தன்னுடைய சுயம் தொலைகிறதே என்று யோசிக்கும் போதே காதலின் அடித்தளம் ஆட்டம் கண்டு விடாதா?
ஆனால் மனம் கேட்டது… அவள் தன்னிடம் தொலைந்து போக வேண்டும் எண்ண, அவளிடம் தான் தொலைந்து போனது உண்டா என்று கேட்டது. தொலைந்திருந்தால் அவளுக்கு இந்த மாதிரியான அழுத்தங்கள் வந்திருக்காதோ என்று எண்ணிக் கொண்டே மூச்சை இழுத்து வெளியே விட்டவன்,
“அவனை போய் பார்க்கனும்ன்னா பாரு மஹா… பேசணும்னா பேசு… உனக்கு என்ன தோணுதோ அதை செய்… நான் எதுவும் சொல்ல மாட்டேன்…” என்று தெளிவாக தீர்மானமாக கூற, அவள் ஆச்சரிய பார்வை பார்த்தாள்.
“இதுல எதுவும் ஹிட்டன் அஜெண்டா இல்லையே?” என்று நம்ப முடியாமல் கேட்க,
“இல்ல… இனிமே உனக்கு பிடிக்காத, கஷ்டத்தை தர்ற எந்த விஷயத்தையும் செய்ய மாட்டேன்… விஜி விஷயத்துல… ஆனா எல்லா இடத்திலுமே அப்படி இருப்பேன்னு தப்பு கணக்கு போட்டுடாத மஹா… என்னோட இயல்பை நான் மாத்திக்க முடியாது… அது என்னோட சுயம்… நீ சொன்ன மாதிரி…” என்று முடித்து விட்டவனை, சிறு புன்னகையோடு பார்த்தாள்.
இருவருக்குமே ஒன்று புரியவில்லை. சுயம் இருந்தும் அந்த சுயமற்று போவதின் வலியும், அதன் வேதனையும்!
அதே புன்னகையோடு அருகே வந்தவள்,
“தேங்க்ஸ் டா…” என்று கூற,
“அந்த தேங்க்ஸ்ஸ நீயே மூட்டை கட்டி வெச்சுக்க…” என்றான் சற்று வீம்பாகவே!
“எப்படி மூட்டை கட்றது? அதை சொல்லித்தாங்க ஆஃபீசர்…” சற்று இளகிய மனநிலையில் அவள் கேட்க,
“நீ போறேன்னு சொன்ன…” அவனே அதை நினைவுபடுத்தினான் கடுப்பாக.
“நீயும் வா…” அவனையும் அழைத்தாள்.
“நான் வரலை…” மறுத்தான் அவன்.
“நீயும் வரணும்…” பிடிவாதமாக அவள் கூற,
“நீ அவனை பார்க்கனும்ன்னு நினைச்சா பாரு மகா… என்னை டிஸ்டர்ப் பண்ணாத…” கறாராக கூறினான்.
“ஏன் ஷ்யாம் இப்படி வள்ளுன்னு விழற… அப்படியே டாக் மாதிரி…” என்று உதட்டை சுளிக்க, அவனுக்கு கோபம் தான் வந்தது.
“ஆமா நான் மனுஷன் இல்ல… நாய் தான்… இன்னும் வேறென்ன சொல்லணும்?” அவளை முறைக்க,
“யோசிச்சு சொல்றேன்…” என்றவளை இன்னமும் முறைத்தான்.
“இத்தனை நேரம் வரைக்கும் தனியா என் கூட இருக்கியே… உங்க அம்மா நாளைக்கு உனக்கு பட்டினி போட மாட்டாங்களா?” என்று கேட்க,
“ம்ம்ம்… ஏதோ கெஞ்சி கூத்தாடி பர்மிஷன் வாங்கிட்டு வந்தா இதுவும் பேசுவ… இன்னமும் பேசுவ…” என்றபடி, டீபாயில் இருந்த விஸ்கி பாட்டிலை எடுத்து பிரிஜ்ஜுக்குள் வைத்தாள், “இந்த கர்மத்தை வேற தொட்டு தூக்கணுமா? எல்லாம் என் தலைஎழுத்து…” என்று சுனங்கியபடியே!
“உன்னை யார் எடுத்து உள்ள வைக்க சொன்னது?” என்று ஷ்யாம் கேட்க,
“யாரை கேக்கணும்? இன்னும் வேற குடிச்சுகிட்டே இருப்பியா? போதும்டா… ப்ளீஸ்…” என்று தயவாக கூற,
“எனக்கு இன்னைக்கு கண்டிப்பா தேவை மஹா… உனக்கு புரியல…” என்றவனின் குரல் வேதனையை சுமந்து இருந்தது.
“போதும் ஷ்யாம்…” என்றவள், அவனது கண்களை பார்த்து, “உன் கூட நான் ரொம்ப காலம் வாழனும்… நம்ம பேரன் பேத்திக்கு நம்ம லவ் ஸ்டோரிய சொல்லனும்ன்னு நீதானே சொன்ன?” என்று கேட்க, அவன் மெளனமாக இருந்தான்.
“எப்ப பார்த்தாலும் சிகரெட்… அன்னைக்கு அண்ணன் முன்னாடியே வேற குடிச்சு இருக்க… எங்க போய் முட்டிக்கறதுன்னு தெரியல…” என்று புலம்ப,
“ஆனா எனக்கு ஏதாவது ஒரு போதை வேணும் மஹா… என்னை நான் மறக்கணும்…” என்று கூறியவன், அவளருகில் வந்து, கண்களை பார்த்தபடி, “இப்ப கூட உன்னை கிஸ் பண்ணனும்ன்னு தோணுது… ஆனா இங்க ஏதாவது ஹிட்டன் கேமரா இருக்குமோன்னு பயமா இருக்குடி…” என்றவனை வலியோடு ஏறிட்டாள்.
அவனது மனநிலை அவளுக்கு புரிந்தது. அவனது பயமும் நியாயமானதுதான். இந்த நேரத்தில் அத்தனை இடங்களை பார்த்தாலும் இந்த பயம் தோன்றுவதை தவிர்க்க முடியாது. ஆனால் அவன் அதிலிருந்து வெளி வந்தேயாக வேண்டுமே! என்ன செய்வது என்று யோசித்தவள்,
“குடிச்சுட்டு, சிகரெட் பிடிச்சுட்டு வந்து கிஸ் பண்ணலாம்ன்னு மட்டும் நினைச்சே பார்த்துடாத… கொன்றுவேன்…” என்று ஒற்றைக் கையை நீட்டி மிரட்ட, அவளது அந்த வார்த்தைகளில் அவனுமே சட்டென சிரித்து விட்டான்.
“ஏய் இது போங்காட்டம்…” அவளை இன்னமும் நெருங்க,
“அதெல்லாம் கிடையாது… இது தான் நல்ல ஆட்டம்…” என்று கேலியாக கூறிவிட்டு, அவனிடமிருந்து லாவகமாக தப்ப முயற்சிக்க, அவன் கைகளிரண்டால் அவளது இரு புறமும் தேக்கி வைத்துக் கொண்டு,
“மேடம்ஜி என்னை திருத்தி பார்க்கறீங்களோ?” என்றான் கேலியாக சிரித்தபடி!
“நீ திருந்து… திருந்தாமப் போ… ஆனா பக்கத்துல வரணும்னா இந்த ரெண்டும் இல்லாம தான் வரணும்…” உதட்டையும் மூக்கையும் சுளித்தபடி சிவகார்த்திகேயனை போல கூற,
“ஏய் இன்னைக்கு மட்டும் கொஞ்சம் கன்சஷன் தாயேன்டி…” அவளது நெற்றியை முட்டியபடி இவன் கேட்க,
“ஓடிடு… பக்கத்துல வந்த மர்கயா தான்டி மகனே…” என்று அவனை தள்ள, முடியவில்லை.
“நோ… ஐ நீட் ஆன் அர்ஜன்ட் கிஸ் குல்ஃபி…” என்று கிறக்கமாக கூற,
“டேய் இதுல என்னடா அர்ஜண்டு? ஆர்டினரி?” என்று அவனை தள்ளி நிறுத்தியபடி கேட்க,
“அதுவா… இரு சொல்லித்தரேன்…” என்று அவளது உதட்டை நோக்கி போக, அவளது கண்களில் என்றுமில்லாத பயம். முகம் வெளுத்தது. அவளையும் அறியாமல் உடல் விரைத்தது. அவன் அருகில் வந்தாலே வெட்கத்தோடு முகம் சிவக்கும் மஹா இல்லை இவள்! முதன் முறையாக ஏரியில் வைத்து முத்தமிட்ட போதே அவளையும் அறியாமல் அவனது கைகளில் நெகிழ்ந்த அவனது மஹா இல்லை இவள்!
அவனுக்கு அந்த நெகிழ்ச்சி பிடிக்கும். அந்த வெட்கம் பிடிக்கும். அவனது கைகள் அவளது இடையில் விளையாடும் போது கூச்சத்தில் நெளிவது பிடிக்கும். அவள் முகம் சிவந்து அவனது கைகளில் குழைவது பிடிக்கும்.
ஆனால் இவை எதுவுமே இல்லாமல் அவன் மனம் வாடக் கூடாது என்று சகித்தபடி நின்றிருந்த மகாவை கண்டபோது எதுவோ புரிவது போல இருந்தது.
*****
திரும்பவும் அதே ப்ரைவேட் ஐசியூவுக்குள் ஷ்யாமோடு உள்ளே நுழைந்தாள் மஹா. முந்தைய தினம் அவள் வந்து பார்த்தபோது விஜி விழிக்கவில்லை. சற்று நேரம் காத்திருந்து விட்டு கிளம்பியிருந்தாள். இன்று அவனுக்கு அறுவை சிகிச்சை முடிந்து இருந்தது.
விஜியை சுற்றிலும் மருத்துவ உபகரணங்கள்!
விதம் விதமான வயர்களால் கனெக்ட் செய்யப்பட்டு இருந்தான்.
அருகே டியூட்டி டாக்டரும் இரண்டு நர்ஸ்களும் இடைவிடாமல் அவனது கன்டிஷனை கண்காணித்தபடி இருக்க, அவ்வப்போது மருத்துவர்கள் அவர்களுக்குள்ளாக விவாதித்துக் கொண்டிருந்தனர். ஷ்யாம் வருவதை பார்த்தவுடன் ஒரு மயான அமைதி நிலவியது.
அறைக்குள் மஹா மட்டும் தான் போனாள்.
ஷ்யாம் வெளியே நின்று கொண்டான். அவனுக்கு விஜியை பார்ப்பதில் பிரியம் இல்லை. அவளது பிடிவாதத்திற்காக வந்தான். வெளியே நின்று கொண்டான்.
உள்ளே சென்றவள், அவளுக்கு தேவையான விபரங்களை எல்லாம் ஒன்று விடாமல் அலசினாள். என்ன வேண்டுமென கேட்டு வாங்கிக் படித்துப் பார்த்தாள். அது விஜியின் மனநிலை சரியில்லை என சுஷ்ருதா கொடுத்த ரிப்போர்ட். அதுதான் போலீசுக்கு போயிருந்தது.
“எப்ப கான்ஷியஸ் வந்தது?” அங்கிருந்த டியூட்டி டாக்டரிடம் கேட்டாள்.
“ஒரு அரை மணி நேரம் முன்னாடி மேடம்…” என்று வெகு மரியாதையாக கூறினான் அந்த மருத்துவன்.
“திரும்ப எப்ப ரீகையின் ஆகும்ன்னு ஏதாவது ஐடியா இருக்கா?”
“வெய்ட் பண்ணிட்டு இருக்கோம் மேம்…” என்றுக் கூறிக்கொண்டிருக்கும் போதே விஜியின் கண்கள் இங்கும் அங்கும் அலைந்தது.
“ஐ திங்க், ஹீ இஸ் கெய்னிங் கான்ஷியஸ்…” என்றவளுக்கு பரபரப்பானது.
இன்னும் இரண்டு டாக்டர்கள் அவசரமாக உள்ளே வர, விஜி விழித்தான், மருண்டு பார்த்தபடி!
“ஹலோ மிஸ்டர் விஜய்… ஹவ் டூ யூ பீல் நவ்?” என்றபடி அவனை செக் செய்தார் அவர்.
அவனது முகத்தில் சொல்ல முடியாத குழப்பம். தலை வின்வின் என்று வலித்தது. அந்த வலி முகத்திலும் பிரதிபலிக்க, தலையை பிடித்துக் கொள்ள முயன்றான். முடியவில்லை. கைகளில் வலி உயிர் போனது. நரக வேதனையாக இருக்க,
“வலி தாங்க முடியல…” என்றான் மருத்துவரிடம்.
“செடேட்டிவஸ் கொடுத்து இருக்கோம் விஜய்… ஆப்பரேட் பண்ணிருக்கு… அப்படிதான் இருக்கும்…” என்றார் அவர்.
“விஜய்?” என்று தனக்கு தானே கூறியவன், வலியில் முகம் சுருங்கி, கண்களை மூடிக் கொண்டான்.
“வலி தாங்க முடியல…” திரும்பவும் அதே பாட்டு.
“விஜய்… விஜய்…” உலுக்கினார் அந்த மருத்துவர்.
சோர்வாக மீண்டும் விழித்தவனை பார்த்து, “ஆர் யூ ஓகே?” என்று கேட்க,
“ம்ம்ம்…” என்றவன், “என் பேர் விஜய்யா?” என்று கேட்க, அங்கிருந்த அனைவரும் ஒரு செக்கன்ட் ஜெர்க்கானார்கள். சற்று உஷாரான பார்ட்டிகள்,
“உங்க வீடு எங்க இருக்கு?” என்று கேட்க,
“வீடா?” என்று யோசித்தான், வெகுவாக!
“ஷ்யாம் சர் வெளிய இருக்கார்… வர சொல்லட்டா விஜய்?” என்றபடி அவனது ரியாக்ஷனை கவனித்தார்.
“ஷ்யாமா? அது யார்?” என்று கேட்டான்.
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, ஓரமாக நின்றபடி இதை பார்த்துக் கொண்டிருந்தாள் மஹா.
“சரி விஜய்… இது யார்ன்னு தெரியுதா?” என்று மகாவை காட்டிக் கேட்டார் ஒரு மருத்துவர்.
மகாவை கண்டத்தில் அவனது கண்கள் சட்டென ஒளிர்ந்தது! அவனையும் மீறிய ஒரு சந்தோசம் அவனது கண்களில்!
“மஹா…” என்றான் ஹீனமாக!
அவளது முகத்தில் குழப்ப ரேகைகள். எதையும் தெரியவில்லை என்கிறான். ஆனால் தன்னை மட்டும் பெயரை சரியாக சொல்கிறானே என்று யோசிக்க,
“இவங்களை எனக்கு தெரியும். ஆனா எப்படின்னு தெரியல டாக்டர்…” என்று கூற, அவரது முகம் சுருங்கியது.
எப்படி இப்படியானது என்று யோசித்தார். தலையில் பட்ட அடி ஒன்றும் அவ்வளவு ஆபத்தானது இல்லை.
மஹா எதுவும் பேசாமல் ஷ்யாமை பார்த்தாள். அவனுக்குமே மிகப் பெரிய அதிர்ச்சி தான் அது.
இதற்கு காரணம் ஷ்யாமாக இருக்ககூடுமோ? மெலிதாக சந்தேக இலை துளிர் விட்டது.
Leave a Reply
Please use the coupon code DISC20 for 20%discounts on all products Dismiss