Ponnoonjal-3

Ponnoonjal-3

ஊஞ்சல் – 3

கிராமத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்தது அந்த பல்நோக்கு மருத்துவமனை. ஊர் பெரிய மனிதர்களில் ஒருவனாய் இருப்பதால், ரிஷபனுக்கு அந்த சுற்று வட்டாரத்தில் எங்கு சென்றாலும், தனி மரியாதை உண்டு. அதனால் காத்திருக்கும் வேலையில்லாமல் உடனே மருத்துவரைப் பார்க்க முடிந்தது.

மனம் முழுவதும் மனைவியின் மேல் வெறுப்பைச் சுமந்து கொண்டு சென்றவனுக்கு, மருத்துவரின் ஆறுதல் வார்த்தைகள் நிம்மதியை அளித்தாலும், நடப்பது என்ன? என்பது அவனுக்கு புரியவில்லை. ஒரு ஊசியை போட்டு விட்டு,

“ஒன்னும் சீரியஸ் இல்ல ரிஷபன் சார்! பேபி நல்லா இருக்கா. இன்னும் ரெண்டு மணிநேரத்துல கண்ணு முழிச்சுடுவா. அவ யார்கூட இருப்பாளோ அவங்கள பக்கத்துல இருக்க சொல்லுங்க.”

“எதனால மயக்கம் டாக்டர்?”

“பயம், நிற்காத அழுகை, பிடிக்காத இடம் இதுல ஏதாவது ஒன்னு இருக்கலாம்!”

“பயமில்லையே டாக்டர்?”

“நல்லா, தெளிவா இருக்கும் போது பேபிய கூட்டிட்டு வாங்க. என்னன்னு ஃபுல் செக்கப் பண்ணிடலாம். இப்போ ஒன்னும் பயமில்ல…” என ஆறுதல் சொல்லி, அனுப்பி வைத்தார்.

வீட்டிற்கு வந்தவனை என்ன? ஏது? என்று கேட்காமல் மகளுடன், தன் அறைக்கு சென்று விட்டாள் அசலாட்சி. இறுக்கமான முகம், தவிக்கும் பார்வை, அவளது ஒட்டாத செய்கை இவையாவும், ஏதோ ஒன்றை மறைத்து வைப்பது போல் ரிஷபனுக்கு தோன்றியது.

திருமணம் முடிந்த இரண்டு நாட்கள் கழித்து, அசலாவின் தந்தை சுந்தரமும், பக்கத்து கிராமத்தில் உள்ள தன் தங்கை கனகம்மா – சங்கரய்யாவின், வீட்டிற்கு புறப்பட்டிருந்தார்.

முதல் நாள் மயக்கத்திற்கு பிறகு, பள்ளிக்கு அனுப்பும் விடயத்தை அடியோடு தவிர்த்தான் ரிஷபன். வீட்டில் பெரியவர்கள் அனைவரும், அவனது அவசர செயலுக்கு கடிந்து கொண்டிருந்தனர். குறிப்பாய் ரிஷபனின் தந்தை கடுமையாக திட்டி விட்டார். எதிலும் நிதானத்தை கைவிடாமல் இருக்குமாறு அறிவுரையும் கூறிட, சற்று அடக்கி வாசித்தான்.

அதற்கு பிறகு வந்த நாட்களில், கணவன் மனைவிக்குள் நடக்கும் சாதாரண பேச்சுகளும், மெதுமெதுவாய் குறைந்து போயிருந்தது. ரிஷபனின் பேச்சிற்கு ஆம், இல்லை என்ற ஒற்றை சொல்லை மட்டுமே அசலாட்சி பதிலாக சொல்லி வர, அவனும் பேசுவதை வெகுவாய் குறைத்துக் கொண்டான்.

தாயும், மகளும் வெளியே வராமல் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடந்தனர். மருத்துவரின் அறிவுரையைக் கூறி, பரிசோதனைக்கு ரிஷபன் அழைத்தும் அசலாட்சி பிடிவாதமாக மறுத்து வந்தாள்.

இப்படியாக கழிந்த ஒருவாரத்தில் பொம்மியின் வீம்பும், பிடிவாதமும் முன்னை விட அதிகமாய் கூடியது. இடம், மொழி, உணவு என்று எல்லாம் அவளுக்கு வேறுபட்டு இருக்க, எதையும் ஏற்றுக் கொள்ளாமல் அசலாவைப்படுத்தி வைத்தாள். முக்கியமாய் உணவு உண்ணும் நேரத்தில் அவள் செய்யும் தொல்லைகள் சொல்லில் அடங்காது.

அவளுக்கென்று பிடித்தமானதை செய்து கொடுத்தாலும், வீம்பாய் உண்ணாமல் அழிச்சாட்டியம் செய்ய, சமயங்களில் அன்னையிடம் இருந்து அடிகளும் வாங்கி கொண்டாள். ஆனாலும் சிறிது நேரத்தில் சமாதானப்படுத்தவென அசலா அணைத்துக் கொள்ளும்போது, பாவமாய் தோள் சாய்ந்திட, பார்ப்பவர்களுக்கு சிறுமியின் மீது பரிதாபம் தோன்றியது.

அன்றும் சின்னா பள்ளியில், தன் நண்பனை உப்பு மூட்டை தூக்கி கொண்டு ஓடி, பந்தயத்தில் வெற்றி பெற்று விட்டேன் என சந்தோசமாய் எல்லோரிடமும் சொல்லியவன், அதைப் போல தங்கையையும் தூக்கிக் கொண்டு விளையாட்டு காட்டினால், தன்னுடன் இயல்பாய் பழகி விடுவாள் என்று அவனும், தன் பங்கிற்கு பிடிவாதம் பிடித்தான்.

“வேண்டாம் சின்னா! ரெண்டு நாளா காய்ச்சல் இருக்கு. திரும்பவும் அழ ஆரம்பிச்சா அதிகமாயிடும்.” – அசலாட்சி

“இல்லம்மா, நான் நிறைய விளையாட்டு காட்டுறேன்! அவளுக்கு ஜுரம் போயிடும், அழுகையும் மறந்து போய்டும்!” தந்தையின் அறிவுரைப்படியே மனம் நிறைவோடு அசலாட்சியை ‘அம்மா’ என்று அழைத்து வந்தான் சின்னா.

சின்னாவிற்கும், அசலாவிற்கும் இதுவரை அன்பான பேச்சுக்கள் மட்டுமே நடந்திருந்தது. இன்று அவனது பிடிவாதத்தில், அதட்டிப் பேசினால், வீட்டில் உள்ளவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்களோ என்ற மனச்சங்கடத்தில், சின்னாவைத் தடுக்க முடியாமல், அசலாட்சி அமைதி காத்தாள்.

“பொம்மி! அண்ணயா புது விளயாட்டு சொல்லி கொடுக்குறேன் வர்றியா? என்மேல உப்பு மூட்டை ஏறிக்கோ!” பிடிவாதமாக அவனும் ஏற்றிக் கொள்ள, இவள் கத்த ஆரம்பிக்க,

“அம்மா பக்கத்துல இருக்கேன் பொம்மி அழுகாதே!” என்ன சமாதானம் சொல்லியும் கேட்கவில்லை சின்னப்பெண். வீம்பாக அவனில் இருந்து இறங்க முயற்சி செய்து அவனை உலுப்பி வைக்க, அதில் தடுமாறியவன் பக்கத்தில் இருந்த மேஜையில் தடுக்கி விழுந்து வைத்தான்.

பொம்மியோ வேகமாய் விடுபடும் எண்ணத்துடன் கீழே இறங்க முயற்சிக்கும் வேளையில், பக்கத்தில் இருந்த அலமாரியில் தலையிடித்து, நெற்றியில் கொப்புளம் உண்டாகி, அடிபட்ட வலியில், அழுதே உறங்கிப் போனாள்.

சின்னாவிற்கும் காலில் லேசான அடிபட்டு, அவனும் தத்தி தத்தி நடந்து, வலியில் முகத்தை சுருக்கிக் கொண்டு செல்ல, இப்பொழுது அனைவரும் சின்னாவை திட்டினர். அசலாட்சி அன்பாய் சமாதானம் சொல்லியும், கோபத்தில் தனியாய் போய் அமர்ந்து விட்டான்.

ரிஷபன் வந்ததும், வீடு இருந்த அமைதியில் ஏதோ விரும்பத்தகாத செயல் நடந்துள்ளதை யூகித்தவனின் கண்களில், மகனின் அழுதமுகம் தெரிய, நடந்ததை எல்லாம் அவனும் சொல்லி விட, கோபத்துடன் மனைவியின் முன்னே நின்றவன்,

“அவன் வீம்புக்கு தூக்கும் போது கண்டிக்காம, ரெண்டு பேருக்கும் அடிபடற அளவுக்கு வேடிக்கை பார்த்துட்டு இருந்தியா நீ? உன் மனசுல என்னதான் நினச்சுட்டு இருக்க சாலா?” வழக்கம் போல் அதட்டலை கையில் எடுத்தான் ரிஷபன்.

“நான் எவ்ளோ சொல்லி பார்த்தேன் சின்னா கேட்கல!” – அசலா

“என்கிட்ட மூஞ்சிய தூக்கி வைச்சு பேசுற மாதிரி, அவன்கிட்ட பேசியிருப்ப! அதான் கேட்டுக்கல!”

பிள்ளைகள் இருவருக்கும் அடிபட்டு விட்டதே என்ற வருத்தத்தில் மனைவியை சாடியவன், கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த பொம்மியின் அருகாமையில் அமர்ந்து கொண்டான்.

இந்த மாதிரியான அசாதாரணமான நேரங்களில் மட்டுமே மகளின் அருகில் இருக்க முடிகிறது என்ற நிதர்சனமே, அவனுக்கு கடுப்பை ஏற்றி வைக்க, இதற்கு இன்று ஒரு முடிவு கட்டியே ஆகவேண்டும் என்று மனதில் உறுதி எடுத்துக் கொண்டான்.

“நான் நல்ல விதமாதான் எடுத்துச் சொன்னேன் பாவா! ரெண்டு பேரும் வீம்பு பிடிச்சு கீழே விழுந்திருக்காங்க.” அசலாவும் மகளின் உடலைத் தடவிக் கொடுத்த வண்ணமே அவன் அருகில் அமர்ந்து கொண்டாள்.

“அடிக்கடி அம்மு அழுதுட்டே இருக்குறது, மயக்கம் போட்டு விழுறது எனக்கு சரியாப்படல! டாக்டர் வரச் சொல்லியும் உன்னோட பிடிவாதத்துல போகாம இருக்க, இப்போ கோளாறு உனக்கா? பொம்மிக்கான்னு தெரியல சாலா?”

“டாக்டர்ட்ட போற அளவுக்கு அவ்ளோ மோசம் இல்ல!”

“அத அவர் சொல்லட்டும் சாலா! நாளைக்கு டவுன் ஆஸ்பத்திரிக்கு கிளம்புற வழியப்பாரு!” கண்டிப்புடன் ரிஷபன் சொல்ல

“நான் இந்த வீட்ட விட்டு எங்கேயும் வர மாட்டேன்! என் பொண்ணையும், எங்கேயும் கூட்டிட்டு போக விடமாட்டேன்” பிடிவாதத்துடன் அசலாட்சியும் பேசினாள்.

“என்ன பிடிவாதம் சாலா? உன்னோட பேச்சு ஒரு அம்மா பேசுற மாதிரி தெரியல? யாரோட பிள்ளைக்கோ வந்த மாதிரிதான் நீ பேசி வைக்கிற!” மெதுவாகப் பேசிக் கொண்டாலும், இருவருக்கும் இடையில் வாக்குவாதம் தடையில்லாமல் நடந்தது.

“அப்டியே இருந்துட்டு போறேன்! ஆஸ்பத்திரிக்கு பொம்மிய தூக்கிட்டு வர முடியாது. எங்கள இங்கே வச்சுக்க முடியலன்னா சொல்லிடுங்க! நான் எங்க அப்பாகூட போயிடுறேன்!” – அசலா

“சம்மந்தம் இல்லாம பேசி, கோபத்த வரவைக்காதே! ரொம்ப நேரம் பொறுமையா பேச முடியாது என்னால!” – ரிஷபன்

“என்ன செய்வீங்க? காவல்காரனுக்கு கட்டிபோட்டு அடிக்கிறது மட்டுந்தானே தெரியும். அதையே செஞ்சுட்டு போங்க, அப்டியாவது எங்க ரெண்டு பேருக்கும் நிம்மதியான சாவு வரட்டும்.” கோபத்துடன் கூடிய அலட்சியத்துடன் பேசினாள் அசலா.

“ம்ப்ச்… என்ன தான் ஆகுது உங்க ரெண்டு பேருக்கும்? அவதான் சின்ன குழந்த, சரியில்லாம இருக்கான்னா… இப்போ நீயும் இந்த மாதிரி பேசினா எப்டி எடுத்துக்க நான்?” அலுப்புடன் கேட்டான் ரிஷபன்.

“ஏன்? உங்களுக்கு ஒன்னுமே தெரியாதா? அது தெரிஞ்சுக்காமதான் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களா?” – அலட்சிய பாவனையைத் தொடர்ந்தாள் அசலாட்சி.

“என்ன தெரியணும் உன்ன பத்தி? நீ என் நண்பனோட மனைவியா இருந்தவ! அவன் இப்போ உயிரோட இல்ல! சின்னப்பொண்ணோட நிக்கிற உன்ன கல்யாணம் பண்ணிக்கோன்னு அப்பா சொன்னாரு, பார்த்த உடனே நீயும், பொம்மியும் என் மனசுல பதிஞ்சு போயிட்டீங்க! கல்யாணமே வேண்டாம்னு சொல்லிட்டு இருந்த நான், உங்கள பாத்ததும் சம்மதம் சொல்லிட்டேன்!”

கணவனின் அமைதியான விளக்கத்தை கேட்ட அசலாட்சிக்கு, இதற்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.

“நானும் எவ்வளவோ முயற்சி பண்றேன். உங்க ரெண்டு பேர் கூடவும் பேசணும், சின்னப் பொண்ண சந்தோசமா சிரிக்க வைக்கனும்னு ரொம்ப ஆசையா காத்துகிட்டு இருக்கேன், எங்கே? எதுவுமே நடக்காது போலேயே சாலா?”

“நெஜமாவே எங்களைப் பத்தி உங்களுக்கு தெரியாதா பாவா?”

“அப்படி என்ன ரகசியம் இருக்கு? உங்களப் பத்தின விவரத்தை சொல்லேன் என்கிட்ட!”

“எல்லா விஷயமும் உங்களுக்கு தெரியும்னு, அப்பா சொன்ன பிறகுதான், நான் கல்யாணத்துக்கே சம்மதிச்சேன் பாவா! நீங்க சொல்றத பார்த்தா! அப்பா சொல்லலையா? இல்ல மாமா உங்ககிட்ட சொல்லமா மறைச்சுட்டாரா?” வீட்டுப் பெரியவர்கள் மேல் அவளுக்கு பொல்லாத சந்தேகம் வந்தது.

“பெரியவங்களுக்கு, என்கிட்ட மறைக்க வேண்டிய அவசியமென்ன சாலா? அவங்கள பொறுத்தவரைக்கும் எனக்கு தெரியபடுத்தாத விஷயம், நம்ம வாழ்க்கைக்கு தேவையில்லாததா இருக்கலாம். எனக்கும் அப்படித்தான், உங்களை பத்தி முழுசா தெரிஞ்ச பிறகு மட்டுமே சந்தோசமா இருக்க முடியும்ங்கிற நினைப்பு, எப்போவும் எனக்கு வந்ததில்ல. இந்த நிமிஷம், இந்த வாழ்க்கை, எனக்கு உன்னோடுதான்!” தீர்க்கமான வார்த்தைகள் மூலம், அவர்கள் இருவரும், அவனுடைய பொறுப்பு என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டான் ரிஷபன்.

கணவனது பேச்சை கேட்டு உடல் சிலிர்த்தவளுக்கு, இது எந்த மாதிரியான அன்பு இனங்கண்டு கொள்ள, புதிய அரிச்சுவடி ஒன்றும் தேவையில்லை. ஆனால் அத்தகைய அன்பிற்கு தாங்கள் என்றும் தகுதி இல்லை என்பது மட்டுமே அவளுக்குத் தெளிவாக விளங்கியது.

“என்னை ரொம்ப இக்கட்டுல மாட்டி வைக்கிறீங்க! நீங்க எதிர்பாக்குற மனம் நிறைஞ்ச, சந்தோசமான வாழ்க்கை எங்களால உங்களுக்கு கிடைக்காது! எங்கள பத்தின விவரத்த ஏன்? அப்பாவும், மாமாவும் சேர்ந்து மறைக்கணும்! ஒரே குழப்பமா இருக்கு!” மனம் தளர்ந்தே பேசினாள் அசலா.

“இதபத்தி அப்புறமா அவங்ககிட்ட கேட்டுக்கலாம். இப்போ நீ சொல்லு? உங்க ரெண்டு பேருக்கும் என்ன பிரச்சனை?” – ரிஷபன்

“என்னால எக்காரணம் கொண்டும் சொல்ல முடியாது. வீட்டுப் பெரியவங்ககிட்ட கேட்டுக்கோங்க. எப்படியும் தெரிஞ்ச பிறகு எங்களை ஒதுக்கி வைக்கப் போறீங்க! அதுக்கு இப்போவே என்னை அப்பாகிட்ட கொண்டு போய் விட்டிடுங்க!” – சொல்லும் போதே அசலாவின் முகம் இறுகியதன்மையை கொண்டது.

“இப்படி அல்பத்தனமா பேச யாரு கத்துக் கொடுக்குறா சாலா? பொண்டாட்டி தப்பு பண்ணினா, பொறந்த வீட்டுக்கு அனுப்பியே ஆகனுமா? அப்படி விட்டுக் கொடுக்குற ஆம்பள நான் இல்ல! ஊரையே கட்டிக்காக்குற காவல்காரனுக்கு, மனைவியோட கஷ்டத்த தெரிஞ்சு சரிபண்ணத் தெரியலன்னா, அது அவன் பரம்பரைக்கே அவமானம். உங்களப் பத்தி வேற யார்கிட்டயோ போய்கேட்குற தர்மசங்கடமான நெலமைய எனக்கு கொடுக்காதே சாலா. என்மேல முழு நம்பிக்கை இருந்தா சொல்லு!”

கணவனது உள்ளார்ந்த பேச்சும், உரிமையான பாவனைகளும் மனைவியை பெரும் வேதனையில் ஆழ்த்தியது. குழந்தைகளின் செய்கையில், மனமுடைந்து தனக்குள்ளேயே மருகிக் கொண்டு இருந்தவளுக்கு, கணவனின் நேசங்களும், பாசங்களும் தெளிவாய்ப் புரிய, ‘இப்பேர்பட்ட நல்லவருக்கு தாங்கள் எந்த விதத்திலும் பொருத்தமானவர்கள் இல்லை’ என்னும் உண்மை நிலையே அவள் நெஞ்சை உலுக்க, இத்தனை நேரம் மனதோடு அரற்றியவள், இப்பொழுது வெளிப்படையாகவே அழத் தொடங்கினாள்.

“சாலா என்ன நடந்தது? என்கிட்டே சொன்னா தீர்த்து வைச்சிடுவேன்” ஆதுரமாய் கேட்டுக்கொண்டே அவள் முகத்தை கைகளில் ஏந்திட, அதற்காகவே காத்திருந்தவள் போல் அவன் கைகளில், தன் முகத்தைப் புதைத்து கொண்டு மேலும் விசும்ப ஆரம்பித்தாள்.

“சாலா… சாலா ஒன்னும் இல்ல. எல்லாமே சரி பண்ணிடலாம். எதுவுமே கஷ்டம் இல்ல! என்னைப் பாரும்மா, என்ன ஆச்சு?” இவன் கேட்கக் கேட்க, அவளது அழுகை அதிகமானதேயொழிய குறையவில்லை.

ரிஷபனுக்கு இப்பொழுது என்ன செய்வதென்று ஒன்றும் புலப்படவில்லை. மனைவியின் அழுகை கணவனின் நெஞ்சில் பெரும் பாரத்தை ஏற்றி விட, சமாதானப்படுத்தத் தெரியாமல் திண்டாடிப் போனான்.

கஷ்டங்கள் எதுவாக இருந்தாலும் உன் தோள்களில் ஏற்றிக் கொண்டு, அவளுக்கு இளைப்பாறுதலைத் தந்து, அவளது சந்தோசத்தை மீட்டெடுத்து விடு என மனமானது அவனுக்கு ஆணையிட, இவளது தவிப்பை எப்படியாவது தீர்த்து வைக்க வேண்டுமென மனதில் உத்வேகம் எழுந்தது.

ஆனால் மீளும்வழி யாதென்று தெரிய, அவளது வலிகளை அறிந்து கொண்டால் மட்டுமே முடியும் என்ற இயல்புநிலை புரிய, தன்னை சமன்படுத்திக் கொண்டவன்,

“சாலா! நான் உன் பக்கத்துல இருக்கும் போது அழக்கூடாது. என்ன கஷ்டம் இருந்தாலும் கடந்து வந்துரனும்மா. மனசுல அத போட்டு குழப்பிட்டு இருந்தா, வேற எதுவும் செய்ய தோணாது.” – ரிஷபன்.

“எப்படி? எங்கள வெட்டிப் போட்டிருந்தா கூட மறந்து போயிருப்பேன். ஆனா நடந்தத அவ்வளவு சாதாரணமா மறக்க முடியல பாவா!” வார்த்தைகள் திக்கிகொண்டு, பேசவும் முடியாமல் அழுகையில் மேலும் கரைந்திட, அங்கிருந்த தண்ணீரைக் கொடுத்து மனைவியை ஆறுதல் படுத்தினான் ரிஷபன்.
“கொஞ்சம் தண்ணி குடி! அமைதியா இரு சாலா!” என்றவனின் கைகளில் இருந்த நீரை வாங்கிப் பருகியவள், அந்த அறையின் சுவற்றில் இருந்த பெருமாள் படத்தின் முன்னே, தரையில் அமர்ந்து மீண்டும் அரற்ற தொடங்கினாள்.

“எந்த பாவமும் செய்யாத நல்லவர் கையில எங்களை ஏன் ஒப்படைச்ச பெருமாளே? என் நிம்மதிய பறிச்சது போதலையா? இவருக்கும் அதே கஷ்டத்த கொடுக்குரதுல அப்படி என்ன சந்தோசம் உனக்கு?” அழுகையோடு கூறியவளுக்கு, தான் பட்டதெல்லாம் கண் முன்னே ஓடியது.

ரிஷபனுக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. இவளை சகஜ நிலைக்கு கொண்டு வந்தே தீரவேண்டும் என எண்ணியவன்,

“சாலா அழுதது போதும்! பொம்மி இப்போ எழுந்திரிச்சா அவளும் உன்கூட சேர்ந்து அழ ஆரம்பிப்பா.” சொல்லியபடியே அவள் அருகில் வந்து அமர்ந்தான்.

மகளைப் பற்றி சொன்னதும், முன்னர் நடந்த நிகழ்வுகளின் தாக்கத்தில் இருந்தவளுக்கு, அந்நேரம் உடல் விறைத்துகொள்ள, பயத்தில் சுற்றும் முற்றும் பார்த்து, தன் கண்கள் இரண்டையும் அலைபாய விட்டாள்.

“சாலா… சாலா…” அடுத்ததடுத்து அவளை அழைத்து கொண்டே, உலுக்கி எடுக்கவும் சுயத்தை அடைந்தவளுக்கு, தான் இருப்பது தங்களின் அறை என்பது தெரியவர கணவனைப் பார்த்து,

“பாவா! வெளியூர்ல இருந்து யாரும் நம்ம வீட்டுக்கு வரமாட்டாங்கல்ல?” சம்மந்தம் இல்லாமல் கேட்டு வைக்க, அன்றொரு நாள் பொம்மியும் இப்படி பேசியது ரிஷபனுக்கு நினைவில் வந்தது.

“ஏன் கேக்குற? யார் வந்தாலும், என்ன சொன்னாலும் நான் உன்கூட இருக்கேன் பயப்படாதே சாலா!”

“வருவாங்களா? அப்போ இங்கேயும் நாங்க நிம்மதியா இருக்க முடியாதா?” வெளிறிய பார்வையுடன் கேள்வி கேட்டவளுக்கு, மீண்டும் தனக்கு நடந்தவையெல்லாம் காட்சிப்படமாக மனதில் வந்தமர, கண்களை இறுக்க மூடிக் கொண்டாள்.

அதீத பயத்தால் உடலெல்லாம் வியர்வை ஆற்றாய் ஊற்றெடுக்க, நொடி நேரத்தில் உடல் சில்லிட்டுப் போனது. மனைவியின் இந்த பரிமாணம் கணவனுக்கு புரியாத புதிராய் இருக்க, அவளை நிகழ்நிலைக்கு திருப்ப மீண்டும், “சாலா… பயப்படாதே!” அவளை ஆறுதல்படுத்த முயன்றான்.

பலமனிதர்களின் குரல்கள், மிகஅருகில் கேட்ட அருவெறுக்கத்தக்க பேச்சுக்கள், அடுத்ததடுத்து அவளை நோக்கிக் கேட்கப்பட்ட கேள்விகள், இவையாவும் அவளைப் பந்தாட, என்ன நினைத்தாளோ, கண்களைத் திறந்தவளின் மிக அருகில் ரிஷபன் அமர்ந்திருக்க, அவன் மடியில் முகத்தைப் புதைத்து, மீண்டும் அழத் தொடங்கினாள்.

“யாரையும் இங்கே வர விடாதீங்க பாவா! புதுசா யாரையும், எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்காதீங்க! நாங்க இங்கேயே ஒரு ஓரமா இருக்க மட்டும் அனுமதி குடுங்க பாவா!” முன்னிலும் அதிகமாய், அவனில் ஒட்டிக்கொண்டு அடக்கப்பட்ட கேவல்களோடு பேசினாள்.

“யாரும் வர மாட்டாங்க சாலா! கொஞ்சம் அமைதியா இரும்மா…” ஆதரவாய் அவளது தலையை தடவி ஆறுதல் படுத்திய ரிஷபனின் கண்களிலும், சொல்ல முடியாத வலி வந்ததின் அடையாளமாக, இமை தாண்டாத கண்ணீரும் கரை கட்டியது.

என்றைக்கும் இந்த நிலையில் ரிஷபன் இருந்ததில்லை. தன் உதவியை நாடி வருபவர்களுக்கு என்றும் ஆதரவை தந்து அரவணைத்து கொள்பவன். முதன் முதலாய் உயிரையே உருக்க வைக்கும் தனது தவிப்பை, சொல்ல முடியாத துயரத்தை மனதோடு அனுபவித்தான்.

அந்த சமயத்தில், இவர்களின் தவிப்பை எல்லாம் உள்வாங்கிட வேண்டுமென்று மனம் துடிக்க, அதைவிட மனைவியை அயர்ச்சியில் இருந்து வெளிக்கொண்டு வருவதே முதல் வேலையாகப் பட, அவளை ஆறுதல்படுத்தியே, தன் மடியில் உறங்க வைத்தான்.

error: Content is protected !!