சற்று ஆனந்தமாகவே வீடு வந்து சேர்ந்தான் ஜீவானந்தம். தவசி முன் வாசலிலேயே அமர்ந்திருந்தார்.
இவன் வருவது தெரிந்ததும் உள்ளே எழுந்து வந்தார்.
“ சங்கரி , புது மாப்பிள்ளை வராரு பாரு. “ குரலில் சற்று கடுப்பு இருந்ததோ என்று வித்தியாசமாகப் பார்த்தான் ஜீவா.
சங்கரி உள்ளிருந்து விரைந்து வர , “ வா ஜீவா, அண்ணன் எல்லாம் போன் பண்ணி அப்பா கிட்ட பேசிட்டாரு” கொஞ்சம் பயம் இருந்தாலும் சிறு மகிழ்ச்சி அவரது பேச்சில் இருந்தது. ஜீவா உடனே தவசியைப் பார்க்க,
“ பெத்த மகனோட காதல் கல்யாணம் எல்லாம் வேற ஒருத்தர் சொல்லித் தான் தெரிய வேண்டியதா இருக்கு, வீட்டுல இருக்கறவங்க எல்லாருக்கும் தெரியும் என்னைத் தவிர. என்னைப் பார்த்தா உனக்கு வில்லன் மாதிரி தெரியுதா?” அவரிடம் சொல்லவில்லை என்ற ஆதங்கம் அவரையும் மீறி வெளி வந்தது.
அவர் அருகில் சென்றான் ஜீவா.
“ நீங்க சம்மதிக்க மாட்டீங்கன்னு உங்க கிட்ட மறைக்கலப்பா. நீங்க ஏற்பாடு செஞ்சுட்டீங்க. அவங்க கிட்ட பேசிட்டு அப்பறம் எங்க கிட்ட விஷயத்தை சொன்னீங்க. தப்புன்னு நான் சொல்லல, ஆனா, அவங்க முன்னாடி உடனே உங்க முடிவை மறுத்துப் பேச மனசு வரல, அதுனால தான் யாருக்கும் கஷ்டம் வரக் கூடாதுன்னு நானே போய்ப் பேசிட்டு வந்தேன். மத்த படி உங்க கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்லப் போறேன். மாமா தான் அவரே உங்க கிட்ட பேசறேன்னு சொன்னாரு. என்னை மன்னிச்சிடுங்கப்பா”
“ ச்சே ச்சே! பரவாயில்ல ஜீவா. நீ எல்லாரோட பக்கமும் இருந்து யோசிச்சிருக்க, கொஞ்சம் அவசரப்பட்டு அன்னிக்கே சொல்லிருந்தாலும் யமுனா கல்யாணமும் நின்னு போயிருக்கும். உன்ன நினச்சு எனக்குப் பெருமையா இருக்குப்பா” அவனது தோள் தட்டி சொன்னார்.
“ஆமாங்க! மதி கூட ஜீவா விஷயம் தெரிஞ்சு முதல்ல யமுனாக்கு வேற பையன் பாக்கலாம்ன்னு சொன்னா, ஆனா அவங்க புடவை நகையோட வந்து பேசவும் , நல்ல இடத்தை விடவும் அவளுக்கு மனசு வரல, ஜீவா எல்லாத்தையும் பார்த்துப்பான்னு சமாதனம் சொன்னப்பறம் தான் கொஞ்சம் நிம்மதியா இருந்தா.” சங்கரி சொல்ல,
அமோதிப்பாய் தலை அசைத்தார் தவசி.
“ அப்பா உங்களுக்கு விருப்பம் தான?” சந்தேகமாகக் கேட்க,
“ உங்க அம்மா எல்லா விஷயமும் சொன்னா. அன்னிக்கு நம்ம வீட்டுக்கு வந்த பெண் தானே! யமுனா கூட படிக்கறாளாமே! “
“ ஆமாம்ப்பா.. “
“ உங்க எல்லாருக்கும் சம்மதம்னா நான் மட்டும் என்ன மறுப்பா சொல்லப் போறேன். எனக்கும் பிடிச்சிருக்கு. ஆனா , உன் தங்கச்சிங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆனா பிறகு தான் உனக்கு. அது வரை வேணும்னா அவங்க வீட்டுல போய் பேசிட்டு வருவோம்!” ஆனந்தமாகவே தவசி சொல்ல,
“ அதுவும் சரி தாங்க.. எப்போ போகலாம்” சங்கரி முந்திக் கொண்டு வந்தார்.
“ உனக்கு என்ன இவ்வளவு அவசரம் “ தவசி சிரிக்க,
“ நம்ம மூணு பிள்ளைங்களுக்கும் ஒரே நேரத்துல கல்யாணம் நிச்சயம் ஆனா சந்தோஷம் தானுங்களே!”
“ அது சரி… ஜீவா நாம ஒரு நல்ல நாள் பார்த்து அவங்க வீட்டுக்குப் போகலாம். அவங்க கிட்ட சொல்லிடு”
ஜீவாவிற்கு சந்தோஷம் தாங்கவில்லை. இப்போதே வாணியைப் பார்க்க வேண்டும் போல இருந்தது.
இவ்வளவு சீக்கிரம் அவனது பிரச்சனைகள் முடியும் என அவன் சிறிதும் எதிர்ப்பார்க்கவில்லை. உடனடியாக அதை வெற்றியிடம் சொல்ல வேண்டும் என்று துடித்தான்.
வெற்றியிடம் சொல்லலாம் என்றால் அவனது போன் நம்பர் கூட அவனிடம் இல்லை. நேராகவே சொல்லிவிடலாம் என்று வாணியின் ஊருக்கு தன் வண்டியில் சென்றான்.
மாலை ஆகிவிட, அப்போது தான் கல்லூரியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தான் வில்லியம். ஜீவாவின் கேட்ட நேரமோ அல்லது வில்லியமின் நல்ல நேரமோ, இருவரும் பார்த்துக் கொண்டனர்.
ஜீவாவிற்கு இருந்த சந்தோஷத்தில் வில்லியமின் நரி மூளையைப் பற்றி யோசிக்காமல் அவனிடம் பேசி வைத்தான்.
ஜீவாவைக் கண்டதும் சற்று காண்டானான் வில்லி.
‘இந்த வெற்றி இவன் கிட்ட பேசுனாலும் பேசுனான், நம்ம ஊர் பக்கமே சுத்திகிட்டு இருக்கான். இவன எப்படி கழட்டி விடறதுனு யோசிச்சே எனக்கு முடியெல்லாம் கொட்டிடும் போலிருக்கு. ஆனா எவனாவது எனக்கும் வாணிக்கும் குறுக்க வந்தான் கைமா தான். ‘ மைன்ட் வாய்சில் அவனை கரித்துக்கொண்டே அவன் முன் வண்டியை நிறுத்தினான் வில்லி.
“ ஹே! வில்லியம் , நல்ல வேளை உன்ன பாத்துட்டேன்” ஜீவா இப்படிச் சொல்லவும் சற்று குழம்பினான் வில்லி.
“ ஹாய் ண்ணா. என்ன விஷயம் சொல்லுங்க” உள்ளுக்குள் அவனைக் கடித்துக் குதறும் அளவு கோபம் இருந்தாலும் வெளியில் வாலை ஆட்டும் நாய் போல குழைந்தான்.
“ வாணி வீடு எங்க இருக்கு. வர வழி எல்லாம் யார் கிட்ட கேட்கறதுன்னு யோசிச்சுட்டே வந்தேன். நல்ல வேலை உன்னப் பாத்தேன். “
“ என்ன விஷயம் அண்ணா, வீடு வரை வந்திருக்கீங்க, நான் தெரிஞ்சுக்கலாமா” என்னவென்று தெரிந்து கொள்ளாமல் அவனால் இருக்க முடியவில்லை.
‘வீடு வரை வருவதன் காரணம் என்னவாக இருக்கும். அதுவும் நேற்று தான் வெற்றி ஏதோ பேசியிருப்பதாக வேற சொன்னானே’
“ சொல்றேன்! சொல்றேன்! நீ வீடு எங்க இருக்குன்னு சொல்லு “ சந்தோஷம் அவனது குரலில் இருப்பதை நன்றாகவே உணர்ந்தான் வில்லி.
‘விடாக் கண்டனா இருக்கானே. இரு டா போட்டு வாங்கறேன்! என்கிட்டயேவா’
“வீடு பக்கத்துல தான் இருக்கு! இங்கே இருந்து மூணு தெரு தள்ளி ரைட் ல போன வாசல்ல வேப்ப மரம் இருக்கும். அது தான் அவங்க வீடு” வழி என்னமோ சரியாகத் தான் சொன்னான். நம்பிக்கை வர வேண்டுமே!
“தேங்க்ஸ் வில்லி. “ கிளம்பினான் ஜீவா.
“ அண்ணா! இப்போ நீங்க அங்க போனாலும் யாரும் இருக்க மாட்டாங்க” ஜீவாவை நிறுத்தினான்.
“ ஏன்! என்ன ஆச்சு!”
“ அவங்க இனிக்கு மதியம் தான் அவங்க மாமா வீட்டுக்கு கிளம்பிப் போனாங்க. ராத்திரி தான் வருவாங்க . காலேஜ்க்கு கூட வாணி போகல. என்கிட்டே சொல்லுங்க என்ன விஷயம்னு நான் சொல்லிடறேன். “
“ ஓ! அப்படியா! சரி எனக்கு வெற்றி நம்பர் குடு. நான் பேசிக்கறேன்.” தன் செல்போனை எடுத்துக் கொண்டே கேட்க, மிகவும் கோபம் வந்தது வில்லிக்கு.
“ அப்போ என்கிட்டே சொல்ல மாட்டீங்க ல , சரிண்ணா நான் இதுக்கு மேல என்ன கேட்கறது. இது தான் நம்பர்..” அவனிடம் வெற்றியின் நம்பரை வேறு வழியின்றிக் கொடுத்தான்.
நம்பரை வாங்கி லோட் செய்து கொண்டான் ஜீவா, பிறகு வில்லியமின் முகம் அவனை ஏதோ செய்து சொல்ல வைத்தது.
“ எங்க வீட்டுல எங்க கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டாங்க வில்லி. அதைத் தான் சொல்ல வந்தேன். நான் போன் பண்ணியே சொல்லிக்கறேன். தேங்க்ஸ்” அங்கிருந்து கிளம்பிவிட்டான்.
ஜீவா கிளம்பிச் சென்றதும் , வில்லி அங்கிருந்து நேராக வெற்றியைப் பார்க்கச் சென்றான்.
ஜீவாவும் வெற்றியும் இப்போது நேராக சந்திக்க விடாமல் செய்தாலும், ஜீவா போன் செய்து பேசிவிட்டால் பிறகு வெற்றியும் இந்தக் கல்யாணத்திற்கு ஒத்துக்கொள்வான் , பிறகு வாணியை எப்படி தனக்கு சொந்தமாகிக் கொள்வது என்று மண்டையை உடைத்துக் கொண்டு யோசித்தான்.
வெற்றியின் போன் நம்பரைக் கொடுக்காவிட்டால் பிறகு ஜீவா நேரிலேயே சென்றுப் பார்க்கக் கூடும் என்று தான் அவனிடம் வெற்றியின் நம்பரைக் கூறினான்.
இப்போது உடனடியாக வெற்றியிடம் சென்று எதாவது கூறி ஜீவா வாணியின் திருமணம் நடக்க விடாமல் செய்ய வேண்டும். நேராகக் கிளம்பிச் சென்று வெற்றியின் வீட்டு வாசல் வரை வந்துவிட்டான்.
‘ என்ன சொல்வது , என்ன சொன்னால் வெற்றி நம்புவான் ! ‘ இதே சிந்தனை தான் ஓடிக் கொண்டிருந்தது.
அதற்குள் வெற்றியின் குரல் கேட்க, தாமதிக்காமல் உள்ளே சென்றான். வெற்றி தான் ஜீவாவிடம் போனில் பேசிக் கொண்டிருந்தான்.
“ மாமா வீட்டுக்கா ! இல்ல வீட்டுல தான் இருக்கேன். சரி நேர்ல வாங்க பேசலாம்! “ யோசனையுடன் போனை வைத்தவன் வில்லியம்மைப் பார்த்ததும் ,
“ உனக்கு தான் போன் பண்ணனும்னு நெனச்சுட்டு இருந்தேன். ஜீவா கிட்ட நாங்க மாமா வீட்டுக்குப் போயிருக்கோம்னு சொன்னியா?” நேராக கேள்வி கேட்க,
ஒரு நொடி என்ன சொல்வதென்று விழித்தவன், பிறகு சுதாரித்துக் கொண்டு பதில் சொன்னான்.
“ ஆமா அண்ணா! ஆன்ட்டி தான் அன்னிக்கு அம்மா கிட்ட போன்ல மாமா வீட்டுக்குப் போகணும்னு சொல்லிட்டு இருந்தாங்க, அதுனால அங்க போயிட்டீங்கனு நெனச்சுட்டேன். அது தான் எதுக்கும் ஒரு தடவ பாத்துட்டு மறுபடியும் ஜீவாக்கு போன் பண்ணி சொல்லலாம்னு வந்தேன். நல்ல வேலை நீங்களே பேசிடீங்க.” கோர்வையாகக் கூறவும் , வெற்றி அவனது பேச்சை நம்பினான்.
“ ஒ! சரி சரி! நான் இப்போ அவனப் பாத்துப் பேசப் போறேன், வா போகலாம்” அவனையும் அழைக்க,
இது தான் சாக்கு என்று, கூடவே கிளம்பினான். ‘அவர்கள் பேசிக் கொள்வதிலிருந்து எதாவது ஒரு விஷயம் நிச்சயம் கிடைக்கும் . அதை வெச்சு எப்படியும் இந்தக் கல்யாணத்தை நிறுத்தலாம்’ மகிழ்ச்சியாக சென்றான் வில்லி.
ஜீவா அன்று சந்தித்த இடத்தில் காத்துக் கொண்டிருந்தான். வெற்றியைப் பார்த்ததும் அவனுக்குள் ஒரு மகிழ்ச்சி.
வெற்றிக்கோ ஆச்சரியமாக இருந்தது. ‘நேற்று தான் அவனிடம் ஒரு வாரம் கேடு கொடுத்து அனுப்பியிருந்தான். அதற்குள் அனைத்தும் சரி செய்துவிட்டானா! ‘ சந்தேகமாகவே தான் இருந்தது.
இருந்தாலும் அவன் என்ன சொல்கிறான் என்று ஆவலாக கேட்க வந்தான்.
“ என்ன ஜீவா! அதுக்குள்ள எல்லா பிரச்சனையும் முடிஞ்சுதா?” வெற்றி கேட்க,
‘ பிரச்சனையா? அது என்ன நமக்குத் தெரியாத பிரச்சன!’ வில்லி இருவரின் பேச்சையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தான்.
வில்லியம் இருப்பதால் சற்று யோசித்தான் ஜீவா. அவன் யோசிப்பதைக் கவனித்த வெற்றி ,
“ பரவால்ல சொல்லுங்க, அவன் வேண்டியவன் தான்” அங்கு தான் தவறு செய்தான் வெற்றி.
வேறு வழியின்றி ஜீவா நடந்தவற்றைக் கூற, இறுதியில் தன் தந்தை திருமணத்திற்கு ஒப்புக் கொண்டதையும் சொன்னான்.
“ ஆனா! கல்யாணம் இப்போ இல்ல, என் தங்கச்சிங்களுக்கு இன்னும் கல்யாணம் பண்ணல, அவங்களுக்கு அப்பறம் தான் நான் செஞ்சுக்க முடியும் . அதுனால ஒரு ரெண்டு வருஷம் கழிச்சுத் தான்..” சற்று இழுக்க,
“ அது பரவாயில்ல ஜீவா! ஆனா நாம அதை உறுதிப் படுத்திக்கணும் “ வெற்றி சொல்ல ,
“ அதுக்குத் தான் அப்பா அம்மா வந்து பேசறேன்னு சொன்னாங்க. உங்களையே ஒரு நல்ல நாள் பார்த்து சொல்ல சொன்னாங்க. நீங்க எப்போ சொல்றீங்களோ அன்னிக்கு நானாக வரோம்.” மகிழ்ச்சியுடன் சொன்னான் ஜீவா.
ஆனால் அனைத்தும் இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என்று எதிர்ப்பார்க்காத வெற்றிக்கு அவன் கூறியதை அப்படியே நம்ப முடியவில்லை. இருந்தாலும் அவர்கள் வந்து பேசிவிட்டால் எல்லாம் நல்லவிதமாக முடியும் என்று நம்பினான்.
“ சரி ஜீவா! நான் அம்மா கிட்ட பேசிட்டு ஒரு நாள் பார்த்து சொல்றேன். ரொம்ப சந்தோஷம். “ ஒரு குதுகலமே இல்லாமல் வெற்றி சொல்ல,
“ நான் எவ்வளவு சந்தோஷமா சொல்றேன், நீங்க ஏன் இப்படி பேசறீங்க? உங்களுக்கு இன்னும் என் மேல நம்பிக்கை வரலையா?” ஜீவா கேட்டுவிட,
“ அப்படியில்ல ஜீவா! எல்லாம் ரெண்டு நாள்ல முடிவாயிடும்னு நான் எதிர்ப்பார்க்கல , அதுவும் உங்க வீட்டுல இவ்வளவு சீக்கிரம் உங்க ப்ரச்சனை எல்லாம் முடிஞ்சு சம்மதிப்பாங்கனு சுத்தமா நம்பிக்கையில்லை. அதுனால தான் இப்போ நீங்க சொல்றப்ப கூட எப்படி ரியாக்ட் பண்றதுன்னு தெரியல, வெரி சாரி. “ அவன் மனதில் இருப்பதைக் கூறினான்.
“ எனக்கு புரியுது, நானும் இது இவ்ளோ சீக்கிரம் முடியும்னு நினைக்கல, இருந்தாலும் இது நடந்துடுச்சு”
“ எனக்கு இன்னும் கொஞ்சம் நேரம் ஆகும் இந்த சந்தோஷத்தை அனுபவிக்க, வீட்டுக்குப் போய் வாணி கிட்ட சொல்றேன். அப்போ தான் அவ முகத்தைப் பார்த்துத் தான் எனக்கு சந்தோஷம் வரும். தேங்க்ஸ் ஜீவா. நான் வரேன்!”
“ வெற்றி!”
“ சொல்லுங்க ஜீவா”
“அது…. வந்து… இதயா கிட்ட இனிமே பேசலாம் இல்லையா, அவள பாக்கலாம் தானே” சற்று தயங்கினாலும் கெத்தாகவே கேட்டான்.
“ ஹா ஹா… கண்டிப்பா…”
“ தேங்க்ஸ் வெற்றி” அவனைக் கட்டிக் கொண்டான்.
“ வரேன் ஜீவா” வெற்றியும் வில்லியும் கிளம்பினர்.
ஜீவா சென்றதை உறுதி செய்து கொண்ட பிறகு , வில்லி இத்தனை நேரம் தான் கேட்டதை வைத்து வெற்றியிடம் குழப்பத்தை விதைக்க நினைத்தான்.
“ அண்ணா! அவன் பேசுனதை நீங்க நம்புறீங்களா?”
சட்டென நின்றான் வெற்றி.
“ என்ன சொல்ற வில்லி?” குழப்பத்துடன் பார்க்க,
“ அவன் பொய் சொல்றான் .”….. …………………