10b

மகிழம்பூ மனம்

மனம்-10(B)

கணவனின் கேள்விக்கான பதிலைக் கூறாமல், தனது மனதில் தோன்றியதை புலம்பத் தொடங்கியிருந்தார், அம்பிகா.

“இப்டியெல்லாம் நடக்கும்னு அவனுக்கும் தெரிஞ்சா இருக்கும்.  எல்லாம் கெட்ட நேரம்! எங்கிட்டோ போயி, அவன் நினைச்சவளோட சந்தோசமா குடித்தனம் பண்ணியிருந்தான்னா… முகரையப் பாத்தவுடனே தெரிஞ்சிருக்கும்.

அப்டிமட்டும் அன்னிக்கு வந்து என் முன்னாடி நின்னுருந்தான்னா, நடந்திருக்கறதே வேற!

வாசப்படியில நிக்கவிடாம, இராத்திரினுகூட பாக்காம, ‘பெத்தவுகளுக்கு நல்ல பேரு வாங்கிக் கொடுத்தப்பா, வளத்த கடா மாருல பாஞ்சதை படிச்சிருக்கோம், நாலு மக்க சொல்லி கேட்டுருக்கோம். ஆனா இப்போ பாத்துட்டோம்.  இன்னும் எங்கண்ணு முன்னாடி நிக்காதே’ன்னு, அப்பவே விரட்டி விட்டுருப்பேன். 

ஆனா.. அவனே குத்துயிரா வந்து, உசிரைக் கைல புடிச்சிட்டு கூனிப்போயி, செஞ்சதையெல்லாம் நினைச்சு உக்குருகி வந்து நின்னான். 

அதப் பாத்த, பெத்த மனசு அவஞ்செஞ்ச நம்பிக்கை துரோகத்தை அப்ப நினைக்கல…!

பித்துப் பிடிச்சிருந்த மனசுல.. பத்துமாசம் சுமந்து அவனைப் பெத்ததையும், அவனை வளத்து ஆளாக்க நான்பட்ட கஷ்டத்தையும் மட்டுமே, அப்போதைக்கு நினைச்சேன்”, என்று பெருமூச்சை வெளியிட்டவாறு கூறியவர், “அவன் நின்ட கோலம், அடிவயித்துல நெருப்பை அள்ளிப் போட்ட மாதிரி எரிய ஆரம்பிச்சிருச்சு..  எம்புள்ளைக்கு என்னாச்சோனுதான்… இந்தப் பாவி மனசு பதறுச்சு! போறேன்னு வம்புடியா கிளம்பனவனை அரட்டி, மிரட்டிதான் அன்னிக்கு வீட்டுக்குள்ள கூப்பிட்டேன்”, என்று அழுகையோட அன்றைய தனது நிலையைக் கூற, மனைவியின் முகத்தையே பார்த்தபடி பொறுமையாக அமர்ந்திருந்தார் முருகானந்தம்.

“அப்போ எனக்கு மருமகளைப் பத்தின என்னமெல்லாம் இல்லைங்க.  பசியோட, ஜீவனில்லாம எம்முன்ன நிக்கிற எம்புள்ளைக்கு, ஒரு வாயி நல்ல சாப்பாடு போடனும்னு மட்டுந்தான் தோணிச்சு.

எப்புடி வளர்த்த எம்புள்ளை, இன்னிக்கு இப்படி வந்து அனாதரவா, யாரோ மாதிரி, அது வீட்டு வாசல்ல வந்து நிக்குதே! ஆண்டவா! அப்டியென்ன ஊருக்கில்லாத பொல்லாத தப்பை எம்புள்ள பண்ணிட்டானு! இப்டி தண்டிச்சு, உருத்தெரியாம மாத்தி, குத்துயிரா வச்சிருக்கனு?

என்னைப் படைச்சவங்கிட்ட முறையிடவும், நியாயம் கேக்கவும், எம்புள்ளைக்கு புடிச்சமாதிரி வேளா வேளைக்கு ஆக்கிப் போடவுமே, ரெண்டு நாளும் ஓடிப் போயிருச்சு!”, என்று நிறுத்தியிருந்தவரின் கண்களில் கண்ணீர், திறந்த மடையிலிருந்து வெளிவரும் வெள்ளம் போல அவரின் மடியை நனைத்திருந்தது.

“மருமக ஊருல இருந்து வந்து, ஒரு வாரமாச்சு அம்பி.  இதுவரை எதையும் கண்டும், காணாம நீ இருக்கிறதைப் பாத்தா, எனக்கு ஒன்னும் புரியல! 

சின்னவனோட நடவடிக்கைய பாக்கும்போது எனக்கு எதுவும் சரியாப்படல!  ஒரு புள்ளை நல்லாயிருக்க, நம்ம ரெண்டுபேரு ஆதாயத்துக்காக, இன்னொரு புள்ளைய முடமாக்கிறக் கூடாதுல்ல!”, முருகானந்தம்.

“மருமகப்புள்ளை வீட்டு விஷேசத்துக்கு அன்னிக்கு வரமாட்டேனு இங்கேயே நின்னுகிட்ட சின்னவன் போக்கு அன்னிக்கே புதுசாதான் இருந்துச்சு.

எப்பவும் அந்தப்புள்ளை பின்னாடியே சுத்துறவன், லீவு நாளு அதுமா அங்க வரலைன்னு சொன்னதே, எனக்கு கஷ்டமாத்தான் இருந்திச்சு!

அப்பவும், யாழினியப் பத்தித்தான் நான் யோசிச்சேங்க.  அது சாமாத்தியமான புள்ளை.  எதையும் அனுசரிச்சு சரி பண்ணிரும்னு, கொஞ்சம் அசால்டா இருந்துட்டேன். ஆனா சின்னப்பய யுகி, வீடு தங்காம, எதுக்கு பிடிகொடுக்காம திரியறான்.  முன்ன மாதிரி இப்ப அவன் இல்லைனு நானும் கவனிச்சேன். என்ன அடுத்துச் செய்யலாம்னு யோசனைலதான் இருக்கேன்”, என்று யுகேந்திரனையும் தான் கவனித்ததை கணவனிடம் மனம் திறந்திருந்தார்.

சில நிமிட யோசனைக்குப்பின், “பேசாம, சின்னவனை தனிவீடு பாத்துட்டு போகச் சொல்லிருவோமாங்க”, என்று தனது முடிவைத் தெரிவித்திருந்தார், அம்பிகா.

மனைவி பேசிய அனைத்தையும் கேட்டிருந்தவர், தனது மனதில் உள்ளதையும் மனைவியிடம் கூற விழைந்தார்.

“இன்னொன்னு நான் சொல்றதை சொல்லிறேன்.  கொஞ்சம் காது கொடுத்து கேளு… இடையில வந்து குழப்பக்கூடாது”, என்ற பீடிகையோடு கூற ஆரம்பித்திருந்தார் முருகானந்தம்.

“பெரிய பய வந்ததை ஊருக்கு தெரிவிக்க வேண்டியது நம்ம கடமை.  அதனால… அதை அடுத்த நாளே நான் சொல்லிட்டேன். அவுக முறையா ரெண்டு ஊருக்கும் தெரிவிச்சு அடுத்து என்ன செய்யனும்னு நம்மகிட்ட சொல்லுவாங்க”, இதை கூறியவுடன் தலையில் அடித்துக் கொண்டு பேச ஆரம்பித்த அம்பிகாவை, கையாலேயே அமைதியாக இருக்கும்படி சைகை காட்டியவர், நிறுத்தாமல் தனது பேச்சைத் தொடர்ந்திருந்தார்.

“ஊருக்குப் போயி… நேருல சொல்லலாம்னு நினைச்சுத்தான் வளைகாப்புக்கு வந்தேன். ஆனா அன்னிக்கு தோது இல்லாததால, சம்பந்திகிட்ட இந்தப் பய வந்தத சொல்ல முடியல.  இங்க வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம்தான் போனுல கூப்பிட்டு சொன்னேன்”,

“அய்யோ, அவரு ஒன்னும் உங்களைக் கேக்கலையா? கோவப்பட்டு எதுவும் பேசலையா?”, என பதறிக் கேட்டார் அம்பிகா.

“யாரு என்ன பேசுனாலும், நாம கேட்டுக்கத்தான் வேணும்.  அதுக்காக சொல்லாம விடமுடியுமா? அதுதான முறையும்கூட”

“ம்…”,

“நம்ம தேவா போயி கொஞ்ச நாள்ல, ரேசன் கார்டுல இருந்த அவன் பேரை எடுக்கச் சொல்லிட்டாங்கல்ல.

அவனுக்கு வோட்டர் ஐடியும் இல்லை.  எதுவும் இல்லாம, இவன் இங்க வீட்டுக்குள்ள இருக்கிறதால, அவனுக்கு கஷ்டம்தான!

இவன், இங்கிருந்து போனபின்ன தான ஆதாரெல்லாம் நாம எடுத்தோம்.

இவங்கைல ரேசன் கார்டு எதுவும் இல்லாம, ஆதாரும் வச்சிருக்க மாட்டான்னு நினைக்கிறேன்.

இப்போ தேவா அப்டிங்றவன் இருக்கிறதுக்கு, எந்த அத்தாட்சியுமே, நம்ம முனிசிபாலிட்டிலயே, தாலுகா ஆஃபீஸ்லயோ உள்ள எந்த ரெக்கார்டுலயும் இருக்காது”,

“இது உங்களுக்கு எப்படித் தெரியும்?”,

“உம்மகன்தான் அவனோட எல்லாத்தையும் தொலைச்சிட்டு, நாடோடியா திரிஞ்சதா சொன்னான்ல!”

“எங்கிட்ட வாயே துறக்கல!”, வருத்தம், குரலில் மேலிட்டதை உணர்ந்தார்.

“சரி விடு…!

அவன் இந்த நாட்டுப் பிரஜைதான். நம்ம புள்ளைதான் அப்டிங்கறதுக்கான எதாவது ஒரு ஆதாரம் அவனுக்கு வேணுமில்ல…!

அதை அத்தாயத்துல இருந்தா வாங்க முடியும்!

அதுக்குத்தான் நம்ம ஊரு பிரசிடெண்ட்கிட்ட பேசுனேன்.

அவுக மூலமா, விஏஓ, அப்புறம் தாசில்தார் ஆஃபீஸ், எல்லா இடத்திலயும் பதிஞ்சு, அப்புறம்தான் ரேசன் கார்டுலகூட பேரு சேக்க முடியும்”, முருகானந்தம்.

“அதுக்கு, எல்லாத்தையும் சொல்லிட்டீகளாக்கும்”

“அதுக்காக அப்டியே எப்படி விடமுடியும்?

நமக்கும் வயசு போகுது.  இன்னும் எவ்வளவு காலம்னு எப்டி சொல்ல முடியும்.

தேவா காலத்துக்கு அவனுக்கு நல்லது, கெட்டதுனா நாலு மனுச வேணுமில்ல.  யாருக்கிட்டயும் போயி சொல்லலைனா இவனைப் பத்தி, இவன் இங்க வந்திருக்கறதைப் பத்தி, ஊருல உள்ளவுங்களுக்கு எப்டி தெரிய வரும். கனவுலயா எல்லாம் வரும்?

நாம இப்ப பஞ்சாயத்துல சொல்லலைனா, தேவாவுக்கு எதுவும் வேணுமினா திடீர்னு எங்கிருந்து வாங்கறது. எவ்வளவு காலம் பெரியவன், யுகேந்திரனையே மட்டும் நம்பியிருக்க முடியும்னு யோசி.

மூத்தவனைப் பாத்ததுல இருந்து, என்னமோ சின்னவனே மாறிப் போன மாதிரி தோணுதுடீ அம்பிகா, எனக்கு.

அதனால பஞ்சாயத்து இனி என்ன முடிவெடுத்தாலும், அதுப்படி மேற்கொண்டு தேவா செய்துக்கட்டும்னு, நான் போனு போட்டு சொல்லிட்டேன்.

தேதி சொல்லும்போது ஒருநாள் நேருல போயிட்டு வரணும்.

அதேமாதிரி, சின்னவனை தனிக்குடித்தனம் வைக்க ஏற்பாடு செய்யச் சொல்லனும்.  அவன் வீடு தங்கவே மாட்டிங்கறான்.  பிடிக்கவே முடியலை.  இல்லைனா அன்னைக்கே சொல்லிருப்பேன்.  பய பிடிகுடுக்க மாட்டிங்கறான்”, என தனது மனதில் உள்ளதை ஒருவழியாக மனைவியோடு பகிர்ந்து கொண்டிருந்தார்.

இருவரும் பேசிக் கொண்டிருக்கும் சமயம், ஏதோ விழுந்தது போன்ற பெரிய சத்தம் கேட்க,

அதேநேரம் கோவிலுக்குச் சென்றுவிட்டு, வீட்டிற்குள் நுழைந்த யாழினிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

படுக்கையில் இருந்து நான்கு எட்டு வைத்தவன், கண்கள் இரண்டும் இருட்ட, பிடிமானம் எதுவும் இல்லாமல், சுதாரிக்கும்முன் கீழே விழுந்திருந்தான் தேவா.

விழும்போதே மயங்கியிருந்தான்.

“என்னங்க ஏதோ விழுந்த மாதிரி”, என்று கேட்டவர் வேகமாக எழுந்து, “வாங்க என்ன சத்தம்னு பாப்போம்”, என்று அறையை விட்டு அம்பிகா வெளிவர முயலவும்,

“அத்தை… சீக்கிரம் தண்ணியெடுத்திட்டு வாங்க”, என்று மருமகளின் பெரிய சத்தம் கேட்கவும், வெளிவந்த பெரியவர்கள் இருவரும் கண்ட காட்சியில் அதிர்ந்திருந்தனர்.

தேவா முறையற்ற நிலையில் கீழே விழுந்து கிடந்தான்.  யாழினி மாமியார் கொண்டு வந்து கொடுத்த நீரை வாங்கி, தேவாவின் முகத்தில் தெளித்தாள்.  உடனே தனது அலைபேசியில் அம்புலன்ஸ் சேவைக்கு அழைத்து விடயம் பகிர்ந்திருந்தாள்.

*******************

தேவாவின் வருகையால், யாழினி அமைதியிழந்து இருந்தாலும், மனித நேயமிழக்காமல் இருந்தாள்.

அதிர்ஷ்டவசமாக தேவாவிற்கு முதலுதவி செய்து, மருத்துவமனையில் உடனே அனுமதிக்கப்பட்டான்.

அம்பிகா தேவாவை, தானே மருத்துவமனையில் உடன் இருந்து கவனித்துக் கொள்வதாகக் கூறி, மகனுடன் தங்கிக் கொண்டார்.

இடைப்பட்ட நாளில், ஒரு முறை சென்று தனது தமையனை மருத்துவமனையில் பார்த்து வந்திருந்தான், யுகி.

முருகானந்தத்தின் தோண்டித் துருவும் கேள்விகளில் இருந்து தப்பிக்கவே சென்றிருந்தான்.

தேவா இல்லாத வீட்டில், குழந்தைகளோடு சற்று இயல்பாக இருந்தவனிடம், மதிய உணவை ஏற்பாடு செய்து, மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டி, “இந்தச் சாப்பாட ஆஸ்பத்திரியில போயி அத்தைகிட்ட குடுத்துட்டு வந்துருங்க”, என்று யாழினி யுகேந்திரனிடம் கொடுக்க,

“நீயே போயிட்டு வந்திரு”, என்று மனைவியைக் கண்கொண்டும் பாராமல், பழகாத புதிய நபரிடம் பேசுவதுபோல, விட்டேற்றியாகச் சொன்னவனை பார்த்தவள், “நாந்தான் அன்னிக்கே போயி பாத்துட்டு வந்தேனே.  இன்னைக்கும் ஆஸ்பத்திரிக்கு நான் எதுக்கு!  நீங்களே போயி குடுத்திட்டு வந்திருங்களேன்”, என்று கெஞ்சும் குரலில் மீண்டும் கூறினாள்.

“அம்மா வயசானவங்க…! தேவாவுக்கு இப்ப இருக்கிற நிலைமையில, அம்மாவை மட்டும் நம்பி, அவனைவிட முடியாது.  அதனால அவன் ஹாஸ்பிட்டல்ல இருக்குற வரை… நீதான் அவங்கூட இருந்து கவனிச்சுக்கணும்.  நான் பிள்ளைங்கள பாத்துக்கறேன்.  நீயே ஹாஸ்பிடல்கு சாப்பாடு எடுத்துட்டுப் போ”, எனத் திடமாகக் கூறினான்.

“அத்தையால அவரைப் பாக்க முடியுது, இல்லை முடியல.  அதுக்காக நான் எப்டிங்க அவருகூட போயிருந்து பாக்க முடியும்?”, என்று கேள்வியோடு கணவனை நோக்க

“நீ பாக்காம, வேற யாரு பாப்பா?”, எனும் குரலில் வித்தியாசம் உணர்ந்தாள் பெண்.

“நீங்க என்ன அர்த்தத்துல இப்ப பேசுறீங்கனு நான் தெரிஞ்சுக்கலாமா?”, என்று தனது மனதில் இருந்ததை கணவனிடம் மறையாது கேட்டிருந்தாள் யாழினி.

“ஏன்னு உனக்கு காரணம் சொன்னாத்தான் போவியா?  இல்லைனா உனக்கே தெரியாதா?”, என்ற கேள்வியை முன்வைத்திருந்தான் அவள் கணவன்.

“எனக்கு உண்மையில தெரியல… நீங்களே சொல்லுங்க”, என்று யாழினி விடாது கேட்கவே

யுகேந்திரனின் பார்வை, யாழினியின் கழுத்தில் இருந்த அணிகலன்மீது போய்த் திரும்புவதைப் பார்த்தது.  கணவனின் பார்வை சென்ற இடத்தை நோக்கிய மனம், ஒரு நிமிடம் ஏன் என யோசிக்க, விடயம் விசமாகப் பிடிபட மனம் கொதித்தவள்,

“வந்து உங்ககிட்ட பேசிக்கிறேன்”, என்று உக்கிரகாளியாக கிளம்பியிருந்தாள். உள்ளம் உலைகலன்போல கொதிக்க, மதிய வெயிலின் தாக்கம் தெரியாதவளாக, உணவை எடுத்துக் கொண்டு நடந்தே மருத்துவமனைக்கு கிளம்பிவிட்டாள் யாழினி.

‘சரியான சந்தர்ப்பம் கிடைக்கட்டும், மவனே உன்னை நாக்க பிடிங்கிட்டு சாகற மாதிரியில்லனாலும், நாக்அவுட் ஆகற அளவுக்கு, நிக்க வச்சு கேள்வி கேக்கல… நான் ராஜேஸ் மக யாழினி இல்ல…’, என மூச்சிரைக்க வேகநடை நடந்தபடி யோசித்தவள், ‘பொம்பிளைங்கன்னா இதுகளுக்கெல்லாம் கிள்ளுக்கீரையா?  நல்லா வளந்துருக்குக ரெண்டும் மலைமாடு கணக்கா, மாங்கா பசங்க’, என்று தனது மனதில் எழுந்த கனலால், மனதோடு, தேவா, யுகி இருவரையும் பாரபட்சமில்லாமல் வைது, மனம் இன்னும் தாளாமல், திட்ட வார்த்தைகளை யோசித்துக் கொண்டே நடந்து கொண்டிருந்தாள்.

‘எல்லாம் அந்தப் பெரிய ஊமைக் கோட்டான்னால வந்தது?  இத்தனை நாளா எங்குட்டோ இருந்தது, இப்ப திரும்பி வாண்டடா வந்து வாட்டர்ஃபால்ஸ் கணக்கா அழகா போயிட்டு இருந்த, என் வாழ்க்கைய சுனாமி மாதிரி வந்து புரட்டிப் போட்டுக் குழப்புது.

அவ பேரு என்னவோ… இல்ல… சமந்தாவா இல்லையே… ம்… ஆங்… சம்யுக்தா… அவளோட போயி சாம்ராஜ்யத்தை ஆளப் போறேன்னு, ராவோட ராவா ரஃப்பா ஒரு லெட்டர எழுதி வச்சிட்டு, ஊருல இருந்து எஸ்கேப் ஆனவருக்கு, அங்க என்ன ஆச்சுனு வேற தெரியலயே?

இவருக்கே ஆப்பா… இல்லை ஆளே எஸ்கேப்பானு தெரியலேயே.

தெரிஞ்சாலும், குடும்பமே வாயத் தொறக்காது.

ஒருத்தவன் ஊமையா இருந்து, ஊருக்கு முன்ன நிக்க வச்சான்.  இன்னொருத்தவன் பேசியும், பேசாமலும் கொண்டதோட… வாய்க்கொழுப்பில்ல… அது கண்ணுக் கொழுப்புன்னு சொல்லணும்.  இத்தனை நாளு நல்லவன் வேசம் கட்டினவனை, எவனும் நல்லவன் இல்லைனு புரிய வச்ச காலத்துக்குத்தான் நான் நன்றி சொல்லனும்.

இல்லைனா, மனசுக்குள்ள கோயில் கட்டி, இந்த மனுசனுக்கு மனசாலேயே, அபிசேகம், ஆராதனையின்னு, பூனை கணக்கா இருந்திட்டுருந்திருப்பேன்.

கடவுள் காப்பாத்த வராரோ இல்லையோ, இனி இதுகளை நம்பி ஈஈன்னு இருந்திரக்கூடாது.

இனிமேலாவது உசாரா பொழைச்சுக்கனும்.

நமக்குன்னே ஒன்னுக்கு, ரெண்டு புள்ளைய பெத்ததோட இல்லாம, என்ன தொல்லைய இப்ப இந்த அத்தை இழுத்து விடப்போகுதுன்னு தெரியலயே?’, என்று எண்ணியபடியே மருத்துவனையை நெருங்கியிருந்தாள் யாழினி.

‘டிவோர்ஸ் எல்லாம் வாங்கித்தான், இந்த துரை தலையில கட்டுனாங்க!

இன்னும் எதுக்கு அந்தப் ஊமையோடவே, என்னை லூசு துரை கோர்த்து விடுதுனு, அதுக்குத் தெரியுதோ என்னவோ? ஆனா எனக்கு நிஜமா புரியல! 

இவனுகளைக் கண்டாலே வரவர காண்டாகுது.  நிம்மதியா எங்கிட்டாவது ஓடிரலாமான்னுகூட இருக்கு!’, என நினைத்தவள்,

‘அப்டி ஓடினா… அத்தோட… இன்னும் இவங்க இஷ்டத்துக்கு ரீலை ஓட்டிருவானுக.  நின்னு வாழ்ந்து காட்டனும், யாழினி யாருனு?’, என்று தனக்குள் தைரிய விதையை விதைத்துக் கொண்டாள்.

‘ஊமை ஓடிப்போனப்ப, அங்க அப்டி என்னதான் நடந்துச்சுன்னு தெரியல, இனி என்ன நடக்கும்னும் தெரியல, ரெண்டுல ஒன்னு இன்னிக்கு தெரிஞ்சிக்கிட்டுத்தான் இந்த வீட்டுக்குள்ள திரும்ப வருவேன். 

இல்லைனா, இனி இந்த வீட்டு வாசப்படிய மிதிக்க மாட்டா, இந்த யாழினி’, என்ற மனதில் எடுத்திருந்த புதிய சங்கல்பத்தோடு, மருத்துவமனைக்குள் நுழைந்திருந்தாள் யாழினி.

மனதால் எத்தகைய நற்குணம் படைத்தவளையும், சூழல், மனிதர்களின் செயல்கள் மாற்றிவிடும் மாயம் காலத்திற்கே உரியது.

யாழினி எனும் யட்சனி, தேவாவின் வருகைக்குப்பின், தனது வாழ்வினை பீடித்த சனி என யுகேந்திரனை நினைக்க வைத்திருந்தது.

தலையணையாக நினைத்து பாம்பை தலைக்கடியில் வைத்து உறங்குவது தெரியாமல் உறங்கினால் நிம்மதி.

அதையே, உறங்கும் முன் கூறினால், உண்டாகும் நிலையை யுகேந்திரன் தேவாவின் வருகைக்குப்பின் அடைந்திருந்தான்.

உள்ளங்களில் உண்டாகும் துன்பங்களுக்குரிய காரணத்திற்கு, அடுத்தவர்களின்மீது பழிபோட்டு வளர்ந்து பழகிய சமுதாயம் இது.

இன்பம் ஒன்று வந்தால், அதற்கு முழுப்பொறுப்பும் தனக்கே என மார்தட்டிக் கொள்ளும்.

தீதும் நன்றும் பிறர்தர வாரா எனும் உண்மை உணர்ந்தவன் ஞானம் பெறுகிறான்.

வாழ்வை இன்பமாகக் கழிக்கிறான்.

யாழினி என்ன செய்யப் போகிறாள்?

அவளது சங்கல்பம் நிறைவேறியதா?

அடுத்த அத்தியாயத்தில்…

**********************