tik 16

tik 16

இரவு வெகு நேரம்… மடிக்கணினியையே குடைந்து கொண்டிருந்தான் ஆதி…  அவனையே பார்த்துக் கொண்டிருந்த மல்லி… எப்பொழுது தூங்கினாளோ… அதிகாலை வழக்கம் போல் கண்விழித்து… தயாராகி கீழே வர…

வரதன்… நடைப்பயிற்சிக்குச் செல்லாமல்… அங்கே உட்கார்ந்திருந்தார்…

அவருக்குக் காபி கலந்து எடுத்துவந்தவள்… அதை அவரிடம் கொடுத்துவிட்டு… “ஏன் மாமா! வாக்கிங் போகலையா?” என்று கேட்க…

“இல்லைமா! ராஜா விடியற்காலையிலேயே… கிளம்பிட்டான் இல்லையா!! அதனால்… தனியாகப் போகக் கொஞ்சம் சோம்பலாக, இருந்ததால நான்  போகலை…” என அவர் பதில் கொடுக்க…

அவன் கிளம்பிப் போனதைக் கூட அறியாமல் தூங்கிய தனது கவனமின்மையை நினைத்து கொஞ்சம் சங்கடமாகப் போனது மல்லிக்கு…

“என்ன மாமா… அவர் விடியற்காலையிலேயே கிளம்பி போயிட்டாரா?” என்ற அவளது குரல்… தெளிவில்லாமல் ஒலிக்க…

“இதற்குப்போய் ஏன்மா… இவ்வளவு… தயங்கற? உன்னை டிஸ்டர்ப் செய்ய வேண்டாம்னு… சொல்லாமல் போயிருப்பான்…  அவன் எப்பவுமே இப்படித்தான்மா” என்றவர்…

“அவன்… டெல்லிக்கு… எதோ அவசர வேலையாக போயிருக்கான்மா… சாயங்காலமே வந்திடுவான்…” என முடித்தார் வரதன்.

பிறகு பூஜை அறை நோக்கிப்போனவள்… சுத்தம் செய்து… படங்களுக்குப் பூக்கள் வைத்து… விளக்கேற்றிவிட்டு… பிறகு தங்கள் அறைக்கு வந்தாள்… அவளது கைப்பேசி அலறிக்கொண்டிருந்து…

எடுத்துப் பார்க்க… ஆதிதான் அழைத்திருந்தான்…

அதை உயிர்ப்பித்து, அவள்… காதில் வைக்க… சூடாகவே வந்தன அவனது வார்த்தைகள். 

“போனை எடுக்க ஏன் இவ்வளவு நேரம்?” என அவன் கேட்க…

“இல்ல… நான் கீழே போயிருந்தேன்… போனை… நம்ம ரூம்லயே வெச்சிட்டேன்… சாரி!” என அவள் பதில் சொல்ல…

“இனிமேல்… போனை கைலையே… வைத்துக்கொள்… நான் கால் பண்ணா… உடனே எடுக்கணும்… என்ன!!!” கட்டளையாகவேச் சொன்னான் ஆதி…

அவளுக்குத்தான் அவன் சொன்ன விதம் கோவத்தை வரவழைக்க… ‘உம்’ என்று முகத்தை வைத்துக்கொண்டு  “ம்!” என்றாள் மல்லி…

“உடனே ‘உர்’…னு முகத்தைத் தூக்கி வச்சுக்காதே…” என்றவன்…

“நான்… ஒரு முக்கிய வேலையாக, டெல்லி… போய்க்கொண்டிருக்கிறேன்… நான் வரும் வரை… நீ எங்கேயும் போக வேண்டாம்… வீட்டிலேயே இரு…” என்றவன்… “போனையும்  கையிலேயே வைத்திரு…” என அனைத்தையும் கட்டளையாகவே சொல்லி முடித்து… அவளது பதிலுக்குக் கூட காத்திருக்காமல்… அழைப்பைத் துண்டித்தான் ஆதி…

“நேரில் பார்ப்பதுபோல் இப்படிப் பேசுகிறானே” என்றிருந்தது மல்லிக்கு…

அவனது அலட்சிய நடவடிக்கை… மனதை வலிக்கச்செய்ய… மல்லி அவளது போன் திரையைப் பார்க்க… அவள் கீழே சென்றிருந்த நாற்பது நிமிடத்திற்குள்… இருப்பது முறை அழைத்திருந்தான்…

அவனுடைய கோவத்திற்கான கரணம், தான்… அவனது அனைத்து அழைப்பை ஏற்காதுதான் என்று நினைத்தாள் மல்லி…

அந்தக் கோபத்திற்குள் அடங்கியிருந்த அவனது அக்கறையை அவள் புரிந்துகொள்ளவில்லை…

அவன் அப்படிச் சொன்னதன் நோக்கம் புரிந்திருந்தால்… அவள் மறுபடி அந்தத் தவற்றை செய்திருக்க மாட்டாள்…

********************

அந்தத் தளம் முழுவதுமே… தனது தனிப்பட்ட உபயோகத்திற்காக என… வடிவமைத்திருந்தான் ஆதி…

உள்ளே நுழைந்தவுடன்… சிறிய வரவேற்பறை ஒன்று இருக்கும்…

அதை அடுத்து…  மிகப்பெரிய ஹால்… வசதியாக சோஃபாக்கள் போடப்பட்டு… ப்ரொஜெக்டர்… மற்றும் திரையுடன்… ஒரு சிறிய திரையரங்கம் போல் அமைக்கப்பட்டிருக்கும்.

அதைத் தண்டி செல்ல…

நவீன வசதிகளுடன் கூடிய குளியலறை… ‘வார்ட்ரோப்’களுடன் கூடிய உடை மாற்றும், அறை… என, அனைத்தையும் உள்ளடக்கிய மிகப்பெரிய படுக்கையறை அவர்களுடையது…

 

அதை ஒட்டி… அலங்கார விளக்குகள் போடப்பட்டு… ஊஞ்சலுடன் கூடிய…  மிகப்பெரிய பால்கனி ஒன்று, அந்தத் தளம் முழுவதையும் இணைத்தார்போன்று… பார்ப்பவர்களின் கருத்தைக் கவருமாறு அமைக்கப்பட்டிருக்கும்.

கீழே, சிறிய தோட்டத்துடன் கூடிய ஒரு நீச்சல் குளம் ஒன்று இருக்க… அந்த பால்கனியின் ஒரு முனையிலிருந்து அங்கே செல்வதற்கான படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருக்கும்…

மேலும், அங்கிருந்து அகன்று விரிந்திருக்கும் அலைகடலைப் பார்க்க… அதனை அழகாய் இருக்கும்…

அவ்வளவு பெரிய அந்தப் பங்களாவில்… அந்த இடம்தான் மல்லிக்கு மிகவும் பிடித்தமானது..

வேலை செய்பவர்கள் கூட… அழைத்தால் மட்டுமே அந்தத் தளத்துக்கு வருவார்கள்… மற்றபடி அனாவசியமாக… யாரும் அங்கே நுழைவது இல்லை…

ஆதி இல்லாத தனிமையில்… ஏனோ மல்லிக்கு அங்கே இருக்கப் பிடிக்காமல்… கீழே வந்தவள்… லட்சுமியுடன் இணைத்துக்கொண்டு… அன்றைய சமையல் மெனுவை முடிவு செய்து… சிற்றுண்டியைத் தானே தயார் செய்தாள்.

வெளியில் செல்வதற்குத் தயாராகி வந்த வரதன்… சாப்பிட்டுவிட்டு… “கடைக்குப் போயிட்டு வந்துடறேன்” என்று சொல்லிவிட்டு… கிளம்பிச் சென்றார்…

“இங்கேதான்… எல்லா வேலை செய்வதற்கும் ஆட்கள் இருக்கங்களே… மாமா ஏன் கடைக்குப் போகிறார்?” என மல்லி லட்சுமியிடம் கேட்க…

“இல்லைம்மா… ஏதாவது ஷோரூமுக்குத்தான் மாமா போவார்கள்… அந்த காலத்துலயிருந்தே கடைன்னே சொல்லி பழகிட்டாங்க…” எனச் சிரித்தார் லட்சுமி…

“ஓகோ!” எனக் கேட்டுக்கொண்டாள் மல்லி…

பிறகு இருவருமாகச் சாப்பிட்டு முடிக்க… சில மேல் வேலைகளை முடித்துக்கொண்டு… தொலைக்காட்சி தொடர்களில் ஐக்கியமானார் லட்சுமி…

என்ன செய்வது என யோசித்த மல்லி… தனது கைப்பேசியை குடைந்துகொண்டிருக்க… நேரம் மிக மெதுவாக நகருவதுபோல் இருந்தது அவளுக்கு…

மதியம் இரண்டு மணி வாக்கில் திரும்ப வந்தார் வரதன்…

“என்ன மாமா… மதியமே வந்துட்டீங்க?” எனக் கேட்டுக்கொண்டே அவருக்கு உணவு பரிமாறினார் லட்சுமி…

“திருவான்மியூர்… கடைக்குத்தான் போயிருந்தேன் லட்சுமி… அதான்” என்றவர்… சாப்பிட்டு முடிக்க…

தொலைக்காட்சியில் சானல்களை   மாற்றிக்கொண்டிருந்த லட்சுமி… ஒரு செய்தி சானலில்… வைத்து… “மாமா… இங்கே பாருங்களேன்… நம்ம வினோத்தோட மாமனாரைப் பற்றி காண்பிக்கிறார்கள்… எதோ இன்கம் டாக்ஸ் ரெய்ட் போலிருக்கு…” என அதிர்ச்சியுடன் கணவரை அழைத்தார்…

அங்கே இருந்த மல்லியும் அந்தச் செய்தியை…  கவனித்தாள்…

“முன்னாள் அமைச்சர்… தங்கவேலுவின் வீடு… அலுவலகம்… தொழிற்சாலைகள் மற்றும் கல்விநிறுவனகள்… என அனைத்து இடங்களிலும்… வருமான வரித்துறையினர் சோதனை…” என்ற அறிவிப்புடன்… திரையில் அதைப்பற்றிய நேரடி ஒளிபரப்புக் காட்சிகள் போய்க்கொண்டிருந்தது.

இடையிடையே… தங்கவேலு… அவரது மகன் ரத்னவேல் இருவரது படங்களையும் திரையில் காண்பித்துக்கொண்டிருந்தனர்…

“இதெல்லாம் சகஜம் லட்சுமி… இதுக்குப் போய் ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகிற?” என அவர் கேட்க…

“நம்ம வினோத்தோட மாமனாராச்சே… அதனாலதான்… ” என்ற லட்சுமி…

“நம்ம ராஜாவோட ரிசப்ஷனுக்கு வேறு வந்திருந்தாரில்ல?” என்றுவிட்டு… அதனால் அவர்களுக்கு ஏதாவது சிக்கல் வருமோ!! என்ற அச்சத்தில் கணவரை பார்க்க…

“ஆமாம்! வந்திருந்தார்… அதனால நமக்கு ஏதாவது ப்ராப்லம் வருமோன்னு பயப்படறியா?” எனச் சிரித்தவர்…

“நம்ம கம்பெனில ரெய்ட் வந்தாலும்… எந்தக் கவலையுமில்லை… ராஜா எல்லாக் கணக்கையும் பக்காவா வச்சிருக்கான்!!!” என்று முடித்தார் வரதன்.

அவர்களுடைய திருமண வரவேற்பிற்கு… தங்கவேலு… அவரது மகள் டாக்டர் தாமரை… டாக்டர் வினோத்… மூவரும் ஒன்றாக வந்திருந்தது நினைவுக்கு வந்தது மல்லிக்கு…

இவரைத் தெரியாதவங்க இருக்க முடியாது… எனத் தங்கவேலுவை அறிமுகப்படுத்தியவன்,

“இவன் என்னோட கிளோஸ் பிரென்ட் வினோத்… அவனோட ரிமோட் கன்ட்ரேல்… லோட்டஸ்” என அவன் அவர்களை அறிமுகப்படுத்த…

“அண்ணா!” எனத் தாமரை… சலுகையாகக் கோபப்பட…

“உனக்குத் தெரியாது ஆதி… ரிமோட் கன்ட்ரோல் மட்டுமில்ல… ப்ளூ டூத்… ஜி பி ஆர் எஸ்… அதுக்கும் மேல… போகப்போக உனக்கே புரியும் பாரு” என… வினோத் நண்பனை வாரிக்கொண்டிருந்தான்…

பேச்சு என்னவோ ஆதியிடம் இருந்தாலும்… அவனது பார்வை… மல்லியையே ஆராய்ந்து கொண்டிருந்தது…

அவனது பார்வைக்கான அர்த்தத்தை மல்லியால் கொஞ்சமும் புரிந்துகொள்ள முடியவில்லை…

அமைச்சரின் மகளை மணந்திருப்பவன்… மல்லியின் சமூக அந்தஸ்தைப் பற்றிய ஏளனமாக இருக்குமோ… என அவளுக்குத் தோன்றியது…

ஆதி அவனைக் கவனித்தானா என்று அவளுக்குப் புரியவில்லை.

ஆனால் தாமரை… இயல்பாகவே பேசிவிட்டுச் சென்றாள்…

அவர்கள் சென்றதும்…  மல்லியின் காதருகில் குனிந்து… ஆதி…”இதற்கு முன்பு… எப்பொழுதாவது… வினோத்தை பார்த்திருக்கியா?” என்று கேட்க…

அவளுக்கு… அவனை இதற்கு முன் பார்த்ததுபோல் ஞாபகம் இல்லை… எனவே உதட்டை வளைத்து இல்லை என்றாள்… மல்லி…

“இப்படியெல்லாம் செய்து… என் ஹார்ட் பீட்டை ஏத்தாதே மல்லி” என்று அவளைச் சீண்டினான் ஆதி…

அன்று நடந்ததை எண்ணிச் சிரித்துக்கொண்டாள் மல்லி.

**************

பிறகு கைப்பேசியில் அழைப்பு வர… தீபன் தான் பேசினான்… பிறந்த வீட்டில் அனைவரிடமும் பேசியவள்…

பிறகு பரிமளா… லட்சுமியிடம் பேச வேண்டும் எனக் கேட்கவே… அவரிடம் நலம் விசாரித்து… அழைப்பைத் துண்டித்தான் தீபன்…

போன் சார்ஜ்…சுத்தமாகத் தீர்ந்து சுவிட்ச் ஆப் ஆகிவிட… அவள் அதை சார்ஜரில்… போட்டு ஆன் செய்து பார்க்க… அதுவோ ஆன் ஆகவே மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தது.

கொஞ்சம் சார்ஜ் ஏறிய  பிறகு பார்த்துக்கொள்ளலாம்… என அப்படியே விட்டுவிட்டு மாடிக்குச் சென்றுவிட்டாள் மல்லி… 

அவர்கள் அறை பால்கனியில் நின்றவாறு கடலை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு… அதன் அருகே சென்று தண்ணீரில் கால் பாதிக்கும் ஆவல் எழவே… நொடியும் யோசிக்காமல்… பின்புற படிக்கட்டு வழியாக இறங்கி… கடலை நோக்கிச் சென்றாள் மல்லி…

மாலை கடல் காற்று இதமாக வருட… கிட்டத்தட்ட ஒன்றரை கிலோமீட்டர் தூரம் நடந்திருந்தாள் அவள்… தன்னை  அறியாமலேயே…

அந்த இடம் முழுவதுமே ஆள் ஆரவமற்று… அமைதியாக இருந்தது… மேலும் வெயில் காலமானதால்… நன்கு வெளிச்சத்துடன் இருக்கவே…  அது அவளுக்கு மேலும் உற்சாகத்தைத் தர…

ஆசையுடன் சென்று கடல் நீரில் காலை வைத்து… அதன் குளுமையை அனுபவித்தவள்… அங்கிருந்து செல்லவே மனமின்றி… அப்படியே நின்றிருந்தாள்…

“இந்த நேரம் தீபன் இங்கிருந்தால் மிகவும் மகிழ்ந்திருப்பான்” என்ற எண்ணம் தோன்ற…

உடனேயே … “இன்னும் சின்னப்புள்ளத்தனமாவே யோசிக்கற மல்லி… நம்ம மாம்ஸ் மட்டும் இருந்தால் எப்படி இருக்கும்..” என்ற ஆதியின் நினைவில் முகம் சிவந்தாள் மல்லி.

பிறகுதான் தனது தனிமையை உணர்ந்தவளுக்குச் சற்று பயம் வர…

அடுத்த நொடியே… யாரோ தன்னை நோக்கி வருவது போல், அவளது  உள்ளுணர்வுக்குத் தோன்ற… அவள் திரும்பிப் பார்க்கும் நேரம்… 

திடகாத்திரமாக… உயரமான ஒருவன்… கையில் பளபளக்கும்… மிகப்பெரிய வாள் போன்ற கத்தியுடன்… வேகமாகத் தன்னை நோக்கி வருவதைக் கண்டு… திகைத்துத்தான் போனாள் மல்லி.

எந்தப் பக்கமாக ஓடித் தப்பிப்பது என அவளது மூளை அறிவுறுத்தும் முன்பே அவன் அவளை நெருங்கியிருந்தான்…

மூச்சு முட்ட… பயத்தில் மல்லி நடுங்கிக் கொண்டிருக்க… அவனுக்கு பின்புறமாக…  சரியாக அங்கே வந்து சேர்ந்தனர்… விஜித் மற்றும் அவனைப்போன்றே உடை அணிந்த இன்னும் சில பாதுகாவலர்கள்…

விஜித்… சரியாக அவனது பிடரியில்… கராத்தே ஸ்டைலில் ஓங்கி அடிக்க… அதில் நிலை குலைந்தவனின் கையில் இருந்த கத்தியைப் பறித்து அவனை… துவைத்தெடுக்கத் தொடனகினர்… மற்ற நால்வரும்..

என்ன நடக்கிறது என்பது புரியவே… சில நிமிடங்களானது… மல்லிக்கு…

“மேம்… வாங்கப் போகலாம்… இன்னும் கொஞ்ச நேரத்துல பாஸ் வந்திடுவார்” என விஜித் சொல்ல…

அவன் என்ன சொல்கிறான் என்பதே விளங்காமல் மல்லி நின்றிருக்க… அந்த நேரம்  மிகப்பெரிய அலை ஒன்று எழும்பி அவளை முழுவதுமாக நனைத்துக்  கீழே தள்ளியது…

தூக்கி விடுவதற்காக… அவளை நோக்கி நீண்ட காரத்தைப் பார்த்தவள்… “தேவாஆஆ…” என்றவாறு பற்றுக்கோலாக… அவனைப் பற்றிக் கொண்டாள் மல்லி… அவளது கண்களில் கரகரவென கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது…

*************

“பாஸ்! இவனைப் போலீசில் ஹாண்ட் ஓவர் பண்ணிடலாமா?  இல்ல…” என விஜித் இழுக்க…

வேண்டாம் ஜித்… இவனை நம்ம கண்டைனர் மணிகிட்ட ஒப்படைச்சிடுங்க… அவனிடம் நான் பேசிக்கறேன்…” என்று கடினமாகச் சொன்னான்… ஆதி…

கண்டைனர் மணி! மிகப் பிரபலமான ரௌடி… என்பது நன்றாகவே தெரிந்தது மல்லிக்கு… ஆதியை நினைத்து… உள்ளுக்குள்ளே குளிரெடுத்தது…

ஆதியும்… மல்லியை வைத்துக்கொண்டு மேற்கொண்டு எதுவும் பேச விரும்பவில்லை…

அதற்குள் வாங்கிய அடியில்… அவனது உடையெல்லாம் கிழிந்து… ரத்தம் வந்திருந்தது… மல்லியைக் கொல்ல வந்தவனுக்கு.

மற்றவர்கள்தான் அவனை அடித்தார்களே தவிர… அவனை நெருங்கக் கூட இல்லை ஆதி…”

அவனது தோற்றமே கிலியைக் கிளப்புவதாக இருந்தது…

அந்த புதியவனுக்கு மட்டுமில்லை… மல்லிக்குமே!!

அதற்குள்… “அண்ணா! வேணாம் னா… நான் தெரியாம செஞ்சிட்டேன் னா..” என அவன் கெஞ்ச…

“என்னடா!!!  தெரியாம… கொலை செய்வியா என்ன?” எனச் சிங்கம் போன்று கர்ஜித்தான் ஆதி…

அவனை அப்புறப்படுத்துமாறு… விஜித்திடம்… கையை அசைத்து ஜாடை காட்ட… அவனை இழுத்துச் சென்றனர்… ஆதியின் பாதுகாவலர்கள்.

அவர்கள் கண்களிலிருந்து மறையும்வரை பொறுத்திருந்தவன்… மல்லியை இழுத்துக்கொண்டு… வீட்டை நோக்கிச் சென்றான்…

நீச்சல் குளத்தின் அருகே போடப்பட்டிருந்த லவுஞ்சில் அவளைத் தள்ளியவன்…

“அறிவிருக்காடி… உனக்கு?” என்றவனின் குரலில் அப்பட்டமான கோபம் தெரிந்தது.

“….”

“வெளியில் எங்கேயும் தனியாகப் போகாதேன்னு…  படிச்சு… படிச்சு சொன்னேன் இல்ல?”

“….”

“எங்கடி உன் போன்? கைலயே வச்சுக்க சொன்னேன் இல்ல?”

“சா… சார்ஜ்… போட்டிருக்கேன்…” தந்தி அடித்தது வார்த்தைகள் மல்லிக்கு…

“ஸ்விட்ச்ட் ஆப்…னு வருதே?”

“இ.. இல்ல… ஆன் ஆகல…”

“சை” என்று… ஆற்றாமையுடன்… அருகில் இருந்த மரத்தை ஓங்கிக் குத்தினான் ஆதி…

அவளுக்கே வலிப்பதுபோல் இருந்தது மல்லிக்கு…

அவன் கையை பிடித்து… அழுத்தி நீவி விட்டவள்… “வேணாம்… மாம்ஸ்! சாரி!!! தெரியாமல் பண்ணிட்டேன்…”

காலையில் அவன் சொல்லும்போது கோபம்கொண்ட… தனது சிறுபிள்ளை தனத்தை எண்ணி உண்மையிலேயே வருந்தினாள் மல்லி…

“நான் மட்டும் சிசி டிவி கேமரா வழியா பாக்கலேனா… அவன் தெரியாம கொன்னுருப்பான்… நீயும் தெரியாமல் செத்திருப்படி!!” சொல்லும்போதே…  உயிர் வரை துடித்தது… ஆதிக்கு…

எங்கேயோ பார்த்தவாறு பேசியவனின்… நாடியைப் பிடித்துத் திருப்பி… அவனை நேராகப் பார்த்து… கண்களில் நீர் திரள… “இனிமேல்… இதுபோல் செய்ய மாட்டேன் மாம்ஸ்! ப்ளீஸ்!” என மல்லி கெஞ்சல் குரலில் சொல்ல…

அவளும் மிரண்டு போயிருப்பதை உணர்ந்த ஆதி… கொஞ்சம் மலை இறங்கினான்…

“உயிரே போயிடுத்து மல்லி!!” என்றவன்… “அம்மா அப்பாவிற்கு இந்தக் கூத்து எதுவும் தெரியாது… அதனால… நீ ஏதும் உளறி வைக்காதே…” என்று அவளை எச்சரித்தவன்…

“முகத்தை வாஷ் செய்துகொண்டு… உள்ளே வா… நான் பார்த்துக்கறேன்…” என்றுவிட்டு… தன்னைச் சமன் செய்துகொண்டு வீட்டிற்குள் சென்றான் ஆதி…

“ராஜா! நீ எப்ப தம்பி வந்த?” என்று கேட்ட லட்சுமி…

“ரொம்ப நேரமா… இந்த மல்லி பொண்ணை வேறே காணும்… மேலே இருக்கான்னு நினைக்கிறேன்” என்க…

“இல்லம்மா… நான் வந்து கொஞ்ச நேரமாச்சு… இரண்டு பேரும்தான் பீச்சுல நடந்துட்டு வந்தோம்” என்க…

அவனது ஈர உடையை பார்த்தவர்… சிரித்துக் கொண்டே… சரி போய் ட்ரெஸ்ஸை மாற்றிக் கொண்டு வா…” என லட்சுமி மகனிடம் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அங்கே வந்தாள் மல்லி…

சரியாக அதே நேரம்… ‘முக்கியச் செய்தி!!’ பிரேக்கிங் நியூஸ்!!!’ என தமிழிலும் ஆங்கிலத்திலும் மாற்றி மாற்றி… அதற்கான பின்னணி இசையுடன்…

“முன்னாள் அமைச்சர் தங்கவேலு நடத்திவரும்… விடுதியுடன் கூடிய பள்ளி வளாகத்தில்… ஆய்வு செய்யும் பொழுது  … இரண்டு பெண்கள் மற்றும் ஒரு சிறுமியின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது…” என்ற செய்தி தொலைக்காட்சி திரையில் தோன்ற…

மல்லிக்கு கண்களை இருட்டிக் கொண்டு வந்தது…

ஆதியை நெருங்கி… அவனது கையை இருகப்பற்றியவாறு… “மாம்ஸ்! அது… நானும் அம்முவும் படித்த ஸ்கூல்தான்” என்றவளில்… உடல், மழையில் நனைந்த கோழிக்குஞ்சாக…  நடுங்கிக்கொண்டிருந்தது…

ஆதியின் முகம்… எந்த வித எண்ணங்களையும் பிரதிபலிக்காமல்… உணர்வற்று இருக்க… அவனது கண்கள் மட்டும்… நினைத்ததை நடத்தி முடித்த நிறைவுடன்… தொலைக்காட்சித் திரையையே வெறித்திருந்தது…

error: Content is protected !!