Akila Kannan’s Thaagam 7
Akila Kannan’s Thaagam 7
தாகம் – 7
அந்த மங்கலான ஒளியில், போர்வையில் ஒரு உருவம் மறைந்து கொண்டு ஒரு கரத்தை மட்டும் நீட்டியது .அந்த உருவத்தை பார்த்த பயத்தில் திவ்யாவின் விக்கல் தண்ணீர் குடிக்கு முன்னே நின்று விட்டது.
போர்வையிலிருந்து வெளிவந்த ரமேஷ், “பயந்துட்டியா..?” , என்று திவ்யாவைப் பார்த்து கண்ணடித்தான்.
“லூசு…. லூசு அறிவு இருக்கா உனக்கு ? ஒரு பச்ச புள்ளைய இப்படியா பயமுறுத்துறது ?”, என்று சிணுங்கினாள் திவ்யா..
“அப்பபயந்துட்டேனு ஒத்துக்கோ… உன்னை மாதிரி ஒரு பயந்தாகொள்ளிக்கு ரிப்போர்ட்டர் வேலை தேவையா..? “, என்று தன் புருவங்களை உயர்த்திக் கேட்டான்.
“நான் ஒன்னும் பயப்படல… “, என்று திவ்யா சிடுசிடுக்க , “அப்புறம்…” என்று ராகம் பாடினான் ரமேஷ்.
“அம்மா.. வந்துட்டாங்களோனு நினச்சேன்..”, என்று கூறிக் கொண்டே கட்டிலில் சாய்ந்து கொண்டாள்.
“நீ தப்பிக்க முடியாது …. எப்படியும் நாளைக்கி காலைல பார்த்து தானே ஆகனும்…”, என்று கூறினான் ரமேஷ்.
“ஐயோ.. இப்பயே பார்த்துட்டா அட்வைஸ் பண்ணியே கொன்னுடு வாங்க, என் தூக்கமே கெட்டு போய்டும்.. அவங்க பாக்றதுக்குள்ள தூங்கிட்டா பிரச்சனை முடிஞ்சிது. நாளைக்குள்ள கோவம் குறைஞ்சுரும்… ஆறின கஞ்சி பழங் கஞ்சிஆகிரும்…”, என்று வியாக்கியானம்பேசினாள் திவ்யா.
அப்பொழுது, ஒரு மணியோசை கேட்டது..
திவ்யாவின் கரங்கள் நடுங்க , ரமேஷ் அவளைப் பார்த்து சிரித்தான்..
” மணியோசைக்கு நான் பயந்தா ,வீட்டுக்கு வெளிய இருந்தா தண்ணி குடுப்ப.., வீட்டுக்குள் சிரிப்பியா..?”, என்று அவனை திட்டி கொண்டே கதவை திறக்க போனாள் திவ்யா .
“கதவை திறக்காத…”, என்று இவளை தடுத்த ரமேஷ்” எல்லாரும் உனக்காகத் தான் காத்திருக்கிறர்கள்.. வெளிய போன தொலைஞ்ச.. “, என்று எச்சரித்தான் .
“அடி விழுந்தால் கூட ஆச்சர்யப் படுவதற்கில்லை” , என்று மேலும் திகிலூட்டினான் ரமேஷ்.
அவனை யோசனையோடு பார்த்து , “சரி” , என்று தலை அசைத்துக் கொண்டு கட்டிலில் வந்தமர்ந்தாள் திவ்யா.
“நீ மாடில போய் படுத்துக்கோ.. நாளைக்கி காலைல பாப்போம்” , என்று கூறிக் கொண்டே கட்டிலை நோக்கி சென்றாள் திவ்யா.
ரமேஷ் மாடிக்கு கிளம்புகையில், மீண்டும் மணியோசை கேட்டது.
இந்த முறை திவ்யாவிற்கு கட்டுக் கடங்கா கோபம் வந்தது ..
ரமேஷ் தடுத்தும் கேளாமல், “இந்த குல்ஃபி ஐஸ்காரனை என்ன செய்கிறேன் பார்…”, என்று கதவை திறந்து கொண்டு கோபமாக வெளியே வந்தாள் திவ்யா.
“ஏய்.. உன்னை இந்த பக்கம் வந்து தூங்கிற நேரத்துல மணி அடிக்க கூடாதுனு சொல்லிருக்கேன்ல..”, என்று கோபமாக குல்ஃபி காரனிடம் சண்டைக்கு போனாள் திவ்யா..
“ஏன் அக்கா ? என் வியாபாரத கெடுக்கற.. தினமும் உன்னோட ஒரே ரோதனயா போச்சு…” , என்று தலையில் அடித்துக் கொண்டே தன் சைக்கிளை மிதித்தான் குல்ஃபி வியாபாரி.
ஐயோ இந்த சண்டையையும் நாம் தான் சரி கட்ட வேண்டுமோ, என்று
பயந்தவாறு ஓடி வந்தான் ரமேஷ்.
குல்ஃபி வியாபாரி சென்றதால், ஹப்பாடா என்று பெருமூச்சு விட்டவாரே, திவ்யாவை வீட்டிற்குள் அழைத்து வந்தான்.
அனைவரும் அவளுக்காக வாசலில் காத்திருக்க.., சுயநினைவு வந்தவளாக திருதிரு வென்று முழித்தாள் திவ்யா.
அனைவரும் திவ்யாவிற்கு அறிவுரை கூற ஆரம்பித்தனர்.
எந்த அறிவுரையை தவிர்க்க நினைத்தாளோ, அதை கேட்கும் சூழ்நிலை உருவாகிவிட்டது.
அவர்கள் அறிவுரை கூற, திவ்யா நடுவில் அமர்ந்து தலை அசைத்து கொண்டிருந்தாள். “எப்படியும் நம் பேச்சு எடுபடாது “, என்று அமைதியாக அமர்ந்திருந்தான் ரமேஷ்.. அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே தூங்கிப்போனாள். திவ்யா.
இவளை நினைத்து, திவ்யாவின் தாயிற்கு தான் இரவு முழுவதும் உறக்கம் வர வில்லை.
சேவல் கூவ,
அவசர அவசரமாக எழும்பினாள் பாக்கியம்.
தலையில் ஒரு கொண்டையை போட்டு விட்டு, தன் இடுப்பில் ஒரு குடமும் , கையில் ஒரு குடமும் எடுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள். அவள் பின்னால் பல பெண்கள் குடத்தோடு வந்தனர்.
இன்னும் விடியாத காலை பொழுதில், இவர்கள் தண்ணீருக்காக காத்திருந்தனர். வரிசையில் நிற்கும் பொழுது, எதிர் பக்கம் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கம்பெனியை பற்றி பேசினர். சில பெண்கள், அங்கு அவர்கள் செய்யும் வேலையைப் பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருந்தனர்.
பேச்சு எதுவாக இருப்பினும், அனைவரின் கவனமும் தண்ணீர் குடத்தின் மேல் தான் இருந்தது. இவர்கள் பேசிக்கொண்டே நேரத்தை கடத்த , மணி ஐந்தாகிவிட்டது. சூரியன் மெல்ல உதிக்க ஆரம்பித்து விட்டான். அவர்கள் குடியிருப்பு பகுதிக்கு பக்கத்தில் ஒரு சின்ன அம்மன் கோவில் இருந்தது. அங்கு பூஜை நடக்க ஆரம்பித்தது.
குடம்குடமாய் தண்ணீருடனும் , பாலுடனும் அம்பாளுக்கு அபிஷேகம் நடக்க ஆரம்பித்தது.
“கற்பூர நாயகியே கனகவல்லி,
காளி மகமாயி கருமாரி அம்மா ,
பொற்கோவில் கொண்ட சிவகாமி அம்மா,
பூவிருந்தவல்லி தெய்வயானி அம்மா!! ” , என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.
அந்த நேரத்தில் அவர்கள் அனைவரது வேண்டுதலும் ஒன்றே ஒன்று தான்.. ” இன்றாவது தண்ணீர் வந்து விட வேண்டும்.”
மணி ஆறரை நெருங்கி விட, “அக்கா சத்த குடத்தை பார்த்துக்கோயேன், நான் போய் தீபாவுக்கு பள்ளிக்கூடத்துக்கு கொண்டு போறதுக்கு எதாவது செஞ்சி வச்சிட்டு வரேன்…”, என்று தனக்கு தெரிந்த பெண்மணியிடம் கேட்டாள் பாக்கியம்.
அந்த பெண்மணியோ சரி என்று தலை அசைக்க, அவளுக்கு பின் பக்கமாக நின்று கொண்டிருந்த அந்த பகுதியில் குழாய் அடி சண்டைக்கு பெயர் பெற்ற சரோஜா, ” தொ பார்றா.., இவுக போவாக வருவாக….. நாங்க மட்டும் சும்மாவா இருக்கோம்…”, என்று வம்பிழுத்தாள்.
“என்னாங்கிற??? வேணும்னா நீயும் உன் வூட்டாண்ட போயிட்டு வா. நான் என்ன வேண்டாம்னா சொல்றேன்…”, என்று எதிர் கேள்வி கேட்டாள் பாக்கியம்.
“எனா ம்மா ?.., குரல் உசத்தி பேசுற.. “, என்று தலையை சரி செய்து கொண்டு சண்டைக்கு தயாரானாள் சரோஜா அந்த பெண்மணி..
அதற்குள் , “அம்மா” என்ற சத்தம் பாக்கியம் காதில் விழ, அவள் திரும்பினாள்.
அங்கு தீபா நின்று கொண்டிருந்தாள்.
“அம்மா மணி ஏழாகப்போகுது.. , நேத்து எதோ வாட்டர் மணிக்கும் , லாரி டிரைவருக்கும் சண்டையாம்..தண்ணி வருமா , வராதான்னு தெர்ல.. நீ போய் சமயல பாரு.. நான் இங்கு நிக்கறேன்”, என்று தீபா பாக்கியத்தின் கையிலிருந்த குடத்தை வாங்கினாள்.
அம்பாளின் அருளோ அல்லது, வாட்டர் மணி லாரி டிரைவர் சண்டை முடிந்ததாலோ …. ” தண்ணி லாரி வந்திரும்” , என்று ஒரு குரல் ஓங்கி ஒலித்தது.
அனைவர் முகத்திலும் புன்னகை தவழ்ந்து பரபரப்பு சூழ்ந்தது..
” தீபா, தண்ணி வந்துவிடும் போல.. உன்னால சமாளிக்க முடியாது.., நான் நிக்கறேன்.. நீ போய் உங்க அப்பா, பாண்டி எல்லாரயும் கூட்டிட்டு வா..”, என்று லாரி வரும் பக்கமாகவே பார்த்துக் கொண்டு கூறினாள்.
“சரி அம்மா..” , என்று கூறி கொண்டே ஓட ஆரம்பித்தாள் தீபா.
ஓடிய வேகத்தில், பாவாடை தடுக்கி கீழே விழுந்தாள்.
கீழே விழுந்த தீபாவை பார்க்க யாருக்கும் நேரம் இல்லை, கையில் சிராய்த்து லேசாக ரத்தம் வழிந்தது.பாவாடை, கால் விரல் நகத்தில் சிக்கி லேசாக கிழிந்திருந்து. பழைய பாவாடை , அதனால் தான் உடனே கிழிந்து விட்டது போலும்.. என்று நினைத்துக் கொண்டே நடக்க ஆரம்பித்தாள் தீபா.
பெரிய காயம் இல்லை, ஆனாலும் சிராய்த்த இடம் வலித்தது.
அந்த வலியோடு குடத்தை எடுத்துக் கொண்டு தீபா திரும்ப, அவளோடு ராமசாமி , பாண்டியனும் இருவரும் குடத்தோடு நடந்தனர்.
“ஏண்டி… இவ்வளவு நேரம்”, என்று தீபாவிடம் சிடுசிடுத்தாள் பாக்கியம்.
தீபா அவள் கீழே விழுந்ததை பற்றி கூற தொடங்கினாள். ஆனால் பாக்கியத்திற்கு தான் எதுவும் காதில் விழ வில்லை..
“சரி.. சரி.. இங்கயே நில்லு… நான் முன்னாடி போய் பாத்துட்டு வரேன்” , என்று லாரியை நோக்கி நடந்தாள் பாக்கியம்.
சற்று நேரத்தில் திரும்பி வந்த பாக்கியம் தண்ணீர் பிடிக்க வரிசையில் தயாராக நின்றாள். பாக்கியத்திற்கு முன்னாள் பலர் நிற்க, நேரம் நகர்ந்து கொண்டே இருந்தது. ”அம்மா பரிட்சை இருக்கு.. நேரம் ஆகுது”, என்று கூறினாள் தீபா..
“தீபா.. கொஞ்சம் பொறுத்துக்கோ … இன்னக்கி விட்டா ரெண்டு நாள் கழிச்சி தான் தண்ணீ வரும்.. அது தான் லாரி பக்கம் வந்துட்டோம்ல…இப்ப தண்ணீ பிடிச்சிரலாம் “, என்று பாக்கியம் சமாதானம் கூறும் பொழுது வாட்டர் மணி சத்தமாக பேசினான்..
” ஏமா … பேசுறதெல்லாம் வீட்டுல போய் பேசுமா…. “, என்று கூறிக்கொண்டு தண்ணீர் பைப்பை அவர்கள் இருக்கும் பக்கம் காட்டினான்.
தண்ணீர் இவர்கள் முகத்தில் பட்டவுடன் , சில்லென்ற உணர்வு ஏற்பட்டது.
அந்த தண்ணீர் தீபாவின் வாயில் பட்டு உள்ளே செல்ல, “இந்த நொடி வாழ்வில் நிலைத்து விடாதா..? ” , என்று எண்ணினாள்.
இப்படி எந்த யோசனையும் பாண்டியனுக்கு இல்லை.. அந்த நிமிட வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்பது அவன் கொள்கை போலும். அவன் மேல் விழும் நீர் துளிகளை ரசித்த வாறே குடத்தில் தண்ணீர் பிடித்தான்.
அனைத்து குடத்திலும் தண்ணீர் நிரப்ப வேண்டும் என்று வெறியோடு தண்ணீரை பிடித்தாள் பாக்கியம்.
மூவரும் குடங்களோடு பின்னால் நடந்து வர, தீபா ஒரு குடத்தோடு வேகமாக ஓடினாள்.
தன் உடையை மாற்றி கொண்டு பள்ளிக்கூடத்திற்கு தயாரானாள் தீபா..
“ஏய்..!! நில்லு டி.. கஞ்சி குடிச்சிட்டு போ… “, என்று கத்திகொண்டே ஓடி வந்தாள் பாக்கியம்.
“ஒன்னும் வேண்டாம்.. எனக்கு நேரம் ஆச்சு.. பாண்டி நீயும் வா..”, என்று அவனை அழைத்தாள் தீபா.
“போடி.. எனக்கு பசி எடுக்குது.. நான் நாளைக்கி வரேன்.. நேரம் கழிச்சி போனாலும் மிஸ் திட்டுவாங்கா “, என்று தீபாவுடன் செல்ல மறுத்து விட்டான் பாண்டி.
வேகமாக பள்ளிக்கு நடந்தாள்… இல்லை ஓடினாள் தீபா… அவள் கவனம் முழுவதும் பரிட்சையில் தான் இருந்தது. பதில்களை கவனமாக எழுதினாள் தீபா..
பரிட்சை முடிந்து வகுப்பறையிலிருந்து வெளியே வந்த தீபா அப்பொழுது தான் பசியை உணர்ந்தாள். கொஞ்சம் காத்திருந்து அம்மா கொடுத்த கஞ்சியையாவது குடித்திருக்க வேண்டும் என்று அப்பொழுது தான் யோசித்தாள்.
தன் பையில் காசு இருக்கிறதா என்று பைக்குள் கையை விட்டு துழாவினாள். மொத்தமாக இரண்டு ரூபாய் தான் இருத்தது.
“இரண்டு ரூபாய் வைத்து என்ன செய்வது?”, என்று அதை மீண்டும் பைக்குள் வைத்து விட்டாள் தீபா.
“யாரிடமாவது தண்ணீர் வாங்கலாம்”, என்று யோசிக்கும் பொழுது தான் அவளிடம் யாருமே அதிகமாக பேச மாட்டார்கள் என்பது அவள் புத்தியில் உரைத்தது. தீபா வசிக்கும் பகுதி கருதி, அவளிடம் யாரும் பெரிதாக நட்பு பாராட்டுவதில்லை. இவள் தினமும் குளிப்பது கூட இல்லை , என்று இவள் காது படவே பேசும் நபர்களும் உண்டு.
தீபாவின் எண்ணங்கள் தறி கெட்டு ஓடின. அவளையும் மீறி கண்ணிலிருந்து நீர் வழிந்தோடியது . பசியா? தாகமா? காலையில் அடிபட்ட வலியா? , எதுவென்று தீபாவால் சொல்ல முடியவில்லை. அவளின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.
ஒரு படிக்கட்டில் சுவரோரமாக அமர்ந்து யோசித்து கொண்டிருந்தாள்.
“ஒரு வாய் தண்ணீர் கிடைத்தால் கூட போதும்”, என்று தோன்றியது தீபாவிற்கு. “அங்கிருந்த குழாயில் தண்ணீர் குடிக்கலாம்”, என் றெண்ணி பைப் அருகே சென்றாள்.
“இங்க என்னம்மா பண்ற..?”, என்று கேட்டார் பள்ளிக்கூடத்து வாட்ச்மன்.
“தண்ணி குடிக்க வந்தேன் “, என்று பாதி தயக்கத்திலும் , மயக்கத்திலும் கூறினாள் தீபா. “காலைல இருந்தே தண்ணி வரலமா “, என்று கூறிவிட்டு சென்றார் .
“நமக்கு இன்று ஒரு வாய் அழுக்கு தண்ணி கூடவா கொடுத்து வைக்கவில்லை “, என்று தனக்காகவே பரிதாபப்பட்டாள் தீபா.
தீபாவின் நிலையை பார்த்து அவளுடன் படிக்கும் மாணவி ஒருத்தி அவளுக்கு குடிக்க தன் தண்ணீர் பாட்டிலை கொடுத்தாள்.
அதற்குள் மணி அடிக்க, “இவ்வளவு நேரம் என்ன பண்றீங்க? கிளாசுக்கு போங்க ” , என்று அதட்டினார் வாத்தியார் .
“தண்ணி குடித்து விட்டு போகலாம் “, என்று தீபா நினைக்க , “நேரம் ஆச்சு இன்னும் போகலையா..? ” , என்று பிரம்புடன் வந்த வாத்தியாரை ப்பார்த்து பயந்து போய் தண்ணீர் குடிக்காமலே வகுப்பறைக்குள் ஓடினாள் தீபா..
வலியும் வாழ்க்கையில் முதல் சில நொடிகள் தான். அதன் பின் வலிகளும் பழகி விடும். இப்பொழுது தீபாவிற்கு பசியும் தாகமும் சற்று பழகியிருந்தாலும் தன்னிலை மறந்து அமர்ந்திருந்தாள்.
அவள் கவனம் வகுப்பறையில் இல்லை. ஜன்னல் வழியே பள்ளி வளாகத்தில் இருந்த மரத்தைப் பார்த்து கொண்டிருந்தாள். அந்த மரத்திலிருந்து ஒரு காகம் பறந்து இவள் வகுப்பறை வாசலில் யாரோ சிந்தியிருந்த நீரை குடித்தது. அந்த காகத்தை ஏக்கமாய் பார்த்தாள் தீபா.
கண்களில் நீர் வற்றியதால் கண்ணீர் கூட வர வில்லை.
பள்ளியில் மணி சத்தம் அடித்ததும், வீட்டுக்கு கிளம்பினாள் தீபா.
வீட்டிற்கு வரும் வழியில், வாகனங்கள் வேகமாக செல்ல ஹார்ன் சத்தம் ஓங்கி ஒலித்து கொண்டிருந்தது .ஆனால் தீபாவின் காதுகளில் எந்த சத்தமும் கேட்கவில்லை.
தண்ணீர் தண்ணீர் என்ற சொல் மட்டும் மீண்டும் மீண்டும் ஒலிப்பது போல் தோன்றியது..இல்லை இது ஒரு பிரமை என்று தன்னை திடப்படுத்தி கொண்டு நடக்க ஆரம்பித்தாள் தீபா.
கடையில் தண்ணீர் பாட்டிலை பார்த்த உடன், தன் கையில் இருந்த இரண்டு ரூபாய் அவளுக்கு ஞாபகம் வந்தது. அருகே இருக்கும் கடைக்கு சென்று ” அண்ணா ரெண்டு ரூபா இருக்கு , ஒரு தண்ணீர் பாட்டில் தரீங்களா..?” , என்று தயங்கியவாறே கேட்டாள் தீபா.
“ஏய் .. போ வெளிய…. ரெண்டு ரூபாய்க்கு தண்ணி பாட்டில் கேக்கற… சீ போ..”, என்று அவளை விரட்டினார் கடைக்காரர்.
அவமானம் தாங்காமல் கூனி குறுகி நடந்தாள் திவ்யா.
அவள் கண்முன் லாரி , பஸ் , கார் என பல வாகனங்கள் ஓடினாலும் தீபாவிற்கு எதுவும் தெரியவில்லை .. கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது..
அவள் கண்முன்னே ஒரு பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீரோடு காட்சியளித்தது. அது அவள் தலை மேல் விழுந்தது போல் ஓர் பிரமை.
சாலையில் அப்படியே சரிந்து கீழே விழுந்தாள் தீபா.
தீபாவுக்கு என்ன நேர்ந்தது ?
தாகம் தொடரும்…