Rose – 7

0d29bbefc23f6a94a635f48e3d0026a1-3080d742

அத்தியாயம் – 7

தன் கணவன் உயிர் இழந்த சம்பவத்தைக் கேட்டு, வெட்டப்பட்ட வாழையாக தரையில் மயங்கிச் சரிந்தாள். வீட்டின் வேலையாள்கள் தண்ணீர் தெளித்து மீனலோட்சனியை எழுப்ப, தன்னவன் ஊருக்குச் செல்லும்போது சொல்லாமல் சென்றது நினைவிற்கு வர, விழிகளில் கண்ணீர் பெருகியது.

‘நான் உன்னை சந்தோசமாக வைத்திருக்கிறேனா?’ கண்ணில் காதல் மின்ன கேட்ட கணவனின் முகம் நெஞ்சில் வந்து போக, எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் இன்றி ஜெடம்போல அமர்ந்திருந்தாள் மீனா. வீட்டின் முன்பு ஆம்புலன்ஸ் வந்து நிற்கும் வரை அந்த மௌனம் நீண்டது.

கோகுல்நாத் கருகிய உடலை எடுத்து வந்து நடுஹாலில் வைக்க, “இரண்டு நாள் பிரிவிற்கே தாங்காத மகனிடம், இனி காலம் முழுக்க உன் அப்பாவின் முகத்தைப் பார்க்கவே முடியாதுன்னு நான் எப்படி சொல்வேன்?” நெஞ்சு நெஞ்சாக அடித்துக் கொண்டு அழுக தொடங்கினார்.

அதற்குள் விஷயமறிந்து அக்கம்பக்கத்தினர் மற்றும் பழகிய நண்பர்கள் என்று பெரிய படையே திரண்டுவிட்டது.

அன்றைய தேர்வை மிகவும் சிறப்பாக எழுதி முடித்துவிட்டு வெளியே வந்த யாதவிடம், “இன்னைக்கு எக்ஸாம் எப்படி இருந்தது?” என ராம் விசாரிக்க, அவன் புன்னகையை மட்டுமே பதிலாகத் தந்தான்.

இருவரும் தங்களின் பேக்கை எடுத்து மாட்டிக்கொண்டு, “உன்னிடம் பதிலை வாங்கவே முடியாது… ஆமா உங்கப்பா இன்னைக்கு ஊரில் இருந்து வந்திருப்பார் இல்ல?!” அவன் சந்தேகமாகக் கேள்வி எழுப்ப, தன் கை கடிகாரத்தைத் திருப்பிப் பார்த்தான் யாதவ்.

மணி மதியம் இரண்டை நெருங்கவே, “இந்நேரம் வீட்டிற்கு வந்திருப்பாருடா” என்றவன் நண்பனோடு இணைந்து நடக்கத் தொடங்க, ராமின் தங்கை கீர்த்தனாவும் அவர்களோடு சேர்ந்து கொண்டாள்.

யாதவ் கிருஷ்ணா – ராம்குமார் இருவருமே சிறுவயதில் இருந்தே பால்ய நண்பர்கள். அவனது தந்தையான சிவசந்திரன் வெளிநாட்டில் வேளையில் இருக்க, தன் பிள்ளைகளோடு ஊட்டியில் வசித்து வரும் வைஜெயந்தி, அதே பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிகிறார்.

மூவரும் வருவதைக் கண்டு முகம் மலர்ந்திட, “எக்ஸாம் எப்படி எழுதி இருக்கீங்க?” என்று பொதுவாக விசாரிக்க, அவர்களும் நிறைவான பதிலையே கொடுத்தனர்.

“நான் சுமாரா எழுதி இருக்கேன்” என்ற தங்கையின் தலையைச் செல்லமாகப் பிடித்து ஆட்டினார் அண்ணன்மார்கள்.

வைஜெயந்திக்கு ராம்குமார் எப்படியோ அதேபோல யாதவையும் தன் மகனாக பாவித்தார். பணக்காரன் என்ற திமிரு இன்றி, அவன் இயல்பாக பழகுவது தான். அவர்களின் வீட்டினரும் ஏற்றத்தாழ்வு பார்ப்பதில்லை.

மற்றொரு பக்கம், உடன்பிறந்தவர்கள் யாரும் இல்லாத யாதவிற்கு, கீர்த்தனாவை ரொம்ப பிடிக்கும். அவளை தங்கையாக பாவித்து, ராம்குமார் காட்டும் பாசத்தைக் காட்டினான். நால்வரும் கலகலப்பாக பேசி சிரித்தபடியே வீடு நோக்கிச் செல்ல, யாதவ் வீட்டின் முன்பு கூடியிருந்த கூட்டத்தைப் பார்த்து மிரண்டாள் கீர்த்தனா.

“உங்க வீட்டு முன்னாடி என்னடா இவ்வளவு கூட்டமாக இருக்கு?” ராம் சிந்தனையோடு கேட்க, கூட்டமாக நின்றிருந்த ஆட்களை விலக்கிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான்.

நடுஹாலில் உயிரற்ற உடலாக தந்தையின் கிடத்தப்பட்டிருந்தது. அதனருகே அமர்ந்து அழுத தாயைக் கண்டு அதிர்ந்தான் யாதவ். அறியாத வயதில் இருந்தே தந்தையை சிரித்த முகமாக பார்த்து வளர்ந்தவனுக்கு, அவரின் இழப்பு பேரிடியாக இருந்தது.

அவரது கருகிய உடல் அவன் மனதில் ஆழமாக பதிந்துபோக, “அப்பா” ஓடிவந்த மகன் அவரின் உடலைப் பிடித்து உலுக்கிட, அங்கிருந்த அனைவரும் அவனைத் தடுக்க போராடினர். அவனோடு வீட்டிற்குள் பதட்டத்துடன் நுழைந்த ராமின் காதுகளில் விழுந்தது யாதவின் கண்ணீர் குரலே!

 “என்னை ஏமாத்தாதீங்க அப்பா! உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்ப்பா… ப்ளீஸ் எனக்காக கண்ணை முழுச்சு பாருங்க. இது எல்லாம் விளையாட்டு என்று சொல்லுங்க” என்று கண்ணீரில் கரைந்த மகனைத் தேற்றுவது எப்படி என்று புரியாமல் அழுதார் மீனலோட்சனி!

இந்த காட்சியைப் பார்த்த அனைவரின் விழிகளும் கலங்கின.

அந்த குடும்பத்தின் ஆணிவேர் கோகுல்நாத். அவரில்லாமல் இனி அவர்களின் நிலை என்னவென்று நினைத்து, மீனாவின் அருகே அமர்ந்து ஆறுதல் சொல்ல தொடங்கினார் வைஜெயந்தி.

தன் தந்தையின் முன்பு உடைந்து அழுத நண்பனின் கையைப்பிடித்து, “ஏய் அழுகாதே யாதவ். அப்பா உன்னுடன் தான் இருப்பாரு” சின்னவளும் கண்ணீரோடு தமையனின் கையை ஆதரவாகப் பிடித்துக் கொண்டாள்.

இன்னொரு பக்கம் டீ எஸ்டேட்டை நம்பி கடன் கொடுத்தவர்கள், அதைகேட்டு வந்து வீட்டின் வாசலில் முற்றுகையிட்டனர். அதுவரை தன் கணவனின் இழப்பை நினைத்து அழுது கொண்டிருந்த மீனா எழுந்து வாசலுக்குச் சென்றாள்.

வைஜெயந்தி பதட்டத்துடன் பின்னோடு செல்ல, “என் கணவன் வாங்கிய கடனை நான் அடைக்கிறேன். எனக்கு கொஞ்சநாள் டைம் கொடுங்க” என்று அனைவரிடமும் கண்ணீரோடு மன்றாடினார்.

இவை எதுவும் உணரும் நிலையில் இல்லாத யாதவ், ‘என்னை ஏன் இப்படி தனியாக தவிக்க விட்டுட்டுப் போனீங்க. இரண்டு நாளில் வரேன்னு வாக்கு கொடுத்துட்டு கிளம்பியதை மறந்திட்டீங்களா?’ தந்தையின் மீது பார்வையைப் பதித்தபடி மனதினுள் கேட்டுக் கொண்டிருந்தான்.

கடன் கொடுத்த நபர்கள் ஒன்றாகக் கூடிப் பேசி ஒரு முடிவிற்கு வந்தனர். மூன்று மாதத்திற்கு தவணை கொடுத்து மொத்த கடனையும் அடைக்க சொல்ல, அந்த கடன் தொகையை நினைத்து ஒரு பக்கம் நெஞ்சம் கனத்தது மீனாவிற்கு.

“கண்டிப்பாக கொடுப்பேன்” வாக்குறுதி கொடுத்தவளின் விழிகள் கலங்க, தன் கணவனின் அருகே பித்துப்பிடித்தார்போல அமர்ந்திருந்த மகனின் மீது படிந்தது. அன்று மாலையே கோகுல்நாத் உடலை அடக்கம் செய்துவிட, வீடே வேருச்சொடிக் காணப்பட்டது.

வைஜெயந்தி தன் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றுவிட, தந்தையின் புகைப்படத்தின் கீழே இடிந்துபோய் அமர்ந்திருந்த மகனைக் கண்டு மீனாவின் விழிகளில் கண்ணீர் கடையுடைத்தது.

தன்னுடைய துக்கத்தை மனதிற்குள் போட்டு புதைத்துவிட்டு, “யாதவ் சாப்பிட வாப்பா” என்றழைத்த தாயை விழியுயர்த்தி பார்த்துவிட்டு அவன் அமைதியாகிவிட, அவனருகே சென்று அமர்ந்தார்.

“அப்பா ஏன்மா நம்மளை இப்படி தனியாக தவிக்க விட்டுட்டு போனார்?” அவன் புரியாமல் கேள்வி கேட்க, அவனது தலையைப் பரிவுடன் வருடிய மீனாவின் விழிகள் கலங்கின.

“நல்லவங்களுக்கு பூமியில் அதிகநாள் வாழ இடமில்லை. அதுதான் அப்பாவை கடவுள் சீக்கிரமே தன்னிடம் கூப்பிட்டுக் கொண்டார்” என்ற தாயின் மடியினில் தலைவைத்துப் படுத்தான் மகன்.

ப்ளைட் ஆக்சிடெண்டில் இறந்த கணவனை நினைத்து கண்ணீர்விட நேரமின்றி, தொழிலை நம்பி கடன் கொடுத்தவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் குழம்பினார் மீனா. தொழில் சந்திக்க இருக்கும் சரிவையும் சரிசெய்ய வேண்டும் என நினைக்கும் போதே மலைப்பாக இருந்தது.

இவ்வளவு கடன்சுமைக்கு நடுவே எப்போதும் புன்னகையுடன் வலம்வரும் தன்னவனின் முகம் மனதில் வந்து போனது. அவர்களிடம் பேசி காலக்கெடுவை நீட்டித்தபோதும், அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் திகைத்தார் மீனா.

அவருக்கு எஸ்டேட் பற்றியோ, டீ பேக்டரி பற்றியோ எந்த நிலவரமும் தெரியாது. அந்த வேலையைக் கற்றுக்கொள்ளும் முன்பே கணவனைக் கரம்பிடித்தது மட்டுமே நினைவில் நின்றது. திக்குத்தெரியாத காட்டில் கண்ணைக் கட்டி விட்டதுபோல இருக்க, இப்படியொரு நாள் தன வாழ்வில் வரும் என்று கனவிலும் நினைக்கவில்லை.

அடுத்து என்ன செய்துவது இதே கேள்விதான் அடுத்த ஒரு வாரமும் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. தன் மகனுக்குத் தேவையான அனைத்தையும் கவனத்துடன் செய்தாலும், மனம் சிந்தனையிலேயே உழன்றது.

அந்த வாரத்தின் இறுதியில் எஸ்டேட் ஊழியர்கள் செய்கின்ற வேலைக்கு கூலிகேட்டு வந்து நிற்க, தன்னிடம் இருந்த நகைகள் அனைத்தையும் விற்று அவர்களுக்கு சம்பளம் போட்டு கொடுத்தாள்.

இது எந்த விஷயமும் யாதவிற்கு தெரியாது. படிக்கின்ற வயதில் மகனுக்கு தேவையில்லாத சுமையை சுமக்க வேண்டாமென்று நினைத்தது தாயுள்ளம். வாழ்க்கை என்பது மேடுபள்ளம் நிறைந்ததாக இருக்கும் என்ற நிதர்சனம் அவரின் மனம் அறிந்ததே!

அதை நினைத்து பயந்து தேங்கி நின்றுவிடகூடாதென்று மனம் கட்டளையிட, தன் கணவனை நினைத்து தைரியத்தை வரவழைத்துக் கொண்டாள். இத்தனை வருடமாக கணவன் – மகன் குடும்பம் என்று இருந்த பெண்மணி, முதல் முறையாக அந்த வட்டத்தைவிட்டு வெளியே வந்தார்.

தன் கணவன் நடத்தி வந்த பேக்டரியை போய் பார்வையிட்ட கையோடு, அந்த நிர்வாகத்தை சீர் செய்ய திறமையான பெண்ணொருத்தி வேலைக்குத் தேவை என பேப்பரில் விளம்பரம் கொடுத்தார். அடுத்த ஒரு வாரம் அமைதியாகச் செல்ல, இண்டர்வ்யூ வைத்து சௌந்தர்யா என்ற பெண்ணை தேர்வு செய்தாள்.

ஏற்கனவே கணவனுக்கு பக்கபலமாக இருந்த மாதவியின் வழிகாட்டுதலும், சௌந்தர்யாவின் திறமையையும் வைத்து தொழிலை எடுத்து நடத்தினார் மீனலோட்சனி.

தந்தையை இழந்த யாதவின் மனம் தாயின் அன்பைத் தேடியது. தன்னுடைய அரவணைப்பை நாடும் மகனின் மனம் புரிந்தபோதும், அவனது எதிர்காலத்தை நினைத்து மனத்தைக் கல்லாக்கிக் கொண்டார்.

காலையில் வீட்டின் வேலையாட்கள் சாப்பாடு பரிமாற, தந்தையோடு இருந்த நாட்களில் பெற்றவர்கள் ஊட்டிவிட்டு சாப்பிட்டது நினைவு வந்து போனது. பள்ளி முடிந்து மாலை வீடு திரும்பினால், மீண்டும் தனிமை அவனை ஆக்கிரமித்தது.

பெற்றவர்கள் இல்லாத இல்லம் வெறும் கான்கிரீட் கட்டிடமாக உயிர்ப்பின்றி இருக்க, இரவு நேரங்களில் அனாதைபோல இருப்பது போன்ற எண்ணத்தை உருவாக்கியது. அடுத்தடுத்து வந்த நாட்கள் இதுபோலவே செல்ல, சொந்த வீட்டிலேயே அவனுக்கு மூச்சு முட்டியது.

அன்று காலைப்பொழுது அழகாக விடிந்திட, முக்கியமான மீட்டிங்கில் கலந்துக்கொள்ள தயாராகிக்கொண்டிருந்த மீனாவின் அறை வாசலில் நிழலாடியது.

சட்டென்று திரும்பிப் பார்த்தவளோ, “யாதவ் ஏன் அங்கேயே நிற்கிறே… உள்ளே வாப்பா” என்றார்.

தாயிடம் எப்படி பேசுவது என்று மனதிற்குள் ஒத்திகைப் பார்த்தவன், “அம்மா வேலைக்குப் போகாமல் வீட்டிலேயே இருங்கம்மா. வீட்டில் யாருமே இல்லாமல் இருப்பது மனசுக்கு பாரமாக இருக்கு” என்ற மகனின் தவிப்பு கண்டு தாயுள்ளம் பரிதவித்தது.

“நானும் வீட்டில் இருந்தால் சரிவராது” என்றபோதே சிறுவனின் முகம் வாடியது.

அவன் மனதை மாற்ற நினைத்த மீனா, “அமெரிக்காவில் உன் வயது பசங்க, தனியாகவே பார்ட் டைம் ஜாப் செய்து, படிப்பையும் படிக்கிறாங்க. உன்னை மாதிரியா அம்மாவை தேடுறாங்க?” கடுமையுடன் பேச, சடாரென்று நிமிர்ந்து தாயின் முகத்தைப் பார்த்தான்.

“அதுக்காக இப்போ என்ன செய்யனும்னு சொல்றீங்க?” என்றான் எரிச்சலோடு.

அவனை நிதானமாக ஏறிட்டு, “உனக்குத் தேவையானதை நீதான் செய்துக்கணும். என்னை நீ எதிர்பார்க்கக்கூடாது!” எனக் கட்டளையிட, அவன் முகத்தில் கசந்த புன்னகை தோன்றி மறைந்தது.

தனக்கு தெரியாத வேலையை கஷ்டப்பட்டு கற்றுகொண்டு கணவன் வளர்த்த தொழிலை வீழ்ச்சியில் இருந்து மீட்டெடுக்கும் முயற்சியில் தாய் இருப்பது அவனுக்குத் தெரியவில்லை.

“இனி உங்களை சார்ந்து இருக்க மாட்டேன். எனக்குத் தேவையானதை நானே செய்துக்குவேன்” என்றவன் தாயை ஏறெடுத்தும் பாராமல் விலகிச் செல்ல, அதை நினைத்து உடைந்துப் போனார்.

தாய் சொன்ன அமெரிக்கா வாழ்வைப் பற்றிய விதை யாதவ் மனதில் விதையென விழுந்தது. அங்கே நிஜமாகவே பிள்ளைகள் எல்லோரும் இப்படித்தான் இருக்கிறார்களா என்று அறிந்துக்கொள்ளும் ஆவல் தலைத் தூக்கியது.

உடனே அமெரிக்காவில் இருக்கும் ராம்குமாரின் தந்தை முகம் மனக்கண்ணில் தோன்றி மறைந்தது. அன்று மாலை அவர்களுடன் வீட்டிற்கு சென்றபோது, கோகுல்நாத் இறந்த செய்தியை அறிந்த சிவசந்திரன் யாதவிடம் இயல்பாகப் பேசினார்.

“அமெரிக்காவில் பசங்க எல்லாம் படிப்பு, வேலை எல்லாமே செய்வாங்களா?” என்று யாதவ் கேட்க, அதற்கான காரணம் தெரியாதபோதும் பதில் சொன்னார்.

“அப்பா – அம்மாவை சார்ந்து பிள்ளைகள் இருப்பது பத்து அல்லது பதினைந்து வருடம்தான் யாதவ். அதுக்குப் பிறகு படிப்பு செலவுக்கு பெற்றவர்கள் பணம் தந்துவிடுவார்கள். ஒருப்பக்கம் தன்னுடைய பணிகளை தானே செய்துகொண்டு படிப்பையும் தொடர்வது இங்கிருக்கும் பிள்ளைகளின் வழக்கம்” என்றார் புன்னகையுடன்.

அன்றிலிருந்து அவனது நடவடிக்கைகள் அனைத்தும் மாறிப் போனது. தன்னுடைய வேலைகளைத் தானே செய்ய முடிவெடுத்த யாதவ், வேலையாட்களின் வேலை செய்யும்போது கவனிக்க தொடங்கினான்.

ஓரளவு தெரிந்து கொண்ட பிறகு அவர்களை வேலையைவிட்டு நிறுத்துவிட்டு, தன்னுடைய உடைகளைத் துவைப்பது, சமையல் செய்து சாப்பிடுவது, தோட்டத்தின் செடிகளைப் பராமரிப்பது என்று மொத்த வேலைகளையும் தானே செய்தான்.

 தன் சந்தேகங்களை வைஜெயந்தியிடம் கேட்டு அதன்படி செய்ய, அவனைப் பாராட்டி ஊக்குவிக்க ராம்குமாரும் , கீர்த்தனாவும் இருப்பதால் இவை எல்லாமே ஒரு கஷ்டமாகவே அவனுக்குத் தெரியவில்லை. அவனைச் சூழ்ந்திருந்த தனிமையும் விலகிச் சென்றது.

யாதவ் மனக்கண்ணில் ராம்குமாரின் தந்தையின் முகம் வந்து போனது. காலையில் வீட்டிலிருந்து பள்ளிக்குச் செல்பவன், மாலையில் ராமின் வீட்டில் படித்துவிட்டு இரவு வீடு வருவது வழக்கமாக மாறியது.

தன் தாய் மீனலோட்சனி என்பதை மறந்தே போன யாதவ், படிப்பிலும் முழு மூச்சாக தன் கணவனத்தை திருப்பினான்.

இவை அனைத்தும் வைஜெயந்தி மூலமாக அறிந்த மீனா, “என் மகன் மீது எனக்கு அக்கறை இல்லன்னு நினைக்கிறீங்களா? இந்த சமயத்தில் நான் தொழிலை எடுத்து நடத்தாமல் போனால், இருப்பதை விற்று கடனைக் கொடுத்துவிட்டு யாதவுடன் ரோட்டில் தான் நிற்கணும்” என தொடங்கி, தான்  சந்தித்து வரும் சவால்களை சொன்னார்.

“தெரியாத தொழிலைக் கற்றுகொண்டு முன்னேறுவது எவ்வளவு கஷ்டம்னு எனக்குதான் ஜெயந்தி தெரியும்” என்று பெருமூச்சுடன் மீண்டும் இடைவெளிவிட்டு தொடர்ந்தார்.

“பிள்ளை மட்டும் போதும்னு முடிவெடுத்தால், நாளை அவன் விரும்பிய படிப்பையும் என்னால் கொடுக்க முடியாது. அவனோட வளமான எதிர்காலத்தைவிட, எனக்கு வேற எதுவும் முக்கியமாக தெரியல. கோகுல்நாத் குடும்பம் நடுரோட்டில் நிற்கிறது என்பதைவிட, இந்த நிலை எவ்வளவோ மேல்!” என்று புன்னகைத்த மீனாவின் பின்னோடு இருக்கும் வருத்தம் வைஜெயந்தியையும் பாதித்தது.

“என்னோட கஷ்டம் அது என்னோடு போகட்டும் ஜெயந்தி. ராம்குமார் மாதிரியே என் மகனையும் பார்த்துப்பீங்களா?” என கேட்கும்போது மீனாவின் விழிகள் தானாகவே கலங்கியது.

ஒரு தாயின் நிலையில் இருந்து யோசிக்கும்போது, மீனாவின் முடிவில் பிழைக்காண முடியவில்லை. ஏற்கனவே யாதவ் தன் மகனாக பாவித்திருந்த வைஜெயந்தி, “அவன் என் பொறுப்பு!” என்று சொல்லி கையை அழுத்திவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

தன் மகன் விலகல் வருத்தத்தைக் கொடுத்தபோதும், எல்லாம் ஒருநாள் சரியாகும் என்ற எண்ணத்துடன் கடந்து செல்ல துவங்கினார். வெகுவிரைவில் தொழில் என்ற மிகப்பெரும் சுழல் மீனாவை உள்ளிழுத்துக் கொண்டது.