Kaadhal Diary – 3

17-1429246427-okkanmanireview

அர்ஜூனின் குடும்பம்

மேகங்கள் கைதொடும் தூரத்தில் இருப்பதுபோல ஒரு பிரம்மையை உருவாக்கியது. அப்போது தனித்து பறக்கும் பறவை ஒன்று வானில் வேகமாக பறப்பதைக் கண்டாள். அந்த விமானத்தின் ஜன்னலோரம் அமர்ந்திருந்தவளின் மனமெல்லாம் அவனின் மீதே இருக்க கண்களில் கண்ணீர் வழிந்தது.

அவளைச் சுற்றி அத்தனை பேர் இருந்தும் தனித்து இருப்பது போன்றொரு எண்ணம் மனதில் உருவெடுக்க சீட்டில் சாய்ந்து விழிமூடினாள்.

“ஹலோ ஐ எம் அர்ஜூன்” என்ற அவனின் குரல்கேட்டு அவள் விழிதிறந்து பார்த்தாள். அவளுக்கு அருகே அமர்ந்திருந்தவனின் வலுவான தோள்களுக்கு ஏற்றாற்போல் ஐந்தடி உயரமும், வசீகரமான முகத்தில் தோன்றி மறைந்த புன்னகை கண்டாள்.

“நான் கண்ணுக்கினியாள்” என்றவள் தன்னை பெயரை கூற அவனின் பார்வை அவளை அளந்தது. சந்தனநிற மங்கைக்கு பொருத்தமாக லாவண்டர் கலரில் இருந்த லாங் டாப்பில் மஞ்சள் நிற ரோஜாக்கள் தெளித்து போல அங்கங்கே காணப்பட வலது கையில் வாட்ச்.

கையில் பெரிய டைரி மில்க் சாக்லேட் அண்ட் ரோஜா இரண்டையும் கையில் வைத்திருந்தாள். ஐந்தரை அடி உயரம் உடைய பாவைக்கு அளவான உடல்வாகு.

அவன் பார்வை தன்னை அளவிடுவது உணர்ந்து, “ஹலோ முகத்தைப் பார்த்து பேசுங்க” என்று அதட்டியவளின் குரலில் அதிகாரம் உணர்ந்து சட்டென்று நிமிர்ந்தான்

“எல்லாரோட பார்வையையும் ஒரே மாதிரி நினைக்காதீங்க இனியா” என்றான் வெடுக்கென்று.

“நான் உங்களை தவறா சொல்லலையே. முதல் முறை பார்க்கும் பெண்ணின் முகத்தை பார்த்துப் பேச சொன்னேன். இது எனக்கு தவறா தோணல..” அவளும் மனதில் பட்டத்தை பளிச்சென்று சொல்லிவிட்டாள்

“சூப்பர் இப்படித்தான் பேசணும். இனியா முதல் சந்திப்பில் என்னை இந்தளவுக்கு பேசிட்டிங்க. சோ நம்ம பேஸ்ட் பிரிண்ட்ஸாக இருக்கலாமா” என்று அவன் அவளின் முன்னே கை நீட்டினான்..

“ம்ம் இருக்கலாம்” என்றவள் அவனை கண்டுகொள்ளாமல் ஜன்னலோரம் திரும்ப நடுவானில் பறந்தது விமானம். இனியாவிற்கு இதுவொரு புதுமையான அனுபவம்.

அவளின் செய்கைகள் அணைத்து அர்ஜூனிற்கு அதிசயமாகவே இருந்தது. அவனைக் கண்டதும் வழிய வந்து பேசும் பெண்களில் இவள் மட்டும் தனித்து தெரிய அவளிடம் மீண்டும் பேச்சுக் கொடுத்தான்.

“நீங்க எங்கே போறீங்க” என்றவனை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு, “அமெரிக்கா” ஒரு சொல்லில் பதில் கொடுக்க அவனுக்கு பாறையில் முட்டுவது போலவே தோன்றியது.

“இனியா படிக்க போறீங்களா இல்ல வேலை விஷயமா?” என்று விடாமல் அவன் கேள்வி கேட்க, “அர்ஜூன் உங்க பிரச்சனை தான் என்ன?” என்றாள் அவள் நேரடியாகவே.

“கொஞ்சம் பேசிட்டு இருந்தா பொழுது போகும்” அவனும் ஆர்வமாகவே..

“உங்க டைம் பாஸ் ஆகலன்னா படுத்து தூங்குங்க, என் உயிரை வாங்காதீங்க” என்றவள் மீண்டும் திரும்பிக் கொண்டாள். அதன்பிறகு அவள் அவனின் புறம் திரும்பவே இல்லை.

“இனியா” என்ற குரல்கேட்டு அவளின் சிந்தனை கலைந்துவிட அர்ஜூனை நேரடியாக முறைக்க அவனோ சிரித்தான்.

“இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே இருக்க போறீங்க மேடம்?” என்றவனை அவள் கேள்வியாக நோக்கிட அவளின் கையில் சாப்பாட்டைக் கொடுத்த அர்ஜூனின் மீது அவளுக்கொரு நல்ல எண்ணம் வந்தது.

அவளின் பசியறிந்து உணவு கொடுக்க, “நன்றி” என்றவள் சாப்பிட தொடங்க மீண்டும் அவனின் நினைவு வரவே தன் எண்ணத்தை ஒதுக்கிவிட நினைக்க அர்ஜூனின் பேச்சு அவளின் கவனத்தை ஈர்த்தது.

“உன் பெயர் மட்டும் இனியான்னு நினைச்சேன், ஆனா நீ பேசற தமிழ் கூட அழகாக இருக்கு” என்றவன் இயல்பாக பாராட்ட, “இதில் என்ன இனிமை?” என்றாள் கேள்வியாக.

“இங்கே நம்மை சுற்றி பாரு முக்கால்வாசி பேர் தமிழர்கள்தான். ஆனா அவங்க இங்கிலீஷ்ல பேசறாங்க, நீ மட்டும் தான் தமிழில் நன்றின்னு சொல்ற” என்றவன் வசீகரமான புன்னகையுடன் 

“நம்ம தமிழர்தானே? அப்போ தேங்க்ஸ் அண்ட் ஸாரி சொல்வதை விட்டுவிட்டு நன்றி, மன்னிப்பு என்று பயன்படுத்தலாமே?” என்றவளின் பேச்சில் தமிழின் மீதான பற்று தெளிவாக புரிந்துவிட அர்ஜூனுக்கு கதிரின் நினைவுதான் வந்தது.

அவனும் இவளை போலவே தமிழ் என்றாலே விருப்பத்துடன் படிப்பான். அவனின் நினைவு வந்ததும் அர்ஜூனின் முகம் தானாக கனிந்திட, “என் உயிர்நண்பன் உன்னை மாதிரிதான் பேசுவான் இனியா” என்றான்

அவனை நிமிர்ந்து பார்த்தவளோ, “எங்க மாமாவுக்கு தமிழ் ஆர்வம் அதிகம், என் மாமா பேரு செழியன் அதேமாதிரி, என் மாமாபையன் பேரு கதிரோவியன், அவரோட தங்கை பேரு கலைதென்றல்” என்றவளின் இயல்பான பேச்சில் ஈர்க்கப்பட்டான் அர்ஜூன்.

எல்லாம் தெரிந்தும் எதுவும் தெரியாதது போல, “ம்ம் நல்ல தமிழ் ஆர்வம்” என்றவனிடம், “ம்ம் நீங்க உங்களோட குடும்பத்தைப்பற்றி சொல்லுங்க” என்றவள் ஆர்வத்துடன்

 “எனக்கு அப்பா இல்ல இனியா, அம்மாதான் வளர்த்தாங்க. சென்னையில் இருந்து வேலைக்கு அமெரிக்கா வந்தவன் இங்கேயே கல்யாணம் பண்ணி குடும்பத்துடன் செட்டில் ஆகிட்டேன். எனக்கு ஒரு பொண்ணு இருக்க அவ பேரு அமிர்தா” என்றவன் சொல்ல வியப்பின் உச்சத்தில் நின்றவளோ விழிவிரிய அவனை இமைக்காமல் பார்த்தாள்.

அவனுக்கு திருமணம் ஆகிவிட்ட உண்மையை அவளால் சத்தியமாக நம்பமுடியவில்லை. அதுவரை அவளின் பார்வைக்கு தவறாக தோன்றிய ஒருவன் இப்போது நல்லவனாக தெரிந்தான்.

“என் அம்மு உன்னை மாதிரியே இனியா, அதுதான் சொன்னேன் எல்லரோட பார்வையும் ஒரே மாதிரி இருக்காதுன்னு, அதுவும் நான் ஒரு பொண்ணுக்கு தகப்பன் என் பார்வையை நீ எப்படி தப்பா நினைச்சேன்னு இப்போ வரை புரியல” அவன் உண்மையை போட்டு உடைத்தான். முதல்முறை பார்த்த ஒருவனை தவறாக நினைத்த தன்னுடைய மடத்தனத்தை எண்ணி மனதிற்குள் நொந்துபோனாள்

 “அர்ஜூன் அண்ணா என்னை மன்னிச்சிருங்க. நான் குட்டி பொண்ணு தெரியாமல் பேசிட்டேன் இனிமேல் தவறாக நினைக்க மாட்டேன்” என்று அவள் வேகமாக வாயைப்பொத்தி மன்னிப்பு கேட்டாள்.

அவளின் ‘அண்ணா’ என்ற அழைப்பில் மனம் மகிழ, அவளின் செய்கை பத்து வயது பெண்ணுடன் ஒத்துபோவது கண்டு, “டேய் கதிர் ஒரு பத்து வயசு பொண்ணுக்கு யாருடா ஃபாரினில் படிக்க சீட் கொடுத்தது?”  தன்னை மறந்து கதிரின் பெயரை உளறிவிட இனியா வெடுக்கென்று நிமிர்ந்து,

“கதிர்மாமாவை உங்களுக்கு தெரியுமா அர்ஜூன் அண்ணா?” அதிர்ச்சியுடன் கேட்க, ‘ஐயோ இவனோட பெயரை உளறிட்டேனா?’ என்று மானசீகமாக தலையிலடித்துக் கொண்டான்.

அவள் பதிலுக்குக் காத்திருப்பது உணர்ந்து, “நல்லா தெரியும் இனியா. அவனும் நானும் ஒரு கிளாஸ்மெட் அண்ட் திக் பிரெண்ட்ஸ்” என்றவன் முகத்தில் அப்படியொரு சந்தோஷம்.

“உன்னை எங்க வீட்டில் தங்க வைக்க ஏற்பாடு பண்ணிருக்கான் கதிர். நீ படிப்பு முடிக்கிற வரைக்கும் எங்க வீட்டில் இருக்க போற” என்றான் அவன் கூடுதல் தகவல் போல.

தன்னை வெளிநாடு அனுப்பிய கோபத்தில் இனியா இருந்தாலும் கூட தன்னுடைய பாதுக்காப்பை மனதில் வைத்து உயிர் நண்பனின் வீட்டில் தங்கவைக்க ஏற்பாடு செய்த கதிரை நினைத்து அவளுக்கு பெருமையாக இருந்தது. 

“என் மாமாவுக்கு இவ்வளவு உதவி பண்றீங்க, ஆனா நீங்க எப்படி வெளிநாடு வந்தீங்க?” அவள் கேள்வியாக புருவம் உயர்த்தினாள்.

“நமக்கு கிடைக்காத ஒரு விஷயத்தை அடுத்தவங்களுக்கு கிடைக்கணும்னு நினைக்கிற குணம் இங்கே பலருக்கு இல்ல, ஆனா கதிர் மட்டும் அதுக்கு விதிவிலக்கு” என்றவன் பேசுவதில் இருந்தே தெரிந்தது அர்ஜூனின் ஆழமான நட்பு. 

“ஆமா இனியா உங்க மாமா அவன் படிக்க நினைத்த படிப்பை படிக்க வைக்க முடியாதுன்னு சொன்னது மட்டும் இல்லாமல், நீயே இனிமேல் உன் படிப்பை பார்த்துக்கோ என்றதும் அவனும் சரின்னு சொல்லிட்டு சென்னை வந்துவிட்டான்” என்றான்.

“அப்புறம் அவன் வெளிநாடு போக முயற்சிக்கல. அவன் படிக்க நினைத்த சிவில் என்ஜினியரிங் படிப்புக்கு பதிலா காலேஜ் லக்சரர்க்கு படிச்சான், ஆனா நான் சிவில் படிச்சிட்டு வெளிநாட்டில் வேலை கிடைச்சதும் வேண்டான்னு சொன்னேன் அவன்தான் என்னை வற்புறுத்தி அனுப்பி வெச்சான் இப்போ நான் நல்ல நிலையில் இருக்க அவனும் ஒரு காரணம்” என்றதும் இனியாவின் முகமே மாறிப்போனது.

ஏனோ கதிர் படிக்க நினைத்த படிப்பை படிக்க முடியாமல் போனதுக்கு தானும் ஒரு காரணமோ என்ற எண்ணத்தில் அவள் இருக்க, “இனியா என்னாச்சு” என்றான் அர்ஜூன் பதட்டத்துடன்.

அவனின் மனநிலை உணர்ந்து நிமிர்ந்தவளின் முகமோ குழப்பத்தில் இருக்க, “என்ன இனியா ஏதாவது பிரச்சனை?” என்று கேட்க அவளோ மறுப்பாக தலையசைத்தாள்.

“வேற என்ன?” என்றதும் அவனை நிமிர்ந்து பார்த்தவளின் முகம் குழப்பத்தை தத்தெடுக்க, “மாமா வேணும்னு அப்படி சொல்லல அண்ணா. கதிர் மாமாவுக்கு அப்புறம் நானும், தென்றலும் படிக்கணும் எங்க கல்யாண செலவு எல்லாத்தை மனசில் வெச்சு இப்படி சொல்லிட்டாரு. ஆனா அன்னைக்கு மாமா அப்படி சொன்னது எனக்கு பிடிக்கல. கதிர் மாமா படிக்கத்தானே ஆசைப்பட்டாரு. அதுக்கு ஏன் மாமா வேணான்னு சொன்னாரு எனக்கு புரியல” என்றாள்.

அவளின் குழப்பத்தை கண்ட அர்ஜூனுக்கு இந்த விஷயத்தை அவளிடம் சொல்ல விருப்பம் இல்லை என்றாலுமே அவளிடம் சொல்ல வேண்டிய சூழ்நிலை உருவானதை நினைத்து மனம் கலங்கினாலும் அவளிடம் உண்மையைக் கூறினான்.

“இனியா நீ விளையாட்டாக இருக்கிற,  ஒரு பத்து வயது குழந்தையிடம் உள்ள குணம்தான் உன்னிடம் வெளிப்படுது. ஆனா செழியன் அப்பா நீ அந்த வீட்டுக்கு வந்த அன்னைக்கு உன் திறமையைத் தெளிவா கணிச்சிட்டார், அதனால் தான் கதிரோட படிப்புக்கு அவர் சப்போர்ட் பண்ணல” என்றவனை அவள் கேள்வியாக நோக்கியவளின் மனதில் ஆயிரம் கேள்விகள் அணிவகுத்து நின்றது.

அந்த சிந்தனைக்குள் போனவளோ மீண்டும் அர்ஜூனுடன் பேசவில்லை. அவள் எதற்காக இப்போது அமெரிக்காவிற்கு அனுப்பி இருக்கின்றனர் என்று அவளுக்கு புரியாவிட்டாலும் தன்னை இவ்வளவு தூரம் அனுப்பி படிக்க வைக்கும் அவர்களுக்கு நாம் உண்மையாக இருக்க வேண்டுமென்று முடிவெடுத்தாள்.

அதன்பிறகு அவள் அமெரிக்கா மண்ணில் கால்பதிக்கும் வரை அர்ஜூனுடன் பேசவில்லை. அமெரிக்கா அட்லாண்டா ஏர்போர்ட்டில் வந்து இறங்கிய இனியா தன்னுடைய செக்கிங் முடித்துக்கொண்டு வெளியே வரும்போது, “நீங்க இனியாதானே” என்ற கேள்வியுடன் அவளை நோக்கி வந்தார் ஒரு வயதான தமிழ் பெண்மணி.

நடுத்தர வயதைத் தாண்டிவிட்ட அவரின் தோற்றம் கண்டு, “ம்ம் ஆமாம்மா” என்றவள் புன்னகைக்க, “கதிர் தம்பி உன்னோடு அர்ஜூனும் வருவதாக சொன்னானே? நீ மட்டும் வந்திருக்கடா? எங்கே என் மகன் அர்ஜூன்” என்றவரின் பார்வை அவளின் பின்னோடு தேடினார்.

“அண்ணா பின்னாடி வராங்க” என்றவள் பதில் கொடுக்க பாட்டியின் முந்தாணியைப் பிடித்தபடி மெல்ல எட்டிப்பார்த்த குட்டி பெண்ணின் குழந்தைதனத்தில் கவரப்பட்ட இனியா அவளை நோக்கி வா என்றழைத்தாள்.

அவள் கூப்பிட்டதும் ஓடிவந்தும் இனியா அவளை தூக்கி இரண்டு கன்னங்களில் முத்தம் பதிப்பதை பார்த்தபடி வந்த ஷர்மிளா, “வா இனியா கதிர் அண்ணா இந்தியாவில் இருந்து உன்னை இங்கே அனுப்புவதுக்குள் எங்களை ஒரு வழி பண்ணிட்டாரு. உன்மேல் அவ்வளவு அக்கறை” என்றவளின் குரல்கேட்டு பின்னாடி திரும்பிப் பார்த்தாள் இனியா.

அளவாக வெட்டப்பட்ட கூந்தலுடன் ஜீன்ஸ் பேண்ட், பிளாக் கலர் கோட்டுடன் ஐந்தடி உயரத்தில் அழகு பதுமையாக வந்து நின்றவளைப் பார்த்து பிரம்மிப்பின் உச்சத்திற்கே சென்றாள் இனியா.

அவள் சிரிக்க கன்னத்தில் விழும் குழியைக் கண்டு, “அக்கா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க? ஆமா அர்ஜூன் அண்ணா உங்களை லவ் மேரேஜ் பண்ணாங்களா?” என்று சந்தேகமாக அவள் கேட்க, “ஆமா” என்றாள் ஷர்மிளா.

“பின்ன அண்ணா அழகுக்கே ஆயிரம் பொண்ணுங்க க்யூவில் நிற்பாங்க, உங்க அழகுக்கு பார்த்து இதுக்குமேல் விட்டா நமக்கு முன்னாடி யாராவது முந்திப்பாங்க என்று அண்ணா உங்களை  லவ் பண்ணி சீக்கிரமே மேரேஜ் பண்ணிட்டாரு போல” என்று இனியா குறும்புடன் கண்சிமிட்டினாள்.

அதற்குள் அங்கு வந்து சேர்ந்த அர்ஜூனைக் கண்டு, “அப்பா வந்தாச்சு..” என்று ஓடிவந்த மகளை தூக்கிச்சுற்றி அவளின் ஆப்பிள் கன்னத்தில் முத்தமிட்டு, “அம்முவும் அப்பாவைப் பார்க்க ஏர்போர்ட் வந்தீங்களா?” என்றான்.

“ஆமாப்பா..” என்ற மகளின் தலையைச் செல்லமாக கலைத்துவிட்ட அர்ஜூன் மனைவியின் அருகே வரும்போதே அவள் பேசுவதை எல்லாம் கேட்டுவிட்டு, “என்ன ஷர்மி வந்ததும் இவளோட சேட்டையை ஆரம்பிச்சிட்டா போல” என்றான் அவன் மனைவியின் தோளில் கைப்போட்டபடி.

“ம்ம் ஆமாங்க..” என்ற ஷர்மியின் முகத்தில் கணவனைக் கண்டுவிட்ட சந்தோசம் தென்பட்டது. அவர்கள் இருவரும் எதுவும் பேசவில்லை என்ற போதும் மனம் பேசுவதை உணர்ந்து, “ஹலோ இங்கே நானும் குட்டிபொண்ணு இருக்கேன், உங்க ரொமான்ஸ் எல்லாம் வீட்டில் வந்து வெச்சுகோங்க. இதெல்லாம் பார்த்தா நானும் கெட்ட பொண்ணு ஆகிருவேன்..” என்று வெக்கத்துடன் முகத்தை மூடியவளைக் கண்ட சகுந்தலா, “சரியான வாலு” என்றார் புன்னகையுடன்.

அவர்கள் ஒருவருக்கு ஒருவர் பாசமாக இருப்பதைக் கண்ட இனியாவிற்கு ஒரு விஷயம் மட்டும் தெளிவாக புரிந்தது. இவர்களைப் பிரிந்து அவள் மனம் நோகக்கூடாதென்று அவளை இவர்களோடு தங்கவைக்க கதிரை நினைத்து அவளின் கண்கள் கலங்கியது.

“அப்பா இவங்களை என்ன சொல்லி கூப்பிடுவது” என்று அமிர்தா யோசிக்க அவளை அர்ஜூனிடம் இருந்து வாங்கிய இனியா, “அத்தை என்று சொல்லு” என்றாள்.

அவர்கள் இருவரும் புன்னகையுடன் தலையசைக்க, “ எனக்கு அந்த அத்தையை ரொம்ப பிடிச்சிருக்கு” என்றவள் இனியாவின் தோளில் கரம்கோர்த்து சொல்ல மற்றவர்கள் வாய்விட்டு சிரித்தனர்.

தீடிரென்று, “அம்மு அப்பா, அம்மாவுக்கு அறிவில்ல தானே..” என்று இனியா குறும்புடன் கேட்க, “அவங்களுக்கு சுத்தமா அறிவில்ல அத்தை” என்ற மகளைப் பார்த்து, ‘அடிப்பாவி ஒரு நிமிசத்தில் கட்சி மாறிட்டாளே..’ என்று வியப்புடன் அர்ஜூனும், ஷர்மியும் மகளை பார்க்க, “வாங்க வீட்டுக்கு போலாம்..” என்று அவர்களை அழைத்து சென்றார் சகுந்தலா. 

அர்ஜூன் காரை எடுக்க ஷர்மி முன் சீட்டில் அமர சகுந்தலா, இனியா அமிர்தா மூவரும் காரின் பின்சீட்டில் அமர்ந்தனர். அதன்பிறகு வழி எங்கும் இனியாவுடன் அமிர்தா பேசியபடியே வந்தாள்.

ஜார்ஜியா அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு வந்து பார்க்கிங்கில் வண்டியை நிறுத்த மற்றவர்கள் காரிலிருந்து இறங்கினர். அர்ஜூன் இனியாவின் லக்கேஜ் அனைத்தையும் எடுத்துகொள்ள இனியாவோ அமிர்தாவைக் கையில் தூக்கிக்கொண்டு முன்னே சென்றாள்.

“கதிர் அண்ணா இவளுக்கு தனி பிளாட் ஏற்பாடு பண்ணியிருக்காருங்க. இப்போ என்ன பண்றது” என்று ஷர்மி அர்ஜூனிடம் கேட்டாள்.

“அவளோட படிப்புக்காக மட்டும் கதிர் இவ்வளவு தூரம் அவளை அனுப்பல ஷர்மி. அவ தனித்து தைரியமா தன்னோட சொந்தக்காலில் நிற்கணும்னு நினைக்கிறான். அதனால் அவனோட விருப்பபடியே அந்த பிளாட் சாவியை அவளிடம் கொடுப்பதுதான் சரின்னு எனக்கு தோணுது..” என்றான் அர்ஜூன் தெளிவாக.

சகுந்தலா சென்று கதவைத் திறக்க அர்ஜூன் வீட்டிற்குள் நுழைந்ததும், “இனியா கதிர் உனக்காக” என்றவன் தயக்கத்துடன் தொடங்கும் போதே, “அண்ணா ஃபிளாட் சாவியை எங்கிட்ட கொடுங்க” என்றாள் புன்னகையுடன்

பெண்கள் இருவரும் இனியாவைக் கேள்வியாக நோக்கிட, “எனக்காக அவர் செய்த ஏற்பாடு எல்லாமே எனக்கு தெரியும் அண்ணா. இந்த ஃபிளாட்ல தங்கி படிக்க போற விஷயத்தை முன்னாடியே அவர் எங்கிட்ட சொல்லிட்டாரு” என்றதும் அர்ஜூனின் முகத்தில் தெளிவு வந்தது.

“நீ இன்னைக்கு இங்கே தங்கிக்கோ இனியா. நாளைக்கு உனக்கு எல்லா ஏற்பாடும் நான் பண்ணித்தறேன்” என்றவன் அவளுக்கான அறையைக் காட்டிட அவளும் அறைக்குள் சென்று மறைந்தாள்.

அவளைப் பார்த்த சகுந்தலா, “இந்த கதிர் ஏன் இப்படி பண்ணினான், அவ நம்ம வீட்டில் இருந்தா என்னவாம் அவனுக்கு?” என்றவரின் குரலில் கோபம் எட்டிப்பார்த்தது.

“அம்மா அவன் எப்பவும் யாருக்கும் இடைஞ்சலாக இருக்க நினைக்க மாட்டான், அதான் இனியாவிற்கு இத்தனை ஏற்பாடு பண்ணியிருக்கான்..” என்றதும் அவருக்கும் அது சரியென்று தோன்றியது.

அன்று இரவு உணவை முடித்துவிட்டு அவரவர் அறைக்கு தூங்க சென்றுவிட தன்னறைக்குள் நுழைந்த இனியா அவளின் டைரியில் எழுதினாள்.

உன் விருப்பம் என் கனவு

என்ற வார்த்தைக்கு உண்மையான

விளக்கம் நீயென்பேன் என் அன்பே

நான் என் லட்சியம் அடைய

நீ உன் கனவை தொலைத்து நிற்கிறாயே

உன் அன்பில் நான் என்னையே

உன்னிடம் இழந்துவிட்டேனே!” என்ற வரிகளை எழுதிவிட்டு நிம்மதியாக உறங்கினாள் இனியா.