மாயவனின் மயிலிறகே 20

மாயவனின் மயிலிறகே 20

மாயவனின் மயிலிறகே 20

 

 

 

 

 

நான்கு மணி நேரங்கள் கழித்து கண்மணிகள் சுழல மெதுவாக கண்விழித்தாள் பாப்பு. அது ஒரு மருத்துவமனை அறை என்பது மட்டும் தெரிந்தது.  

 

 

 

 

தான் இங்கு எப்படி என்ற நிமிட நேர யோசனையில் அன்று அவரை காப்பாற்ற சென்ற போது அடிபட்டதே!  என நினைவில் வர,  கை தானாக தலையையும், வயிற்றையும் தொட்டுப்பார்த்தது.

 

 

 

 

அங்கு வலி ஒன்றும் தெரியவில்லை. குணமாகிவிட்டதா? அப்படியென்றால் எத்தனை நாட்கள் ஆயிற்று என்றும் புரியவில்லை. 

 

 

 

 

 

 அவள் கண்விழித்திருப்பதைக் கண்ட செவிலிப்பெண் டாக்டரை அழைத்துவர, அவர்  அவள் உடல் நலனைப் பரிசோதித்துவிட்டு சில கேள்விகள் கேட்டார், அவள் பதில் கூறவும் அதை மனதில் குறித்துக் கொண்டார். 

 

 

 

 

பின் ரவிசந்திரனும் காயத்ரியும்  அறையினுள் வந்தனர். அவர்களைக் கண்டதும் இவளது இதழ்கள் தானாக, “அத்தை, மாமா” என முனுமுனுத்துக் கொண்டது. 

 

 

 

 

‘இவர்கள் இங்கு எப்படி?’ என யோசித்தாலும்,  எது எப்படியோ தன்னவர்களிடம்தான் இருக்கிறோம் என்பதே பெரும் நிம்மதியாக இருந்தது. ஒரு பெருமூச்சுடன் மீண்டும் அவள் கண்கள் மூடிக்கொண்டன. 

 

 

 

 

அவள் கண் மூடவும் , “டாக்டர், என்னாச்சு மறுபடியும் மயக்கத்துக்கு போய்ட்டாளா?” என காயத்ரி  தன் தம்பியின் வாரிசிடம்  பேச வேண்டுமே என்ற ஆர்வத்தில் கவலையுடன் கேட்டார். 

 

அவளது மயக்கத்தை பரிசோதித்த மருத்துவர், “கொஞ்சம்  வெளிய வாங்க” என அவர்களை அழைத்து வந்தவர்,

 

 

 

 

 “நீங்க கொடுத்த அவங்க கேஸ்  ஃபைல்படி பார்த்தா அவங்களுக்கு எல்லாமே ஞாபகம் வந்துடுச்சு. அதாவது பழசு எல்லாமே. ஆனா அடிபட்டதிலிருந்து இப்போது வரையிலான இடைப்பட்ட ஞாபகங்கள் அவங்களுக்கு  இல்லை. ஆனா கவலைப்பட வேண்டாம். நௌ ஷீ ஈஸ் பர்ஃபெக்ட்லி ஆல் ரைட்…  இந்த நினைவுகள் கூட கூடிய விரைவில் ஞாபகம் வரலாம். மத்தபடி இது மயக்கம் இல்லை  தூக்கம்தான். உடல்நிலை நல்லா இருக்கறதால இந்த ட்ரிப்ஸ் முடிஞ்சபிறகு அவங்கள  வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்” என கூறி சென்றுவிட்டார்.

 

 

 

 

அதைக் கேட்ட இருவருக்கும் அப்பாடி என்ற எண்ணம் தோன்றி லேசாக்க, அமைதியாக அவளருகில் சென்று அமர்ந்துகொண்டனர். அப்பொழுது நம்மை மறந்திருப்பாளா? என ஆயிரம்  கேள்விகள் மனதில் படையெடுத்தாலும் தங்களது  குடும்ப ரத்தம் ஆபத்திலிருந்து மீண்டது மகிழ்ச்சியாக இருந்தது, ரவிசந்திரன் உடனே மகனுக்கு போன் போட்டு கண்விழித்த  விசயத்தைக் கூறிவிட்டார்.

 

 

 

 

அவனும் தான் இன்னும் ஒருமணி நேரத்தில் வந்துவிடுவதாகவும், அதன்பிறகு டிஸ்சார்ஜ் செய்து கொள்ளலாம் என்றும் கூறிவிட்டான். 

 

 

 

 

மாமனார் மாமியாரிடம்  பாப்புவின் நலத்தைப் பற்றி மட்டும் கூறி, பாப்புவைப் பற்றிய உண்மைகளை கூறாமல்  நேரில் சென்று கூறிக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டார்.

 

 

 

 

காயத்ரி பாப்புவைப் பார்த்தவாறே, “ஏங்க எவ்ளோ அழகா இருக்காள்ல நம்ம மருமக”   என கன்னம் நெற்றி வருடி சிலாகிக்க, “ஏன் அது இத்தன நாளா தெரியலயா… உன் தம்பி மகன்னு தெரிஞ்சதும்தான்  தெரிஞ்சதா” என கேலி பேசினார் ரவிசந்திரன். 

 

 

 

 

 

“ம்ம்ம் அப்படிலாம் ஒன்னும் இல்ல எப்பவுமே அழகு குட்டிதான்… ஆனா இப்ப நிஜமாவே பேரழகா தெரியறா” என திருஷ்டி கழித்தார் அந்த பாசக்கார அத்தை.  சிறு குழந்தையை கண்டது போல் பூரிப்பு அவரிடத்தில்.

 

 

 

 

மனைவியின் நடவடிக்கையில் “அதுசரி” என நினைத்தாலும் இத்தனை நாள் பரிட்சயமான முகம் எனத்தோன்றிய மருமகளின் வதனம் இன்று தங்கையின் பிரதிபலிப்பாய் தோன்றியது அவருக்கு.

 

 

 

 

இருவரும் அமைதியாக அமர்ந்திருந்தாலும் தங்களது உடன்பிறப்பை பற்றி அறிய ஒவ்வொரு வினாடியும் ஆவலுடன் காத்திருந்தனர். 

 

 

 

 

 

ஒருமணி நேரத்திற்கு முன்பாகவே பாப்பு கண்விழித்தாள். அருகில் தலைகோதி அமர்ந்திருந்த காயத்ரியைக் கண்டதும், “அத்தை” என்றவாறு அவர் கரத்தைப் பிடித்துக் கொண்டவள்,

 

 

 

 

 

 

 

” அத்தை… நீங்க எப்படி இங்க? உங்க பையன் அவருக்கு ஒன்னுமாகலயே?” என கேட்க, குழம்பிய காயத்ரி

 

 

 

 

 

“என்னடாம்மா சொல்ற… அபியா அவனுக்கென்ன நீதான் மயங்கிட்ட ” 

 

 

 

 

 

  “இல்லத்த  நான் அவர காப்பாத்த நினைச்சு தள்ளிவிடத்தான் போனேன். ஆனா கால் தடுமாறுனதுல வயித்துலயும் தலைலயும் அடிபட்டுருச்சு… அப்பறம்தான் அவர அடையாளமும் தெரிஞ்சது…” 

 

 

 

 

 “இல்லடா…அவனுக்கு ஒன்னும் இல்ல.” என்றவர்,  ” அப்ப எங்ககூட இத்தன மாசமா இருந்தது எதுவும் உனக்கு ஞாபகம் இல்லையாடா ” தவிப்புடன் வினவ, 

 

 

 

 

“உங்ககூட  இருந்தேனா” என மது சந்தேகிக்க, காயத்ரி சுருக்கமாக இடைபட்ட காலத்தை கூறி முடித்தார்.  

 

அனைத்தையும் கேட்டவள்  சிறிது நேரம் அமைதியாக யோசித்தாள்.  “தெரியலயே  எனக்கு எதுவும் ஞாபகம் வரல” என பரிதாபமாய் கூற, 

 

 

 

 

 

 

“அம்மாடி” என மறுபக்கம் அழைத்த மாமனைக் கண்டதும்,”மாமா” என்றவாறு மறுகையால் அவரையும் பிடித்துக் கொண்டாள். 

 

 

 

 

 

இதுவரை பெற்றவர்கள் கூறி, செவி வழியாகவும் புகைப்படம் வழியாகவும்  மட்டுமே கேள்விப்பட்ட பாசமிகு உறவுகளைக் கண்டதும் தாய் தந்தையின் நினைவில்  மனம் கலங்கியது. இதற்காகத்தானே   அவர்கள் ஏங்கினார்கள். ஆனால் கடைசிவரை அது முடியாமல் போனதே!  என்ற தவிப்பு கண்களில் நீராக பெருகியது.

 

 

 

 

கண்களில் நீர் வரவும் எங்கேயாவது வலிக்கிறதோ எனப் பதறிய இருவரும், “என்னடாம்மா எங்கயாவது வலிக்குதா” என கேட்க, இல்லையென்று தலையாட்டியவள், அப்போதுதான் யோசித்தாள்,

 

 

 

 

 

 ‘ நான் யாருடைய மகள் என்று   இவர்கள் அறிவார்களா? இல்லை தெரியாமலேயே  யாரோ ஒரு பெண்  என்று பரிதாபத்தில் என்னை பார்த்துக் கொண்டார்களா? என அறிய வேண்டியிருந்தது. தயக்கத்துடன், “நான்… நான்  யாருன்னு உங்களுக்கு…” 

 

 

 

 

” தெரியும்டா,  நீ எங்க கூடபொறந்தவங்களோட ரத்தம்னு இன்னைக்குதான் தெரிஞ்சுக்கிட்டோம்”   என  காயத்ரி  கூற,   யாரென்றே அறியாமல் இத்தனை நாள் பார்த்துக்கொண்டவர்களின்மேல் நன்மதிப்பு உருவானது.  என்னைப் பற்றி தெரிந்தும் பாசத்தைதானே காட்டுகிறார்கள் அப்படியென்றால்  எங்களின் மீது கோபமில்லையா?   என நினைத்தவள், “அப்ப  என் அப்பா அம்மாவ மன்னிச்சிட்டீங்களா?” எனக் கேட்டு ஆர்வங்களின் மொத்தமாய் அவர்களைப் பார்த்திருந்தாள். 

 

 

 

 

காயத்ரி அவளின் கேள்விக்கு, “ச்சே..ச்சே என்னடா பெரிய வார்த்தையெல்லாம் பேசிட்டு… அவங்க எங்கள விட்டு கண்காணாம  போனதுதான் கஷ்டமா இருக்கு… இங்கயே இருந்து அவங்க அன்பை புரிய வச்சிருக்கலாம்…”  எனக் கூறி மன்னிப்பெல்லாம் தேவையில்லை என ஆதுரமாக கூறவும்,

 

 

 

தன் உறவுகளின் பெருந்தன்மையில் நெகிழ்ந்தவள்,  ‘அம்மா, அப்பா கேட்டீங்களா. இப்ப சந்தோஷமா உங்களுக்கு. உங்க மேல கோபமில்லையாம்’ என காற்றில் கரைந்து போனவர்களிடம் மானசீகமாய் உரையாடினாள். 

 

 

 

 

 

ஆழ்ந்த மௌனம் அவ்விடத்தில்!

 

 

 

 

 

அப்போது கதவு வேகமாக திறக்கப்பட, உள்ளே வந்தவனைக் கண்டு பாப்பு அதாவது மதுவின் கண்களில் வந்துவிட்டாயா? என்ற ஆசுவாசத்தில் கலங்கிய கண்களுடன்  கைகளை விரித்தாள்!

 

 

 

 

அவனும் வேகமாக வந்து இவளை அணைத்துக் கொண்டான்.

 

 ” ஸாரி ஷ்ஷ்ஷௌரி” என மெல்லியதாய் அவளிதழ்கள் முனுமுனுத்தது.  

 

 

 

 

 

ஆம்! ஷௌரியேதான்.  அவன்தான் இவள் நிழலைப்போல தொடர்கிறானே! அதனால் இவள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தகவல் அறிந்ததும் இப்பொழுது என்னவாயிற்றோ? என  குடும்பத்தோடு கிளம்பி வந்திருந்தான்.  அவர்கள் கதவருகில் வந்தபோதுதான்  இவர்களின் பேச்சுகள் கேட்டது. அதன் அடிப்படையில் மதுவிற்கு நினைவு திரும்பிவிட்டது என்ற மகிழ்ச்சியுடன் உள்ளே வந்திருந்தான்.

 

 

 

 

 

“நீ என்ன அவ்ளோ பெரிய ஆளாகிட்டயா?  ஒரு வார்த்தை சொல்லாம கெளம்பி வந்துட்ட. நேனாவ விடு நான் கூடவா உனக்கு அந்த நேரத்துல ஞாபகத்துல வரல. கூட்டிட்டு போ ன்னா கூட்டிட்டு வந்திருக்க போறேன். அதவிட்டு தனியா வந்து அடிபட்டு இத்தன மாசம் எங்கள தவிக்கவிட்டுட்டயே… இனி எங்கயாவது தனியா கெளம்பிப் பாரு காலை உடைக்கறேன்.” வாய் கோபமாக பேசினாலும் கை இன்னும் இன்னும் இறுக்கமாக அணைத்துக்கொண்டது. 

 

 

 

 

 

யாரோ ஒரு நெடியவனுடன் ஒரு பெண்ணும் , குழந்தை ஒன்றும்  திடுமென உள்ளே வரவும் யாரென கேட்க நினைத்த சந்திரன்  அவர்களின் உரையாடலைக் கண்டு அமைதியாகிவிட்டார்.

 

 

 

 

 

” சாரி…ஷௌரி  அந்த நேரத்துல எனக்கு வேற எதுவும் தோணல…அம்மா,  நீ மாமா வீட்டுக்கு போயிடுன்னு சொன்னதுதான் திரும்ப திரும்ப தோணிட்டே இருந்தது. அதான் இங்க வந்தாலாவது கொஞ்சம் பெட்டரா ஃபீல் பண்ணுவேன்னு நினைச்சேன். ஆனா எதிர்பாராம இப்படி ஆகிடுச்சு… சாரி”  என விசும்பலுடன் மன்னிப்பு வேண்ட, இவனும் தன் கோபம் தொலைத்தவன்,

 

 

 

 

 

“பார் நேனா… மது என்கிட்ட மன்னிப்பெல்லாம் கேக்கற அளவுக்கு பெரிய ஆளாகிட்டாங்க” என கிண்டல் செய்தான்.  

 

அப்போதுதான் அங்கிருந்த மற்ற இருவரையும் பார்த்தான். அவன் அவர்களை நோக்கி செல்ல,  நேனாவிடமும் மன்னிப்பு கேட்ட மது அவளிடம் இருந்து அர்னவை வாங்க கை நீட்ட அவனோ தாவி இவளிடம் வந்துவிட்டான்.  

 

 

 

 

 

சந்திரனிடம் வந்த ஷௌரியா, “சாரி அங்கிள், நான் உங்கள கவனிக்கல, மதுவ பார்த்ததும் வேற எதுவும் தோணல”  கண்களில் நீரும் சிறுபுன்னகையுமாக ஷௌரியா சொல்ல, 

 

 

 

 

 

“மது?” என கேள்வியாக பார்த்தனர் கணவனும், மனைவியும். 

 

 

 

 

“ஓ…பேரே சொல்லாமதான் உங்ககிட்ட பேசிட்டு இருந்தாங்களா மேடம்… ” என அவன் கூறவும்தான் ‘இவ்வளவு நேரம் பேசியும் பெயரைக் கேட்காமல் போனோமே’ எனத் தோன்றியது  அவர்களுக்கு.  அவர்கள் அவளைப்  பார்க்க, “மதுமிளா” என கூறினாள். 

 

 

 

 

 

“சாரி… நானும் இன்னும் அறிமுகப்படுத்திக்கல, நான் ஷௌரியா,  அவங்க என்னோட மனைவி நேனா ,  குழந்தை அர்னவ்.  மதுவோட  ஃபேமிலி ஃபிரண்ட், எந்த அளவுக்குன்னா அவங்க வீட்லயே பொண்டாட்டி பிள்ளையோட தங்கற அளவுக்கு.” என புன்னகையுடன் கூறியவன்,

 

 

 

 

 

 “அத்தை உங்கள பத்தி நிறைய சொல்லியிருக்காங்க அங்கிள். இப்பதான் சந்திக்க வாய்ப்பு கிடைச்சது… நைஸ் டூ மீட் யு”  என அவருடன் கை குலுக்கினான்.

 

 

 

 

 

அவனுடன் கை குலுக்கியவர், “அத்தைனா அமிர்தாவா?” பரபரப்புடன் கூடிய மெல்லிய சந்தேகத்துடன்  கேட்க, ‘ஆமாம்’ என தலையசைத்தான்.

 

 

 

 

மது, “அம்மா, உங்களை பத்தி நிறைய பேசுவாங்க மாமா… உங்கள பாக்கனும் உங்ககிட்ட மன்னிப்பு கேக்கனும்னு ரொம்ப ஆசைப்பட்டாங்க ஆனா…”  என்றவள் அதற்கு மேல் முடியாமல் அழ, அவளிடம் இருந்த அர்னவும் அழ ஆரம்பித்துவிட்டான். 

 

 

 

 

 

 

நேனா , பயந்து அழுத குழந்தையை வாங்கிக்கொண்டு சமாதானப்படுத்த வேண்டி அனைவரிடமும் ஒரு தலையசைப்போடு வெளியே சென்றுவிட்டாள்.  காயத்ரி அழும் மதுவை  நெஞ்சோடு அணைத்துக் கொண்டாலும், ‘அவர்களுக்கு என்னவானதோ’ என மனம் பதைபதைத்தது. 

 

 

 

 

 

சந்திரனும் என்ன வரப்போகிறதோ என கேள்வியாக ஷௌரியாவைக் காண, “ஆக்ஸிடண்ட்” என தொண்டை கமற கூறினான். 

 

 

 

 

 

காயத்ரிக்கு அதிர்ச்சியில் கண்களில் நீர் உற்பத்தியாக கணவனைப் பார்த்தார், சந்திரன் மனைவியை பார்வையாலே சமாதானப்படுத்திவிட்டு,  “அவங்க…அவங்களுக்கு எதுவும்… ” எப்படி கேட்பது என தடுமாற்றத்துடன் ஷௌரியாவையே பார்த்தார். 

 

 

 

 

 

கண்ணில் படவில்லையென்றாலும் நன்றாக இருப்பார்கள். அவர்கள் நினைவு அவருக்கு எப்போதும் இருந்தாலும் வெளிக்காட்ட மாட்டார். என்ன இருந்தாலும் தங்கையல்லவா!  அதுவும் இந்த வயதான காலத்தில்தான் மனம் தன்  உடன்பிறப்புகளை அதிகம் தேடுமாம். 

 

 

 

 

 

அது எந்தளவு உண்மையோ ஆனால்  சமீபமாக அமிர்தாவின் நினைவு அதிகம் எழுந்தது உண்மை. அமிர்தாவும் அதுபோலதான் எண்ணினாரோ?  அதனால்தான்  இம்முறை தயக்கத்தை விட்டொழித்து அண்ணனைக் காண நினைக்க, அது நிறைவேறாமலேயே போய்விட்டது. 

 

 

 

 

என்னவானதோ என எதிரே இருந்தவரின் மனம் படபடப்பது ஷௌரியாவிற்கு கேட்டது. சில நொடிகளுக்குப் பிறகு,  இல்லையென தலையாட்டினான். 

 

 

 

 

அவன் அசைவுக்கு அர்த்தம் புரிந்த காயத்ரி வாயின்மேல் கை வைத்து அழத் தொடங்கினார். மற்றொரு கரம் இன்னும் அழும் தன்  மருமகளை தன்னோடு இறுக்கமாக அணைத்தது. இனி தாங்கள் இருக்கிறோம் என்னும் விதமாய். 

 

 

 

 

 

சந்திரனோ புரிந்தாலும், “என்ன ஆச்சு” நடுக்கத்துடன் விசாரித்தார்.  “என்னோட அப்பாவும், அங்கிளும் ஸ்பாட் அவுட்… அத்தை மட்டும் நினைவோட ஹாஸ்பிட்டலுக்கு வந்திருக்காங்க… நாங்க போய் பார்த்தப்ப  டாலுவ உங்ககிட்ட போக சொல்லிட்டு அவங்களும்…” அதற்குமேல் கூறமுடியாமல் வேறுபக்கம் திரும்பி நின்றுகொண்டான். 

 

 

 

 

சந்திரன் முற்றிலும் தளர்ந்தார். பச்சை ரணமாய் வலித்தது தங்கையின் மரணம். கடைசி நேரத்தில் தன் மகளை அனுப்பிய தங்கை, தான் முன்பே வந்திருக்கலாமே!  வராதது ஏன்? அதையே அவர் கேள்வியாக கேட்க, ஷௌரியா, “அவங்களுக்கு உங்கள எப்படி ஃபேஸ் பண்றதுன்னு தயக்கம். அதனாலதான் பலமுறை சீனி அங்கிள் கூப்ட்டும் வரல.” எனக்கூற,  அவசரப்பட்டு ‘தற்காலிகமா பிரிஞ்ச நீ, தயக்கப்பட்டு  இந்த அண்ணன பாக்காமயே மொத்தமா விட்டு போய்ட்டயேமா’ என கலங்கத்தான் முடிந்தது. 

 

 

 

 

 

அவரவர் சோகத்தில் மூழ்கியிருந்த நேரம் வாசலில் வந்து நின்றான் அபி. கண்கள் முதலில் பாப்புவின் நலம்  பார்க்க, வேகமாக அவளிடம் வந்தான். அறையில் நின்றிருந்தவர்களை பார்த்தான். அங்கிருந்த ஷௌரியாவைக் கண்டு வந்துவிட்டானா என நினைத்தாலும்  மனதில் பதியவில்லை. 

 

 

 

 

 

மதுவும் அவனைப் பார்த்தாள்தான். ஆனால் அந்த பார்வையில் முன்பைவிட  நிறைய  மாற்றங்கள் இருப்பதாகத்தான் அவனுக்கு தோன்றியது.  

 

 

 

 

 

அவனைக் கண்டதும் பௌர்ணமியாய் ஒளிர்ந்து கவிபாடும் கண்கள் இன்று அமாவாசையாய் வெறுமையை சூடிக்கொண்டது.  நீ தெரிந்தவன் என்ற அறிமுகப்பார்வை மட்டுமே… அவனைப் பொறுத்தவரை அந்நியப்பார்வை அது. 

 

 

 

 

இவனைக் கண்டதும் பூவைப்போல விரியும் இதழ்கள் அழுத்தமாய் பூட்டிக் கொண்டிருந்தது. 

 

 

 

 

அருகில் வந்துவிட்டான்தான். ஆனால் ஏதோ தயக்கம்,  அது அவள் பார்வையாலோ!  ஆனால் அது கண நேரம்தான்.  பின் இரண்டே எட்டில் அவளை அடைந்தவன், அவளருகில் அமர்ந்து அவள் நெற்றியில் பரவிக்கிடந்த முடியை  ஒதுக்கியவாறு, “பாப்பு…இப்போ உடம்பு எப்படிடா இருக்கு” என எப்போதும்போல் வினவ, 

 

 

 

 

 

இத்தனை பேர் இருக்கையில் என்ன செய்கிறான் இவன் என அதிர்ந்தவள் அவன் கையை  விலக்கியவாறே சற்று தள்ளி அமர்ந்தாள். 

 

 

 

 

 

 விலகுகிறாள்! என்னவாயிற்று, பழைய ஞாபகங்கள்தான் வந்துவிட்டது.  ஆனால் என்னிடம் இந்த மறுப்பு ஏன்?  அவளைப் பார்த்தவாறே யோசனைகள் ஓட அவள் எங்கே இவனைப் பார்த்தாள்  தலை குனிந்து அமர்ந்திருந்தாள். 

 

 

 

 

 

அவளது புறக்கணிப்பில் அவன் முகம் நொடி நேரம் சுணங்கி பின் இயல்பை பூசிக் கொண்டது. 

 

 

 

 

அவன் முகம் காட்டிய மாற்றத்தை கண்டவர்கள் வெளிப்படையாக காட்டாவிட்டாலும் அவன் உள்ளுக்குள் வருந்துவான் என்பதை அறியாமல் இல்லை.  ஷௌரியா உட்பட.   

 

 

 

 

 

 

அபிஜித் அவள் கையை தடுக்கவுமே எழுந்து கொண்டான். அறையில் அமைதி நிலவ மதுதான், “ஷௌரி, அன்னைக்கு இவர்தான் என்னை காப்பாத்தினார்” என்றவள்  அபியைப் பார்த்து,  “தேங்க்ஸ்,  அன்னைக்கு என்னை காப்பாத்தினதுக்கு” என சாதாரணமாய் உரைக்க,

 

 

 

 

 

“என்ன மது, அபிகிட்ட போய் நன்றி அது இதுன்னு…” என காயத்ரி ஆட்சேபிக்க, “இல்ல அத்தை யாரா இருந்தாலும் உதவி செஞ்சா நன்றி சொல்லனும்ல… அதுவுமில்லாம என்னை இத்தனை நாள் யாருன்னே தெரியாம பத்திரமா பார்த்திருக்கார் இல்லயா”  என்றாள் இயல்பான குரலில். 

 

 

 

 

அபிக்கோ, அவ்வளவுதானா! வெறும் நன்றியுணர்ச்சிதானா … எங்களுக்கு இடையில் அதுமட்டும்தானா?  இன்னும் விலகிக் கொண்டான். இனி எந்த சூழ்நிலையிலும்  விலக அனுமதிக்க மாட்டேன் என கூறியவன்தான் இவன், ஆனால் அப்போது  இருந்தது அவனது பாப்பு. இப்போது இருப்பதோ வேறு யாரோ என்ற எண்ணம் அவனுக்கு. 

 

 

 

 

அதே பெண்! அதே உறவு! ஆனால் பார்வையிலேயே  அந்நியமாய் உணரச் செய்துவிட்டாள். 

 

 

 

 

 

மதுவை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார்கள். அனைத்தும் முடிந்துவர இரவு ஏழு மணியானது. அத்தனை நேரமும் மது ஷௌரியாவையும், காயத்ரியையுமே அருகில் இருத்திக் கொண்டாள். அபியும் தூர நின்றுகொண்டான். 

 

 

 

 

 

 

காயத்ரி மருமகளுக்கு ஆரத்தி சுற்றிதான் வீட்டினுள் அழைத்தார். வீட்டை சுற்றிப் பார்த்துக் கொண்டே வந்தவள் அங்கிருந்த மேஜையில் இடித்துக் கொள்ள, 

 

 

 

 

 

அவள்  “ம்மா” என கத்தும்முன் , “பாப்பு பாத்துடா” என அபி கத்தியதோடு அல்லாமல் நடுவில் இருந்த அனைவரையும் விலக்கி அவளிடம் சென்றவன் அவளை கைப்பிடித்து சோபாவில் அமரவைத்தான். 

 

 

 

 

கண்ணியமான தொடுகைதான். ஆனால் இம்முறையும் அவன் கையை விலக்கிக்கொண்டவள்  அவனைக் காண மறுக்க கோபம் கொண்டவன் விடுவிடுவென அவனறைக்கு சென்றுவிட்டான். பிடிவாதக்காரன்! 

 

 

 

 

 

அதன்பின்  தாத்தா, பாட்டி, ஜனனி அவளிடம் நலம் விசாரிக்க, அவர்களுக்கும் பாப்பு யாரென கூறப்பட்டது. 

 

 

 

 

தாத்தா பாட்டிக்கோ அப்படி ஒரு மகிழ்ச்சி தன் பேத்தியா இவள் என நெகிழ்ந்தவர்கள் அவளின் இருபக்கமும் அமர்ந்து அவளை உச்சி முகர்ந்து அணைத்துக் கொண்டனர். ஆனால் அடுத்து  கூறப்பட்ட அவர்களது மகன் மருமகளைப் பற்றிய செய்தியானது அவர்களை நிலைகுலையச் செய்தது. 

 

 

 

 

“என் தங்கமே உன்னை பாத்தது சந்தோஷப்படக்கூட முடியாம இப்படி ஒரு நிலமையா வரனும்” என  பாட்டி வெளிப்படையாய் அழ, பெரியவரோ  உலகின் கொடிய சாபமான புத்திர சோகத்தை  கிரகிக்க முடியாமல் அமர்ந்திருந்தார். 

 

 

 

 

ஜனனி,  சிறிது நேரத்தில் எப்போதும் போல் மதுவிடம் பேச சற்று நேரத்தில் மது தெளிந்துவிட்டாள்.  இதை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த ஷௌரியாவும் நேனாவும்  நிம்மதியுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

 

 

 

 

 

 

ஷௌரியாவிற்கு இப்போதுதான் மனம் அமைதியானது. அவள் அங்கிருந்து சொல்லாமல் கிளம்பினாள் என்றது முதல் அவன் மனம் தவித்தது அவனுக்குதான் தெரியும்.  அதற்கு பின்னும் அவளுக்கு நடந்த விபத்து, ஆபத்துகள் என  பதற்றத்திலேயே இருந்தான்.

 

 

 

 

அவனுக்கு இருந்த ஒரே ஆறுதல், மது அவளது குடும்பத்துடன் இருக்கிறாள். யாரென்று அறியாமல்  அவர்களும் அவளை பத்திரமாக பார்த்துக் கொள்கின்றனர் என்பதுதான்.

 

 

 

 

 

ஆனால்,  இப்பொழுது அவளை அழைத்துச் சென்றுவிட வேண்டும் என்ற முடிவோடுதான் இங்கு வந்துள்ளான். ஆம்! இனியும் அவளை இங்கு விடுவதாய் இல்லை. ஆனால், அவன் நினைத்ததை காலமும் சூழ்நிலையும் நிறைவேற்றுமா?

 

 

 

 

 

மனம் சோகத்தில் இருக்கும் போது தொண்டைக்குள் உணவு இறங்காதுதான். ஆனால் மனமும் உடலும் வேறு வேறல்லவா!

 

 

 

 

காயத்ரி,  பெரியவர்கள் இருவரையும் வற்புறுத்தி சாப்பிட வைத்தார். மதுவிற்கோ ராஜ உபச்சாரம்தான். பொன்னம்மாவும் விழுந்து விழுந்து கவனிக்க அவர்கள் அன்பில் நெக்குருகி நின்றாள்.  பின் அனைவரும் இரவு உணவு முடித்து அவரவரின் அறைக்கு சென்றனர். 

 

 

 

 

 

ஷௌரியாவும் நேனாவும்  கீழே உள்ள அறையில் தங்கவைக்கப்பட்டனர். விருந்தோம்பல் என்றால் என்ன? என்பதை காயத்ரியின் கவனிப்பின் மூலம் தெரிந்து கொண்டனர்.  அவரில் அமிர்தாவைக் கண்டனர். 

 

 

 

 

 

இத்தனை நிகழ்வுகளிலும் இருந்தும் இல்லாததைப்போல இருந்த அபிஜித் பின் எவர் கண்ணுக்கும் படாமல் மொட்டைமாடிக்கு சென்று விட்டான்.  

 

 

 

 

 

நிலவின் ஒளியில், மெல்லிய இரவுடை காற்றில் சலசலவென ஆட, அவன் மனமும் அவன் பாப்புவிடம் நெருங்கவும் முடியாமல் விலகவும் முடியாமல் ஊஞ்சாலாடிக் கொண்டிருக்க, மீண்டும் தனிமை அவனுக்கு சொந்தமானது. 

 

 

 

 

 

மீண்டும் ஒரு பிரிவு. பிடித்தமானவளின் பிரிவு. இந்த வீட்டில்தான் இருக்கிறாள். ஆனால் அவனால் இல்லை… அவனுக்காக இல்லை. 

 

 

 

 

போடா! உனக்கு இதுதான் வாய்க்கும்போல… முதலில் தாய், இப்போது இவள் என தனக்குத்தானே எண்ணிக் கொண்டான். 

 

 

 

 

 மருத்துவமனையில் இருந்து வந்ததும் அபிஜித் காயத்ரியிடம்  பாப்புவின் நிலை பற்றி அறிய, “ம்மா… பாப்புக்கு என்னாச்சு? ஏன் என்னை அடையாளம் தெரியாத மாதிரி நடந்துக்கறா? இது அவ மனநிலை சரியானதால அப்படி நடந்துக்கறான்னு நினைச்சேன். ஆனா இது அப்படி இல்ல. டாக்டர் என்ன சொன்னாரு” என கேள்வியாக நிறுத்த, 

 

 

 

 

மகனது எண்ணம் அறிந்தவரல்லவா! “கண்ணா, மதுவுக்கு” என ஆரம்பித்த காயத்ரி அவன், ‘மது யாரென’ நெற்றி சுருக்கிப்  பார்க்கவும், “பாப்பு பேர் மதுமிளா… அதான் மதுன்னு சொன்னேன்.” 

 

 

 

 

 “ம்ம்” என்று தலையசைத்தாலும்… மனதில், எனக்கு பாப்புதான் என நிலைநிறுத்திக் கொண்டவன் மேலே கூறுங்கள் என்பது போல பார்த்தான்.   “அவளுக்கு பழசு ஞாபகம் வந்துடுச்சு. ஆனா! உன்கூட, நம்ம கூட இருந்ததெல்லாம் மறந்துடுச்சு. டாக்டர்ட்ட கேட்டதுக்கு இதுவும் காலப்போக்கில்  ஞாபகம் வரலாம்னு சொன்னார். அதனால் நீ  கவலைப்படாத கண்ணா. சீக்கிரமா சரியாகிடுவா” என கூறியதோடு அவரது அன்னையைக் காண  சென்றுவிட்டார். 

 

 

 

 

 

அபி இப்போது அதை நினைத்துக் கொண்டு நின்றிருந்தான். வேலை அனைத்தையும் முடித்த  காயத்ரி, மகன் சரியாக சாப்பிடாததால் பால் கொண்டு வந்தவர் அவனை அறையில் காணாமல் மொட்டைமாடிக்கு வந்திருந்தார். 

 

 

 

 

அபிஜித்  இரு கைகளையும் பேண்ட் பாக்கெட்டில் விட்டவாறு நின்றிருக்கவும்,  “ஜித்…” என அழைக்க வந்தவர்  “அபி” என மாற்றி அழைக்க, இவரா என வியந்து அவரைப் பார்த்தவன்,  “என்ன?” என பார்வையாலேயே  கேட்டான்.

 

 

 

 

“இல்ல கண்ணா,  பால் எடுத்து வந்தேன் உன்ன ரூம்ல காணோம், அதான் இங்க பாக்கலாம்னு… இங்க என்னப்பா பண்ற” என வாஞ்சையாய் கேட்க, 

 

 

 

 

ஏற்கனவே சஞ்சலமடைந்திருந்த மனது, இப்பொழுது சிறு குழந்தையாய் மாறி அன்னையிடம் அடைக்கலம் புக மாட்டோமா? என ஏக்கம் கொண்டாலும்  ஒன்றுமில்லை என தலையசைத்தான். 

 

 

 

 

அவனது தலையசைப்பில், ” பால் ரூம்ல இருக்குப்பா குடிச்சிடு” என கூறினாலும் அவரால் கலங்கியிருந்த அவனது முகத்தை அப்படி பார்த்தப்பின் அங்கிருந்து அவனை விட்டுச் செல்ல மனமில்லை. 

 

 

 

 

மாடியில் அங்கேயே போடப்பட்டிருந்த அலங்கார ஊஞ்சலில் சென்று அமர்ந்தார். அவர் அமரவும் சற்று நேரம் பொறுத்து அபியும் அங்கு சென்று மறு ஓரத்தில் அமர்ந்தான். 

 

 

 

 

‘எதாவது பேசுவானா?’ என அவரும், ‘பேசலாமா?’ என இவனும் அமர்ந்திருந்து நேரம்தான் கடந்தது.  நேரம் ஆகஆக இவனுள் முளைவிட்டிருந்த தவிப்பு பெருகிக் கொண்டே போனது… அங்குமிங்கும் பார்ப்பதும் கையை முறுக்குவதும் என அவனது சீரற்ற மனநிலை புரிந்தவராய் காயத்ரி, “கண்ணா! ஒன்னு சொல்லவா?” 

 

 

 

 

“ம்ம்ம்… என்ன?” என கேட்டதிலேயே அவனியல்பில் இல்லை என நன்றாக தெரிந்தது அவருக்கு. 

 

 

 

 

“கொஞ்சம் கஷ்டம்தான்… ஆனாஅதுதான் நிதர்சனம்ங்கறப்ப அத ஏத்துக்கறதுதான் புத்திசாலித்தனம்.  நமக்கு ரொம்ப பிடிச்சவங்க சூழ்நிலையால நம்மள விட்டு விலகிப்போனா, நாம உடைஞ்சிடனும்னு இல்லை. அவங்க உடல் பிரிஞ்சாலும் நினைப்பால நம்மோடதான் இருப்பாங்க.  கண்டிப்பா ஒருநாள் நாம வச்ச பாசம் அவங்கள நம்மகிட்டையே கொண்டு வந்து  சேர்க்கும்னு நினைச்சி அவங்களோட இருந்த இனிமையான நிகழ்வுகள அசைபோட்டு வாழ்ந்துடனும்.  காலம் மாறும். சூழ்நிலையும் மாறும். அப்ப நம்ம ஆசையும் நிறைவேறலாம்.”  என்றவரின் பார்வை மகனின் மீதே நிலைத்திருந்தது. 

 

 

 

 

சற்று நேரம் அவரைப் பார்த்தவன் அடுத்த நொடி அவரது  மடியில் சுருண்டிருந்தான். அவனது செயலில் அதிர்ந்தாலும் இத்தனை நாள் பாரம் விலகியது அன்னைக்கு. 

 

 

 

 

 

மகன் முழுதாக தன்னிடம் வந்துவிட்டான் என்ற நெகிழ்ச்சியில் கண்கள் கலங்க கை தானாக மகனின் தலை கோத ஆரம்பித்தது.  அவனோ தன் கை கொண்டு அன்னையின் இடை வளைத்து இன்னும் முகத்தை அழுத்தினான். நீண்ட வருடங்களுக்கு பிறகான அன்னையின் மடி, சொர்க்கமாய் தோன்றியது. 

 

 

 

 

அவர் கூறிய வார்த்தைகளை நினைத்தவன் அவை என்னைப் பிரிந்த அவரது வேதனைகளோ! எனத் தோன்ற தானும் அவரை மிகவும் வருத்தியிருக்கிறோம் என  நினைத்து வருந்தியவன், “நீங்களும் இப்படிதான் வேதனைப்பட்டீங்களா ம்மா…?” 

 

 

 

 

 

அவர் பதில் கூறவில்லை ஆனால் அவன் கழுத்தில் விழுந்த துளி கண்ணீர் துளி அவரது வேதனையைச் சொல்ல, “சாரிம்மா… சாரி எல்லாத்துக்கும்.” என மிஞ்சியிருந்த தயக்கத்தையும் முற்றாய் உடைத்தான்.

 

 

 

 

“ச்சே… ச்சே என்னடா கண்ணா சாரியெல்லாம் சொல்லிட்டு. அம்மாதான் உன்னை விட்டுட்டேன்… அம்மாதான் சாரி… அந்த நேரத்துல இத தவிர வேற வழி தெரியல” என தழுதழுத்தக் குரலில் கூறினார்.

 

 

 

“ம்மா…”

 

 

 

 

“சொல்லு கண்ணா”

 

 

 

 

 

” நீங்க என்ன ஜித்துன்னு கூப்பிடுவீங்கதான… ஏன் இப்பலாம் அப்படி  கூப்பிடறதில்ல”  தயக்கங்கள் உடைந்ததில் அவனது ஆழ்மன ஏக்கங்கள் கரையுடைக்க ஆரம்பித்தது. 

 

 

 

 

காயத்ரி அவனது கேள்வியில் மென்மையாக அதிர்ந்தார். “ஜித்து” அவரது அழைப்பு சிறுவயதில். அப்படிதான் அவன் அழைக்கச் சொல்லுவான். காயத்ரியைத் தவிர வேறு யாரும் அப்படிக் கூப்பிடவும் அனுமதித்ததில்லை.  இப்போது அந்தளவு நெருக்கம் இல்லாததால்தான் அவ்வாறு அழைக்காமல் இருந்திருந்தார். அதைக் கூறமுடியாமல் தலை வருடலைத் தொடர்ந்தவரிடம், 

 

 

 

 

 

“எனக்கு பாப்புவ ரொம்ப பிடிக்கும்மா… ஏன் தெரியுமா? அவ அடிபட்டு கண்ணு முழிச்சதும் என்னை ஜித்துன்னுதான் கூப்பிட்டா. நீங்க கூப்பிட்ட மாதிரியே! அதனாலயோ என்னவோ என்னால அவள விடமுடியல. ஆனா இப்போ எல்லாத்தையும் விட அவள ரொம்ப பிடிக்குது. எந்தளவுன்னா அவள என் கைக்குள்ளயே வச்சிக்கனும். அவளுக்கான எல்லாத்தையும் நானே  செய்யனும்…இன்னும் நிறைய… அவளும் அப்படிதான் இருந்தா… ஆனா இப்ப”  தொண்டை அடைக்க பெருமூச்சொன்றை வெளியிட்டவன்,

 

 

 

 

“இப்ப அவ என்னை யாரோ பாக்கற மாதிரி பாக்கறப்ப எல்லாமே சூனியமா தெரியுது. அடுத்து என்னன்னு தெரியல. அவள கூட்டிட்டு எங்கயாவது போயிடலாம் தோணுது. ஆனா அது தப்பு அவளுக்குன்னு விருப்பங்கள் இருக்கும் அதுல தலையிட நீ யாருன்னு  என் மனசாட்சி என்னை கேள்வி கேக்குது.  நான் ரொம்ப ஓவர் ரியாக்ட் பண்றனோன்னு கூட தோணுது. ஆனா இதெல்லாம் கம்மின்னு  மனசு சத்தம்போட்டு அலறுது. ஒருவேளை உங்கள தவிக்கவிட்டதாலதான் எனக்கு இப்ப இந்த நிலமையாம்மா. ஆனா  இந்த கொஞ்ச நேரமே என்னால தாங்க முடியலயே! நீங்க எப்படி… சாரிம்மா சாரி ஃபோர் எவரிதிங்” 

 

 

 

 

அபிஜித் கூறக் கூற  தவித்துப்போனார். இத்தனைக்கும் வெறும் பேச்சு மட்டும்தான் அவன் முகம்தான் பார்க்க முடியாத அளவிற்கு மடியில் புதைத்துள்ளானே பிடிவாதக்காரன்.  

 

 

 

 

 

கண்ணிர் ஈரம் அவர் மடியை நனைக்க, அழுகிறானா? இறைவா, இந்த வேதனையில் இருந்து மகனைக் காப்பாற்று எனவேண்டியவர் , “சரியாகிடும் ஜித்து பையா… ரொம்ப யோசிக்காத எல்லாம் சரியாகிடும்” என்றவர் வருடலை நிறுத்தவேயில்லை. 

 

 

 

 

மனைவியைக் காணாமல் வந்த சந்திரன்  இருவரும் பேசியதைக் தூரத்தில் நின்று கேட்டிருந்தார்.  இப்பொழுது தானும் ஊஞ்சலில் அமர்ந்தவர் மகனின் காலை தன் மடியில் எடுத்து வைத்துக் கொண்டார். அபிஜித்தும்  அவரை பார்த்துவிட்டு அவருக்கு வாகாக காலை வைத்தவன் அவர் பிடித்து விடவும் அமைதியாக உறங்கியிருந்தான். 

 

 

 

 

அன்னை, தந்தை இருவருக்கும் இன்றைய அதிர்ச்சிகளால் தூக்கம் தூர போனது.

 

 

 

 

அந்நேரம் வரை இவர்களது உரையாடலை கதவின் பின்புறம் நின்று கேட்டிருந்த மதுவின் கண்களில் கண்ணீர் வழிய, “சாரி ஜித்து” என்றவாறு அங்கிருந்து சென்றிருந்தாள். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!