வானம் காணா வானவில்-20

வானம் காணா வானவில்-20

அத்தியாயம்-20

தாயிக்கு அழைத்து விடயம் பகிர்ந்தவன், அடுத்து அழகம்மாள் பாட்டிக்கு அழைத்து கூறியிருந்தான். விசாலினியை டிஸ்சார்ஜ் செய்து அங்கு கூட்டி வருவதாகக் கூறி வைத்திருந்தான், அரவிந்த்.
அழகம்மாள், பேரன், பேத்தி இருவருக்கும் ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்து ஹாலில் சற்று நேரம் அமரச் செய்தார்.

அவர்கள் அங்கு வருவதாகக் கூறியவுடன், கற்பகம் அவசர சமையல் செய்து இரவு உணவை இனிப்புடன் வழங்கியிருந்தார்.

சாப்பிட்டதாக பெயர் செய்தவளை வற்புறுத்தாமல் அறைக்குள் அழைத்துச் சென்றான், அரவிந்த்.

“தூக்கம் வந்தா தூங்கு ஷாலுமா”, அரவிந்த்.

“இல்ல… இன்னிக்கு மட்டும் எனக்கு ஸ்லீப்பிங் டோஸ் வேணாம், மச்சி”, விசா

“சரி… எப்பத் தூக்கம் வருதோ தூங்கு. சஞ்சய வர சொன்னேன். இப்ப வருவான். கொஞ்சம் பிசினஸ் வர்க் பாத்துட்டு நான் தூங்க லேட் ஆகும்”

“ம்…”, என்றவளின் தொனியைக் கொண்டே மனதை அறிந்தவன்

சஞ்சய் வந்தவுடன் சற்று நேரம் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

ஒரு மணித்தியாலம் இருந்தவனை, உண்ண வைத்தே அனுப்பினார், அழகம்மாள்.

சஞ்சய் கிளம்பியவுடன், அறைக்குள் வந்தவனை, படுக்கையில் படுத்தவாறு பார்த்திருந்தாள், விசாலினி. தனது வருகையை எதிர்நோக்கியிருந்தவளைக் கண்டவன் தன்னவளை நோக்கிச் சென்றான், அரவிந்த்.

“என்ன ஷாலுமா?”, வாஞ்சையோடு கேட்டான்.

“நத்திங்”

மனைவியின் அருகில் சென்று படுத்தவன், தனது மார்போடு தன்னவளை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்தான்.

“பொண்டாட்டி…”, அரவிந்த்

“ம்…”, விசா

மல்லார்ந்து படுத்தவனின் மார்பின் மீது தன்னவளை படுக்க வைத்து அணைத்தபடியே

“கொஞ்ச நேரம் பேசலாமா?”

“ம்…”

“எப்ப வீட்டுக்கு வருவோம்னு கேட்டுட்டே இருந்தியே? இப்போ சந்தோசமா?”

“ம்…”

“ஏன் ஒரே ம்… மா… வருது?”

“ம்…”

“ஏய்! கதையாடி சொல்லுறேன். ம்… ம்…முங்கறே?”

“ம்…”, என்றவள் சிரிக்க, அதன்பின்பே பேசத் துவங்கினான்.

“என்ன பயங்கர யோசனையோட இருக்க? என்னடா அம்மா வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டானேன்னு தான?

இங்க இருந்து உன்னை விட்டுட்டு வெளிய நான் போனாலும், அத்தம்மா, மாமா, பாட்டி எல்லாரும் உன்னை பாத்துப்பாங்க. அங்க அம்மாவைத் தவிர வேற யாரும் ஆளு இல்லல்ல. அதான்…!”

மார்பில் இதயத்துடிப்பை உணர்ந்தபடியே படுத்திருந்தவள், எழும்பி அரவிந்த்தின் இதழ் தீண்டி பழையபடி, அதே இடத்தில் வந்து தலையை வைத்துக் கொள்ள,

“டாபிக் மாத்தணுமா…! சரி… அப்ப நான் சொல்ல வர்றத இப்ப நீ ஹேப்பியா கேப்பியாம்”, அரவிந்த்

“…”, விசா

“எனக்கு, உன்னோட இன்னும் நூறு வருசம் சந்தோசமா வாழணும்னு ஆசையிருக்கு. இப்ப நடந்த ஆக்சிடெண்ட்டயே நினைக்காதே…!

எனக்கு நீ, உனக்கு நான்னு சாகற வரை சலிப்புத் தட்டாம வாழணும்.

நான் உன்னை விட்டு, எவ்வளவு தூரம் பயணிச்சாலும், வேறு பல பெண்களை மீட் பண்ணாலும், வருசக் கணக்கா வேலை, வேலைன்னு திரிஞ்சாலும், விசாலினிய தவிர என் வாழ்க்கைல அவளுக்குரிய அந்த இடத்தை யாராலும், எந்தக் காலத்திலயும் தட்டிப் பறிக்கவோ, இல்ல ஈடு செய்யவோ முடியாது. நானும் அதை யாருக்கும் கொடுக்க மாட்டேன்.

செக்ஸ் அப்டிங்கறது, பசி மாதிரி ஒரு உணர்வுதான்.

பசிங்கற ஃபீலே… அதீத துன்பத்துல, கவலைல மனுசன் இருக்கும் போது நாளு நாள் என்ன? ஒரு வாரம் பட்டினியா கிடந்தாலும் தெரியாது!

பசிக்கு எப்டியோ ஏறத்தாழ அப்டித்தான் செக்ஸூக்கும்!

இப்ப எனக்கு அதீத துன்பம் மனசுல இருக்கு! எம் பொண்டாட்டிக்கு முடியலனு. நீ க்யூர் ஆகற வரை அந்தத் துன்பம் மட்டும் எம்மனசுல அப்டியே தான் இருக்கும். அதனால நீ சீக்கிரமா குணமாகணும். அந்த எண்ணத்தைத் தவிர பிஸினெஸ் கூட நான் அதிகம் யோசிக்க பிரியப்படல!

என்னடா சாமியாரு மாதிரியா பேசிக்கிட்டு இருக்கானே! அப்டினு யோசிக்கிறியா?”, எனக் கேட்டவனின் மார்பில் இதழ் பதித்து ஆமாமென்றாள் பெண்.

உடல் சிலிர்த்து, இதழ் விரித்தவன், “கல்யாணத்துக்கு முன்னாடியே சைக்கிள் போகிற கேப்புல ஆட்டோ ஓட்டினவன் நான்! இல்லைனு சொல்லலை. ஒத்துக்கறேன். இப்ப என்னடா முனிவன் மாதிரி ஆகிட்டானேன்னு நீ பயப்பட வேண்டாம்.

நான் சாமியாரா ஆகுறதும், சம்சாரியா மாறுறதும் உன் ஹெல்த் இம்ப்ரூவாகறதில மட்டுமே இருக்கு!”, என்று கூறியவனை நிமிர்ந்து பார்த்து கண்ணோடு கண் நோக்கியவள், இதழ் விரித்தாள்.

“என்னடி லுக்கு…!”

“நீ சாமியாராகிருவனு எல்லாம் பயமில்ல எனக்கு!”, என்று மிக மெல்லிய குரலில் கணவனிடம் கூறினாள், விசா.

“வேற என்ன பயம் உனக்கு!”, அரவிந்த்

“எனக்கு முடியாம போனதுக்கே நீ புத்தனா ஆகிட்ட! ஆளு நான் அன்னிக்கே போயிருந்தா என்ன செஞ்சிருப்பேனு அப்பப்போ தோணுது!”, என்று முடிக்கும் போதே விசாவின் குரலில் அழுகை வந்திருந்தது.

“இப்டியெல்லாம் யோசிக்காத! நல்லதே யோசி. போவோம். ஒரு நூறு வருசம் நம்ம நினைச்ச மாதிரி நல்லா வாழ்ந்துட்டு, அப்புறமா மெதுவா போவோம்! என்ன சரியா? நான் சொல்றது!”, அரவிந்த்.

“ம்…”, என்றவள் கழுத்தைக் கட்டிக் கொண்டு, “உன்னை, என்னைத் தவிர வேற ஒன்னும் தெரியல. என்ன சுத்தி என்ன நடக்குதுன்னும் ஒன்னும் புரியல!”, என பெருமூச்சு விட்டாள், விசா.

“அத நான் பாத்துக்குறேன். டோன்ட் வர்ரிடாமா…! நமக்கு ஒன்னும் வயசாகல. உனக்கு நார்மல் ஆகிட்டா எல்லாம் சரியாகிரும்.

அதனால மனச போட்டுக் குழப்பாத. பயப்படாத. நான் இருக்கேன். எப்பவும் உங்கூட நான் இருப்பேன். அதே போல நீயும் எங்கூட எப்பவும் வேணும்!”, என்றவன் அவளின் உச்சந்தலையில் முத்தமிட்டான்.

“வானத்தில எப்பவாவது வந்து போகிற வானவில் அழகுதான். அது அழகா இருக்குங்கறதுக்காக எப்பவும் வானத்துல இருக்கணும்னா…! அது நடக்கற விசயமில்ல. சரி அழகா இருக்குனு செயற்கையா செய்தாலும், அது நிஜ வானவில் போல அழகா தெரியாது. ரசிக்க முடியாது. வாழ்க்கைல சந்தோசம் அப்டிதான் வானவில் மாதிரி வந்து போகும். அப்பதான் அத சந்தோசம்னே நமக்கு பிரிச்சு உணர முடியும். அதோட அருமையும் அப்பத்தான் புரியும்”, என்றவனிடம்

“இது ரொம்ப அநியாயம். வானவில் மாதிரி சந்தோசம் எப்பவாவது எனக்கு வேணாம். காத்து பூமிய சுத்தி பரவியிருக்கற மாதிரி, சந்தோசம் எப்பவும் என்னைய சுத்தி எனக்கு வேணும்”, என்றாள் விசா.

“கண்டிப்பா காத்து மாதிரி சந்தோசம் உனக்கு கிடைக்கும். நான் ஒரு எக்ஸாம்பிளுக்கு தான வானவில் அப்டினு சொன்னேன்”, அரவிந்த்.

“அவ்ளோ தானா…! இன்னும் கிளாஸ் இருக்கா?”, விசா

“நான் கிளாஸ் எடுக்கற மாதிரி உனக்கு தோணுதா? நீ எதையோ போட்டு மனசுக்குள்ள குழப்பற. அதான் சொல்றேன்.

நீ நோயாளி இல்ல. உனக்கு சின்ன உடல் உபாதை. சோ, பிரிஸ்கா இருக்கணும்.
எனக்கு நீ வேணும்னு என் மனசு, உடம்பு ரெண்டும் சொன்னா, உன்னை நான் அவாய்ட் பண்ண மாட்டேன்.

அதே போல உனக்கு தோணுறத எங்கிட்ட ஃபிராங்கா சொல்லு. கேளு… ஹெசிடேட் பண்ணாத!
சொல்லவேண்டியதை நாளு, நேரம் கடத்தாம உடனே சொல்லு!”, என்று மீண்டும் தனது இதழ் கொண்டு தன்னவளின் முகம் நிமிர்த்தி அவளின் இதழை மென்மையாகத் தீண்டினான்.

தீண்டல் இதம் தந்திருக்க, புதுத் தெம்பு வந்திருந்தது.
அருகில் தன்னவளை படுக்கச் செய்தவன், அணைத்தபடியே

“இப்ப… அப்டியே தூங்கு! நாளைக்கு காலையில நிறைய வேலையிருக்கு!”, என தன்னவளின் முதுகை இதமாகத் தட்டி தூங்க வைக்கும் முயற்சியில் இறங்கினான், அரவிந்த்.

“எப்போ நாம அத்தம்மாட்ட போவோம்?”, விசா

“நாளைக்கு போகணும்னாலும் எனக்கு ஓகே தான்!”, அரவிந்த்.

“நாம அங்கேயே போலாம்!”, விசா

“உல்டாடி நீ. எல்லாரும் அவங்கம்மா வீட்டுக்கு போகணும்னு சொல்வாங்க. நீ வித்தியாசமாவே இரு!”, என்று சிரித்தவன்

“அம்மாகிட்ட என்ன சொன்ன அன்னிக்கு?”, அரவிந்த்

“நான் பெத்துக் குடுக்குற புள்ளைங்கள எல்லாம் வளக்கணும்னு சொல்லியிருக்கேன்!”, என்று கூறி வெட்கத்தோடு சிரித்தவளை

“கண்டிப்பா…! எனக்கெல்லா எந்த அப்ஜெக்சனும் இல்ல. ஆனா ஃபுல் டைம் புராஜெக்டா இதையேவா பண்ணப் போற?”, என ஆச்சர்யமாகக் கேட்டவன், சிரித்தபடியே “போரடிக்கப் போகுதுடி”, என்று நக்கலடித்து சிரித்தவனை

“ரொம்ப பேசாத…! அப்புறம் பொண்ணு பெத்து தரமாட்டேன்”, விசா

“போடீ… அதுக்கு நான் கியாரண்டி”, என்று சிரித்தான்.

“கியாரண்டி எல்லாம் காலாவதி பண்ணி என்ன நடக்குதுனு பாப்போம்!”, என்று கூறி நமுட்டுச் சிரிப்பு தன்னைப் பார்த்து சிரித்தவளை

“வில்லங்கம் என்னமோ யோசிக்குது போலயே!”, என்று யோசிப்பது போல பாவனை செய்தான். பிறகு, “நா அழகம்மாகிட்ட ஐடியா கேட்டுக்குவேனே!”, என்றபடி உறங்குவதாக பாவனை செய்தான்.

அதற்குமேல் பேசாமல், சிரித்தபடியே கணவனின் கைவளைவிற்குள் உறங்க முற்பட்டாள், விசாலினி.
//////////

மிருணாவும் வடபழனி கோவிலில் நடைபெற்ற நிகழ்வை எதிர்பார்க்கவில்லை. இதுபோன்ற காரியத்தை தனது தமையன் தனக்காக செய்வான் என அவள் எண்ணியிருக்கவில்லை.

அறிந்தவள், அதன்பின் தனது சகோதரனை அழைத்து, வேறு ஏதேனும் வழியில் அவளைக் கடத்துவது, அல்லது விசாலினியின் மீது பொய்பழி சுமத்துவது என்று ஏதேனும் ஒரு வழியின் மூலம் வீட்டிலிருந்து அகற்றும்படி தனது தமையனிடம் கேட்டிருந்தாள்.

அதன் நிமித்தம், விசாலினிக்கு திருமணப் பரிசாக தான் நியமித்த ஒருவனின் மூலம் சரணின் படத்தை பரிசாக வழங்கச் செய்திருந்தான், சுரேஷ்.

பரிசுப் பொருட்கள் பிரிக்கப்படும் போது, மணமகளுக்கு வழங்கப்பட்ட முகம் தெரியாதவனின் லேமினேட்ட புகைப்படம், மணமக்களுக்கு இடைய குழப்பங்களை உண்டாக்கும் எனக் காத்திருந்தவர்களுக்கு அடுத்த நாள் காலை வரை ஏமாற்றமே.

“சரி, சரணோட போட்டோவ ஏன் பொண்ணுக்கு பிரசண்ட் பண்ணணும்னு நினைச்ச?”, காவல்

“அதுவா சார். சரணு ரொம்ப நல்லவன். சாகுமுன்ன என்னாண்ட, இந்தப் பொண்ணு ஏதோ மெசேஜ் எல்லாம் போட்டு ஏமாத்தி, போலீஸாண்ட மாட்டி விட்ருக்குனு வண்டில அவனை இட்டாரும்போது எங்கைல சொன்னான்.

கல்யாணப் பொண்ணுக்கு வந்த கிஃப்டுல வேற பையனோட போட்டோவ பாத்து, பொண்ணு மேல சந்தேகப்பட்டு, அரவிந்து அடிச்சு துரத்தட்டும்னு தான், பொண்ணு கைல அந்த கிஃப்ட குடுக்கச் சொன்னேன்.!”, என தான் எண்ணியதைக் கூறியிருந்தான், சுரேஷ்.

“சரணோட போட்டோவ பாத்த எபெக்டு வீட்டுல எதுவும் தெரியலனு… தங்கச்சு போனு போட்டு என்னை கிழி, கிழினு.. கிழிச்சுது சார்!”, என்ற சுரேஷ் அதன்பின்பு, அடுத்த வழியினை யோசித்து, அன்றே புதிய திட்டத்தை காலையில் அவசரமாக செயல்படுத்தியதாகவும், அதிலும் விசாலினி தப்பித்து விட்டதாகவும் தெரிவித்திருந்தான், சுரேஷ்.

விபத்து நடந்த அன்று காலையில், தனது தங்கையின் அலைபேசி அழைப்பிற்கு இணங்க, வீட்டிற்கு வந்திருந்ததாக ஒப்புக் கொண்டான் சுரேஷ்.

மிருணா தனது மகளுடன் வெளியில் சென்றபின்பு வீட்டிற்கு வந்தவன், அன்று விசாலினி தனது மாமியாருடன் அவர்களது அறையில் பேசியதை மறைந்து நின்று ஒட்டுக் கேட்டதையும், அடுத்து தம்பதியர் இருவரும் கோவிலுக்கு செல்வதை அறிந்து அவசரத் திட்டம் தீட்டி செயல்படுத்தியதையும் ஒப்புக் கொண்டான், சுரேஷ்.

அதன்பின் அவர்கள் கோவிலுக்கு சென்ற போது, தானும் அங்கு சென்று காத்திருந்ததை காவல்துறையிடம் தெரிவித்து இருந்தான். தனது சகா ஒருவன் மூலம் எதேச்சையாக விசாலினியை கார் மூலம் விபத்து ஏற்படுத்தி கொல்லத் துணிந்ததையும் ஒப்புக் கொண்டான்.
///////////

சுரேஷின் பகிர்தல் மூலம் பெறப்பட்ட விடயங்களை ஆராய வேண்டி, சரணின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

சரண் ஏதோ மனக் குழப்பத்தில் இருந்ததால் தற்கொலை செய்து கொண்டதாக வீட்டினர் கூறினர்.

சுரேஷின் வாக்குமூலத்தைக் கொண்டு, சரணின் மரணத்தில் சந்தேகம் கொள்வதாகக் கூறி மீண்டும் கேஸை எடுத்திருந்தது, காவல்.

சரணின் மொபைல் எங்கும் கிடைக்காமல் போனதால், மேற்கொண்டு எதுவும் செய்ய இயலவில்லை.
ஆனால், குறிப்பிட்ட தேதிவரை, வனிதாவின் தாயாரின் அலைபேசி எண்ணிலிருந்து சரணின் அலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப் பட்டிருப்பது முன்பே உறுதியாகியிருந்தது.

சரண் அக்குறுஞ்செய்தியை அனுப்பாத நிலையில், சரணின் வீட்டினர் யாரோ ஒருவர் தான், அந்த அலைபேசியை பயன்படுத்தியிருக்க வேண்டும், என்ற சந்தேகத்தின் பெயரில் சரணின் சகோதரர்கள் மூவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

உண்மையில் நடந்தது…

சரணின் அலைபேசியில் இருந்து, அவனுக்குத் தெரியாமல் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு தனது பார்வைக்கு படாமல் போனது எப்படி என யோசித்தபடியே, அலைபேசிக்கு சார்ஜ் போடுவதாக பாவனை செய்து கொண்டு, மறைந்திருந்து அலைபேசி கண்ணில் படும் இடத்தில் தனது பணிகளை கவனிக்கத் துவங்கியிருந்தான், சரண்.

இரு நாட்களில், தனது கண்ணால் கண்டு தெளிந்த காட்சிகளுக்குப்பின், தனக்கு முன் பிறந்த தமையனின் மீது சந்தேகங்கொண்டிருந்தான், சரண்.

நியாயம் கேட்கப் போக இருவருக்கும் இடையே அடிதடியாகி இருந்தது.

அடிதடி உச்சமடைந்த வேளை, எதேச்சையாக அங்கு வந்த மூத்த தமையன் இருவரையும் பிரித்து, விடயம் என்னவென கேட்டறிந்தான்.

விடயத்தின் வீரியம் உணர்ந்த மூத்த சகோதரன், அத்தோடு மூன்றாமனை அடித்து, “அறிவு கெட்டவனே, முதலாளி எங்கிட்ட சொன்னத…! நான் உங்கிட்ட செய்ய சொன்னா…! சொந்த வீட்டுக்கே சூனியம் வப்பியாடா! இனி அவன் போனத் தொட்ட தொலைச்சுப்புறுவேன். சரணு உனக்கு இனி அந்த சிம்மு வேணாண்டா. அத கடாசிரு. உனக்கு வேற சிம்மு வாங்கிக்கலாம்”, என்றான்.

மூன்றாமவனிடம் திரும்பி, “இந்தா இன்னிக்கு ஒன்னு பர்மா பஜாராண்ட அடிச்சது எங்கைல இருக்கு. இனி அதுல மெசேஜ் போடு! வேல முடிஞ்சதும், போனை கடாசிரு. நம்ம வீட்டாண்ட வச்சு எதுவும் போடாத. பேசாத”, என்று அவன் கையில் அலைபேசி ஒன்றைத் திணித்திருந்தான்.

அத்தோடு, இருவரையும் சமாதானம் சொல்லி அவரவர் வேலையை பார்க்கச் சொல்லிவிட்டு, உண்ண வந்தவன் வேலை முடித்து கிளம்பியிருந்தான்.

மூத்தவன் கிளம்பும் முன், புதியதாக சகோதரனிடம் பெற்றுக் கொண்ட அலைபேசியுடன் வெளியே சென்றிருந்தான், மூன்றாமவன்.

உண்டு கிளம்பி, முதலாளியை நேரில் சந்தித்த முதலாமவன், தனது வீட்டில் இரு சகோதரர்களுக்கிடையே நடந்ததையும், தனது ரௌடி முதலாளியிடம் விசுவாசம் காரணமாக, விகற்பமில்லாது தெரிவித்திருந்தான்.
———————-

சரணின் சகோதரர்களிடம் விசாரணை முடிந்தது.

சரணின் மரணத்தில் உண்டான சந்தேகத்தின் பெயரிலும், மருத்துவரைக் கொல்ல தூண்டியமைக்காகவும் உரிய நடவடிக்கை அவர்களின் மேல் மேற்கொள்ளப்பட்டது.

சரணின் மூத்த சகோதரனின் ரௌடி முதலாளி, சகோதரர்கள் யாரும் அறியாமல் சரணை கண்காணிக்க ஆள் வைத்திருந்தான்.

வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் சேர்ந்து, தன்னை பகடையாக்கியதை உணர்ந்த சரண், வெகுநேரம் யோசனையில் ஆழ்ந்தான். சிம் பற்றிய மூத்த சகோதரனின் அறிவுரையை ஏற்க துணியவில்லை.

அடுத்தநாள் காலையில் காவலிடம் அனைத்து விடயங்களையும் தெரிவிக்க எண்ணி வீட்டிலிருந்து கிளம்பியிருந்தான்.

கிளம்பியவனை, கண்காணித்த ரௌடி முதலாளியின் மறைமுக நபர்கள், சரணை தங்கள் கஸ்டடிக்கு கொண்டு வந்திருந்தனர்.

சரண், மற்ற சகோதரர்களைப் போல கொலை, கொள்ளை, இதர கீழ்த்தரமான செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பாதவனால், தன்னிலையில் இருந்து மாறமாட்டேன் என்று அடம்பிடித்தான்.

அதனோடு, காவல்துறை தன்னை அழைத்து விசாரித்தது, மற்றும் குறுஞ்செய்தி பற்றிய செய்தியை தானறிந்ததையும் பற்றி ரௌடி முதலாளியின் ஆட்களிடம் பகிர்ந்திருந்தான்.

காவல்துறை தன்னை முன்பே அழைத்து விசாரித்ததையும், அதனைத் தொடர்ந்து தன்னை கண்காணிப்பதாகவும், அதனால் தன்னை அடைத்து வைத்திப்பவர்களுக்கே தீமையாக விளையும் என்று ஆணித்தரமாக அடித்துச் சொல்லி, எதற்கும் துணிந்தவனாக இருந்தான், சரண்.

அதே சமயம், ரௌடி முதலாளியிடம், தனது சகோதரன் சரண் காணவில்லை என்றும், அவனைத் தேடித் திரிவதாகவும், அவனைக் கண்டுபிடித்து தர உதவ வேண்டும் என்றும் சரணின் சகோதரர்கள் வந்து ரௌடி முதலாளியிடமே வந்து உதவி கேட்டிருந்தனர்.

சரியென்று கூறி அவர்கள் நம்பும்படி தனியாக ஆளை நியமித்த, ரௌடி முதலாளி, தான் நியமித்த ஆட்கள் சரணைத் தேடித் திரிந்ததாகவும், இறுதியில் பிணமாக கண்டுபிடித்ததாகவும் சகோதரர்களை நம்ப வைத்திருந்தான்.

சின்ன தடயம் இல்லாது சரணை கொலை செய்யத் தூண்டிய ரௌடி முதலாளியிடம், இன்று வரை சரணின் குடும்பத்தார் விசுவாசமாக இருந்தனர்.

காவல்துறையின் தீவிர விசாரணைக்குப் பின் ரௌடி முதலாளி கூலிப்படை மூலம் மருத்துவரைக் கொலை செய்ய திட்டமிட்டதற்காகவும், சரணின் மூன்றாவது சகோதரன் வனிதாவிடம் குறுஞ்செய்தி வழியாக கொலைக்கு உடந்தையாக செய்தி சேகரித்தமைக்காவும் கைது செய்யப்பட்டு, அதற்கான தண்டனையை பெற்றனர்.
///////////

சுரேஷ், விசாலினியை கொலை முயற்சி செய்தமைக்காகவும், பரிசுப் பொருள் மூலம் மனஉலைச்சலை ஏற்படுத்த துணிந்தமைக்கு சிறையில் அடைக்கப்பட்டான்.

மிருணாவை அவர்கள் வீட்டிலேயே வைத்து விசாரித்தனர். அதன்பிறகு, சுரேஷை தப்பான செயல்கள் செய்யத் தூண்டியமைக்காக குறைந்த பட்சத் தண்டனை கிடைக்கப் பெற்றாள்.

போஸ், நீலா இருவரின் வற்புறுத்தலால், ஜெயிலுக்கு அனுப்பாது, பெயிலில் மிருணாவை வெளியில் எடுத்திருந்தனர். மனைவியின் செயலால், சஞ்சய் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தான்.

மிருணாவின் இயல்பை மாற்றிக் கொள்வது கடினம் என்பதை உணர்ந்த சஞ்சய், தனது மனைவியின் எதிர்பார்ப்புகளாலும், குணத்தாலும், மற்றவர்களுக்கு கஷ்டம் உண்டாவதை விரும்பாமல், தனி வீட்டில் ஒதுங்கி இருக்க ஒப்புக் கொண்டிருந்தான்.

மிருணாவைப் பற்றி வெளியே தெரியவர, அவளுக்கும் அனைவரிடமும் இலகுவாக பேச தயக்கம் வந்திருந்தது.

புதியதாக வீடு ஒன்றை வாங்கி, சஞ்சய் குடும்பத்தாரை மட்டும் அங்கு குடியமர்த்தியிருந்தனர், பெரியவர்கள்.

மிருணாவிற்கு, விசாலினி – நீலவேணி இருவருக்குமான உறவுமுறை எத்தகையது என்று நீலா மூலம் தெரிய வந்திருந்தாலும், தனக்குள் எழுந்த பொறாமையைத் தணிக்க அரும்பாடுபட்டாள்.

வீட்டில் இருந்து குழந்தையை கவனிக்கும் நேரம் தவிர, மிருணா தனது குணமற்ற செயலால், பிறரின் தள்ளி நிறுத்தும் அலட்சிய பார்வையை, தண்டனையாக அனுபவித்துக் கொண்டிருந்தாள்.

விடுமுறை நாட்களில் மட்டும் குழந்தையை தனது பெற்றோரிடம் கொண்டு வந்து விட்டுச் செல்வான், சஞ்சய்.
/////////////

சகோதரர்கள் இருவரும் வழமை போல, இணைந்து தங்களது வியாபாரங்களை கவனித்துக் கொண்டனர்.

இரண்டு மாதங்கள் கடந்திருந்த நிலையில், விசாலினியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் வந்திருந்தது.

மூன்று மாதங்கள் எடுக்கும் என்று மருத்துவர்கள் கூறி இருந்த நிலை, அரவிந்தனின் கவனிப்பால் இரண்டு மாதங்களில் சாத்தியமாகியிருந்தது.

வழமை போல அவளது பணிகளை எந்த சுணக்கமும் இன்றி சந்தோசமாக, ஆரோக்யத்துடன் செய்யத் துவங்கியிருந்தாள், விசாலினி.

மிருணா, சஞ்சய், நீரு மூவரும் தனி வீடு போனதால் அதிக வருத்தம் இருந்தாலும், வாரம் ஒரு முறை இரண்டு நாட்கள் தங்கிச் செல்லும் நீரஜாவின் வரவை ஆவலோடு எதிர்நோக்கியிருப்பாள், விசாலினி.

நல்ல முன்னேற்றம் உடல்நிலையில் இருந்தமையால், விசாலினியிடம் பள்ளிப் பொறுப்பு ஒப்படைக்கும் பணியை மேற்கொண்டனர். விசாலினியும், முழு ஈடுபாட்டுடன் தனது பணியில் ஈடுபடலானாள்.

போஸ் அறக்கட்டளை நிறுவப்பட்டு, சந்திரபோஸ், நீலா, அரவிந்த், சஞ்சய் நால்வரும் நிர்வாகிகள் எனவும், விசாலினி தாளாளர் பொறுப்பிலும் அமர்த்தப்பட்டிருந்தாள்.

பெரும்பாலும், நீராஜா விசாலினியின் பொறுப்பாக மாறியிருந்தாள். முன்பிருந்தே இருவருக்கும் இடைய இணக்கமான அன்பு இழையோடியமையால், அது இன்னும் இறுகி, எஃகு போல் உறுதியாகியிருந்தது.
///////////////////

error: Content is protected !!