உயிர் காதலே உனக்காகவே…!

காதலின் நினைவலைகள்…!

பெண்ணே என் மனக்கடலில்
நீ குதிக்க
மூழ்கிப் போனதென்னவோ நான்தான்…!

மாதவியின் அறைக்குச் சென்று அவளையும் என் சகோதரிகள் அனைவரையும் அழைத்துக் கொண்டு சாப்பிட வந்தேன். எந்த பந்தாவுமே இல்லாமல் தானாக வந்து அறிமுகம் செய்து கொண்ட திருமண மாப்பிள்ளை வினோத் என்னை பெரிதும் கவர்ந்தார்.

என்னைப் பற்றி என் படிப்பு, வேலை பற்றி அனைத்தும் கேட்க, வீட்டு மாப்பிள்ளையல்லவா? பொறுமையாக பதில் கூறிக் கொண்டிருந்தேன். என்னைவிட வயதில் பெரியவரும்கூட, அந்த மரியாதையும் மனதில் இருந்தது.
மாதவிக்கும் அவருக்குமான பொருத்தத்தை என் மனதில் எடை போட்டபடி அவருடன் பேசிக் கொண்டிருக்க, அங்கு ஒரு வாண்டு ஓடி வந்தது.

“வினோத் மாமா நீங்க இங்கயா இருக்கீங்க? பூரணி உங்கள தேடிகிட்டு இருக்கா! நான் போய் அவளைக் கூட்டிட்டு வர்றேன்.” என்று கூறியவாறு ஓட எத்தனித்த சிறுவனைக் கையில் அள்ளிக் கொண்டவர்,

“டேய் ப்ளீஸ்டா! மாமா உனக்கு சாக்லேட் நிறைய தரேன். அவகிட்ட நான் இருக்கற இடத்தைச் சொல்லாதடி தங்கம்.” என்று தன் வயதை மறந்து கெஞ்சிக் கொஞ்ச! என்னை மீறி புன்னகை வந்தமர்ந்தது என் உதட்டில். சற்று நேரம் யோசித்த வாண்டு,

“அப்ப பூரணியை தவிர எங்க எல்லாருக்கும் சாக்லேட் வாங்கித் தரனும் ஓகேவா. அவ எங்க யாருக்குமே தராம நேத்து டைரிமில்க் பார் ஃபுல்லா சாப்பிட்டா.” சொல்லும்போதே உதடு பிதுங்கியது.

“அதுக்கென்னடா வாங்கித்தரேன். ஆனா அவகிட்ட என்னை மாட்டி விட்டுடக்கூடாது. டீல் ஓகேவா.”

“அப்ப இப்பவே தா.”

“இப்பவேவா? கோவிலுக்குப் போயிட்டு வந்ததும் வாங்குவோமா?”

“முடியாது… முடியாது… இப்பவே வேணும் இல்லைன்னா பூரணிகிட்ட சொல்லுவேன்.” என்று மிரட்ட என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

“என்ன அண்ணா இந்த வாண்டுக்கெல்லாம் பயப்படறீங்க?”

“இந்த வாண்டை கூட சமாளிச்சிடலாம், பூரணி கையில மாட்டினேன் அவ்வளவுதான். காலையில ஒரு டம்ளர் தண்ணிய அவ மேல ஊத்தி எழுப்புனதுக்கு என்னை வெறி கொண்டு தேடிகிட்டு இருக்கா! இப்பவரை தப்பிச்சிட்டேன். என் தம்பிங்க எனக்கு சப்போர்ட் பண்ணதால அவங்க மேல ஊத்த வந்ததை நீங்க நடுவுல வாங்கிக்கிட்டீங்களாமே! சொன்னாங்க” என்று சிரிக்க என்னாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை,

“ஆமா! காலையிலயே ஹோலி கொண்டாடியாச்சு.”

“வாலுப்பொண்ணு! எங்க குடும்பத்துக்கு ஒத்த பொம்பளப் பிள்ளை. எல்லாருக்கும் படுசெல்லம்.”

மேலும் அவர்களது குடும்பத்தைப் பற்றியும் கூறினார். எங்களைப் போல ஒரே குடும்பமாக அனைவரும் ஒன்றாக இல்லாவிட்டாலும், அருகருகே வீடுகள் இருப்பதால் விசேஷங்களுக்கு ஒன்றாக இணைந்து கொள்வார்களாம். எங்களைப் போன்றே நல்ல பாரம்பரியமான குடும்பம் அவர்களுடையதும்.

அவர் என்னோடு பேசிக் கொண்டிருக்கையில் மேலும் சில வாண்டுகள் சேர்ந்துவிட,

“அனைவருக்கும் நான் சாக்லேட் தருகிறேன்” என்று என் அறைக்கு அழைத்து வந்தேன். என் அக்கா பிள்ளைகளையும் அழைத்துவந்து அனைவருக்கும் நான் வாங்கி வந்திருந்த வெளிநாட்டு சாக்லேட்டுகளை கைநிறைய அள்ளித்தர வாங்கிக்கொண்டு குதூகலத்துடன் ஓடிப் போனதுகள்.

“மாப்ள குட்டீஸ்க்கெல்லாம் சாக்லேட் வாங்கி வந்திருக்க… எங்களுக்கு நாங்க கேட்டத வாங்கி வந்தியா?” கேட்டபடி என் மாமா மூவரும் உள்ளே வர,

“எதுக்கு எங்க அக்காங்க என்னைய உதைக்கவா? அதெல்லாம் நான் எதுவுமே வாங்கிட்டு வரல.”

“பொய் சொல்லாத மாப்ள. எங்களுக்கு வாங்காம நீ வந்திருக்க மாட்ட. எடு மாப்ள. ஆயிரம் இருந்தாலும் ஃபாரின் சரக்கு மகிமையே தனிதான்யா.”

“மாமா… நைட்டு எடுத்துத் தரேன். யாருக்கும் தெரியாம அடிச்சிட்டு ரூமுக்குள்ளவே இருக்கனும். இந்த ஊரை விட்டுப் போகமுன்ன காலி பண்ணிடுங்க. நம்ம ஊர்ல எதுவும் தொடரக்கூடாது. சரியா? அக்காங்களுக்கு எதாவது தெரிஞ்சது மொத்தமா தொலைஞ்சோம்.”

“மாப்ள… நம்ம ஊருக்குள்ள நாங்க இருக்கிற தோரணையே வேற. இதெல்லாம் வெளியூருக்கு எங்கயாவது வந்தா சும்மா ஜாலிக்குதான். ஆனா, இந்த ரூம் பக்கம் உன் அக்காங்களை வர விடாம பார்த்துக்க வேண்டியது உன் பொறுப்பு.”

“ஆமாமாம்… இல்லைன்னா உங்க அப்பா பெரியப்பா சித்தப்பாக்கெல்லாம் யாருய்யா பதில் சொல்றது.”

“அந்த பயம் இருந்தா சரிதான். பெரிய மாமாவ எங்க காணோம்?”

“நெருங்கின சொந்தம் மட்டும்தான்யா ஒரு நாள் முன்னாடியே வந்திருக்கோம். மீதி நம்ம சொந்தக்கார ஆளுகளையெல்லாம் கிளப்பி நாளைக்கு அவர்தான் பஸ்வச்சு கூட்டிட்டு வராரு.”

“எல்லாருமே நாளைக்கு வந்திருக்கலாமே. நாளை மறுநாள்தான கல்யாணம். முன்னாடியே இங்க வந்து என்ன பண்றீங்க?”

“இல்ல மாப்ள, இன்னைக்கு மதியம் குலதெய்வம் கோவில்ல படைப்பாங்களாம். அப்ப பொண்ணும் கூட இருக்கனுமாம். அவங்க வழக்கம்னு சொன்னாங்க. நமக்கு அது பழக்கமில்ல, மறுக்கவும் முடியல.

தனியா மாதவிய மட்டும் அனுப்பவும் முடியாது. சரின்னு எல்லாரும் கிளம்பி நேத்து சாயந்திரம் வந்து சேர்ந்தோம். ஆனா இதுவும் நல்லாதான்யா இருக்கு. நம்ம ஊர்ல கல்யாணம் வச்சிருந்தா ஆளுக்கொரு வேலைய பார்த்தாலும் பரபரப்பா சுத்தறாப்ல இருக்கும்.
ஆனா இங்க எந்த வேலையும் நமக்கு வைக்காம எல்லா வேலையும் அவங்களே பார்த்துக்கறாங்க. நல்லா ஃபிரியா மூனு நாள் என்ஜாய் பண்றோம் நாங்க.”

“கோவிலுக்கு போயிட்டு வந்ததும், மதியத்துக்கு மேல மெகந்தி சங்கீத்னு என்னென்னவோ அந்த பூரணி பிள்ள சொல்லுச்சி…அதெல்லாம் ஏற்பாடு பண்ணியிருக்காங்களாம்.

எல்லாரும் பாடனும் ஆடனும்னு சொல்லிகிட்டு இருந்துச்சி. நேத்து வந்து இறங்குனதுல இருந்து விடிய விடிய உங்க அக்காங்க, மதினிங்க, பிள்ளைங்க எல்லாரும் பூரணிகூட சேர்ந்துகிட்டு ஒரே ஆட்டம்தான்.”

“அந்தக் கொடுமைய ஏன் கேக்குற மாப்ள? காலம்போன காலத்துல உன் அக்காவுக்கு காக்ராசோளி வேணுமாம். இப்ப கடைக்கு போகனும்னு சொல்லியிருக்கா. இன்னைக்கு எல்லாரும் ஒரே மாதிரி போடப் போறாங்களாம்.”

“என்னடா சொல்றாரு உங்க மாமா?” கேட்டபடி எங்கள் வீட்டு குலவிளக்குகள் அனைத்தும் படையாய் உள்ளே வர மூன்று மாமன்களுக்கும் முழி பிதுங்கியது.

“அது வந்துக்கா… உங்க எல்லாருக்கும் வயசாயிடுச்சாம். காலாகாலத்துல போட்டிருக்க வேண்டிய காக்ராசோளிய, இப்ப கேக்குறீங்களாம்… இதைத்தான் சொன்னாங்க மூனு மாமாவும்.”

அக்காக்களின் செல்லத் தம்பியாய் அவர்களோடு நொடியில் நான் இணைந்து கொள்ள,

‘அடேய் துரோகி’ என்று என்னை முறைத்தவர்கள் சட்டென்று அந்தர் பல்டி ஆகாச பல்டி அடித்தனர்.

“நாங்க அப்படி சொல்வோமா? காலாகாலத்துல காக்ரா சோளி போட்டிருந்தா கஜோலுக்கே போட்டியா வந்திருப்பீங்கன்னு, உங்களை புகழ்ந்துகிட்டு இருந்தோம்மா.”

“அது… அந்த பயம் இருக்கனும். நாங்க கடைக்குப் போகனும் இப்ப. கூட யார் வர்றீங்க?”
‘வரமாட்டேன்’ என்று அடம்பிடித்த  மாமன்களில் கடைசி மாமனை இழுத்துக் கொண்டு நானும் அவர்களோடு செல்ல முடிவானது.

மற்றவர்கள் அனைவரும் கோவிலுக்கு செல்வதாகவும் நாங்கள் அனைவரும் நேராக கோவிலுக்கு வரவேண்டும் என்றும் முடிவானது.

ஓரளவுக்கு நல்ல பெரிய கடைதான், பெண்கள் அவர்களுக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுப்பதில் முனைந்துவிட, அவர்களோடு நான் இணைந்து கொண்டேன். உடன் வந்திருந்த பிள்ளைகளைப் பார்த்துக் கொண்டு கடுப்போடு அமர்ந்திருந்தார் மாமா.

“டேய் உன் கல்யாணத்துக்கு எங்களுக்கு நாங்க கேட்கிற எல்லாம் வாங்கித் தரனும் நீ.”

“அதுக்கென்னக்கா உங்களுக்கில்லாததா. என்ன கேட்டாலும் வாங்கித் தருவேன்.” என்றபடி உடையின் நிறங்களை நான் தேர்வு செய்ய,

“உனக்கும் இருபத்தஞ்சு வயசுக்கு மேல ஆச்சு. பொண்ணு பார்க்கச் சொல்லலாமா ஆனந்தா?”

“உன் கல்யாணம்தான் நம்மவீட்டு கடைக்குட்டி கல்யாணம். ஊரே மூக்குல விரல் வைக்கிற அளவுக்கு தடபுடலா நடத்தனும்.”

“உனக்கு யாரையாவது பிடிச்சிருந்தாலும் சொல்லுடா. நாங்க முன்ன நின்னு பேசி முடிச்சு வைக்கிறோம்.” சுற்றி வளைத்தன கேள்விகள்.
“ஹா… ஹா… அதெல்லாம் எதுவுமில்லைக்கா. எனக்கு என்ன அவசரம்? இன்னும் இரண்டு மூனு வருஷம் போகட்டும்.”

“உனக்கு எப்படிப்பட்ட பொண்ணு வேணும் ஆனந்தா? உன் ஆசைய சொல்லு நாங்க பார்க்குறோம் பொண்ணு.”

“நம்ம வீட்ல இருக்கற எல்லாருக்கும் பிடிச்சிருந்தாலே போதும். எனக்கும் பொண்ண புடிக்கும்.”

“டேய் மாப்ள… அப்படின்னா இப்பவே பார்க்க ஆரம்பிச்சாதான் காலாகாலத்துல கல்யாணம் பண்ணுவ. இல்லைன்னா உங்க அக்காங்களுக்கு, மதினிகளுக்கு, அப்புறம் குடும்பத்துல இருக்கற எல்லா டிக்கட்டுகளுக்கும் பிடிச்ச மாதிரி பொண்ணு பார்த்து உனக்கு கல்யாணம் பண்ணறதுக்குள்ள கிழவனாயிடுவ. நேரா அறுபதாங் கல்யாணம்தான்.”

மாமனின் வார்த்தைகளில் சிரித்துக் கொண்டாலும், அனைவரின் மனதுக்கும் பிடித்த பெண் என்ற வார்த்தையில் ஏனோ பூரணி என்ற பெயர் நினைவுக்கு வந்தது.

முகம்கூட சரியாக பார்த்திராத பெண்மீது ஈர்ப்பா? எனக்கே என்னை நினைத்து சிரிப்பு வர, என் எண்ணங்களுக்கு கடிவாளம் போட்டுக் கொண்டேன்.

அலையடிக்கும்…!

********

உயிரின் வேட்டை…

அலைபேசியை நோண்டிக்கொண்டு விச்ராந்தியாக அமர்ந்திருந்தாள் ஹரிணி. மிகவும் போரடித்தது அவளுக்கு. ரேணுவின் அண்ணனைப் பார்க்கப் போக இன்னும் இரண்டு நாட்கள் இருந்தது. சுஜி வேறு, ‘வெளியே எங்கும் போகாதே!’ என்று கூறிவிட்டு சென்றதில் மிகவும் கடுப்பாக இருந்தது.

பட்டாம்பூச்சி போல அங்கும் இங்குமாக சுற்றித் திரிந்தவளை ஒரே இடத்தில் அடைத்தது போல ரூமினுள் கிடந்தது வெறுப்பாக இருந்தது. சற்று நேரம் அறையின் ஜன்னலைத் திறந்து வேடிக்கை பார்க்கலாம் என்று எண்ணி ஜன்னலைத் திறந்தாள்.

அவளது அறையிலிருந்து விடுதியின் முகப்பும் அதற்கு அடுத்த சாலையும் தெளிவாகத் தெரியும். சற்று நேரம் சாலையில் போகும் வாகனங்களை வேடிக்கை பார்த்தவளை, அந்தச் சாலையோர மரத்தடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு நவீன மாடல் பைக் ஈர்த்தது. அதன் அருகே ஹெல்மெட்டைக் கழட்டாமலே ஒருவன் நின்றிருந்தான்.

பைக்கின் அருகே இருந்த மரத்தில் சாய்ந்தவாறு நின்று ஒரு காலை தரையில் ஊணி மறுகாலை மரத்தின் மீது மடக்கி வைத்தவாறு நின்று அலைபேசியைக் குனிந்து நோண்டிக் கொண்டிருந்தான்.

இயல்பான பருவப் பெண்களைப் போலவே அவளது கண்களும் அவனை ஆராய்ந்தது.

அடர் நீல நிறத்தில் ஜீன்ஸும் வெள்ளைநிற முழுக்கை சட்டையும் அணிந்திருந்தான். சட்டையை முழங்கை வரை மடித்து விட்டிருந்தான். சராசரி ஆண்களை விட உயரமாக இருப்பான் என்று எண்ணிக் கொண்டாள். நின்றிருந்த தோரணையே வெகுவாக ஈர்ப்பதாக இருந்தது.

‘ம்ம்… சூப்பர் ஃபிகர் ஒருத்தன் நிக்கறான். நம்ம ஹாஸ்டல் முன்னாடி, செக்யூரிட்டி நிக்க விடமாட்டாங்களே!’ என்று யோசித்தவாறு முன்னேயிருந்த விடுதி வாயிலைப் பார்த்தாள்.

செக்யூரிட்டிகள் இருவரும் உணவு உண்ணச் சென்றிருக்க வேண்டும். யாரும் இல்லை என்றதும் மீண்டும் அவனைப் பார்த்தவள் திடுக்கிட்டு போனாள்.

அலைபேசியைப் பார்த்துக் கொண்டிருந்தவன் நிமிர்ந்து சரியாக இவர்களது அறை ஜன்னலைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஹெல்மெட்டின் இடைவெளி வழியாக அவனது கண்கள் இங்கேயே வெறிப்பது போலத் தோன்றவும் அடிவயிற்றில் பயப்பந்து உருள சட்டென்று ஜன்னலை மூடியவள், படுக்கையில் வந்து அமர்ந்து கொண்டாள்.

இதயம் ட்ரம்ஸ் வாசித்துக் கொண்டிருந்தது. தீவிரமாக நகத்தைக் கடித்தவாறு யோசித்துப் பார்த்தும் ஒன்றும் புரியவில்லை. ‘என்னை நோட்டம் விட வந்தவனா? இல்லை நான்தான் எதைப் பார்த்தாலும் பயந்து போகிறேனா?’

மண்டையைக் குழப்பிக் கொண்டிருக்கும் போது அவளது அலைபேசி இசைத்தது.
அவளது அம்மா சுபத்ராதான் அழைத்திருந்தார். கட்டை விரலால் அலைபேசியைத் தடவி அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தாள்.

“ஹலோ, சொல்லுமா.”

“சாப்பிட்டியா? இப்ப ஃபிரியா இருக்கியா?” கல்லூரி மதிய இடைவேளையின் போது எப்பொழுதாவது அவளுக்கு அழைத்துப் பேசுவது அவருடைய வழக்கம்தான். அவளுக்கு வேலை ஏதாவது இருக்கும் பட்சத்தில் பிறகு பேசுவதாகக் கூறி அழைப்பை நிறுத்துவாள். அதனால் கேட்டுக் கொண்டார்.

“ம்ப்ச்… சும்மாதான்மா இருக்கேன். போரடிக்குது. காலேஜுக்கு இன்னைக்குப் போகலை. ஹாஸ்டல்லதான் இருக்கேன்.”

“ஏன்டி? இன்னைக்கு லீவா?” என்ன பொய் சொல்லலாம் என சில மைக்ரோ வினாடிகள் யோசித்தவள், சட்டென்று வாயில் வந்ததைக் கூறினாள்.

“இல்லைம்மா. எனக்கு காலையில லேசா தலைவலி அதனாலதான் காலேஜுக்குப் போகலை. சுஜியும் இல்லாம தனியா இருக்க போரடிக்குது.”

“ஆமா, எப்பப் பாரு அந்த ஃபோனையே நோண்டிக்கிட்டு இருந்தா தலைவலி வராம என்ன செய்யும்?”

“ம்மா… வயித்துவலி, கால்வலின்னு எதைச் சொன்னாலும் நீ ஃபோனை நோண்டாதன்னுதான் சொல்லுவ, வேற ஏதாவது புதுசா காரணம் யோசிம்மா.” நக்கலடித்தாள்.

“கொழுப்புடி உனக்கு தனியா உட்கார்ந்திருந்தா போரடிக்கும்தான். ஏதாவது ஷாப்பிங் போகலாம்ல, அடுத்த வாரம் உன் பிறந்தநாள் வருது அதுக்கு ட்ரெஸ் எடுக்கலாம்ல.”

“ம்ப்ச்… எடுக்கனும்.”

“ஏன்டி சலிச்சிக்கிற? லீவ் இருந்தா பிறந்தநாளுக்கு இங்க வா.”

“தெரியலம்மா, முடிஞ்சா வரேன்.” பேசிக்கொண்டிருந்தவளுக்கு தன் தாயே உடனிருப்பது போல பாதுகாப்பாக ஒரு உணர்வு தோன்றியதும், மெதுவாக எழுந்து சென்று ஜன்னலைத் திறந்து பார்த்தாள்.

விடுதிக்கு எதிரே இருந்த மரத்தடியில் பைக்கும் இல்லை அந்த ஆளும் இல்லை. கழுத்தை வளைத்து எக்கி சாலையின் இருபுறமும் தேடிப் பார்த்தாள். யாரும் நிற்பது போலத் தோன்றாததால் சற்று நிம்மதி ஆனது.

‘அவன் எதேர்ச்சையா நின்னுகிட்டு இருந்தான் போல, அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்ங்கற மாதிரி பயந்துட்ட லூசு’ என்று தன்னைத்தானே மனதுக்குள் திட்டியவள் மனது லேசாக ஆசுவாசப்பட்டது. அதுவரை தாயின் உரையாடலில் கவனமில்லாமல் இருந்தவள், அப்போதுதான் தாயின் பேச்சை சற்று கவனித்தாள்.

ஹரிணி தனது பேச்சை கவனித்துக் கொண்டிருக்கிறாள் என்ற நினைப்பில்,

“ஹரிணி உனக்கு ஒரு வரன் வந்திருக்குடி. ஆறு மாசத்துக்கு முன்னாடியே கேட்டாங்க. நமக்கு தூரத்து சொந்தம்தான். அந்த பையன் உன்னை ஏதோ பங்ஷன்ல பார்த்துட்டு விருப்பப்பட்டு வந்து கேட்டாங்க. நல்ல இடம். பையனும் நல்ல வேலையில இருக்கான்.

அப்ப உங்கப்பா அவ படிப்பை முடிக்கனும் இப்ப எதுவும் பேச முடியாதுன்னு சொல்லிட்டாங்க. இப்ப மறுபடியும் வந்து பேசினாங்க. நீதான் படிப்ப முடிக்கப் போறீயே! அதனால ஜாதகம் பார்த்தோம்,

நல்லா பொருந்தி வருது. பையனைப் பத்தி விசாரிச்சதும் திருப்தியா இருக்கு.
அம்மாவுக்கும் ரொம்ப பிடிச்சிருக்குடா! நீ ஊருக்கு வரும்போது அவங்களை பொண்ணு பார்க்க வரச்சொல்லலாமா? அந்தப் பையனைப் பத்தின டீடெயில்ஸ் உனக்கு அனுப்பவா?”

ஹரிணி கவனித்துக் கொண்டிருக்கிறாள் என்ற நினைப்பில் அவளது தாய் பேசிக்கொண்டே போக, கடைசி இரு வரிகளை மட்டுமே காதில் வாங்கியவள்,

“ம்மா… கடுப்பக் கிளப்பாத. உனக்குப் பிடிச்சா நீ கல்யாணம் பண்ணிக்கோ. என்னை ஆள விடு. நான் பிஜி பண்ணனும் வேலைக்குப் போகனும். நிறைய கனவுகள் இருக்கு. இந்த மாதிரி ஏதாவது ஏடாகூடமா பண்ணீங்கன்னா ஊருக்கே வரமாட்டேன் பார்த்துக்க.”

கடுப்போடு அலைபேசியை அணைத்துத் தூக்கிப் போட்டவளின் மனநிலையே மாறி இருந்தது.

“கல்யாணமாம்! ஆரம்பிச்சிட்டாங்க… இப்பதான் யுஜியே முடிக்கப் போறேன். இன்னும் எவ்வளவு படிக்கனும். எவ்வளவு சாதிக்கனும். அதுக்குள்ள கல்யாணப் பேச்சு எடுத்தா என்ன அர்த்தம்? ஆசைப்பட்டு இந்த கோர்ஸ் எடுத்திருக்கேன், அதுக்குள்ள கல்யாணம் பண்ணி என் ஆசையெல்லாம் குழி தோண்டிப் புதைக்கனுமா? நெவர்,

இனி இந்தப் பேச்சு எடுக்கட்டும் அப்புறம் இருக்கு அவங்களுக்கு.”
வெகுவாகப் பொருமியவள், தனது தனா அண்ணனுக்கு ஃபோன் செய்து இது குறித்து பேச வேண்டும் என்றும் எண்ணிக் கொண்டாள். ஹரிணியின் பெரியப்பா மகனான தனா என்றழைக்கப்படும் தனசேகர் சொல்வது கொஞ்சம் எடுபடும் அவளது பெற்றோர்களிடம்.

தனியாக விடுதியில் தங்கி கல்லூரியைத் தொடர வேண்டும் என்ற நிலையில் வெகுவாகத் தயங்கிய அவளது பெற்றோரைச் சமாதானப்படுத்தி, இந்த விடுதியையும் தேர்ந்தெடுத்துக் கொடுத்தவன் தனாதான்.

ஹரிணியின் மீது மிகுந்த பாசம் உடையவன். அவனுடைய செல்லத் தங்கை இவள்.

திருச்சியில் பணிபுரிகிறான். ஹரிணியின் பள்ளி கல்லூரி விடுமுறைகள் பெரும்பாலும் திருச்சியில் அவளது பெரியப்பா வீட்டில் அவளது அண்ணனுடனே கழியும்.

ஏதேதோ நினைவுகளுடன் மிகவும் கடினப்பட்டு அரைமணி நேரத்தை நெட்டித் தள்ளினாள். தன் பொறுமை எல்லையைக் கடக்கும் நிலையை அடைந்ததை உணர்ந்தவள், தன் தாய் கூறியது போல சிறிது நேரம் ஷாப்பிங்காவது போகலாம் என்று முடிவெடுத்துக் கிளம்பினாள்.

பட்டப்பகலில் அத்தனை ஜனத்திரளுக்கு மத்தியில் எவன் என்னை என்ன செய்து விட முடியும்? என்ற அசட்டுத் துணிச்சலும் சேர்ந்து கொள்ள, விடுவிடுவென்று கிளம்பினாள்.

அடர் நீல வண்ணத்தில் த்ரீ போர்த் ஜீன்ஸ் பேண்டும் லெமன் யெல்லோ நிற டாப்ஸும் அணிந்தாள். தனது குட்டையான முடியை மொத்தமாக வாறி சற்று உயரமான குதிரைவால் கொண்டையாக போட்டவள், லேசாக ஒப்பனை செய்துகொண்டு கிளம்பி விடுதியை விட்டு வெளியேறினாள்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருபுறமும் பார்த்துக் கொண்டாள்.

சந்தேகத்திற்கு இடமாக எதுவும் தோன்றாததால் விடுதியை விட்டு வெளியேறி ஆட்டோ ஒன்றை அமர்த்திக் கொண்டு கமர்ஷியல் ஸ்ட்ரீட் நோக்கிச் சென்றாள்.

பெங்களூரு கங்கா நகரில் பரபரப்பான சாலையில் அமைந்துள்ள சி பி ஐ அலுவலகம். வழக்கம் போல காவியும் வெண்மையும் கலந்த நிறத்தில் மூன்று மாடிக் கட்டிடத்துடன் கம்பீரமாக நின்றது. பலதரப்பட்ட முகங்கள் அங்கே காணப்பட்டன. பரபரப்பாக சிலர், அமைதியான முகத்துடன் சிலர், அதிகபட்ச டென்ஷனுடன் சிலர்.

அந்த அலுவலகத்தின் முன்பு லாவகமாக தனது இருசக்கர வாகனத்தில் வந்து இறங்கியவன் மிகக் கம்பீரமாக இருந்தான்.

ஃபார்மல் உடை கனகச்சிதமாகப் பொருந்தியிருந்தது அவனுக்கு. நிமிர்ந்த நடையும், நடையில் வேகமும், வேகத்தில் அலட்சியமும் அவன் ஒரு அக்மார்க் முத்திரை குத்தப்பட்ட போலீஸ்காரன் என்பதைக் காட்டியது.

விடுவிடுவென்று படிகளில் ஏறியவனுக்கு எதிர்ப்பட்டவர்கள் அனைவரும் சல்யூட் வைக்க, லேசாகத் தலையசைத்து அதனை ஏற்றபடி ஏறியவன் நிச்சயம் உயர் பதவி ஒன்றை வகிப்பவனாகத்தான் இருக்க வேண்டும்.
நடுவண் புலனாய்வுச் செயலக இயக்குநர் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அறையின் கதவை நாசூக்காகத் தட்டி அனுமதி கேட்டவன் அனுமதி கிடைத்ததும் உள்ளே நுழைந்தான்.

ஆளுமையோடுஅமர்ந்திருந்த அதிகாரிக்கு விரைப்பாக சல்யூட் ஒன்றை வைத்துத் தளர்ந்தவனின் முகம் வெகுவாக இறுகிப் போய் கிடந்தது.

குளிரூட்டப்பட்ட தூய்மையான அந்த அறையில் தேசத்தலைவர்களின் புகைப்படங்கள் மாட்டப்பட்டு இருந்தது. நடுநாயகமாக ஒரு மேஜை வீற்றிருந்தது. அதன்மீது பொருட்கள் ஒழுங்கோடும் நேர்த்தியாகவும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. மேஜையின் மீதிருந்த பெயர் பலகை தீரன் சக்ரவர்த்தி என்ற பெயரை கம்பீரமாகத் தாங்கி நின்றது.

“ப்ளீஸ் பி சீட்டட்…”
அமரச் சொன்னவர் ஐம்பதுகளின் இடையில் இருந்தார். வகிக்கும் பதவிக்கேற்ப கம்பீரம் குறையாமல் இருந்தது. லேசாக முறுக்கி விடப்பட்ட மீசையும் காதோர நரைமுடியும் மதிப்பைக் கூட்டி காட்டியது. அவரது குரல் ஆளுமையோடும் அதிகாரத்தோடும் வெளிவந்தது.
அடிபணிந்து அமர்ந்தான்.

அவனுடைய அமைதியின்மையை மௌனமாக அளவிட்டவரின் உதட்டில் மெல்ல புன்னகை ஒன்று வந்தமர்ந்தது.

“தென்… மூன்று நாட்கள் ஆகிடுச்சி, இதுவரை அந்தப் பொண்ணு எந்த காவல்துறையை சேர்ந்தவரையும் தொடர்பு கொள்ளலை. இனியும் தாமதிக்கனுமா?”

“ம்ப்ச்… உங்களுக்கு அவளைப்பத்தி நல்லாத் தெரியும். ஷீ இஸ் ஹார்ம்லெஸ், அவ பயந்து போய்தான் ரூமைவிட்டு வெளியவே வர்றதில்லை.”

“ம்ம்ம்… ஐ நோ…”
சற்று முறைப்புடனே அவரை ஏறிட்டவன்,

“ஏன் தெரியாம? அதான் அவ ஹாஸ்டல சுத்தி மப்டில கண்காணிக்க ஆள் நிப்பாட்டி வச்சிருக்கீங்களே.”

சப்தம் வெளியே வராமல் மெல்ல நகைத்துக் கொண்டவர்.

“கண்காணிக்கறது! ம்ம்… கரெக்ட்… கூடவே பாதுகாப்புக்குன்னும் எடுத்துக்கலாம் இல்லையா.”

“…”

“ஆனா இந்த கேஸை இனியும் தாமதிக்க முடியாது. அந்த பொண்ணுகிட்ட விசாரிச்சு நீங்க ரிப்போர்ட் குடுத்தே ஆகனும்.”

“ம்ப்ச்… அப்பா, அவகிட்ட முதல் முதலா பேசறது இப்படியா இருக்கனும்.” வெகுவாக உணர்ச்சி வசப்பட்டு இருந்தான்.
கூர்மையாக அவனை நோக்கியவர்,

“என் மகனா நீ எது பேசறதா இருந்தாலும் வீட்டுலதான் பேசனும். இங்க ஆபீஸ்ல அபீஷியலா மட்டும் பேசறீங்களா மிஸ்டர் சரண் சக்ரவர்த்தி.”

மீண்டும் விரைத்தவன், “சாரி சார். அந்த ரோடுல மொத்தம் மூனு சிசிடீவி கேமரா இருக்கு. ஆனா இரண்டு ரிப்பேராயிருக்கு. அது எப்படி ரிப்பேர் ஆச்சுன்னு விசாரணை போயிட்டு இருக்கு.

கொலை நடந்த காலை நேரத்துல பனிமூட்டம் அதிகமா இருந்ததால காட்சிகள் அவ்வளவு தெளிவா இல்லை.

அதுலயும் கொலைகாரனோட பின்பாகம்தான் நல்லா க்ளியரா பதிவாயிருக்கு. அவனுடைய முகம் முழுக்க மூடியிருக்கான். லாங் கோட் வித் ஹூடி போட்டிருந்தான். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்துடுச்சி. கூர்மையான ஆயுதம் பயன்படுத்தப்பட்டு இருக்கு. 12 இன்ச் வரை ஆழமான காயம் இருக்கு.”
என்றவாறு பிரேதப் பரிசோதனை அறிக்கையை கொடுத்தான்.

“ சரவுண்டிங் ஏரியால இருக்கற எல்லா சிசிடீவியும் செக் பண்ணியாச்சு அவனை அடையாளம் கண்டுபிடிக்க முடியலை.”

“இது பொறுப்பான பதிலா மிஸ்டர் சரண்? நேருக்கு நேரா பார்த்த ஐவிட்னஸ் இருக்கும் போது, நீங்க அந்த கொலைகாரன் போட்டிருந்த ட்ரெஸ் பத்தி சொல்றீங்க. இந்த பதில் குடுக்க நீங்க தேவையில்லை. இது அந்த வீடியோலயே தெரியுதே!
கொலை செய்யப்பட்டவர் சாதாரண ஆள் இல்லை. இந்த டிஸ்டிரிக் கலெக்ட்டர். நேரடியா சிபிஐக்கிட்ட கேஸ் வந்திருக்கு. ஆனா உங்க பதில் பொறுப்பில்லாம இருக்கு.” சற்று கடுமை கூடியிருந்தது குரலில்.

“…”

“உங்களுக்கு இன்னும் இரண்டு நாள் டைம் தரேன். அதுக்குள்ள அந்த பொண்ணுகிட்ட விசாரிச்சு ரிப்போர்ட் தர்றீங்க. இல்லைன்னா இந்த கேஸை நான் வேற யாருக்காவது மாத்திக் குடுக்க வேண்டி வரும்.”

“இல்ல சார்! அதுக்கு அவசியம் வராது. நான் இரண்டு நாள்ல உங்களுக்கு ரிப்போர்ட் தரேன் சார்.” விரைப்பாக சல்யூட் அடித்தவன், விடுவிடுவென்று அலுவலகத்தை விட்டு வெளியேறி தனது வாகனத்தை எடுத்துக் கொண்டு போக்குவரத்தில் கலந்தான்.

கமர்ஷியல் ஸ்ட்ரீடில் ஒரு பிரபலமான துணிக்கடையில் பிராண்டட் ஜீன்ஸ் குர்தி டாப்ஸ் என்று தேர்ந்தெடுத்தவள். பிறந்த நாளுக்கென்று இளஞ்சிவப்பு நிறத்தில் சுடிதார் ஒன்றையும் தேர்ந்தெடுத்து பில் போட்டு வாங்கிக் கொண்டு வெளியே வந்தாள்.

அது சற்று பிசியான சாலை. இருபுறமும் வாகனங்கள் சென்று கொண்டும் வந்துகொண்டும் இருந்தன. தனியார் போக்குவரத்து நிறுவனத்திற்கு அழைத்து கார் ஒன்றை புக் செய்தவள், காத்திருந்தாள்.

இடது கையில் துணிகள் அடங்கிய பையை வைத்துக் கொண்டு, வலது கையில் அலைபேசியை வைத்துக்கொண்டு சுற்றுப்புறத்தை ஆராய்ந்தவாறு நின்றிருந்தவள் கண்ணில் அதே நவீனரக பைக்கும் அடர்நீல நிற ஜீன்ஸும், ஹாப் வொயிட் சர்ட்டும் அணிந்த மனிதனும் தென்பட்டனர்.

உச்சி முதல் உள்ளங்கால் வரை சர்வாங்கமும் ஆடிப்போனது அவளுக்கு. அதே மனிதன்! அவனேதான்! விடுதி வாசலில் இருந்தானே. இவளிருந்த அதே சாலையில் இவள் நின்றிருந்த இடத்துக்கு சற்றுத் தள்ளி நின்றிருந்தான்.

அவனது பார்வை முழுக்க அவள்மீது பதிந்திருந்தது. பயத்தில் அவளைக் கேட்காமலேயே அவளது கையும் காலும் கதகளி ஆடின.
உலர்ந்த தொண்டை அடைக்க, மிரட்சியோடு அவனைப் பார்த்தவள் பயத்தில் தான் என்ன செய்கிறோம்? என்பதையே உணராமல் எதிலிருந்தோ தப்பிப்பவள் போல வேகமாக அவனைப் பார்த்தபடியே நடந்து அந்த பிசியான சாலையின் நடுவே வந்திருந்தாள்.

அவளை நோக்கிப் பேய் வேகத்தில் கார் ஒன்று வந்துகொண்டிருந்தது. சுற்றுப்புற வாகனங்களின் ஹாரன் ஒலியில் தன்னிலை மீண்டவள், நட்ட நடு ரோட்டில் தன்னை நோக்கி வரும் காரை அதிர்ச்சியோடு பார்த்தபடி செய்வதறியாமல் நின்றிருந்தாள்.

—வேட்டை தொடரும் .

 

error: Content is protected !!