியே தன் கணவரின் முகத்தைப் பார்த்து கொண்டபடியே ஜெயலஷ்மி அமைதியாக அமர்ந்திருந்தார்.

தான் ஏதாவது பேசாமல் அமைதியாக இருந்தால் ஏதாவது ஒரு கதையைப் பற்றி பேசி தன் மனநிலையை ஒரே நொடியில் மாற்றி விடும் தன் கணவர் இன்று வழமைக்கு மாறாக ஏதோ ஒரு சிந்தனையோடு அமர்ந்திருப்பது அவருக்கு வித்தியாசமாகவே தென்பட்டது.

வீட்டுக்கு வந்து சேர்ந்த பின்பும் மாணிக்கத்தின் முகத்தில் இருந்த சிந்தனையின் சாயல்கள் மறையாது இருக்கவே அவரின் முன்னால் வந்து நின்று கொண்டவர்
“என்னங்க ஆச்சு? ஆபிஸில் ஏதாவது குழப்பமா? உங்க முகமே சரியில்லை காலையில் வீட்டில் இருந்து போகும் போது ரொம்ப நல்லா தானே இருந்தீங்க? லஞ்ச் டைமில் பார்த்த போது கூட நல்லா தானே பேசுனீங்க! இப்போ திடீர்னு என்னங்க ஆச்சு?” என்று கேட்கவும்

அவரைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தவர்
“ஒ.. ஒன்னும் இல்லை லஷ்மி” என்று விட்டு அவரை நிமிர்ந்தும் பார்க்காமல் அங்கிருந்து அவசரமாக விலகிச் சென்றார்.

“இவருக்கு என்ன தான் ஆச்சோ தெரியல!” தனக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டபடி ஜெயலஷ்மி தன் வேலைகளை கவனிக்க சென்று விட மறுபுறம் மாணிக்கம் தங்கள் அறைக்குள் பலத்த சிந்தனைகளுடன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார்.

அந்த கணம் அவர் மனம் முழுவதும் நிறைந்திருந்த விடயம் ஏழு வருடங்களுக்கு முன்பு ஹரிணியின் விபத்தின் முதல் நாள் நடந்த விடயங்களும், அவள் விபத்தின் பின்னர் அவர் செய்த மறுக்க முடியாத மன்னிக்க முடியாத விடயங்களுமே.

ஏழு வருடங்களுக்கு முன்பு…..

அன்று தனது அலுவலக வேலை முடிந்து ஹரிணியின் திருமண விடயம் சம்பந்தமாக அவரது நண்பர் ஒருவர் அவரை வந்து சந்திக்கும் படி மாணிக்கத்திடம் தெரிவித்திருக்க பலவிதமான எதிர்பார்ப்புகளுடன் அவரை சந்திக்க அவர் வர சொல்லி இருந்த ஹோட்டலை வந்து சேர்ந்திருந்தவர் பெரும் ஆவலுடன் உள்ளே நுழைய அந்த நேரம் பார்த்து ஆறடி உயரத்தில் ஒரு நபர் அவர் முன்னால் மோதி நின்றான்.

ஒருவருக்கு ஒருவர் அந்த நேரத்தில் அங்கே வரக்கூடும் என்று எதிர்பார்த்து இருக்காத காரணத்தினால் இருவர் மேலும் தவறு இருந்ததனால் அந்த இளைஞன் மன்னிப்பு கேட்டதுமே அவனைப் பார்த்து பரவாயில்லை என்று சொல்லி விட்டு அங்கிருந்து செல்லப் போனவர் அந்த இளைஞனின் தொலைபேசி கீழே விழுந்து கிடப்பதை பார்த்து விட்டு அதை எடுத்து அவனிடம் கொடுப்பதற்காக நீட்ட அதில் தெரிந்த புகைப்படமோ அவருக்கு உலகத்தையே இரண்டாக பிளக்கச் செய்தது போல இருந்தது.

அதில் புன்னகை முகமாக ஹரிணி நின்று கொண்டிருக்க தடுமாற்றமும், தவிப்பும் ஒன்று சேர அவனைப் பார்த்து அது யார் என்று அவர் கேட்க அதற்கு அவனோ கோபமாக பதிலளித்து விட்டு அவரைத் தாண்டி சென்றிருந்தான்.

ஒரு தந்தையாக இன்னொரு ஆடவனின் தொலைபேசியில் தன் மகளின் புகைப்படத்தை பார்த்ததும் கோபத்துடன் அவன் முன்னால் வந்து நின்றவர் மேலும் மேலும் அவனை கேள்விகளால் குடைய அதற்கு அவன் அளித்த பதில்களோ அவர் முற்றிலும் எதிர்பாராத பதில்கள்.

தன் செல்ல மகள் சிறு வயது முதல் எந்தவொரு விடயங்களையும் தன்னிடம் மறைத்திராதவள் இவ்வளவு பெரிய விடயத்தை தன்னிடம் சொல்லாமல் விட்டு விட்டாளா என்ற கோபத்தோடும், ஆற்றாமையோடும்
“என் பொண்ணும் உங்களை விரும்புவதாக சொன்னாளா?” என்று கேட்க இம்முறை அவனது தலை மறுப்பாக அசைந்தது.

அத்தனை நேரம் தன் மகளை எண்ணி கலங்கிப் போய் இருந்தவர் இப்போது அவனிடம் இருந்து வந்த தலையசைவில் சந்தோஷம் பொங்க அதே நேரம் தன் மகள் தன்னை மீறி எதுவும் செய்யமாட்டாள் என்ற பெருமையும் ஒன்று சேர கடும் வார்த்தைகளை எல்லாம் அவனை நோக்கி அள்ளி வீசியிருந்தார்.

தான் பேசிய பேச்சுக்களை எல்லாம் கேட்டு அவன் ஒதுங்கி சென்று விடுவான் என்று அவர் நினைத்திருக்க அவனோ எந்தவொரு அலட்டலும் இல்லாமல் அவர் முன்னால் கம்பீரமாக வந்து நின்று
“உங்களுக்கு என்னைப் பற்றி இன்னும் சரியாக எதுவும் தெரியல! எனக்கு இப்போ என்கூட என்னைப் பெற்ற அம்மா, அப்பா வேணும்னா இல்லாமல் இருக்கலாம் ஆனா கடைசி வரைக்கும் என்னை பாசமாக பார்த்துக் கொள்ளக்கூடிய ஒரு குடும்பம் எனக்கு இருக்கு! இன்னைக்கு எந்த வாயால் நீங்க என்னை இவ்வளவு மட்டமாக பேசிட்டு போறீங்கலோ நாளைக்கு அதே வாயால் உங்களை என்னை பாசமாக மாப்பிள்ளைன்னு கூப்பிட வைப்பேன்! உங்க பொண்ணை உங்க கையாலேயே என் கையில் பிடித்து கொடுக்கவும் வைப்பேன்! எல்லாவற்றுக்கும் தயாராக இருங்க மாமா! வரட்டா மாமா?” சவால் விடுவது போல கூறி விட்டு சென்றிருக்க அவருக்கு அந்த கணமே கோபம் எல்லையில்லாமல் பெருகத் தொடங்கியது.

இருப்பினும் தான் இருக்கும் இடத்தை கருத்தில் கொண்டு அமைதியாக அங்கிருந்து வெளியேறி வந்தவர் அன்று முழுவதும் இந்த பிரச்சினையை எப்படி கையாள்வது என்று தெரியாமல் தங்கள் வீட்டுத் தோட்டத்தில் அங்குமிங்கும் நடந்து கொண்டே யோசித்துக் கொண்டிருந்தார்.

அப்போது தன்னறைக்குள் இருந்து படித்துக் கொண்டிருந்த ஹரிணி தன் தந்தை தோட்டத்தில் நடமாடிக் கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு அவரைத் தேடி அந்த இடத்திற்கு வந்து விட அவளை அந்த நேரத்தில் அங்கு எதிர்பாராத மாணிக்கம்
“ஹரிணி! நீ இங்கே என்னம்மா பண்ணுற? நீ இன்னும் தூங்கலயா?” என்று கேட்க

“நான் படிச்சுட்டு தூங்கத் தான் ரெடி ஆகினேன்பா ஆனா நீங்க இங்கே இந்த நேரத்தில் தூங்காமல் அங்கேயும் இங்கேயும் நடமாடிட்டு இருந்தீங்களா அது தான் பார்க்க வந்தேன்” தன் தந்தையை குழப்பத்துடன் பார்த்து கொண்டே ஹரிணி பதிலளிக்க

அவளது தலையை வருடிக் கொடுத்தவர்
“அது ஒண்ணும் இல்லை ம்மா! எனக்கு தூக்கம் வரல நீ போய் தூங்கு நாளைக்கு காலேஜ் இருக்கு இல்லையா? போம்மா போய் தூங்கு!” என்றவாறே அவளை அனுப்பி வைக்க அவளோ தன் தந்தையை திரும்பி திரும்பி பார்த்தபடியே அங்கிருந்து நகர்ந்து சென்றாள்.

சிறிது தூரம் ஹரிணி சென்றதும்
“ஹரிணி ஒரு நிமிடம்!” என்றவாறே அவள் முன் வந்து நின்ற மாணிக்கம்

“அர்ஜுன் யாரு?” என்று கேட்க

அவரது அந்த திடீர் கேள்வியில் அவளது கண்கள் இரண்டும் குடை போல் விரிய
“அர்…அர்ஜுனா?” தடுமாற்றத்துடன் அவரைப் பார்த்து திருதிருவென விழித்துக் கொண்டு நின்றாள்.

அர்ஜுனின் பெயரைக் கேட்டதும் அவளது முகத்தில் தெரிந்த மாற்றங்களே அவள் மனதிற்குள் அவன் எந்த இடத்தில் இருக்கின்றான் என்பதை அவருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி விட அவள் கைகளை பிடித்து கொண்டு அங்கிருந்த நாற்காலியில் அவளை அமரச் செய்து விட்டு அவளருகில் அமர்ந்து கொண்டவர்
“சொல்லும்மா அர்ஜுன் யாரு?” என்று கேட்க

தயக்கத்துடன் அவரை நிமிர்ந்து பார்த்தவள்
“அர்ஜுனை நான் லவ் பண்ணுறேன்பா” என்று கூற அவருக்கோ கண்கள் இரண்டையும் இருட்டிக் கொண்டு வருவது போல இருந்தது.

“எனக்கு காலேஜ் போன முதல் நாளில் இருந்து அவரைத் தெரியும் பா!”

“………”

“ரொம்ப இன்டலிஜன்ட், சைலண்ட், எந்த கெட்ட பழக்கமும் இல்லை!”

“………”

“சொந்தமாக ஒரு பிசினஸ் கம்பெனி வைத்து இருக்காங்க! உங்களுக்கும் அவரைப் பார்த்தா ரொம்ப பிடிக்கும் பா!”

“……..”

“என்னப்பா எதுவும் பேசாமல் இருக்கீங்க? அது சரி உங்களுக்கு எப்படி அர்ஜுனைத் தெரியும்?”

“நான் உன் அப்பா ஹரிணி!” மாணிக்கத்தின் பதிலில் ஹரிணிப்பிரியா தன் தலையை குனிந்து கொள்ள

சிறு புன்னகையுடன் அவளது தலையை வருடிக் கொடுத்தவர்
“நீ இதைப் பற்றி எல்லாம் யோசிக்காமல் நல்லபடியாக படிம்மா! எதுவாக இருந்தாலும் காலேஜ் படிப்பு முடிந்தவுடன் பார்க்கலாம் சரியா?” என்று கேட்க அவசரமாக அவரைப் பார்த்து ஆமோதிப்பாக தலையசைத்தவள் புன்னகை முகமாக வீட்டை நோக்கி ஓடிச் சென்று விட அவரும் இயல்பான மனநிலையுடன் தங்கள் அறையை நோக்கி நடந்து சென்றார்.

ஆரம்பத்தில் அர்ஜுனுடன் பேசிய போது அவர் கோபப்பட்டு இருந்தாலும் அவனிடம் தெரிந்த தைரியம், கம்பீரம், நேர்மை என அவனது எல்லா நல்ல குணங்களையும் அவர் கவனிக்க மறந்திருக்கவில்லை.

எப்போது ஹரிணியின் மனதிலும் அவன் தான் இருக்கின்றான் என்று தெரிந்து கொண்டாரோ அப்போதே அவனை தன் மகளுக்கே திருமணம் செய்து வைத்து விடலாம் என்று முடிவெடுத்து இருந்தவர் ஹரிணியின் படிப்பு முடியட்டும் என்று எண்ணி தற்காலிகமாக தன் சிந்தனைகளை எல்லாம் தள்ளி வைத்திருந்தார்.

ஆனால் நினைப்பது எல்லாம் எல்லோர் வாழ்விலும் நடந்து விடுவது இல்லையே.

அடுத்த நாள் வழக்கம் போல தங்கள் வேலை முடிந்து அலுவலகத்தில் இருந்து வெளியேறி வந்த மாணிக்கம் தன் தொலைபேசி சிணுங்கலில் அதை எடுத்து தன் காதில் பொருத்த மறுமுனையில் சொன்ன செய்தியோ அவரை முற்றிலும் நிலை குலைந்து போகச் செய்திருந்தது.

ஹரிணிக்கு விபத்து நடந்த விடயத்தை கேள்வி பட்டதுமே விரைந்து சென்றவர்கள் அவள் அனுமதிக்கப்பட்டிருந்த வைத்தியசாலைக்கு தங்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தான் வந்து சேர்ந்தனர் என்று கூற வேண்டும்.

அங்கே அவளது நண்பிகள் இருவரும் அழுதழுது முகம் சிவக்க நின்று கொண்டிருக்க அவர்களை நோக்கி நடந்து சென்றவர்
“எ..எப்ப…எப்படி இப்படி ஆச்சு?” என்று கேட்க அவளது தோழிகள் இருவரும் தயக்கத்துடன் ஒருவரை ஒருவர் திரும்பி பார்த்துக் கொண்டு நின்றனர்.

“தயவுசெய்து சொல்லுங்கம்மா என்ன ஆச்சு?”

“அது அங்கிள்..”

“உங்களை கெஞ்சிக் கேட்கிறேன் சொல்லுங்கம்மா!”

“எங்களை மன்னிச்சுடுங்க அங்கிள்” ஹரிணியின் தோழிகளில் ஒருத்தி அர்ஜுனை சந்திக்க காத்திருந்தது முதல் ஹரிணிக்கு விபத்து நடந்தது வரை ஒன்று விடாமல் சொல்லி இருக்க

அவர்கள் கூறியதை எல்லாம் கேட்டு அமைதியாக நின்று கொண்டிருந்தவர் முதல் நாள் இரவு தான் மனதிற்குள் எடுத்த முடிவை எல்லாம் தகர்த்து எறிந்து விட்டு
“உங்க பேரண்ட்ஸை நான் கொஞ்சம் சந்திக்கணும்” என்று கூறவே அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் குழப்பத்துடன் திரும்பி பார்த்துக் கொண்டனர்.

“பயப்படாதீங்க ம்மா! நான் பொதுவாக பேசத்தான் கேட்டேன்” என்று மாணிக்கம் பேசிக் கொண்டு இருந்த வேளையில் அந்த பெண்கள் இருவரது பெற்றோரும் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்திருந்தனர்.

“ஓஹ்! நான் சொல்ல முன்னாடியே வந்துட்டாங்களா? அப்போ இன்னும் வசதியாக போச்சு!” இயல்பாக புன்னகைத்து கொண்டபடியே அவர்கள் முன்னால் சென்று நின்றவர்

“உங்க பொண்ணுங்களை காலேஜிற்கு காதல் தூது அனுப்ப தான் அனுப்பி வைத்தீங்களா?” என்று கேட்க அங்கே நின்று கொண்டிருந்த அனைவருமே அவரை அதிர்ச்சியாக நிமிர்ந்து பார்த்தனர்.

ஜெயலஷ்மி, விஷ்ணுப்பிரியா மற்றும் கிருஷ்ணா ஹரிணி வைக்கப்பட்டிருந்த அறையின் அருகில் நின்று கொண்டிருந்ததனால் மாணிக்கம் பேசியது எதுவும் அவர்களுக்கு தெரிந்து கொள்ளப்படாமலேயே போனது.

“நீங்க என்ன பேசுறீங்க?” அங்கே நின்று கொண்டிருந்த பெற்றோர்களில் ஒருவர் மாணிக்கத்தை குழப்பத்துடன் பார்த்து வினவ

அவரோ
“உங்க பொண்ணுங்க இரண்டு பேராலும் தான் என் பொண்ணு இந்த நிலையில் இருக்கா நான் இப்போவே போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளெயிண்ட் பண்ண போறேன் என் பொண்ணை தேவையில்லாத விடயத்தை செய்ய சொல்லி அவளுக்கு இப்படி ஒரு ஆக்சிடென்ட் நடக்க இவங்க தான் காரணம்! இவங்க மட்டும் அங்கே இருக்க முடியாது என்று சொல்லி இருந்தால் இந்த விபத்து நடந்து இருக்காது இப்படி என் பொண்ணை படுத்த படுக்கையாக்க எவ்வளவு பணம் வாங்குனீங்க? உங்களுக்கு எல்லாம் அசிங்கமாக இல்லையா? நாளைக்கு போலீஸ், மீடியான்னு ஒரு இடம் விடாமல் உங்களை எல்லாம் கொண்டு போய் நிறுத்துவேன் உங்க எல்லோரையும் கோர்ட், கேஸ்ன்னு அலைய வைத்தாவது என் பொண்ணுக்கு நீதி கிடைக்க வைப்பேன் படிக்குற வயதில் படிக்காமல் காதலுக்கு தூது போறீங்களா?” இல்லாத விடயங்களை எல்லாம் சேர்த்து திரிபு படுத்திக்கூற தங்கள் பெண் பிள்ளைகளின் வாழ்வு வீணாகி விடும் என்கிற அச்சத்திலும், தங்கள் பிள்ளைகளின் வார்த்தைகளை காது கொடுத்து கேட்கவும் நேரமின்றி அவர்கள் மேல் அளவில்லா கோபத்தோடு அப்போதே அவர்கள் அந்த ஊரை விட்டே செல்ல முடிவெடுத்திருந்தனர்.

நீதிமன்றம், போலீஸ், வழக்கு என ஒரு சாதாரண மனிதனை எந்த இடத்தை வைத்து பலவீனப்படுத்தலாம் என்று அறிந்து வைத்தாற் போல மாணிக்கம் பேசியது சரியாக அதன் தாக்கத்தை ஆரம்பித்திருக்க தான் நினைத்ததை நடத்தி முடித்து விட்ட திருப்தியோடு தன் அடுத்த கட்ட நடவடிக்கைகளை பற்றி அவர் சிந்திக்க தொடங்கியிருந்தார்.

அவர்கள் அங்கிருந்து வெளியேறி சென்றிருந்த அடுத்த கணமே ஹரிணியின் காலேஜிற்கு சென்றவர் அங்கே இருந்தவர்களிடம் கெஞ்சி கூத்தாடி அவளது உடைமைகளை எல்லாம் வாங்கி வந்தது மட்டுமின்றி அந்த விபத்தைப் பற்றி வெளியே சொல்லி விட வேண்டாம் என்று பணம் கொடுத்து விட்டு வரவும் தவறவில்லை.

ஏற்கனவே அந்த கல்லூரி நிர்வாகத்தினர் இந்த விபத்தை பற்றி வெளியே எதுவும் தெரிந்து விடக் கூடாது என்று எண்ணி இருக்க மாணிக்கத்திற்கோ அவர் நினைத்து வந்த வேலை இலகுவாக முடிந்திருந்தது.

அர்ஜுனால் தான் இத்தனை பிரச்சினைகளும் என்று எண்ணி அவசர அவசரமாக அவன் தன் மகளை மறுபடியும் தேடி வந்து விடக்கூடாது என்று முடிவெடுத்து இருந்தவர் எல்லா விடயங்களையும் துரித கதியில் முடித்திருந்தாலும் மறுபடியும் ஏழு வருடங்கள் கழித்து இப்போது அவர் செய்த தவறுகள் எல்லாம் அவர் முன்னால் வந்து நின்று அவரைப் பார்த்து ஏளனமாக கை கொட்டி சிரித்தது.

அர்ஜுன் என்கிற ஒருவன் தன் மகளின் வாழ்வில் இனி இல்லவே இல்லை என்று அவர் எண்ணியிருந்த வேளை மறுபடியும் அவனை ஹாஸ்பிடலில் வைத்து அப்படியொரு நிலையில் பார்த்ததுமே அவருக்கு ஒட்டுமொத்த உலகமும் தன் சுழற்சியை நிறுத்தியது போன்று தான் இருந்தது.

அவன் சித்த பிரமை நிலையிலும் தன் மகளின் பெயரை சொல்லி கொண்டு இருப்பது மட்டுமல்லாமல் அவளை சரியாக அடையாளம் வேறு கண்டு கொண்டது அவருக்கு இன்னமும் பயத்தை அதிகரிக்கச் செய்திருந்தது.

அடுத்தவர் முன்னிலையில் எதையும் காண்பித்து கொள்ளாமல் இயல்பாக தன்னைக் காட்டிக் கொண்டவர் எப்படியாவது ஹரிணியை அவனிடம் இருந்து பிரித்து விட வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் அவளுக்கும் வருணுக்குமான நிச்சயதார்த்தத்தை அவசர அவசரமாக நடத்த ஏற்பாடு செய்திருந்தார்.

நிச்சயதார்த்தம் முடிந்து திருமணத்திற்கான நாளும் குறிக்கப்பட்ட பின்னர் இனி அர்ஜுன் குணமாகவே மாட்டான் தான் செய்த தவறுகள் எல்லாம் தன்னோடே மறைந்து போகட்டும் என்று அவர் எண்ணியிருக்க இப்போது வெகு இயல்பாக அவன் தன் முன்னால் வந்து நின்று அன்று தன்னிடம் விட்டு சென்ற சவாலைப் பற்றி பேசுவதைக் கேட்டு அவருக்கு சப்தநாடிகளும் ஒடுங்கி போய் விட்டது.

எல்லாம் முடிந்து விட்டது என்று அவன் நினைத்திருக்க இப்போது தான் எல்லாம் ஆரம்பித்து இருக்கிறது என்பதை அவருக்கு யார் புரிய வைக்க கூடும்?

விதி அதன் வேலையை சிறப்பாக வைத்து செய்யக் காத்திருக்க அடுத்த நாள் விடியல் அலுங்காமல் குலுங்காமல் இன்னுமொரு அதிர்ச்சியை அவருக்கு வழங்க நேரம் பார்த்து காத்திருந்தது……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!