logicillaMagic4

logicillaMagic4

மேஜிக் 4

 

தனக்கு வந்த கனவினால் நந்தனா மிகவும் பதட்டத்துடன் யாருடனும் பேசாமல் இருக்க, அதைத் தவறாய் புரிந்துகொண்ட மயூரா மீண்டும் கலவரமாகி அவளை நெருங்கவே பயந்து அவளைத்தவிர்த்து வகுப்பில் சுகன்யாவின் அருகில் அமர்ந்துகொண்டாள்.

உணவு இடைவேளைக்கு முந்தைய வகுப்பில் நந்தனாவின் கவனம் மீண்டும் மீண்டும் சிதறியது. நிரஞ்சன் அவள் வீட்டாரிடம் உண்மையைத் தானே சொல்வதாகச் சொன்னதும், கனவும் மீண்டும் மீண்டும் நினைவிற்கு வர, தன் பையினுள் கைப்பேசியை ஒளித்துவைத்து யாருக்கும் தெரியாமல் அவனுக்கு மெஸேஜ் செய்தாள்.

“ஹாய் சார். வேலையா இருக்கீங்களா? உங்க கிட்ட பேசணும்”

இதை அருகிலேயே இருந்த சுகன்யா, மயூரா கூட அறியவில்லை. முகத்தைச் சாதாரணமாக வைத்துக்கொண்டு பாடத்தைக் கவனிக்கத் துவங்கினாள் நந்தனா.

மயூரா நந்தனாவின் காதில் விழாமல் சுகன்யாவின் காதில் குசுகுசுப்பாய் “சுகு சொன்னா கேளு இந்த அமைதியை வச்சு பேய் ஓடிப்போச்சுன்னு நாம சும்மா இருக்கக் கூடாது. பேய் இவளுக்குள்ள எங்கேயோ ஒளிஞ்சுக்கிட்டு, போக்கு காட்டுது. புரியுதா?”

“என்னது பேய் ஒளிஞ்சுக்கிட்டு இருக்கா? அடியே ஏன் டி உளர்றே?”

“ஆமா எதுக்கோ காத்து கிட்டு இருக்கு. எதுக்குன்னுத் தான் தெரியலை” தீவிரமாக முகத்தை வைத்துக்கொண்டு, தலையை ஆட்டியபடி அவள் சொல்ல

இவர்களின் குசுகுசு குரல் ஆசிரியரின் காதில் விழுந்ததோ, என்னமோ அவர் தொண்டையை செரும தோழிகள் இருவரும் அமைதியாகினர்.

பையினுள் கைப்பேசி வைப்ரேட் ஆக அதை எடுத்துப் பார்க்க

“நான் இன்னிக்கி பிஸி நந்து. சாரி மா நாளைக்குப் பேசுவோம்“

நிரஞ்சனின் மெஸேஜை பார்த்தவள் ஏனோ கோவம் தலைக்கேற,

‘எப்போ பார்த்தாலும் என்ன பிஸி? அப்போ நாங்க எல்லாம் வெட்டிப் பீசா?’ என்று ஒருமனம் திட்ட, ‘ இல்லையா பின்ன?’ என்று மறு மனம் கேட்க, வகுப்பு என்பதையும் மறந்து, “ஆ…” என்று உரக்கக் கத்திவிட, ஆசிரியரின் முறைப்படி வாங்கியவள் தலைகுனிந்து கொண்டாள்.

நந்தனாவின் இச்செயலைப் பார்த்து அரண்டது மயூரா மட்டுமில்லை சுகன்யாவும்தான்!

“சொன்னேன்ல சுகு? பார் எப்படி திடீர்ன்னு கத்துறா“

“அதுக்கு என்னடி ? ”

“நம்புடி…கண்டிப்பா அது அவளுக்குள்ளே எங்கேயோ இருக்கு அப்போ அப்போ வெளியிலே வருது பார். பேசாம எதுக்கும் நான் கொண்டு வந்திருக்கத் தாயத்தை கட்டிக்கோடி”

மேஜையின் அடியின் ரகசியமாய் சுகன்யாவிடம் தாயத்தை நீட்டினாள் மயூரா.

சுகன்யாவால் நம்பவே முடியவில்லை “ஹே ஏன் டி இம்சிக்கிறே? நெஜமாவே தாயத்து கொண்டுவந்து இருக்கியா ? எங்கேடி புடிச்ச ஒரே நாள்ல?”

மயூரா பெருமையாய் “அது எங்க வீட்டுப்பக்கத்துல ஒரு கீரை கடை பாட்டி இருகாங்க, அவங்க பெண்ணோட மாமியாரோட நாத்தனாரோட ஓரகத்தியோட ஒன்னுவிட்ட அண்ணன் மந்திரித்துக் கொடுத்தார்.”

ஏகத்துக்கும் கடுப்பான சுகன்யா “உன்னை ஒன்னு விட்டேனா தெரியும்! சும்மா கடுப்பேத்தாம ஓடிடு. அவளுக்கு ஒண்ணுமில்லை அவ சாதாரணமாத்தான் இருக்கா.”

“அடிப்போடி! எதோ பிரெண்டாச்சேன்னு சொன்னேன். கேட்டா கேளு கேட்காட்டி போ”

“மயூ ப்ளீஸ்…அவளைவிட உன் இம்சை தாங்கலை”

முறைத்த மயூராவோ “நல்லதுக்கே காலமில்லை” தோளைக் குலுக்கியபடி திரும்பிக்கொண்டாள்.

மதிய உணவு இடைவேளை நேரத்திற்கான மணியடிக்கத் தோழிகள் கேன்டீனுக்கு புறப்பட்டனர்.

மயூரா நந்தனா விடமிருந்து எட்டியே நடக்க, சுகன்யாவோ கலவையாய் எதோ யோசனையுடன் நடந்து கொண்டிருந்தாள்.

தோள் பையிலிருந்து கைப்பேசியை எடுத்த நந்தனா நிரஞ்சனுக்கு மீண்டும் செமேஜ் செய்தாள்.

“நிரஞ்சன் எனக்கு உங்க கிட்டப் பேசியே ஆகனும்! அர்ஜென்டா”

அவனிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. சொல்லத் தெரியாத கோவமும் ஏமாற்றமும் மனதைச் சூழ “எனக்குப் பசி இல்லை நான் லைப்ரரி போறேன் நீங்க ரெண்டுபேரும் சாப்பிட்டு அங்க வாங்க.” என்றாள் வெறுப்பாக.

மயூரா ‘நீ என்ன சொன்னாலும் சரி தாயே’ என்ற தோரணையில் உடனே சரியென்று தலையசைக்க, சுகன்யா “ஹேய் சாப்பிட வா அப்புறம் எல்லாரும் சேர்ந்தே போகலாம்”

“இல்ல சுகு நான் வரலை எனக்குப் பசி இல்லை”

மனது தாங்காமல் சுகன்யா “உன்னால பசித்தாங்க முடியாது.கொஞ்சாமான சாப்பிட்டு போ.”

நாந்தனா “வேண்டாம்னு சொன்னா விடு! வற்புறுத்தாதே.” வள் என்று விழ, முகம் வாடி “பிளீஸ் நந்து…” ஆதங்கத்தில் சுகன்யா கெஞ்ச

அதிரமடைந்த நந்தனாவோ “வேணாம்னு சொன்னா விடு. என் தொண-தொணக்குறே?” கடுகடுவெனச் சென்றுவிட்டாள்.

அதுவரை வாய் திறக்காத மயூரா “சொன்னா கேளுடி இந்தத் தாயத்தைக் கட்டிக்கோ. வரச் சனிக்கிழமை இவளை நாம பேயோட்டக் கூட்டி போவோம்டி.”

“நானே செம்ம காண்டுல இருக்கேன்.வாயத் திறந்தே உனக்குப் பேயோட்டிப்புடுவேன்.” சுகன்யா முறைத்த முறையில் மயூரா சத்தம் வராமல் புலம்பியபடியே நடந்தாள்.

“முண்டம் கண்ணு முன்னாடி ஒருநாள் இவ ரா…ரா…ன்னு ஆடப்போரா… அதுவரை இதுக்கு அறிவு வரபோறதில்லை!”

நிரஞ்சன் அடுத்த நாளும் அவளைத் தொடர்பு கொள்ளவில்லை.

இருப்புக்கொள்ளாமல் அவனை நேரில் பார்த்துவிடுவதென்று அவன் மருத்துவமனைக்குச் செல்ல முடிவெடுத்தாள்.

அன்று மாலை கல்லூரியிலிருந்து நேராக அவன் மருத்துவமனைக்குச் சென்றவள், ரிசெப்ஷனில் இருந்த பெண்ணிடம்

“டாக்டர். நிரஞ்சனை பார்க்கணும்”

“அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி இருக்கீங்களா? ”

“இல்லை சொந்த விஷயமா பார்க்கணும்”

சற்று தயங்கிய அந்தப் பெண்ணோ “அவர் ஹாஸ்பிடல்ல பெர்சனல் மீட்டிங்ஸ் எதையும் அனுமதிக்க மாட்டார் மேடம்”

“கொஞ்சம் அவசரம் ப்ளீஸ்”

“உங்க பேர் மேடம் ?”

“நந்தனா“

“ஒரு நிமிஷம்” என்றவள் அங்கிருந்த தொலைப்பேசியை எடுத்து யாருக்கோ கால் செய்ய

“விசிட்டர் ஹாலில் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க மேடம்”

சுமார் 15 நிமிடங்கள் கழிந்து “நந்தனா? “ பெண் குரல் கேட்டு நிமிர்ந்தவள் முன் நின்றது ஒரு இளவயது பெண் மருத்துவர்.

“எஸ்! சொல்லுங்க”

“நீங்கதான் நிரஞ்சனை பார்க்க வந்ததா?”

“ஆமாம்” என்றவள் அப்பெண்ணைத் தாண்டித் தேடலாய் பார்வையை ஓடவிட்டாள்.

“நீங்க அவருக்குப் ஃபிரென்டா?”

“ம்ம்”

“எப்போதிலிருந்து அவரை உங்களுக்குப் பழக்கம்?”

நந்தனாவோ புருவம் சுருக்கி “என்ன கேள்வி இது? இதெல்லாம் சொன்னால்தான் அவரைப் பார்க்க முடியுமா?”

“எஸ்! மொதல்ல கேட்டதுக்குப் பதில். எவளோ நாளா அவரை உங்களுக்குத் தெரியும் ? எப்படி பழக்கம்? “

நந்தனா “ப்ளீஸ்! இதெல்லாம் சொல்ல எனக்கு நேரமில்ல… அவர் எங்கே இருக்கார்?” கேட்டபடி இரண்டடி முன்னே வைக்க

“உன்னைப் பார்த்தால் நிரஞ்சனுக்கு பிரெண்ட் மாதிரி தெரியலையே. கழுத்துல தொங்கற காலேஜ் ஐடி கார்டே சொல்லுதே நீ ஒரு ஸ்டுடென்ட்ன்னு! “

‘என்ன ஒரு புத்திசாலித்தனம்! இத தெரிஞ்சுக்கவே நீ டாக்டருக்குப் படிச்சே?’

“இப்போ என்னதான் வேணும் உங்களுக்கு?”

நந்தனாவை ஊடுருவும் பார்வை பார்த்தவள் மிரட்டும் குரலில் “உண்மையைச் சொல்லு நீ யார் ?”

‘அட கேள்விக்குப் பிறந்தவளே! ஏன் இம்சிக்கிறே?’

“எனக்கு உங்க கிட்ட பேசிட்டு இருக்க நேரமில்லை! விழியை விடுங்க!”

“நிரஞ்சனுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?”

‘இம்சை இம்சை’

“நான் அவரோட காதலி… லவ்வர்! போதுமா? இன்னும் ஏதான தெரியனுமா?”. நந்தனா அடக்கமாட்டாத கோபத்துடன் சொல்ல அதே நொடி

“வைஷாலி நீ இங்க என்ன பண்றே ? ” என்ற குரல் கேட்டு இரு பெண்களுமே திரும்ப அங்கே நின்றிருந்தான் நிரஞ்சன்.

அவனை வேகமாக நெருங்கிய வைஷாலி “நிரஞ்சன் இந்தப் பொண்ணு…இந்தப் பொண்ணு சொல்கிறது உண்மையா?” வார்த்தைகள் திக்கித் திக்கி வெளிவர

வைஷாலியை குழப்பமாய் பார்த்தவன் “காம் டவுன் வைஷு. என்ன கேட்கறே? பொறுமையா கேளு ப்ளீஸ்”

பதட்டம் சற்றும் குறையாத குரலில் வைஷாலியோ “நீங்களும் இவளும் லவ் பண்றதா சொல்றளே உண்மையா?” மீண்டும் கேட்கத் திகைத்தவன், கேள்வியாய் நந்தனாவை பார்க்க, அவளோ முகத்தில் கோபம் மாறாமல் அவனையே துளைக்கும் பார்வை பார்த்துக்கொண்டிருந்தாள்.

‘இவ எதுக்கு இப்போ குட்டையை குழப்புறா? இருக்க இம்சை பத்தாதா ஆண்டவா! ‘ பார்வையை மீண்டும் வைஷாலியிடம் திரும்பியவன் “வைஷு இங்க வேண்டாம் வா. என் ஆஃபீஸ்க்கு போய்ப் பேசிக்கலாம்” இப்பொழுது நந்தனாவை பார்த்தவன் “நீயும் வா!”

அவன் கிளம்ப ஆயத்தமாக, வைஷாலியோ நகராமல்

“நிரஞ்சன்! நீங்கப் போங்க நான் வரேன். எனக்கு ஒரு அப்பாயிண்ட்மெண்ட் இருக்கு 20 – 30 நிமிஷத்துல வந்துடுறேன்”

லேசாகத் தலை அசைத்தவன் “ம்ம் சரி… நீ வா நந்து”

வைஷாலி தன் அறைக்குச் செல்ல நந்தனாவும் நிரஞ்சனும் அவனின் அறைக்குச் சென்றனர்.

அவன் அறையில் நுழைந்த நேரம் நர்ஸ் ஒருவர் அங்கே சில கோப்புகளை அடுக்கிக்கொண்டிருந்தார்.

“சிஸ்டர்! இப்போ அப்பொய்ன்ட்மென்ட்ஸ் எதுவும் இல்லைல?”

“இல்லை டாக்” என்றவர் நந்தனாவை கூர்ந்து பார்த்தபடி “இவங்க வாக் இன் பேஷண்டா டாக்?” (முன்பதிவு செய்யாத நோயாளியா? ) என்று நிரஞ்சனை பார்க்க

“இல்லை சிஸ்டர் இவங்க என் கெஸ்ட்…நீங்கப் போகும்போது கதவைச் சாத்திட்டு போய்டுங்க ப்ளீஸ்!”

தலையசைத்து விடைபெற்ற நர்ஸின் சந்தேக பார்வை கதவைச் சத்தும் வரை நந்தனாவின் மேலே இருந்தது.

“உட்கார் நந்து” அங்கிருந்த சோஃபாவில் அமரும்படி கைகாட்டி,“காப்பியா டீயா? “ புன்னகைத்தபடி கேட்க, “காபி, 2 ஸ்பூன் சக்கரை” என்றாள் கோவம் மறைந்து சற்று மென்மையான முகத்துடன்.

“ம்ம்” என்றவன் அங்கிருந்த காபி மேக்கரை ஆன் செய்து காபி தயாரிக்கத் துவங்கினான்

கண்களை மூடி ஆழ்ந்த மூச்சுகளை சுவாசித்தவள் சற்று மனம் இளக தான் அமர்ந்திருந்த அந்த அறையைச் சுற்றி பார்வையைச் சுழல விட்டாள்.

அந்த விசாலமான அறையில் ஒருபுறம் அவள் அமர்ந்திருந்த சோஃபா இருக்க, அதன் அருகில் அவன் மேஜை, அதில் சில கோப்புகளும் பெரிய கணினியும் நாற்காலியும் அதன் பின்னே பெரிய ஜன்னலும், அதன் அருகே சின்ன மேடையும் அதில் சில உபகரணங்களும் காபி மேக்கரும் சிறிய குளிர்சாதனப் பெட்டியும் இருந்தன. எதிர்புறம் அறைக்குச் செல்லக் கதவும் இருந்தது. அது ஒரு மருத்துவரின் அரை போல் அல்லாது ஒரு தொழிலதிபரின் அலுவலக அறைபோல் இருந்தது.

வியந்து ரசித்தவாறே மெல்ல எழுந்தவள் அவன் நின்றிருந்த இடத்தைத் தாண்டி ஜன்னலருகில் சென்று வெளியே சாலையை வேடிக்கை பார்க்க.

கமகமாக்கும் காபியை அவள் முன் நீட்டிய நிரஞ்சன் “பிடிச்சிருக்கா பாரு தேவைன்னா இன்னும் சர்க்கரை போடறேன்” தனக்கான காபியை எடுத்துக்கொண்டான்

காபியின் நறுமணத்தை முகர்ந்தவள் ‘ம்ம் ஒரு தலைவலியே தலைவலிக்கு காபியும் கொடுக்குதே ஆச்சரியக்குறி’ புன்னைத்துக் கொண்டாள்.

இருவரும் மெல்ல காபியை ரசித்துப் பருகிய படி இருக்க,

நிரஞ்சன் “சொல்லு நந்து என்ன என்னைத் தேடி இங்கயே வந்துட்ட? எதானா பிரச்சனையா? “ அவன் முகத்தில் ஆதங்கம் தெரிந்தது.

“ஹ்ம்ம் நீங்கப் பிஸியா இருக்கீங்க புரியுது, ஆனா எங்க வீட்டுல உண்மையைச் சொல்லுற வரை எனக்குத் தூக்கமே வராது. எதோ தப்பு பண்றமாதிரி குற்றஉணர்ச்சில தூக்கமே வரமாட்டேங்குது. ப்ளீஸ் கொஞ்சம் என் பிரச்சனையை முடிச்சுவைங்க” கெஞ்சுதலாய் அவள் கேட்க.

தன் காபி கோப்பையை மேஜையில் வைத்தவன் நீண்ட மூச்சொன்றை விட்டு நந்தனாவின் புறம் திரும்பினான்.

“நான் உன் பிரச்சனையைத் தீர்த்து வைக்கிறேன். ஆனா இப்போ நீ துவக்கி இருக்கும் பிரச்னையை யார் தீர்த்து வைப்பா?” ஒற்றை புருவம் உயர்த்தி கேட்டான்.

நாக்கை கடித்துக்கொண்டவள் ஆத்திரத்தில் தான் வைஷாலியிடம் தன்னை அவன் காதலி என்று சொன்னதை எண்ணி தலை குனிந்தாள்

“சாரி உங்க கூட வேலை பாக்குறவங்க கிட்ட நான் அப்படி சொல்லி இருக்க கூடாது. என்னை மன்னிச்சுடுங்க. “

ஏதும் பதில் பேசாமல் அவளை நெருங்கினான் நிரஞ்சன். பின்னாலே ஜன்னல் தடுக்க நகர முடியாமல் திணறியவள் பயத்துடன் அவனை அண்ணார்ந்து பார்க்க.

மெல்ல அவள் காதருகில் குனிந்தவனோ “அவ யார் தெரியுமா?” என்று கேட்க 

அவளோ திக்கி திக்கி “யா…யாரு?”

அவள் கண்ணோடு கண்ணோக்கி “எனக்கு நிச்சயம் பண்ண பொண்ணு!”

அதிர்ச்சியில் உறைந்தவள் “என்ன? “

“நான்…” அவன் துவங்கிய நொடி கதவு திறக்கும் சத்தம் கேட்டு இருவரும் திரும்ப

அங்கே வந்து நின்றது டாக்டர். ஜெகந்நாதன், நிரஞ்சனின் தந்தை, அந்த ஹாஸ்பிடலின் சேர்மேன்!

error: Content is protected !!