Ponnunjal12b

ஊஞ்சல் – 12-b

மன அழுத்தம் ஏற்படுவதற்கு மூன்று முக்கிய காரணங்கள் இருக்கின்றன.

வாழ்வியல் அழுத்தம்

தன்னை ஏதாவது உடல் ரீதியாக தாக்கும் என ஒருநபர் பயந்தால், உடல் உடனடியாக அதிகபட்ச ஆற்றலை தந்து, அந்த சூழ்நிலையில் தன்னைக் காத்துக்கொள்ள அல்லது தப்பிச்செல்ல உதவும் வகையிலான வாழ்வியல் அழுத்தம்.

உள்நிலை அழுத்தம்

நம்மால் கட்டுப்படுத்த முடியாத ஒன்றைப் பற்றி, கவலைகளை வளர்த்துக் கொள்ளும் போது ஏற்படும் உள்நிலை அழுத்தம். மக்கள் தாங்களாகவே அந்த அழுத்தத்தை உண்டாக்கி கொள்கிறார்கள். சிலர் இவ்வகை வாழ்நிலைக்கு பழகி விடுகிறார்கள். சமயங்களில் அவர்கள் மேலும் அழுத்தமான சூழ்நிலைகளை விரும்பி ஏற்கிறார்கள்.

சுற்றுச்சூழல் அழுத்தம்

சத்தம், கூட்டம், வேலை அல்லது குடும்பபளு போன்ற காரணிகளால் இந்த வகையான அழுத்தம் ஏற்படுகிறது. எந்த காரணங்களால் அழுத்தம் உண்டாகிறது என்பதை அறிந்து, அதனை தவிர்ப்பதன் மூலம் அழுத்த அளவை குறைக்கலாம்.

மேற்கூறிய இந்த மூன்று வகை அழுத்தங்களும் பெரியவர்கள், சிறியவர்கள் என்ற பாரபட்சம் இல்லாமல் பொதுவாக ஏற்படும் மனஅழுத்தக் காரணிகள் ஆகும்.

எந்த ஒரு உளநோயும் பாதிக்கப்பட்டவுடன், பாதிக்கப் பட்டவருக்கோ, அவர்களைச் சார்ந்தவர்களுக்கோ உடனே தெரிவதில்லை. பாதிப்படைந்தவரின் பேச்சுகள், பழக்க வழக்கங்கள் மாறுபடும்போது மட்டுமே, கவனத்தில் கொள்ளப்படுகின்றன. உடனடி மருத்துவ ஆலோசனைகளை மேற்கொண்டால், எளிதில் மனஅழுத்தத்தின் தாக்கத்தில் இருந்து வெளியே வந்து விடலாம்.
*************************************************************

மனதின் ரணத்தை பொருட்படுத்தாது, தங்களுக்கு நடந்த அனைத்தையும் மூச்சு விடாமல் சொன்னவள் பெருமூச்சுடன் கணவனைப் பார்க்க, அவன் முகம் உணர்ச்சிகளை தொலைத்திருந்தது.

அசம்பாவிதங்களை சொன்னவளின் கைகளும் நடுங்கிக் கொண்டிருக்க, தன் கைகளை அவளுடன் கோர்த்து அவளை ஆறுதல் படுத்தினான் ரிஷபன். சற்று நேரம் கழித்து மீண்டும் தன் இன்னல்களை கூற ஆரம்பிக்க, முடிவில்லா இடர்கள் கண்முன் வந்தன…

“பாப்பா பொழைச்சிட்டானு என்னால மூச்சு விட முடியல பாவா! அவள வீட்டுக்கு கூட்டிட்டு வந்த பிறகுதான் இதுவரைக்கும் பட்ட கஷ்டம் எல்லாம் ஒண்ணுமே இல்லன்னு நினைக்க வைக்கிற மாதிரி எல்லாமே தலைகீழா மாறிபோச்சு… நடந்த சம்பவத்தோட தாக்கம் அவளை மட்டும் இல்ல… என்னையும் சேர்த்து அடிச்சுப் போட்டது” என்று கணவனிடம் சோகத்தில் தத்தளித்தவள் தன் அவலநிலையை தொடர்ந்து கூறினாள்.

மனம் முழுவதும் பயம் என்ற உணர்வு அரக்கத்தனமாய் அசலாட்சியை ஆட்சி செய்து கொண்டிருந்தது. கணவனின் இழப்பில் உண்டான வலிகளும், அதற்குப் பிறகான வாழ்வுச் சுமைகளையும் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் இருந்த நேரத்தில், அதை மிஞ்ச வைக்கும் முறையில் மகளுக்கு நடந்த அசம்பாவிதம், பெண்ணவளை நடைப்பிணமாக மாற்றி வைத்தது.

அடுத்ததடுத்து ஏற்பட்ட அசம்பாவிதங்கள் அவை கொடுத்த தாக்கங்கள், மனஉளைச்சல்கள் போன்ற எல்லாம் சேர்த்து அசலாட்சியை ஆட்டிவைக்க, மன அழுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டாள்.

ஒருவனை நடைப்பிணமாக்கிய குற்றஉணர்வு அவளை எந்நேரமும் அலைகழித்தது. பொறுமையோடு, பக்குவமாய் அனைத்தையும் எதிர்நோக்கும் தனது மனத்திண்மையை தொலைத்திருந்தாள்.

அசலாவின் இந்த இயலாமைகளும், எண்ணங்களுமே அவளை பின்னடையச் செய்தன. தந்தையை தவிர்த்து வேறு புதிய ஆட்களிடம் பேசவோ, முகம் பார்க்கவோ கூட பெரிதும் யோசனை செய்து மகளுடன் தனியாக ஒதுங்கி இருக்க ஆரம்பித்தாள்.

இத்தனை வருடங்களாக துன்பத்தின் சாயல் படராமல் மற்றவர்களின் தோள்களில் இளைப்பாறிய மங்கைக்கு, திடீரென்று நடுக்காட்டில் அனாதரவாய் நிற்பது போன்ற உணர்வு தாக்கியது.

தங்களைக் காக்கும் காப்பாளன் யாரும் இல்லையோ என்ற கழிவிரக்கம் மனதிலும் மூளையிலும் பதிய, அவளுடைய அன்றாட வேலைகள் மிகவும் பாதிக்கப்பட்டன.

இதனுடன் வழக்கு சம்மந்தமான விளக்கங்கள், அது தொடர்பான விசாரணைகள் என அடுத்தடுத்த செயல்பாடுகள் அவளது மன உளைச்சலை மேலும் அதிகப்படுத்தின. வேலைக்கு தொடர்ந்து செல்ல முடியாததால் வருமானம் பாதிக்கப்பட்டது.

“பைத்தியம் பிடிச்சவ மாதிரி இருந்தேன் பாவா! என் பொம்மி அதை விட மோசமா மாறிட்டு இருந்தா… ஹாஸ்பிடல்ல இருக்குற வரைக்கும் தூங்கியே இருந்ததால அவகிட்ட வித்தியாசம் பார்க்க முடியல… வீட்டுக்கு வந்து ஒரு வாரம் வரை உடம்பு சரியில்லாததால ரொம்ப அமைதியா இருக்கான்னு நினைச்சு சும்மா இருந்துட்டோம்.

என்னைத் தவிர யாரையும் அவ பக்கத்துல விடல… தாத்தாவையும் பயந்து பார்க்க ஆரம்பிச்சா… வெளியாட்கள் யாரும் பார்க்க வந்தா, நடுங்கிப்போய் என் கூடவே ஒட்டிக்கிட்டா… ரொம்ப சின்ன பிள்ளையா மாறிட்டே வந்தா… இதுக்கு முன்னாடி இல்லாத பழக்கவழக்கங்கள் எல்லாம் அவகிட்ட புதுசா வர ஆரம்பிச்சது…” என்றவள் மகளின் மாற்றங்களை சொல்ல ஆரம்பித்தாள்.

விரல் சூப்புவது, விழிப்புடன் இருக்கும் நிலையிலும், உறக்க நிலையிலும், இருந்த இடத்திலேயே சிறுநீர் கழிப்பது, திக்கித் திணறிப் பேசுவது போன்ற வயதிற்குப் பொருத்தமற்ற, சிறுகுழந்தையின் செயல்களைச் செய்ய ஆரம்பித்தாள் பொம்மி.

விளையாட்டு, பொழுதுபோக்கு போன்ற உடலுழைப்பு சமந்தப்பட்ட செயல்களில் ஈடுபட ஆர்வமின்றி இருந்தாள். பலவந்தமாய் ஒரு செயலை செய்யச் சொன்னால், பிடிவாதத்துடன் மறுத்து, தன் அழுகையை ஆயுதமாக உபயோகித்து தவிர்த்து வந்தாள்.

அதையும் மீறி பொம்மியின் மீது அந்த செயல் திணிக்கப்படும் போது, பிடிவாதமானது பன்மடங்கு அதிகரித்து, பெரும் அரற்றலுடன் கூடிய அழுகையில், மூர்ச்சை ஆகும் வரை தன் மறுப்பை கடைபிடித்தாள்.

தனது தாய் தன்னை எப்பொழுதும் கவனித்துக்கொண்டு, அருகிலேயே இருக்க வேண்டும் என்று வீண் பிடிவாதம் பிடித்தாள். அதை தவிர்க்கும் போது உடல்நிலை பாதிப்பு இல்லாவிட்டாலும் வயிற்றுப்போக்கு, தலைவலி, வாந்தி என்று பலவகையாய் முறையிட்டு, அசலாவின் அணைப்பிலேயே இருந்து வந்தாள். மொத்தத்தில் தாய் மகள் இருவரும், தங்களைத் தவிர வேறெந்த விசயங்களிலும் கவனத்தை திருப்பவில்லை.

இருவரின் மாற்றங்களை கவனித்து வந்த அசலாவின் தந்தை சுந்தர ராஜுலுவிற்கு என்ன செய்து இந்த நிலையை சமாளிப்பது? இவர்களை பக்குவப்படுத்தி எப்படி இயல்பு வாழ்க்கைக்கு திருப்புவது? என்ற தீராத கவலையில் தவித்தார்.
பகுதிநேர பணிக்கும் ஓய்வைக் கொடுத்து இருவரையும் கவனித்துக் கொண்டார். அறுவடை நேரம், விவசாயம் பாதிக்கும் என சங்கரய்யா கிராமத்தில் தங்கிக் கொள்ள, கனகம்மா உடனிருந்து கவனித்துக் கொள்ளவென சென்னை வந்தார்.

வழக்கு நிலுவையில் உள்ள காரணத்தாலும், முன் ஜாமீன் பெற்றதாலும், சென்னையை விட்டு அவர்களால் இடமாற்றம் செய்ய முடியவில்லை.

வழக்கின் தன்மையைப் பற்றியும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றியும் பேச வரும்போது வழக்கறிஞர் ஆதிரை, குடும்பத்தின் நிலையை கண்கூடாகக் கண்டவர், தாய் மகள் இருவரையும் மருத்துவரின் ஆலோசனையை பெற வெகுவாக அறிவுறுத்தினார். அவரது உதவியுடன் ஆலோசனைகளும் மருந்துகளும் எடுத்துக் கொள்ளப்பட்டன…

சத்தான ஆகாரம், அக்கறையான கவனிப்புகள், ஒருவரையொருவர் சார்ந்து, மனதில் இருப்பதை பகிர்ந்துகொள்ளுதல் போன்றவை மனஅழுத்தத்தை குறைத்து, அசலாட்சியை அன்றாட வாழ்க்கைக்கு திரும்பச் செய்தது. சீரான உடற்பயிற்சியும், யோகாவுடன் கூடிய தியானமும் மனதை ஒருநிலையில் நிற்க வைத்து, வருகின்ற பிரச்சனைகளை பக்குவமாய் எதிர்கொள்ளச் செய்தது.

கிட்டதட்ட ஆறுமாதங்களில் அசலாட்சி தன்நிலை மீண்டு வந்திருந்தாள். அவளது மனகுழப்பங்களை, குற்ற உணர்வுகளை ஆதிரை தனது நம்பிக்கையான பேச்சில் மறக்க வைத்திருந்தார்.

ஆனால் குழந்தை பொம்மியின் நிலை சிக்கலடைந்த நூல்பந்து போல் எல்லோரையும் முழிக்க வைத்துக் கொண்டே இருந்தது. மருத்துவரின் ஆலோசனைகள், மருந்துகள் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வந்தாலும் குழந்தையின் மீட்சி என்பது கடுகளவே என்றாகிப் போனது.

இவையெல்லாம் வெளிமனிதர்களை எப்பொழுதும் தனது எதிரியாக பார்க்க ஆரம்பித்து விட்ட எண்ணத்தின் வெளிப்பாடு என்று மருத்துவர் அறிவுறுத்தினார்.

துன்பங்களில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் திறன், குழந்தைக்கு குழந்தை மாறுபடுகிறது. இந்த திறனைப் பொறுத்தே உடல்ரீதியான கொடுமைகளுக்கு ஆளாகும் குழந்தைகளிடம் ஏற்படும் பாதிப்புகளும் மாறுபடுகின்றன என்ற உளவியல் ரீதியான விளக்கங்களையும் கூறி, குழந்தை இயல்பு நிலைக்கு திரும்ப சிறிது கால அவகாசங்கள் ஏற்படும் என நம்பிக்கை அளித்தனர் மருத்துவர்கள்.

நாட்கள் இப்படியே செல்ல, கொடுத்திருந்த புகார்களும் அதன் வேலைகளை தொடர்ந்து செய்து கொண்டிருந்தன. சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியாக வீட்டின் அருகே குடியிருந்த இரு பெண்களின் வாக்குமூலங்களும் ஏற்றுக் கொள்ளப்பட, அசலாட்சி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டாள்.

கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் கழித்து பிரச்சனகள் எல்லாம் ஓய்ந்த நிலையில், மீண்டும் ஊராரின் பேச்சுக்களும், பார்வைகளும் அசலாவை கலங்கடித்தது. கயவனாக இருந்தாலும் மகேஷின் தற்கொலை அந்த குடும்பத்தையே அதிர வைக்க, சாமாளிக்கும் திறனை முற்றிலும் இழந்தவர்களாய் கிராமத்தில் தஞ்சம் அடைந்தனர்.

“எங்கேயும், எந்த சூழ்நிலையிலேயும் வெளியாட்கள் யாருக்கும் நடந்த உண்மைய சொன்னதில்ல பாவா! என்ன நடந்ததுன்னு தெளிவா விளக்கம் கொடுக்க வேண்டி இருந்ததால, கோர்ட்ல நீதிபதி முன்னாடியும் டாக்டர்களுக்கு மட்டுமே சொன்னேன்… கனகம்மா அத்தைக்கும் தெரியாது. பாதிப்பு எனக்குன்னு இன்னமும் நினைச்சுட்டு இருக்காங்க…
சங்கரய்யா மாமாவும், எங்க அப்பாவும் சேர்ந்து நடந்ததெல்லாம் உங்களுக்கு தெரியபடுத்திட்டதா சொன்னாங்க… எங்க நெலமைய தெரிஞ்சுதான் நீங்களும் எங்களை ஏத்துகிட்டீங்கனு நினைச்சுட்டு இருந்தேன்.
ஆனா உங்களுக்கு எங்களோட விவரம் எதுவும் தெரியாதுன்னு அன்னைக்கு தெரிஞ்சப்போ, நீங்க எங்கள வெறுத்து ஒதுக்கிட கூடாதுன்னு பயந்தேன்! அதனாலதான் ஊருக்கு முன்னாடி என்ன சொல்லி சமாளிச்சேனோ அதையே உங்ககிட்ட சொன்னேன்.
என் பொண்ண யாரும் பாவமோ பரிதாபமாவோ பார்க்கிறது, அவளோட எதிர்காலத்தை பாதிக்கும்ங்கிற ஒரே காரணத்தினாலதான் அப்படி சொன்னேனே தவிர உங்க மேல நம்பிக்கை இல்லமா இல்ல…” என்று தனது ஒட்டுமொத்த வேதனைகளை கணவனிடம் கூறி விட்டு அவன் தோளில் இளைப்பாற ஆரம்பித்தாள்.
நடந்து முடிந்தவைகளை எல்லாம் கேட்டவனுக்கும் கட்டுகடங்காத ஆவேசமும், கோபமும் வந்தாலும் எங்கே யாரைப் போய் பழி தீர்த்துக் கொள்வது என்றே தெரியவில்லை.
“என்னால தாங்க முடியல சாலா! உன்னுடைய இழப்புகளுக்கு எந்த வகையிலும் யாராலும் நியாயம் செய்ய முடியாது… விதின்னு சொல்லி உன்னை நான் ஆறுதல் படுத்தவும் விரும்பல… ஆனா இதையெல்லாம் மறந்து, வெளியுலகத்தை தைரியமா நிமிர்ந்து பார்த்து, நல்லபடியா வாழ முயற்சி செஞ்சே ஆகணும்” என்று அவளை அணைத்து ஆறுதல் படுத்தினான்.

தாய் மகள் என்று இருவரையும் ஒட்டுமொத்தமாய் முடக்கி வைத்த அசம்பாவிதங்களை தகர்த்தெறிந்து, இனி புதியதொரு பாதையை நோக்கி பயணிக்க வைக்க தான் இனி முழுமூச்சுடன் முயற்சிக்க வேண்டும் என்று முடிவெடுத்தவன் அந்த இரவை அமைதியாகக் கழித்தான்.

கணவன் மனைவி இருவரையும் இறுக்கிய பழைய நினைவுகளை மறக்கடித்து, நிகழ்காலத்தை கையில் எடுக்க அவர்களின் செல்லசிட்டு மறுநாள் காலையில் தூக்கத்தில் இருந்து விழிப்பதைப் போல் கண்விழித்தாள்.

இருவரையும் உற்றுப் பார்த்தவள் தாயைக் கட்டிக் கொண்டு தந்தையை ஒட்டாத பார்வை பார்க்க, ஆரம்ப நாட்களில் தன்னை பார்த்து பயந்த மகளின் பார்வை ரிஷபனுக்கு மீண்டும் நினைவிற்கு வர மனதோடு நொந்து போனான்.