10a

மகிழம்பூ மனம்

மனம்-10(A)

யுகேந்திரனால், தேவாவின் வருகையை ஒரு சகோதரனாக மனமுவந்து ஏற்றுக் கொண்ட அளவிற்கு, தனது மனைவியின் முன்னால் கணவன் என்ற நிலையில் ஏற்க இயலவில்லை.

வேறு இடத்தில் தேவா தங்கியிருந்திருந்தால் கூட, இத்தகைய குழப்பம் யுகேந்திரனுக்கு நேர்ந்திருக்காதோ? என்னவோ?

பெருங்குழப்பம் மனதில் வந்து கூடாரம் இட, மனம் முழுக்க ரணமாக உணர்ந்தான்.

தேவாவின் ஓய்ந்து வந்த தோற்றம், அவனை மேலும் நிலைகுலையச் செய்திருந்தது.

அவசியமான பேச்சுக்களைத் தவிர, நண்பர்களாக இதுவரை பேசியறியாத நிலையில், கடந்துபோன பத்து ஆண்டுகளில் தேவா என்ன செய்தான் என்ற கேள்வியை, சகோதரனிடம் நேரடியாகக் கேட்கவும் முடியாமல், அவனுக்கான உரிய நியாயம் கிடைக்கச் செய்ய முடியாத, தனது நிலையை எண்ணி வருந்துகிறான்.

தேவாவைப் பற்றிய எண்ணங்களை ஒதுக்கி, மேற்கொண்டு தனது பணிகளில் முழுக்கவனம் செலுத்த முயன்று தோற்கிறான். வேறு என்ன செய்யலாம் என யோசித்தே, இயலாமல் ஓய்ந்து போகிறான்.

மனைவி, மக்களோடு இயல்பாக இருக்க, மனம் விரும்பவில்லை.

மனைவி அருகில் வரும்போது, மாற்றான் மனையாளை மறைந்து பார்க்கும் கேவலமான உணர்வு எழுவதை, மாற்றிக்கொள்ள இயலாமல் மனதோடு மன்றாடுகிறான்.

அதனால் மனைவியை பார்வையால் சாடுகிறான். செயல்களினால் எட்டி நிற்கச் செய்து, மனம் இலகுவாகிறான்.

அறிவுக்கு அனைத்தும் புரிந்தாலும், மனம்… இது தவறோ, அது தவறோ என எங்கோ இழுத்துச் சென்று, இன்னல் தருகிறது.

இயன்றவரை, தற்போதைய குழப்பமான குடும்ப சூழலை மறக்க, பணியோடு மூழ்கிப் போகிறான்.

கோடைவிடுமுறை துவங்கிவிட்ட நிலையிலும், யாருமில்லா கடையில் தேநீர் ஆற்றுவதுபோல, தன்னந்தனியே அலுவலகம் சென்றமர்ந்து, பிறர்பணிகளை இழுத்துப்போட்டுச் செய்து, களைக்கிறான்.

பசி எனும் உணர்வை மறந்து, அமர ஏதுவான இடம் கிடைத்தால் நேரக்கணக்கில் அமர்ந்து சிந்திக்கின்றான்.

சிந்தனை முழுக்க, தேவா மட்டுமே வியாபித்து இருக்கிறான்.

***********

யாழினி ஓரிரு நாட்களில் இயல்புக்கு வந்திருந்தாள்.  மிகுந்த யோசனையுடன் அந்த நாட்களைக் கடந்திருந்தாள்.

தேவா தன்னை விட்டுச் சென்றபோது, தான் உணர்ந்த அனாதரவான உணர்வு, எதிர்காலம் பற்றிய பயம், வலி, வேதனை போன்றவற்றை இன்று நினைத்தாலும், உடல் சிலிர்க்கிறது.

ஆனால் அவனை தற்போது கண்ட முதற்கணத்தில் உண்டான, மனதின் பதற்றம் வார்த்தைகளுக்குள் அடங்காதது.

தொட்டாச்சிணுங்கியாக சுருங்கிய உணர்வுகளை, இயல்புக்கு கொண்டு வருவதற்குள், இரண்டு நாட்கள் ஆமை வேகத்தில் கடந்திருந்தது.

தற்போது, பழைய நாட்களை அசைபோட்டபோது, அப்போது ‘நிரம்ப அசட்டுத்தனமா இருந்தோமோ’, என எண்ணத் தோன்றியது.

பக்குவம் இல்லாத வயதில், ஏதோ திரைப்படத்தில் கண்ட காட்சியைப் போல, பகலவனின் உக்கிரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து போகக் கூடிய பனியைப் போன்றே, பழைய நிகழ்வுகளைப் பற்றிய தனது எண்ணங்கள் யாழினிக்கு இருந்தது.

ஆனால் அந்த நாட்களுக்கும், தற்போதைய தனது தடுமாற்றம் நிறைந்த இந்த ஒரு வாரத்திற்கும், ஆயிரம் மடங்கு வித்தியாசத்தை பெண் உணர்ந்தாள்.

தலையே போன உணர்வை அப்போது உணர்ந்தவள், தற்போது அத்தகைய எந்த உணர்வையும் உணராமல், தைரியமாகவே இருந்தாள்.

நிச்சயமாக தேவா மீது இன்றைய நிலையில், எந்த காழ்ப்புணர்ச்சியோ, வஞ்சினமோ இல்லை.

ஆனால் வருத்தம் இருப்பதாகவே உணர்ந்தாள்.  அதை அடியோடு மனதிலிருந்து அப்புறப்படுத்த, தன்னால் இயலுமா எனத் தெரியாமல் பெண் இருந்தாள்.

மாமியாரின் முகமலர்ச்சியைப் பார்த்தவளுக்கு, ‘இத்தனை நாளா, அத்தை நம்மளை ஏமாத்திட்டு, சிரிச்சுக்கிட்டே சும்மா வளைய வந்திருக்காங்க.  மகனைப் பாத்தவுடனே மனசுல வந்த சந்தோசம், தெம்பு அவங்களையும் மீறி, முகத்துல பளிச்சுனு, இப்ப தெரியுது. இவ்வளவு வருசமா அது மிஸ்ஸிங்குனு இப்பத்தான் எங்கண்ணுக்குத் தெரியுது!’, என்பதாகவே உணர்ந்தாள்.

தனக்காக எவ்வளவோ பார்த்து, பார்த்து செய்தவர்கள் என்ற நன்றியுணர்வு நிறையவே இருந்தது.  இன்னும் இருக்கிறது.  இனிமேலும் அது மாறாது என்பது திண்ணம்.

மாமியார், யாருக்காகவும், தன்னை மாற்றிக் கொள்ளவோ, பிறர் என்ன நினைப்பார்களோ என்ற தயக்கமோ இன்றி, ‘இப்படித்தான் நான்’, என சந்தோசமாக, இளவயதினரைப் போல சுறுசுறுப்புடன், முகம் நிறைந்த அழகிய இளநகையோடு, வளைய வந்தவரைப் பார்த்தவளுக்கு, ஏனோ பாவமாகக்கூடத் தோன்றியது.

‘எத்தனை புள்ளை ஒரு தாயிக்கு இருந்தாலும், ஒவ்வொரு புள்ளையும் ஸ்பெசல்தான்போல!

பெத்த மனசு, கண்ணு முன்னுக்கு இருக்கிற புள்ளையவிட, கண்ணுக்கு காணாத தூரத்தில இருக்கிற புள்ளைய நினைச்சே ஏங்கும் போல!

இத்தனை வருசமும், பெரிய மகன் இல்லாத ஏக்கத்தை மனசுல மறைச்சுட்டு, கண்ணுக்கு முன்ன இருந்த சின்ன மகனுக்காக வாழ்ந்திருக்காங்க.

ஒத்தைக் கண்ணை இழந்தும், அதைப் பெரிய குறையா நினைக்காம இதுவரை வாழ்ந்தவங்க… இனியாவது ரெண்டு கண்ணுலயும் பார்வை கிடைச்ச சந்தோசத்துல வாழட்டும்’, என்ற எண்ணம் மட்டுமே யாழினிக்கு வந்து போயிருந்தது.

********

மாமனாரின் நடவடிக்கையை உற்றுக் கவனித்தவளுக்கு, அவர் செயல்பாடுகளில் வந்திருந்த தயக்கம் அவளைத் தயக்கியது.

தனக்காக எவ்வளவோ பார்த்து பார்த்து, நல்லது செய்தவர் அவர். பெற்ற பிள்ளையை விடமுடியாமல், மருமகளுக்கு உண்டான அன்றைய அநீதிக்கு, இன்று தண்டனை குடுக்க முடியாமல், தன்னைத்தானே மனதால் தண்டித்துக் கொண்டு, வருத்தத்தோடு உலா வருவதை, அவரின் முகம் பார்த்தே உணர்ந்திருந்தாள்.

***

தேவா, தன் கணவனாக இருந்தபோதே, தன்னை வேறுமாதிரி எண்ணத்தில் பார்க்காதவன்.

தற்போது அதற்குமேல் ஒருபடி சென்று, ஒரு யோகி போல,  கண்களை மூடியே, பெரும்பாலும் படுத்திருந்தவனை பார்த்தவளுக்கு, ‘அவருக்கு என்ன கஷ்டமோ? இப்டி ஒரு நிலைக்கு வந்திட்டாரு! பாவம்!’, என்ற வருத்தம் மட்டுமே மனதில் தோன்றி மறைந்தது.

பிள்ளைகளிடம் கூட அவசியத்திற்கு ஓரிரு வார்த்தைகள் என்றளவில் நின்று கொண்டான்.

பெரியவர்களின் கேள்விக்கு, வாயிற்குள் பதிலை வைத்திருப்பான்.  அவன் பேசும்போது, அங்கு நின்றாலும் தொண்டைக்குழியை விட்டு வெளிவராத அவன் வார்த்தைகள், யாழினியின் காதுகளை இதுவரை எட்டியதில்லை. 

முன்பைவிட நான்கில் ஒரு பகுதியாக இளைத்து, கருத்திருந்தான் என்பதை கணித்தவளுக்கு, அவனைக் கருத்தாகக் கவனிக்க தோன்றவுமில்லை.

*************

திருமணமான தம்பதியரிடையே தடைக்கல்லாக தான் வந்திருப்பதாக எண்ணிய தேவாவிற்கு, வீட்டிலிருந்து வெளியே செல்லும் உந்துதல் தோன்றினாலும், உடல்நிலை அதற்கு ஒத்துழைக்கவில்லை.

தாயாரின் கவனிப்பு அவனைக் கண்கலங்கச் செய்திருந்தது.  தான், தனது என்ற எண்ணத்தால் வெளியேறிச் சென்ற தனது மடத்தனத்தை எண்ணி காலங்கடந்து வருந்தினான்.

தந்தை எப்போதும் கண்டிப்பு மிகுந்தவர் என்று பார்த்து வளர்ந்தவனுக்கு, தன்னை இன்னும் சின்னப்பிள்ளையாக எண்ணி, ‘சாப்பிட்டியா?’, என நேரத்திற்கு வந்து கேட்பதும், ‘என்னாச்சு’, ‘என்ன நடந்தது’, ‘ஆஸ்பத்திரில போயி உடம்பு ஒரு ஃபுல் செக்கப் பண்ணிருவோமே’, என்று யாருமில்லாத நேரங்களில் வந்து பேசும்போதும், கூனிக்குறுகிப் போனான்.

வயோதிக காலத்தில் தான் அவரை அங்ஙனம் கவனித்திருக்க வேண்டும்.  ஆனால் காலங்கடந்தும், அவருக்கு பாரமாக தான் இருப்பதை எண்ணி, வெட்கப்பட்டான்.

குழந்தைகளைப் பார்த்து, இளவயதில் தன் தம்பியுடன் வளர்ந்த நிகழ்வுகளை நினைத்துப் பார்த்து, இன்றைய தலைமுறையின் அதிவேக பேச்சாற்றல், இதர இன்றைய நவீன தொலைதொடர்பு சாதனங்களுக்கு இடையேயான அவர்களின் புரிதலை, அதீத அறிவாற்றலை எண்ணி வியந்தான்.

யாழினி என்பவளை என்றுமே அவன் மனம் கருத்தில் கொள்வதில்லை.  ‘கருத்துகளுக்கு அப்பாற்பட்ட கண்ணியமானவள்’, என்பதைத் தவிர அவளைப் பற்றி அவன் யோசித்ததில்லை.  அதில் இன்றுவரை எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தான்.

**************

காதல் கணவனாக சில நாட்களுக்கு முன் மாறியிருந்த யுகேந்திரனை மட்டுமே, அவளால் சமாளிக்க இயலாமல் திண்டாடினாள்.

இயல்புக்கு அவளை வரவிடாமல், திக்குமுக்காடச் செய்திருந்தான்.

கணவனின் உதாசீனம் அவளை வாட்டியது.  எதையோ இழந்தது போன்ற உணர்வினைத் தந்தது.

எப்போது வீட்டிற்கு வருகிறான், எப்போது வெளியே செல்கிறான் என யாருக்கும் பிடிகொடுக்காமல் இருந்தவனை, என்னவென்று கேட்க அவளால் முடியும்? என்கிற நிலையில் இருந்தாள்.

குழந்தைகள் கூட குடும்பத்தின் சூழலை அறிந்து, விளையாட்டுத்தனத்தை, சுட்டித்தனத்தை குறைத்து அமைதியாகி இருந்தனர்.

தனது மகள் தியாஸ்ரீயைக் கூட தவிர்த்த கணவனைக் காணும்போது, ‘சின்னப்புள்ளைக்கிட்ட எல்லாம் இவரோட மனசுல உள்ளதைக் காமிக்கணுமா?  என்ன மனுசரு இவரு?’, என்று கோபமும் வந்து போனது.

சிலமுறை கேட்டும் இருந்தாள்.  அதற்கும் எந்த பதிலும் சொல்லாமல், முறைப்பைப் பதிலாக்கிச் சென்றவனை, முற்றிலும் புதிய பரிணாமமாகவே பார்த்தாள்.

கணவனை ஓரிரு வார்த்தைகள் தன்னோடு, பேசச் செய்வதற்கு அரும்பாடுபட்டாள்.

எதையும் அமர்ந்து, நிதானமாகப் பேசித் தீர்க்கலாம் என்பது பெண்ணின் எண்ணம்.  இனி நமக்குள் பேச என்ன இருக்கிறது? என்பதான தனது வாதத்தை நடவடிக்கையின் மூலம் நிலைநாட்டி வந்தான், யுகேந்திரன்.

மனதை ஒருமுகப்படுத்த இயலாதபடிக்கு, யுகேந்திரனின் மாறுபட்ட செயல்கள், பெண்ணின் மனதைத் தைக்க, ‘திக்கற்றவருக்கு தெய்வமே துணை’, என பெண் கோயிலை நாடத் துவங்கியிருந்தாள்.

*************

தேவா, தனது உடல்நிலையைக் காரணம் காட்டி, ஹாலிலேயே தங்கிக் கொள்வதாகக் கூறிவிட்டான்.  ஆகையால் பெரியர்கள் இருவரும் ஒரே அறையில் தங்கிக் கொண்டனர்.

மருமகளை நீண்ட நேரமாகக் காணாததால், “ஏன்மா அம்பி! நம்ம மருமகப் புள்ளைய… ரொம்ப நேரமாக் காணலையே?”, பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டவள், உடனே மாமியாரிடம் கூறிக்கொண்டு கோவிலுக்கு கிளம்பியிருந்தாள்.

கணவனை மேலும் கீழும் ஒரு பார்வை பார்த்தவர், “ம்… இப்பத்தான பசியாருனீங்க! அதுக்குள்ள எதுக்கு மருமகளைத் தேடுறீங்க?”, என்றவர் அங்கிருந்த கடிகாரத்தில் மணி பார்த்தார்.

மணியை அறிந்து கொண்டவர், அர்த்தப் பார்வை ஒன்றை கணவனை நோக்கி வீசியபடியே, “பதினோரு மணி ஆனவுடனே டீ கேக்குதாக்கும்!”, என்று நொடித்துக் கொண்டார் அம்பிகா.

“அது வேலை பாத்த காலத்துல பழகின பழக்கம்டீ,  அதைவிட முடியலங்கறதை ஒத்துக்கறேன்.  ஆனா இப்ப டீக்காக மட்டும் மருமகளைத் தேடல!”, என்று முருகானந்தம் கூற,

அதை மனைவி நம்பவில்லை என்பதை அவரின் பார்வையாலேயே உணர்ந்தவர், “ஊருக்கு போயிட்டு வந்ததுல இருந்து, அந்தப் புள்ளை முகமே சரியில்ல!”, என்று மருமகளைப் பற்றிய தனது கணிப்பை சற்று கவலையோடு மனைவியிடம் கூறினார்.

கணவன் யூகித்தது சரிதான் என்று மனம் உணர்ந்தாலும், அதைப் பற்றி மூச்சுவிடாமல், “கோயிலுக்குப் போறேன்னு போச்சு… இப்போ வர நேரந்தான்…!”, என பெருமூச்சை வெளியிட்டவாறு அம்பிகா கூறினார்.

“இன்னிக்கு, வெள்ளி, செவ்வாய் கூட இல்லையே?”, பெரும்பாலும் இந்த இரண்டு கிழமைகளில்தான் பெண் கோவிலுக்குச் சென்று வந்ததைக் கண்டிருந்தவருக்கு, இன்று ஏதோ மனதில் வித்தியாசமாகப்பட, உடனே மனைவியிடம் கேட்டிருந்தார் முருகானந்தம்.

“நாளு, கிழமை பாத்துட்டா… மனுசளுக்கு எல்லாம் வருது.  ஏதோ அந்தப் புள்ளை முகமே ஊருக்குப் போயிட்டு வந்ததில இருந்து சரியில்லனு, இப்பத்தானே நீங்க சொன்னீங்க!”, தான் எல்லாம் அறிந்திருந்தும் அறியாததுபோல, அம்பிகா பேசியதை உணர்ந்தே இருந்தார் முருகானந்தம்.

’இப்பவும் ஆமானு ஒத்துக்கிறாளானு பாரு, பயபுள்ள வாயிக்கு மேல இருக்குற மூக்கை, வண்டிமாடு கட்டி, வாடிப்பட்டி சுத்திட்டு போயிதான் தொடுவேன்னு நிக்குது’, என மனைவியைப் பற்றி, தனது மனம் சந்தோசமாகச் சாடினாலும், “பெத்த பாசம், மத்த பாசத்தை எல்லாம் அடிச்சு விரட்டிருதுல்ல!”, என்று மனதில் தோன்றியதை மனைவியிடம் கேட்டிருந்தார் அந்த மனக்குமுறலுக்கு உள்ளான மனிதர்.

கண்களை இடுக்கியவாறான பார்வை ஒன்றை கணவனை நோக்கி வீசியவர், “என்ன பேசுறீங்கனு புரிஞ்சுதான் பேசுறீங்களா?  வயசாச்சே தவிர… என்ன பேசுறோம்னு தெரியாம வாயில வர்றதைப் பேசுறீங்க!

தேவா எம்மகன்னா, யுகி வேற யாரோவா எனக்கு?

ம்… சொல்லுங்க.. தெரியாமதான் உங்ககிட்ட கேக்கறேன்”, என்று சத்தம் மேலெழும்பிய குரலில் கணவனிடம் பேச ஆரம்பித்திருந்தார் அம்பிகா.

“…”, பதில் எதுவும் பேசாமல் அமைதி காத்தார்.

கணவரின் அமைதியில் சற்றே தணிந்த அம்பிகா, “யாழினிய எப்போ நான் வேறயா பாத்தேன், யுகிகூட வேலைல நம்ம மறந்து போனாலும், அந்தப்புள்ள நம்மை என்னிக்குமே விட்டுக் கொடுக்காதுன்னு தெரியாதவளா நானு?”, என்று கேள்வியோடு கணவனின் முகத்தைப் பார்த்துவிட்டு, “பெறாத மக அது”, என்று நா தளுதளுக்க கூறினார்.

“அதேநேரத்துல, தேவாவும், யுகியும் எனக்கு ரெண்டு கண்ணு மாதிரி.  அதுக்காக ஒரு கண்ணை தெரிஞ்சே இழக்க… எப்டிங்க பெத்தவளுக்கு மனசு வரும்”, என்று கணவனிடம் நியாயம் பேசினார் அம்பிகா.

“உன் நியாயம் உனக்கு வேண்ணா சரின்னு படலாம்.  ஆனா அந்தப் புள்ளையப் பெத்தவங்களையும் கொஞ்சம் யோசி, அந்தப் புள்ளையோட நிலைமையையும் யோசி”, என்று எடுத்துக் கூறினார் முருகானந்தம். 

“தலை வலியும், வவுத்த வலியும் தனக்கு வந்தாதான் தெரியும்னு ஊருக்குள்ள ஒரு வார்த்தை சொல்லுவாங்க.

பெத்த எனக்கு எம்புள்ளைகளை இட்டு வலியிருக்கு. வேதனையிருக்கு.

என் வலி தீரத்தான், நான் முதல்ல மருந்து சாப்பிடனும்.

ஊருக்குள்ள இருக்குறவுகளுக்கு வர நோவுக்கெல்லாம் என்னால என்ன செய்ய முடியும்?”, என்று முனகினார்.

தன்னை கணவர் புரிந்து கொள்ளாமல் பேசுவதாக எண்ணி, அம்பிகா அவ்வாறு கூறியிருந்தார்.

“நான் என்ன இப்பத் தப்பா சொல்லிப்புட்டேன்னு முனங்குற… உம்புள்ளை எவ்வளவு பெரிய கேவலத்தைப் பண்ணியிருந்தாலும், நாம அவனையிட்டு எம்புட்டு அசிங்கப்பட்டிருந்தாலும் அதையெல்லாம் மன்னிச்சு ஏத்துக்கச் சொல்லுதுல்ல, இந்த மானங்கெட்ட மனசு!”, என்று மனைவியிடம் கேட்க,

“நீங்களே ஏக்கத்தோடதான் அன்னிக்கு அவனைப் பாத்து, கண்ணெல்லாம் கலங்க, வான்னு வீட்டுக்குள்ள கூப்டீங்க”, என கணவனின் செயலைக் கண்டு கொண்டதைக் கூறினார் அம்பிகா.

“அந்த நேரத்துல புள்ளைய வீட்டுக்குள்ள கூப்பிட்டது தப்பில்ல…! ஆனா மருமக வரதுக்குள்ள தேவாவை தங்க வைக்க, மாற்று இடத்தை ஏற்பாடு பண்ணாம விட்டதுதான் நம்ம பண்ண பெரிய தப்பு.

அதை இப்போ நினைச்சா, மெத்தனமா நாம இருந்திட்டமோனுதான் மனசு கிடந்து அடிச்சுக்குது!”, என்று தேவா திரும்பிய நாளன்று, தாங்கள் இருவரும் யுகேந்திரனின் குடும்ப வாழ்வைப் பற்றி யோசியாமல் செய்த மெத்தனமான செயலினால், தற்போது உண்டாகும் விளைவிற்கு, பொறுப்பேற்றுக் கொண்டு, பழியை தங்கள் மீது போட்டிருந்தார், முருகானந்தம்.

சாந்தமே உருவானராக இதுவரையிருந்த அம்பிகா, கணவனின் வார்த்தையில் வெகுண்டு, “நான் என்ன அவசரப்பட்டேன்? மெத்தனமா இருந்தேன்னு வேற சொல்லுறீங்க? சொல்லுங்க… தெரியாமத்தான் கேக்குறேன்”, என்று ஆவேசமாக கேட்க

“எதுக்கு கோவப்படறம்மா, பேசிட்டுத்தான இருக்கோம்.  இப்போ என்ன நடந்து போச்சுன்னு சலங்கையில்லாமலேயே எங்கிட்ட குதிக்கிற!”, என்றவர், “தேவாவை அன்னிக்கு ஒருநாள் இங்க தங்கவச்சதோட, அடுத்த நாளே, நம்ம கிராமத்து வீட்டுல போயிகூட தங்கச் சொல்லியிருக்கலாம்”, என்று முருகானந்தம் கூறினார்.

“என்ன கூறுகெட்டதனமா பேசிட்டு இருக்கீங்க? எப்படியும் அந்த ஊருக்குள்ள அவன் போகணும்னா முதல்ல பிராது குடுக்கனும். 

குடுத்தத ஊருல உள்ளவுக விசாரிக்கறேங்கற பேருல… எல்லாத்தையும் கிண்டிக் கிழங்கெடுப்பாங்க…,

எல்லாத்தையும் அவனுககிட்ட சொல்லி, எம்புள்ளைய ஊருல உள்ள நண்டு, சிண்டெல்லாம் பாத்து பரிகாசம் பண்ணி, அப்டிபோயி அந்த வீட்டில தங்கி இருக்கனும்னு அவனுக்கென்ன தலையெழுத்தா? 

அவன் வாங்கிப் போட்ட வீடு, சிலாவத்தா இங்க இருக்கு.  அவனுக்கே ஆகலைன்னா இந்த வீடு, அவனுக்கு எதுக்கு?”, என்று கணவனிடமே மகனுக்காக வக்காலத்து வாங்கியிருந்தார் அம்பிகா.

“என்ன சொல்ல வர அம்பிகா? எப்டினாலும் தேவா வந்ததை ஊருக்குச் சொல்லனும்தானா?”, கேள்வியாக நிறுத்தினார்.

“சொல்லி… நீங்க நல்லவரு பட்டம் வாங்க… எம்புள்ளையா கிடைச்சான்”, என்று எதிர்கேள்வி கேட்டிருந்தார் அம்பிகா.

“அப்ப தேவா வந்தத ஊருக்குச் சொல்லாம எப்பிடி இருக்கறது?”, புரியாமல் கேட்டார் முருகானந்தம்.

—————–