Naan aval illai 29

வெறுப்பதோ மறுப்பதோ
ஜென்னியின் கார் டேவிடின் வீட்டின் பிரமாண்டமான வாயிற்குள் நுழைந்தது. மாளிகை என்ற வார்த்தைக்கு சற்றும் குறைவில்லாத அந்த வீட்டினை தன் பார்வையால் அளவெடுத்தபடியே வந்திறங்கினாள். 
டேவிடை சந்திக்காமலும் பேசாமலும் தவிர்த்திருந்த நிலையில், இப்போது கட்டாயத்தால் அவனை சந்திக்க வேண்டிய நிலை.
ஜென்னியின் தந்தை விக்டர் மும்பையிலிருந்து நேராக டேவிடின் வீட்டில் வந்து இறங்கிவிட்டு அவளுக்கு தகவல் அனுப்பி இங்கு வர சொல்லியிருந்தார்.
அவர் ஏன் சொல்லாமல் கொள்ளாமல் இங்கே புறப்பட்டு வர வேண்டும்?
இந்த கேள்விக்கான பதிலை ஆழமாய் ஆராய்ந்தபடி நடந்தவள், 
உள்ளே தனக்கு வேறெதனும் பிரச்சனை காத்து கொண்டிருக்குமோ என்ற சந்தேகித்துபடியே வீட்டின் வாயிலை நெருங்கினாள். 
தலையை சுற்ற வைக்கும் அந்த பிரம்மிப்பான முகப்பு அறையின் இருந்த வட்ட வடிவமான இருக்கை அமைப்பில் டேவிடின் தந்தை தாமஸும் விக்டரும் ஆர்வமாய் பேசியபடி அமர்ந்திருக்க, டேவிட் அவர்களின் சம்பாஷணைகளை கவனிப்பதும் தன் கைகடிகாரத்தில் அவ்வப்போது நேரத்தை பார்ப்பதுமாய் இருந்தான். 
அதோடு அவன் கைப்பேசியே வேறு அவனை விடாமல் தொந்தரவுச் செய்ய அதற்கு மேல் பொறுக்க முடியாமல் விக்டர் அருகாமையில் வந்து “இஃப் யூ டோன்ட் மைன்ட்… எனக்கு கொஞ்சம் வொர்க்… இருக்கு” என்று தயங்க,
அவன் நிலையை உணர்ந்து “இட்ஸ் ஓகே டேவிட்… யூ கேரி ஆன்” என்று அனுமதி தந்தார்.
தாமஸ் அவனை போகவிடாமல் தடுப்பதற்குள் அவன் அகன்றுவிட்டான். 
வாசல்புறம் அவன் வந்து நிற்கும் போதே ஜென்னிதா தயக்கத்தோடு உள்ளே நுழைந்தக் கொண்டிருந்தாள்.
அவளை அங்கு அவன் எதிர்பார்க்கவில்லை. 
அவள் வருகையை பார்த்தவன் அடுத்த அடி எடுத்து வைக்காமல் அங்கயே நின்றுவிட்டான். 
அத்தனை நேரம் அவன் மனதில் வரிசைப்படுத்தி நின்றிருந்த வேலையெல்லாம் இரண்டாம்பட்சமாய் மாறிப் போனது.
ஏன்? அவன் நினைவிலிருந்து நீங்கிப் போனது.
அவளை கடைசியாய் பார்த்து நான்கைந்து நாள் கடந்திருக்கும். 
அவனின் காதலை அன்று வெளிப்படுத்தியதிலிருந்து அவள் கைப்பேசியில் கூட அவனிடம் பேசுவதை தவிர்த்திருந்தாள்.
அதோடு ‘காதல் அது இதுன்னு பேசுவதா இருந்தா என்னை நீங்க என்னை பார்க்க வர வேண்டாம்… போன்ஃல கூட பேச வேண்டாம் டேவிட்… ப்ளீஸ் டோன்ட் மிஸ்டேக் மீ’ என அவள் குறுஞ்செய்தி அனுப்பியிருக்க, அவள் வார்த்தைக்கு மதிப்பளித்து, அவளை பார்க்காமலும் பேசாமலும் இருந்தான்.
எனினும் அந்த சில நாள் பிரிவே அவனுக்கு சில யுகங்களாக தோன்றியது. அந்த பிரிவின் தாக்கமும் ஏக்கமும் அவன் விழியில் அப்பட்டமாய் வெளிப்பட, ஆவல் ததும்பிய விழிகளோடு அவளை பார்த்திருந்தவனை, பார்க்காதது போல அவள் கடந்துச் சென்றாள். 
அவளின் அந்த செய்கை அவனை காயப்படுத்த “ஜென்னி” என்றழைத்தான்.
அவள் மேலே செல்லாமல் தடைப்பட்டு நிற்க, அவள் புறம் வந்தவன். “இப்போ நான் என்ன பண்ணிட்டேன்னு நீ என்னை இப்படி அவாயிட் பண்ணிட்டு போற ?” அவளின் நிராகரிப்பினால் ஏற்பட்ட வலியோடு அவன் கேட்க,
“யார் அவாயிட் பண்ணது ?… நானா இல்லை நீங்களா?” என்று கேட்டவளை புரியாத பார்வையோடு எதிர்கொண்டு,
“நீதானே என்னை பார்க்க வர வேண்டாம்.. போஃன் பண்ண வேண்டாம்னு மெஸஜ் பண்ண” அவன் ஆழமாய் பார்த்துக் கொண்டு கேட்டான்.
“நான் பார்க்க வர வேண்டாம்னு ஒண்ணும் அனுப்பல… காதல் அது இதுன்னு பேசுவதா இருந்தா… பார்க்க வர வேண்டாம்னுதான் அனுப்பினேன்… நீங்க அதை தப்பா புரிஞ்சிக்கிட்டா நான் என்ன பண்ண முடியும்… ஏன் நட்போட நீங்க என்னை பார்க்க வர கூடாதா ? அப்படி என்ன பிடிவாதம்?” என்று அழுத்தம் திருத்தமாய் கேட்டவளின் முகத்தில் அவன் பார்க்க வரவில்லை என்ற கோபம் தெளிவாய் தெரிந்தது.
மாயா அன்று பேசிவிட்டு சென்றதும் அவள் மனம் ஆறுதலுக்காக சாய்ந்து கொள்ள தேடிய தோள் அவனுடையதுதான். 
அன்று அவனை பார்க்க முடியாத ஏமாற்த்தின் வெளிப்பாடுதான் இந்த கோபம்.
அவள் உணர்வுகளை புரிந்தவனாய் “ஸாரி… நீ அனுப்பிச்ச மெஸஜை நான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன்” என்க,
அவளும் அவன் மன்னிப்பை ஏற்றுக் கொண்டு இயல்பு நிலைக்கு திரும்பியவள் “அது போகட்டும்… விக்டர் ப்பா ஏன் இங்க வந்திருக்காரு?” என்று கேட்க,
“எனக்கும் தெரியாது” என்றான்.
அந்த சமயம் விக்டரும் தாமஸும் அவர்கள் இருவரும் பேசிக் கொண்டு வருவதை ஆர்வமாய் பார்த்திருந்தனர்.
“ஜென்னித்தா” என்று விக்டர் அழைக்க, அவளும் “டேட், !! என்ன சர்பிரைஸா ?! வரப் போறேன்னு ஒரு கால் கூட பண்ணல” என்று வினவ, 
“நானும் முன்னாடியே வரனும்னு எல்லாம் ப்ளேன் பண்ணல ஜென்னி… திடீர்னு தாமஸ் கால் பண்ணி… பார்க்கனும்… வர முடியுமான்னு கேட்கவும்…வர வேண்டியதா போச்சு”
அவள் அப்போதுதான் டேவடின் தந்தையின் புறம் திரும்ப, விக்டர் அவளிடம் “உனக்கு தெரியாது இல்ல… இவர்தான் தாமஸ் அந்தோனி… நம்ம டேவிடோட பாஃதர்… என்னோட க்ளோஸ் ப்ரண்டும் கூட… ” என்று அறிமுகம் செய்ய, “ஹெலோ அங்கிள்… நைஸ் டூ மீட் யூ” என்று கை குலுக்கினாள். 
தாமஸ் புன்னகையோடு “நானும் உங்க டேட் விக்டரும் லொயாலால ஒண்ணா படிச்சோம்… ரொம்ப க்ளோஸ்… நாங்க செய்யாத சேட்டையே இல்ல… என்ன விக்டர்?” என்று கேட்டு நண்பனை பார்த்தார்.
விக்டரும் ஆமோதித்து “ஆமா ஆமா … ஆனா அப்புறம்தான் கான்டெக்ட்டே இல்லாம போயிடுச்சு… நான் நம்ம பிஸன்ஸை பார்த்துக்க மும்பை போயிட்டேன்… இவன் மேல் படிப்புக்காக லண்டன் போயிட்டான்” என்று அவர்கள் ஜென்னியிடம் சொல்ல,
அவள் சன்னமான குரலில் டேவிடிடம் “எதுக்கு தீடீர்னு இந்த மீட்டிங் ?” வினவினாள். 
“எனக்கென்ன தெரியும் ?” என்றான். 
அதற்குள் தாமஸ் ஜென்னியின் புறம் திரும்பி “நின்னுட்டே இருக்க… உட்காரும்மா” என்று பணித்தார்.
அவளும் தயக்கத்தோடு அமர்ந்து கொள்ள, அவர் அவளிடம் “உனக்கும் டேவிடுக்கும் எப்பதில இருந்து பழக்கம்?” என்று கேட்க, ஜென்னி தடுமாற்றத்தோடு “அது” என்றபடி டேவிடை நிமிர்ந்து பார்த்தாள்.
“அது ஒரு ஆக்ஸிடென்ட்ல் மீட்டிங் மும்பைல… இல்ல ஜென்னி.. ” என்றான் டேவிட்.
“ஆமாம்” என்று ஜென்னியும் அவன் சொன்னது சரியென்பது போல் தலையசைத்தாள். 
அதற்குள் தாமஸ் டேவிடிடம், “உனக்கு ஏதோ முக்கியமான மீட்டிங்னு… சொன்னியே டேவிட்” என்று கேட்க,
அந்த கேள்வியின் உட்பொருள் புரிந்தவனாய் “ஹ்ம்ம் ஆமாம்… பட் ஜென்னி வந்ததை பார்த்ததும்… மறந்து பேசிக்கிட்டே உள்ளே வந்திட்டேன்… ” என்க,
அப்போது ஜென்னி நிமிர்ந்து “அப்போ உடனே கிளம்பனுமா டேவிட்” என்று கேள்வி எழுப்பினாள்.
‘உன்னை விட்டுவிட்டா’ என்று அவன் மனம் சொன்ன பதிலை அவளிடம் சொல்லவில்லை.
“இல்லை… மீட்டிங்கை போஸ்ட் போன் பண்ண சொல்லிடிறேன்” என்றான்.
“நோ ப்ராப்ளம் டேவிட்… வொர்க்தான் முக்கியம்… நீங்க போறதுன்னா போங்க” என்று விக்டர் சொல்ல ‘இதென்னடா சோதனை’ என்று அவன் போக விருப்பமில்லாமல் தேங்கி நிற்க,
மகனின் அத்தனை உணர்வுகளையும் ஆராய்ந்து பார்த்திருந்த தாமஸ் இடைப்புகுந்து “இருக்கட்டும் விக்டர்… கொஞ்சம் முக்கியமா பேசனும் அவனும் இருக்கட்டுமே” என்றான்.
விக்டர் ஆர்வமாய் “ஆமாம் தாமஸ்… அதென்ன முக்கியமான விஷயம்? அதுவும் முப்பது வருஷமா ஞாபகம் இல்லாத விக்டர்… இன்னைக்கு உனக்கீ ஞாபகத்து வந்துட்டேன்” என்று அவர் கேட்க,
“என்ன பன்றது விக்டர்? … பிஸ்னஸ் அது இதுன்னு நம்ம லைஃப்ல பெர்ஸன்ல் லைஃப் பத்தி யோசிக்கவே முடிய மாட்டேங்குது… அட்லீஸ்ட் நீயாவது என்னை பார்க்க வந்திருக்கலாம் இல்ல ?!” என்று ஆதங்கப்பட்டு கேட்டிருந்தார். 
“என் நிலைமையும் அப்படிதான் தாமஸ்?!” என்று விக்டரும் தன்னிலையை உரைத்தார். 
ஆர்வமாய் பேசிக் கொண்டிருந்த நண்பர்களை பார்த்து ஜென்னி டேவிடிடம்
“இங்க என்ன நடக்குதுன்னே புரியல” என்றாள்.
“என் டேட் எதையும் காரணம் காரியம் இல்லாம செய்ய மாட்டாரு… எது செஞ்சாலும் அதுல அவருக்கு ஏதாச்சும் யூஸ் இருக்கனும்” என்று டேவிட் தன் தந்தையின் எண்ணத்தை கணித்துவிட, அவள் யோசனையாய் பார்த்தாள். 
அதே சமயம் தாமஸ் தன் நண்பனிடம் “விட்டு போன நம்ம ப்ரண்ட்ஷிப்… ஏன் ரீலேஷன்ஷிப்பா மாறக் கூடாது விக்டர்” என்று கேட்க,
நண்பனை தெளிவுபெறாமல் பார்த்தார் விக்டர்.
தாமஸ் மேலும் “ஜென்னிக்கும் டேவிடுக்கும் மேரேஜ் பன்றதை பத்தி நீ என்ன நினைக்கிற விக்டர் ?” என்று பளிச்சென்று கேட்க விக்டரும் ஜென்னியும் அதிர்ந்து பார்த்துக் கொண்டனர். 
ஆனால் டேவிட் ஒருவாறு தன் தந்தையின் எண்ணத்தை யூகித்துவிட்டதால் அதிர்ச்சியுறாமல் நிற்க,
ஜென்னி அவன் புறம் திரும்பி ‘இதெல்லாம் உங்க வேலையா ?!’ என்று கனலாய் பார்த்தாள். 
டேவிட் சமிஞ்சையால் இல்லை என்று மறுத்தான். 
விக்டர் மௌன நிலையில் ஆழ்ந்திருப்பதை பார்த்த தாமஸ் “என்ன விக்டர்? இதுல உனக்கு சம்மதம் இல்லையா ?!” என்று கேட்க,
அவர் சுதாரித்து கொண்டு, “இல்ல தாமஸ்… என் சம்மதத்தை பத்தி இல்ல… இது அவங்க இரண்டு பேரும் டிசைட் பண்ண வேண்டிய விஷயம்… அவங்க இரண்டு பேரும் சம்மதம் சொல்லிட்டா எனக்கு இதுல அப்ஜக்ஷன் இல்லை” என்றபடி ஜென்னியும் டேவிடையும் பார்த்தார். 
தாமஸின் முகம் பிரகாசித்தது. 
ஜென்னி தன் விருப்பமின்மையை எப்படி தெரிவிப்பது என்று தீவரமாய் யோசித்திருக்க, டேவிட் அவளின் நிலையை ஒற்றை பார்வையாலயே புரிந்து கொண்டான். 
தாமஸ் மகனை நோக்கி “நீ என்ன சொல்ற டேவிட்?” என்று கேட்க, விக்டர் ஆவலாய் அவன் பதிலை எதிர்பார்த்திருக்க, ஜென்னி அவனை சம்மதிக்க கூடாதென பார்வையாலயே மிரட்டினாள்.
அவன் எல்லோரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு “நான் ஜென்னி கிட்ட கொஞ்சம் தனியா பேசனும்” என்றதும் விக்டரும் தாமஸும் வியப்போடு பார்த்துக் கொண்டனர்.
ஜென்னி டேவிடை கோபமாய் முறைத்திருக்க, 
விக்டர் புன்னகையோடு “நோ ப்ராப்ளம் டேவிட்… பேசுங்களேன்” என்றார்.
டேவிட் புன்னகையோடு “வா ஜென்னி… நம்ம வீட்டை சுத்தி பார்த்திட்டே பேசுவோமே” என்றான்.
அவளும் மறுக்க முடியாமல் விக்டரை பார்த்துவிட்டு,டேவிட் பின்னோடு சென்றாள்.
அவர்கள் அகன்ற பின் நண்பர்கள் இருவரும் அவர்களின் நட்புக்கால கதைகளை பேச ஆரம்பித்தனர்.
டேவிட் அவளை அழைத்துக் கொண்டு ஒவ்வொரு இடமாய் சுற்றி காண்பித்தபடி வந்தான்.
அவன் எதற்கு தன்னை அழைத்தான் என்ற கோபத்தில் இருந்தவள் எதன் மீதும் தன் பார்வையை செலுத்தாமல் வர, ஒரு கட்டத்தில் தன் பொறுமை உடைந்து பேச தொடங்கினாள்.
“உங்க கிட்ட இருந்து நான் இதை எதிர்பார்க்கல டேவிட்.. என்னையும் என் உணர்வுகளையும் புரிஞ்சிக்கிட்டவர்னு நீங்கதான்னு நம்பிட்டிருக்கேன்..
ஆனா அதெல்லாம் இல்லன்ற மாதிரி செஞ்சிட்டீங்க… என்னை தேவையில்லாத ஒரு இக்கட்டில மாட்டி விட்டு வேடிக்கை பார்க்கிறீங்க… ” என்று உணர்ச்சி பொங்க கேட்டு கொண்டிருக்க டேவிட் தன் கரத்தை கட்டியபடி அவள் பேசுவதை தடை செய்யாமல் பார்த்திருந்தான்.
அவளே மேலும் “எனக்கு புரியல… நான் என்ன தப்பு செஞ்சேன்… ஒரு ப்ரண்ட்டா உங்க வாழ்க்கை நல்லா இருக்கனும் நினைச்சேன்… எல்லோரையும் போல உங்க வாழ்க்கை சந்தோஷமா அமையனும்.. அப்படி நீங்க அமைச்சிக்கனும் விரும்பினேன்… ஆனா அதை நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க… அந்த அக்கறைக்கும் அன்புக்கு பதில் உபகாரமாய் எனக்கு விருப்பமில்லாத விஷயத்தை என் மேல திணிக்க நினைக்கிறது எந்த விதித்தல நியாயம் ?!!” என்றவள் அவன் பதிலுக்காக காத்திருக்க,
அவன் நிதானித்து பார்வையோடு “முதல்ல ஒரு விஷயத்தை புரிஞ்சிக்கோ… எங்க அப்பா விக்டர் அங்கிள்கிட்ட பேசினதுக்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்ல… இன்னும் கேட்டா அவர் வர்ற போற விஷயம் கூட எனக்கு தெரியாது..” என்று சற்று இறுக்கத்தோடு சொல்லி முடித்தான்.
“சரி சம்பந்தம் இல்ல… ஆனா நீங்க அவங்க கான்வேஸஷனை ஸ்டாப் பண்றதை விட்டுவிட்டு… என்கிட்ட பேசனும்னு என்னை தனியா கூட்டிட்டு வந்தா என்ன அர்த்தம் டேவிட்…” என்று படபடப்பாய் கேட்டவள்,
மேலும் அவனை பேசவிடாமல் தொடர்ந்தாள்.
“என்னை கன்வின்ஸ் பண்ணனும்னு உங்க கனவில கூட நினைக்காதீங்க.. யூ கான்ட்” என்று தீர்க்கமாய் உரைத்துவிட்டு அவள் விலக யத்தனிக்க, 
அவன் ஆவேசமாக, “ஓரு குற்றவாளிக்கு கூட அவன் பக்கம் இருக்கிற நியாயத்தை பேசிறதுக்கு வாய்ப்பு கொடுப்பாங்க ஜென்னி… நீ  அந்த வாய்ப்பை கூட எனக்கு கொடுக்க மாட்டியா? !”   அந்த வார்த்தையை கேட்ட பின் அவள் நகர்ந்து போக முடியாமல் நின்றவள்,
“டேவிட் ப்ளீஸ்..  என்னை புரிஞ்சிக்கோங்க… என்னால உங்க நட்பையும் விட்டுக்கொடுக்க முடியல… உங்க காதலையும் ஏத்துக்க முடியல… ” என்றாள்.  
“நட்புங்கிற எல்லையை நான் எப்போவோ கடந்து வந்துட்டேன் ஜென்னி…  நீ எனக்கு மனைவியா வரனும்… ஒரு பேஃமிலி மாதிரியான சர்கமஸ்டென்ஸஸ் குள்ள நான் வாழனும் ஆசைப்படிறேன்”
“அதை வேறொரு பொண்ணாலயும் கொடுக்க முடியும் டேவிட்” என்றாள்.
“உன்கிட்ட பேசிற மாதிரி எல்லா பொண்ணுங்ககிட்டயும் என்னால இயல்பா பேசி பழக முடியல ஜென்னி…  
ஒரு விஷயத்தை நீ தெரிஞ்சிக்கனும்…  அன்னைக்கு நீ என்கிட்ட காதலை பத்தி பேசினதினால ஒண்ணும் நான் உன்னை லவ்வை  பண்ணல
…  நீ என் மேல காட்டின அக்கறையிலதான் நான் அதை உணர்ந்தேன்… ஏன்னா அது என் வாழ்க்கையில கிடைக்கல … எனக்கு அந்த ப்ஃல் புதுசா இருந்துச்சு…ரொம்ப பிடிச்சி இருந்துச்சு…
அதனாலயே இந்த கொஞ்ச நாளா உன் கூட இருக்கிற  மொமன்ட்காக நான் ஏங்கிறேன்…” என்க, அவள் மனம் தளர்ந்தது. 
“நான் அதிகமா பேசினதெல்லாம் என்னோட இந்த அறையில இருக்கிற சுவற்றுகள் கிட்டதான்… 
பார்ன் வித் சில்வர் ஸ்பூன்… ஆனா எனக்கு கிடைச்சதெல்லாம் தனிமைதான்… எல்லோரும் இருந்தும் நான் அனாதை… 
எங்க அப்பாவுக்கு என்கிட்ட பேச நேரமில்ல… எங்க அம்மாவுக்கு நான் தேவைப்படல” என்ற போதே அவன் விழிகளில் நீர் சூழ,
ஜென்னி மனமிறங்கி அவன் கரங்களை பற்றியவள்  “வருத்தப்படாதீங்க டேவிட்.. .. நான் ஒரு ப்ரண்டா வாழ்க்கை பூரா உங்ககூட இருப்பேன்” என்றவளை ஏமாற்றமாய் பார்த்து அவள் கரத்தை அவன் தன் கரத்தோடு இறுக்கி கொண்டு
“இதே போலதான் நீ முதல் முதல என் கையை பிடிச்சிருந்த… ஜென்னி” என்றதும் அவள்  புரியாமல் பார்த்தாள். 
அவனின் தொடுகை அவளின் இறுகிய உணர்வுகளை தளர்த்த பார்க்க, அவன் பார்வையோ அவன் வார்த்தைகளை விட அதிகமாக அவளிடம் பேசிக் கொண்டிருந்தது.
அவன் மேலும் அவளின் கரத்தை பற்றியபடி நெருக்கமாய் வந்தவன் “கண்ணை மூடி யோசிச்சி பாரு… அந்த மொமன்ட் உனக்கு ஞாபகத்துக்கு வரலாம்” என்றான்.
“எனக்கு ஞாபகத்தில இல்ல டேவிட்”
“ஜஸ்ட் ட்ரை”
அவன் அத்தனை தூரம் அழுத்தமாய் கேட்கும் போது நிராகரிக்க மனமின்றி அவள் விழிகளை மூடிக் கொள்ள, அவளை இருள் கவ்விக் கொண்டது.
அவன் நினைவுப்படுத்திக் கொள்ள சொல்வது எது என்று புரியாமல் அவள் யோசித்துவண்ணம் இருக்க, அவன் கரத்தின் பிடி எந்த வித சஞ்சலத்தையும் அவளுக்குள் ஏற்படுத்தாமல் ரொம்பவும் கண்ணியமாகவே பற்றிக் கொண்டிருந்தது.
“உனக்கு ஞாபகம் வருமான்னு தெரியல… பட் நீ இப்படிதான் என் கையை பிடிச்சிகிட்டு… ஐ வான்ட் டூ லிவ்னு சொன்ன” என்க, அந்த வலியும் வேதனையோடு கடந்து வந்த நொடிகள் அவளை ஆட்கொள்ள, சட்டென்று விழிகளை திறந்து அவனை நோக்கினாள்.
அவன் விழிகள் அவளை சிறு சலனமுமின்றி பார்த்திருந்தது.
“அன்னைக்கு நீ என்கிட்ட ஒண்ணு டிமேன்ட் பண்ண ஜென்னி… அதை நான் செஞ்சிட்டேன்… அதே போல இன்னைக்கு நான் உன்கிட்ட ஒண்ணு  கேட்ப்பேன்… நீ செய்வியா? !” என்றவனை அவள் பதட்டமாய் பார்க்க, 
அவன் அவள் விழிகளை மட்டும் பார்த்தபடி பேசினான். 
“ஐ வான்ட் டூ லிவ் வித் யூ” என்று அழுத்தமாய் சொல்லியவனின் பிடி அவள் கரத்தில் இறுகி அவளை சஞ்சலப்படுத்தவும், வேகமாய் தன் கரத்தை விடுவித்து கொண்டு பின்னோடு வந்தாள். 
அவன் இயல்பான பார்வையோடு “நீ இப்பவே பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை ஜென்னி… பொறுமையா யோசிச்சி நிதானமா பதில் சொல்லு” என்றான்.
அவள் அழுத்தமான பார்வையோடு “சரி டேவிட்… நான் யோசிக்கிறேன்… ஆனா முடியாதுன்னு சொல்லிட்டா நீங்க மறுக்காம ஏத்துக்கனும்” என்றாள்.
அவளின் பதிலை கேட்டவன்  புன்முறுவலோடு “ஹ்ம்ம்ம்.. ஏத்துக்கிறேன்… பட் ஆன் ஒன் கண்டிஷன்” என்றவனை புருவங்கள் முடிச்சிட அவள் பார்க்க,
“நீ வேறொரு லைஃப் பாட்னரை செல்கட் பண்ணிட்டேன்னு சொன்னா… அப்போ  நான் உன் முடிவை ஏத்துக்கிறேன்… இல்லன்னா சாரி… நான் ஏத்துக்க மாட்டேன்” என்றவனை கடுப்பாக ஒரு பார்வையை பார்த்தவள், தன் நிலையில் இருந்து அவன்  கிஞ்சிற்றும் இறங்கி வரமாட்டான் என்பதை உணர்ந்து மேலே வாக்குவாதம் செய்யாமல் அந்த அறையை விட்டு வெளியேறினாள்.
அவள் நேராக முகப்பறைக்கு வர டேவிடும் அவள் பின்னோடு வந்தான்.
விக்டர் அவளை பார்த்து புன்னகையித்து “பேசிட்டீங்களா?  என்ன டெசிஷன் எடூத்திருக்கீங்க” என்று நேரடியாகவே கேட்க தாமஸ் அவள் பதிலுக்காக ஆர்வமாக காத்திருந்தார்.
ஜென்னி தயங்கிய பார்வை பார்க்க, டேவிட் அவள் பின்னோடு வந்து நின்று “உடனே கேட்டா எப்படி அங்கிள் ? ஜென்னி கொஞ்சம் யோசிக்கனும்னு நினைக்கிறா ? அவ யோசிச்சி முடிவு பண்ணட்டுமே… அதுவரைக்கும் வெயிட் பண்ணலாம்” என்றான்.
விக்டர் ஆச்சர்யமான பாவனையோடு “அப்போ உனக்கு இதுல சம்மதமா டேவிட் ?” என்று கேட்க 
அவன் “ஜென்னி சம்மதிச்சிட்டா எனக்கு ஒகே ” என்க,  தாமஸ் தன் மகனை நம்ப முடியாமல் வியப்பாய் பார்த்தார்.
ஜென்னிக்கு அந்த நேரத்தில் யாரையும் மறுத்த பேச முடியாமல் இயலாமையோடு நின்றவள், டேவிடின் சம்மதத்தால் இன்னும் எரிச்சலடைந்தாள்.
அதற்கு பிறகு விக்டரும் தாமஸும் சிற்சில விஷயங்களை பற்றி பேச, ஜென்னி அவர்கள் இருக்கும் இடத்தை தவிர்த்து, கைப்பேசியில் உரையாடுவது போல தனியே சென்றுவிட்டாள்.
டேவிட் புறம் அவள் பார்வையை கூட திருப்பாமல் இருக்க, அவனால் அவள் நிராகரிப்பையும் தாண்டி அவள் மனஉணர்வுகள் மட்டுமே கண்ணுக்கு தெரிந்தது.
அவளை வேறெதோ ஒரு விஷயம்  அலைகழிக்கிறது என்று புரிந்தாலும் அது என்னவாக இருக்கும் என்று அவனால் யூகிக்க முடியவில்லை.
இறுதியாய் விக்டர் தன் நண்பனுடனான பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு புறப்பட, ஜென்னி தாமஸிடம் விடைப் பெற்று கொண்டவள் டேவிடை மட்டும் கோபமாய் ஒரு பார்வை பார்க்க, அவன் 
முகம் புன்முறுவலோடே காட்சியளித்தது.
அவள் விழியால் தொடுக்கும் கோபக் கணைகள் அத்தனையும் அவன் புன்னகையால் வீழ்ச்சியடைந்தது.
இதிலிருந்து அவளுக்கு ஒன்று மட்டும் நன்றாக புரிந்தது.  
அவனை வெறுப்பதோ மறுப்பதோ அவளுக்கு சாத்தியமில்லை என்று. 
போதை
அவர்கள் இருவரும் தங்கள் காரில் புறப்பட்ட பின்னர் டேவிட் அலுவலகத்திற்கு புறப்பட யத்தனிக்க, “ஒரு நிமிஷம் டேவிட்” என்றழைத்தார் தாமஸ்.
அவர் நாற்காலியின் அருகாமையில் வந்து நின்று “சொல்லுங்க” என்றான்.
“எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு டேவிட்… ஜென்னித்தாவை நீ கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சது” என்றார்
‘ஜென்னித்தாவை பத்தின உண்மை தெரிஞ்ச பிறகும் நீங்க இதே போல சந்தோஷப் படுவீங்களா டேட்?’ என்று மனதில் எண்ணிக் கொண்டவன் அதனை வார்த்தைகளாக சொல்லாமல்,
“எனக்கும் சந்தோஷமா இருக்கு டேட்… முதல் முறையா ஒரு அப்பாவா எனக்கு என்ன தேவைன்னு நீங்க தெரிஞ்சிக்கிட்டீங்களே” என்று குத்தலாய் பேசிவிட்டு அவன் சென்றுவிட அந்த வார்த்தையின் தாக்கம் அவரை வெகுவாய் பாதித்தது.
அவன் மகனாய் இருக்கும் போது அவர் அவனுக்கு செய்த நிராகரிப்புதான் அவருக்கே திரும்பி வந்தது. 
நாம செய்யும் எந்த தீவினையும் பாவமும் மிண்டும் நமக்கே திரும்பி வரும் என்ற  நியதியை தாமஸ் வெகுதாமதாய் உணர்ந்து கொண்டார். 
ஆனால் இதோடு அவர் பாவக் கணக்கு முடிந்து விடப்போவதில்லை. 
இன்னும் சில அதிர்ச்சிகளை அவர் வாழ்நாளில் எதிர்கொண்டே ஆக வேண்டும். 
******
ஜென்னி விக்டரோட காரில் புறப்பட்ட பின்னர் “ஜென்னிஃபர் ம்மா வரலையா ?” என்று கேட்க,
“ஒரு முக்கியமான சர்ஜரி… அதான் ஜென்னி வர முடியல.. இல்லாட்டி அவளுக்கே உன்னை பார்க்கனும்தான்… ஆனா நீதான் ஏதோ முக்கியமான கமிட்மென்ட் இருக்குன்னு சொல்லி  இங்கயே சென்னையில இருக்க” என்றார்.
“ஹ்ம்ம்ம்… முக்கியமான கமிட்மென்ட்தான் ப்பா… “
“ஆமா… சாஜிம்மா அஃப்சானா எல்லாம் நல்லா இருக்காங்களா ?!”
“ரொம்ப நல்லா இருக்காங்க… அவங்க சன் சையத் ரொம்ப நல்லா அவங்களை பார்த்துக்கிறாரு…. ஆமாம்… நீங்க வரும்போது ஆஷிக்கை அழைச்சிட்டு வந்திருக்கலாம் இல்ல… “
“ஒரு முக்கியமான ப்ரொஜக்ட்ல அவனை இன்வால்வ் பண்ணியிருக்கேன்… முடிஞ்சதும் நானே அனுப்பி விடிறேன்…!
கார் அப்போது விமான நிலையத்தில் நிற்க ஜென்னி சோர்வோடு “நீங்க இப்பவே கிளம்பனுமா?!” என்று ஏக்கமாய் கேட்டாள்.
“இல்ல ஜென்னி… கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு… தாமஸ் அவசரமா பார்க்கனும் கூப்பிடதாலதான் உடனே எல்லாத்தையும் போஸ்ட் போஃன் பண்ணிட்டு வந்துட்டேன்” என்றவர் காரிலிருந்து இறங்கி விமான நிலையத்திற்குள் போகத் தயாரானார்.
“சரி ஜென்னி… நான் கிளம்பிறேன்… நீ உன் கமிட்மன்ட்ஸ் எல்லாம் முடிச்சிட்டு சீக்கிரமா வந்திரு… உன்னை நானும் ஜென்னிஃபரும் ரொம்ப மிஸ் பன்றோம்” என்றபடி அவளை தன் தோளோடு அணைத்து உச்சிமுகர்ந்தார்.  
“ஒகே ப்பா… என் வேலை முடியலன்னாலும் நான் ப்ஃரீயாகிட்டா கிளம்பி வர்றேன்” என்றாள்.
அதன் பின்னர் அவர் தன் கைப்பேசியில் நேரத்தை பார்த்துவிட்டு ஜென்னியை தயக்கமான பார்வையோடு அழைக்க,
“ஹ்ம்ம்… சொல்லுங்க ப்பா”
“மேரேஜ் தனிப்பட்ட விஷயம்… இருந்தாலும் ஒரு சின்ன சஜஷனா சொல்றேன்… நீ டேவிடை கல்யாணம் பண்ணிக்கிட்டா உன் லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்…” என்க,
“டேவிடை கல்யாணம் பண்ணிக்கிட்டா என் லைஃப் நல்லா இருக்கும்… அவரோட லைஃப்… ?!” என்று அவள் கேள்வி எழுப்ப, அவர் முகம் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியது.
அவர் கட்டி வைத்திருந்த மனக்கோட்டையெல்லாம் ஒரே நொடியில் தகர்ந்து போனது.
அந்த மனவருத்தத்தோடே தன் பயணத்தை மூம்பை அவர் மேற்கொள்ள, ஜென்னி காரில் அவள் வீட்டிற்கு திரும்பினாள். அங்கே அவளுக்காக அவளின் மனதிற்கு நெருக்கமான ஒன்று காத்திருந்தது.
**********
ராகவின் செகரட்டிரி மனோ திகலோடு நின்றிருந்தான்.
சற்று முன்பு சையத் வந்துவிட்டு சென்ற தாக்கம், அந்த அறை முழுக்கவும் பொருட்கள் சிதறியிருந்தது.
அவன் மனதிற்கு ஆறுதல் தரும் விஸ்கி பாட்டிலை கூட நொறுக்கிவிட்டான். அந்த போதையெல்லாம் அவன் மனநிலைக்கு அப்போது பத்தாது.
சையத் ஜென்னிக்கு ஆதரவாய் பேசி ராகவின் கழுத்தையே பிடித்துவிட்டான்.
அந்த அவமானத்தை எப்படி ராகவால் தாங்கிக் கொள்ள இயலும். ராகவின் நட்பை சையத் அவளுக்காக தூக்கியெறிந்துவிட்டு போக,  அவன் வெறிக் கொண்டான். 
அவனின் கோபமெல்லாம் ஜென்னியின் புறம்தான் திரும்பியது. அப்போதே அதை தீர்த்துக் கொள்ள வேண்டுமென்ற பித்து பிடித்தது அவனுக்கு.
ஜென்னியின் வீட்டிற்கு அந்த இரவில் புறப்பட, மனோவிற்கு அவனை தடுக்க முடியுமென்று தோன்றவில்லை. ஆதலால் அவனின் விருப்பத்திற்கு இடையூறு வராமல் இருக்க, சில ஆட்களை தயார் செய்து ஜென்னியின் வீட்டை சுற்றி கண்காணிக்க சொன்னான்.
அவளை காப்பாற்ற யாரும் முன் வந்துவிட கூடாது.
ராகவ் அன்று குடித்திருந்தாலாவது அந்த போதை அவன் வேதனையை மறக்கடித்திருக்கும். ஆனால் அவன் இப்போதைக்கு ஆசை தீர பருக நினைக்கும் போதை அவள்தான். 
அந்த போதையை அவளால் மட்டுமே தெளிய வைக்க முடியும். 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!