VNE 45(1)
VNE 45(1)
45
சுஷ்ருதாவின் எட்டாவது மாடியில் அமைந்திருந்த அவனது பர்சனல் அறையிலிருந்து மாநகரத்தை வெறித்துப் பார்த்தபடி இருந்தான் ஷ்யாம். அது ஒரு சிறிய அறைதான். ஆனால் அத்தனை வசதிகளையும் கொண்டது. அவன் மட்டுமே உபயோகிப்பான். குட்டி பிரிஜ், ஓய்வெடுக்க சிறு கட்டில், எல்ஈடி என அவசரத்தேவைக்கான அறை.
வெளிச்சப் புள்ளிகளாய் வாகனங்கள். இங்குமங்கும் அலைமோதிக் கொண்டிருந்தது. ஏசியின் சில்லிப்பை மீறிய வெம்மை மனமெங்கும்!
ருத்ர தாண்டவம் ஆடிவிட்டு ஒய்ந்து நின்று கொண்டிருந்தான். அவனது கோபம் அதிகபட்சம் தான். ஆனால் அதை அவனால் தவறென்று கருத முடியவில்லை. இன்னமும் அவனது தனிப்பட்ட படங்கள் மற்றும் வீடியோவை காட்டி மஹா கேள்வி கேட்ட அவமானத்திலிருந்து அவனால் வெளிவர முடியவில்லை. அதை நினைக்கும் போது விஜியின் மேல் கோபம் கொந்தளித்துக் கொண்டிருந்தது. அதோடு சௌஜன்யாவின் சந்தர்ப்பவாதம்.
அவளுக்கும் படங்கள் டிவிட்டரில் லீக் ஆனதற்கும் சம்பந்தமில்லை தான். ஆனால் தன்னோடு அவளிருந்த புகைப்படத்தை காரணம் காட்டி சந்தர்ப்பத்தை உபயோகித்துக் கொள்ள முயன்றவளை என்ன செய்வது?
தலைவலி தாங்க முடியாமல் நெற்றியை பிடித்துக் கொண்டான்.
விஜியை ஓட ஓட விரட்டி அடித்தாயிற்று. ஆனால் அந்த கோபம் போய்விட்டதா? அந்த அவமானம் களையப்பட்டு விட்டதா? அவனது கரும்புள்ளி அழிக்கப்பட்டு விட்டதா? கோணலான பாதை நேராக்கப்பட்டு விட்டதா?
மனதுக்குள் இருந்த கசப்பை தூக்கி ஏறிய முயற்சி செய்து கொண்டிருந்தான். ஆனால் முடியவில்லை. எத்தனை முயற்சி செய்தாலும் அது முடியாது என தெரிந்தது.
ஃப்ரிஜ்ஜிலிருந்து விஸ்கி பாட்டிலை எடுத்து ஷாட் க்ளாசில் ஊற்றினான். அவனுக்கு அப்போது அது மிகவுமே தேவைப்பட்டது. ஏதேனும் ஒரு போதை, தன்னை மறந்தே ஆக வேண்டிய கட்டாயம் அவனுக்கு. கொஞ்சமான அவமானமில்லை. கூடவே இருந்தவன் குழிப் பறித்ததோடு இல்லாமல், இத்தனை நாள் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தமில்லாமல் செய்து விட்ட ஆத்திரம் அடங்க இல்லை.
அவனறிந்து அவனை சுற்றி இருப்பவர்கள் அனைவரும் இதை விட மோசமான வாழ்க்கை முறையை கொண்டவர்கள் தான். ஆனால் வாழ்க்கை அவர்களை எல்லாம் வஞ்சிக்கவில்லையே!
கையிலிருந்த க்ளாசை உறுத்துப் பார்த்தான். தூக்கி அடிக்க வேண்டும் போல இருந்தது.
மகாவிடம் பேசலாம்… ஆறுதல் தேடலாம்… அவள் குத்திக் காட்டிய பிறகு, அவளிடம் பேச தயக்கமாக இருந்தது. மிகவும் சங்கடமான சூழ்நிலை… எதிர்கொண்டு தானாக வேண்டும்… ஆனால் எப்படி எனதான் தெரியவில்லை அவனுக்கு.
அப்படியும் மகாவுக்கு போனில் பேச முயற்சித்தான். முடியவில்லை. அவள் பேச மறுத்ததாக கார்த்திக் கூறியபோது வாழ்க்கை வெறுத்துத் தான் போனது. அவள் புரிந்து கொள்ளாதவள் அல்ல. ஆனால் மிகத் தீவிரமான ஷாக்கில் இருக்கிறாள் என்பதும் இவனுக்கு புரிந்தது. காதால் தான் கூற கேட்பது என்பது வேறு… அதை படமாகவும் வீடியோவாகவும் பார்ப்பது என்பது வேறு. கண்டிப்பாக அவளால் தன்னை மீட்டுக் கொள்வது கடினம் தான். ஆனால் அத்தனையும் மீறி கண்டிப்பாக காதல் இருக்கிறது. அது உறுதி… ஆனால் அவள் இவற்றையெல்லாம் மறந்து விட்டு தன்னோடு ஒன்றுவது என்பது? அதுதான் இப்போதைய மிகப் பெரிய கேள்வி அவன் முன்!
ஆனால் அவளால் எதை காட்டிலும் விஜியை ஷ்யாம் அடித்த முறையை மன்னிக்கவே முடியவில்லை என்பதை இவன் அறிய மாட்டான். இவனது இயல்பு இது, தனக்கு துரோகம் செய்தவர்களை எழவே விடாமல் அடித்து வீழ்த்துவதென்பது! ஆனால் அவள் இந்த ராட்சசனின் இன்னொரு சொரூபத்தை அறிய மாட்டாள் அல்லவா!
பழகிய வரை அவன் நல்லவன் இல்லையென்றாலும் மோசமானவன் இல்லை என்பதும், நேர்மையாளன், உண்மை விளம்பி, நம்பியவர்களுக்காக உயிரையும் கொடுக்கும் ஒரு சிறந்த மனிதன், ஆனால் பணம் திருப்பி தராவிட்டால் மிக மோசமான கறார் வட்டிக் கடைக்காரன் என்பது வரைதான் அறிந்து இருந்தாள். அதுவும் உண்மைதான். ஆனால் அவனுக்கும் இன்னொரு பக்கமும் உண்டு, அந்த பக்கத்தை ஜீரணித்துக் கொள்ளக் கூட முடியாது என்பதை இந்த மூன்று நாட்களாக தான் தெரிந்து கொண்டிருந்தாள். அவன் மொழியின் வாயிலாக தெரிந்து கொண்டவை போக, விஜியை அவன் கையாண்ட முறை வரைக்கும்.
அதிர்ந்து போயிருந்தாள். உள்ளுக்குள் நடுங்கிக் கொண்டிருந்தாள் என்பதை அவன் அறியவில்லை. இத்தனை ஆக்ரோஷமும், ஆத்திரமும், வேகமும், வஞ்சமும் அமைதியான வாழ்க்கைக்கு எப்படி வழி கோலும்? அதுவுமில்லாமல் ஒரு ஆண்மகனை, அவன் எத்தகைய தவறு செய்திருப்பினும் நடு வீதியில் நிர்வாணமாக துரத்தி அடிப்பது என்பது ஒரு மனிதன் செய்யக் கூடிய காரியமா என்ற அவளின் ஆதங்கத்தை அவன் அறியமாட்டான். ஷ்யாம் ஒரு மனிதனே அல்ல என்று அவனது காதலி முடிவு செய்திருந்ததை அவன் எப்படி அறிவான்?
ஷ்யாம் அவனது குழப்பங்களில் உழன்று கொண்டிருந்தான்.
ஷ்யாமால் கார்த்திக்கிடம் கூட இயல்பாக பேச முடியவில்லை. மௌனமாகவே கூட இருந்து விட்டு மௌனமாகவே சென்று விட்டவனின் சங்கடமும் புரிந்தது. ஆனால் யாரிடமாவது மனம் விட்டு பேச முடியாதா என்று தோன்றியது.
ஆனால் யாரிடம் பேச?
ஆனால் எதுவும் பேசவும் முடியாது என்றும் தோன்றியது. ஒரே நேரத்தில் தனிமையை வெறுக்கவும் விரும்பவும் முடியுமா? அதுதான் நடந்து கொண்டிருந்தது அவனுக்கு…
அப்போது இருந்த மனநிலையில் யாரையும் நம்பவும் முடியவில்லை. அத்தனை பேரும் துரோகிகளாகவும் ஏமாற்று பேர்வழிகளாகவும் தோன்ற ஆரம்பித்து இருந்தது.
அவனுக்கும் புரிந்தது. அத்தனை பேரும் அப்படியல்ல என்று! ஆனால் அவனையும் அறியாமல், மனம் அந்த பாதையில் பயணிப்பதை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை.
ஒன்று… இரண்டு… மூன்று… வரிசையாக ஷாட்கள் உள்ளே போக ஆரம்பிக்க, சற்று கண்கள் சொருகியது. மிதமான போதை… தள்ளாடவெல்லாம் இல்லை. தன்னையுமறியாமல் மனம் லேசாக இருப்பதை போல உணர்ந்தான் ஷ்யாம். சிகரெட்டை தேடினான். அங்கிருந்த டீபாய் மேல் தான் வைத்த நினைவு.
தேடினான். கிடைக்கவில்லை. கதவு திறக்கும் சப்தம் கேட்டது. நிமிர்ந்து பார்த்தான்.
கார்த்திக் தான் நின்றிருந்தான்!
“வா மச்சான்…” ஷ்யாம் புன்னகைக்க முயன்று தோற்றான்.
“என்ன மச்சான்… தனியா என்ன பண்ற?” சாதாரணம் போல கேட்டவாறு அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான் கார்த்திக். அவனுக்கும் புரிந்து இருந்தது அவனது நிலை.
தங்கை ஷ்யாமின் முகத்தை கூட பார்க்க முடியாது என்று அழுது கரைய, வீட்டில் இருந்த ஜோதியும் நாதனும் கூட அவளை சமாதானம் செய்ய முயன்று தோற்று இருந்தனர்.
பெரியவர்கள் அனைவருக்கும் விஜியை அடித்தது மட்டுமே தெரியும். அதன் பின்னணியை அவர்கள் அறியவில்லை. சொல்ல வேண்டாம் என்று கார்த்திக் கறாராக தெரிவித்து இருந்தான். அதற்கே ரொம்பவும் அதிர்ந்து இருந்தனர். நாதனுக்கும் ஜோதிக்கும் தங்கள் மகனின் இயல்பு தெரியும் என்பதால் அவர்கள் சற்று நிதானமாக இருந்தனர். ஆனால் முருகானந்தத்திற்க்கும் பைரவிக்கும் இது மிகப் பெரிய அதிர்ச்சிதான்.
காலை எழுந்த பிரச்சனை முதலே வீட்டில் தான் இருந்தனர் பெரியவர்கள் அனைவரும். இரவு செய்திகளில் நடந்த பிரச்னையை பார்த்தவருக்கு தூக்கி வாரிப்போட்டது.
“பயமா இருக்கு மச்சான்… மாப்பிள்ளைக்கு இந்தளவு கோபமா? என்ன பிரச்சனைன்னு தெரியலயே…” என்று முருகானந்தம் நாதனிடம் புலம்ப,
“கவலைப்படாத மாப்ள… எந்த பிரச்சனையா இருந்தாலும் அவன் சமாளிப்பான்ய்யா… ரெண்டு ஸ்டேட் அரசியல்வாதிங்க கண்லயும் விரலை விட்டு ஆட்றவன் அவன்… அவன் பேச்சை மீறி அவங்க காலை எடுத்துக் கூட வைக்க மாட்டாங்க… மஹா பிரச்சனையப்ப ஹைதராபாத்ல போலீஸ் டிஜிபி ட்ட சொல்லி உன் மாப்பிள்ளையை ட்ராக் பண்ண சொன்னேன். அதுக்கு அந்த ஆசாமியே பயந்துகிட்டு, இவன் எதாவது சொல்லிடுவான்னு என்கிட்ட இருந்து தப்பிச்சுகிட்டான்… அவன் பிரச்னையை தானா இழுத்துப் போட்டுக்கிட்டு மேல வர்றவன் மாப்ள… இப்ப என்ன பிரச்சனைன்னு தெரியல… ஆனா காரணம் இல்லாம அவன் எதுவும் பண்ண மாட்டான்யா…” நாதன் சமாதானமாக கூறிய வார்த்தைகளை ஏற்றுக் கொண்டாலும் அவருக்கு உள்ளுக்குள் உறுத்திக் கொண்டு தானிருந்தது.
“இருந்தாலும் மனசு என்னமோ பண்ணுது மச்சான்… மஹா முகமே சரியில்லை… எதுக்குமே அலட்டிக்காத புள்ளை அது… வானமே இடிஞ்சு பக்கத்துல விழுந்தாலும், அப்படியான்னு போகும்… கொஞ்சம் கோபம் வரும்… ஆனா அடுத்த நிமிஷம் அதுவே நம்மளை சமாதானம் பண்ணும்… அப்படிப்பட்ட என் பிள்ளை மூணு நாளா எதையோ பறிகொடுத்த மாதிரியே இருந்துது… எதுவுமே பேசலை… இன்னைக்கு இப்படியொரு பிரச்சனை… என்னன்னே புரியல மச்சான்… எப்படியிருந்தாலும் பிள்ளைங்க நல்லா இருந்தா போதும்ன்னு நினைக்கறோம்… ஆனா மஹா மாப்பிள்ளை முகத்தை கூட பார்க்க மாட்டேன்னு அழுது…” என்றவருக்கு நெஞ்சை அடைப்பது போல இருந்தது.
காலை முதல் பிரச்சனைகளை பேசியதிலும் தற்போது இந்த பிரச்சனையிலும் அவரது முகம் மாறிய விதத்தில் பயந்து போன நாதன், பைரவியை அழைத்தார்.
“பைரவி, கொஞ்சம் தண்ணீ கொண்டு வாம்மா…” முருகானந்தத்தின் நெஞ்சை நீவியபடியே சப்தமாக அழைக்க, ஹாலின் மூலையிலிருந்த கவுச்சில் முடங்கியபடி கண்களில் நீரோடு எல்ஈடியில் பார்வை இருந்தாலும் நினைவுகள் போக்கில் பயணித்தபடியிருந்த மஹா திடுக்கிட்டு பார்த்தாள்.
தந்தையின் உடல்நிலையை பற்றி சற்றும் நினைக்காமலிருந்த தன்னுடைய நினைவுகளை என்ன சொல்வது? தன்னுடைய பிரச்சனைகள் என்று அதில் ஆழ்ந்திருந்துவிட்டு தந்தையை மறந்த தன்னைத் தானே திட்டிக் கொண்டு அவரை நோக்கி போனாள்.
“ப்பா… என்னப்பா பண்ணுது?” என்றபடி அவரது நெஞ்சை நீவி விட்டபடி அவரது நாடியை ஆராய்ந்தவள், “கார்த்திண்ணா மாத்திரை பேகை எடுத்துட்டு வா…” என்று கேட்டவளுக்கு அவசரமாக எடுத்துக் கொடுத்தவன், தந்தை ஆசுவாசமாகும் வரை இருந்து பார்த்தான்.
நேரத்தை பார்த்தான். எட்டரையை கடந்து இருந்தது. தன்னை வீட்டில் டிராப் செய்துவிட்டு ஷ்யாம் மருத்துவமனைக்கு சென்றது அவனுக்கு தெரியும். அவனை இப்போது பார்த்தேயாக வேண்டும் என்று தோன்றியது. வீட்டிலிருக்கும் பிரச்சனைகள் ஒரு புறம் என்றால், அவன் ஏன் தன்னை இப்படி தனிமைப் படுத்திக் கொள்கிறான் என்றும் தோன்றியது.
இப்போதுள்ள அவனது மனநிலைக்கு குடும்பத்துடன் சேர்ந்து இருந்தால் சற்று அவனது உணர்ச்சி வேகங்கள் குறையும் என்று எண்ணியவன், அதை செயல்படுத்தவென அவன் முன் அமர்ந்தும் இருந்தான்.
ஷ்யாம் எதுவும் பேசாமல் ஜன்னலின் வழியே தெரிந்த இருண்ட வானத்தை வெறித்தபடி இருந்தான்.
இந்த இருளுக்கு ஏதோவொரு வசீகரம் இருக்கிறது. மனம் எத்தனை கனமாக இருந்தாலும், சற்று நேரம் இந்த இருளை வெறித்தபடி அமர்ந்திருந்தால் ஏதோவொரு நிம்மதி.
அவனது கையில் மது!
கார்த்திக் புறம் திரும்பியவன், இன்னொரு க்ளாஸில் விஸ்கியை பாதி மட்டும் நிறைத்து,
“சோடா?” என்று கேட்க, சற்று தயங்கிய கார்த்திக்,
“ம்ம்ம்… வித் ஐஸ்…” என்றவன், விஸ்கி க்ளாசை கையில் எடுத்துக் கொண்டான்.
வெகு நிதானமாக அருந்தினான்.