vkv – 4
vkv – 4
வண்ணம் கொண்ட வெண்ணிலவே 4
1984 அன்று.
அந்த ஸ்பின்னிங் மில் மிகவும் பிஸியாக இயங்கிக் கொண்டிருந்தது. தங்கள் புதிய, இளம் முதலாளி கொண்டு வந்திருக்கும் வெளிநாட்டு ஆர்டர்களை செவ்வனே நிறைவேற்ற அத்தனை பேரும் மும்முரமாக உழைத்துக் கொண்டிருந்தார்கள்.
தமிழும், மாறனும் ஆஃபீஸ் அறையில் உட்கார்ந்து கொண்டு தங்களுக்குள் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள். தமிழின் பொறுப்பில் தொழிலை ஒப்படைத்து விட்டு, சிதம்பரம் மேற்பார்வை மட்டும் செய்தார். அப்பாவின் இடையீடு இல்லாததால் மாறனையும் தன்னோடு சேர்த்துக் கொண்டான் தமிழ்.
“வெளிநாட்டு காரங்க மாறா, டைமுக்கு டெலிவரி பண்ணலைன்னா திருப்பி அனுப்பிடுவானுங்க. அதுல நாம கண்ணும், கருத்துமா இருக்கனும்.”
“புரியுது தமிழ்.”
“நீ இங்க பாத்துக்குவே என்கிற தைரியத்துல தான் நான் ஆர்டர் பிடிக்கிறதுல மும்முரமா இருக்கேன். எங்கேயும் சொதப்பிடப்படாது மாறா.”
“இல்லை தமிழ், நான் ரொம்பவே கவனமா இருக்கேன்.”
இளமாறன் தன் எல்லை தெரிந்து பழகுபவன். ஆஃபிஸில் தமிழ்ச்செல்வனுக்கு முன்னால் உட்காரக் கூட மாட்டான். அதனால் சிதம்பரத்திற்கே அவன் மேல் ஒரு நல்ல அபிப்பிராயம் தோன்றி இருந்தது.
“மாறா, ரொம்ப பண்ணாம உக்காருடா.” என்று தமிழ் சொன்னால்,
“இல்லை தமிழ், இந்த விஷயத்துல என்னை என் போக்குல விட்டுடு, அதுதான் நம்ம ரெண்டு பேருக்குமே நல்லது.” என்று சொல்லி விடுவான்.
கடந்த ஒரு வருடமாக இரண்டு பேரும் தொழிலில் இணைந்தே செயல்படுகிறார்கள். இள ரத்தம், இருவருக்கும் இருந்த ஆர்வம், புதிய புதிய ஐடியாக்கள் என தொழில் ஒரு படி மேலே போயிருந்தது.
“மாறா, அம்மா எப்படி இருக்காங்க?”
“முன்னேற்றம் என்று சொல்ற அளவுக்கு ஒன்னும் இல்லை.”
“நல்ல டாக்டர் கிட்ட தானே காட்டுறே?”
“என்ன தமிழ் இப்படி கேட்டுட்டே? நீ குடுக்குற சம்பளத்துக்கு நான் எங்கம்மாக்கு ராஜ வைத்தியமே பண்ணலாம்.”
“துணைக்கு யாரு இருக்கா?”
“அம்மாவோட ஒன்னுவிட்ட தங்கை ஒருத்தங்க இருக்காங்க, அவங்களுக்கும் கஷ்ட ஜீவனம் தான். அதனால கூட்டிட்டு வந்துட்டேன்.”
“நல்லது மாறா, பணம் ஏதும் தேவை இருந்தா கேளுடா.”
“சரி தமிழ்.” அவர்கள் பேச்சை கலைத்தது டெலிபோன் அலறல்.
“ஹலோ, தமிழ்ச்செல்வன் ஸ்பீக்கிங்“
“தமிழ், நான் பிரபாகரன் பேசுறேன்பா.”
“சொல்லுங்க மச்சான்.” ‘யாரது‘ என்று செய்கையால் மாறன் கேட்க, சத்தமில்லாமல் ‘பிரபாகரன்‘ என்றான் தமிழ்.
“மாறன் எங்க தமிழ்?”
“என்னோட தான் இருக்கான் மச்சான்.”
“ஏதாவது ப்ரோக்ராம் இருக்கா தமிழ்?”
“இல்லை மச்சான், நீங்க சொல்லுங்க.”
“ஒரு மெடிகல் காம்ப் விஷயமா உங்க ஊரிலிருந்து ஒரு இருபது மைல் தூரத்தில இருக்கேன். நீங்க ரெண்டு பேரும் ஃப்ரீயா இருந்தா அப்படியே பாத்துட்டு போகலாம்னு தோணிச்சு.”
“இது என்ன கேள்வி மச்சான், கிளம்பி வாங்க. உங்களைப் பாத்து நாலு மாசத்துக்கு மேல ஆச்சு.”
“சரிப்பா, ஒரு அரை மணி நேரத்துல வந்திடுறேன்.”
“சரி மச்சான்.” ஃபோனை வைத்த தமிழ்,
“மாறா, பிரபாகரன் இன்னும் ஒரு அரை மணி நேரத்தில வருவாராம், நம்ம மூணு பேருக்கும் லன்ச்சுக்கு ரெடி பண்ணு. நல்ல ஹோட்டல்ல சொல்லு, எந்தக் குறையும் வந்திரப்படாது.”
“சரி தமிழ், என்ன இந்தப் பக்கம் வந்திருக்காரு?”
“ஏதோ மெடிக்கல் காம்ப் சம்பந்தமா வந்திருக்காராம்.”
“ஓ… இப்போ என்ன குண்டைத் தூக்கி போடப் போறாரோ?”
“ஹா… ஹா… அப்படி இல்லை மாறா, மனுஷன் குந்தவி மேல பைத்தியமா இருக்கார். அதுக்கு நாம சந்தோஷம் தான் படனும்.”
“அது உண்மைதான், நான் அன்னைக்கு மிரண்டு போயிட்டேன் தமிழ். திடுதிடுப்னு நான் குந்தவியை ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணப் போறேன்னு நின்னாரே! எப்படியோ குந்தவி சமாளிச்சு வெச்சிருக்கா போல.”
“ம்… பாவம்பா மனுஷன். இவ்வளவு உயரத்துல இருந்தும் எவ்வளவு பணிவா இருக்காரு. இந்தக் காலத்தில இப்படி பாக்க முடியாது மாறா.”
“அந்த வகையில நம்ம பொண்ணு குடுத்து வெச்சவதான்.” இளமாறனும் ஒத்துக் கொண்டான்.
ஒரு அரை மணி நேரத்தில் பிரபாகரன் வந்துவிட, மூவரும் சாப்பிட உட்கார்ந்தார்கள். மாறன் எல்லா ஏற்பாடுகளையும் கச்சிதமாக பண்ணி இருந்தான். நல்ல தரமான ஹோட்டலில் இருந்து உணவு வரவழைக்கப்பட்டிருந்தது.
“எதுக்குப்பா இதெல்லாம், வெளியே போய் சாப்பிட்டிருக்கலாம்.”
“பரவாயில்லை மச்சான், எங்க ஊருக்கு வந்திருக்கீங்க. எங்க வீட்டு மாப்பிள்ளையை நாங்களே கவனிக்கலைன்னா எப்படி?”
“வாயாலே பந்தல் போடாம செய்கையிலயும் காட்டுங்கப்பா.”
“முதல்ல சாப்பிடுங்க மச்சான், அப்புறமா எல்லாம் பேசலாம்.” பிரபாகரனை சமாதானப் படுத்தி மூன்று பேரும் சாப்பிட்டு முடித்தார்கள்.
“சொல்லுங்க மச்சான்.”
“சொல்ல ஒன்னுமே இல்லை இளமாறன். ரெண்டு பொம்பளைங்களுக்கு நடுவில மாட்டிக்கிட்டு நான் முழிக்கிறேன்.”
“திரும்பவும் ஏதாவது பிரச்சனையா மச்சான்?”
“டெய்லி ஏதாவது ஒரு ஜாதகத்தோட எங்கம்மா அலையுறாங்க தமிழ். அவங்களை மாத்த முடியும்னு எனக்கு தோணலை. குந்தவியும் நான் சொல்றதை கேக்க மாட்டேங்குறா.”
“மச்சான், இந்த விஷயத்துல நீங்க குந்தவியை தப்பு சொல்லாதீங்க. ஒத்தையா இருந்து வளத்த அப்பாவுக்கு தெரியாம எப்படி கல்யாணம் பண்றது? அதுவும் இல்லாம, அவளுக்கு ஒரு தங்கை இருக்கா. குந்தவியோட செய்கை அந்தப் பொண்ணு வாழ்க்கையை பாதிக்கும் இல்லையா?”
“எங்கம்மாவும் என்னை ஒத்தையாத்தான் வளத்தாங்க மாறன். நானும் அவங்களுக்கு தெரியாமத்தானே கல்யாணம் பண்ணப் போறேன்.”
“மச்சான், சொல்றேன்னு நீங்க தப்பா எடுக்கக் கூடாது. குந்தவி வீட்டுல காதல் கல்யாணத்துக்கு தான் எதிர்ப்பு வருமே தவிர உங்களை யாரும் மறுக்க மாட்டாங்க. இப்ப கூட உங்க ஜாதகத்தை ஒரு தரகர் கிட்ட கொடுத்து குந்தவி அப்பாவை அணுக முடியும். ஆனா… பிரச்சினை…உங்க…” முடிக்காமல் தமிழ் இழுக்க…
“புரியுது தமிழ், பிரச்சினை எங்கம்மா தான். அவங்க பொண்ணு கேட்டு வரப் போறதில்லை. நானும் அவங்க காட்டுற பொண்ணை கட்டப் போறதும் இல்லை. அதுக்குத் தான் நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கேன்.”
“மச்சான்…!”
“ஃபாரினுக்கு ஒரு ஆஃபர் வந்திருக்கு, மூணு வருஷம். அப்படியே M Ch பண்ணுற ஐடியா.”
“எங்க மச்சான்?”
“லண்டன், கிங்ஸ்டன் யூனிவர்ஸிட்டி.”
“குந்தவிக்கு தெரியுமா?”
“இல்லை, குந்தவிக்கும் தெரியாது, அம்மாக்கும் தெரியாது. அக்ரிமென்ட் சைன் பண்ணிட்டேன். மூணு வருஷத்துல திரும்பி வருவனா, இல்லை அதையும் தாண்டி போகுமா தெரியலை. நான் குந்தவியைத் தவிர யாரையும் கல்யாணம் பண்ணப் போறதில்லை. அவளுக்கு வேற யாரையாவது பிடிச்சிருந்தா எனக்கு ஆட்சேபனை இல்லை. நான் அவ வாழ்க்கையில குறுக்கே வர மாட்டேன். இல்லை, எனக்கு குந்தவிதான்னு விதிச்சிருந்தா அதை காலம் முடிவு பண்ணட்டும்.”
“என்ன மச்சான், சட்டுன்னு முடிவெடுத்துட்டீங்க.”
“இல்லை தமிழ், நல்லா யோசிச்சு எடுத்த முடிவுதான். எனக்கு வாழ்க்கை என்ன விதிச்சிருக்குன்னு பாக்கலாம்.”
“குந்தவி தாங்க மாட்டா மச்சான்.”
“எனக்கும் புரியுது. நான் வேற என்னதான் பண்ணட்டும்? இப்போ கூட நீங்க குந்தவியை மட்டும் தான் யோசிக்குறீங்க, என்னைப் பத்தி யோசிக்கலை இல்லை மாறன்.”
“ஐயோ மச்சான், அப்படியில்லை.”
“இல்லையில்லை, நான் தப்பா எடுத்துக்கலை. இன்ஃபாக்ட், எனக்கு சந்தோஷமா இருக்கு. குந்தவி வாழ்க்கையில எந்தத் தவறும் நடக்க நீங்க ரெண்டு பேரும் விடமாட்டீங்க. அதுவே எனக்கு யானை பலம்.”
பேசி முடித்து விட்டு பிரபாகரன் சென்று விட, தமிழ்ச்செல்வனும், இளமாறனும் திகைப்போடு அமர்ந்து விட்டார்கள். அதன் பிறகு ஒரு வேலையும் ஓடவில்லை.
** ** ** ** **
2018 இன்று.
ட்ரைவர் காரை ஓட்ட, பின் சீட்டில் தமிழ்ச்செல்வனும், ஆராதனாவும் அமர்ந்திருந்தார்கள். கார் குந்தவி வீட்டை நோக்கி போய்க் கொண்டிருந்தது.
“ஆரா, எல்லாம் சரியா வாங்கி வச்சிருக்கயா?”
“ம்… ஆப்பிள் ரெண்டு டஜன், ஆரஞ்ச் ரெண்டு டஜன், ஸ்வீட் ரெண்டு கிலோ, காரம் ரெண்டு கிலோ. போதுமில்லைங்க?”
“நீ என்னதான் கொண்டு போனாலும் அந்த அம்மா குறைதான் சொல்லப் போகுது.”
“விடுங்க, அந்தம்மா குணம் தான் நமக்குத் தெரியுமே. நாம போறது குந்தவிக்காக, அவங்க என்ன வேணாப் பேசட்டும்.”
“ம்…”
“மாறன் அண்ணாவையும் கூப்பிட்டிருக்கலாமே.”
“கூப்பிட்டேன் மா. முடியாதுன்னு சொல்லிட்டான். அந்தம்மா பேச்சை என்னால தாங்க முடியாது, சுதாவை நான் வெளியே எங்காவது பாத்துக்கிறேன்னு சொல்லிட்டான்.”
“அப்படியா, குந்தவி தான் பாவம். எவ்வளவு பொறுமையா இருக்கா, இல்லைங்க?”
“ம்… பிரபாகரனுக்காக பொறுத்துக்கிட்டு இருக்கா.”
கார் வீட்டை நெருங்க இருவரும் பேச்சை நிறுத்திக் கொண்டார்கள். ட்ரைவர் பழங்கள், ஸ்வீட் இருந்த அந்தப் பெரிய பையை தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் செல்ல, தமிழும், ஆராதனாவும் பின் தொடர்ந்தார்கள்.
சோஃபாவில் அமர்ந்து டீ வீ பார்த்துக் கொண்டிருந்த மகேஷ்தான் இவர்களை வரவேற்றான்.
“வாங்க மாமா, வாங்கத்தை. அம்மா, யாரு வந்திருக்கான்னு வந்து பாரு.”
ரூமில் கம்ப்யூட்டரில் ஏதோ வேலையாக இருந்த குந்தவி மகேஷின் குரலுக்கு ‘யாராக இருக்கும்?’ என்ற யோசனையோடு எழுந்து வந்தார். முகம் மலர்ந்து போனது.
“தமிழ்! ஆராதனா! வாங்க வாங்க. என்ன ஒரு ஃபோன் கூட பண்ணாம வந்திருக்கீங்க?”
“சுதாகர் வந்திருக்கான்னு இவர் சொன்னார் குந்தவி, அதான் பாத்துட்டு போகலாமேன்னு வந்தோம்.”
“என்ன அத்தை, அப்போ என்னையெல்லாம் பாக்க வரமாட்டீங்களா?” மகேஷ் வேண்டுமென்றே கலாய்க்க,
“ஏன் வரமாட்டேன், நல்லா வருவேனே. ஆனா இன்னைக்கு சுதாவைத்தான் பாக்க வந்தேன்.” ஆராதனா பதிலுக்கு கொடுக்க,
“ஐயோ! வெட்கம், அவமானம், இதைக் கேட்க யாருமே இல்லையா?” என்றான் மகேஷ் நாடகப் பாணியில்.
“போடா அரட்டை.” அவன் தலையில் தட்டிய குந்தவி,
“உட்காரு தமிழ், நீயும் உட்காரு ஆராதனா.” என்றார்.
“இருக்கட்டும் குந்தவி, மச்சான் எங்க?”
“இதோ வந்துட்டேன் தமிழ்.” உள்ளேயிருந்து குரல் கொடுத்த வண்ணம் வந்து சேர்ந்தார் பிரபாகரன்.
“இப்போதான் ஹாஸ்பிடல்ல இருந்து வந்தேன். அதான் ஒரு குளியல் போட்டுக்கிட்டு இருந்தேன். ஆராதனா, எப்படிம்மா இருக்கே?”
“நல்லா இருக்கேண்ணா, நீங்க எப்படி இருக்கீங்க?”
“எனக்கென்னம்மா, குந்தவி என்னை நல்லா பாத்துக்குறா. நல்லா இருக்கேன்.”
“ஐயோ அத்தை, சும்மாவே இங்க ரொமான்ஸ் தாங்க முடியலை. இதுல நீங்க வேற கிளப்பி விடுறீங்களா?”
“உனக்கு பொறாமைடா மகேஷ், உங்கம்மா உன்னைக் கவனிக்காம என்னைக் கவனிக்குறாளேன்னு உனக்கு பொறாமை.”
“அட ஆண்டவா! இந்த வந்தியத்தேவன் தொல்லை தாங்கலை.” மேலே இரு கையையும் உயர்த்தி மகேஷ் சொல்ல, எல்லோரும் கொல்லென்று சிரித்தார்கள். சூழ்நிலை கலகலப்பாக இருந்தது.
“சுதாகர் எங்க குந்தவி?”
“அத்தையை கோவிலுக்கு கூட்டிட்டு போயிருக்கான், வந்திருவாங்க.”
ஸ்நாக்ஸ், காஃபியுடன் அரசியல், பொருளாதாரம், மருத்துவம் என பொழுது போய்க் கொண்டிருந்தது. இவர்களது சத்தத்தில் கார் வந்த ஓசை யாருக்கும் கேட்கவில்லை. பாட்டியும், பேரனும் உள்ளே வந்ததை கவனித்த மகேஷ்,
“அண்ணா, வா வா, அத்தையும் மாமாவும் உன்னைப் பாக்கத்தான் வந்திருக்காங்களாம். நானெல்லாம் அவங்க கண்ணுக்கு தெரியலையாம்.” மகேஷ் மீண்டும் வார,
“சின்ன மருமகனே, உங்களையும்தான் பாக்க வந்தோம், சரியா? எங்களை ரொம்ப கலாய்க்காதீங்க.” வேண்டுமென்றே மகேஷை சீண்டினார் ஆராதனா.
“நான் சின்ன மருமகன்னா, அண்ணா பெரிய மருமகனா அத்தை?”
“அதிலென்ன சந்தேகம், நீங்க ரெண்டு பேரும் எங்க மருமகன்கள் தானே?”
“ஒத்தைப் பொண்ணுதானே வெச்சிருக்கே, உனக்கெதுக்கு ஆராதனா ரெண்டு மருமகன்?” வீட்டுக்குள் நுழையும் போதே விஷத்தை கக்கினார் காந்திமதி.
அந்த இடமே அமைதியாகிப் போனது. ஆராதனாவின் முகம் பேயறைந்தது போல் ஆகிவிட, தமிழுக்கு கை முஷ்டி இறுகியது. யதார்த்தமாக சொன்ன வார்த்தைக்கு இப்படி ஒரு அர்த்தமா?
“அந்த அர்த்தத்துல நான் சொல்லலை பெரியம்மா.” ஆராதனா பதற,
“அத்தை, வார்த்தையை விடாதீங்க, பிள்ளைங்க மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்காம எதுவும் பேசாதீங்க.” மகேஷின் வார்த்தைகள் ஆராதனாவை நோக்கி கூரிய அம்பாக வந்தது.
“எம்பேரன் மனசுல எதுவும் இல்லை.” காந்திமதி சீற,
“அதோட நிப்பாட்டுங்க பாட்டி, ஏன்? எனக்கு எந்த எண்ணமும் இருக்கப்படாதா? உமாவை நான் கட்டிக்கப் போறேன்னு சொன்னா என்ன பண்ணுவீங்க?” மகேஷும் உனக்கு நான் சளைத்தவன் இல்லை என்று காட்ட,
“மகேஷ்!” ஒரு அதட்டல் போட்டார் குந்தவி.
“என்ன தமிழ், அடுத்த கட்ட ஆட்டத்துக்கு ரெடியாகுறயா?” பாட்டியின் கேள்வி இப்போது தமிச்செல்வனை குறிபார்த்தது.
“இல்லை அத்தை, சத்தியமா இல்லை. சுதாகரை பாக்க வந்தோம், அவ்வளவுதான். வேற ஒன்னும் இல்லை. நாங்க கிளம்புறோம் மச்சான்.” தமிழ் சட்டென்று வெளியேற, பின்னோடு சென்றார் ஆராதனா. குந்தவியின் கண்கள் கலங்கி விட்டது. கார் வரை வந்த பிரபாகரன்,
“அம்மா குணம் உங்களுக்கு தெரிஞ்சது தானே தமிழ். அது கடைசி வரைக்கும் மாறப்போறதில்லை, மனசுல எதுவும் வச்சுக்காதீங்க. ஆராதனா இந்த அண்ணனுக்காக கொஞ்சம் பொறுத்துக்கோம்மா.”
என்ன பேசுவதென்று தெரியாமல் இருவரும் மௌனமாக காரை நோக்கித் திரும்பினார்கள். எப்போதும் ஏதாவது ஒரு சொல் மனதைக் காயப்படுத்தும், பொருட்படுத்த மாட்டார்கள். ஆனால் இது போல நடந்ததில்லை.
“மாமா!” சுதாகரனின் குரல், சட்டென்று இவர்கள் திரும்பிப் பார்க்க, இவர்களை நோக்கி நடந்து வந்தவன்.
“நானே உங்களை வந்து பாக்கனும்னு நினைச்சேன். நாளைக்கு மில்லுக்கு வர்றேன் மாமா.”
இதுதான் சுதாகர். பாட்டி மேல் அன்பு அதிகம் என்பதற்காக அவர் சொல்லும் அனைத்திற்கும் ஆமாம் போட மாட்டான். சுதாகர் பிறந்த பிறகுதான் காந்திமதி அம்மாள் குந்தவியை ஓரளவு மருமகளாகப் பார்த்தார். சுதாகர் மேல் அத்தனை பாசமாக இருப்பார். அந்தப் பாசத்தில் எந்தக் குறையும் இல்லாததால் சுதாகரை மாமியார் வசம் விட்டு விட்டார் குந்தவி. அடுத்தாற் போல மகேஷும் பிறந்து விட, சுதாகர் பாட்டியுடன் ஒட்டிக் கொண்டான்.
பாட்டி மேல் பாசம் அதிகம் இருந்தாலும், தன்னுடைய கொள்கைகளில் மிகவும் உறுதியானவன் சுதாகரன். அம்மாவின் நண்பர்கள் என்ற பாசம் தமிழ்ச்செல்வன் மீதும், இளமாறன் மீதும் இருந்தாலும் அதையும் தாண்டி தமிழ் மேல் ஒரு தனி பக்தியே உண்டு சுதாகருக்கு. வெளிநாடுகளுக்கு எல்லாம் சென்று வியாபாரம் பண்ணும் அந்த மாமாவை, அவனுக்கு அவ்வளவு பிடிக்கும். எப்போதும் தொழில் பற்றியே பேசுவான். வளர வளர தமிழ் அவனுக்கு ஒரு கதாநாயகன் போல ஆகிவிட்டார். எல்லாம் மாமாவைப் போலவே பண்ணவேண்டும் சுதாகருக்கு.
வேலை என்று போய் நின்றாலே மில்லையே தூக்கி அவன் கையில் கொடுக்க தமிழ் ரெடியாக இருக்கும்போது, அந்த வாய்ப்பை பயன்படுத்தாமல் மாமாவைப் போல எம் பி ஏ பண்ணி விட்டுத்தான் தொழிலில் இறங்க வேண்டும் என்று தன் தகுதிகளை வளர்த்துக் கொண்டான்.
மாறனை விட தமிழிடம் எப்போதும் அதிக உரிமை எடுத்துக் கொள்வான். மில்லுக்கு சென்றுதான் தமிழை சந்திப்பான். வீட்டில் சிதம்பரம் இருப்பதால் அங்கே அவ்வளவு தூரம் போகமாட்டான். அவன் வரும்போதெல்லாம் தகவல் மட்டுமே கொடுப்பான். அத்தனை பிஸியாக இருக்கும் மாமா அன்று ஃப்ரீதானா? தன்னைச் சந்திக்க அவரால் அன்றைக்கு முடியுமா? இதைப்பற்றி எல்லாம் சுதாகர் என்றைக்குமே கவலைப் பட்டதில்லை. அத்தனை வேலைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு தமிழ்தான் காத்திருப்பார். குந்தவியின் மகன் தன்னிடம் அத்தனை உரிமை எடுத்துக் கொள்வதில் அந்த மாமனுக்கு அவ்வளவு ஆனந்தம்.
“கண்டிப்பா வா சுதா, நான் காத்துக்கிட்டு இருப்பேன்.”
“சுதா, இப்படித்தான் தகவல் சொல்லுவியா? அவரென்ன, வேலையத்துப் போய் உக்காந்திருக்காரா? இத்தனை மணிக்கு வருவேன்னு ஒழுங்கா சொல்லுப்பா.”
“பரவாயில்லை மச்சான், எப்ப வேணா வரட்டும். சுதாக்கு எப்போ டைம் கிடைக்குதோ அப்ப வரட்டும்.”
“பத்து மணிக்கு வந்தர்றேன் மாமா.”
“சரிப்பா, நாங்க கிளம்பட்டுமா?”
“சரி மாமா.”
“வர்றோம் மச்சான்.”
“சரி தமிழ், உமாவைக் கேட்டதா சொல்லு ஆராதனா.”
“சரிங்கண்ணா.” அவர்கள் கிளம்பிச் செல்ல, பிரபாகரன் வீட்டினுள் சென்றுவிட்டார். வெளியே வந்த மகேஷ், சுதாகரனை நோக்கி வந்தான்.
“போய்ட்டாங்களா அண்ணா? எதுக்குத்தான் இங்க வந்து இப்படி அவமானப் படுறாங்களோ? மாறன் மாமா புத்திசாலி. பாட்டி இல்லாதப்போ வந்து போவாரு.”
“அதென்ன, இன்னைக்கு நீ புதுசா ஒரு அறிக்கை விட்ட?”
“என்ன?”
“பாட்டிக்கிட்ட ஏதோ சொன்னியே.”
“என்ன சொன்னேன்?”
“உமா பத்தி ஏதோ சொன்னியே.” மகேஷுக்கு உள்ளுக்குள் சிரிப்பு பொங்கியது. வாடா வா என்று நினைத்துக் கொண்டான்.
“ஆமா, சொன்னேன். ஏன் எனக்கு உமாவைக் கட்டிக்க உரிமை இல்லையா?”
“நான் அப்படி சொல்லலை மகேஷ்.”
“வேற எப்படி சொல்லுற?”
“நீங்க ரெண்டு பேரும் நல்ல ஃப்ரெண்ட்ஸ் தானே. என்ன இப்போ திடீர்னு இப்படிச் சொல்லுற?”
“ஃப்ரெண்ட்ஸ் தான். இவ்வளவு நாளும் ஒன்னும் தோணலை. இன்னைக்கு திடீர்னு வந்திருச்சு. நான் நினைக்கிறேன், என்னோட ஆழ் மனசுல இப்படி ஒரு எண்ணம் இருந்திருக்குமாக்கும்.”
“உண்மையாத்தான் சொல்லுறயா?”
“நீ எதுக்கு இவ்வளவு குடையுற? உனக்கும், உமாக்கும் ஆகாது. யாருக்கோ கட்டிக் கொடுக்கப் போறாங்க. அழகான பொண்ணு, டாக்டர் வேற. அத்தையும் மாமாவும் அவங்களுக்கு வர்ற மருமகனை தாங்குவாங்க. கசக்குமா என்ன? உமாக்கிட்ட இதைப் பத்திப் பேசனும்.”
“கணக்குப் போட்டு கல்யாணம் பண்ணிக்கப் போறியா? காதல் வேணாமா?”
“அடப் போண்ணா, எந்த உலகத்துல இருக்கே? காதலாவது, கத்தரிக்காயாவது.” நன்றாக கொளுத்திப் போட்டு விட்டு உள்ளே போய்விட்டான் மகேஷ்.
சுதாகரன் சற்று நேரம் அங்கேயே நின்றான். உமாவின் முகம் கண்ணுக்குள் வந்து போனது. தமிழ் மாமா எத்தனை பெரிய மனிதர். ஊருக்குள் எத்தனை செல்வாக்கான குடும்பம். சிங்கப்பூர், மலேஷியா என்று வியாபாரத்தில் கொடி கட்டிப் பறக்கும் மனிதர். அத்தை மட்டும் என்ன சளைத்தவரா? தன் அம்மா மேல் வைத்த பாசத்திற்காக இவர்கள் இப்படி வந்து அவமானப் படுவது அவனுக்குமே கஷ்டமாக இருந்தது. ஒரு பெரு மூச்சுடன் உள்ளே போய்விட்டான்.
அதேநேரம், பிரபாகரன் தன் மனைவியை சமாதானப் படுத்திக் கொண்டிருந்தார்.
“டாலி, எதுக்கு இப்ப அழுற? விடும்மா.”
“சும்மா இருங்க ப்ரபா, என் கவலையை நான் அழுதாவது தீத்துக்கிறேன்.”
“ஏய் டாலி, அழாதம்மா, இதென்ன நமக்கு புதுசா?”
“அதைத்தான் ப்ரபா நானும் சொல்லுறேன். இன்னும் எத்தனை நாளைக்கு? கல்யாணம் பண்ணனும்னு பிடிவாதமா நின்னது நீங்களும், நானும். இதுல எதுக்கு தமிழை காயப்படுத்தனும். அதுகூட பரவாயில்லை, ஆராதனா என்ன பாவம் பண்ணினா?அவளை எதுக்கு அவமானப் படுத்தனும்?”
“புரியுது டாலி, என்னை என்ன பண்ணச் சொல்லுற? நான் ஏதாவது பேசினா, அந்தக் கோபமும் உன் மேல தான் திரும்பும். நான் இல்லாதப்போ உன் மேல பாயுவாங்க. நீயும் அமுக்குணி மாதிரி ஒன்னுமே எங்கிட்ட சொல்லமாட்டே.”
“சரி சரி விடுங்க, உங்க மகன் கிட்ட சொல்லி வையுங்க, பெரியவங்க கிட்ட மரியாதையில்லாம இப்படியெல்லாம் பேசக்கூடாதுன்னு.”
“யாரு, மகேஷை சொல்லுறயா? ஏன், அவன் என்ன தப்பா பேசிட்டான்? டாலி, உனக்கொரு விஷயம் தெரியுமா?”
“என்ன?”
“மகேஷ் அப்படி நச்சுன்னு பாயின்ட் பாயின்டா பேசும்போது எனக்கு, சபாஷ்டா ராஜான்னு சொல்லத் தோணும். ஹா… ஹா… அதுவும் இன்னைக்கு எவ்வளவு தைரியமா அத்தனை பேர் முன்னாடியும் சொன்னான் பாரு, உமாவை நான் கட்டிக்கறேன்னு, என் சிங்கக் குட்டிடி அவன்.”
“ஆமா, நீங்க தான் மெச்சிக்கனும். அப்படி ஏதாவது அவன் மனசுல இருந்துது, வகுந்திருவேன் அவனை.”
“ஏன் குந்தவி?” சிரிப்பினூடே கேட்டார் பிரபாகரன். அவருக்கா குந்தவி மனது தெரியாது.
“இங்கப் பாருங்க, சொல்லி வைங்க அவன் கிட்ட, அப்படி ஏதாவது அவன் மனசுல இருந்ததுன்னா அந்த எண்ணத்தை விட்டுட சொல்லுங்க.” குந்தவியை தன்னருகே இழுத்து அணைத்தவர்,
“எப்படி? நீ என்னை விட்டுட்டு போனியே, அதுமாதிரியா?”
“ப்ரபா!”
“ம்…”
“உங்களுக்கு ஞாபகம் இருக்கா?”
“எது டாலி?”
“உமா பொறந்த அன்னைக்கு நான் தான் ஆராதனாக்கு டெலிவரி பாத்தேன். இந்தக் கையாலதான் அவளை முதல் முதலா தூக்கினேன். பொறந்திருக்கிறது பொண்ணுன்னு தெரிஞ்சப்போ, எனக்கு அவ்வளவு சந்தோஷம்.” உணர்ச்சி வசப்பட்டு குந்தவி பேச, அமைதியாக கேட்டிருந்தார் பிரபாகரன்.
“என்னமோ தெரியலை, எனக்கு நம்ம சுதாதான் அப்போ ஞாபகத்துக்கு வந்தான். அந்தக் கணம் என் மனசுல தோணின ஆசை அது ப்ரபா. உமா மனசிலயும், சுதா மனசிலயும் என்ன இருக்குன்னு எனக்குத் தெரியாது ப்ரபா. ஆனா என் நெஞ்சு நிறைய ஆசை இருக்கு ப்ரபா, உமா இந்த வீட்டுக்கு மூத்த மருமகளா, சுதாக்கு மனைவியா வரனும்னு என் நெஞ்சு நிறைய ஆசை இருக்கு.” கண்களில் கண்ணீர் வடிய குந்தவி சொன்னபோது, மென்மையாக சிரித்தார் பிரபாகரன்.
“தெரியும் குந்தவி, உன் மனசுல இப்படியொரு ஆசை இருக்குன்னு எனக்கு நல்லாவே தெரியும். நான் எப்போ உன்னோட ஆசைக்கு குறுக்கே வந்திருக்கேன். ஆனா இந்த விஷயத்துல நான் என்ன பண்ண முடியும்? உன் பையன் தான் உனக்கு உதவ முடியும்.”
“இல்லையில்லை, என்னோட ஆசையை நான் யார் மேலேயும் திணிக்க மாட்டேன். நடந்தா சந்தோஷம், அவ்வளவுதான். உங்ககிட்ட நான் எதையும் மறைச்சதில்லை. அதனால சொன்னேன்.” கண்களைத் துடைத்தவர்,
“வாங்க சாப்பிடலாம், நேரமாச்சு.” என்றார்.
“சரிம்மா.” குந்தவி முன்னால் போக, அவரைத் தொடர்ந்தார் பிரபாகரன்.