பொன்மகள் வந்தாள்.4.🌹
பொன்மகள் வந்தாள்.4.🌹
பொன்மகள் வந்தாள்.4.
“இப்ப எதுக்கு துப்பட்டாவ சரி பண்ணின?”
உக்கிரமாகத் தன்னைப் பார்த்து விரல் நீட்டிக் கேட்டவனை, விழி தெறித்து விழும் அளவிற்குப்பார்த்துக் கொண்டிருந்தாள் பொம்மி.
“ஒழுங்கா இருக்கற துப்பட்டாவ, ஒரு பொண்ணு, ஆம்பளயப் பார்த்தவுடனே சரி பண்ணினா அது அவனுக்கு எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா?”
“இல்ல… அது… எ..எ..ப்பவும் போல… எதேச்சையா… ப…ப…ண்றது தான்.” பெண்ணவளின் வாய்க்குள் வார்த்தைகள் பல்லாங்குழி ஆடியது.
“இப்ப எதுக்கு நீ வைப்ரேட் மோடுக்குப் போற. வாயெல்லாம் ஏன் டைப்படிக்குது.” பற்களைக் கடித்துக் கொண்டு இரைந்தான் அடிக்குரலில்.
‘பின்ன… இப்படி ஜீபூம்பா மாதிரி டிஷ்ஷ்னு வந்து நின்னா டைப்படிக்காம… வேற என்ன பண்ணும்?’ என மனதிற்குள் அவனை அர்ச்சித்துக் கொண்டிருக்க,
“கட்டிப்புடிச்சேனா… கையப்படிச்சு இழுத்தேனா? இல்ல… முத்…” என நடுங்கிய அவள் இதழ்களைப் பார்த்தவாறு அவனது பார்வையை அவளது இதழ்களில் ஹோல்டிங் மோடில் போட,
அவனை, அவள் ‘பேஏஏ…’ வெனப் பார்த்து வைக்க… இன்னும் கோபம் அதிகமாகியது அவனுக்கு.
“உனக்கு வேணா அது எதேச்சையா இருக்கலாம். ஆனா எனக்கு அது எவ்வளவு பெரிய அசிங்கம் தெரியுமா? ஒருத்தனைப் பார்த்தவுடனே பொம்பள முந்தானையை சரி பண்றான்னா அவன் பார்வை சரியில்லைனு அர்த்தம்.”
“நீங்களா ஏதாவது கற்பனை பண்ணிப் பேசாதீங்க. அது எதேச்சையா நடந்ததுனு சொல்றேன்ல.” இப்பொழுது சற்று நிதானித்திருந்தாள்.
“சரி… அது எதேச்சையா நடந்தது. ஆனா… மூனு நாளா ஏன் கிரவுண்ட் ஃப்ளோர்க்கு வரல?”
அவன் கேள்விக்கு என்னவென்று பதில் சொல்வாள். உன் சிரித்த முகம் பார்த்தால் நான் பலவீனமாகிப் போவேன் என்றா சொல்ல முடியும்?
அவனது விருப்பத்தைத் தெரிவித்த பிறகு, இரண்டு மூன்று நாட்களாக பொம்மி கீழ்தளம் செல்லவில்லை. அவனும் பொறுப்பான முதலாளியாகப் பொறுமையை இழுத்துப் பிடித்துப் பார்த்தான். ஆனால் அவள்மேல் ஆசைகொண்ட மனது பொறுப்பிலிருந்து சற்று விதிவிலக்கு கேட்டது.
காளையவன் கன்னியமாகத் தன் காதலைத் தெரிவித்திருக்க, மங்கையவள் அதற்கு மறுப்பும் தெரிவித்திருக்க, அவனோ ஏனென்று காரணம் தெரியாமல் குழம்பிக் கொண்டிருக்க, மேலும் அவள் தன்னைப் பார்ப்பதையும் தவிர்ப்பது புரிய… அது ஏதோ தன்னை தப்பானவனாக உருவகப்படுத்துவது போலிருக்க… கோபம் எல்லையைக் கடந்தது.
அவள் அவனை ஒதுக்குவது, அவனை அவமானப் படுத்துவதாகத் தோன்ற, சிசிடிவி திரையில் ஃபர்னிச்சர் தளத்தைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தவன், அங்கு இன்னும் எந்த கஸ்டமரும் வராமலிருக்க, கருப்பட்டியிடம் பில்லிங் கை ஒப்படைத்துவிட்டு, மூன்றாவது தளத்தின் சிசிடிவி காட்சிகளை ஹோல்டிங்கில் போட்டவன்… மேலே ஏறி வந்தான்.
முன்தினம் வந்த ஒரு வாடிக்கையாளர் ஷோஃபா ஒன்றில் ஏதோ டேமேஜ் இருப்பதாகச் சுட்டிச் செல்ல…அதைக் குனிந்து பார்வையிட்டுக் கொண்டிருந்தாள்.
மல்லிச் சரத்துடன் கூடிய சடை குனிந்ததில் முன்புறம் விழுந்து கிடக்க, அதை தூக்கி பின்புறம் வீசியவாறு… குனிந்திருந்தவள் நிமிர… திடுமெனத் தன்முன் வந்து நின்றவனைப் பார்த்தவள்… திடுக்கிட்டு, ஓரெட்டுப் பின்னே நகர்ந்தவளது கைகள் அனிச்சையாகத் துப்பட்டாவை சரி செய்ய… ஏற்கனவே தன்னைப்பார்ப்பதைத் தவிர்ப்பதில் கோபமாக இருந்தவனுக்கு அக்கோபத்தில் இன்னும் நெய் என்ன… பெட்ரோலே வார்த்தது எனச்சொல்லும் அளவிற்கு இருந்தது அவளது அச்செயல்.
“என்னமோ நான் உன்னைப் பலவந்தப்படுத்தின மாதிரியும், என்கிட்ட இருந்து நீ தப்பிக்க முயற்சி பண்ற மாதிரி இருக்கு நீ பண்றதெல்லாம்.”
“சார்… நீங்க ஏதேதோ கற்பனை பண்ணிக்கறீங்க. கருப்பட்டி டிரெய்ன் ஆகட்டும்னு தான் கிரவுண்ட் ஃப்ளோர சூப்பர்வைஸ் பண்ணச் சொன்னே.”
ஏன் கீழ்தளம் வரவில்லை எனக் கேள்வி எழும் என்றே பதிலைத் தயார்படுத்தி வைத்திருந்தது போல் இருந்தது அவளது பதிலும்.
“இங்க நீ முதலாளியா? இல்ல… நான் முதலாளியா? உங்களுக்கு நீங்களே அசிஸ்டென்ட் போட்டுக்குவீங்களோ? யாருக்கு எங்க வேலை கொடுக்கணும்னு யார் முடிவு பண்றது?” அவள் மீதிருந்த கோபம் அவன் வார்த்தைகளைக் கட்டவிழ்த்து விட,
“சார் நீங்க முதலாளியா இருக்கலாம். ஆனா சூப்பர்வைசர் நான்தான். யார்யாருக்கு எந்த ஃப்ளோர்னு நான்தான் சொல்லணும். அதைச் சொன்னதே நீங்க தான்.” நிதானமாகவே அவனுக்குப் பதிலுறைத்தாள் அவள்.
வேலைக்கு வந்த புதிதில் அவளுக்கும் எல்லாமும் தெரிய வேண்டும் என்பதற்காக, அவன் தான் அந்த உரிமையைக் கொடுத்திருந்தான். இப்பொழுது அதை அவள் நினைவூட்ட, “நான் ஒன்னு நினைச்சு அன்னைக்கி அதைச் சொன்னே. நாம நினைச்சது எங்கே நடக்குது.”
அவன் அங்கலாய்த்துக் கொண்டதன் அர்த்தம் புரிந்தவள் அமைதியாக நின்றாள்.
“இப்பவும் ஏன் என்னையப் புடிக்கலைனு சொன்னேனு தெரியல?” அவள் முகத்தைத் கூர்ந்து பார்த்து வெப்பமூச்சோடு கேட்க, அந்தப் பார்வைசொல்லும் சேதி அறியாதவளா என்ன? ‘உனக்கும் என்னைப் பிடிச்சிருக்கு.’ என்றது அவனது பார்வை.
“உங்களை யாராவது பிடிக்கலைனு சொல்லுவாங்களா சார்? நம்ம பிள்ளைககிட்ட கேட்டுப் பாருங்க. உங்களுக்குனு தனி ஆர்மியே உருவாக்குவாங்க.” சிரித்துக் கொண்டே சமாளிக்க,
“நான் கேட்டது அவங்களோட விருப்பமில்ல. உன்னோட சம்மதம். அதுதான் பிடிக்கலைனு சொல்லிட்டியே?”
“பிடிக்கலைனு சொல்லல சார். ஒரு பொறுப்பான மகனா, பாசமுள்ள தம்பியா, அன்பான தாய்மாமனா, கண்டிப்போட அக்கறையும் கலந்த முதலாளியா உங்கள ரொம்பப் பிடிக்கும்.” அவள் பட்டியல் போட்டுக் கூற,
“இத்தனை கேரக்டர்ல லவ்வர் கேரக்டர் மட்டும் புடிக்காமப் போச்சு… ம்ம்ம்…”
“பிடித்தம் வேற. வாழ்க்கை வேற சார். மல்லுக்கட்டி ஆசைய வரவைக்க முடியாது.” அவளது பதில் எனக்கு உன்மீது ஆசையில்லை… வற்புறுத்தாதே என்பது போலிருக்க,
“அடிங்க… என்னையப் பாத்தா விரல் சூப்புற பையன் மாதிரித் தெரியுதா? இல்ல… மாங்காமாக்கான் மாதிரித் தெரியுறேனா?” என மீண்டும் கோபத்தில் நெற்றிக்கண் திறந்தான்.
“………” அவனது கோபத்தில் உள்ளுக்குள் பயந்தாலும் அவனை நேருக்கு நேர் பார்த்து நின்றாள் அசையாமல்.
‘அசராம நிக்குறா பாரு.’ என எண்ணிக் கொண்டிருக்க, ஏற்கனவே திடீரெனத் தன்முன் வந்து நின்றவனைப் பார்த்தவள் ஓரெட்டுப் பின்னால் சென்றிருக்க, அவனும் அவளை நோக்கி ஓரடி எடுத்து வைத்தான். அவள் மீண்டும் பின் செல்ல, பின்னாலிருந்த ஷோஃபாவில் தடுக்கி தொப்பென அமர்ந்தாள். அவள் முன் குனிந்து ஷோஃபாவின் இருபுறமும் கையை ஊன்றியவன்,
“நமக்கு என்ன டீன் ஏஜ்னு நெனப்பா? ஒருத்தரைப் பாத்து ஒருத்தர் ஜொள்ளு விடறதுக்கு. இத்தனை வருஷத்துல எத்தனை பொண்ணுகளப் பாத்திருப்பே?” என்க,
அவனது பேச்சைக் கேட்டவளது பார்வை போன போக்கைப் பார்த்தவன்,
“ஹேஏஏ… சீச்ச்சீ… நீ நினைக்குற அர்த்தத்துல இல்ல. வியாபாரம் பாக்கும் போது எத்தனை பேரைப் பாத்திருப்பே. அதைச் சொன்னேன்.” எனப் பதற,
அவளது இதழ்க்கடையில் ஒரு சிறு புன்னகை மின்னல் வெட்டிச் சென்றது கணநேரம்.
“அன்பாப் பாக்குறது எது… ஆசையாப் பாக்குறது எது… மரியாதையாப் பாக்குறது எதுன்னு ஒவ்வொரு பார்வைக்கு என்ன அர்த்தம்னு கூட தெரியாம இருக்கற அளவுக்கு முட்டாளாவா தெரியறே?” என்றான். வாடிக்கையாளர்கள் முகபாவனை கொண்டே, எண்ணவோட்டம் அறிந்து வியாபாரம் செய்பவனுக்கு… அம்மா, அக்கா, பெண்கள் எனப் பழகியவனுக்குத் தெரியாதா என்ன… பாவையவள் விழிமொழி.
“அப்படி என்ன அர்த்தத்தை என் பார்வையில கண்டு புடுச்சீங்க?” என்றவாறு அன்னாந்து அவன் முகம் பார்த்தாள்.
“அது உனக்கே தெரியும். என் வாயால சொல்லிக் கேக்கணும்னு ஆசை இருந்தா சொல்லு… நானே சொல்றே.” மென்சிரிப்போடு கேட்க,
கண்களில் குறும்பொடு பளீரிட்ட புன்னகையில் அடித்துச் சென்ற மனதை இழுத்துப் பிடித்தாள் மாது.
அவளுக்கு எங்கே தன்னைக் கண்டு கொண்டானோ என்கிற பயம் உள்ளுக்குள்.
எல்லாம் அந்த ஒருநாளில் தான் தன்வசமிழந்து பார்வை முழுதும் அவன் பக்கமே சாய்ந்தது என தனக்குள்ளே நொடித்துக் கொண்டாள். எவ்வளவோ முயன்றும் அன்று மட்டும் தன்மனது தன் பேச்சைக் கேட்கவில்லையே என்கிற பட்சாதாபம் வேறு. உணர்வுகள் மரித்த உள்ளத்திலும், அவனது பார்வை ஆனிச்சாரல் வீசிச்செல்ல, அச்சாரல் ஈரத்தில் முளைவிட்ட சிறு துளிராய் புதுவித அனுபவம் அவளுக்குள்… அறிவிற்கு உறைத்தது ஆசைக்கு உறைக்கவில்லை அன்று. ஆசை வெட்கமறியாது என்பது போல் அவனைச்சுற்றியே பார்வை சென்றதன் விளைவு, இதோ கண்முன் காட்சியாய், கேள்விகளின் நாயகனாய் அவன்.
சென்றவாரம் விநாயகர் சதுர்த்தி. அன்று… கடைவீதியே கலகலத்தது. எங்கும் பூஜைகளும், பொரியும் கடலையுமென ஏகபோகமாக கடைத்தெருவே கொண்டாட்டத்தில் இருக்க, காவேரி ஸ்டோர்சும் அதற்கான ஒப்பனைகளை செய்து கொண்டிருந்தது. கடை முழுமைக்கும் வண்ணதாள்களால் ஆன தோரணங்களும். பூ மாலையும், வாயிலில் மாவிலையும், தென்ன ஓலைத் தோரணமும் என ஜெகஜ்ஜோதியாய் தயாராகியது.
விநாயக சதுர்த்தியன்று, காலையில் கடைக்குள் வந்தவளைப் பார்த்தவனுக்கு சிறு ஏமாற்றம். பூஜை எனத் தெரிந்து வேலை பார்க்கும் பெண்களெல்லாம் புடவை உடுத்தி வந்திருக்க, இவள் மட்டும் சுடிதாரில் வந்திருந்தாள்.
ஏற்கனவே அவளை சுடிதாரில் பார்க்கும் பொழுதெல்லாம் சின்னப் பொண்ணா இருக்காளே, வயது வேற ஏழெட்டு வருஷம் வித்யாசம் வரும் போலயே என மருகிக் கொண்டிருந்தான். அவளை நான்கைந்து வருடங்களுக்கு முன் பள்ளிச் சீருடையில் பார்க்கும் பொழுதும் இதே எண்ணமே. அன்றாவது நன்றாக கொழுக்மொழுக்கென புஷ்டியாக இருந்தாள். ஆனால் அப்பொழுதை விட இப்பொழுது இன்னும் சற்று வடிந்து சுடிதாரில் சிறுபிள்ளையென தோற்றமளித்தவளை, இன்று புடவையில் பார்க்கலாமென ஆவலாக இருந்தவனுக்கு ஏமாற்றமே.
“என்ன பொம்மி, இன்னைக்கும் சுடிதார்லயே வந்திருக்க? சேல கட்டலியா?” என மூத்த பெண்மணி ஒருவர் கேட்க,
“ஐயோ அக்கா! நான் சேல கட்டிட்டு வண்டி ஓட்டினா, கீழே விழுந்து புதையல் வாரிட்டுத் தான் வரணும். இப்ப தான் வண்டி ஓட்டவே பழகியிருக்கே.” என அலுத்துக் கொள்ள,
“நேத்தே சொல்லி விட்டோம்ல. சேலதான் கட்டணும்னு.”
“அதெல்லாம் எடுத்துட்டு வந்திருக்கே. பூஜை பண்றப்போ கட்டிக்குவே.” என்றாள்.
அனைவரும் கொண்டாட்ட மனநிலையில் இருந்ததால் கலகலவெனவே ஜாலியாகச் சென்றது அன்றைய பொழுது.
“என்ன… கருப்பட்டி… கலக்குற.” வெடவெடவென ஒல்லியாக, சரியாக முளைக்காத அறும்பு மீசையோடு, அன்று வேஷ்டி சட்டையில், எங்கே அவிழ்ந்து விடுமோ என்ற அச்சத்தில் இடுக்கிக்கொண்டே நடந்தவனைப் பார்த்து, ஒரு பெண்மணி கேலி செய்ய,
“உங்களைய விடவா சிஸ்டர்?” என்றான் அவனும், அப்பெண்மணியைப் பார்த்து.
“என்ன கருப்பட்டி… கருப்பு கிருஷ்ணனாட்டம் இருக்க. நாங்க எல்லாம் என்னென்னமோ நெனச்சிருந்தோம். பொசுக்குனு இப்படி சொல்லிட்டியே.” என அலுத்துக் கொண்டாள். அங்கே இருந்த பெண்களெல்லாம் இவனைவிடப் பெரியவர்கள். இவன் மட்டும் தான் சிறியவன் என்பதால் கேலி செய்ய ஆரம்பித்து விட்டனர்.
“என்ன சிஸ்டர் நினச்சிருந்தீங்க? அப்படி நான் என்ன சொல்லிட்டே?” புரியாமல் கேட்க,
“இப்படி வாய்க்கு வாய் சிஸ்டர்னு சொன்னா நான் எப்படி அதை என் வாயால சொல்லுவே கருப்பட்டி.”
“எதுவா இருந்தாலும் சொல்லுங்க சிஸ்டர்.”
“மறுக்கா மறுக்கா நீ சிஸ்டர்னு தானே சொல்றே? நாங்க உங்களய ப்ரதர்னா மட்டும் எவ்வளவு ஃபீல் பண்றீங்க. இப்படியொரு கறுப்புக் கண்ணன் சிஸ்டர்னு சொல்லும் போது எவ்வளவு ஃபீல் ஆகும்னு நினைச்சுப் பாத்தியா? பச்சப்புள்ளைக மனசு என்ன பாடுபடும்னு நினைக்கல இல்ல?” அப்பாவியாய் சிரிக்காமல் அவரும் கேட்க,
புரியாமல் புருவம் சுருக்கியவன், சட்டென… “ஐயோ சிஸ்டர்! ஆளைவிடுங்க. நாங்கூட என்னமோன்னு நினச்சே. இங்க வரும்போதே சக்தி அண்ணே காவேரி ஸ்டோர்ஸ் என் தாய்வீடு… இங்கே இருக்கிறவங்க அனைவரும் எனது சகோதர சகோதரிகள்னு நெஞ்சுல கைவச்சு உறுதிமொழி வாங்கிட்டுதான் விட்டுருக்கு. எசகுபிசகா ஏதாவது அண்ணே காதுக்குப் போச்சு தோல உரிச்சு உப்புத் தடவிறுவாங்க, எங்க அப்பாவும் அண்ணனும் சேந்து.” என்று சொல்லிவிட்டு வேகமாக இடத்தைக் காலி செய்தவனை,
“ஹேஏஏ… கருப்பட்டிஈஈ.” எனக் கேலிக்குரல்கள் பின்தொடர,
“நான் இந்த வெளாட்டுக்கு வரல. அதுக்கு நான் பிதாகரஸ் தியரமே படிச்சுக்கிறே.” என ஓடியவனை, கலகலவென சிரிப்பொலிகள் பின்தொடர்ந்தன.
மாலை ஆறு மணிவாக்கில் பூஜைக்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தனர். சந்தனம் குங்குமம் வைத்தல், பூ போடுதல் என ஆளுக்கொரு வேலையாக செய்து கொண்டிருக்க… கருப்பட்டியிடம், சக்தி ஓய்வெடுக்கும் அறைச்சாவியை வாங்கி வருமாறு கூறினாள் பொம்மி. முன்பு தாய் தமக்கையோடு வசித்த சிறு இடத்தை, இப்பொழுது தனக்கெனத் தனிப்பட்ட ஓய்வறையாக மாற்றிக் கொண்டான். ஆனால் வேலை செய்யும் பெண்களுக்கு மட்டும் தேவைப்படும் பொழுது அவ்வறையை உபயோகிக்க அனுமதிப்பான். சேலை மாற்ற ரெஸ்ட்ரூம் சரிப்படாது என்பதால் அவனது அறைக்கு சாவியை வாங்கிக் கொண்டு சென்றாள்.
இந்த ஒருவருடத்தில் இன்றுதான் இங்கே வருகிறாள்.
சின்னதாக ஒரு படுக்கை மற்றும் இருக்கையுடன் கூடிய மேஜை என அடக்கமான அறை. மேஜை மீது சிறு கண்ணாடிக் குடுவையில் ஆரஞ்சு வண்ண மீன்களிரண்டு நீந்தியது.
சுவற்றில் ரவிவர்மனின் பிரபல ஓவியங்களில் ஒன்றான தமயந்தி ஓவியம் ஒன்றும் இடம் பிடித்திருந்தது.
சிறிய அலமாரியில் பிரபல எழுத்தாளர் சிலரின் புத்தகங்கள். எடுத்துப் பார்த்தாள். கல்கி, சாண்டில்யனோடு பாலகுமாரன், ஜெயகாந்தன், இந்திரா சௌந்திரராஜன், வைரமுத்து என பலர் இடம்பிடித்திருந்தனர். மிகவும் நேர்த்தியாக அதது அங்கங்கு இருந்தது. இன்டக்ஷன் ஸ்டவ்வோடு, டீ போடும் பாத்திரங்களும் இருந்தன. அனைத்தும் சுத்தமாக இருக்க,
‘மிஸ்டர் க்ளீன்.’ போலிருக்கே என நினைத்துக் கொண்டாள்.
அங்கேயே இருந்த வாஷ்பேஷினில் முகம் கழுவியவள், சேலையை மாற்றிக்கொண்டு, தலையை ஒழுங்குபடுத்திக் கோண்டு வெளியே வந்தாள்.
பில்லிங்கில் பிஸியாக இருந்தவன், பில்லை நீட்டியும் வாங்காமல், எங்கோ பார்த்துக் கொண்டிருந்த வாடிக்கையாளரைப் பார்த்தவன், அவன் கண்போன திசையில், சக்தியும் தனது கவனத்தைத் திருப்ப, காலையில் இவள் சேலை கட்டி வரவில்லையே என்ற வருத்தம், ‘இப்ப இவ சேலை கட்டலைனு யார் அழுதது.’ என கோபமாக உருமாறியது. தன் கையிலிருந்த பில்லும் நழுவ, சட்டென சுதாரித்தவன்… ஓங்கி அடித்து டேபிளின் மீது பில்லை வைத்தவன்,
“சார்… பில்…” என்றான் உரக்க.
இவனைத் திரும்பிப் பார்த்தவன், சக்தியின் பார்வை உக்கிரத்தில், அவனும் அசடுவழிய பணத்தைக் கொடுத்துவிட்டு பொருளை வாங்கிச் சென்றான். சிவகாசிப்பட்டாசின் பற்றவைத்த திரியாய் சுறுசுறுத்தது மூளை, அவள் மீது படியும் மற்றவர்களின் ரசனையான பார்வையைப் பார்த்து.