வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது. பைரவி நிற்காமல் ஓடிக் கொண்டிருந்தார். வாசலில் மாக்கோலம்… மாவிலைத் தோரணம்… ஆட்களை வைத்து வீட்டை முழுவதுமாக தலைகீழாக மாற்றியிருந்தார்.
முருகானந்தத்திற்கு உடல்நிலை சற்று தேறியிருந்ததால் அவர் நடமாடிக் கொண்டிருந்தார். ஆனால் முழு வேலையும் கார்த்திக் மட்டுமே தன் தோளில் சுமந்தான்.
அவனுக்கு அது சந்தோஷம் தான். சந்தோஷத்தின் உச்சியில் நின்றிருந்தான். தன்னுடைய காதலுக்கும் பச்சை கொடி காட்டப்பட்டுவிட்ட நிலையில், தங்கையின் திருமணத்திற்கு லக்ன பத்திரிக்கை எழுதுவதற்கான விழா அது.
மிக நெருங்கிய சொந்தங்களையும் நண்பர்களையும் மட்டும் அழைத்து இருந்தனர், செல்பேசியின் வாயிலாகவே!
அத்தனை விரைவாக இந்த திருமணம் நடக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தது வேறு யாராக இருக்க முடியும்? விழா நாயகன், ஷ்யாம் மட்டுமே!
அன்று அவள் அழுததை ஷ்யாமால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவளை விட்டு தன்னால் தனித்திருக்க முடியும் என்றும் தோன்றவில்லை. முதலில் எம்பிபிஎஸ் முடிக்கட்டும் என்று எண்ணியிருந்தான். ஆனால் இப்போதோ, திருமணம் முடித்து விட்டு படிக்கட்டும், தானே மேற்கொண்டு படிக்க வைப்பதாகவும் கூறி ஒரே மூச்சாக ஆத்மநாதனிடம் பிடிவாதம் பிடித்து மகாவின் வீட்டில் பேச செய்திருந்தான்.
“டேய் தம்பி… இவ்வளவு சீக்கிரமா கல்யாணம் வைக்கணுமா? அந்த புள்ளை காலேஜை முடிக்கட்டுமேடா… அதுவும் டாக்டருக்கு படிக்கற புள்ளை… படிப்ப கெடுக்காத சாமி…” என்று கூறிப் பார்த்தார்.
“அதெல்லாம் முடியாது நானா… எவ்வளவு சீக்கிரம் வைக்கறீங்களோ அந்தளவு நல்லது… இல்லைன்னா நானே பண்ணிக்கறேன்… என்ன சொல்றீங்க?” குறும்பாக கேட்டவனை பார்த்து சிரித்தார் நாதன், உடன் ஜோதியும் சேர்ந்து கொள்ள,
“விட்டா பண்ணிடுவான் பாவா… நம்ம கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம அனௌன்ஸ் பண்ணவன் இவன்… இவனை நம்பி அந்த பொண்ணை விட்டுவைக்க முடியாது…” என்று தெலுங்கில் கூறிவிட்டு சிரித்தார் ஜோதி.
“ம்மா… அது நானே எக்ஸ்பெக்ட் பண்ணலை… அப்படியாகிடுச்சு… அன்எவிட்டபில் சிச்சுவேஷன்…” என்று அவரிடம் விளக்கினாலும், பெரியவர்கள் அனைவருக்குமே அதுவொரு குறையாக தங்கி விட்டதை மறுக்க முடியாது.
அவனது காதலை யாருமே மறுக்கப் போவதில்லை. இரு வீட்டிலுமே ஒரு மாதிரியாக முடிவு செய்து தான் வைத்திருந்தனர் என்றாலும், தங்களை சற்றும் கவனத்தில் கொள்ளாமல் தன்னிச்சையாக அவன் செய்த செயல் அனைவரையும் காயப்படுத்தி இருந்தது.
பைரவியை சமாளிக்க முடியாமல் திணறினான் என்றாலும் முருகானந்தம் உதவிக்கு வந்து விட்டார்.
அத்தனை நாட்களில் அவனை கவனித்துக் கொண்டிருந்தவருக்கு அவன் மேல் மிகுந்த நல்ல அபிப்ராயம் வந்து விட்டிருந்தது. அதுவுமில்லாமல் அவரை பொறுத்தவரை மகளது பெயர் ஒரு முறைதான் அந்நிய ஆணுடன் சேர்த்து எழுதப்பட வேண்டும். அது ஷ்யாமுடன் நடந்து விட்டது எனும் என்று நினைத்தார். அதை அவனைக் கொண்டு மட்டுமே சரி செய்யவும் முடியும் என்ற நம்பிக்கை.
அவரது வார்த்தையை மீறவில்லை பைரவி.
நாதனும் முருகானந்தனுமாக ஜாதகக் கட்டை தூக்கிக் கொண்டு ஆஸ்தான ஜோதிடரை கலந்தாலோசித்த போது தான் சிறு நெருடல் வந்தது இருவருக்கும்.
“பையன் ஜாதகம் நம்பர் ஒன்… எந்த விஷயமா இருந்தாலும் இவனை மிஞ்ச முடியாது… என்ன வந்தாலும் நிப்பான்… ஜெய்ப்பான்… ஸ்ரீகிருஷ்ணர் ஜாதகம்…” என்றவர், மகாவின் ஜாதகத்தை பார்த்து விட்டு, “பொண்ணு ஜாதகம், ரொம்ப அமோகம்… ஆனா சீதாபிராட்டி ஜாதகம்…” என்று தயங்க,
“ஏன் சங்கரா? என்ன விஷயம் சொல்லு…” என்று முருகானந்தம் ஊக்க,
“சீதாதேவி மாதிரி புருஷன் மேல பிரியம் வெச்சு இருக்கறது நல்ல விஷயம் தான்… ஆனா இடையில ராவணன் வர்றானே முருகா…” என்று இன்னமும் இழுத்தார்.
“என்ன சொல்ற சங்கரா?”
“ஆமா… சீதாப்பிராட்டி லோகமாதா தான்… ஆனா அவ பட்ட கஷ்டம் கொஞ்சமா நஞ்சமா? அவளை மாதிரி வாழ்ந்துட முடியுமா? கட்டிகிட்டவன் கூட குடும்பமும் நடத்தாம, எங்கேயோ அந்நிய தேசத்துல கைதியா ஒரே சிந்தனையோட அவனையே நினைச்சுட்டு இருந்தவளுக்கு கடைசி வரைக்கும் சுகப்படலையே? வாழ்க்கை அவளுக்கு என்ன கொடுத்துடுச்சு? பதிவிரதைன்னு நிரூபிச்சு என்ன சாதிச்சுட்டா? புள்ளைப் பேறுக்குக் கூட புருஷன் காரன் இல்லாம… எங்கேயோ அநாதையால்ல நின்னா? அவளை லோகமாதான்னு சேவிக்கலாம் முருகா… ஆனா அவளை மாதிரி இருன்னு நம்ம பெண்டுகளை சொல்லக் கூடாதுங்கறது என்னோட கருத்து…” என்றவரை கவலையாக பார்த்தார் ஆத்மநாதன்.
முருகானந்தம் தீவிரமாக யோசித்தார்.
“அப்படீன்னா பொருந்தலையா சங்கரா?” என்று கேட்க,
“அதெல்லாம் இல்ல… பத்து பொருத்தம்ன்னு பார்த்தா ரொம்ப பொருந்தி வருது… இந்த பொண்ணை விட்டா வேறு யாரையும் இவன் கட்ட மாட்டானே…” என்று புருவத்தை உயர்த்தியபடி இவர் கேட்க, அவசரமாக தலையாட்டினர் இருவருமே!
“பையன் பிடிவாதத்துல தான் இந்த கல்யாணமே பேசிருக்கோம் சங்கரா …” என்றவரை பார்த்து சிரித்தார் அவர்.
“கண்டிப்பா… வேற வழியே இல்ல… இவனுக்கு இவ தான்… இவளுக்கு இவன் தான்… உன் பொண்ணு கிழிச்ச கோட்டை இவன் தாண்ட கூட மாட்டான்… டெல்லிக்கு ராஜானாலும் பள்ளிக்கு பிள்ளைங்கற மாதிரிதான்… ஆனா…” என்று முருகானந்தத்தை பார்த்து இழுக்க,
“ஆனா என்ன?” என்று நாதன் அவசரமாக கேட்டார்.
சொல்வதற்கு முன் நிரம்பவும் யோசித்தவர், கண்களை மூடி தியானித்து, சோழிகளை எடுத்தது கட்டையின் மேல் உருட்டினார்.
அவர் எதிர்பார்த்த ஒன்று வரவில்லை. முகம் சுருங்கியது. தொண்டையை கனைத்துக் கொண்டவர்,
“நிறைய கஷ்டத்தை பார்க்கணும்… அதுவும் ரெண்டு பேருக்குமே இது திருமணத்துக்கு நல்ல நேரமில்ல… ரெண்டு வருஷம் தள்ளி நடந்தா எந்தவிதமான பிரிவும் இல்லாம, எந்த உறுத்தலும் இல்லாம நல்லபடியா வாழுவாங்க… ஆனா இப்ப நடந்தா நிறைய சிக்கலை பார்க்கணும்… பிரிவுக்கு போகும், இன்னும் எத்தனையோ சிக்கல்கள் இருக்குன்னு சோழி சொல்லுது…” என்று முடித்துவிட, நாதன் யோசனையாக நண்பரை பார்த்தார்.
“மாப்பிள்ளை கிட்ட வேண்ணா சொல்லிப் பார்க்கலாமா மச்சான்?” என்று கேட்க,
“ஒத்துக்கவே மாட்டான் மாப்ள… அவன் பிடிச்சா பிடிவாதம் தான்… அப்படியொரு வறட்டு பிடிவாதம்…” நாதன் கவலையாக கூறினார்.
“என்ன பண்றது? நிலைமை இதுதான்னு அவர் கிட்ட சொல்லலாமே…” சிறிய குரலில் அவர் கூற,
“நீ வேற… மொத வேலையா உன் பொண்ணை எப்படியாவது சரிகட்டி கல்யாணம் பண்ணிட்டு வந்து நிப்பான்… பரவால்லையா?” என்று கேட்க, ஜெர்க்கானார் முருகானந்தம்.
“முருகப்பெருமானே… என்ன பண்றதுன்னே புரியலையே…” என்று புலம்ப,
“எல்லாத்தையும் அந்த முருகன் கிட்ட விட்டுடு மாப்ள… அவன் மேல பாரத்தை போட்டுட்டு நாம கட்டி வெச்சுடலாம்… அப்புறம் மருமகளாச்சு, அந்த முரட்டு பயலாச்சு… எப்படியும் நம்ம ராசாத்தி கிழிச்ச கோட்டை அந்த பய தாண்ட மாட்டான்னு சொல்லிட்டாங்க… அது நமக்கும் தெரியும்ல…” என்று எப்போதும் போல பெரிய குரலில் சிரிக்க, அந்த சிரிப்பில் முருகானந்தமும் இணைந்து கொண்டார்.
“சரி அப்படீன்னா நிச்சயத்துக்கும் கல்யாணத்துக்கும் ஒரு நல்ல நாளா பார்த்து குறிச்சு கொடு சங்கரா…” என்று முருகானந்தம் கூற,
“மாப்ள… இருக்கறதுலையே பக்கத்துல இருக்க முகூர்த்தமா பார்க்க சொல்லிருக்கான் அந்த பய… இல்லைன்னா நானே கட்டிக்கறேன்… நீங்க ஆசீர்வாதம் மட்டும் பண்ணா போதும்ன்னு மிரட்டிட்டு இருக்கான்யா…” என்று மீண்டும் பெரிதாக சிரித்தார்.
அதை கேட்ட முருகானந்தத்திற்கும் பெருமகிழ்ச்சி.
அத்தனை பிரியமாய் காதலாய் பெண்ணுக்கு கணவன் கிடைக்கப் போகும் மகிழ்ச்சி!
“எல்லாரையும் கூப்பிடவாச்சும் நமக்கு டைம் கிடைக்கணுமே மச்சான்? வேலை எம்புட்டு கெடக்கு…” அவரது கவலை அவருக்கு.
“அதெல்லாம் பார்த்துக்கலாம் மாப்ள… உம் ன்னு ஒரு வார்த்தை சொன்னா போதும்… ஒரு லாரி ஆளுங்களை நான் இறக்கிடுவேன், கல்யாண வேலைய பார்க்க… நீ கவலைப்படாத மாப்ள…” என்று நாதன் கொடுத்த தைரியத்தில் முகூர்த்தத்தையும் குறித்து வந்துவிட்டார்.
அதற்கு பின் வேலைகள் அத்தனையும் ஜெட் வேகத்தில் பறந்தன.
நிச்சயத்தை சிறு அளவில் வீட்டில் வைத்து செய்து லக்ன பத்திரிக்கை எழுதி விடலாம் எனவும், திருமணத்தை வெகு விமரிசையாக நடத்தி விடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
இரண்டுக்கும் இடையில் ஒரு மாதம் இடைவெளி இருக்க, அதற்கே இருவரையும் முறைத்தான் ஷ்யாம். அன்று இவர்கள் குடும்பமாக முருகானந்தம் வீட்டிற்கு சென்றிருந்தனர். பைரவி, கிருஷ்ணம்மாளோடு அமர்ந்துக் கொண்டு பச்சை பட்டாணி உரித்துக் கொண்டிருந்தார் ஜோதி. அவர்கள் வீடுகளில் அப்படித்தான். எத்தனை வேலையாட்கள் இருந்தாலும் சமையலறை பெண்களின் ராஜ்ஜியம் மட்டும் தான். அதை மட்டும் யாருக்கும் விட்டுக் கொடுப்பதில்லை. எத்தனை பெரிய இடமாக இருந்தாலும் அப்படித்தான். மஹாவும் மருத்துவத்திற்கு படித்தாலும் முடிந்தளவு சமையலும் பழகி தான் இருந்தாள்.
“நான் தான் உங்களை இயர்லியஸ்ட் பாசிபிள் டேட்டா பார்க்க சொன்னேனே நானா…” என்று பல்லைக் கடித்தவனை பார்த்து சிரித்தார்.
“டேய் உன் அவசரத்துக்கு எல்லாம் கல்யாணம் பண்ண முடியாது… நீயும் ஒரே வாரிசு… மாப்ள வீட்லயும் மொத கல்யாணம்… எல்லாத்தையும் செஞ்சு பார்க்கனும்ன்னு எங்களுக்கும் ஆசையா இருக்காதாடா?” என்று நாதன் கேட்க,
அருகில் அமர்ந்து கொண்டு அவ்வப்போது பார்வையால் பிருந்தாவை தழுவிக் கொண்டிருந்தவனை பார்த்து, “மச்சான், இந்த கல்யாணத்துக்கு ஏன்தான் இத்தனை ரூல்ஸ் அன்ட் ரெகுலேஷன்ஸ் வெச்சு இருக்காங்களோ? பேசாம கையெழுத்தை போட்டமா, விருந்தை வெச்சமான்னு இருந்து இருக்கணும்… இந்த ஒல்டீஸ் எல்லாம் வேஸ்ட்…” என்று கார்த்திக்கை வம்பிழுக்க,
“ரொம்ப கரெக்ட் மச்சான்… இவங்க இன்னும் ப்ளாக் அன்ட் ஒயிட்ல இருந்தே வெளிவரல…” என்று ஹைபை கொடுத்தவனை பார்த்து விஷமமாக சிரித்த ஷ்யாம்,
“ஆமா மச்சான்… உன்னோட கல்யாணத்தை பிருந்தாவோட கலர்புல்லா நான் சொல்ற மாதிரி பண்ணிக்க… இவங்களை கூப்பிட கூட வேண்டாம்…” என்று கண்ணடித்தவன், அனைவரின் முன்பும் போட்டுக் கொடுத்து விட்டு மீண்டும் விஷமமாக சிரிக்க, அதிர்ந்த கார்த்திக் ஓடுவதற்கு தயாரானான்.
“கார்த்திக்க்க்க்க்… என்ன இது?” முருகானந்தமும் நாதனும் சேர்ந்தே அதிர்ந்தனர். பைரவிக்கு இது இலைமறை காய் மறையாக தெரியும் என்பதால் பெரிதாக அதிரவில்லை. சாதாரணமாக எடுத்துக் கொண்டார். அதோடு பிருந்தா அவருக்கு அன்னியமொன்றும் இல்லையே… மஹாவோடு கூடவே வளர்ந்த பெண்ணென்பதால் அவருக்குமே மகிழ்ச்சி தான்!
மகாவோடு அமர்ந்திருந்த பிருந்தா தான் மயங்கி விழுந்து விடுவதை போல படபடத்துக் கொண்டிருந்தாள். அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இன்னமும் தந்தையிடம் கூட தெரிவிக்காமல் எப்படி இங்கு பேசுவது என்று தயக்கமாக மஹாவை பார்த்தாள். அவளும் சங்கடமாக ஷ்யாமை பார்க்க, அவனோ வெகு இயல்பாக,
“ஏன் ஷாக்காகறீங்க? பிருந்தாவை விட நல்ல பொண்ணா நீங்க பார்த்துட போறீங்களா?” என்று முருகானந்தத்தை பார்த்து கேட்டும் வைத்தான் அவன்.
“இல்ல மாப்ள… அது வந்து…” என்று இழுத்தவரை,
“அதெல்லாம் வேண்டாம் மாமா… பிருந்தா என்னோட சிஸ்டர் மாதிரி… அதோட மஹா கூடவே வளர்ந்த பொண்ணு… அந்த பாசம் நிறைய இருக்கு… கட்டி வெச்சா எப்பவுமே மகாவோட ஒட்டுதலா இருக்கும்… கார்த்திக்கு பிருந்தாதான்…” என்று முடித்தவனை அதிர்ச்சியாக பார்த்தான் கார்த்திக்.
இவன் முடிவு செய்துவிட்டால் போதுமா? வேறு யாரும் முடிவு செய்ய வேண்டாமா? இவனுக்கு எல்லாமே இப்படித்தானா? வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பது போல… எதையும் நிதானமாக யோசிப்பதில்லை. முடிவு செய்தால் செய்தது மட்டுமே… ஆனாலும் இப்படி தைரியமாக தான் விஷயத்தை உடைத்திருக்க முடியாது என்று எண்ணினான் கார்த்திக்.