Akila Kannan’s Thaagam 10
Akila Kannan’s Thaagam 10
தாகம் – 10
மழைச்சாரல் இப்பொழுது குறைந்திருந்தது. ஆனால் சாலை சேறும் சகதியுமாக இருந்தது. விக்ரம் காரின் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தான்
அங்கிருந்த சூழ்நிலையைப் பார்த்து சற்று அதிர்ந்து தான் போனான்.
பின் காரிலிருந்து இறங்கிய விக்ரம், நிலைமையை எப்படி சமாளிக்க போறோமென்று அவன் யோசிப்பதற்குள், அங்கு ஒரு பேச்சு குரல்.
“இப்படி தான் கார்ல வந்தா கண்முன்னு தெரியாது.. இடிச்சிட்டு காச குடுத்து தப்பிச்சி போயிருவாங்க..” , என்று பேசிக்கொண்டே ஒரு பெண்மணி கடந்து சென்றாள்.
“இவர்களுக்கு ஏன் பணம் படைத்தவர்கள் மேல் இத்தனை கோபம்..?”, என்றெண்ணினான் விக்ரம்.
இதெல்லாம் நினைப்பதற்கு இது நேரம் இல்லை என்றெண்ணியவனாக, கீழே விழுந்தவர்களை கவனிப்போம் என்று காரியத்தில் இறங்கினான் விக்ரம்.
நாமும் கூட்டத்தோடு கூட்டமாக அங்கு நடப்பதை பார்ப்போம்.
பாண்டி கீழே விழுந்திருந்தான். பாண்டியனின் பொருட்கள் கீழே சிதறி கிடந்தது. தீபா அவன் எழும்புவதற்கு உதவி செய்து கொண்டிருந்தாள்.
பாண்டியின் கையில் ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. என்ன செய்வது என்று புரியாமல் தீபா திரு திருவென முழித்துக் கொண்டிருந்தாள்.
ரமேஷின் பைக் கீழே விழுந்திருந்தது. ரமேஷ் ஒருவாறு சமாளித்து நின்று கொண்டிருந்தான். ஹெல்மெட் அணிந்திருந்த ரமேஷிற்கு பெரிய அடி எதுவுமில்லை.. ரமேஷின் ரெய்ன் கோட் சற்று கிழிந்திருந்தது. அந்த ரெய்ன் கோட் தான் ரமேஷை சிராய்ப்புகளில் இருந்து காப்பாற்றியது போல் தெரிகிறது.
அலறல் சத்தமிட்ட திவ்யா காணவில்லை. அவள் எங்கே என்று நம்மை போல் ரமேஷும் தேடினான்.
அப்பொழுது தான் விக்ரமிற்கும் திவ்யாவின் நினைவு வந்தது.
தலையை பிடித்துக் கொண்டு எதுவும் பேச முடியாமல் அமர்ந்திருந்தாள் திவ்யா. அவள் வாய் மட்டும் தண்ணீ தண்ணீ என்று முனங்கியது.
அவள் கொண்டு வந்திருந்த வாட்டர் பாட்டிலை தேடினான் ரமேஷ்.
அது விக்ரமின் காருக்கடியில் மாட்டி சிதைந்திருந்தது.
விக்ரம் காரை திறந்து தண்ணீர் எடுப்பதற்குள், தீபா அவள் கொண்டு வந்திருந்த வாட்டர் பாட்டிலில் உள்ள தண்ணீரை திவ்யாவுக்கு கொடுத்தாள்.
தண்ணீர் சற்று தெளிவு தர, திவ்யா தலையிலிருந்து கையை அகற்றினாள். ரத்தம் பீறி கொண்டு வழிந்தது.
ரத்தம் வரும் வேகத்தை பார்த்த பயத்தில், நிற்க முடியாமல் தள்ளாடினாள் திவ்யா.
ரமேஷின் கண்கள் பரிதவித்தன.
நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர விக்ரம் முடிவு செய்தான்.
“என்ன கூட்டம் ? “, என்று ஒரு கம்பீரமான குரல் ஒலித்தது. சத்தம் வந்த குரலை நோக்கி பார்த்தோமென்றால்., அங்கு டிராபிக் போலீஸ் நின்று கொண்டிருந்தார்.
“என்ன ஆக்சிடென்ட் கேஸா? “, என்றார் சலிப்பான குரலில்..
“ஏய் தம்பி.. ரோட்ல ஓடக் கூடாதுனு சொல்லிருக்கேன்ல… “, என்று பாண்டியை ஒரு அதட்டல் போட்டார் .
“எம்மா .. ஹெல்மெட் போடுங்கனு சொன்ன கேக்கறதில்லை” , என்று தலையில் அடித்து கொண்டார் .
திவ்யாவுக்கு ரத்தம் வழிந்தது. ரமேஷ் ஆட்டோவை அழைக்க , “அதெல்லாம் வேண்டாம் நான் பாத்துக்கிறேன், என்று கூறினான் விக்ரம்.
“தீபா பாண்டியிடம் ஏன்டா வலிக்குதா..? “, என்று கேட்டாள்.
“அதெல்லாம் ஒன்னும் இல்ல… எச்ச துப்பி காத்துல காய விட்டா சரி ஆயிரும் ” , என்று கூறி நடக்க ஆரம்பித்தான் பாண்டி.
“தம்பி நீயும் வா.. ஹாஸ்பிடலுக்கு போலாம் ” , என்று கூறினான் விக்ரம்.
தீபா வேண்டாம் என மறுக்க, பாண்டிக்கோ இந்த கார் தானே நாம் அன்று ஏற ஆசை பட்ட கார். இதை விட்டா நமக்கு வேறு நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது.. ஆக இது தான் இந்த காரில் பயணம் செய்ய சரியான நேரம் என்று தோன்றியது.
“வரோம் சார்.. “, என்று கூறிக் கொண்டே ஆசையாக காரில் ஏறி அமர்ந்தான் பாண்டி.. வேறு வழியின்றி காரில் ஏறி பாண்டிக்கு அருகில் அமர்ந்தாள் தீபா.
பாண்டியன் காரை ரசித்துப் பார்த்தான். அவன் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது.
“ஏன் அக்கா இப்படி காருக்குள் குளிருது” , என்று வினவினான் பாண்டி .
“வெளிய மழை பெய்துல….. “, என்று யோசனையோடு பதில் கூறினாள் தீபா.
“அக்கா நம்ம வீட விட அழகா இருக்குல்ல ” , என்று தீபாவின் காதில் கிசுகிசுத்தான்.
“இந்த மாதிரி ஒரு வீடு வாங்குவோமா?” , என்று தீபாவிடம் ரகசியமாக கேட்டான் பாண்டி.
தீபா பாண்டியை முறைத்து பார்த்தாள். அவள் கண்களில் பயம் தெரிந்தது.
பாண்டிக்கு பெரிதாக அடி ஒன்றும் இல்லை.’ காரில் ஏற ஆசைப் பட்டு தான் வருகிறான் என்று தெரிந்து விட்டால் ” , நம் நிலைமை என்ன ஆகும் என்ற பயம் பந்து போல் அவள் தொண்டைக்கும் வயிற்றுக்கும் இடையில் உருண்டது.
அவளின் பயம் கலந்த சிந்தனையைக் கலைக்கும் விதமாக கதவு திறக்கும் சத்தம் கேட்டது.
ரமேஷ் பைக்கை ஓரமாக நிறுத்தி விட்டு , திவ்யாவை விக்ரமின் காரில் ஏறச் சொன்னான். அவளுக்கு எதுவும் புரியவில்லை… திவ்யா, ரமேஷ் கூறியபடியே செய்தாள். அவளுக்கு தலை விண் விண் என்று வலித்தது.
அந்த கதவு வழியாக வரும் திவ்யாவை தீபா பயத்தோடு பார்த்தாள். பாண்டியன் அவளுக்கு ஏற்பட்ட காயத்தை பார்த்தான் . ரத்தம் வழிந்து கொண்டு இருந்தது.
தன் கையில் ஏற்பட்ட காயத்தையும் பார்த்தான் . “என்ன நினைத்தானோ ” , பாண்டிக்கு மட்டும் தான் வெளிச்சம்.
பாண்டி மீண்டும் தன் வேலையை ஆரம்பித்தான். இரண்டு முறை கார் சீட்டில் குதித்து பார்த்தான்.
“அக்கா , சுகமா இருக்குல்ல ? “,என்று தீபாவிடம் மீண்டும் கிசுகிசுத்தான் பாண்டி.
தீபா சளைக்காமல் பாண்டியை முறைத்து கொண்டிருந்தாள். பாண்டி எதையும் பொருட்படுத்தும் மனநிலையில் இல்லை. பாண்டியனுக்கு வலியை தாண்டி சந்தோசம் முகத்தில் தெரிந்தது.
“பாண்டியனுக்கு வலி கொஞ்சமாவது இருக்கிறதா ?” , என்ற சந்தேகம் இப்பொழுது தீபாவிற்கு வந்தது.
பாண்டியனை கவனிக்கும் மனநிலையில் அங்கு யாரும் இல்லை.
ரமேஷ் காரில் ஏற, விக்ரமின் கார் மருத்துவமனை நோக்கி சென்றது.
மழை சற்று குறைந்ததால், ட்ராபிக்கும் குறைந்திருந்தது.
திவ்யாவிற்கும் , பாண்டியனுக்கும் சிகிச்சை நடந்தது.
பாண்டியனின் சிகிச்சை உடனே முடிந்து விட்டது.
திவ்யாவின் சிகிச்சை முடிய சில மணி நேரம் ஆகும் என்று கூறினாள் நர்ஸ்..
“தம்பி, உன்னை நான் டிராப் பண்ணட்டுமா..? , என்று வினவினான் விக்ரம்.
“வேண்டாம் சார்.. இதுவே ரொம்ப வலி இல்லை .. உங்க கார்ல வர ஆச பட்டு தான் இதுல வந்தேன்.. அக்கா கூட திட்டிகிட்டே வந்துச்சு.. நாங்களே போய்ப்போம்..”, என்று கூறினான் பாண்டி.
விக்ரம் அவர்களுக்கு ஒரு ஆட்டோ பிடித்து, ஆட்டோவுக்கு பணமும் கொடுத்து அனுப்பினான்.
ரமேஷும் , விக்ரமும் வெளியில் காத்திருந்தனர்.
“சார், நீங்க கிளம்புங்க.. நான் பாத்துக்கிறேன்”, என்று விக்ரமிடம் கூறினான் ரமேஷ்.
விக்ரம் “சரி” என்று கிளம்புகையில், ரமேஷின் மொபைல் ஒலித்தது.
ரமேஷ் ஹாஸ்ப்பிட்டலுக்கு வெளியே சென்று பேசினான்.
விக்ரம் ரமேஷின் வருகைக்காக கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடியே காத்திருந்தான்.
“சார்” , என்ற அழைத்த படி வேக நடையோடு வந்தான் ரமேஷ்.
“மேனேஜர் கால் பண்ணிருந்தார்” , என்று தன் அலுவலக விஷயத்தை பற்றி பேசினான்.
பல விவாதங்களுக்கு பின், அவசர வேலை காரணமாக, அலுவலக பணியை முடிக்க ரமேஷ் செல்ல, . விக்ரம் திவ்யாவை அழைத்து வருவதாக முடிவாயிற்று.
ரமேஷ் ஆட்டோ பிடித்து, அவன் பைக் நிறுத்தி வைத்திருக்கும் இடத்துக்கு சென்றான். இடைப்பட்ட நேரத்தில், திவ்யாவுக்கு விடுப்பு கூறினான்.
“வீட்டில் சொல்லலாமா? வேண்டாமா ? ” , என்று யோசித்து வேண்டாம் என்று நினைத்தான்..
“சொன்னால் பயந்து விடுவார்கள்.. வீட்டுக்கு செல்லும் பொழுது பார்த்துக் கொள்ளலாம் ” , என்று முடிவு செய்தான். தன் பைக்கை எடுத்துக் கொண்டு அலுவலக பணிக்காகச் சென்றான்.
சிகிச்சை முடிந்து வெளியே வந்தாள் திவ்யா. அவள் கண்கள் ரமேஷை தேடியது.
“அட்டெண்டர் யாரு?” , என்று நர்ஸ் கேட்க , விக்ரம் ஓடி வந்தான்.
விக்ரம் பணம் கட்டுவதை, திவ்யா தடுத்தும் எந்த பயனும் இல்லை.
திவ்யாவிற்கு தலையில் வலி இருந்தது. இரண்டு தையல் என்று கூறினார் நர்ஸ்.
ரமேஷை மனதுக்குள் திட்டிக் கொண்டே நடந்து வந்தாள் திவ்யா.
“ரமேஷை திட்டாதீங்க.. ஒரு முக்கியமான வேலையா போயிருக்கான் .., பாத்துக்கறேன்னு நான் தான் சொல்லி அனுப்பிச்சேன் .” , என்றான் விக்ரம் தன்மையாக.
கார் முன் கதவை திறந்து வழி விட்டான் விக்ரம். திவ்யா பின்னால் கதவை திறந்து ஏறப் போக.., ” நான் உங்க டிரைவர் இல்லை”, என்று அழுத்தமாக கூறினான் விக்ரம்.
“இதுக்கு தான் ரமேஷை திட்டினேன் .. “, என்று கோபமாக கூறினாள் திவ்யா.
“ஏன் ரமேஷ் தான் உங்க ட்ரைவரா? ” , என்று வினவினான் விக்ரம்.
“என்ன கிண்டலா..? ” , என்று அவனை முறைத்து பார்த்தாள் திவ்யா.
மழைச் சாரல் மீண்டும் தொடங்க ” ப்ளீஸ் திவ்யா வண்டில ஏறுங்க , தலைல தண்ணி பட போகுது.. “, என்று தன்மையாக கூறினான் விக்ரம்.
வாக்குவாதத்தில் அர்த்தம் இருக்காது , என்று தெரிந்ததாலும் , திவ்யாவின் உடல் பலவீனம் அவளை அமைதி காக்க செய்தது.
“உங்கள எங்க டிராப் பண்ணனும்?” , என்று கேட்டான் விக்ரம்.
“ரமேஷ் சொல்லலியா?” , என்று வினவினாள் திவ்யா.
விக்ரம் பதில் ஏதும் பேசவில்லை. கார் நிதானமாக சென்றது.
எங்கு செல்கிறான் என்று தெரியாவிட்டாலும், கேட்கும் எண்ணமெல்லாம் திவ்யாவிற்கு இல்லை.
“இவனிடம் நாம் கேட்க நினைப்பதை கேட்டு விடலாமா..? ” , என்று திவ்யா சிந்தித்து கொண்டிருக்க..
“இருப்பதே சின்ன மூளை.. அதுவும் இன்னக்கி அடிபட்டிருச்சு .. ரொம்ப யோசிக்க வேண்டாம்”, என்று அறிவுரை கூறினான் விக்ரம்.
திவ்யா பதில் பேச விரும்பவில்லை. அவனை நிதானமாக பார்த்தாள் திவ்யா. திவ்யாவை வாய் அடைக்க வேண்டுமென்ற நோக்கத்தில் , “பார்க்க ஆள் எப்புடி இருக்கேன் ? ” , என்று வினவினான் விக்ரம்.
அது நடக்கும் காரியமா ?
“நாட் பேட் ” , என்று கூறி தன் முகத்தை திருப்பி கொண்டாள் திவ்யா.
விக்ரமின் முகத்தில் அழகான புன்னகை தவழ்ந்தது.
இந்த விக்ரமின் பரிமாணம் புதிது.. நமக்கு மட்டும் அல்ல . அவனுக்கும் தான்.
திவ்யாவின் துடுக்கு தனமான பேச்சு பிடித்திருந்ததால் , அவளிடம் பேச்சை வளர்க்க விரும்பினான் விக்ரம்.
பிஸ்னஸ் மட்டுமே பேச தெரிந்த விக்ரமிற்கு .., திவ்யாவிடம் என்ன பேசுவது என்று தெரியவில்லை.
திவ்யாவிற்கு இப்படி எந்த நினைப்பும் இல்லை போலும்.. அவள் முகம் அமைதியாக இருந்தது.
திவ்யாவின் மொபைல் ஒலித்தது.
“அறிவில்ல உனக்கு”, என்று கோபமாக கேட்டாள் திவ்யா.
எதிர் பக்கம் யார் என்ன என்பதெல்லாம் நம்மை போல் விக்ரமிற்கும் தெரியவில்லை.
அந்த பக்கத்தில் என்ன கூறினார்களோ திவ்யா அமைதியாகி விட்டாள்.
“நான் ஆபீஸ் போகணும் ” , என்றாள் மென்மையான குரலில்.
“……” , அந்த பக்கத்தில் ஏதோ கூற , திவ்யா ” சரி” , என்று தலை அசைத்தாள்.
விக்ரமிடம் எதோ கேட்க எண்ணி திரும்பினாள் திவ்யா. பின் , இன்று வேண்டாம், கிடைக்கும் சந்தர்ப்பத்தை விடுகிறோம் என்று தோன்றினாலும் , தனக்கு பேச உடலில் சக்தி இல்லை என்று நினைத்தவளாக கண் மூடி சாய்ந்து கொண்டாள் திவ்யா.
விக்ரமும் அவள் உடல் நிலை கருதி, அமைதியாக காரை ஓட்டினான்.
இருவரும் சந்திக்க வாய்ப்பு கிடைத்தும் கேட்க நினைத்தை கேட்காமல் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
கார் விக்ரம் இண்டஸ்ட்ரீஸ்க்குள் நுழைந்தது. விக்ரம் எதுவும் பேசாமல் உள்ளே நடந்தான் .
வேறு வழியின்றி , அவனை பின் தொடர்ந்தாள் திவ்யா.
விக்ரமோடு , இது வரை எந்த பெண்ணையும் பார்த்திராத அவர்கள் , இவளை வித்யாசமாக பார்ப்பதாக நமக்கு தோன்றுகிறது.
விக்ரம் முகத்தில் இத்தனை நேரம் தெரிந்த மென்மை மறந்து , கம்பீரம் குடி கொண்டிருந்தது.
அலுவலகம் நுழைந்த உடன் திவ்யாவின் கண்கள் ரமேஷை தேடியது.
“ரமேஷ் கொஞ்ச நேரத்தில் வந்து விடுவான் . நீ என் அறைக்கு வந்து வெயிட் பண்ணு ” , என்று அவளை உள்ளே அழைத்துச் சென்றான்.
அவன் அறையின் பிரமாண்டத்தை ஆச்சர்யத்துடன் பார்த்தாள் திவ்யா.
“என்ன சாப்பிடற ?” , என்று கேட்டான் விக்ரம்.
“நீங்க ஹோட்டல் ஆரம்பிச்சத ரமேஷ் என்கிட்டே சொல்லவே இல்லியே “, என்று வருத்தப்பட்டாள் திவ்யா.
திவ்யாவை கூர்மையாக பார்த்தான் விக்ரம்.
அவன் விழிகளில் தெரிவது என்ன..?
அந்த பார்வை திவ்யாவின் நெஞ்சுக்குள் புகுந்து , உடலில் பயத்தால் குளிர் பரவியது..
இருப்பினும், திவ்யா தெளிவாக துணிவோடு அவனை எதிர் பார்வை பார்த்தாள்.
“சொல்லுங்க திவ்யா..”, என்று கூறினான் விக்ரம்.
“என்ன?” , என்று எதிர் கேள்வி கேட்டாள் திவ்யா.
மேஜையில் கம்பீரமாக அமர்ந்திருந்த விக்ரம் பேனாவை சுழட்டியபடி ,
“எதோ கேக்கணும்னு நினைக்கிறீங்க ? அதை கேட்டு விட வேண்டியது தானே.. ஏதோ எதிரி மாதிரி ஏன் சண்டை போடணும்? “, என்று கூறினான் விக்ரம்.
உண்மையில் விக்ரமிற்கு திவ்யாவுடன் சண்டையிட விருப்பமில்லை.
ஆனால் அதை திவ்யாவும் நினைக்க வேண்டுமே..!!!
“அன்னக்கி எப்படி உங்க கம்பனிக்கு கரண்ட் வந்தது? “, என்று நேரடியாக கேள்வி கேட்டாள் திவ்யா.
தோரணையாக சத்தமாக சிரித்தான் விக்ரம்.
“எப்படின்னு கேட்டா என்ன அர்த்தம் ?” , என்று தன் ஒற்றை புருவத்தை உயர்த்திக் கேட்டான் விக்ரம்.
“காசு குடுத்தீங்களானு கேக்கறேன் … ” , என்று அழுத்தமாக கேட்டாள் திவ்யா.
“அஞ்சு பைசா கூட கொடுக்கல …. ” , என்று கூறினான் விக்ரம்.
“பொய் … ” , என்றாள் அழுத்தமாக
“எதிர் பக்கம் போக வேண்டிய பவர் சப்ளைய உங்க கம்பனிக்கு வர வச்சது, அதனால அந்த ஏழை ஜனங்க பாதிக்க பட்டது.. குடிக்க தண்ணி கூட இல்லாமல் மொத்த ஜனங்களும் கஷ்டப்பட்டது..,”, எல்லாம் எனக்கும் தெரியும்.” , என்று நிறுத்தினாள் திவ்யா.
அவளை அமைதியாகப் பார்த்தான் விக்ரம்.
இது மட்டுமில்லை, அன்னக்கி உங்களால, ஒரு அசம்பாவிதம் நடந்திருக்கு..
பாதிக்க பட்ட மக்கள்,
“எல்லாம் இந்த படு பாவி பசங்களாலத்தான். …. நாசமா போவாயங்க….. இவங்க ஆரம்பிச்ச கம்பெனி விளங்கவா போகுது…. பணக்கார திமிர்…?” ,இப்படியெல்லாம் , உங்களை திட்டினது எனக்கும் தெரியும்.
“அதை கேட்டு நீங்க கூனி குறுகி நின்றதும் தெரியும்.
மறுநாள் , நான் விசாரிச்சப்ப உண்மையை சொல்ல ஆள் இல்லை..
இதுக்கு எவ்வளவு காசு குடுத்தீங்க..?” , என்று தன் நீளமான பேச்சை முடித்தாள் திவ்யா.
“ஊவ்ப்….” , என்று சத்தம் எழுப்பி , தன் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்தான் விக்ரம்.
“பல நாட்களாக என்னைத் தொடர்ந்து வேலை நடந்திருக்கு போல.. குட் “, என்று தலை அசைத்தான்.
“இதெல்லாம் அப்படியே பேப்பர்ல டிவில போட வேண்டியது தானே ரிப்போர்ட்டர் மேடம் ” , என்று நக்கலாக கேட்டான் விக்ரம்.
“திமிர்.. ” , திவ்யாவின் உதடுகள் முணுமுணுத்தன..
“பதில் சொல்ல முடியலன்னு நக்கல் பண்றீங்களா..? “, ஏளனமாக கேட்டாள் திவ்யா.
“ஒய் ஷுட் ஐ அன்செர் யூ சில்லி கேர்ள்?” , என்று வார்த்தைகளை கடித்து துப்பினான் விக்ரம்.
“யாரைப் பார்த்து சில்லி கேர்ள்னு சொல்றீங்க.. நான் ஒரு ரிப்போர்ட்டர் “, என்று திமிராக பதில் கூறினாள் திவ்யா.
“ரிப்போர்ட்டர்னா என்ன வேணாலும் கேட்பியா? ஐ நோ வாட் ஐ டூ… போய் எழுது… என்ன வேணாலும் எழுது… என்ன பண்ணனுமுன் எனக்கு தெரியும்”., என்று காட்டமாக கூறினான் விக்ரம்.
“என்ன பண்ணுவீங்க..? என்னை வேலைய விட்டு தூக்குவீங்களா..?”, என்று ஸ்டைலாக கேட்டாள் திவ்யா.
மேலும் அவளே தொடர்ந்தாள்..
“இந்த வேலை இல்லனா இன்னொரு வேலை…எதுமே இல்லனா சொந்தமா youtube சேனல் ஆரம்பிச்சு உங்களை மாதிரி ஆளுங்க பண்ற தப்ப போடுவேன்..ட்விட் பண்ணுவேன்… fb ல ஷேர் பண்ணுவேன்…. “நோ ஒன் கேன் ஸ்டாப் மீ..” , என்று கறாராக பேசினாள் திவ்யா.
“உங்க மேல தப்பு இருக்கு …. நீங்க பண்றதெல்லாம் தப்புனு இப்ப நான் சொல்றேன்.. உங்களால முடிஞ்சத பார்த்துக்கோங்க ” , என்று திவ்யா கோபமாக கூற.
“யூ ஆர் கிராஸ்ஸிங் தி லிமிட்ஸ்….”, என்று அவள் முகத்திற்கு நேராக அவன் ஆள் காட்டி விரலை உயர்த்தி மிரட்ட யாரோ கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைவது தெரிந்தது.
யாரென்று இருவரும் பதட்டத்துடன் திரும்பி பார்த்தனர்.
தொடரும் …….