VNE 62(1)
VNE 62(1)
62
வீட்டுக்குள் நுழையும் போதே பைரவியின் அர்ச்சனையோடு தான் உள்ளே நுழைந்தாள். ‘இவன் வேணும்னே இங்க கூட்டிட்டு வரானோ? அவன் பேச முடியாததை எல்லாம் பைரவியை வெச்சு பேச வைக்கத்தான் ப்ளான் பண்றான்…’ உள்ளுக்குள் எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது. அதை நினைத்துக் கொண்டே அவனை உறுத்து விழித்தபடி தான் உள்ளே நுழைந்தாள்.
“இப்படித்தான் பண்ணுவியா மஹா? கொஞ்சமாவது அறிவு இருக்கவ பண்ற காரியமா இது?” என்று உச்சஸ்தாயில் ஆரம்பித்த பைரவியை பார்த்து முறைத்தாள்.
‘ம்ம்ம் ஆரம்பி… சும்மாவே ஆடுவ… இன்னும் நான் தான் சலங்கை கட்டி விட்ருக்கேனே… இன்னும் ஆடு மாதாஜி ஆடு…’ மனதுக்குள் நினைத்துக் கொண்டு மௌனமாக தந்தையின் அருகில் சோபாவில் அமர்ந்து கொண்டாள். நாதனும் ஜோதியும் வந்து இருப்பதை பார்த்தாள். அவர்களை எதிர்நோக்க சங்கடமாக இருந்தது. அதிலும் ஜோதியை பார்த்ததும் அவளையும் அறியாமல் கண்ணீர் குபுக்கென்று எட்டிப் பார்க்க, அதை மறைக்க தலை குனிந்து கொண்டாள்.
ஷ்யாமின் அத்தனை பரிதவிப்பையும் கண்டவர்களுக்கு அவள் கிடைத்து விட்டால் போதுமென்று தான் நினைத்திருந்தனர். ஆனால் அவள் வடபழனி முருகன் கோவிலில் இருப்பதை கார்த்திக் போன் செய்து முன்னரே தெரிவித்து அனைவரின் வயிற்றிலும் பாலை வார்த்திருந்தான். மஹா கிடைத்த செய்தியை ஸ்ரீராம் குழுவுக்கும் தெரிவித்து இருந்தான். அவன் இன்னமும் தேடிக் கொண்டிருக்க கூடாதே! போலீசாருக்கும் சிவச்சந்திரன் குழுவுக்கும் ஷ்யாம் தெரிவித்து இருந்தான். ஒரு வழியாக இவை அனைத்தையும் முடித்துக் கொண்டுதான் வீட்டுக்கு வந்திருந்தனர்.
வரும் வழியெல்லாம் இத்தனை பேரிடம் பேசுவதை கண்ட மஹாவுக்கு அப்போதுதான் தான் செய்த தவறின் வீரியம் புரியவாரம்பித்து இருந்தது. இத்தனை பேர் தன்னை தேடிக்கொண்டிருந்தனரா? கடைசியில் தகவல் சொன்னது சௌஜன்யாவா? மகாவுக்கு ஒரு மாதிரியாக குற்ற உணர்வாக இருந்தது.
அவளை அடித்து இன்னமும் ஷ்யாமை விட்டுக் கொடுத்து? மனதுக்கு கஷ்டமாக இருந்தது. ஆனால் அவன் சொன்ன பொய்யால் தானே இவ்வளவும்! ஏன் அவன் அந்த பொய்யை சொல்ல வேண்டும்? அந்த பொய்யை மட்டும் அவன் சொல்லி இருக்காவிட்டால் கண்டிப்பாக தான் ஸ்ரீராம் கூறியதை நம்பி இருக்கப் போவதில்லையே!
கார்த்திக்கும் ஷ்யாமும் எதிர் சோபாவில் அமர்ந்தனர். ஷ்யாம் வெகு சோர்வாக இருந்தான். பசியோடு தாகமும் அப்போதுதான் தெரிந்தது. உண்மையில் மகாவை பார்க்கும் வரை அவையெல்லாம் மறந்து விட்டிருந்தது. அவர்களை கண்டவுடன் பிருந்தா தான் அவசரமாக தண்ணீரை கொண்டு வந்து கொடுத்தாள்.
ஷ்யாம் மடக் மடக் என்று ஒரு முழு சொம்பை காலி செய்தபோது தான் அவனது தாகத்தின் அளவு கூட தெரிந்தது. அப்படி பித்து பிடித்தது போலத்தான் இருந்திருந்தான்.
“குழந்தைக்கு ஏதாவது குடிக்கவாச்சும் குடுத்துட்டு அப்புறமா என்ன வேண்ணாலும் பேசு பைரவி…” முருகானந்தம் பரிந்து கொண்டு வர அவரை முறைத்தார் பைரவி.
“ஆமா குழந்தை?! இன்னும் இப்படியே சொல்லிட்டு இருக்காதீங்க… புள்ளைய கட்டிக் கொடுத்து அவ இன்னொரு வீட்டுக்கும் போயாச்சு. ஒரு குடும்பத்தை நிர்வாகம் பண்ண வேண்டியவ… இப்படி பொறுப்பே இல்லாம ஒரு காரியத்தை செய்வாளா?” பைரவிக்கு அத்தனை கோபமாக இருந்தது.
“இருக்கட்டும்… அதனால? புள்ளையே மனசு நொந்து வந்து இருக்கா… கொஞ்சம் ஆறட்டும் பைரவி…” கிருஷ்ணம்மாள் கூற,
“ஆறின கஞ்சி பழைய கஞ்சி அத்தை… உங்க பேத்தி வாயாடித்தனத்தையும் விட மாட்டா… அவசரக்குடுக்கை மாதிரி ஏதாவது காரியம் பண்ணிட்டு முழிக்கறதையும் விட மாட்டா… எவ்வளவோ தடவை நான் சொல்லிட்டேன். ஒரு டாக்டர் மாதிரி நடந்துக்கன்னு… அதுவும் இப்ப எப்படிப்பட்ட காரியத்தை பண்ணி வெச்சு இருக்கா பாருங்க அத்தை உங்க பேத்தி… இதை இப்படியே விட சொல்றீங்களா?”
“சரி… இப்ப என் பொண்ணை இப்படி பேசி என்ன பண்ண போற? மனசொடிஞ்சு இருக்க புள்ளைய இன்னும் கொஞ்சம் மனசை ஒடிக்க போற…” முருகானந்தம் கோபமாக கேட்க, மஹா அவரது தோளில் சாய்ந்து கொண்டாள். தந்தை எப்போதும் தந்தை தான். தவறே செய்தாலும் தோள் கொடுத்து அதன் பின் அவளது தவறை நிதானமாக சொல்வதில் அவரை மிஞ்ச முடியாது.
கண்கள் கலங்கியது. அவரது கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள் மஹா. மகளை தோளோடு வளைத்துப் பிடித்து,
“என் புள்ளைய திட்ற ரைட்ஸ் உனக்கு கொடுக்கல. எதுவா இருந்தாலும் அவ புருஷன் பார்த்துப்பார். நீ போய் உன் வேலைய பார் பைரவி…”
“இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி குதிக்கறீங்க? புருஷன் தப்பு பண்ணா சட்டைய புடிச்சு கேளுங்கறேன்… இன்னும் ரொம்ப தப்பு பண்றாங்களா, அடிக்க கூட செய்… ஆனா அதை விட்டுட்டு இப்படி முட்டாள்தனமா வீட்டை விட்டு போறது, இப்படி எல்லாரையும் பதற வைக்கறது எல்லாம் என்ன பழக்கம்ன்னு கேக்கறேன். உடம்பு முடியாம நீங்க இருக்கீங்க, அத்தை இருக்காங்க. ஒன்னு கெடக்க ஒன்னாச்சுன்னா உம்ம மவ தான் வந்து காப்பாத்தி கொடுப்பாளா?” கோபத்தில் பைரவி கொதிக்க, அதிலிருந்த நியாயம் முருகானந்தத்தின் வாயை அடைத்தது.
மஹாவுக்கு மனம் முழுவதும் ரணமாக இருந்தது. குழப்பமாக இருந்தது.
“அண்ணி சொல்றதும் கரெக்ட் தான்டா தங்கம்… உங்க கல்யாணம் எவ்வளவு சிறப்பா, பெருமையா நடந்த ஒன்னு. ஊரே மெச்ச அத்தனை பெருமையோட நம்ம வீட்டுக்கு வந்த மகாலட்சுமி ம்மா நீ. எவ்வளவு பிரச்சனைன்னாலும் எனக்கு கால் பண்ண வேண்டியதுதான. இவன் தப்பு பண்ணா நான் என்னனு கேக்க மாட்டேனா? அப்படியே விட்டுடுவமாடா? சொல்லு…” ஜோதி பொறுமையாக எடுத்துக் கூற, பைரவி தலையாட்டினார்.
“அண்ணி… அதுவும் இவ அத்தைங்க எல்லாம் எதுலடா குத்தம் கண்டுபிடிக்கலாம்ன்னு காத்துகிட்டு இருக்காங்க. கல்யாணதப்பவே அத்தனை பிரச்சனை பண்ணாங்க. மாப்பிள்ளை வீடு பெரிய இடம். கண்டிப்பா தப்பு இருக்கும்ன்னு சொன்னவங்க வாய்க்கு அவல் கொடுத்து இருக்கா இவ…” என்றார் பைரவி.
“எவ்வளவோ பிரச்சனை இருக்கலாம் மஹா. எனக்கு புரியுது… உனக்கும் உன் வீட்டுக்காரருக்கும் பிரச்சனைன்னு. ஆனா என்ன பண்ணி இருக்கணும் நீ? நம்ம வீட்டுக்கு வந்து இருக்கணும் மஹா. என்னன்னு கேக்க நாங்க இருக்கமே…” ஜோதி நிதானமாக கூற, அதை ஒத்துக்கொண்ட பைரவி,
“அப்படி என்ன எங்களை கூட மறந்துட்டு போறது? இப்ப மூணு மாசமாத்தான்டி அவர் உனக்கு புருஷன். நான் உன்னை பெத்து இருபத்தி ரெண்டு வருஷம் வளத்தவ…” சேர்த்து வைத்ததை எல்லாம் பைரவி கொட்ட, மஹா மெளனமாக இருந்தாள். ஷ்யாம் தலையில் கை வைத்தபடி அமர்ந்தவன், நிமிரவில்லை!
“ம்மா… கொஞ்சம் பொறுமையா இரு. வந்தவங்களுக்கு சாப்பாடு போடு. அப்புறமா பேசு…” கார்த்திக் பைரவியை சமாதானம் செய்ய,
“இரு கார்த்திக்… இப்ப சாப்பாடு ஒன்னும் அவ்வளவு முக்கியமில்ல. ஒரு நேரம் என்ன… ஒரு நாள் பட்டினி கிடந்தா கூட தப்பில்ல. இப்ப எதனால மஹா இப்படி பண்ணா? அது எனக்கு தெரிஞ்சாகனும்… இது என் பொண்ணோட வாழ்க்கைடா…” என்றவரின் குரலில் அத்தனை வேதனை. அவர் ஷ்யாமை பார்க்கும் பார்வையில் ஒரு ஒதுக்கம்.
ஷ்யாம் எதோ பிரச்சனை செய்யாமல், இந்த பெண் கிளம்புவாளா என்று தான் அவருக்கு தோன்றியது. அவள் கிடைக்கும் வரை பொறுமையாக இருந்தவருக்கு இன்னமும் அந்த பொறுமையை கடைபிடிக்க முடியவில்லை. ஆனால் ஷ்யாமிடம் அத்தனை பரிதவிப்பையும் கண்டார். ஆனாலும் மருமகனா மகளா என்று யோசிக்கும் போது தாயாக மகள் புறம் சாய்ந்தது அவரது தட்டு!
“இப்ப திரும்ப அதை பேசி என்ன பண்ண போற? அதான் அவளை கூட்டிட்டு வந்தாச்சே… விடும்மா…” என்றவனை முறைத்தார்.
“என்ன பேசற கார்த்திக் நீ? உனக்கு உன் மச்சான் முக்கியம் தான். ஆனா அதே அளவு எனக்கு என் பொண்ணும் முக்கியம். அன்னைக்கே அவ கிட்ட தலைப்பாடா அடிச்சுகிட்டேன். அதென்ன அத்தனை பேர் முன்னாடியும் ஒருத்தி இடுப்புல கை போடற அளவு விடறது? கேக்க ஆள் இல்லைங்கற நினைப்பா? இதெல்லாம் நான் கேக்க கூடாதுதான். ஆனா பொண்ணை பெத்து வளத்தது இப்படி ரோடு ரோடா அலைய விடறதுக்கா?” என்று சுருக்கென்று பைரவி கேட்க, நிமிர்ந்து மஹாவை ஆழ்ந்து பார்த்தான் ஷ்யாம்.
‘போதுமா? இதற்கு தானே ஆசைப்பட்டாய்?’ என்றது அவனது பார்வை.
“ம்மா… இதையெல்லாம் எதுக்கும்மா இப்ப பேசற? எனக்கு பிரச்சனைன்னு உன்கிட்ட சொன்னேனா?” மஹா பல்லைக் கடித்துக் கொண்டு கேட்க,
“அப்புறம் எதுக்குடி இப்படி ஓடிப் போன? இங்க வர வேண்டியதுதான? என்ன பிரச்சனைன்னாலும் நாங்க உன் புருஷன் சட்டையை பிடிச்சு கேக்க மாட்டோமா?” என்று பைரவி கோபத்தில் கூற, கேட்டுக் கொண்டிருந்த நாதனுக்கும் ஜோதிக்குமே சுருக்கென்று இருந்தது. ஆனால் என்ன செய்வது, இந்த இடத்தில் பேசினால் கண்டிப்பாக ஷ்யாம் வாழ்க்கை அதோ கதிதான் என்பதை உணர்ந்தவர்கள் மௌனம் காக்க, அவர்களது அந்த மௌனமும் ஷ்யாமை வருத்தியது.
“ம்மா…” கார்த்திக் கோபமாக வாயெடுக்க, மஹா முந்திக் கொண்டாள்.
“நான் இங்க வரவும் வேண்டாம்… நீ அவங்க சட்டையை பிடிக்கவும் வேண்டாம்… கொஞ்சம் சும்மா இருக்கியா?” என்றவளை இன்னமும் முறைத்தார் பைரவி.
“இப்ப என்ன பிரச்சனைன்னு சொல்றியா இல்லையா?” பைரவி கறாராக கேட்க,
“பிரச்சனை எல்லாம் உன் பொண்ணு பண்ணதுதான். நான் தான் கூடவே இருக்கனே… எனக்கு தெரியாதா? தப்பு தப்பா புரிஞ்சுகிட்டு அவ தான் மச்சானை நோகடிக்கறான்னா, ஏன் மா? நீ வேற…” என்று கார்த்திக் கடுப்படிக்க,
“எதுவுமே இல்லாம எதுக்கு மஹா பிரச்சனை பண்றா?” என்று கேட்க, ஸ்ரீராம் அழைத்தது முதல், மஹா சௌஜன்யாவை அடித்தது வரை சொல்லி முடித்தான் கார்த்திக்.
“எல்லாம் சரி தான் கார்த்திக். ஆனா மாப்பிள்ளை ஏன் பொய் சொல்லணும்? ஸ்ரீராம் அப்படி சொல்லிருக்கும் போதே, மாப்பிள்ளையும் இப்படி சொன்னா எப்பேற்பட்டவளுக்கும் கோபம் வரத்தான்டா செய்யும்…” என்று கூற,
“ம்மா… அது அவங்களுக்குள்ள எதோ விஷயம் போல… நீ கொஞ்சம் சும்மா இரேன்…” என்று கார்த்திக் அடக்கினான்.
“அதெப்படி கார்த்திக்…” என்று அவனை அடக்கிய நாதன், ஷ்யாம் பக்கம் திரும்பி, “நீங்க ரெண்டு பேரா எல்லாத்தையும் முடிவு பண்ணனும்னா பெரியவங்க எதுக்கு இருக்கோம் ஷ்யாம்? உங்க வயசுக்கு இந்த அனுபவம் இருக்குன்னு நினைச்சா, எங்க வயசுக்கு இன்னும் அந்த அனுபவம் அதிகமா இருக்காதா?” நாதன் நிதானமாக கேட்டாலும் அதில் அத்தனை கோபம் இருந்தது.
பைரவி இத்தனை கேள்விகளை, அதையும் தாங்கள் கேட்கும் படி வைத்து விட்டானே என்ற கோபம். மஹா இப்படி செய்துவிட்டாளே என்ற கோபம்.
“சாரி நானா… இனிமே இப்படி நடக்காது…” தந்தையை பார்க்காமல் அவன் கூறினான்.
“எப்படி நடக்காதுன்னு சொல்ற? இனிமே மஹா இப்படி பண்ண மாட்டான்னு சொல்ல வர்றியா? இல்லன்னா நீ ஒழுக்கமா இருக்கறதா முடிவு பண்ணிட்டியா?” நாதனின் கேள்வி ஷ்யாமை சீறி எழ செய்தது.
“ஒழுக்கமா இருக்கறதா? ஏன் நானா இப்ப நான் என்ன ஊர் மேய போயிட்டேனா? அவ தான் அறிவே இல்லாம பண்றான்னா, நீங்களும் இப்படி பேசறீங்க?” என்று கோபத்தில் கொதிக்க,
“நானா அப்படி கேக்கல கண்ணா… நீங்க ரெண்டு பேரும் நல்லா இருந்தா தான எங்களுக்கு நிம்மதி…” ஜோதி அவசரமாக இடையிட,
“போதும் ம்மீ… எல்லாரும் பேசினதும் போதும்… இவ கூட குடும்பம் நடத்தி கிழிச்சதும் போதும்… எல்லார் கிட்டயும் பேச்சு வாங்கினதும் போதும். என்னை எவ்வளவு அசிங்கப்படுத்தனுமோ அவ்வளவு அசிங்கப்படுத்தி பார்த்துட்டா… இதுக்கும் மேல யாரும் பேச வேண்டாம்…” கொதித்தவன்,
“கல்யாணத்துக்கு முன்ன இப்படியெல்லாம் ஒரு கேள்வி வந்ததுன்னா நான் என்ன சொல்வேன்னு உங்களுக்கு தெரியும். இதுவரைக்கும் யாருக்கும் நான் பதில் சொன்னதில்ல. ஆனா இவளை கல்யாணம் பண்ணி, இவளுக்கு உண்மையா இருப்பேன்னு கமிட்மென்ட் கொடுத்து இருக்கேன். அந்த கமிட்மென்ட்டை கண்டிப்பா காப்பாத்துவேன். இந்த அரவேக்காடு பண்ற வேலைக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது… ஆனா இந்த விஷயத்துல வேற யாரும் பேசவும் வேண்டாம். இது எங்க பிரச்சனை. நாங்க பார்த்துக்குவோம்… விட்டுடுங்க…”