Please use the coupon code DISC20 for 20%discounts on all products Dismiss

Skip to content

Welcome to MS Publications

  • Contact Us
SM Tamil Novels

Sparks and Mensa

  • Home
  • Forum
    • New Posts
  • Read and Pen
    • Completed Novels
    • Ongoing Novels
  • Youtube
  • Kindle
  • My Account
+919677666469
  • Home
  • Forum
    • New Posts
  • Read and Pen
    • Completed Novels
    • Ongoing Novels
  • Youtube
  • Kindle
  • My Account
0

Cart

₹ 0.00

Menu

Navigation

  • Home
  • Forum
    • New Posts
  • Read and Pen
    • Completed Novels
    • Ongoing Novels
  • Youtube
  • Kindle
  • My Account
Close Menu

mu2

mu2

  • Posted on January 23, 2019
  • Thendral
  • January 23, 2019
  • 0 comments

2

அரங்கநாதன் ஆதுர சாலை

நீலமலை கம்பீரமாய் உயர்ந்து வானை முட்டிக் கொண்டு நின்றது. அங்கே கதிரவனின் கதிர் வீச்சுப்பட்ட போதும் குளிர் நம்மை ஆட்கொண்டு நடுக்கமுறச் செய்தது.

மரங்கள் போட்டி போட்டுக் கொண்டு உயர உயரமாய் வளர்ந்திருக்க, அரிய வகை மலர்களும் செடிகளும் அந்த மலை ராணியின் மேனியை மறைத்து மேன்மேலும் அவளை அழகுறச் செய்தன. அங்கே கமழும் மூலிகை வாசங்களும் பழங்களின் நறுமணங்களும் நாசிக்குள் புகுந்து மூளையை சில நிமிடங்கள் கிறுகிறுக்கச் செய்தன.

இயற்கையின் மீது அலாதியான காதல் கொண்ட குரங்கினங்கள், அங்கிருந்த மரங்களில் தாவியும் குதித்தும் விளையாடியும் பழங்களைப் பறித்து உண்டும் தங்களுக்கான ஒரு தனி ராஜ்ஜியத்தையே நடத்திக் கொண்டிருந்தன.

 பறவையினங்கள் தாம் வாழ்வதற்கான உகந்த இடத்தைக் கண்டுவிட்டு ஆனந்தத்தில் மரங்கள் தோறும் தங்கள் கூட்டை அமைத்து அவற்றில் குடிபெயர்ந்தன. இந்த இயற்கை சூழலுக்கு இடையில் எத்தகைய நோயும் தன் பலத்தை இழந்துவிடும் எனும் போது மருந்தும் வைத்தியமும் அவசியமில்லை. அதன் காரணத்தினாலேயே நீலமலையின் அடிவாரத்தில் அரங்கநாதன் ஆதுரசாலை அமைக்கப்பட்டது.

அதற்காக மகாதேவன் சௌந்தர மன்னர் எல்லாவிதமான சௌகரியங்களையும் அமைத்துத் தந்தார். நகர வீதிகளில் வைத்தியர்கள் இருந்த போதிலும் சில குணப்படுத்த முடியாத பெரும் ஆபத்தான நோய்களையும் அந்த ஆதுரசாலையின் தலைமை வைத்தியர் சுவாமிநாதன் தீர்க்கவல்ல திறமை பெற்றவராயிருந்தார்.

 அவரின் குடும்பத்தில் உள்ள அனைவரும் வழிவழியாக  வைத்தியம் பார்த்தவர்கள். ஆதலால் அரிய வகை மூலிகையின் பயன்கள் பற்றி சுவாமிநாதன் நன்கு அறிந்திருந்தார். ஆரை நாடு மட்டுமே அன்றி பல்வேறு நாட்டு  மக்களும் எல்லா ஊர்களில் இருந்தும் வைத்தியம் பார்க்க அரங்கநாதன் ஆதுர சாலையை நோக்கி வருவது வழக்கமான ஒன்றே. அவர்கள் அங்கேயே தங்கியும் நோய்களைக் குணப்படுத்திக் கொண்டு சென்றனர்.

இன்று விடிந்ததிலிருந்து ஆதுர சாலை வாசலில் பெண்டு பிள்ளைகளும் ஆடவர்களும் தலைமை வைத்தியரைக் காண காத்திருந்த சமயத்தில் குதிரையின் குளம்படி சத்தம் கேட்டது. அங்கே இருந்த அனைவரும் சத்தம் வந்த திசையை நோக்க,  காற்றில் பறந்து வருகிறானோ என்ற எண்ணம் தோன்றுமளவிற்கு குதிரையின் மீது அமர்ந்தபடி வேகமாய் ருத்ரதேவன் வர, மக்கள் அவனை அடையாளம் கண்டுவிட்டு ஆரவாரித்தனர்.

“இளவரசர் ருத்ர தேவன்” என்று சிலர் குதூகலிக்க “ஆம்”  என்று பலரும் ஆமோதித்தனர். அத்தனை நேரம் நோய்வாய்ப்பட்டுச் சோர்வுற்றிருந்த முகங்கள் கூட பிரகாசிக்கத் தொடங்கியது.

ருத்ரதேவன்  பெரும் எதிர்பார்ப்புக்கும் காத்திருப்புக்கும் பிறகு ஜனித்த சௌந்தர கொங்கணனின் ஒரே ஆண் வாரிசு என்பதால் அவன் சிறு வயதினனாய்  இருந்த போதிலிருந்தே  ஆரை நாட்டு மக்களின் செல்லப் பிள்ளை. அவன்  வருங்கால அரசன் என்ற மதிப்பு மரியாதையைக் கடந்து   அவன் இயல்பாய் பழகும் விதத்தில் மக்கள் அவன் மீது அதீத அன்பு கொண்டிருந்தனர்.

அதுமட்டுமின்றி அவனின் நற்குணங்களால் மக்களின் மனதில் நீங்காத இடத்தைப் பெற்றிருந்தான் என்றே சொல்லலாம். இப்போது அவன் ஆதுரசாலை வாசலில் குதிரையை நிறுத்தித் தாவி இறங்க அங்கே இருந்த எல்லோரும் சிறியோர் பெரியோர் என வயது வரம்பின்றி, “இளவரசர் ருத்ரதேவன் வாழ்க!” என்று குரலை உயர்த்திக் கோஷமிட்டனர்.

ருத்ரதேவன் தம் வசீகரமான புன்னகையோடு  மக்களை நோக்கி, “இப்படி கோஷமிட்டு என்னை வேற்றாளாக மாற்ற வேண்டாம்… நானும் உங்களில் ஒருவன்…அதுவுமின்றி இங்கு நோயுற்றவர்கள் இருக்கிறார்கள்… ஆதலால் அமைதி காத்தருளுங்கள்” என்று சொன்ன மாத்திரத்தில் அவன் வார்த்தையை மீற முடியாமல் எல்லோரும் அமைதியாயினர்.

அந்த இளம் வயதில் அவனுக்கிருந்த முதிர்ச்சி எல்லோரையும் வியப்பில் ஆழ்த்த ருத்ரதேவன் எல்லோரின் நலன் குறித்தும் பொறுமையோடு விசாரித்தான். அங்கே இருந்த துணை வைத்தியர்கள் சென்று தலைமை வைத்தியரிடம் இளவரசனின் வருகை குறித்து சொல்லிக் கொண்டிருக்கும் போதே ருத்ரதேவன் கம்பீரமாய் குடிலுக்குள் நுழைந்தான்.

சுவாமிநாதன் பார்க்கையில் காவி உடை அணிந்து கொண்டு வெண்மையான தாடியுடன் நெற்றியில் நாமம் போன்ற திலகமும் இட்டிருந்தார். அவரின் முகத்தில்  ஒரு வித அமைதி நிரம்பியிருந்தது. அவரின் ஒளிபொருந்திய கண்களிலும் புன்னகையிலும் தேஜஸ் நிறைந்திருந்தது.

ஒருவரைப் பார்த்தவுடனேயே பீடித்திருக்கும் நோயை கணித்திடும் திறமை அவரிடம் தனித்துவமாய் இருந்தது. சுவாமிநாதன் வரும் நோயாளிகளின் நாடியைப் பிடித்து விவரங்களை  அறிந்து கொண்டு குணப்படுத்தத் தேவையான மூலிகை மருந்துகளின் சூட்சமங்களை உரைக்கத் துணை வைத்தியர்கள் சிறு உரல்கள் கொண்டு அதை இடித்துத் தயாரித்துக் கொடுத்தனர்.

உணவுகளில் அந்த மூலிகைக்கு ஒவ்வாதவற்றை உண்ண வேண்டாமென விவரிக்கவும் செய்தார். இவ்வாறு அவர் தம் பணியை செவ்வனே செய்து கொண்டிருப்பதை ருத்ரதேவன் மக்களிடம் இருந்து கேட்டறிந்து கொண்டான்.  இப்போது அவரை முதல் முறை சந்தித்ததுமே அவரின் தோற்றத்தைக் கண்டு ருத்ரதேவனுக்கு எண்ணிலடங்கா மரியாதை உண்டானது.

தலைமை வைத்தியரின் தேவைகளை அவ்வப்போது மன்னர் வீரர்களை அனுப்பிக் கேட்டறிவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் இம்முறை இளவரசரே வந்திருப்பது அவருக்கு ஆச்சர்யத்தை உண்டாக்கியது. ஏதேனும் முக்கியமான செய்தியை கொண்டு வந்திருக்கிறாரோ என எண்ணமிட்டபடி சுவாமிநாதன் அன்போடும் மரியாதையோடும் ருத்ரதேவனை வரவேற்றார்.

அவனும் மரியாதையோடு வைத்தியரை இரு கரம் கூப்பி வணங்கினான். அங்கே உட்கார அரியாசனம் இல்லை என்ற போதும் வைத்தியர் எதிர்க்கே ரொம்பவும் இயல்பாகத் தரையிலேயே தயக்கமின்றி அமர்ந்தான்.

 அவனின் சிறப்பான குணம்  குறித்து சுவாமிநாதன் கேள்விப்பட்டிருக்கிறார். இப்போது ஒரு இளவரசன் என்றபோதும்    அவனின் எளிமையும் மரியாதையும் அவரைச் சிலிர்ப்பில் ஆழ்த்தியது.

“வர வேண்டும் இளவரசரே…உங்களை கண்டதில் பெரும் மகிழ்ச்சி” என்றவர் பணிவான பாவனையில், “மன்னிக்க வேண்டும்… தாங்கள் அமர்வதற்கான தகுந்த ஆசனம் கூட இங்கே இல்லை” என்று வருத்தம் கொண்டார்.

“முதலில் நீங்கள் இளவரசரே என்று அழைக்க வேண்டாம்… ருத்ரன் என்றே அழைக்கலாம்… மரியாதைக்குரிய நீங்கள் என்னிடம் மன்னிப்பு கோர வேண்டிய அவசியமில்லை… நான் உங்களின் ஆதுர சாலைக்கு வந்தேதே என் பாக்கியமாகக் கருதுகிறேன்… இதில் ஆசனம் எல்லாம் அவசியமில்லை” என்று ருத்ரதேவன் நிதானமாகவும் தெளிவாகவும் உரைக்க சுவாமிநாதனுக்கு அவனின் பேச்சைக் கேட்டு மெய்சிலிர்த்தது.

“நீங்கள் நேரில் வந்திருக்கிறீர்கள் என்றால் ஏதேனும் முக்கியமான விஷயமாக மன்னர் தங்களை அனுப்பி இருக்கிறாரா?” என்று சுவாமிநாதன் தன் சந்தேகத்தைக் கேட்க,

 “மக்களின் நலனை விட மன்னருக்கு…வேறென்ன முக்கியமாய் இருக்க முடியும் வைத்தியரே… நீங்கள் மக்களுக்காகச் செய்யும் சேவையை நம் பிரதேசம் கடந்து பலருமே அறிந்து உங்களின் சிறப்பை குறித்துப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றனர்…  அத்தகைய திறமை கொண்ட தங்களை  சந்திக்கவும் உங்கள் தேவை குறித்து அறியவும் நானே நேரில் வந்தேன்” என்று  ருத்ரதேவன் உரைத்துக் கொண்டிருக்க அவனின் பேச்சின் முதிர்ச்சியாலும் தெளிவான சிந்தனையாலும் வைத்தியர் சுவாமிநாதன் ஈர்க்கப்பட்டார்.

ருத்ரதேவன் பார்வையிலும் பேச்சிலும் உள்ள ஈர்ப்புவிசை எல்லோரையும் ஈர்க்கவல்லது. அது அக்னீஸ்வரியை மட்டும் விட்டு வைத்ததா என்ன? அவள் அவனின் நினைப்பால் பீடித்திருக்க ஆதுரசாலைக்கு வெகு அருகாமையில் இருந்த சிறு குடிலை நோக்கி அப்போதுதான் அவள் மெதுவாய் நடந்து வந்தாள்.

 மனம் எங்கேயோ அலைபாய்ந்து கொண்டிருக்க,  அவளின் பாதங்களோ பழகிய வழித்தடம் என்பதால் பாதை மாறாமல் கொண்டு வந்து சேர்த்தது.  அந்த சிறு குடிலின் வாசலில் பூக்கள் அக்னீஸ்வரியை அழகாய் வரவேற்க அவள் அவற்றைக் கவனிக்கவில்லை. அருகில் இருந்த ஆதுர சாலையில் ருத்ரதேவனின் வருகையால் ஏற்பட்டிருந்த சலசலப்பையும் கவனிக்கவில்லை. வாசலில் பிணைக்கப்பட்ட அவனின்  கம்பீரமான குதிரை அவளைக் கண்டு தன் எஜமானனின் மனம் புரிந்து கனைத்து அழைக்க அந்தச் சத்தமும் அவள் செவியில் விழவில்லை. ஆனால் அந்த கனைப்பின் அழைப்பை வைத்தியரிடம் பேசிக் கொண்டிருந்த ருத்ரதேவன் கவனித்துக் காரணம் புரியாமல் திகைத்தான்.

3

அக்னீஸ்வரி

இறைவனின் படைப்பில் சில பெண்களுக்கு மட்டுமே பார்த்தவுடனே வசீகரிக்கும் முக அமைப்பு அமைந்திருக்கும். அப்படி ஒரு அழகின் சாராம்சம்தான் அக்னீஸ்வரி. அவள் அழகிற்கே இலக்கணமாய் திகழ்ந்தாள் எனும் போது அவளைப் பார்த்து ருத்ரதேவன் மட்டுமல்ல. எந்த இளவரசனும்… ஏன் எந்த நாட்டு அரசனுமே வசீகரிக்கப்படுவான். 

பார்ப்பவர்கள் எல்லோருமே அவளின் அழகில் லயித்து ஓயாமல் வர்ணிக்க, அந்த எண்ணம் அவளுக்குள் ஆழமாய் பதிந்து போனது. அதனாலேயே அக்னீஸ்வரி அவளின் அழகின் மீது அதீத கர்வம் கொண்டிருந்தாள். அவள் தன்னைத் தானே ரசித்துக் கொள்வதிலும் அலங்கரித்துக் கொள்வதிலும் ரொம்பவும் அக்கறை காட்டுவாள். 

இன்று அவ்வாறு நடந்த நிகழ்வால் இளவரசன் ருத்ரதேவன் அவளின் மீதும், அவள் கர்வம் கொண்டிருந்த அழகின் மீதும் காதல் கொண்டுவிட்டான். இன்று நிகழ்ந்த சந்திப்பால் அவர்களுக்கு இடையில் ஜென்மாந்திர பந்தம் அவர்கள் அறியாமலே ஏற்பட்டுவிட்டது.

அக்னீஸ்வரி சோம சுந்தரரின் இளைய புத்திரி. நான்கு அண்ணன்மார்களுக்கும் செல்ல தங்கை. சோம சுந்தரர் உட்பட அவரின் நான்கு மகன்களுமே வீரத்தில் பெயர் போனவர்கள். அவர்களுடன் பழகிய அக்னீஸ்வரியிடம் அந்த வீரமும் துணிவும் இல்லாமல் இருக்குமா?

அதனாலேயே இளவரசர் ருத்ர தேவனைக் கண்டு அச்சம் கொள்ளாமல் துணிவோடும் தெளிவோடும் பதிலுரைத்தாள். அக்னீஸ்வரிக்கு ஒரே ஒரு தமக்கை வைத்தீஸ்வரி. அவள் தலைமை வைத்தியர் சுவாமி நாதனின் மூத்த மகன் விஜயவர்தனை மணம் புரிந்து கொண்டாள். அவன் சில அரிய வகை மூலிகைகளைத் தேடி கொல்லி மலை வரை பயணம் மேற்கொண்டிருந்தான். அவனுடன் இளையவன் விஷ்ணுவர்தனும் சென்றிருந்தான். இந்தச் சமயத்தில் ஐந்து மாத கர்ப்பிணியாக இருக்கும் அக்காவிற்காக  அக்னீஸ்வரி  துணைக்கு தங்கி இருந்தாள்.

எந்த வேலை செய்து உதவி புரிகிறாளோ இல்லையோ!  தண்ணீர் எடுத்துக் கொண்டு வருவதை மட்டும் தவறாமல் செய்துவிடுவாள். இன்று அதையுமே செய்யாமல் காலி குடத்தை தாங்கிக் கொண்டு குடிலுக்குள் நுழைந்தாள்.

அக்னீஸ்வரி குடிலுக்குள் நுழைந்ததும் வைத்தீஸ்வரி,  “தண்ணீர் எடுத்து வருவதற்கு ஏன் இத்தனை நாழிகையானது அக்னீஸ்வரி” என்று கேட்டு கொண்டே அவள் அருகில் வந்து நின்றவள் காலியான குடத்தைக் கண்டு அதிர்ச்சியானாள்.

“தண்ணீர் எங்கே?” என்று வைத்தீஸ்வரி அவளின் தோளினைத் தட்ட இப்போது அவனின் நினைப்பில் இருந்து மீண்டு வந்தவள் தடுமாறியபடி,

 “அக்கா… நான் தண்ணீர் எடுக்க குளக்கரைக்கு போனேன்… ஆனால்” என்று இழுத்தாள்.

“ஆனால் என்ன?… தண்ணீரில் தெரிந்த உன் பிம்பத்தைப் பார்த்து நீயே மயங்கி விட்டாயாக்கும்” என்றாள் வைத்தீஸ்வரி.

“அப்படி ஒன்றும் இல்லை… நான் சொல்ல வருவதை முழுதாக கேள்”

“சொல்… நீ என்ன கதை சொல்கிறாய் என்று நானும் கேட்கிறேன்”

“கதையில்லை… நான் குளக்கரையில் அமர்ந்திருந்த போது குதிரையின் மீது” என்று அக்னீஸ்வரி சொல்லி முடிக்கும் முன்னர் வைத்தீஸ்வரி பரிகாசம் செய்து சிரித்தபடி,

“குதிரையின் மீது ஒரு இளவரசன் வந்து… அவன் உன் அழகைப் பார்த்து மயங்கிக் காதல் கொண்டானாக்கும்… வானத்தில் இருந்து குதித்தானா… இல்லை தண்ணீருக்குள் இருந்து வெளியே வந்தானா” என்று வைத்தீஸ்வரி வேடிக்கையாகக் கேட்க அக்னீஸ்வரி கவலை தோய்ந்த முகத்தோடு ‘இவைதான் உண்மை என்று எப்படிச் சொல்வது‘ என தவிப்புற்று மௌனமானாள்.

வைத்தீஸ்வரி அவள் கையில் இருந்த குடத்தை பறித்துக் கொண்டு, “நீ உதவி என்ற பெயரில் எனக்கு செய்வதெல்லாம் உபத்திரவம்தான்” என்று சொல்லிவிட்டு  சுவற்றோரம் போய் சலிப்போடு அமர்ந்து கொண்டாள்.

“கோபித்துக் கொள்ளாதே அக்கா… நான் வேண்டுமானால் இப்போது போய் எடுத்துக் கொண்டு வந்துவிடுகிறேன்” என்று அக்காவின் அருகில் அமர்ந்து அக்னீஸ்வரி சமாதானம் செய்தாள்.

“நீ இனிமே எந்த வேலையும் செய்யவே வேண்டாம்… நானே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறேன்… உன் மாமாவிற்கு என் மீது கொஞ்சம் கூட அக்கறை இல்லை… சென்று ஒரு திங்கள் முடியப்போகிறது… இன்னுமும் வந்து சேரவில்லை… மனமும் உடலும் எத்தனைச் சோர்வாய் இருக்கிறது என்று உனக்கு நான் சொன்னால் விளங்கவா போகிறது” என்று வைத்தீஸ்வரி தன் வேதனைகளைச் சொல்லி புலம்பிக் கொண்டிருக்க அக்னீஸ்வரிக்கு அவள் அத்தான் புறப்படுவதற்கு முன் சொன்ன விஷயம் நினைவுக்கு வந்தது.

“உன் அக்காவின் வயிற்றில் இருப்பது இரட்டைச் சிசு… நீதான் அவளைப் பத்திரமாய் பார்த்துக் கொள்ள வேண்டும்… இது குறித்து அவளுக்குத் தெரிந்தால் பிரசவத்தில் சிரமம் ஏற்படுமோ என உள்ளூர அச்சம் ஏற்படக் கூடும்… அதனால்தான் யாரிடமும் இது பற்றி சொல்லவில்லை…  உன்னைத்தான் மலை போல் நம்பி இருக்கிறேன்…நான் வரும் வரை உன் அக்காவை கவனமாய் பார்த்துக் கொள் அக்னீஸ்வரி!” என்று வைத்தீஸ்வரியின் கணவன் விஜயவர்தன் அழுத்தமாய் சொல்லிவிட்டுப் போனான்.

‘அத்தான் சொல்லிவிட்டு போனதென்ன… நான் செய்த காரியம் என்ன?’ என்று  அக்னீஸ்வரி அக்காவைத் தேவையின்றி வேதனைக் கொள்ள செய்ததை எண்ணி குற்றவுணர்வு கொள்ள, அவள் கண்களில் கண்ணீர் தளும்பியது.

அந்தச் சமயம் பார்த்து யாரோ வரும் காலடி ஓசை காதுகளில் விழ வைத்தீஸ்வரி, “யாரேனும் வருகிறார்களா?” என்றாள்.

“நான் பார்த்து விட்டு வருகிறேன்” என்று கண்களை துடைத்துக் கொண்டு அக்னீஸ்வரி எழுந்து வாசல் கதவோரம் சென்று நின்றாள்.

சுவாமிநாதனோடு ருத்ரதேவன் அவனுக்கே உரியக் கம்பீரத்தோடு நடந்து வர… தான் பார்ப்பதெல்லாம் கனவா என்று அவளின் மான் விழிகள் அசைவின்றி நின்றது.

ருத்ர தேவனும் அங்கே எதிர்பாராவிதமாய் அக்னீஸ்வரியைக் காண்பான் என்று நினைக்கவே இல்லை. வைத்தியர் அழைத்துவிட்ட மரியாதைக்காகவே அந்தக் குடிலுக்கு வந்தான். அக்னீஸ்வரியை பார்த்து மீண்டும் எத்தனை ஆனந்தம் கொண்டான் என்று அவனால் விவரிக்கவே முடியாது.

அவன் பளிங்கு போன்ற முகத்தில் பிரகாசம் குடி கொள்ள அக்னீஸ்வரி படபடப்போடு, “இளவரசர் வருகிறார்” என்று வைத்தீஸ்வரியிடம் தெரிவித்தாள்.

“நீ  இன்னுமா உன் கனவுலகத்தில் இருந்து மீண்டு வரவில்லை” என்று வைத்தீஸ்வரி நம்பாமல் கேட்டு கொண்டிருக்கும் போதே, “வைத்தீஸ்வரி!” என்று சுவாமிநாதன் அழைப்பு விடுத்தார். அவள் சிரமப்பட்டு எழுந்திருக்க இருவரும் அதற்குள் குடிலுக்குள் நுழைந்துவிட்டனர்.

இப்போது வைத்தீஸ்வரிக்கு நிலைமை இன்னதென புரிய ருற்றதேவனைக் கண்டு ஆச்சர்யம் கொண்டாள்.

“வாருங்கள் இளவரசே!… வாருங்கள்!” என்று வைத்தீஸ்வரி ருத்ரதேவனை மரியாதையாக வரவேற்றாள்.

அக்னீஸ்வரி அவனின் கூர்மையான பார்வையிலிருந்து தப்பி கொள்ள வைத்தீஸ்வரியின் முதுகின் புறம் சென்று மறைந்து கொண்டாள். அந்த சிறு குடிலில் மறைவதற்கும் அவளுக்கு வேறு இடம் கிடைக்கவில்லை. வைத்தீஸ்வரி தண்ணீர் எடுத்து வர விலகிச் செல்ல உள்ளே இருந்த சிறு தூணின் பின்புறம் மறைவாய் நின்று கொண்டாள்.

இத்தனை நேரம் ஓயாமல் வைத்தியரிடம் விவாதித்துக் கொண்டிருந்தவன் இப்போது ஊமையாகிப் போனான். அவ்வப்போது வைத்தியரின் முகத்தைப் பார்த்து புன்னகை புரிந்தாலும் அவனின் பார்வை மீண்டும் மீண்டும் அவளை நோக்கியே திரும்பின.

“இந்த எளியவர்களின் குடிலுக்கு தாங்கள் வந்ததற்கு நாங்கள் பேறு பெற்றோம்” என்று வைத்தீஸ்வரி தண்ணீர் குவளையை அவனிடம் நீட்டினாள்.

“உங்களை விடவும்  இங்கே வந்ததிற்கு நானே மிகுந்த ஆனந்தம் கொண்டேன்” என்று ருத்ரதேவன் அக்னீஸ்வரியைப் பார்த்தபடி உரைத்துவிட்டு தண்ணீரை வாங்கிப் பருகினான்.

அவன் பார்க்கத் துடிப்பதும் அவள் மறைந்து கொண்டு தவிப்பதும் இந்த ரகசிய காதல் சம்பாஷணையை வைத்தீஸ்வரியும் வைத்தியருமே கவனிக்கத் தவறினர்.

“நான் புறப்படுகிறேன்” என்று ருத்ரதேவன் உரைக்க இருவரும் மாறி மாறி அவனை உணவருந்திச் செல்லும்படி தடுத்தனர்.

ஆனால் அவன் புறப்படுவதில் உறுதியாக இருந்தான். அவனால் அவளின் மீதிருந்து கண நேரம் கூட பார்வையை அகற்ற முடியாமல் அவதியுற, இனி தான் இங்கே இருப்பது உசிதமில்லை என்றெண்ணி ஏதேதோ காரணங்கள் உரைத்துவிட்டு வெளியேறினான்.

அக்னீஸ்வரியின் இதயம் அப்போதுதான் மீண்டும் துடிப்பது போல  ஓர் பிரமை உண்டாயிற்று. ருத்ரதேவன் தன் குதிரையை நோக்கி நடக்க வைத்தியரும் பின்னோடு வழியனுப்ப நடந்து வந்தார்.

ருத்ரதேவன் தன் குதிரையை தடவியபடி,

 “குடிலில் உள்ள இரு பெண்களும் யார்?” என்று இயல்பாக வினவ வைத்தியர் அவனை ஆச்சர்யமாக நோக்கினார். ஏற்கனவே அவர்களைப் பற்றிய விவரத்தைத் தான் உரைத்ததை அவன் கவனிக்கவில்லையோ என்று எண்ணிக்கொண்டார்.

 அக்னீஸ்வரியை குடிலுக்குள் பார்த்த பின் ருத்ரதேவனின் ஐம்புலன்களும் செயலற்று விழி மட்டுமே விழித்திருந்தது என்பதை வைத்தியர் அறிந்திருக்க வாய்ப்பில்லையே.

“வைத்தீஸ்வரி என் மூத்த மகன் விஜயவர்தனின் மனையாள்… அக்னீஸ்வரி அவளின் தங்கை…இப்போது என் மகன்கள் இருவரும் கொல்லி மலைக்கு அரிய வகை மூலிகை எடுக்கச் சென்றிருக்கின்றனர். ஆதலால் அக்காவுக்கு துணையாக தங்கை வந்து இங்கே தங்கி இருக்கிறாள்” என்றார்.

இதனைக் கேட்டறிந்து கொண்ட பின் ருத்ரதேவன் வைத்தியரிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டான்.

குடிலின் வாயிலில் அக்னீஸ்வரி தன் தமக்கையின் தோளினைப் பற்றி பின்னோடு நின்று கொண்டிருக்க குதிரையில் கடந்து சென்ற ருத்ரதேவன் அவளை தன் பார்வையாலேயே வருடிவிட்டுச் சென்றான். அந்த ஒற்றைப் பார்வையில் அவள் நிலைகுலைந்து போனாள்.

அன்று நிகழ்ந்த சந்திப்புக்கு பிறகு அக்னீஸ்வரியும் ருத்ர தேவனும் மீண்டும் சந்தித்துக் கொள்ளும் சூழ்நிலை அமையவில்லை. ஆனால் இருவருமே காதலெனும் கனவுலகிற்குள் ஒருவரை ஒருவர் தவறாமல் சந்தித்துக் கொண்டனர்.

பூக்களை கொய்து அதை மாலையாய் கோர்ப்பதில் அக்னீஸ்வரிக்கு அலாதியான இன்பம். அன்று குடிலின் வாசலில் உள்ள வண்ண மலர்களை எல்லாம் தன் மென்மையான கரங்களால் அவள் பறித்து பூக்கூடையில்  போட்டுக் கொண்டிருந்தாள். மலர்களுக்கு இடையில் அவளுமே இன்னொரு மலராய் நின்றிருக்க குதிரையின் கனைப்புச் சத்தம் அவள் செவியில் விழுந்தது. மனம் உடனடியாக ருத்ரதேவனை கண் முன் நிறுத்தக் குடிலின் வாசலில் நின்ற குதிரையில் இருந்து ஓர் ஆடவன் இறங்கினான்.

அக்னீஸ்வரி அந்த ஆடவனைப் பார்த்த கணத்தில் புன்னகை ததும்ப,

 “அக்கா… அக்கா… அத்தான் வந்துவிட்டார்… ஓடி வா… இல்லை இல்லை மெதுவாகவே வா” என்று சத்தமிட்டாள். வைத்தீஸ்வரி தான் செய்து கொண்டிருந்த வேலைகளை அப்படியே விட்டு விட்டு வாசலருகில் வந்து நின்றாள்.

அந்த நொடியே வைதீஸ்வரியின் முகத்தில் ஏமாற்றம் குடி கொண்டது. அந்த எண்ணத்தை வெளிப்படுத்தாமல்,  “நீங்கள் மட்டும்தான் வந்தீர்களா? அவர் வரவில்லை?”என்று அந்த ஆடவனிடம் வினவினாள்.

“வந்திருக்கிறார் அண்ணி… ஆதுர சாலைக்கு தந்தையை காணச் சென்றிருக்கிறார்” என்றான் விஷ்ணுவர்தன். இதைக் கேட்டு மனம் நிம்மதியுற்றாலும் கணவனைக் காண முடியவில்லை என்ற சோர்வோடு மைத்துனனை உள்ளே வரும்படி அழைத்துவிட்டு வைத்தீஸ்வரி  குடிலுக்குள் சென்றாள்.

விஷ்ணுவர்தனும் விஜயவர்தனும் சில நிமிட வித்தியாசத்தில் ஜனித்த இரட்டையர்கள். அவர்கள் இருவரும் பார்க்க ஒரே மாதிரியான தோற்றம் கொண்டவர்கள். எல்லோருமே இருவரையும் கண்டு குழம்பி விடுவது போல அக்னீஸ்வரியும் குழம்பிவிட்டாள்.

இருவரும் சென்று வெகு நாட்களாகிய நிலையில் அந்த ஆனந்த அதிர்ச்சியில் வந்தவன் விஷ்ணுவர்தனாக இருக்கக் கூடும் என்பதை யோசிக்க மறந்தாள். ஆனால் அத்தகைய குழப்பம் வைத்தீஸ்வரிக்கும் சுவாமிநாதனுக்கும் இதுவரை வந்ததேயில்லை. இருவரும் அவர்களைச் சரியாக அடையாளம் கண்டு கொள்வர்.

அக்னீஸ்வர் இப்போது அசட்டுப் புன்னகையோடு, “நான் தங்களை அத்தானோ என்று எண்ணி குழப்பமுற்றேன்” என்று விஷ்ணுவர்தனை நோக்கி உரைத்தாள்.

“இது ஒன்றும் முதல் முறை இல்லை அக்னீஸ்வரி… இந்த தவற்றை நீ பலமுறை செய்திருக்கிறாய்” என்று விஷ்ணுவர்தன் கோபமாக முறைத்தான்.

“அத்தானுக்கும் உங்களுக்குமான  இடையிலான வித்தியாசத்தை ஏனோ என்னால் இதுவரை கண்டு கொள்ளவே முடியவில்லை” என்றாள்.

“அண்ணிக்கு  மட்டும் பார்த்த மாத்திரத்தில் எப்படி எங்கள் இருவரைச் சரியாக அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது”

“இதென்ன கேள்வி?…  அக்காவுக்கு அத்தானை அடையாளம் தெரியாமலிருக்குமா?…நானும் அவ்வாறு எப்படி இருக்க முடியும்.?… எனக்கு ஏனோ குழப்பமாகவே இருக்கிறது” என்று அவள் குழந்தைத்தனமாக உரைக்க அவன் அதை ரசித்தவாறு புன்னகையோடு,

“ஒன்றும் குழப்பமில்லை… உன் கண்களால் பார்க்காமல்… மனதால் உணர்ந்து பார்” என்றான்.

“நீங்கள் சொல்வது ஒன்றும் எனக்கு விளங்கவில்லை” என்று அக்னீஸ்வரி உரைத்துவிட்டு மலர்களை பறிக்கத் தொடங்கினாள்.

“என் மனதை  நீ புரிந்து கொள்ளும் போது இந்தக் குழப்பமெல்லாம் தீர்ந்து… நான் சொன்னதன் அர்த்தம் விளங்கும்” என்று விஷ்ணுவர்தன்  சொல்லிவிட்டு குடிலுக்குள் செல்ல அவன் சொன்னதை அவள் கூர்ந்து கவனிக்கவில்லை.

நிலமகள் அருகாமையில்  சுழன்று வரும் சந்திரனை கவனிக்காமல்  தொலைவில் இருக்கும் சூரியன் மீது மையல் கொண்டு சுற்றி வருவதுதானே இயற்கையின் படைப்பு.

Post navigation

Previous: mm26
Next: MM27

Advertisement

Popular

  • என் ஜீவன் என்றும் உன்னுடன் என் ஜீவன் என்றும் உன்னுடன் ₹ 290.00
  • உறவோடு உறவாடு உறவோடு உறவாடு ₹ 425.00
  • பல்லவன் கவிதை பல்லவன் கவிதை ₹ 470.00
  • கணவனே என் காதலா கணவனே என் காதலா ₹ 210.00
  • பாதகத்தி நெஞ்சுக்குள்ளே பாதகத்தி நெஞ்சுக்குள்ளே ₹ 390.00

Advertisement

Product categories

Latest Books

  • என் ஜீவன் என்றும் உன்னுடன் என் ஜீவன் என்றும் உன்னுடன் ₹ 290.00
  • உறவோடு உறவாடு உறவோடு உறவாடு ₹ 425.00
  • பல்லவன் கவிதை பல்லவன் கவிதை ₹ 470.00
  • கணவனே என் காதலா கணவனே என் காதலா ₹ 210.00
  • பாதகத்தி நெஞ்சுக்குள்ளே பாதகத்தி நெஞ்சுக்குள்ளே ₹ 390.00

Shop

  • Orders
  • Downloads
  • Addresses
  • Account details
Mail Us

MS Publications

396, Vangiliyappa Nagar,

Chinnandan koil Road,

Karur 639002


  • About Us
  • Terms of Use
  • Privacy policy
  • Returns and cancellations Policy
  • Contact

© All Right Reserved SM Tamil Novels 2025

Theme GRshop Grocery By PencilWp

error: Content is protected !!