லவ் ஆர் ஹேட் 28

ei4Q96365342-87a85f20

லவ் ஆர் ஹேட் 28

‘ஏன்ப்பா என்னை மட்டும் இங்க தனியா விட்டுட்டு நீங்களும் அம்மாவும் போயிட்டீங்க? என்னையும் கூட கூட்டிட்டு போயிருக்கலாமே… இவ்வளவு கஷ்டத்தை அனுபவிச்சிருக்க மாட்டேனே.. அவர மன்னிக்கவும் முடியல. ஏத்துக்கவும் முடியல. இவ்வளவு நடந்தும் அவர் சாப்பிட்டாரா?, நல்லா இருக்காரா? னு தான் யோசிச்சிக்கிட்டு இருக்கேன். அன்னைக்கு திட்டிட்டேன்னு போயிட்டாரு. ஏன் அதுக்கப்றம் வர தோனலயா என்ன? எல்லாம் நடிப்பு!’

மானசீகமாக தன் தந்தையுடன் பேசியவாறு அழுத ரித்வி, கட்டிலில் விழுந்து நடந்ததை நினைத்து கண்ணீர் வடிக்க, அறைவாசலிலிருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்த தேவகிக்கோ மனதில் பாரம் ஏறிய உணர்வு!

அவளருகில் சென்றமர்ந்தவர் அவள் தலையை மெதுவாக வருட, சிறுகுழந்தை போல் அவரிடையை கட்டிக்கொண்டு மடியில் தலைவைத்து, “நான் யாருக்கு என்ன பாவம் பண்ணேன் பாட்டி? யாரோ பண்ண தப்புக்கு நான் எதுக்கு தண்டனை அனுபவிக்கிறேன்? அவர விட்டு வந்துட்டேன் தான். அவர் மேல அத்தனை கோபம், ஆத்திரம் எனக்குள்ள இருக்கு. அவர் மேல நான் வச்சிருந்த மொத்த நம்பிக்கையும் சிதைஞ்சி போயிருச்சி. ஆனாலும், அவரோட நினைப்பு மட்டும் என்கிட்டயிருந்து போக மாட்டேங்குது. அன்னைக்கு அவர் மயக்கம் போட்டு விழுந்துட்டாருன்னு சொன்னதுமே ரொம்ப துடிச்சி போயிட்டேன். ஏன் பாட்டி கிருஷ்ணா எனக்கு இத்தனை கஷ்டத்தை கொடுக்குறான்?” என்று ரித்வி கதறியழ, அவருடைய ஒருசொட்டு விழிநீர் அவளின் கன்னத்தில் பட்டு தெறித்தது.

“அன்னைக்கு உன் புருஷன் உனக்காக, உன்னை பார்க்கனும்னு வீட்டு வாசல்ல ஒருநாள் முழுக்க நின்னுக்கிட்டு இருந்தான். நீ வேணாம்னு நினைச்சிருந்தா அவன் ஏன் உன்னை தேடி வந்திருக்க போறான்? ஒருவேள, அவன் பண்ண தப்ப…” தேவகி பேசிக்கொண்டே செல்ல, அதை இடைவெட்டி, “என்ன பாட்டி பேசுறீங்க? உங்கள கஷ்டப்படுத்தனும்னு என்னை பயன்படுத்தியிருக்காரு. அவர் பண்ணதை நியாயப்படுத்தி பேசுற மாதிரி இருக்கு உங்க பேச்சு. ஆனா, அவருக்கு இன்னும் நம்ம குடும்பத்து மேல அதே கோபம் தான். அதே வெறுப்பு தான். கூடவே அவரோட அழுத்தமும், பிடிவாதமும் அப்படியே தான் இருக்கு. பயமா இருக்கு பாட்டி”

முதல்தடவை தன் பாட்டி தன்னுடன் நேரடியாக பேசுவதை கூட உணராது தன் மன ஆதங்கங்களை வெளிப்படுத்தி ரித்வி அழ, ஆறுதலாக அவள் முதுகை நீவிவிட்டவருக்கு ஒரேயொரு யோசனை தான் தோன்றியது.

அடுத்தநாள்,

தோட்டத்தில் பூக்களை வெறித்தவாறு நின்றிருந்த யாதவ்விற்கோ இதே இடத்தில் ரித்வி காதலை சொல்ல வந்ததும், அவள் கண் முன்னாலே நடாஷாவை அவன் அணைத்து நின்றதும், அப்போது ரித்வியின் கண்களில் தெரிந்த வலியுமே மனக்கண் முன் விம்பமாக ஓடிக் கொண்டிருந்தன.

கூடவே, ‘உங்களுக்காக காத்திருந்தேன், அந்த மீரா கிருஷ்ணனுக்காக காத்திருந்த மாதிரி…’  அன்று அவள் சொன்ன வார்த்தைகளுமே மீண்டும் மீண்டும் காதில் ஒலித்துக் கொண்டிருந்தன அவனுக்கு.

‘தனக்கும் மீரா போன்ற பெண் கிடைக்க மாட்டாளா?’ என ஏங்கியவனுக்கு தன்னவளே தனக்காக காத்திருந்த மீரா தான் என்று அப்போது புரியவில்லை. ஆனால், புரிந்த சமயம் அவள் இவன் பக்கத்தில் இல்லை. ஏதோ திட்டத்தை செயல்படுத்த போய் தன்னவளை பிரிய வேண்டி வரும் என்று அவன் நினைத்திருக்கவும் மாட்டான்.

அவளுடன் வாழ்ந்த அந்த கொஞ்சநாட்களின் இனிமையில் மூழ்கி யாதவ் நின்றிருக்க, “நான் உன் கூட கொஞ்சம் பேசலாமா?” என்ற தேவகியின் குரலில் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தான். அவனெதிரே தேவகி நின்றிருக்க, முதலில் அதிர்ந்து விழித்தவன் பின் முகத்தை கோபமாக திருப்பிக்கொள்ள, தேவகியோ அவனை தான் மேலிருந்த கீழாக அளவிட்டார்.

கலையிழந்த முகம், சரியாக உறங்காது கருவளையம் சூழ்ந்த கண்கள், கலைந்த தலைமுடி என்றிருந்தவனை பார்க்கும் போது அவன் அவனவளுக்காக தவிக்கும் தவிப்பு நன்றாகவே புரிந்தது தேவகிக்கு.

அவரைப் பார்க்காது “உங்களை யாரு இங்க வர சொன்னா? எனக்கு உங்க கூட பேச எதுவும் இல்லை” என்று பேசிக்கொண்டே சென்ற யாதவ்விற்கு “அப்போ, உன் பொண்டாட்டி குழந்தைய பத்தி தெரிஞ்சிக்க வேண்டாமா?” என்று தேவகி கேட்டதும் தன்னவளை பற்றி கேட்க உள்ளுக்குள் ஆர்வம் எழுந்தாலும் தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொண்டு, “ஒன்னும் வேணாம்” என்று சொல்லி முடிக்கவில்லை, “தேவகி அம்மா, நீங்க தாராளமா எங்க வீட்டுக்கு வரலாம்” என்ற மஹாதேவன் சொல்ல, தன் தந்தையை முறைத்துப் பார்த்தான் அவன்.

 

தேவகியோ

ஒரு தலையசைப்பை கொடுத்துவிட்டு வீட்டுக்குள் நுழைய, மஹாதேவனின் குடும்பத்தினரே அவரை அதிர்ந்து தான் நோக்கினர்.

‘என்ன ஒரு அதிசயம்? பாட்டி வீட்டுக்குள்ள வந்திருக்காங்க. என்னடா நடக்குது இங்க?’ அதிர்ந்து நின்ற உத்ரா, “பாட்டி நீங்க…” என்றவாறு அவரை நோக்கிச் செல்ல போக, “இரு, பேசிட்டு வர்றேன்” என்றுவிட்டு தேவகி அவர் பாட்டிற்கு ஒரு அறைக்குள் நுழைய, அவரை பின்தொடர்ந்து அறைக்குள் நுழைந்தனர் மஹாதேவனும், யாதவ்வும்.

யாதவ்வோ எதுவும் பேசாது இறுகிய முகமாக சுவற்றை வெறித்தவாறு நின்றிருக்க, மஹாதேவனோ தேவகியை கேள்வியாக நோக்க, “என் பேத்திய ரொம்ப காதலிக்கிறியா? ஆனா, எனக்கு அப்படி தெரியல்லையே…” யாதவ்வை அழுத்தமாக பார்த்தவாறு கேலியாக சொன்னார் தேவகி.

அதில் சட்டென திரும்பி அவரை முறைத்தவன், “என் பொண்டாட்டிய நான் எவ்வளவு லவ் பண்றேன்னு உங்களுக்கெல்லாம் நிரூபிக்கனும்னு எனக்கு அவசியம் இல்லை” என்று பற்களை கடித்துக்கொண்டு சொல்ல, “கார்த்தி…” என்று மஹாதேவன் கண்டிப்பாக அழைக்க, தேவகியோ லேசாக புன்னகைத்தார்.

“உனக்கொன்னு தெரியுமா? எனக்கு ரித்விய பார்க்கும் போது அப்படியே உன் அம்மா சாருவ பார்க்குற மாதிரி இருக்கும். மத்தவங்கள கஷ்டப்படுத்த கூடாதுன்னு ரொம்பவே கவனமா இருப்பா சாரு. எப்போவும் என்னை நேர்ல பார்க்கும் போது மனசார சிரிப்பா. அவ்வளவு நல்லவ” தேவகி சொல்ல, யாதவ்விற்கோ கண்கள் கலங்கித்தான் போன அவனுடைய அம்மாவின் நினைவுகளில்.

சிவந்த கண்களுடன் பற்களை நரநரவென கடித்த வண்ணம் அவரை நோக்கிய யாதவ், “உங்க புருஷன் தான் என் அம்மாவ கொன்னுட்டாரு. அந்த சம்பவம் என் கண்ணுக்குள்ளேயே இருக்கு. நான் ரொம்ப சின்ன குழந்தை. அப்போ என் அம்மா ரொம்ப அழுந்தாங்க, அவ்வளவு துடிச்சாங்க. அம்மா இல்லாம நான் ஏங்கின ஏக்கம் உங்களுக்கு தெரியுமா? உங்க குடும்பத்தால தான் நான் அவங்கள இழந்தேன். அம்மா பாசம் கிடைக்காம தவிச்சேன். உங்களால தான் எல்லாமே…” என்று ஆவேசமாக கத்த, “கார்த்தி, அவங்க புருஷன் பண்ண தப்புக்கு இவங்க எப்படி பொறுப்பாக முடியும்?” என்று பதிலுக்கு கத்தினார் மஹாதேவன்.

“இல்லை தம்பி, அவன் பேசுறதுல நியாயம் இருக்கு. அவன் இடத்துல யாரா இருந்தாலும் இப்படி தான் பேசுவாங்க. அவன் இழந்தது அவனோட அம்மாவ. அந்த ஏக்கம் அவனுக்குள்ள இன்னும் இருக்கு. அன்னைக்கு அந்த சம்பவம் நடக்கும் போது நானும் அங்க தானே தம்பி இருந்தேன். அந்த மூனு வயசு பையன் அவன் அம்மா இறக்குறதை எம்புட்டு வலியோட பார்த்துக்கிட்டு இருந்தான்னு நானும் பார்த்துக்கிட்டு தானே இருந்தேன். அப்போ உண்டான குற்றவுணர்ச்சி இப்போ வரைக்கும் எனக்குள்ள இருக்கு” தேவகி பேசி முடிக்கவில்லை, “போதும். நிறுத்துறீங்களா?” என்று கத்தினான் யாதவ்.

“குற்றவுணர்ச்சியா இருக்கு. அப்படி இப்படினு பேசினா நான் உங்கள மன்னிச்சிருவேனா என்ன? இல்லைன்னா நான் இழந்த இழப்பை மறந்துருவேனா? மரியாதையா அவளுக்கு புரிய வைச்சி என் கூட அனுப்பி வைங்க. அம்மாவ இழந்த மாதிரி என் ரிதுவ என்னால இழக்க முடியாது. அம்மாவோட பாசத்தை நான் அவக்கிட்ட உணர்ந்தேன். எனக்கு அவ வேணும்” யாதவ் கண்கள்கலங்க சொல்ல, “என்னை மன்னிச்சிருங்க தேவகி அம்மா. அவனால நடந்ததை ஏத்துக்க முடியல. அதான்…” என்று தயக்கமாக இழுத்தார் மஹாதேவன்.

அவரை கைநீட்டி தடுத்த தேவகி சற்றும் யோசிக்காது, “என்னை மன்னிச்சிருப்பா” என்றவாறு  யாதவ்வின் காலில் விழப்போக, பதறிப்போய் இரண்டடி பின்னால் நகர்ந்தவனுக்கு அத்தனை அதிர்ச்சி! ஏன் மஹாதேவன் கூட “தேவகி அம்மா…” என்று பதறியேவிட்டார்.

“நடந்த இழப்புக்கு என்ன பிரயாச்சித்தம் செய்றதுன்னு கூட எனக்கு தெரியல. பல வருஷமா இந்த குற்றவுணர்ச்சியில வெந்துக்கிட்டு இருக்கேன். அவர் பண்ண தப்புக்கு உன் கால்ல விழுறதை தவிர வேறவழி எனக்கு தெரியலப்பா” தேவகி கண்கள்கலங்க மன்னிப்பு கேட்க, இத்தனை வருடங்களாக உள்ளுக்குள் இருந்த மொத்த கோபமும் மாயமாகி போனது போலிருந்தது யாதவ்விற்கு.

“என் பேத்தி வெளியில கோபமா காட்டிக்கிட்டாலும் உள்ளுக்குள்ள உன் நினைப்புல தான் தவிச்சிக்கிட்டு இருக்கா. அவன் தினமும் அழுகுறதை என்னால பார்க்க முடியல. என் புருஷன் பண்ண தப்பால உனக்குள்ள உண்டான கோபம் தான் நீ ரித்விய இழக்க காரணமா அமைஞ்சிருச்சி. என்னை மன்னிச்சிருப்பா” தழுதழுத்த குரலில் தேவகி பேச, அவரையே அதிர்ந்துப் பார்த்தவன் அடுத்தகணம் மண்டியிட்டு அமர்ந்து அழுதேவிட்டான்.

“நான்… நான் தான் தப்பு பண்ணிட்டேன். உங்கள அவமானப்படுத்தனும், மன்னிப்பு கேட்க வைக்கனும்னு நினைச்சேன் தான். ஆனா, கண்டிப்பா கோபத்துல அறிவுகெட்டதனமா வந்த வார்த்தைகள் தான். நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு நான் எதிர்ப்பார்க்கவே இல்லை. யாரோ பண்ண தப்புக்காக என் ரிதுவ காயப்படுத்தி எல்லாரையும் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். நான் பெரிய தப்பு பண்ணிட்டேன். என்னை மன்னிச்சிருங்க” யாதவ் விம்மி விம்மி அழ, அவன் தலையை வாஞ்சையுடன் வருடினார் தேவகி.

“உன்னை ஒவ்வொரு தடவையும் பார்க்கும் போது உன்கிட்ட பேசனும்னு தோனும். ஆனா, என் குற்றவுணர்ச்சி என்னை பேச விடல. இப்போ இந்த பாட்டிய மன்னிச்சிட்டியாப்பா?” தேவகி புன்னகையுடன் கேட்க, “இல்லை பாட்டி, நீங்க தான் என்னை மன்னிக்கனும்” என்று அழுகையுடன் சிறுகுழந்தை போல் அவரை அணைத்துக்கொண்டவனை பார்த்த மஹாதேவனுக்கோ அத்தனை ஆச்சரியம்!

‘தன் மகனா?’ என்று அவர் விழிவிரித்து பார்த்துக் கொண்டிருக்க,  “உன் பொண்டாட்டி உன்னை ரொம்ப காதலிக்கிறா” என்று தேவகி மெல்லிய புன்னகையுடன் சொல்லவும், “எனக்கு தெரியும் பாட்டி. எவ்வளவு முட்டாளா இருந்திருக்கேன்னு இப்போ புரியுது. எந்த பாசத்துக்காக ஏங்கினேனோ அந்த பாசத்தை கூடவே வச்சிக்கிட்டு அதை புரிஞ்சிக்காம எட்டி உதைச்சிட்டேன். ஆரம்பத்துலயிருந்து அவள ரொம்ப காயப்படுத்திட்டேன்” பேசிக்கொண்டே சென்றவனின் குரலில் தன்னவளை இழந்துவிட்ட வலி!

சற்று நேரம் ஏதோ யோசித்த தேவகி பின், “நான் ஒரு யோசனை சொல்றேன். அதை செய்றியா பேராண்டி?” என்று புன்னகையுடன் கேட்க, “என்ன பாட்டி?” என்று யாதவ்வும் கண்களை துடைத்து ஆர்வமாக கேட்க, இங்கு மஹாதேவன் தான் இருவரும் பேசிக்கொள்ளும் விதத்தில் ‘இந்த பத்து நிமிஷத்துல இப்படி ஒரு மாற்றமா?’ என்று இருவரையும் மாறி மாறி அதிர்ந்துப் பார்த்தார்.

அன்றிரவு ரித்வி கண்களை மூடி படுத்தவாறு தனக்குள் இருக்கும் ஜீவனை தான் தொட்டு வருடிக்கொண்டிருந்தாள்.

“பட்டு, அத்தை சொன்னாங்க. மூனு மாசத்துக்கு அப்றம் தான் நான் பேசுறது உனக்கு கேக்கும்னு. ஆனாலும் பரவாயில்லை. உன் அம்மாவோட உணர்வுகள உன்னால புரிஞ்சிக்க முடியாதா என்ன? அதெல்லாம் நீ புரிஞ்சிப்ப. உன் அப்பா உன் அம்மாவ ரொம்ப கஷ்டப்படுத்திட்டாரு. எங்க உறவுல அவர் உண்மையாவே இல்லை. எல்லாமே நடிப்பு. இப்படி நடந்துக்கிட்டவரு அன்னைக்கு எதுக்கு வீட்டு வாசல்லையே நின்னுக்கிட்டு இருக்கனும்னு நீ கேப்ப. எனக்கு தெரியும். ஆனா, அதெல்லாம் வச்சி அவர நம்ப முடியாது”

என்று பேசிக்கொண்டே சென்ற ரித்வி, “என்னடி? புள்ளைக்கிட்ட தப்பு தப்பா என்னை பத்தி சொல்லி என்னை வில்லனா காட்ட ட்ரையிங் ஆ?” என்ற யாதவ்வின் குரலில் திடுக்கிட்டு கண்களை திறந்துப் பார்த்தாள்.

அவளெதிரே அவள் பக்கத்திலே யாதவ் படுத்திருக்க, ‘இது கனவாக இருக்குமோ?’ என்று கூட அந்த கணம் தோன்றியது ரித்விக்கு. இரண்டு தடவைக்கு மேல் கண்களை கசக்கி அவள் பார்க்க, தன்னவளின் மூக்கை பிடித்து செல்லமாக ஆட்டியவன், “பார்த்து… பார்த்து… விழிபிதுங்கி வெளில விழுந்துர போகுது” என்று குறும்பாக சொல்ல, கட்டிலிலிருந்து துள்ளி குதித்து எழுந்து நின்றாள் ரித்வி.

அதில் பதறிய யாதவ், “ஏய்! ஏய்! பார்த்துடி. உனக்குள்ள நம்ம குழந்தை இருக்கு. உன் இஷ்டத்துக்கு துள்ளி குதிக்குற” சற்று கண்டிப்பாகவே சொல்ல, அவனை முறைத்துப் பார்த்தவள் அடுத்தநொடி “பாட்டி… பாட்டி…” என்று கத்த ஆரம்பித்துவிட்டாள்.

அவனோ இடுப்பில் கைக்குற்றி சலிப்பாக இருபுறம் தலையாட்டியவாறு நிற்க, பேத்தியின் கத்தலில் வேகமாக வந்த தேவகி அங்கு யாதவ் நின்றிருந்ததை பார்த்து ‘இது தான் சங்கதியோ?’ என்று நினைத்தவாறு உள்ளுக்குள் சிரித்துக்கொண்டார்.

“பாட்டி, இவர எதுக்கு உள்ள விட்டீங்க. மொதல்ல வெளில அனுப்புங்க. இப்போ எங்க போச்சு இவரோட வெட்டி வீராப்பெல்லாம்? அன்னைக்கே என்னையும், என் குழந்தையையும் நிம்மதியா விட சொன்னேனே… இப்போ எதுக்கு வந்திருக்காரு? ரொம்ப கோபம் வருது பாட்டி. போக சொல்லுங்க!” ரித்வி விடாது கத்த, அடுத்து தேவகி பேசிய பேச்சில் திகைத்துவிட்டாள் அவள்.

“உன் புருஷன் உன் கூட இல்லாம பின்ன எவ கூட இருப்பான்?” தேவகி சாதாரணமாக சொல்ல, “அப்படி சொல்லுங்க பாட்டி…” என்றுவிட்டு யாதவ் கேலியாக ரித்வியை நோக்க, “பாட்டி…” என்று அதிர்ந்து அழைத்துவிட்டாள் அவள்.

“என்ன பேசுறீங்கன்னு தெரிஞ்சி தான் பேசுறீங்களா? அவர் உங்கள…” என்று அதற்கு மேல் பேசாது நிறுத்தி தேவகியை ரித்வி கோபமாக நோக்க,

“ஆமா, நல்லா தெரிஞ்சி தான் பேசுறேன். நம்ம குடும்பத்தால அத்தனை பெரிய இழப்பு அவனுக்கு. இப்போ கோபத்தை விட்டுட்டு உன் அன்புக்காக உன்கிட்ட கெஞ்சிக்கிட்டு இருக்கான். நீயும் நடந்ததெல்லாம் மறந்து அவன் கூட சந்தோஷமா வாழு!” தேவகி சொல்ல, ரித்விக்கோ அதிர்ச்சி!

இருவரையும் மாறி மாறி பார்த்தவள், “ஆரன் அத்தான்…” என்று கத்த, அப்போது தான் தனதறையிலிருந்து வெளியில் வந்த ஆரன் ரித்வியின் கத்தலில் அவளறைக்கு வேகமாக ஓடினான். அங்கு நின்றிருந்த யாதவ்வை பார்த்தவனுக்கோ குழப்பம்!

“இவன்… இவன் தான் பெரிய மானஸ்தனாச்சே! எதுக்கு உள்ள வந்தான்? அதுவும் அவ்வளவு சொல்லியும் ரித்விய தொந்தரவு பண்ற. உன்னை…” என்று கைக்காப்பை ஏற்றிவிட்டவாறு யாதவ்வை நோக்கி ஆரன் செல்லப்போக, அவனின் சட்டையை பிடித்து இழுத்து, “படவா! புருஷன் பொண்டாட்டி பிரச்சினைக்குள்ள நீ ஏன்டா போற? உன் வேலைய மட்டும் பாரு!” என்று தேவகி தடுக்க, அவனோ ‘ஙே’ என்று ஒரு பார்வை பார்த்தான்.

“பாட்டி, நீங்களா இது? நம்ம குடும்பத்து மேல இருக்குற கோபத்தை அவன் ரித்வி மேல காட்டியிருக்கான். ரித்விய கஷ்டப்படுத்தியிருக்கான். இதெல்லாம் மறந்து அவனுக்காக பேசிக்கிட்டு இருக்கீங்க நீங்க” ஆரன் அடக்கப்பட்ட கோபத்துடன் பேச, நிதானமாகவே அவனை ஏறிட்டு, “ஆமா, ரொம்ப பெரிய தப்பு பண்ணிருக்கான் தான். இல்லைன்னு நானும் சொல்லல்ல. ஆனா, ரித்வி மேல அவனுக்கு இருக்குற அன்பு பொய் கிடையாது. அவனுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்குறதுல தப்பில்லைன்னு எனக்கு தோனுது” என்றார் தேவகி.

ஆனால், ரித்வியால் தான் அவர் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

“பேராண்டி, நீ இங்கேயே இரு!” என்றுவிட்டு தேவகி நகர போக, “ஓஹோ! என்னை புரிஞ்சிக்கவே மாட்டீங்க தானே? சரி, அப்போ நான் இங்கேயிருந்து கிளம்புறேன்” என ரித்வி முடிக்கவில்லை, யாதவ்வோ “பாட்டி…” என்று அதிர, “ஆஹான்!” என்று ரித்வியை பார்த்து கேலியாக இழுத்தார் தேவகி.

“இந்த ஊருல உன் பாட்டி வீடு, உன் மாமா மஹாதேவனோட வீட்டை தவிர உனக்கெங்க இடம் இருக்கு? அப்படியே இங்க வேற யாராச்சும் உனக்கு வாடகைக்கு வீடு தராங்கன்னா விட்டுருவேனா நானு?” தேவகியின் வார்த்தைகளில் அத்தனை கேலி! அவரையே வாயைப்பிளந்த வண்ணம் பார்த்துக் கொண்டிருந்தனர் ஆரனும், ரித்வியும்.

யாதவ்வோ கோலரை தூக்கிவிட்டுக் கொண்டு ஆரனை கேலியாக பார்த்து, “இடத்தை காலி பண்ணு! காத்து வரட்டும்” என்று சொல்ல, “ச்சே! இந்த பாட்டிக்கு நட்டு கழண்டு போச்சு!” என்றுவிட்டு வெளிப்படையாக தலையிலடித்தவாறு அங்கிருந்து நகர்ந்தான் ஆரன்.

தேவகியும் கண்களை அழுந்த மூடித் திறந்து யாதவ்விற்கு சைகை செய்துவிட்டு அங்கிருந்துச் செல்ல, அடுத்தகணம் ரித்வி சுதாகரிக்கும் முன் அவளை இழுத்து அணைத்திருந்தான் அவன். அவன் அணைத்ததில் அதிர்ந்து விழித்த ரித்வி அவனிடமிருந்து விலக முயல, அதற்குள் அவளிதழை சிறைப்பிடித்திருந்தவன் அதன்பிறகு அவளை விட்டால் தானே!

அவளின் இரு கைகளையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டவன் அவளின் மறுப்புக்களையும் மீறி இதழ் தேனை அருந்திவிட்டே அவளை விட, அடுத்தநொடி யோசிக்காது ‘பளார்’ என அவன் கன்னத்தில் அறைந்திருந்தாள் ரித்வி. கன்னத்தை பொத்திக்கொண்டு கண்களை அழுந்த மூடித் திறந்து யாதவ் ஒரு பார்வை பார்க்க, அப்போதே தான் செய்த காரியம் உணர்ந்தவளின் கண்களில் மிரட்சி!

வார்த்தைகள் தந்தியடிக்க, “அது… நான்…” என்று தடுமாறியவளை விஷமமாக நோக்கியவன், மீண்டும் அவளை இழுத்து அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு, தன் மற்ற கன்னத்தை காட்டி, “உனக்கு எவ்வளவு அடிக்கனுமோ அடி! திட்டு! ஆனா, என் கூடவே இருடி” என்று சொல்ல, அவளுக்கோ ஆச்சரியம்!

அவளை மேலும் நெருங்கி நின்றவனுக்கும் அவளுக்கும் வெறும் நூலிடைவெளி தான். அவள் கன்னத்தை தாங்கி, “லவ் யூ ரிது…” என்று யாதவ் சொல்ல, அவன் சொன்னதை உள்வாங்கிக்கொள்ளவே அவளுக்கு சற்று நேரம் எடுத்தது.

அவளுடன் இணைந்த போது கூட அவன் சொல்லாத வார்த்தைகள் அவை. அவனிடம் அவள் எதிர்ப்பார்த்த வார்த்தைகள் அல்லவா அவை!  இன்று யாதவ் அத்தனை காதலோடு சொல்ல, அதை கேட்டு உருகும் நிலை இப்போது இல்லை ரித்விக்கு.

“எல்லாமே பொய்! ச்சீ…” முகத்தை சுழித்துக்கொண்டு சொன்னவாறு கட்டிலில் சென்று ரித்வி அமர, அவளருகில் அமர்ந்தவன் விடாப்பிடியாக அவள் கன்னத்தை திருப்பி விழிகளுடன் விழிகளை கலக்கவிட்டவாறு, “ரிது, நான் உன்னை ஆரம்பத்துலயிருந்து ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன். ஆனா, உன்கிட்ட நான் வெளிப்படுத்தின அன்பும், நம்ம உறவும் பொய் கிடையாது. ஆரம்பத்துல ஒரு நோக்கத்தோட உன்கிட்ட பழகினது உண்மை தான். ஆனா, நீ என்னை மொத்தமா மாத்திட்டடி. என்னை நம்பும்மா” என்று கெஞ்சலாக பேச, அவனையே சற்றுநேரம் பார்த்திருந்தவள் அடுத்தநொடி வாயைப் பொத்திக்கொண்டு கழிவறைக்குத் தான் ஓடினாள்.

அவள் பின்னாலே பதறிக்கொண்டு ஓடியவன் அவள் வாந்தி எடுப்பதை பார்த்து, “அய்யோ ரிது! என்னாச்சும்மா?” என்று கேட்டவாறு அவளை பிடித்துக்கொள்ள, முகத்தை நீரால் கழுவி தன்னை ஆசுவாசப்படுத்தி அவன் புறம் திரும்பிய ரித்வி, “இந்த வேஷம் எப்போ கலையுதுன்னு நானும் பார்க்குறேன். நல்லா நடிக்கிறீங்க யாதவ்” என்று ஏளனமாக சொல்ல, அந்த வார்த்தைகள் ஏனோ அவனுக்குள் சுள்ளென்று தைத்தது.

வலியுடன் கூடிய புன்னகையுடன் அவளை நோக்கியவன், “அப்போ, காலம் பூரா இந்த வேஷம் கலைய காத்திருந்து நீ தோத்து தான் போகனும் பேபி” என்று சொல்லிவிட்டு அவள் மறுக்க மறுக்க கைத்தாங்கலாக அவளை அழைத்து வந்து கட்டிலில் படுக்க வைத்தவன்,  அவள் பக்கத்திலே தானும் படுத்துக்கொள்ள, அவளுடைய தூக்கமோ தொலைந்து தான் போனது.

அடுத்தநாள்,

“என்னடா அண்ணா, இன்னுமா ரித்வி உன்னை அடிச்சி துரத்தல்ல?” அதிபன் கேலியாக அழைப்பில் கேட்க, “அட போடா புடலங்கா! ஏதோ பாட்டி புண்ணியத்துல இங்க இருக்கேன். இல்லைன்னா அந்த ஆரன் பரதேசிய விட்டு அடிச்சே வீட்டை விட்டு துரத்தியிருப்பா என் பொண்டாட்டி” சலித்துக் கொண்டான் யாதவ்.

“கூடிய சீக்கிரம் எல்லாம் சரியாகும்.  இந்த நேரத்துல அவ என்னதான் உன்மேல கோபமா காட்டிக்கிட்டாலும் உன் அருகாமைய ரொம்ப எதிர்ப்பார்ப்பா. அவ கூடவே இரு! ஆனா, மறுபடியும் அவள கஷ்டப்படுத்தனும்னு நினைச்ச… நானே உன்னை கொன்னுடுவேன்” அதிபன் சற்று மிரட்டலாகவே சொல்ல, “க்கும்! இனிமே அவ தான் என்னை  கஷ்டப்படுத்தாம என்னை நீ பார்த்துக்கனும்” என்றுவிட்டு அழைப்பை துண்டித்தவாறு ஹோலுக்கு வந்தவனின் கண்களில் சோர்வாக சோஃபாவில் அமர்ந்திருந்த தன்னவள் தான் சிக்கினாள்.

அவளருகில் வந்தமர்ந்த யாதவ், “என்னாச்சுடி? உடம்பு சரியில்லையா? இப்போ தானே தூங்கி எழுந்திருச்ச, மறுபடியும் ஒருமாதிரி இருக்க. உடம்புக்கு ஏதும் முடியல்லையா என்ன? டோக்டெர்கிட்ட போகலாமா?” பதட்டமாக கேள்விகளை அடுக்கிக்கொண்டே போக, மெல்ல கண்களை திறந்து அவனைப் பார்த்தவளோ ‘ச்சே!’ என்று சலித்தவாறு மீண்டும் கண்களை மூடிக்கொண்டாள்.

“தம்பி, இந்த நேரத்துல அப்படி தான் இருக்கும். அடிக்கடி தூக்கம் வரும். உடம்புவலி அதிகமா இருக்கும். அடிக்கடி பசிக்க கூட செய்யும். ஆனா, சாப்பிட்டா வாந்தி வரும். புள்ளைய பெத்தெடுக்குற வரைக்கும் இதெல்லாம் பொண்ணுங்க தாங்கிப்பாங்க” தமிழரசி யாதவ்விற்கு புரிய வைக்க, “ஓஹோ!” என்று சொல்வதை கேட்டுக்கொண்டவன், “ரிது, ஏதாச்சும் சாப்பிடுறியா?” என்று கேட்டவாறு தன்னவளின் தலையை மெதுவாக வருடினான்.

அவனின் கையை ரித்வி கோபமாக தட்டிவிட, “எதுக்கு இப்படி பண்ற? உன் மேல அக்கறையில தானே கேக்குறான். பேராண்டி, அவ இன்னும் சாப்பிடல. இதோ இந்த கசாயத்தை குடிக்க சொல்லு! உடம்புக்கு தெம்பா இருக்கும்” என்று ஒரு குவளையை யாதவ்விடம் தேவகி நீட்ட, “தம்பி, நான் ரித்விமாவுக்கு கஞ்சி செய்றேன். அதை சாப்பிட்டுட்டு மருந்து சாப்பிட வைங்க. நேரத்துக்கு இதெல்லாம் பண்ணனும்ப்பா. நீங்க தான் இனி இதெல்லாம் கவனிச்சி நேரத்துக்கு சாப்பிட வைக்கனும்” என்று தன் பங்கிற்கு யாதவ்விடம் சொன்னார் கலையரசி.

சுற்றியிருந்தவர்களை கோபமாக மாறி மாறி பார்த்த ரித்வி அடுத்தகணம் எழுந்துச்சென்று உடைகளை அடுக்க ஆரம்பிக்க, அதைப் பார்த்த யாதவ்விற்கோ பக்கென்றாக “பாட்டி…” என்று அலறியவாறு தேவகியின் முன் போய் தான் நின்றான்.

ஷேஹா ஸகி

Leave a Reply

error: Content is protected !!