ENE — epi 17
ENE — epi 17
அத்தியாயம் 17
தோழனின் தோள்களும் அன்னை மடி
அவன் தூரதில் பூத்திட்ட தொப்புல் கொடி
காதலை தாண்டியும் உள்ள படி
என்றும் நட்புதான் உயர்ந்தது பத்து படி
உன் நட்பை நாங்கள் பெற்றோம்
அதனாலே யாவும் பெற்றோம்
மேலே மேலே சென்றோம்
வான் மேகம் போலே நின்றோம்
மலேசியாவின் சொர்க்கபுரி தீவு என அழைக்கப்படும் அழகிய கடற்கரை மாநிலம் பினாங்கு. வழிபாட்டு தலங்கள், வகை வகையான உணவுகள், கேளிக்கை விடுதிகள், ஷோப்பிங் மால்கள் என எல்லா வகை மக்களையும் கவர கூடிய இடமது.
வெள்ளி முற்பகலில் “பாயான் லேப்பாஸ்” ஏர்போர்ட்டில் வந்திறங்கினார்கள் டேனி, தான்யா, லிண்டா மற்றும் ரஹ்மான். லிண்டாவும் ரஹ்மானும் அவர்களின் நெருங்கிய பள்ளி நண்பர்கள். ஏர்போர்ட்டிலிருந்து உபர் புக் செய்து ஹோட்டலை நோக்கி பயணித்தனர் நால்வரும். டேனி பினாங்கில் பிரபலமான கடலை ஒட்டி இருந்த ஹோட்டலை புக் செய்திருந்தான்.
உபர் காரை விட்டு ஹோட்டல் லோபியில் இறங்கும்போதே பணியாளர்கள் அவர்களை ஆர்கிட் மாலை அணிவித்து வரவேற்றார்கள். ஆரஞ்சு பழச்சாறும் வழங்கப்பட்டது. எப்போழுது ட்ரிப் வந்தாலும் அவர்கள் நால்வரும் தனி தனி ரூம் தான் எடுத்து கொள்வார்கள். ஊர் சுற்றும் போது மட்டும் ஒன்றாக சுற்றுவார்கள்.
“வணக்கம் மேம். நான் டேனி. 4 சிங்கள் ரூம் புக் பண்ணியிருந்தேன். புக்கிங் ஐடி இதோ”
“வணக்கம் சார். கொஞ்சம் இருங்க. செக் பண்ணிட்டு உங்க கீ கார்டை கொடுக்கிறேன்”
கம்யூட்டரில் தட்டி பார்த்த வரவேற்பாளினி,
“இங்க தான்யாங்கிறவங்க யார்?”
“என் பிரெண்ட் தான். டான்யா ஜீசை வச்சிட்டு இங்க வா” என அவளை அழைத்தான்.
“தான்யா மேம், நாளைக்கு உங்க பிறந்தநாள் தானே? உங்க ரூம் மட்டும் கார்டன் சூட்க்கு அப்கிரேட் ஆகியிருக்கு. மாதம் மாதம் நாங்க அவய்லபிலிட்டி பார்த்து இப்படி குடுக்குறதுதான். இந்த மாதம் நீங்க தான் அந்த லக்கி பெர்ஸன்”
“நேஜமாவா மிஸ்? ஏதாவது எக்ஸ்ட்ராவா சார்ஜ் பண்ணுவீங்களா?” என சந்தேகமாக கேட்டாள் தானு. நம்ப பட்ஜேட் பத்பநாபிக்கு அவ கவலை.
“இல்லை மேம். நீங்க சிங்கள் ரூம்க்கு குடுக்கிற பணம்தான். கவலைபடாதிங்க. இங்க தங்கி இருக்கற வரை உங்களுக்கு சூட்ல தங்கறவங்களுக்கு கிடைக்கிற சலுகையெல்லாம் கிடைக்கும். நம்ப ஸ்பாலெயே இலவச மசாஜ்,மனிகூர், பெடிகூர், இலவச ரூம் சர்வீஸ், காலை உணவு, பார்ல ப்ரீப்ளோ டிரிங்க்ஸ் எல்லாம் கிடைக்கும். ஹெப்பி அட்வாண்ஸ் பேர்த்டே அன்ட் வெல்கம் டூ அவர் ஹோட்டல். இந்தாங்க கீ”
“வாவ் டான்யா. யு ஆர் சோ லக்கி கேர்ள்” என வயிறு எரிந்தாள் லிண்டா.
“அப்புறம் தான்யா மேம், ரூமை யார் கூடயும் நீங்க ஷேர் பண்ண கூடாது. இது எங்களோட ஹோட்டல் ரூல்.”
“ஓகே மிஸ். ரொம்ப நன்றி, எனக்கு இந்த ஆபர் குடுத்ததுக்கு”
“டான்யா உன் ரூம் 20வது ப்ளோர்ல இருக்கு. எங்களோட 5வது. நாம வாட்ஸாப் குரூப்ல அடுத்து என்ன செய்யறதுன்னு பேசிக்கலாம். இப்ப ரூமுக்கு போய் ரெஸ்ட் எடுக்கலாம்” என்றான் டேனி. மற்ற இருவரையும் முன்னே நடக்க விட்டவன் தான்யாவிடம்,
“டான்யா! நீ தனியா வேற ப்ளோர்ல இருக்கறது எனக்கு ஒரு மாதிரியா இருக்கு. இந்த சலுகையெல்லாம் நான் செஞ்சு குடுத்தாலும் நீ வேணானு சொல்லிருவே. இப்போ இலவசமா கிடைக்கும் போது தடுக்க எனக்கு மனசு வரல.யூ எஞ்சாய் யுவர்செல்ப். தனியா பெரிய ரூமுல இருக்க பயமா இருந்தா மட்டும் சொல்லு, ரூமை சிங்களுக்கு மாத்திக்கலாம்.”
“ஐயோ டேனி. நான் என்ன சின்ன புள்ளையா பயப்பட. நீதான் எனக்காக பயப்படுற. போ, போய் ரெஸ்ட் எடு. நான் ரூமை போட்டோ புடிச்சு மெசெஜ் அனுப்புறேன்.”
லிப்டில் ஏறி ஐந்தாவது மற்றும் இருபதாவது பட்டனை அழுத்தி விட்டு சலசலத்தபடியே வந்தனர் நண்பர்கள். ஐந்தாவது தளத்தில் அவர்கள் இறங்கி கொள்ள தான்யா மட்டும் 20 வது தளத்துக்கு பயணப்பட்டவள். லிப்டிலிருந்து இறங்கி தனக்கு ஒதுக்க பட்ட ரூமை தேடினாள். சிங்கள் ரூம் போல் அருகருகே இல்லாமல் ரூம் ஒவ்வொன்றும் இடைவெளி விட்டு அமைக்கப்பட்டிருந்தன. சுவர் முழுக்க அழகான ஓவியங்கள் மாட்டபட்டிருந்தன. ஊதா நிற வால்பேப்பர் ஒட்டி காரிடோரே பார்க்க அழகாக இருந்தது. அங்கங்கே வைக்க பட்டிருந்த சிறிய மேசைகளில் பூக்குவளைகள் வைக்கப்பட்டு அதில் பல வண்ண ரோஜாக்கள் வீற்றிருந்தன.
‘வாவ், வெளியவே இப்படி இருக்கே ரூம் உள்ள எப்படி இருக்குமோ’ என எண்ணியபடியே ரூமை திறந்தாள் தான்யா. கீ கார்டை அதன் இடத்தில் சொருகியதும் அறைக்குள் வெளிச்சம் வந்தது. ட்ராலி பேக்கை உள்ளே தள்ளி வைத்து விட்டு நிமிர்ந்து அறையை பார்த்த தான்யா மலைத்து நின்றுவிட்டாள்.
தரை முழுக்க பல வண்ண பலூன்கள் நிறைந்திருந்தன. கட்டிலின் பின்னால் உள்ள சுவற்றில் ஹேப்பி பேர்த்டே என வாசகம் ஒட்ட பட்டிருந்தது.பலூன்களை உரசி கொண்டே நடந்து சென்று கட்டிலை பார்த்தாள் தான்யா. அதன் மேலே ரோஜா இதழ்களாலே ஹேப்பி பேர்த்டே என எழுதபட்டிருந்தது. கட்டில் நான்கு பேர் படுத்து கொள்ளும் அளவுக்கு பெரிதாக இருந்தது.
கட்டிலின் பக்கத்தில் மெல்லிய திரைசீலை இருந்தது. அதை விலக்கி என்ன இருக்கிறது என பார்த்தாள் தான்யா. ஆங்கில எல் வடிவில் ஒரு சோபாவும் அதற்கெ எதிரே 65 இன்ச் தொலைகாட்சியும் இருந்தது. சோபா அருகிலே மினி பிரிட்ஜ் தெரிந்தது. ஓடி சென்று அதை திறந்து பார்த்தாள் தான்யா. பல வகையான குளிர் பானங்களும், ஒரு அட்டைபெட்டியில் ஆறு வகையான கப் கேக்குகளும் இருந்தன. ப்ரிட்ஜ் மேலே காம்ப்ளிமன்டரி என எழுதி இருந்தது. இரு கேக்கை எடுத்து மொக்கியவள், குளிர்பானத்தை திறந்து குடித்தாள்.
‘ரூமுக்கு தானே கூப்பிட கூடாது, சாப்பாடு குடுக்க கூடாதுன்னு சொல்லலியே. அப்புறமா மீத கேக்குகளை டேனிக்கு கொண்டு போய் குடுக்கனும்’ என எண்ணி கொண்டாள். தொலைக்காட்சியை திறந்து எம்டீவி சென்னலை போட்டவள் பாடி கொண்டே கட்டில் மேல் ஏறி சிறு குழந்தை போல் குதித்தாள். மூச்சு வாங்க ஆரம்பித்தவுடன் கீழே இறங்கி பலூன்களை மேலே தூக்கி போட்டு விளையாடினாள்.
பிறகு கண்ணாடி கதவை திறந்து கொண்டு பால்கனிக்கு சென்றவள்,
‘இப்பத்தான் தெரியுது ஏன் கார்டன் சூட்ன்னு சொன்னாங்கன்னு. யப்பா இந்த சின்ன பால்கனியில எவ்வளவு அழகா மலர் தோட்டம் வடிவமிச்சிருக்காங்க. ரோஜா, ஆர்கிட், சூரியகாந்தி எல்லாம் பார்க்கவே ரம்யமாக இருக்கு’.
ஊஞ்சல் நாற்காலி குஷன் வைத்தது அங்கே போடபட்டிருந்தது. ஊஞ்சலில் உட்கார்ந்தபடியே தூரத்தில் தெரிந்த கடலை பார்த்தாள் தான்யா. ‘இங்க உட்கார்ந்து பார்த்தா கண்டிப்பா சூரிய அஸ்த்தமனம் தெரியும். ஈவ்னிங் இங்க வந்து உக்காந்துக்கனும். என்ன ஒரு வாழ்க்கைடா. பணம் இருந்தா இப்படி எல்லா சுகத்தையும் வாங்கிரலாம் போல.’ என எண்ணி கொண்டே ஒரு செல்பி எடுத்து டேனிக்கு அனுப்பினாள்.
பிறகு மெல்ல எழுந்து பாத்ரூமை தேடி சென்றாள். இரண்டு கதவுகள் இருந்தன. ஒன்றை திறந்து பார்த்தாள், திறக்க முடியவில்லை. ‘ஓ கோன்னேக்டிங் டோர். குடும்பமாக வந்தால் இப்படி இரண்டு ரூமும் எடுப்பார்கள் போல. நான் மட்டும் இருக்கறதனால பூட்டி இருக்கு’.
அடுத்த கதவை திறந்தாள், நினத்ததுபோல அதுதான் பாத்ரூம். ‘இங்கயே சோறு போட்டு எடுத்து வந்து சாப்பிடலாம் போல. இப்படி பளபளன்னு இருக்கு.’ பாத்டப்பில் தண்ணீர் நிரப்பப்பட்டு ரோஜா இதழ்கள் மிதந்தது. யூகலிப்ட்ஸ் வாசம் வந்தது தண்ணீரிலிருந்து. முகம் கழுவ போனவள், முடிவை மாற்றி கொண்டு அப்படியே அந்த தண்ணீரில் அமிழ்ந்து போனாள்.
குளித்து வருவதற்குள் அத்தனை வாட்ஸாப் மெசேஜ் வந்திருந்தது டேனியிடமிருந்து. எப்படி இருக்கு ரூம், என்ன செய்யுற, ஏதாச்சும் சாப்பிட்டியா என கேள்வி கேட்டு குடைந்திருந்தான். கட்டிலில் சென்று மல்லாந்து படுத்து கொண்டே டேனிக்கு அழைத்தாள்.
“என்ன செய்யுற டான்யா. எவ்வளவு நேரமா மேசேஜ் செய்யுறது? நாங்க மூனு பேரும் நீச்சல் குளத்துக்கு போறோம். நீயும் இறங்கி வா.”
“போ டேனி. எனக்கு ட்ராவல் செஞ்சது களைப்பா இருக்கு. நான் ரெஸ்ட் எடுக்க போறேன். நீங்க போங்க. டின்னருக்கு நான் ஜாய்ன் பண்ணிக்கிறேன்.”
“சரி சரி. யூ டேக் ரெஸ்ட்.”
“ஓகே பாய்”
கண் மூடி படுத்தாள் தான்யா. கண்மணிக்குள் விபாவின் சிரித்த முகம் வந்து நின்றது. ‘அடச்சேய், இனிமே தூங்கின மாதிரி தான்’ என நினத்து கொண்டே எழுந்து அமர்ந்தாள். நீச்சலுக்கு செல்லவும் கடுப்பாக இருந்தது. ஹோட்டல் போனை கையில் எடுத்தவள்,
“ஹலோ, அலங்காரா ஸ்பா?”
இரவு எட்டு மணிக்கு நண்பர்கள் நால்வரும் ஹோட்டல் லாபியில் சந்தித்து கொண்டார்கள். மேசேஜுல் பேசி கொண்டபடி பக்கத்திலே இருந்த ஒரு வெஸ்டர்ன் ரேஸ்டோரன்டுக்கு சாப்பிட சென்றார்கள். மேசையில் அமர்ந்தவுடன் மெனு கார்ட் வந்தது. நண்பர்கள் பேசி சிரித்தபடியே மெனுவில் உள்ள உணவு வகைகளை நோட்டமிட்டனர்.
டேனி, தான்யாவை கவனித்து கொண்டே தான் இருந்தான். அவன் நினைத்தபடியே விலை குறைவாக இருந்த சிக்கன் ச்சோப் தான் அவள் தேர்வாக இருந்தது. குடிக்கவும் ப்ளேன் வாட்டர் தான் ஆர்டர் செய்தாள். ‘இவ இருக்காளே’ என மனதிற்குள் வைதவன், அவளுக்கு பிடித்த லேம்ப் ச்சோப் ஆர்டர் செய்தான். அவர்களது ஆர்டரை எடுத்து விட்டு வேய்டர் உள்ளே சென்றவுடன்,
“ஏன் டான்யா, பார்க்க ரொம்ப டயர்டா இருக்க. தூங்க தானே போவதா சொன்ன?” என கேட்டான் டேனி.
“அதுக்கு அப்புறம் தூக்கம் வரல டேனி. அவங்க சொன்ன ப்ரீ மசாஜ்க்கு போய்ட்டு வந்தேன்.”
“மசாஜ்க்கு போனா நல்ல ப்ரஷ்சா வருவாங்கன்னா, நீ ஏன் இப்படி தெறிச்சு போய் இருக்க. என்ன நடந்தது?” என கேட்டாள் லிண்டா.
“என்ன நடந்ததா? அந்த மசாஜ் பண்ணுற பொண்ணு என் மேல ஏறி நடந்தா. அது தான் நடந்தது.”
அதை கேட்ட நண்பர்கள் இவரும் தான்யாவை சிரித்து சிரித்து ஓட்டி எடுத்து விட்டார்கள்.
டேனிதான் அவர்களை அடக்கி,
“நீ விவரமா சொல்லு டான்யா”
“போன்ல புக் பண்ணுற போது டிரடிசியனல் மசாஜ் வேணுமா, இல்ல தாய்(தாய்லண்ட்) மசாஜ் வேணுமான்னு கேட்டாங்க. முதல்ல சொன்ன மசாஜ் நம்ம பாட்டிமார்கள் செய்யுற மசாஜ் போல, போறதே போறோம் புதுசா தாய் மசாஜ் போவோம்னு அதையே புக் பண்ணிட்டேன்”
“அப்புறம் என்னாச்சு?” என சிரித்தபடியே ஊக்கினான் ரஹ்மான்.
“நான் நொந்து நூடுல்ஸா வந்திருக்கேன். உனக்கு காமெடியா இருக்கா? அப்புறம் என்ன, இவங்கதான் உங்களுக்கு மசாஜ் செய்வாங்கன்னு ஒரு பொண்ண அறிமுகம் செஞ்சாங்க. அவ இருப்பா ஒரு 60 கிலோ. அந்த பெட்டுல படுக்கறப்பவே கவனிச்சேன். மேல நம்ப பஸ் ஏறுனா பிடிப்போமே கம்பி, அது மாதிரி சிலிங்ல இருந்துச்சு. நான் கண்ணை மூடி படுத்துக்கிட்டேன். கட்டில் மேல அந்த பொண்ணு ஏறுன மாதிரி இருந்தது. நானும் கட்டில்ல உட்கார்ந்து தான் மசாஜ் செய்வாங்க போலன்னு பேசாம படுத்துருந்தேன். தீடீருன்னு முதுகுல பாறாங்கல்லை தூக்கி வச்சது மாதிரி இருந்தது. படக்குன்னு திரும்பி பார்த்தா, அந்த பொண்ணு கம்பிய புடிச்சுகிட்டு என் மேல ஏறி நடக்குதுப்பா. எனக்கு மூச்சே நின்னுருச்சி. இதோ இப்ப இறங்கிருவான்னு நினச்சா, என் கை மேலயும் ஏறி நடக்க ஆரம்பிச்சுட்டா. நான் என்ன தார் ரோடா, அவ ஏறி நடக்க?”
இப்பொழுது டேனியும் சேர்ந்து சிரிக்க ஆரம்பித்து விட்டான்.
“அப்புறம் நான் கத்துன கத்துல, அவ தெறிச்சு போய் கீழ விழுந்துட்டா. மெனேஜரே ஓடி வந்துட்டா என்ன ஏதுன்னு. அப்புறம்தான் தாய் மசாஜ் இப்படிதான் இருக்கும்னு சொல்லி, என்னைய நார்மல் மசாஜ்க்கு அனுப்புனாங்க.”
“இதுக்குதான் இந்த மாதிரி போகுறதுக்கு முன்னாடி, கூகுள் கடவுள கும்பிடனும்னு சொல்லுறது” என கூறி தான்யாவின் முறைப்பை பெற்று கொண்டாள் லிண்டா.
“சரி சரி, போதும் அவள கலாய்ச்சது. நாளைக்கு அவ பேர்த்டே வேற. சாப்பாடு வந்துருச்சி இப்ப சாப்பிடலாம்” என நண்பர்களை திசை திருப்பினான் டேனி. இருந்தாலும் அவன் முகத்திலும் முற்றிலுமாக சிரிப்பு அடங்கவில்லை. ஓங்கி அவன் முதுகில் ஒன்று போட்டாள் தான்யா.
“சிரிக்காம சாப்பிடு. அடைச்சிக்க போகுது”
“டான்யா, உன் சிக்கன் பார்க்க நல்லா இருக்கு. கொஞ்சம் குடு.”
“டேய், ஏன்டா இப்படி செய்யுற. நீயும் சிக்கன் ஆர்டர் பண்ண வேண்டியது தானே. எப்ப பாரு இதுவே உனக்கு பழக்கமா இருக்கு” என ஏசியபடியே பெரிய துண்டாக வெட்டி அவனுக்கு வைத்தாள்.
“இந்தா உனக்கு லேம்ப். அப்புறம் உன்னோட சாப்பாடெல்லாம் நான் சாப்பிட்டு முடிச்சுட்டேன்னு புலம்புவ” என்றவாரே அவனும் பெரிய துண்டாக வெட்டி அவளுக்கு வைத்தான். அவள் ருசித்து சாப்பிடுவதை திருப்தியோடு பார்த்திருந்தான் டேனி.’இவளுக்கு பிடிச்ச சாப்பாட்டை குடுக்க என்ன ட்ரிக்கேல்லாம் செய்ய வேண்டி இருக்கு’.
அவர்கள் மெதுவாக சாப்பிட்டு முடித்து கதை பேசி கொண்டிருந்தார்கள். மணி பண்ணிரண்டை நெருங்கி கொண்டிருந்தது. அவரவர் ஆர்டர் செய்த உணவுக்கு டேனியிடம் பணத்தை கொடுத்தனர். டேனி மொத்தமாக கவுண்டரில் சென்று கட்டி விட்டு வந்தான். அவர்கள் வெளியேற எத்தனிக்கும்போது, அந்த கடையின் வெயிட்டர் ஒரு கேக்குடன் அவர்கள் அருகே வந்தான்.
“மேம், நீங்க பேர்த்டேன்னு பேசிகிட்டு இருந்தது எனக்கு கேட்டது. இந்த கேக் எங்க இன் ஹவுஸ் கிப்ட் உங்களுக்கு” என சொல்லியபடியே மேசையில் அந்த ஓரீயோ ச்சீஸ்கேக்கை வைத்தான்.
தான்யா, அவள் நண்பர்களை முறைத்துப்பார்த்தாள்,
“டான்யா, சத்தியமா நாங்க இதை ஏற்பாடு செய்யல. இவங்களே தான் குடுக்குறாங்க. நீ கேக் வெட்டி செலெபரேட் பண்ண மாட்டேன்னு எங்களுக்கு தெரியாதா?” என பதறினான் டேனி.
“இந்த வருஷத்தோட உனக்கு 21 வது வயசு ஆரம்பிக்குது. இன்னும் என்ன சின்ன பிள்ளை மாதிரி பிடிவாதம்.கேக்கை வெட்டு டான்யா” என வற்புறுத்தினாள் லிண்டா. அந்த ரேஸ்டாரண்டின் வெயிட்டர்கள் மற்றும் பக்கத்து மேசை ஆட்கள் அனைவரும் அவர்கள் மேசை அருகே குழுமிவிட்டனர். வேறு வழியில்லாமல் தான்யா, மெழுகுவர்த்தியை ஊதி கேக்கை வெட்டினாள். எல்லோரும் பிறந்தநாள் வாழ்த்து பாடி அவளை வாழ்த்திவிட்டு அவரவர் மேசைக்கு திரும்பி சென்றனர். தங்களுக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டு மீதி கேக்கை எல்லோருக்கும் பகிர்ந்தளிக்க கூறினான் ரஹ்மான்.
அவளது பங்கு கேக்கை வெறித்தபடி அமர்ந்திருந்த தான்யாவை உலுக்கினான் டேனி.
“சாப்பிடு டான்யா. இந்த கேக் என்ன பாவம் பண்ணுச்சி?”
டேனியை நிமிர்ந்து பார்த்த தானுவின் கண்கள் கலங்கி இருந்தன. அவளது கண்களை மென்மையாக துடைத்துவிட்ட டேனி, தானே அவளுக்கு கேக்கை ஊட்டிவிட்டான். மற்ற இருவருக்கும் முன் அவர்கள் வேறு ஒன்றும் பேசி கொள்ளவில்லை.
கடற்கரை காற்றை அனுபவித்தபடி மெதுவாக ஹோட்டலுக்கு நடந்து சென்றார்கள் நண்பர்கள் நால்வரும். ஐந்தாவது தளத்தில் மற்ற இருவரும் இறங்கி கொள்ள, தான்யாவை அவளது தளத்தில் விட்டுவருவதாக சொன்ன டேனி அவளுடனே சென்றான்.
“டான்யா. அப்பா ஞாபகம் வந்துருச்சா? இப்படி நீ கலங்கறதுல அர்த்தமே இல்லை. விட்டுட்டு போனவரை நினைச்சு உன்னையும் உன்னை சுற்றி இருக்கறவங்களையும் நீ வதைக்கிறது நியாயம் இல்லை.”
“டேனி, என்னோட ஐந்து வயது வரைக்கும் பிறந்த நாள்னா அவரு தடபுடல் பண்ணிருவாரு. நிறைய பொம்மைகள், புத்தகங்கள் , திண்பண்டங்கள் என வாங்கி குவிச்சுருவாரு. என்னை தூக்கி வச்சுகிட்டு, கையை பிடிச்சு அவரே கேக்கை வெட்டுவாரு. இப்படி இருந்துட்டு எப்படிடா சட்டுன்னு தூக்கி எறிய முடிஞ்சது? என்னால முடியலை டேனி.” என தேம்பினாள்.
“பேர்த்டே பேபி அழ கூடாது. உனக்காக நாங்க இருக்கோம். கூட இருக்கறவங்களை நினச்சி நீ ஆனந்தப் படனுமே தவிர இல்லாதவங்கள நினைச்சு துக்கப்படகூடாது. கவுன்ட் யுவர் பிலேஸ்சிங் டியர்” என அணைத்து சமாதான படுத்தினான் டேனி.
“சரி அழ மாட்டேன். இதுதான் சாக்குன்னு ஓரே அட்வைஸ் மழையை பொழியாதே. என் ரூம் வந்துருச்சி. குட் நைட்.”
“இரு டான்யா. உனக்கு ஒரு கிப்ட் வாங்கி வச்சிருக்கேன்.” என பேன்ட் பாக்கேட்டில் இருந்து ஒரு நகை பெட்டியை எடுத்தான் டேனி.
“டேய், நகையெல்லாம் வேணாம். இப்படி செலவு பண்ணாதென்னு எத்தனை தடவை சொல்லுறது?” என கடிந்து கொண்டாள் தான்யா.
“இது சில்வர் தான் டான்யா சாயாங்.” என அவளிடம் பெட்டியை நீட்டினான் டேனி.
அந்த பெட்டியுள் அழகிய சங்கிலியும் சாவி வடிவில் ஒரு பெண்டனும் இருந்தது.
“வாவ், லவ்லி டேனி. ரொம்ப அழகா இருக்கு. “
“உன்னோட சுதந்திரத்துக்கு கொடுக்கபட்ட சாவி இது. இனிமே உன் வாழ்க்கையின் முடிவுகளை நீயே நல்லபடியா யோசிச்சு எடுக்கறதுக்கு, எனது வாழ்த்துக்கள் டான்யா”
“ரொம்ப தேங்க்ஸ் டேனி” என்றவாரே அந்த சில்வர் சங்கிலியையும் பென்டனையும் திருப்பி திருப்பி பார்த்தாள் தான்யா.
‘அய்யோ போச்சுடா. இது சில்வர் இல்லை பிலேட்டினம்னு கண்டுபிடிச்சுருவாளோ. தங்கத்தோட விலை அதிகமான பிலேட்டினம் இதுன்னு தெரிஞ்சதுனா என்னை பிச்சுருவாளே’ என பயந்தபடியே.
“என்னத்தை வளைச்சு வளைச்சு பார்க்கிற? குடு நான் போட்டு விடறேன்” என அவள் கையிலிருந்ததை பிடுங்கி கழுத்தில் அணிவித்துவிட்டான் டேனி.
“இதை என்னிக்கும் கழுத்தில இருந்து கழுட்ட கூடாது. ஓகேவா டான்யா?” என கேட்டு அவளது தலையாட்டலையும் பெற்று கொண்டான்.
“சரி கிளம்பு. நான் தூங்கனும். எவ்வளவு நேரம் தான் கதவு வெளிய நின்னு பேசிக்கிட்டு இருக்கிறது” என அவனை கிளப்பினாள் தான்யா.
மெதுவாக நடந்து கொண்டே,
“டான்யா, எனக்கு ஒரு சந்தேகம்” என கேட்டான் டேனி.
“கேட்டு தொலை”
“உங்க முறைப்படி ஒரு பெண் கழுத்துல ஒரு ஆண் இப்படி சங்கிலி போட்டு விட்டா, அவன்தான் அவளுக்கு புருஷனாமே? அப்படினா இனிமே நீ என் வைப்பா?” என பின்னால் அடி எடுத்து நகர்ந்தபடியே கேட்டான் டேனி.
“டேய் படவா. உனக்கு இப்படி ஒரு நினைப்பு வேற இருக்கா. அங்கேயே நில்லுடா வரேன்” என்றபடியே அவனை துரத்திக்கொண்டு ஓடினாள் தான்யா.
அவள் கைக்கு அகப்படாமல், ஓடி சென்று லிப்டுக்குள் புகுந்து கொண்டு, நாக்கை துருத்தி காட்டினான் டேனி. அவள் வருவதற்குள் லிப்ட் கதவுகள் மூடி கொண்டன.
“மவனே, என் கையில கிடைச்ச காலிடா நீ” என சிரித்தபடி கத்தியவள் திரும்பி ரூமை நோக்கி நடந்தாள். அங்கே ரூமின் அருகே அந்த சங்கிலி விழுந்து கிடந்தது.
‘அட பாவி! ஒரு கொக்கியை கூட ஒழுங்கா மாட்ட தெரியலை, இவனுக்கு வாயை பாரு’ என செல்லமாக திட்டியபடியே தானே அந்த சங்கிலியை எடுத்து அணிந்து கொண்டாள்.
பல் துலக்கி விட்டு, அவளது கார்ட்டூன் நைட்டியை அணிந்து கொண்டு படுக்கையில் அமர்ந்தாள் தான்யா. பிறகுதான் சைலன்ட் போடில் போட்டிருந்த போனை வெளியில் எடுத்து பார்த்தாள் அவள். கற்பகம் அழைத்திருந்தார். அவள் அழைப்பை எடுக்காததனால், பிறந்தநாள் வாழ்த்தை குறுந்தகவலாக அனுப்பி இருந்தார். இப்பொழுது தூங்கி இருப்பார் என்பதால் காலையில் போன் செய்யலாம் என முவெடுத்தாள் அவள். தருணிடம் இருந்தும், பிரபுவிடம் இருந்தும் வாழ்த்து வந்திருந்தது.
‘இது என்ன புது நம்பரா இருக்கு’ என வாட்ஸ்ஆப்பை திறந்து பார்த்தாள் அவள்.
“பிறந்த நாள் கொண்டாடும்
என் அழகிய ரோஜாவுக்கு
உன்னை கண்ணின் மணியாய்
பாதுகாக்க நினைக்கும்
இந்த முள்ளின் நல்வாழ்த்துக்கள்”
காதலுடன்,
உன் வேணு
திரும்ப திரும்ப அந்த கவிதையை படித்துப் பார்த்தாள் தான்யா. அதற்கு மட்டும் ரிப்ளை செய்யாமல், உதட்டில் முறுவலுடன் தூங்கி போனாள்.
விடிகாலை மூன்று மணி வாக்கில், தான்யா அறையில் இருந்த அந்த கொன்னக்டிங் டோரை மெதுவாக திறந்தது கொண்டு கட்டிலருகே வந்து நின்றது ஒரு உருவம். ஆழ்ந்து உறங்கும் தனது அன்பிற்கினியவளை பார்த்து நின்று கொண்டிருந்தது வேறு யாரும் இல்லை. நம் வேணு விபாகர் தான்.
எட்டி நில்லு….