aathiye anthamaai – 4

aathiye anthamaai – 4

திருப்புமுனை

பாரதி பத்திரிக்கையின் இணை ஆசிரியர் பதவியில் இருந்தாள் ஆதி.

அவள் ஊடகவியலில்(Journalism) முதுகலைப் பட்டம் பெறுவதற்கு முன்பிலிருந்தே அங்கே ரிப்போர்டராக வேலை பார்க்க தொடங்கி,

கொஞ்சம் கொஞ்சமாய் அவளுடைய ஆளுமை திறமையால் இணை ஆசிரியர் பதவியை எட்டியிருந்தால் என்றே சொல்ல வேண்டும்.

அவளுக்கு அனுபவம் குறைவாக இருப்பினும் அவளின் வேலையில் நேர்த்தியும், ஒழுங்கும் இவை எல்லாவற்றையும் தாண்டி புதுமையான சிந்தனையும் இருந்ததினாலேயே அவள் அந்தப் பதவியினை அடைந்தாள்.

ஆதி அவளுடைய அறைக்குள் அந்த வாரத்திற்கான கோவில்கள் பற்றிய தொடர் கட்டுரையின் முதல் அத்தியாயத்தை எழுதி கொண்டிருக்க,

அப்போது அமுதா அவள் அறையின் கதவை தட்டினாள்.

கண்ணாடி வழியே அவள் முகத்தை பார்த்தவள், அவளை உள்ளே வரச் சொல்லி தலையசைத்து அமரச் சொல்லி,

“இந்த வீக்குக்கான மேகஸின் டிசைன் எல்லாம் ரெடியா அமுது ?!” என்று கேட்க,

“இல்ல ஆதி… ஆனா இன்னைக்கு முடிச்சிடுவேன்”  என்று அழுதா தயங்கிய குரலில் உரைத்தாள்.

“அப்போ வேறென்ன விஷயம் ?”  தன் கணினியை பார்த்தபடியே மீண்டும் அவள் கேட்க,

அமுதா அவள் கரத்திலிருந்த கடிதத்தை  அவளிடம் நீட்டினாள்.

அதனை பார்த்தவள் எரிச்சல் தொனியில்,

“திரும்பியுமா அமுது ?!” என்று முகம் சுணங்க,

“அய்யோ இல்ல ஆதி… இது கொஞ்சம் முக்கியமான லெட்டர்” என்றவள் அதனை ஆதியிடம் கொடுத்தாள்.

அதனை யோசனையாகப் படிக்க ஆரம்பித்தவளின் முகம் மெல்ல வியப்புக்குறியாக மாற,

முகவாயைத் தடவியபடி அமுதாவை ஏறிட்டவள்,

“இது கொஞ்சம் சீரியஸான மேட்டர் மாதிரிதான் தெரியுது… இல்ல அமுது ?!” என்றாள்.

அமுதாவும் ஆம் என்பது போல் தலையசைத்து ஆமோதிக்க,

ஆதி ஆழ்ந்த யோசனையோடு,

“சரி அமுது… நீ போ… நான் இதை பத்தி கருணா அங்கிள்கிட்டு பேசிட்டு வர்றேன்” என்று சொல்லி அவளை அனுப்பிவிட்டு,

ஆதி பக்கத்திலிருந்த தலைமை பதிப்பாசிரியர் அறை வாசலில் நின்று கதவை தட்டி அனுமதி கேட்டாள்.

கருணாகரனோ அவளை உள்ளே வர அனுமதித்துவிட்டு தன் மேஜையின் மீது இருந்த பொருட்களை அவசரமாகச் சரி செய்து புறப்பட தயாராகிக் கொண்டிருந்தார்.

அவள் வியப்போடு,

“என்ன அங்கிள் ?!… அதற்குள்ளே கிளம்பிட்டீங்களா ?” என்று கேட்கவும்,

“ஆமாம் ஆதி… அந்த விஷ்வா பையன் திடீர்னு சொல்லாம கொள்ளாம புறப்பட்டு இங்கே வந்திருக்கானா… சாரதா இப்பதான் கால் பண்ணா…  நான் வீட்டுக்கு கிளம்பிறேன்… வேற வேலை ஏதாவது இருந்தா நீ முடிச்சிடும்மா” என்று அவர் புறப்படுவதிலயே மும்முரமாய் இருக்க,

அவள் அவரை வழிமறித்தபடி,

“அங்கிள் ஒரு முக்கியமான லெட்டர்” என்று  அந்தக் கடிதத்தை அவரிடம் கொடுக்க முயல, அதை வாங்கி அவர் படிக்கும் நிலையில் இல்லை.

“எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கும்மா… எந்த முக்கியமான விஷயமா இருந்தாலும் நீயே ஹேன்டல் பண்ணிடு” என்று சொல்லி விட்டு கதவை தாண்டி வெளியே சென்றவர் மீண்டும் உள்ளே வந்து,

“ஆமா ஆதி… அம்மாதான் ஊரில் இல்லையே… நைட் நீ நம்ம வீட்டுக்கு வந்துடேன்” என்று சொல்ல, அவளும் மௌனமாய் தலையசைத்து சம்மதிக்கவும் அவர் அதன் பிறகும் தாமதிக்காமல் புறப்பட்டுவிட்டார்.

ஆதி அந்த கடிதத்தை பார்த்தபடி ஆழமாய் சிந்தித்தவள் தன்னுடைய கைப்பேசியை எடுத்து யாரையோ அழைத்தாள்.

“ஹலோ ஜேம்ஸ்”

எதிர்புறத்தில் ஒரு ஆணின் குரல் கேட்டது.

“சொல்லுங்க ஆதி” என்றான்.

“ஜேம்ஸ் நான் சில டீடைல்ஸ் மெஸேஜ் பன்றேன்… நீங்க உடனே அத பத்தின ரிப்போர்ட்டை கலக்ட் பண்ணி எனக்கு அனுப்ப முடியுமா ?!” என்றவள் கேட்க,

“இன்னைக்கேவா ?!” என்று அவன் சந்தேகித்து கேட்டு நிறுத்த “ஹ்ம்ம்” என்றாள்.

அவன் மௌனமாகிட,

“எனி பிராப்ளம் ?!” என்றவள் கேட்கவும் அவன் அவசரமாக,

“நோ ஆதி… நான் போறேன்… பட் எந்த இடம் ?” என்றவன் வினவ,

அவள் தன் கரத்திலிருந்த கடிதத்தை   ஓருமுறை பார்த்துவிட்டு,

“இட்ஸ் ஆதித்தபுரம்” என்றாள்.

“ஓ !!… அது எங்கே இருக்கு ?”

“டிஸ்டன்ஸ்தான்னு நினைக்கிறேன்… நான் லெட்டர் வந்த அட்ரஸை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்… நீங்க அதை வைச்சி பைஃன்ட் பண்ணிக்கோங்க… அன் தி திங் இஸ் நீங்க போயிட்டு உடனே ரிப்போர்ட் கலெக்ட் பண்ணிட்டு எனக்கு இன்ஃபார்ம் பண்ணிடுங்க… வெரி அர்ஜ்ன்ட்… அந்த மேட்டர் மட்டும் உண்மையா இருந்தா அதை இந்த வீகே டிலே பண்ணாம பப்ளீஷ் பண்ணனும் ” என்றாள்.

“கண்டிப்பா ஆதி” என்றவன் சம்மதம் சொல்ல,

அவள் அழைப்பைத் துண்டித்தாள்.

அதன் பிறகு ஆதி அலுவலகத்தில் தேங்கியிருந்த மற்ற வேலைகளையும் எல்லாம் முடித்து விட்டு இரவு வெகுநேரம் கழித்து கருணாகரனின் வீட்டைச் சென்றடைந்தாள்.

இங்கே கருணாகரனுக்கும் ஆதிக்கான உறவைப் பற்றி நாம் தெரிவித்தே ஆக வேண்டும்.

செல்லம்மா ஆதியை வளர்ப்பதற்கும் ஒரு நண்பனைப் போல உறுதுணையாய் நின்றவர் கருணாகரன்.

அவருக்கு பாரதியின் கருத்தின் மீதான அலாதியான காதலினால் ஆதியின் வளர்ப்பில் அதன் தாக்கம் தெளிவாய் தெரிந்தது.

எழுத்தின் மீதான ஆர்வம் செல்லாமாவின் மூலமாக வந்தாலும் ஊடகவியலின் மீதான ஈர்ப்பு கருணாகரனின் வளர்ப்பின் தாக்கத்தினாலேயே அவளுக்கு ஏற்பட்டது.

கருணாகரன் வீட்டிற்குள் நுழைந்த ஆதி கருணாகரனின் மனைவி சாரதா முகப்பு அறையிலேயே அவளுக்காக காத்து கொண்டிருப்பதைக் கண்டு,

“என்ன ஆன்ட்டி ? எனக்காகவே இவ்வளவு நேரம் காத்திட்டிருந்தீங்க ?” என்று வியப்பு அடங்காமல் கேட்க,

“ஆமாம் ஆதிமா… நீ பிரெஷ்யிட்டு வா… சாப்பிடலாம்” என்று பரிவாக அழைத்தாள்.

“ப்ரெஷாயிட்டு வர்றதா ? நோ… எனக்கு பயங்கரமா பசிக்குது… நீங்க சாப்பாடு எடுத்துவையுங்க… நான் ஹேன்ட்வாஷ் பண்ணிட்டு வர்றேன்” என்று கை அலம்பிக் கொண்டு உணவு உண்ண அமர்ந்தவள் ஓரிரு கவளங்களை உள்ளே தள்ளியபடி,

“விஷ்வா வந்துட்டானாமே… எங்க ஆளை காணோம் ?” என்றவள் கேட்க,

“அவன் எப்பவோ தூங்க போயிட்டானே” என்றார்.

“என்ன திடீர்னு கிளம்பி வந்துட்டான் ? என்ன விஷயம்மா ?” உணவு உண்ணபடியே அவள் கேட்க,

“அவனுக்கு வேலை இங்க சென்னைக்கு மாத்தல் ஆயிடுச்சான்” என்றவர்,

ஆதியிடம் நெருங்கி குரலை தாழ்த்தியபடி 

“அவன் சொல்லாம வந்ததை கூட பரவாயில்ல ஆதிமா… அவன் கூட ஒரு பொண்ணை கூட்டிட்டு வந்திருக்கான்” அதிர்ச்சியோடும் ஆவலோடும் அவர் விளம்ப,

“அய்யோ ஆன்ட்டி… ரொம்பெல்லாம் யோசிக்காதீங்க… அந்த பொண்ணு அவன் ப்ரண்டா இருக்கும்” என்றாள்.

ஆனால் அவர் குழப்பத்தோடு, “உம்ஹும்… இல்ல ஆதிமா… எனக்கென்னவோ சரியா படல… அதுவும் விஷ்வா முகத்தில் ஒரு திருட்டுத்தனம் தெரியுதே” என்க,

ஆதி சிரித்தபடி,

“அவன் மூஞ்சியே அப்படிதான் ஆன்ட்டி” என்றாள்.

“விளையாடாத ஆதிமா… அவன்கிட்ட நீதான் என்ன ஏதுன்னு கேட்டு சொல்லனும்” என்றவர் சொல்லவும்,

“அப்படியே உங்க பிள்ளை கேட்டா சொல்லிடுவானா ?” என்று கேட்டு எகத்தாளமாய் பார்த்தாள் ஆதி.

“என்ன ஆதிமா ? நீ என் செல்லம் ல” என்று கொஞ்சலாக அவள் முகவாயைப் பிடிக்க,

ஆதி யோசித்தபடி,

“ஆமா… எங்க அந்த பொண்ணு ?” என்று ஆர்வத்தோடு அவள் கேட்டாள்.

சாரதா வலதுபுறம் இருந்த மூடிய அறைக் கதவை காண்பித்து, “உள்ளே” என்று கைகாண்பிக்க,

ஆதி சமிஞ்சையால் தான் அந்தப் பெண்ணிடம் பேசி விஷயத்தை வாங்குவதாக அவரிடம் உறுதி கொடுத்துவிட்டு அவளும் அந்த அறையிலேயே படுத்து கொள்வதாக சொல்லி உள்ளே சென்றாள்.

சாரதா நிம்மதி பெருமூச்சொன்றை வெளிவிட்டு அங்கிருந்து அகன்றுவிட, ஆதி கதவு திறந்த தயக்கத்தோடு  நுழைந்தாள்.

அந்த ஓசை கேட்டு உள்ளே படுக்கையில் படுத்திருந்தவள் எழுந்து அமர்ந்து கொள்ள,

“சாரி டிஸ்டர்ப் பண்ணிட்டேனா ?!” என்று ஆதி தயங்கியபடி சொல்லவும்,

” நீங்க ?” என்றபடி சந்தேகமாய் பார்த்தாள் அந்தப் பெண்.

“ஐம் ஆதி… ஆதிபரமேஸ்வரி” என்றவள் தன்னை அறிமுகம் செய்து கொண்டதும் அந்தப் பெண்ணின் முகம் மலர்ந்தது.

“ஓ ! நீங்கதான் ஆதியா ?!” என்றவள் புன்னகையித்து,

“என் பேர் மாலதி… விஷ்வாவோட ப்ரண்ட்” என்றாள். 

ஆதி புருவத்தை சுருக்கிக் கொண்டு, “நான் விஷ்வாவோட எனிமி” என்று உரைக்க மாலதி அதிசயத்து அவளைப் பார்த்து மௌனமாய் நிற்க,

“அதை விடுங்க மாலதி… நீங்க உங்களை பத்தி சொல்லுங்களேன்” என்றவள் பேச்சை மாற்ற,

மாலதி அதன் பின்னர் அவளிடம் சகஜமாக பேச ஆரம்பித்தாள்.

அவளுடைய ஊர் திருச்சி என்றும் அதோடு அவள் விஷ்வாவோடு பெங்களூரில் ஒன்றாக வேலை பார்த்ததாகவும் சொன்னாள்.

இருவருக்கும் சென்னைக்கு ஒன்றாய் மாற்றலானதாகவும் சொன்னவள் கடைசியில் அவர்கள் இருவருக்கிடையில் இருந்த காதலை பற்றியும் உளறினாள்.

மாலதி பெண்களுக்கென்ற இந்தச் சமுதாயம் வரையறை செய்யப்பட்ட அத்தனை குணங்களும் அம்சமாய் பொருந்தியவள்.

அதோடு அவளை அழகு என்று சொல்வதை விட பேரழிகி என்று வர்ணிப்பதுதான் சரியாக இருக்கும்.

அதாவது ஆதிக்கு அப்படியே நேர்மறை.

அந்த குணத்தைத்தான் விஷ்வாவும் நேசித்திருக்கக் கூடும்.

இருபெண்களும் வெகுநேரம் பேசி கொண்டிருக்க, இறுதியாய் மாலதி களைப்புற்று உறங்கிப் போக ஆதி அந்த அறையிலிருந்த மேஜையின் முன்னிருந்த இருக்கையில் அமர்ந்தபடி அவளுடைய கட்டுரையை எழுத ஆரம்பித்தாள்.

அதனை முடிக்கும் தருவாயில்  அவள் விழிகளில் இருள் சூழ  அப்படியே மேஜை மீதே அவள் தலைசாய்த்து உறங்கிப் போனாள்.

விடிந்ததை உணராமல் அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, சாரதாவின் குரல் கேட்டே அவள் விழித்தெழுந்தாள்.

அப்போதுதான் கட்டுரையை முடிக்காமலே தான் உறங்கிவிட்டதை நினைவுபடுத்தி கொண்டு,

தன் கைக்கடிகாரத்தை பார்த்தவள், “என்ன ஆன்ட்டி நீங்க ?!… கொஞ்சம் சீக்கிரம் என்னை எழுப்பியிருக்க கூடாதா ?” என்று பதட்டப்பட,

“இல்ல ஆதிமா… நீ ரொம்ப டயர்டா தூங்கிட்டிருந்த… அதான் எனக்கு உன்னை எழுப்பவே மனசு வரல” என்றவர் மேஜை மீது கலைந்திருந்த தாள்களை பார்த்து,

“எப்பவும் வேலை வேலை வேலைதானா உனக்கு… என்ன பொண்ணோ ?! நல்லா படுத்து தூங்கினாதேனே கொஞ்சமாச்சும் அலுப்பு போகும்” என்றவர் சொல்ல,

“அய்யோ ஆன்ட்டி… இதுக்கு மேல தூங்கினா என் வேலைதான் கெட்டு போகும்” என்றவள் பரபரவென புறப்படத் தயாரானாள்.

காலை உணவைச் சாப்பிடும் போதே சாரதாவிடம் அந்தப் பெண் மாலதி எங்கே என்று கேட்க, விஷ்வா அவளை ஊருக்கு அனுப்ப பேருந்து நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருப்பதாக தெரிவித்தாள்.

அதன் பிறகு ஆதி அங்கிருந்து அலுவலகத்திற்குப் புறப்பட்டு விட, அன்று முழுக்கவும் அவளுக்கு அயராத வேலை.

ஜேம்ஸ் அனுப்ப போகும் செய்திக்காக அவள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருந்தவள்,

அந்தச் செய்தியின் முக்கியத்துவத்தை பொறுத்தே அந்த வார இதழின் அட்டைபடத்தை வடிவமைக்கப் பிரசுரத்தை கூட  நிறுத்தி வைத்திருந்தாள்.

கருணாகரனிடம் இதை பற்றி சொல்ல யோசித்த கொண்டிருந்த நிலையில்  அந்த எண்ணம் அன்றும் ஈடேறாமல் போனது.

அவர் அன்று மாலையே திருச்சிக்கு சென்று மாலதி வீட்டாரிடம் விஷ்வாவிற்காக பெண் கேட்க போவதாக முடிவெடுத்திருந்தார்.

சாரதாவை போல் அவருக்குக் குழப்பம் இல்லை. மகனைப் பார்வையாலேயே தெளிவாய் கணித்து வைத்திருந்தவர், தன் மகனின் எல்லா ஆசைகளையும் தடை ஏதுமின்றி நிறைவேற்ற வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்.

ஆதிக்கும் அவரை பற்றி நன்றாகவே புரிந்தது.

மகன் என்று வந்துவிட்டால் அவருக்கு மற்ற எல்லா வேலைகளும் இரண்டாம் பட்சம்தான்.

இதனால் ஆதிக்கு வேறொரு இக்கட்டான சூழ்நிலை உருவாகியிருந்தது.

அந்த வாரப் பிரசுரத்தின் முடிவெடுக்கும் பொறுப்பு அவளிடம் வந்திருக்க, அந்தச் சூழ்நிலை தானாக உருவாயிற்றா இல்லை அது விதியின் வசமா என்பது யார் அறியக் கூடும்.

அதே நேரம் ஆதி ஆவலாய் ஜேம்ஸின் தகவலுக்காகக் காத்திருக்க, அவள் எதிர்பார்த்தது போலவே அவனிடம் இருந்து செய்தி வந்தது.

அந்த நொடியே அந்த வாரப் பிரசுரத்தின் அட்டைபடம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை முடிவு எடுத்தவள், அந்த வார இதழின் செய்திகளை கோர்வையாய் தயார் செய்து பதிப்பிற்கு அனுப்பி வைத்தாள்.

அதுவரையிலும் அவள் யூகித்திருக்க மாட்டாள்.

அந்த வார பாரதி இதழ்தான் அவள் வாழ்க்கையின் பெரும் திருப்புமுனையை உருவாக்கப் போகிறது என்று.

ஆதி தன் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு நேரம் பார்க்கும் போது, அது நடுநிசியாகி இருந்தது.

ஊரே ஓய்ந்து கிடக்க, அவள் கருணாகரன் வீட்டு வாசலில் தன் பைக்கில் வந்து இறங்கினாள்.

அவள் வாயிற்கதவைத் தட்ட முற்பட்ட போது அது தானாகவே திறந்து கொள்ள,

விஷ்வா சோபாவில் அமர்ந்தபடி தன்னுடைய லேப்டாப்பில் மும்முரமாய் வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆதி உள்ளே நுழைந்ததைக் கண்டதும் அவன் பார்வை அனிச்சையாய் வெறுப்பை உமிழ, அவளோ அவனைப் பொருட்படுத்தாமல் சாரதாவை தேடினாள்.

அவள் எங்குத் தேடியும் சாரதா இல்லையென்பதை யூகித்தவள்,

வேறு வழியின்றி விஷ்வாவை பார்த்து,

“ஆன்டியும் அங்கிளோட திருச்சிக்கு போயிருக்காங்களோ ?!” என்று கேட்டு அவன் பதிலை எதிர்பார்த்தாள்.

அலட்சியமாய் அவளை பார்த்தவன், “ஆமாம் அவங்களும்தான் போயிருக்காங்க” என்று பதிலுரைத்தான்.

‘சே… இது தெரியாமலா நாம இங்க வந்து தொலைச்சோம்’ என்று மனதில் எண்ணிக் கொண்டவள்,

அடங்காத பசியின் காரணமாக டைனிங் டேபிளில் எடுத்து வைத்திருந்த உணவைத் தானே போட்டுக் கொண்டு உண்ண ஆரம்பித்தாள்.

அந்த நேரம் வாயிற்கதவைச் சென்று பூட்டியவன் ஆதியை எரிச்சலாய் பார்த்து,

“இதுதான் மேடம் எப்பவும் வீட்டுக்கு வர டைமா ?!” என்று எள்ளலாய் வினவ,

“நாட் ஆல்வேஸ்… இன்னைக்கு வொர்க் கொஞ்சம் அதிகம்… அதான் லேட்டாயிடுச்சு” என்று அலட்டிக் கொள்ளாமல் அவள் பதிலுரைக்கவும் அவன் கோபம் இன்னும் அதிகமானது.

“இட்ஸ் ஆல்மோஸ்ட் மிட்நைட்…  எவ்வளவு நேரம்தான் காத்திருக்கிறதாம்… கொஞ்சங் கூட பொறுப்பே இல்ல”

அவன் எரிந்து விழ, அவளும் கடுப்பானாள்.

இருந்தும் அவனிடம் பேச்சு கொடுக்காமல் அவள் மௌனமாய் இருக்க,

அவன் விடாமல், “எல்லாமே உனக்கு டேக் இட் பாஃர் கிரான்டட்… இல்ல ?!” என்க,

அவள் முகமெல்லாம் சிவக்க பொறுமையிழந்தவள் சாப்பிடுவதை விட்டு எழுந்து நின்றபடி,

“இப்ப என்ன உனக்கு பிரச்சனை ?… நான் லேட்டா வந்தது…இல்ல நான் இங்க வந்தது ?!”என்றவள் சீற்றமாய் கேட்டு அவனை முறைக்க, அந்த நொடி இருவரின் பார்வையும் ஒரு சேர அனலைக் கக்கி கொண்டிருந்தது.

அவள் மேலும், “நீ மட்டும்தான்   இருப்பன்னு தெரிஞ்சிருந்தா நான் இங்கே வந்தே இருக்க மாட்டேன்” என்றவள் சொல்ல,

விஷ்வா அதற்கு மேல் தன் கோபத்தைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் அவன் தன் அறைக்குள் நுழைந்து கதவை படாரென மூடினான்.

ஆதிக்கு அவன் செயல் அவமானத்தை விளைவிக்க அதற்கு மேல் சாப்பிட மனமில்லாமல் அதனை மூடிவைத்தாள்.

இவர்கள் இருவரின் உறவு இன்று நேற்று இப்படியில்லை.

சிறுவயதிலிருந்தே இவர்கள் இப்படித்தான் சண்டையிட்டும் கோபித்தும் கொண்டு இருந்தனர்.

கருணாகரன் சாராதாவின் ஒரே மகன்தான் விஷ்வா என்கிற விஸ்வேஸ்வரன்.

அவன் அறிவு, உயரம், கம்பீரம் என எதிலும் குறைந்தவன் அல்ல. அதேப் போல் கோபப்படுவதிலும் உணர்ச்சி வசப்படுவதிலும் அவனை மிஞ்ச ஆளில்லை.

விஷ்வா தன் தந்தை ஆதியின் மீது காட்டும் அக்கறையும் அன்பையும் ஏனோ இயல்பாய் அவனால் ஏற்க முடியவில்லை.

அதுவே அவனுக்கு அவள் மீதான வெறுப்பாய் வளர்த்தது.

அவன் ஏன் தன் மீது வெறுப்பைக் காட்டுகிறான் என்று தெரியாமலே அவனிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் விலகி நின்றாள் ஆதி.

விஷ்வா மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறான்.

அவனுக்கு அப்பாவை போல எழுத்து, பத்திரிக்கை துறை எதிலும் ஆர்வமில்லாத நிலையில் ஆதி கருணாகரனை பின்தொடர்ந்து பத்திரிக்கை துறையில் ஆதிக்கம் செலுத்துவது அவனின் வெறுப்பை இன்னும் அதிகப்படுத்தி இருந்ததென்றே சொல்ல வேண்டும்.

இவர்களின் வெறுப்பு இனி வரும் காலங்களில் கரையுமா என்ற கேள்விக்கான பதிலைக் காலம்தான்  சொல்ல வேண்டும்.

Leave a Reply

error: Content is protected !!