அத்தியாயம் 24
மயங்கினேன்
சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே!!! (தவமங்கை)
அன்று வேலையே ஓடவில்லை அஜய்க்கு. மீட்டிங் முடித்து வந்தவன், டேபிளில் இருந்த பைல்களை இன்னும் தொடாமலே அமர்ந்திருந்தான். மனது ஒரு மாதிரியாக இருந்தது அவனுக்கு. டீ வரவழைத்து அருந்தி விட்டு, முழுமனதாக வேலையில் மூழ்கினான்.
காலையில் கிளம்பி வரும் போதே மனைவியின் முகம் சரியில்லை. மகளையையும் மனைவியையும் பார்த்துக் கொள்ள வரும் பெண்மணி வேறு கடைசி நேரத்தில் போன் செய்து வீட்டில் துக்கம் நடந்துவிட்டதாக கூறி விடுப்பு எடுத்திருந்தார். அவன் அவசர அவசரமாக மனைவிக்கு வேண்டியதை சமைத்து அடுக்கி விட்டு, கிளம்பும் போதோ மகள் ஒரே அழுகை.
தவமங்கை பிறந்து இரண்டு மாதங்கள் ஆகியிருந்தன. உதவிக்கு யாரும் இல்லாததால் மனைவியையும் மகளையையும் ஆள் வைத்துத் தான் பார்த்துக் கொண்டான். பச்சை உடம்பு என அரசியை இன்னும் கூட எந்த வேலையையும் செய்ய விடமாட்டான் அவன்.
அழும் மகளைத் தூக்கி வைத்து சமாதானப்படுத்தி, நேப்கின் மாற்றி விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தவனை வைத்தக் கண் எடுக்காமல் பார்த்திருந்தாள் அரசி. அதை அவனும் கவனிக்கவே செய்தான். அடிக்கடி அப்படித்தான் பார்ப்பாள். அப்படி அவள் பார்க்கும் போது கேலி செய்து அவளை சிரிக்க வைத்து விட வேண்டும் என எப்பொழுதும் போல வம்பிழுத்தான் தன் மனைவியை.
“பாருடா அம்மும்மா! உங்கம்மா எப்படி குறுகுறுனு பார்க்கறான்னு. பொறாமைடா நம்மள பார்த்து! ஆமாத்தானே?” என அவன் கேட்க,
“ங்கா” என பதில் கொடுத்தாள் மகள்.
“என் மக ஆமா சொல்லிட்டாளே! அம்மும்மா ங்கா சொல்லிட்டாளே! உங்கம்மா கிடக்கறா! அவள தள்ளி வச்சிடலாம் குட்டிம்மா! நீங்களும் நானும் மட்டும் ஒரு கேங்! சரியா?”
அதற்கும் ஒரு ங்கா பதிலாக கிடைத்தது. ஒரே சிரிப்பு அஜய்க்கு. தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துக் கொள்ள மனைவியை சிரிப்புடன் பார்க்க, அவளோ அவனையே வெறித்துப் பார்த்திருந்தாள். தான் எடுக்கும் எந்த முயற்சியும் அவளை சந்தோஷப்படுத்தாததில் மனம் கலங்கித்தான் போனது அவனுக்கு. மகளைத் தொட்டிலில் விட்டவன், மனைவியை நெருங்கினான்.
“அரசிம்மா!”
“ஹ்ம்ம்”
“ஏன்டா ஒரு மாதிரி இருக்க? இப்போலாம் சரியா பேசறது இல்ல, சிரிக்கறது இல்ல, என்னையும் பாப்பாவையும் கொஞ்சறது இல்ல! ஏன்டாம்மா? குழந்தை பிறந்தா இப்படி டிப்ரேஷன் சிலருக்கு இருக்கும்னு டாக்டர் சொல்லவும் தானே, நான் எல்லா வேலையும் பார்த்துக்கறேன். உன்னையும் கவனிச்சுக்கறேன். நான் இல்லாதப்பா வேலைக்கு வரவங்க உங்கள பார்த்துக்கறாங்க! இன்னும் என்னடா? எப்போ பழைய மாதிரி கலகலன்னு இருப்ப?”
அன்பாய் அவன் கேட்க, இறுக அணைத்துக் கொண்டாள் தன்னவனை. அரசிக்கு கண்ணீர் அதுப்பாட்டுக்கு இறங்கியது கண்களில்.
ஆரம்பத்தில் கவனிக்காவிட்டாலும், மெல்ல மனைவியின் மாற்றம் புரியவே செய்தது அஜய்க்கு. செக் அப் போன போது டாக்டரை விசாரிக்க, போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷனாக (குழந்தைப் பிறப்புக்கு பின் வரும் டிப்ரஷன்) இருக்கலாம் என்றவர் அவளின் வேலை பளுவைக் குறைத்து, நல்ல உணவு, தூக்கம் எல்லாம் கிடைக்கும்படி பார்த்துக் கொள்ள சொன்னார். தாய்ப்பால் கொடுப்பதால் மருந்து எதையும் கொடுக்கவில்லை அவர். போக போக சரியாகிவிடும் என அவர் சொல்லியிருக்க, பொறுமையாக இருந்தான் மனைவியிடம். ஆனால் பலன் என்னவோ பூஜியமாகத்தான் இருந்தது. சின்னதாக ஜோக் சொன்னாலே குலுங்கி குலுங்கி சிரிப்பவள், இப்பொழுது சிரிப்பென்பதையே மறந்திருந்தாள். வாய் விட்டு எதையும் அவனிடம் சொல்வதில்லை. பெருமூச்சுடன் மனைவியை அணைத்து, கன்னம் வருடி ஆறுதல் படுத்தினான் அஜய்.
“செல்லம்மா! இன்னிக்கு காலையில ஒரு மீட்டிங் இருக்குடா! இல்லைன்னா உன் கூடவே இருப்பேன். மீட்டிங் முடிச்சுட்டு பர்மிஷன் போட முடியுதான்னு பார்க்கறேன். காலைக்கும் மதியத்துக்கும் சாப்பாடு வச்சிருக்கேன். கரேக்டா சாப்பிடனும், சரியா? பாப்பா தூங்கற டைம்ல நீயும் தூங்கனும். ஓகேவா? வேற ஒன்னும் செய்ய வேணாம். அம்மாவும் பேபியும் ரெஸ்ட் எடுங்க! நான் ஓடி வந்துடுவேன்” என சமாதானப்படுத்தி விட்டு மனம் இல்லாமலே வேலைக்குக் கிளம்பினான் அஜய்.
இரண்டு மணிவாக்கில் ஓரளவு முக்கிய வேலைகளை முடித்தவன், பர்மிஷன் போட்டுவிட்டு வீட்டுக்குக் கிளம்பினான். தன்னுடைய சாவியை வைத்து கதவை திறந்துப் போனவனை நிசப்தமே வரவேற்றது.
“அரசிம்மா” குரல் கொடுத்தப்படியே ரூமுக்குள் நுழைந்தான்.
அங்கே அவன் கண்ட காட்சியில் ஈரக்குலையே நடுங்கி விட்டது அவனுக்கு.
“அரசி!!!!!” என கத்தியப்படியே ரத்தவெள்ளத்தில் கிடந்த மனைவியை நோக்கி ஓடினான்.
மணிக்கட்டை அறுத்து ரத்த வெள்ளத்தில் கிடந்தாள் அவள். மூக்கில் விரல் வைத்துப் பார்க்க மூச்சு இன்னும் இருந்தது. அவரமாக கைக்குட்டையை எடுத்து அவள் கையைக் கட்டியவன், ஹாஸ்பிட்டல் போவதற்காக மனைவியை கைகளில் அள்ளிக் கொண்டான். கதவை நோக்கி ஓடியவன், ஆணி அடித்ததுப் போல நின்றான்.
“ஐயோ!!! அம்மும்மா!” அப்படியே தரையில் மனைவியைக் கிடத்தியவன், நெஞ்சம் முரசொலி கொட்ட ரூமுக்கு ஓடினான். அங்கே கட்டிலில், அவன் உயிர் மூச்சு பேச்சின்றி கிடந்தது.
“அம்மும்மா” என கத்தியவன் வாரிக் அணைத்துக் கொண்டான் தன் மகவை. மனைவியா மகளா என தடுமாறியவன், குழந்தையைத் தூக்கிக் கொண்டு எதிர் வீட்டுக்கு ஓடினான். அந்த வீட்டில் ஒரு தம்பதி தன் தாய் தந்தையுடன் வசித்து வந்தனர். பைத்தியக்காரன் போல அவன் கதவைத் தட்ட அந்த வீட்டுப் பெண் கதவைத் திறந்தாள். அஜயையும் பிள்ளையையும் பார்த்தவள், சட்டென உள்ளே ஓடி தனது கார் சாவியை எடுத்துக் கொண்டு ஓடி வந்தாள். பிள்ளையை அவள் கையில் கொடுத்து விட்டு, ஓடிப்போய் தன் மனைவியைத் தூக்கி வந்தான் அஜய்.
ரத்தத்தில் குளித்திருந்த அரசியை பயத்துடன் பார்த்தாள் அந்தப் பெண்.
“ப்ளிஸ் ஹெல்ப் மீ சிஸ்டர்! ஐ நீட் டூ சேவ் தெம் போத்” எனும் அவன் கதறலில் தன் நிலை அடைந்தவள், பிள்ளையைத் தூக்கிக் கொண்டு காரை எடுக்க விரைந்தாள்.
அம்மாவும் பெண்ணும் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள்.
அஜய் கலங்கிப் போய் நின்றான். மகளை, அந்த சின்ன குருத்தை மனைவிதான் எதாவது செய்து விட்டாளோ என மனம் கிடந்து அடித்துக் கொண்டது. டிப்ரஷனை சாதாரணமாக எடுத்துக் கொண்டேனோ என தன்னையே நொந்துக் கொண்டான் அஜய். மகளை கவனித்த டாக்டர் வெளியே வர, அவரிடம் ஓடினான் அவன்.
“பயப்படாதீங்க மிஸ்டர் அஜய்! யுவர் டாட்டர் இஸ் சேவ்! டீஹைட்ரேட் ஆகிருக்கா பேபி. ரொம்ப நேரமா பால் குடுக்காம விட்டிருக்காங்க. அழுதழுது தொண்டைக் கட்டி, மூச்சு விட திணறிருக்கா! இப்போ நாங்க தகுந்த சிகிச்சைக் குடுத்துடோம்! டோண்ட் வோரி! ஷீ இஸ் பெர்பெக்ட்லி ஆல்ரைட்”
டாக்டர் அப்படி சொன்னதும் தான் உயிரே வந்தது அவனுக்கு. மனைவி அவளிலேயே மூழ்கி பாலூட்டாமல் இருந்திருக்கிறாள்! பிள்ளையைக் கொல்ல முயலவில்லை என புரிந்துக் கொண்டவனுக்கு நிம்மதி அடைவதா, இல்லை தான் வராமல் இருந்திருந்தால் அம்மா மகள் இருவரின் உயிர் போயிருக்கும் என்பதை நினைத்து அழுது கரைவதா என தெரியவில்லை.
மனைவி இன்னும் ஆபரேஷன் தியேட்டரில் தான் இருந்தாள். ஹேவி ப்ளட் லோஸ் வேறு. எதிர் வீட்டுப் பெண் தான் அவனுக்கு ஆறுதல் சொல்லி கொஞ்சம் தெம்பாக இருக்க காபியும் வாங்கிக் கொடுத்து விட்டுப் போனாள். தன் கண்ணுக்கு தெய்வமாய் தெரிந்தவளை, கை எடுத்துக் கும்பிட்டான் அஜய்.
மனைவி நிலை தெரிய காத்திருந்தவன், மகளின் பக்கத்திலேயே இருந்தான். சின்னக் கையில் ஊசி ஏற்றி ட்ரீப்ஸ் ஏற, ஓய்ந்து போய் கிடந்த மகளை மெல்ல வருடிக் கொடுத்தான்.
“அப்பாவை மன்னிச்சுருடா அம்மும்மா!” கண்ணீர் பாட்டுக்கு வழிந்தது அவனுக்கு.
“இனி அப்பா உன்னையும் அம்மாவையும் பத்திரமா பார்த்துக்கறேன்மா! எனக்கு உங்கள விட்டா வேற யாரும்மா இருக்கா!” என மெல்லிய குரலில் கேவினான் அந்த வளர்ந்த ஆண்மகன்.
“சார், டாக்டர் உங்கள கூப்பிடறாரு” என மெல்லிய குரலில் அழைத்தார் நர்ஸ்.
மகள் அருகில் இன்னொரு நர்ஸ் இருக்க, மனைவிக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டரை நாடிப் போனான் அஜய். மனம் கல்லைக் கட்டி வைத்தது போல கனத்தது. கால்கள் நகர மாட்டேன் என சண்டித்தனம் செய்தன. கண்களைத் துடைத்துக் கொண்டு மெல்ல நெருங்கினான் எமெர்ஜென்சி அறையை.
வெளியே வந்த டாக்டர்,
“மிஸ்டர் அஜய்! உங்க மனைவியைக் காப்பாத்திட்டோம்! ஸ்டேபில் ஆக இன்னும் சில வாரம் எடுக்கலாம். ஆனா நான் உங்க கிட்ட பேச வந்தது வேற விஷயம்” என்றார் அவர்.
“சொ..சொல்லுங்க டாக்டர்”
“உங்க மனைவிய ஒரு மனநல மருத்துவர் கிட்ட ரெபர் பண்ணுறது நல்லதுன்னு நான் நெனைக்கறேன். எனக்கு என்னமோ இது அவங்களோட முதல் சூசைட் அட்டேம்ப்ட்னு தோணல! இன்னொரு கையில இதே மாதிரி காயத்துக்கான தழும்பு இருக்கு”
அவனும் அந்த தழும்பைப் பார்த்து விசாரித்திருக்கிறான். சின்ன வயதில் சமையல் விளையாட்டு விளையாடும் போது கத்தி கீறிவிட்டது என சொல்லி இருந்தாள் மனைவி.
‘ஐயோடி! நம்பினேனே உன்னை, அப்படியே நம்பினேனே!’ மனதிலேயே அரற்றினான் அஜய்.
“இப்படியே விடறது நல்லதில்லை அஜய்! சுத்தி உள்ளவங்களுக்குக் கூட ஆபத்தா போயிடலாம்! நம்ம ஹாஸ்பிட்டலயே சைக்கலோஜி டிபார்ண்ட்மெண்ட் இருக்கு. நான் ரெபர் பண்ணறேன் அங்க! லேட்டர் வந்து லெட்டர் வாங்கிக்குங்க” என சொல்லியவர், அவன் தோளில் தட்டிக் கொடுத்து விட்டு சென்றார்.
மனநிலை பாதிப்பு, ஏற்கனவே தற்கொலைக்கு முயன்றவள் எனும் பதங்கள் அவனை ஆட்டி வைத்தன. இதெல்லாம் அறியாமல், தெரியாமல் இத்தனை வருடம் அவளோடு வாழ்ந்திருக்கிறோமே எனும் எண்ணமே உயிரோடு கொன்றது அவனை.
“கல்யாணம் ஆனதும், நாம ரெண்டே பேருதானே! வாழ்க்கை முழுக்கப் பேசலாம்” என பெண் பார்க்கப் போன போது அரசி சொன்னது ஞாபகம் வந்தது அவனுக்கு.
‘ரெண்டு மூனானது தான் பிரச்சனையோ!’ என அவன் மனம் சரியான திசையில் பயணித்தது.
‘என்ன வந்தாலும் சமாளிக்கனும்! அவளும் புள்ளயும் என் ரெண்டு கண்ணு மாதிரி!’ என மனதில் முடிவெடுத்தவன், நிமிர்ந்து நின்றான்.
அரசி ஹாஸ்பிட்டலில் இருந்த இரண்டு வாரமும் அவனுக்கு ஒரே ஓட்டம்தான். வேலைக்கு விடுப்பு எழுதி கொடுத்தவன், மகளையும் மனைவியையும் ஓடி ஓடிப் பார்த்தான். அரசிக்கு வீரியமான மருந்துகள் கொடுக்கப்பட்டதால், மகளுக்கு நர்சின் உதவியுடன் புட்டிப்பால் பழக்கினான் அஜய். வேலை செய்யும் பெண்மணியை ஹாஸ்பிட்டலுக்கு வரவைத்து மகளைப் பார்த்துக் கொள்ள வைத்தான். அவர்கள் இருவருக்காக தான் நலமாக இருக்க வேண்டும் என தன்னையும் கவனித்துக் கொண்டான். அரசியுடன் ஹாஸ்பிட்டல் அறையில் இருக்கும் நேரமெல்லாம் அவள் கண்கள் குற்ற உணர்ச்சியுடன் அவனையே வட்டமிடும். அவனும் அவளுக்கு எல்லாம் செய்வான், அன்பாக பேசுவான். ஆனால் தற்கொலை முயற்சி சம்பவத்தை குறித்து மட்டும் எதுவும் பேச மாட்டான்.
“ஜெய்!”
“என்னம்மா?”
“பாப்பாவ நான் ஒன்னும் செய்யல ஜெய்!”
“எனக்கு தெரியும்டா”
“எனக்கு அன்னைக்கு என்ன ஆச்சுன்னே தெரியல ஜெய்! ஒரே சோகமா, என் வாழ்க்கையே முழுகிப் போயிட்ட மாதிரி ஒரு பீலிங். நீங்க வேற என்னை தள்ளி வச்சிடலாம்னு பாப்பாகிட்ட சொன்னீங்களா, அதான் என்னால முடியல ஜெய்! அந்த வார்த்தைய ஏத்துக்கவே முடியல..அப்படியே படுத்துருந்தேன். இவ அழறா, எனக்கு கேக்குது! எழுந்து வந்து தூக்கனும், பால் கொடுக்கனும்னு அறிவு சொல்லுது ஆனா என் மனசும் உடம்பும் கேக்க மாட்டுது ஜெய்! நான் நல்ல பொண்டாட்டியா? நல்ல அம்மாவா? அப்படின்னு எனக்குள்ளயே ஒரு கேள்வி! போக போக அவ அழறது கூட என் காதுல விழல. எனக்குள்ளேயே அப்படியே மூழ்கிட்டேன். திடீர்னு எழுந்து பார்க்கறேன், பாப்பா அப்படியே அமைதியா கிடக்கா! எனக்கு…எனக்கு என்ன செய்யன்னு தெரில ஜெய்! என் புள்ளைக்கு என்னமோ ஆச்சுன்னு தெரியுது, ஆனா என்ன செய்யன்னு தெரில! அவ இல்லாம, நீங்க இருக்க மாட்டிங்கன்னு எனக்கு தெரியும். அதான் நீங்க போறதுக்கு முன்ன நான் போயிடலாம்னு கையை அறுத்துக்கிட்டேன்!” என சொல்லி கதறிய மனைவியை இறுக அணைத்துக் கொண்டான் அஜய்.
வார்த்தைகள் வரவில்லை அவனுக்கு. அவளோடு சேர்ந்து இவனுக்கும் கண்ணீர் தான் வந்தது.
அப்படி இப்படி என உடல் தேறிய அரசியை அப்பாயிட்மேண்ட் வாங்கி இருந்த பிரபல மனநிலை மருத்துவரிடம் அழைத்து சென்றான் அஜய். ஒரு மாதம் அவள் கவுன்சலிங் சென்று வர, வீட்டிலேயே தங்கி முழு நேரமும் பிள்ளையையும் மனைவியையும் பார்த்துக் கொள்ள ஒரு பெண்மணியை வேலைக்கு எடுத்தான். கொஞ்சம் வயதான அந்தப் பெண்மணி மங்கையை நன்றாகப் பார்த்துக் கொண்டார்.
ஒரு மாதம் கழித்து அஜயிடம் தனியாக பேச வேண்டும் என அழைத்தார் அந்த மனநல மருத்துவர். படபடப்போடு கிளம்பி சென்றான் அஜய்.
“மிஸ்டர் அஜய்”
“சொல்லுங்க டாக்டர்”
“உங்க மனைவி அவங்க கடந்த காலத்தப் பத்தி எதாச்சும் ஷேர் பண்ணிருக்காங்களா?”
“இல்ல டாக்டர்! நெறைய தடவை கேட்டுருக்கேன்! பகிர்ந்துக்கற மாதிரி சந்தோஷமான விஷயம் ஒன்னும் இல்லைன்னு மழுப்பிடுவா! நானும் பழச எதுக்கு கிளறனும்னு அப்படியே விட்டுட்டேன் டாக்டர்”
“ஒரு வாக்கியத்துல சொல்லனும்னா அவங்க ரொம்ப பாவப்பட்ட ஜீவன் மிஸ்டர் அஜய். அவங்க கூட பேசியதுல, கவுன்சலிங் குடுத்ததுல அவங்களுக்கு ‘பார்டர்லைன் பெர்சனலிட்டி டிசார்டர்’(borderline personality disorder) இருக்குன்னு டயக்னோஸ் பண்ணியிருக்கேன். நல்லா கேட்டுக்குங்க மிஸ்டர் அஜய், இது அவங்க அம்மாவுக்கும் இருந்துருக்கு, இப்ப இவங்களுக்கு, நாளைக்கு இவங்க மகளுக்கும் வரலாம்” என ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் டாக்டர்.
நெஞ்சை நீவி விட்டுக் கொண்டான் அஜய்.
“அப்படின்னா என்ன டாக்டர்?”
“இது ஒரு வகையான மனநோய்தான். இது உள்ளவங்க ரொம்ப இன்செகியூரா, ஓவர் இமோஷனலா, பொசெசிவா இருப்பாங்க. இந்த பொசொசிவ் கூட அவங்க உயிரா நினைக்கறவங்க கிட்ட மட்டும் தான் வரும். நாம எதுக்கும் லாயக்கு இல்லை, நம்மை யாருக்கும் பிடிக்கல, நம்ம விரும்பறவங்க கண்டிப்பா நம்மள விட்டுட்டுப் போயிடுவாங்கன்ற மனநிலைல நித்தம் உழண்டுட்டு இருப்பாங்க. அவங்க கிட்ட கொஞ்சமா பாசத்த காட்டனா கூட அப்படியே உடும்பு மாதிரி புடிச்சுக்குவாங்க. அந்த பாசத்துக்குரியவங்க லேசா முகம் சுளிச்சாக் கூட உள்ளுக்குள்ள நொறுங்கி போயிடுவாங்க. இங்கதான் தன்னையே துன்புறுத்திக்கறது, தற்கொலைக்கு முயலுறது எல்லாம் வருது மிஸ்டர் அஜய்”
நெஞ்சம் கனக்க டாக்டரையே பார்த்திருந்தான் அஜய்.
“இவங்க அம்மா ரொம்ப பொசெசிவ்வா இருந்துருக்காங்க. அவங்களோட தொல்லை பொறுக்க முடியாம உங்க மாமனார் இன்னொரு பொண்ணு பக்கம் சாஞ்சிருக்காரு. அத ஏத்துக்க முடியாமத்தான் தற்கொலை பண்ணிக்கிட்டாங்க. அவங்க அம்மாவோட வயலண்ட் பிஹேவியரத்தான் பேய் பிடிச்சிருக்குன்னு இவங்களாம் முடிவு பண்ணிருக்காங்க. மனைவி போனதும் அந்த இன்னொரு பொண்ண கல்யாணம் செஞ்சிருக்காரு உங்க மாமனார். அவங்க சித்தி இவங்கள வெறுக்கல்ல, அதோட பாசமாகவும் பார்க்கல! ஆனா அப்பா ரொம்பவே நல்லா பார்த்துருக்காரு. அவங்களுக்கு குழந்தை குட்டின்னு வர, உங்க மனைவிக்கு ரொம்ப பொறாமை ஆகியிருக்கு! ஏழு வயசுல, அப்பா தம்பிக்கு மட்டும் சைக்கிள் வாங்கி குடுத்து ஓட்டவும் சொல்லி குடுத்தாருன்ற கோபத்துல அவன சைக்கிள்ள இருந்து தள்ளி விட்டிருக்காங்க! அன்னைக்கு அவங்க அப்பா கோபத்துல முதல் முறையா போட்டு அடிச்சிருக்காரு. அத ஏத்துக்க முடியாமத்தான் கைய அறுத்துக்கிட்டு தற்கொலைக்கு முயன்றிருக்காங்க. கொஞ்சம் அக்கறை எடுத்து கவனிச்சிருந்தா ஷீ மைட் பீ ஆல்ரைட். ஆனா தற்கொலைக்கு முயலவும் அம்மா மாதிரி பைத்தியம் பிடிச்சிருக்குன்னு அடிக்கடி சொல்லி சொல்லி வீட்டுல எல்லாரும் திட்டியிருக்காங்க. அவங்க அப்பாவும் ஒதுக்கி வைக்க ஆரம்பிச்சிருக்காரு. கிடைச்ச கொஞ்ச நஞ்ச பாசமும் இல்லாம போச்சு. மத்த ரெண்டு பிள்ளைங்க கிட்ட இவங்கள நெருங்க விடவே பயந்து, பைத்தியத்துகிட்ட போகாதீங்கன்னு சொல்லி சொல்லி வளர்ந்துருக்காங்க. செத்துப் பொழைச்சு வந்தவங்க ரொம்பவே ஒடுங்கிப் போயிட்டாங்க. பாசத்த எதிர்ப்பார்க்க பயம், அப்பா மறுபடி அடிச்சிருவாரோன்னு பயம், அம்மா மாதிரி தான் பைத்தியம் தானோன்னு பயம். இப்படி பயந்து பயந்து எதையும் தைரியமா பேச முடியாம, நடந்துக்க முடியாம அப்படியே வளர்ந்துருக்காங்க. எந்நேரமும் அவங்களுக்கு காவலா ஆள் வேறு போட்டுருக்காங்க, எங்க மறுபடி சூசைட் பண்ணிப்பாங்களோன்னு! பதினெட்டு ஆனதும் கடமையை முடிக்கற மாதிரி உங்களுக்கு கல்யாணமும் பண்ணிக் குடுத்துருக்காங்க”
சும்மாவா கல்யாணம் செய்து கொடுத்தார்கள்! அவள் குறையை மறைக்க வீடு, நகை தொகை என ஆர்ப்பாட்டமாகவல்லவா திருமணம் செய்து கொடுத்தார்கள். மனைவி ஆரம்பத்தில் பேசவே தயங்கியது, கொஞ்சம் கொஞ்சமாக தனதன்பில் மாறியது எல்லாம் நினைவுக்கு வந்தது அவனுக்கு.
“உங்க அன்பு அவங்களுக்கு உள்ள சொட்டு சொட்டா இறங்கி, காஞ்சி போய் கிடந்த மனச குளிர வச்சிருக்கு மிஸ்டர் அஜய். நீங்க மட்டும் தான் எல்லாமும்னு மகிழ்ச்சியா இருந்துருக்காங்க உங்க மக வரும் வரை. உங்கள அவங்களால யார் கிட்டயும் ஷேர் பண்ணிக்க முடியாது. மகளா இருந்தாலும் சரி, மகனா இருந்தாலும் சரி. உங்களுக்கு சொந்த பந்தம் இல்லாம தனியாளா இருந்தது கூட அவங்களுக்கு வசதியா போச்சு. முழுக்க முழுக்க நீங்க அவங்களுக்குத்தானேன்னு மகிழ்ந்துருக்காங்க. உங்களுக்காக எதையும் செய்வாங்க. குழந்தை உண்டாகி இருந்தப்போ அதை கலைச்சிருக்கலாம். ஒரு பொண்ணு நெனைச்சா முடியாதது இருக்கா! ஆனா நீங்க ஏங்கி அழுததுக்காக தனதன்புக்கு பங்கம் வரும்னு தெரிஞ்சும் சுமந்து பெத்துருக்காங்க. சுமக்கற ஒவ்வொரு நொடியும் உள்ளுக்குள்ள செத்துருக்காங்க. உங்களுக்காக எவ்வளவோ முயற்சி செஞ்சிருக்காங்க மகள பாசமா பார்க்க. ஆனா அவங்களால முடியல. மகள பார்த்தாலே பயம். தனக்கு கிடைச்ச அன்பை பறிச்சுக்குவாளோன்னு பயம்! குழந்தையப் பார்த்து தாயன்பு சுரக்கல இவங்களுக்கு! பயம், பயம், பயம் தான் சுரந்துருக்கு!”
இருவருக்கும் வரும் சின்ன சின்ன சண்டைகள் கூட, இவன் வெளியே செல்லும் போது வேறு பெண்கள் யாரிடமும் பேசி விட்டாலோ, எதிர்த்த வீட்டு பெண்ணிடம் புன்னகை சிந்தினாலோதான் நடக்கும். அப்பொழுதெல்லாம் மனைவியின் பொறாமையில் சிரித்தவன், இப்பொழுது உள்ளுக்குள் அழுதான்.
“டாக்டர், இதை கியூர் பண்ண முடியாதா?” கரகரத்த தொண்டையை செறுமியபடி கேட்டான் அஜய்.
“மருந்து மாத்திரை கவுன்சலிங்லாம் நான் தருவேன் அஜய். ஆனா நீங்க மட்டும்தான் அவங்களோட மன நோய்க்கு நிவாரணம் ஆகமுடியும். அவங்களோட மருந்தே நீங்கதான், உங்க அன்புதான்.”
“ஐயோ டாக்டர்! அவளுக்காக அன்பு என்ன, என் உயிரையே கூட குடுப்பேன்! ஆனா அவளுக்கு மட்டும்தான் என் அன்ப கொடுக்கனும்னா, எங்கள நம்பி பொறந்திருக்கும் அந்த பச்சைக் குருத்து என்னாகும் டாக்டர்!” அடக்கமாட்டாமல் கதறிவிட்டான் அஜய்.
இப்படி எத்தனையோ விசித்திரமான கேஸ்களைப் பார்த்தவராயிற்றே அவர்! அஜய் ஒரு கட்டுக்குள் வரும் வரை காத்திருந்தார்.
“மிஸ்டர் அஜய்! நீங்க பேலண்ஸ் பண்ணிதான் ஆகனும்! மனைவிக்கும் மகளுக்கும் உங்க அன்ப பேலண்ஸ் பண்ணிதான் ஆகனும். மனச தளர விடாம முயற்சி பண்ணுங்க. குழந்தைக்கு இப்ப ஒன்னும் தெரியாது. பால் குடிக்கும், தூங்கும், விளையாடும் அவ்வளவுதான். இந்த டைம்ம மகளும் நம்ம குடும்பம்தான்னு அவங்களுக்கு புரிய வைக்க கிடைச்ச வாய்ப்பா பயன்படுத்திக்குங்க! அன்புன்றது பங்குப் போட்டாலும் குறையாது. அள்ள அள்ள வந்துகிட்டே இருக்கற அட்சய பாத்திரம் அதுன்னு தெரிய வைங்க. ஐ வில் ஹெல்ப் யூ டூ. சியர் அப் மை மேன்! போசிட்டிவ் சைட் பார்த்தீங்கன்னா, அவங்க அம்மாவ விட இவங்களுக்கு பாதிப்பு குறைவு. இவங்க வயலண்ஸ் காட்டல உங்க கிட்டயும் மக கிட்டயும். சோ நம்பிக்கையா இருங்க” என தேற்றி அனுப்பி வைத்தார்.
சுருக் சுருக்கென வலித்த நெஞ்சை நீவி விட்டுக் கொண்டே மனதில் பாரத்துடன் வெளியேறினான் அஜய். அடுத்த வாரமே இன்னொரு குழந்தை வேண்டவே வேண்டாம் என குடும்பக்கட்டுப்பாடு செய்துக் கொண்டான் அவன்.
டாக்டர் சொன்னது போலவே, மனைவியை அன்பாகப் பார்த்துக் கொண்டான். மகளை பராமரிப்பவரிடம் விட்டு விட்டு வெளியே தெருவே கூட்டிப் போனான் அவளை. சிரிக்க வைத்தான், சிணுங்க வைத்தான். ஆனால் உள்ளுக்குள் மரித்துப் போனான். மனைவியின் முன் மகளை தூக்கக் கூட மாட்டான். அவள் நன்றாக அசந்து தூங்கியதும், மகளின் ரூமிக்கு போய் தூங்கும் குழந்தையை நெஞ்சில் அள்ளிப் போட்டுக் கொண்டு,
“அம்மும்மா, அம்மும்மா” என வாய் ஓயாமல் மெல்லிய குரலில் கொஞ்சுவான். கண்ணில் நிற்காமல் கண்ணீர் ஊற்றும்.
மனைவியின் நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் வந்தது. பழையபடி கலகலவென மாற ஆரம்பித்தாள். அதே நேரம் மகளும் வளர ஆரம்பித்தாள். எட்டு எடுத்து வைக்க ஆரம்பித்தாள். எட்டி நின்று பார்க்கும் தாயைவிட, இரவெல்லாம் தாங்கும் தந்தையை அவளுக்கு பிடித்துப் போனதில் மாயமென்ன! நடக்க ஆரம்பித்தவள், அவனை நோக்கி எட்டு எடுத்து வைத்தாள்.
ஈறு தெரிய சிரித்தப்படி தன்னை நோக்கி வரும் மகளை, எப்படி அள்ளிக் கொள்ளாமல் இருக்க முடியும். முடியவில்லையே அவனால்! அவசரத்தில் தூக்கி முத்தமிட்டுவிட்டு, பயத்தோடு மனைவியைப் பார்ப்பான். அவள் பார்வை குழந்தையைத் தூக்கி இருக்கும் அவன் கையிலேயே இருக்கும். கண்ணில் பயம் அப்பட்டமாக தெரியும். உடனே குழந்தையை வேலை செய்யும் பெண்மணியிடம் கொடுத்து விடுவான். அந்த மாதிரி சம்பவங்கள் நிகழும் நாட்களில் ரத்தக்காயம் கண்டிப்பாக இருக்கும் அவர்கள் வீட்டில். சத்தம் இல்லாமல் தன்னை துன்புறுத்திக் கொள்வாள் அரசி. வலியை அனுபவித்தால் மட்டுமே, அவளால் அஜயின் பாசம் இன்னொருவருக்கும் கிடைப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியும். ப்ளேட்டால் கை சதையைக் கீறிக் கொள்வாள், நகம் கொண்டு விரல் நகக்கண்ணை வலிக்க அழுத்துவாள், ரத்தம் வரும் அளவுக்கு தொடையைக் கிள்ளிக் கொள்வாள். ஆனால் ஒரு தடவைக் கூட பிள்ளையை அவள் துன்புறுத்தியது இல்லை. எல்லாமே சுய துன்புறுத்தல்தான். வலியில் தன் மன வலியை மறக்கடிப்பாள். பயந்துப் போவான் அஜய். மகளை விட்டு ஒதுங்கிப் போவான் அஜய்.
சாக்லேட்டைக் கொடுத்து பிடிங்கி விட்டால் என்ன செய்யும் குழந்தை? கத்தி அழாதா? குட்டி தவமங்கையும் தந்தை தூக்க வேண்டும் என கதறி அழுவாள். சமாதானப் படுத்தி அவளைத் தூங்க வைத்து விடுவார் அந்தப் பெண்மணி. மகள் அழுகை அவன் நெஞ்சை ரணமாய் கீறி கிழிக்கும்.
கொஞ்சம் கொஞ்சமாக இந்த வீட்டில் தனக்கு அன்பு கிடைக்காது என புரிந்து கொள்ள ஆரம்பித்திருந்தாள் சின்னவள். வேலைக்காரியே அவளுக்கு எல்லாம் ஆகிப்போனார். அம்மா என அழைத்தது கூட அவரைத்தான். உள்ளுக்குள் நொறுங்கிப் போனான் அஜய்.
இப்படியே மகளுக்கு ஐந்து வயது ஆகி இருந்தது. வீட்டில் கிடைக்காத அன்பை வெளியே தேட ஆரம்பித்தாள் மகள். பள்ளியில் சேர்த்து விட, ஆசிரியை பின்னாலேயே சுற்றினாள். அவருக்கு இவள் மட்டும் மாணவி இல்லையே. மடியில் வந்து அமர்ந்து கொள்ளும், அடிக்கடி ஒட்டி உரசியபடி நிற்கும், தீச்சர், தீச்சர் என அடிக்கொரு தடவை அழைக்கும் அழகிய குட்டி மங்கையை கடிந்துக் கொள்ளவும் முடியவில்லை அவரால். அவளின் அப்பாவிடம் இப்படி நடந்துக் கொள்கிறாள் மகள் எனவும், தன்னால் மற்ற பிள்ளைகளை கவனிக்க முடியவில்லை எனவும் சொல்லி விட, ஓவென வந்தது அவனுக்கு. பாசமாய் யாராவது பேசினால் கொடுத்து விட்ட ஸ்நாக்ஸ் எல்லாவற்றையும் அந்த பிள்ளைகளுக்கே கொடுத்து விட்டு பட்டினியாய் வரும் அளவுக்கு அன்புக்கு ஏங்கி நின்றாள் அவள்.
அடிக்கடி நெஞ்சு வலி வருவதால், அன்று செக் அப் போய் விட்டு சீக்கிரம் வீட்டுக்கு வந்தான் அஜய். மனைவி தூங்கிக் கொண்டிருக்க, மகளை வீட்டில் காணோம்.
“அம்மும்மா எங்க” என கேட்க, எதிர்த்த வீட்டு தாத்தா பாட்டியுடன் விளையாட போயிருக்கிறாள் என பதில் கொடுத்தார் அவர். அடிக்கடி நடப்பதுதான் அது. மனைவி தூங்கும் நேரம் மகளுடன் பொழுதைக் கழிக்கலாம் என எதிர்த்த வீட்டுக்குப் போனான் அஜய். அங்கே அவன் கண்ட காட்சியில் ரத்தம் கொதித்துப் போனது அவனுக்கு.
அந்தக் கிழவனை ஓங்கி ஒரு எத்து எத்தியவன், கீழே விழுந்தவனைப் புரட்டி எடுத்து விட்டான்.
“பாவி, பாவி! நாயே, உன்னை தாத்தா தாத்தான்னு தானேடா கூப்புடாறா! பச்சக் குழந்தைடா அவ! அவ கிட்ட போய்! ச்சீச்சீ! இந்த கைதானே தொடக்கூடாத இடத்துல தொட்டுச்சு, ஒடச்சி போடறன்டா நாயே!” என அடி பின்னி எடுத்து விட்டான் அஜய். கண்கள் தீப்பிழம்பாய் ஜொலிக்க, கை ஓயும் வரை அடிப்பதை நிறுத்தவில்லை அவன். மூஞ்சு முகரையெல்லாம் பேர்த்தெடுத்து விட்டான் அஜய். அந்தக் கிழவனின் மகள், முன்பு மனைவி மகள் உயிர் காக்க உதவியவள், அழுகையுடன் காலில் விழவும் தான் அடிப்பதை நிறுத்தினான் அவன்.
மகளோ,
“அப்பா, தாத்தா அடிக்க வேணா! தாத்தா பாவம்! அடிக்க வேணா” என அழுதபடி நின்றாள்.
தன்னை தொடக்கூடாத இடத்தில் ஒருவன் தொடுவதை கூட அறியத் தெரியாத வயது. அன்பு காட்டும் மனிதர்கள் என தேடிப் போய் படுக்குழியில் விழப் பார்த்த மகளை வாரி அணைத்துக் கொண்டான் அஜய்.
“அம்மும்மா! உங்கப்பன் ஒரு பாவிடா, பாவி! எனக்குல்லாம் கடவுள் உன்னை மாதிரி ஒரு பொக்கிஷத்தைக் குடுத்துருக்கவே கூடாது. குடுத்துருக்கக் கூடாதுடா! நான் பாவிடா பாவி” என முகத்தில் அறைந்துக் கொண்டு அழுதான்.
தன்னை நினைத்து, தன் மனைவியை நினைத்து, விதியை நினைத்து அவ்வளவு கோபம் அவனுக்கு. மகளைத் தூக்கிக் கொண்டு என்னவோ துரத்துவது போல வீட்டுக்கு ஓடினான்.
மகளை அணைத்தப்படி அவன் வர, விழி விரிய அவர்களையேப் பார்த்திருந்தாள் மங்கையர்க்கரசி. டாக்டரின் அட்வைஸ், மனைவியின் மனநிலை எல்லாம் மறந்து போனது அவனுக்கு. கோபம் எல்லாம் மனைவியின் பால் திரும்ப, விட்டான் ஓர் அறை! ஒரு சுற்று சுற்றி கீழே விழுந்தாள் அவள். பேந்த பேந்த கணவனைப் பார்த்து நீயா அடித்தது என விழித்தவளின் கண்களில் கொஞ்சம் கொஞ்சமாக கோபம் ஏறியது! தன்னை அதட்டிக் கூட இராத கணவன் கை நீட்டியதில் அவளின் மொத்த கோபமும் மகளின் மேல் பாய்ந்தது.
தட்டுத் தடுமாறி எழுந்து நின்றவள், மகளை நோக்கிப் பாய்ந்தாள். அவளின் பாய்ச்சலில் அஜயும், கையில் பிடித்திருந்த மகளோடு கீழே விழுந்தான். மகளின் தலை முடியைக் கொத்தாய் பிடித்தவள்,
“கடசில என் புருஷன என் கிட்ட இருந்து பிரிச்சிட்டல்ல! இப்படித்தான் நடக்கும்னு நான் பயந்து பயந்து கிடக்க, அதே மாதிரி பண்ணிட்டல்ல! பிசாசே, சனியனே! செத்துப்போடி, செத்துப்போ!” என குழந்தையை தாறுமாறாக அடிக்க ஆரம்பித்தாள். அஜயால் கூட அவளை அடக்க முடியவில்லை.
“இவ வேணா நமக்கு! ஜெய் வேணா ஜெய். ப்ளிஸ்! நம்மள பிரிச்சிடுவா! நீங்க இல்லைன்னா நான் செத்துப் போயிடுவேன். இவ வேணா” இத்தனை நாளாக மனதில் இருந்த அழுத்தம் எல்லாம் வார்த்தைகளாக வந்தது.
“நான் வேணுமா இல்ல அவளா?” என கத்தினாள்.
“சனியன தொலைச்சு விடுங்க” என கதறினாள்.
“இப்படி வாழறதுக்கு நான் செத்துப் போறேன்! நிம்மதியா இருங்க நீங்க” என தலையைத் தரையில் முட்டிக் கொண்டாள்.
“என்னை விட அவதான் முக்கியமா போயிட்டாளா? என்னை அடிச்சிட்டீங்கல்ல! உங்க அரசிய அடிச்சிட்டீங்க இல்ல” தேம்பினாள்.
வேலைக்காரப் பெண்மணி ஓடி வந்து, அழுது கொண்டிருக்கும் குழந்தையைத் தூக்கிக் கொண்டார். அஜயின் பிடியில் இருந்து துள்ளிக் கொண்டு மகளை அடிக்க வந்தாள் அரசி. தனது கோபம் அவளில் இருந்த வெறித்தனத்தை கிளறி விட்டிருப்பதை எண்ணி பயந்துப் போனான் அஜய். இத்தனை நாள் தனக்காக அடங்கி இருந்தவள், தனது ஒரு அறையில் மொத்தமாய் மாறிப் போனதை எண்ணி நடுங்கிப் போனான் அஜய்.
“பால்ல தூக்க மருந்து கலந்து எடுத்து வாங்கம்மா” என ஏவியவன், மனைவியை இறுக கட்டிக் கொண்டான். போராடி பாலை புகட்டி விட்டான் அவளுக்கு. கத்தி கதறி ஒரு வழியாக தூங்கிப் போனாள் அரசி.
பிறகே ஓடிப்போய் மகளைப் பார்த்தான். அழுதவாறே படுத்திருந்தாள் அவள். வேலைக்காரப் பெண்ணை வெளியே அனுப்பி விட்டு, மகளின் உடலை செக் செய்தான் அவன். அந்த நேரம் ஒரு தந்தையாக உள்ளுக்குள் செத்துப்போனான் அஜய். ரத்தக்காயமோ, வீக்கமோ இல்லாமல் இருக்கவும் தான் மனம் நிம்மதி அடைந்தது. நெஞ்சில் மகளைப் போட்டுக் கொண்டு அந்த ஆறடி ஆண்மகன் குழந்தையாய் அழுதான். மனைவி தூங்கி எழும் வரை, மகளை அணைத்துக் கொண்டே கண்களில் கண்ணீர் பொங்க யோசித்துக் கொண்டிருந்தான் அவன்.
அன்புக்காக தனது மகள் ஏங்கிப் போயிருப்பது அவளுக்கே பாதகமாகும் எனப் புரிந்தது. ஐந்து வயதிலேயே அவள் மேல் அட்வாண்டேஜ் எடுத்துக் கொள்ளும் சமூகம், வயது ஏற ஏற இன்னும் என்னவெல்லாம் செய்யும் என எண்ணி கலங்கினான். மனைவியைப் போல மகள் வளரக் கூடாது என முடிவெடுத்தான். வயலண்டாக மாறி இருந்த மனைவியும், ஒன்றும் அறியாத மகளும் இனி ஒரே வீட்டில் இருக்க முடியாது என புரிந்தது. தூங்காமல் யோசித்தப்படியே படுத்துக் கிடந்தான். நெஞ்சு வலி வேறு சுருக் சுருக்கென தைத்தது.
தூங்கி எழுந்த மனைவியிடம்,
“இனிமே உன் அஜய் உனக்கு மட்டும்தான். உன் கூட பங்கு போட யாரும் வரமாட்டாங்க” என சிரித்த முகமாக சொன்னான். முகம் மலர்ந்துப் போக கணவனைக் கட்டிக் கொண்டாள் அவள்.
மறுநாள் மருத்துவமனைக்கு போன் செய்து ரிசால்டை கேட்டுக் கொண்டான். அவனுக்கு ஹார்ட் ப்ராப்ளம் ஆரம்பக்கட்டத்தில் இருப்பதைத் தெரிந்துக் கொண்டவன், பல முடிவுகளை உடனடியாக எடுத்தான். சிகிச்சைக்குப் பதிந்து கொண்டவன், தான் உயிரோடு இருந்தால் மட்டுமே இரு பெண்களையும் பார்த்துக் கொள்ள முடியும் என யோசித்து ஒருவரை இழக்க முடிவு செய்தான். இந்த ஸ்ட்ரேஸ் கண்டிப்பாக தன்னை அழித்து விடும், தான் இல்லாவிட்டால் மனநோயாளியான மனைவியும், இளங்குருத்தான மகளும் என்ன கதியாவார்களோ என பயந்தான்.
அடுத்த வாரமே, மகளை ஏற்காட்டில் இருந்த ஒரு பள்ளியில் சேர்த்து விட்டான் அஜய். கண்டிப்புக்கும் ஒழுக்கத்துக்கும் பேர் போன பள்ளி அது! மகளை தி பெஸ்டாக வளர்க்க முடிவு செய்தான். மனைவியின் நிழல் அவள் மேல் படாமல் இருக்கட்டும் என தூரமாக கொண்டு போய் வைத்தான் மகளை.
“அம்மும்மா! இங்க உன்னை நல்லாப் பார்த்துப்பாங்கடா! நல்ல பழக்க வழக்கம் சொல்லிக் குடுப்பாங்க! இறைபக்தி சொல்லிக் குடுப்பாங்க! நல்ல படிப்பு சொல்லிக் குடுப்பாங்க! நீங்க வாழ்க்கையில தன்னம்பிக்கை உள்ள, தனிச்சு சாதிக்க முடிஞ்ச பெண்ணா வளருவீங்க. எங்க கூட இருந்தா அழிஞ்சு போயிடுவீங்க கண்ணம்மா! அப்பா உங்கள பொன்னாட்டம் பாத்துப்பேன். ஆனா தூர இருந்து பார்த்துப்பேன். அடிக்கடி வந்து உங்கள பார்த்துட்டுப் போவேன்டா அம்மும்மா! என் அம்மாடா நீங்க! அப்பா உங்கள ரொம்பவே மிஸ் பண்ணுவேன். ஆனா என் மக பத்திரமா இருக்கான்ற நிம்மதியிலே இருப்பேன்! என் அம்மும்மாடா நீங்க. என் புஜ்ஜி செல்லம்!” என கண்களில் நீர் வழிய தன் மகளை கொஞ்சியவன், அங்கிருந்த சிஸ்டரின் கையில் அவளைப் பிடித்துக் கொடுத்தான். பின்பு திரும்பிப் பார்க்காமல், நடக்க ஆரம்பித்தான்.
“அப்பா! அப்பா! அப்பா!” மகள் கதறும் ஓசை நெஞ்சை உலுக்கினாலும், திரும்பிப் பார்க்காமல் நடந்தான் அஜய்குமார்.
(அடி பணிவான்…..)
(பிட்சா கேட்கும் அன்பர்களே..அடுத்த எபியில் சீஸ் பிட்சாவே வழங்கப்படும் என கூறிக்கொண்டு………)
(எழுதறப்பவே தொண்டை அடைக்குது எனக்கு. எப்பவுமே என் கதைகளிலே இவங்க கெட்டவங்கன்னு காட்டப் பிடிக்காது. ஜட்ஜ்மெண்ட உங்க கையிலேயே குடுத்துடுவேன். இன்னிக்கும் அத உங்க கையிலே குடுக்கறேன்! மங்கையர்க்கரசி கெட்டவனு நீங்க நெனைச்சா, கெட்டவளாவே இருக்கட்டும். பாவப்பட்ட ஜீவன்னு நீங்க நெனைச்சா அப்படியே இருக்கட்டும்! இவளாம் ஒரு அம்மாவானு நெனைச்சா அப்படியே இருக்கட்டும்! ஜட்ஜ்மெண்ட் உங்கள் கையில் அன்பர்களே!!!!!!)