jeevanathiyaaga_nee-2

JN_pic-883459e0
Akila Kannan

ஜீவநதியாக நீ… 

அத்தியாயம் – 2

பெருமாள் கோவில். கோவிலுக்குள் எழும் சத்தம் தெருவில் இருப்பவர்களுக்கு கேட்கும் அளவுக்கு சின்ன கோவில். அதே நேரம், சக்தி வாய்ந்த கோவில் என்பதையும் அந்த கோவிலின் கூட்டம் பறைசாற்றி கொண்டிருந்தது.

‘பெருமாளே, ரொம்ப நன்றி எங்க அண்ணா போன இடத்துல எந்த பிரச்சனையும் வராம பார்த்துகிட்டு என் அண்ணனுக்கு வேலை வாங்கி கொடுத்ததுக்கு. இனி அப்பாவுக்கும் அண்ணாவுக்கும் சண்டை வராது.’ மனமார பெருமாளை வேண்டிக் கொண்டு நூற்றி எட்டு முறை சன்னிதானத்தை சுற்றி முடித்தாள் கீதா.

“என்ன அண்ணனுக்காக வேண்டுதலா?” அவள் வழக்கமாக வரும் கோவில் என்பதால், அர்ச்சகர் நட்போடு வினவினார்.

‘ஆம்…’ என்று வேகவேகமாக தலை அசைத்தாள்.

“என்ன பொண்ணும்மா நீ? எப்ப பாரு உங்க அண்ணனை பத்தி மட்டுமே யோசிக்கிற? உன் வாழ்க்கையை பத்தி யோசிக்க மாட்டியா?” கோவிலில் உள்ள அர்ச்சகர் கேட்க,

“என் வாழ்க்கை பத்தி யோசிக்க என்ன இருக்கு சாமி? நான் இந்த வருஷத்தோட காலேஜ் படிப்பை முடிக்க போறேன். எனக்கு ஏதாவது சந்தேகம்ன்னா என் அண்ணன் சொல்லி தருவான். என்னை அண்ணனும் அப்பாவும், அம்மாவும்  பார்த்துப்பாங்க” கீதா சிரித்து கொண்டே கூறினாள்.

“நல்லா இரு பெண்ணே. அந்த பகவான் அருள் உனக்கு எப்பவும் இருக்கும். வழக்கம்மா ஏதாவது பாட்டு பாடுவீயேம்மா.  இன்னைக்கும் ஒரு பாட்டு பாடும்மா. மனசுக்கு நிறைவா இருக்கும்.” அர்ச்சகர் கூற, அங்கு அமர்ந்து பாட ஆரம்பித்தாள் கீதா.

திருப்பதி மலைமேல் இருப்பவனே – எங்கள்

தீராத வினைகளைத் தீர்ப்பவனே”

              அவள் குரல் கோவில் எங்கும் இனிய கானமாக ஒலித்தது.

ஏழு மலைமேல் இருப்பவனே

எல்லா வினைகளும் தீர்ப்பவனே

பாண்டுரெங்கா கோவிந்தா”

        அந்த சாலையில் பலர் சென்று கொண்டிருக்க, அந்த கோவிலுக்கு அருகே இருந்த கடையில் வண்டியை நிறுத்தினான் ரவி.

‘சிகரெட்…’ என்று செய்கை காட்ட, கடைக்காரரும் எடுத்து அவனிடம் நீட்ட, அவன் ரூபாய் நோட்டுக்களை வீச, அவன் செவிகளை தொட்டது அந்த குரல்.

உளமெனும் கோவிலில் வசிப்பவனே

உலகோரை வாழவைக்க வந்தவனே

கோவில் பக்கம் அவன் கவனம் திரும்ப, பற்ற வைத்த சிகரெட்டோடு தன் கால்களை கோவில் பக்கம் திருப்பி மெல்ல மெல்ல நடந்தான்.

“திருப்பதி மலைமேல் இருப்பவனே – எங்கள்

தீராத வினைகளைத் தீர்ப்பவனே”

    அந்த குரல் அவன் உள்ளத்தை தொட, ஏனோ அவன் மனம் அவள் முகம் பார்க்க துடித்தது. பற்ற வைத்த சிகரேட்டை காலுக்கு கீழே போட்டு அதை மிதித்து அணைத்து கோவிலுக்குள் அடி எடுத்து வைத்தான் ரவி.

“ஏழு மலைமேல் இருப்பவனே

எல்லா வினைகளும் தீர்ப்பவனே

பக்த வத்ஸல கோவிந்தா-ஹரே

பாரதப்ரிய கோவிந்தா”

 கண்களை மூடி கொண்டு உள்ளம் உருகி பெருமாளை எண்ணி பாடி கொண்டிருந்தாள் கீதா.

“உளமெனும் கோவிலில் வசிப்பவனே

உலகோரை வாழவைக்க வந்தவனே”

 அவள் உள்ளம் என்னும் கோவிலில் தான் அமர்ந்திருப்பது போன்ற எண்ணம் தோன்ற, ரவி ஒரு நொடி திடுக்கிட்டு போனான்.

அவன் கண்கள், அவளை அளவிட ஆரம்பித்தது. அவள் நிறத்தை முந்திக் கொண்டு அவள் முக லட்சணம் அவனை ஈர்த்தது.

சந்தன நிறத்தில் சுடிதார் அணிந்திருந்தாள். ‘தைத்துவிட்டு போட்டுக்கொண்டாளா? இல்லை போட்டுகொண்டு தைத்தாளா?’ என்ற எண்ணம் எழும் அளவுக்கு அந்த சுடிதார் அவள் அங்க வடிவை அழகாக காட்டியது.

“பசுபால கிருஷ்ண கோவிந்தா-ஹரே

பாபவிமோசன கோவிந்தா…”

    அவள் கோவிந்தா கோவிந்தா என்று இழுக்க, அவள் செவிகளில் இருந்த ஒற்றை குண்டு தோடு, அவள் இசையோடு இசைந்து இசைந்து நடனம் ஆட, அவன் கண்களும் அவள் முகத்தின் அபிநயத்தோடு இசைந்து.

“அலர்மேலுநாதா கோவிந்தா-ஹரே

ஆபத்பாந்தவா கோவிந்தா

திருப்பதி வாசா கோவிந்தா-ஹரே

திருமலை வாசா கோவிந்தா”

 அவள் சந்தன நிற சுடிதாரின் சிவப்பு  எம்பிராயடரிக்கு ஒத்து வருவது போல் அவள் இடது தலை பக்கமாக அவள் செவிகளுக்கு கீழே தோளுக்கு மேலே வைத்திருந்த சிவப்பு ரோஜா, அவள் இசைக்கு ஏற்ப ஒவ்வொரு வரிக்கும் மலர்வது போன்ற பிரமை அவனுக்கு எழுந்தது.

கீதா தன் பாடலை முடித்து கொண்டு, இறைவனை வணங்கினாள்.

பக்கத்தில் இருக்கும் அனுமான் சன்னிதியை வணங்க அவள் நடக்க, மடமடவென்று அவளை தொடர்ந்தான் ரவி.

அருகே இருந்த கல்லை கவனிக்காமல் கீதா தடுமாற,

அவளை இடையோடு ரவி தாங்கி பிடிக்க, அவன் தொட்ட இடம் நாணம் கொண்டு நாணலாக வளைய, அவள் சுவாசம் இவனை தீண்ட… அவள் வாசத்தில் அவன் கிறங்க, வெட்கத்தில் முகம் சிவந்து ஒரு எட்டு வேகமாக முன்னே நடந்து சென்று பின் பக்கமாக திரும்பி அவனை பார்த்து அவள் புன்னகைக்க என்று திரைப்பட பாணியில் ரவியின் முன் கற்பனை கோட்டை மடமடவென்று எழ,

“ரவி… இங்க என்ன பண்ற?” என்று அவன் தோள்களை தட்டினான் அவன் நண்பன்.

சட்டென்று கனவிலிருந்து நனவிற்கு திரும்பியவன் கீதாவை பார்த்தான்.

“கடையில் தான் இருப்பன்னு பார்த்தேன். உன் புல்லட் தான் அங்க இருக்கு.நீ இங்க இருக்க” ரவியின் நண்பன் பேசிக்கொண்டே போக, ரவியின் கவனமோ கீதாவின் பக்கமே இருந்தது.

தடுமாறிய அவள் தன்னை தானே சரி செய்து கொண்டு இறைவனை வணங்கி கொண்டிருந்தாள்.

அவள் தலையிலிருந்த ரோஜா பூ கீழே விழுந்திருக்க, “பூ கீழ விழுந்திருச்சு.”  ரவி பூவை கையில் எடுத்து  பேசும் சாக்குக்காக காத்திருந்தவன் சட்டென்று அவளிடம் நீட்டி பேச்சு கொடுத்தான்.

அவள் ஒரு நொடி ஸ்தம்பித்து நிற்க, “பசங்க கிட்ட இருந்து எப்படி வாங்கிறதுன்னு யோசிக்குறீங்களா?” பட்டென்று கேட்டான் ரவி.

“இறைவன் சன்னிதானத்துல என்ன வேறுபாடு? எல்லாரும் ஒன்னு தான். ஆனால், கடவுள் முன்னாடி கீழே விழுந்த பூ, விழுந்தாவே இருக்கட்டும்.” நாசுக்காக அவனையும் ஒதுக்காமல், பூவை வாங்காமல் சென்றுவிட்டாள் கீதா.

ரவியின் இதழ்கள் அவள் சாதுரியத்தால் மடிந்தது. ‘இவளிடம் பேசிக்கொண்டே இருக்க வேண்டும். இவள் பாடலை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்’ அவனறியாமல் அவன் மனம் விழைந்தது.

இறைவனும் நகைக்கும் நேரமுண்டு என்பர். ஆம், இறைவன் நமக்காக ஒரு திட்டம் தீட்டி வைத்திருக்க, நாம் அவன் முன்பு  வேறு ஒரு திட்டம் தீட்டும் பொழுது அந்த இறைவன் நம்மை பார்த்து சிரிப்பாராம்!

  ‘நீ இவள் பேச்சை ரசிக்கப் போவதில்லை. இவள் பாடலை ரசிக்க போவதில்லை. இவள் உன் கைகளில் அணுஅணுவாய் வேதனையை அனுபவிக்க போகிறாள். நீ அவளிடம் சிக்கி கொண்டு சின்னாபின்னமாக போகிறாய். காலம் உன்னை நிந்திக்க காத்திருக்கிறது’ என்று அவன் விதி எண்ணியதோ? இல்லை அந்த இறைவன் சிரித்தானோ!

இது எதுவுமறியாமல், ரவி புன்னகையோடு கோவிலை விட்டு வெளியே வந்து ஒரு சிகரெட்டை வாங்கி பற்ற வைத்தான்.

“என்னடா கண்டதும் காதலா?” அவன் நண்பன் கேட்க, “லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்ல எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால், கேட்டதும் காதல் வருமோன்னு தோணுதுடா” தன் நெஞ்சை தட்டிக் கொண்டான்.

ரவியின் நண்பன் அவனை மேலும் கீழும் பார்க்க, “இப்ப ஒன்னும் அவசரமில்லை. முதலில் இந்த பொண்ணு யாருன்னு கண்டுபிடிக்கணும். அதே நேரம், என் தங்கை தாரிணி கல்யாணம் முடியணும். அவ இப்ப தான் காலேஜ் போறா. எப்படியும் எங்க வீட்டில் அவளுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணிடுவாங்க.” ரவி  புகையை ஊதியபடியே கூறினான்.

கீதா எதுவுமறியாமல் தன் மிதிவண்டியை எடுத்து கொண்டு வீட்டை நோக்கி அழுத்தினாள்.

அவளுக்கு எதிரே ஜீவா வந்து கொண்டிருக்க, தன் மிதிவண்டியை நிறுத்தி “அண்ணா…” என்று அழைக்க, “கீதா…” சாலையின் குறுக்கே ஓடி வந்தான் ஜீவா.

இந்த காட்சியில் அதிர்ந்து நின்றான் ரவி. “ஜீவா தங்கச்சியா? இவன் ஒரு விவகாரம் பிடிச்சா ஆள் ஆச்சே?” ரவி தன் நண்பனின் காதில் கிசுகிசுத்தான்.

“காலம் காலமா அழகான பொண்ணுகளுக்கு ஒரு வில்லங்கமான அண்ணன் இருப்பாங்க” ரவியின் காதில் அவன் நண்பன் கிசுகிசுக்க, ரவி தன் நண்பனை முறைத்து பார்த்தான்.

“கோவிலுக்கு இப்ப எதுக்கு வந்த கீதா?” என்று தங்கையிடம் மிதிவண்டியை வாங்கியபடி அவளோடு நடந்தான் ஜீவா.

தன் சகோதரனின் நெற்றியில்  குங்குமம் வைத்து, எம்பி அவனுக்கு ஊதிவிட்டு, “உனக்கு வேலை கிடைச்சா நூத்தியெட்டு தடவை பெருமாளை சுற்றி வரதா வேண்டி இருந்தேன். அது தான்…” அவள் முடிக்கும்முன் அவள் பாதங்களை கரிசனத்தோடு பார்த்து தன் தங்கையை பார்த்து முறைத்தான் ஜீவா.

“அண்ணா…” அவள் செல்லமாக சிணுங்க, “முதல்ல சைக்கிள்ள ஏறு. நடக்க வேண்டாம். கால் வலிக்கும்” அவன் கூற, அவள் தன் சகோதரின் தோள்களை பிடித்துக்கொண்டு வாகாக ஏறி அமர அவன் மிதி வண்டியை மிதித்தான். தன் சகோதரனின் கரிசன பார்வையில் அவள் முகத்தில் பெருமித புன்னகை தோன்றியது.

கீதாவை வீட்டின் முன் இறக்கி விட்டுவிட்டு, ஜீவா வெளியே கிளம்ப, “வேலை இருக்கிறவன் கூட வீட்டில் இருப்பான். தெண்டச்சோறு. இவன் எப்பவும் ஊர் சுத்துவான்.” ஜீவாவின் தந்தை குரல் வாசல் வரை ஒலித்தது.

“அது தானே வேலை இருக்கிறவன். வேலையை ஒழுங்கா பார்குறதில்லை. வீட்டிலேயே இருக்கான். நானும் வேலையில சேர்ந்தவுடனே வீட்டிலே இருக்கேன்.” தன் தந்தைக்கு குதர்க்கமாக பதில் கூறிவிட்டு ஜீவா வெளியே சென்றான்.

கீதா தனக்கு வந்த சிரிப்பை அடக்கி கொண்டு, சாது போல் வீட்டிற்குள் சென்றாள்.

ஜீவா கொஞ்சம் தூரம் நடந்திருக்க, “ஹீரோ… ஹீரோ…” குரலில் அவன் திரும்பி பார்த்தான்.

அங்கு தாரிணி அவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள். மஞ்சள் நிறத்தில் தாவணி அணிந்திருந்தாள். அவள் நடந்து வருகையில் அவள் கொலுசின் சலங்கை “சல்… சல்…” என்று சத்தம் செய்தது.

“யாருங்க ஹீரோ இங்க?” ஜீவா கேட்க, “நீங்க தான்.” அவள் பட்டென்று கூறினாள்.

“நான் ஹீரொல்லாம் இல்லைங்க. ரவுடி. இந்த ஏரியாவில் எல்லாரும் அப்படி தான் சொல்லுவாங்க. காலையில் கூட நீங்க அட்வைஸ் பண்ணீங்கலே?” அவன் நிறுத்த,

“நான் அட்வைஸ் பண்ணப்ப கூட உங்களுக்கு பயங்கர கோபம் வந்ததே?” தன் கண்களை உருட்டினாள் தாரிணி.

“ஹா… ஹா…” அவன் பெருங்குரலில் சிரிக்க, “இப்ப கோபம் இல்லையா?” அவள் கழுத்தை சரித்து, கண்களில் மெல்லிய பயத்தோடு கேட்க, “அது அப்பப்ப வரும். அப்புறம் போய்டும்” அவன் புன்னகையோடு கூறினான்.

“ஹீரோ…” அவள் ஆரம்பிக்க, “நான்…” அவன் பேச்சை அவள் இடைமறித்தாள்.

“தப்பை தட்டி கேட்குறவங்க ஹீரோ தான். நீங்க ஹீரோ தான். ஆனால், எந்நேரமும் நீங்க ஹீரோவாக முடியாது.நேத்து நீங்க அவனை சும்மா விட்டிருந்தா, அவனா போயிருப்பான். நேத்து நீங்க போனதுக்கு அப்புறம் அவன் என்னை ஃபாலோ செய்து, ஆள் வச்சி அடிக்கறியான்னு மிரட்டுறான்.” அவள் நிறுத்த அவன் கைகள் இறுகியது.

“எதுக்கு வம்பு? இதை தான் உங்க கிட்ட காலையில் கேட்க வந்தேன்” அவள் கூற, ” அதோ, உங்க அப்பாவுக்கு தெரிந்தவர்…” அவன் கூற, அவள் பதட்டமாக திரும்பி பார்த்தாள்.

“என்ன பயந்துடீங்களா?” ஜீவாவின் முகத்தில் ஏளன புன்னகை.

அவள் கண்களில் இன்னும் மிரட்சி இருக்க, “எதுக்கு பயப்படுறீங்க?” அவன் புருவங்களை உயர்த்தினான்.

“நான் தைரியசாலி தான். ஆனால், அப்பாவுக்கும், அண்ணாவுக்கும் கொஞ்சம் பயம்.” அவள் மெல்லிய குரலில் கூற,

“இவர் எனக்கு தெரிந்தவர் அப்படின்னு சொல்ல வேண்டியது தானே? காலைலயும் இப்படி தான் பயந்து ஓடுனீங்க. எதுக்கு பயப்படணும்? உங்களை என்ன செய்திட முடியும்?” அவன் தன் கைகளை குறுக்கு கட்டி கொண்டு கேள்வியாக புருவத்தை உயர்த்தினான்.

“நான் ஒன்னும் பயந்தாக்கொள்ளி எல்லாம் கிடையாது. இப்ப உங்க கிட்ட தைரியமா தப்புன்னு சொல்றேன் தானே?” அவளும் எதிர் கேள்வி கேட்டாள்.

“அதே தான்.  ஒரு நாய் கோழி குஞ்சியை விரட்டி பிடிச்சி சாப்பிட்டா ஒரு ஆடு காப்பாற்ற போகுமா? அந்த கோழியின் அம்மா வேணுமின்னா காப்பாற்ற போகும். ஆனால், ஒரு ஆடோ, மாடோ பொதுவா காப்பற்ற போகாது. எங்கையாவது அத்திபூத்தாற் போல் ஏதாவது நடக்கலாம்.” ஜீவா நிறுத்த அவனை புரியாமல் பார்த்தாள் தாரிணி.

“ஆனால், ஒரு நாய் ஒரு குழந்தையை கவ்வி பிடிக்க போனால், அந்த நாயை கல்லவிட்டு அடிச்சி நீங்க காப்பற்ற போவீங்க தானே? அந்த குழந்தை, என்ன மதம், என்ன ஜாதி, என்ன இனம், யார் வீட்டு குழந்தைன்னு பார்த்துட்டு தான் காப்பாற்ற போவீங்களா?” அவன் கேட்க, “அது எப்படி அமைதியா இருக்க முடியும்?” தாரிணி கோபமாக கேட்டாள்.

“இது தாங்க மனித இயல்பு. நாம சின்ன குழந்தையா இருக்கும் பொழுது இப்படி தான் இருந்திருப்போம். வயசு வித்தியாசம் பார்க்கமா தப்பு நடந்தா தட்டி கேட்டிருப்போம். கோபம் வருவது தான் மனித இயல்பு. அதை எதிர்த்து கேட்பது தான் மனித இயல்பு. ” அவன் பேச்சு அவளுக்கு பிடித்திருந்தது.

நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்;

ஞான நல்லறம் வீர சுதந்திரம்

பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்;” அவன் அழுத்தமாக கூற, அவள் அவனை மெய்சிலிர்த்து பார்த்தாள்.

“பெண்கள் நீங்க இப்படி இருக்கணும்னு பாரதியார் சொல்லிருக்கார். நீங்க பயப்படலாமா?” அவன் புன்னகையோடு கேட்க, அவன் கன்னத்தில் சின்ன குழி விழ, அவன் மீசையை முறுக்கி கொண்டு கேட்ட விதத்தில் அவள் முகத்தில் மெல்லிய புன்னகை வந்தது.

“நான் சொல்றது சரி தானே?” அவன் கேள்வியாக நிறுத்த, அவள் பதிலில் அவன் கலகலவென்று சிரித்தான். அவர்களுக்கு இடையில் மெல்லிய நட்பு மலர்ந்தது.

நதி பாயும்…