Jeevan 31(2)
Jeevan 31(2)
ஆரன் கௌதமிடம் எதை சொல்ல வேண்டும், தன் மீது தவறில்லை என்பதை நிருபிக்க வேண்டும் என நினைத்தானோ அதை செய்துவிட்ட ஆசுவாசம் கிடைத்த நொடி, கௌதம் செய்த துரோகம் நினைவில் எழ, அவனிடமிருந்து விலகி நின்றவன், “இதுவரைக்கும், நா உனக்கு துரோகம் செஞ்சதா, நீ நினச்சிட்டு இருந்த விசயம் இப்ப பொய்யின்னு நிருபிச்சிட்டேன்..! ஆனா, நீ செஞ்சிட்டு போன துரோகத்தோட விளைவ எப்ப அனுபவிக்க போற கௌதம்…!” என்று கேட்க,
“வாட்…!!! துரோகமா.. நானா.. என்னடா சொல்ற.. ?!” என்று கேட்டவனின், கரத்தில் ஆரன் கொடுத்தை பார்த்தவுடன், அதிர்ச்சியில் பட்டென எழுந்தவன், பார்வை அதிலேயே நிலைத்திட, மெல்ல அவனின் கண்ணில் வழிந்த கண்ணீர் அவன் கரத்திலிருந்த படத்தில் விழுந்து தெரித்தது.
*********
ஆரன், காயத்ரி இருவரின் விசயமும் ஊடகத்தின் வாயிலாக, தெரிந்து சாமுவேல் வருவதற்குள், அனைத்தும் நடந்துவிட, இனி சட்டரீதியாக மட்டுமே அனைத்தையும் சரியாக்க வேண்டிய நிலையில், மிக பெரிய வக்கீலிடம் சென்று ஆலோசனை நடத்தினார்.
அவரோ.. “சார், உங்க பையனையும், அந்த பொண்ணையும் கையும், களவுமா பிடிச்சிருக்காங்க. இப்ப, அவங்கள காப்பாத்தனுமின்னா, ஒன்னு… அந்த பொண்ணும், உங்க பையனும் ஒருத்தர ஒருத்தர் விரும்பி, ‘லிவ்விங் டூகதர்’ல இருக்கறதா சொல்லலாம். ரெண்டு பேரும் மேஜர். சோ, இது அவங்க தனிப்பட்ட விருப்பமுன்னு வாதாடி வெளிய கொண்டு வந்திடலாம்” என சொல்ல, கேட்ட சாமுவேலுக்கு காயத்ரி, கௌதம் இருவரின் காதலும் தெரியும் என்பதால், அவரால் அதற்கு ஒத்துக்கொள்ள முடியவில்லை.
தன் மகன் மீது மட்டுமல்ல, காயத்ரி மீதும் அவருக்கு இருந்த அபரிமிதமான நம்பிக்கையால், அந்த வக்கீல் சொன்ன இரண்டாவது விசயத்தின் மூலம் தீர்வு காண்பது என்ற முடிவோடு ஆரனையும், காயத்ரியையும் சந்திக்க ஜெயிலுக்கு சென்றார்.
ஜெயிலுக்கு வந்து, இருவரையும் சந்திப்பதற்கு வேண்டிய முறையான அனுமதியை பெற்று காத்திருந்தவரின் முன் வந்த ஆரனை கண்டு, அவரின் மனம் ரத்தகண்ணீர் விடுத்தாலும், தான் உடைந்து போனது தெரிந்தால், இன்னும் அவன் வேதனை கூடுமே! என்ற எண்ணத்தில், கஷ்டப்பட்டு தன்னை சீராக்கிக்கொண்டார்.
சாமுவேலிடம் வந்த ஆரன், அவரை தழுவிக்கொண்டு, “ப்பா, நா தப்பு பண்ணியிருக்க மாட்டேன்னு நம்பறீங்களா?!” என கேட்க, அவனை அணைத்தபடியே, “ஆம்..!” என தலையசைத்தவரை, மேலும் இறுக்கி அணைத்துக்கொண்டவன்,
“இங்க எல்லாரும் தப்பு தப்பா பேசறாங்கப்பா! ‘அவனோட தலையும் ஆளும் பார்த்தாலே தெரியுது, இவன் இப்படியா தான் இருப்பான்னு!’ சொல்றாங்கப்பா…பிசிகல் அப்பியரன்ஸ் க்கு எத்தன தூரம், இந்த சமுதாயம் முக்கியத்துவம் கொடுக்குதுன்னு, இந்த சில நாள்ல, நல்லா… வலிக்க வலிக்க புரிய வச்சிட்டாங்கப்பா. எனக்கு இங்க இருக்கவே முடியல. ப்ளீஸ், எப்படியாவது கூட்டிட்டு போயிடுப்பா…!” என பயத்தோடு நடுங்கி கூறும் ஆரனை, அப்போது அவரால் 24 வயது வாலிபனாய் நினைக்க முடியவில்லை. தன்னிடம், முதன் முறை பள்ளி செல்ல அழுத, அதே ஆரனாய் தான் தெரிந்தான் அந்த பாசக்கார தந்தைக்கு..
“ஆரா, செல்லம், இங்க பாரு! என்ன ஆனாலும், உன்ன வெளிய கொண்டு வராம, விடமாட்டேன். நீ பயப்படாத.. உன்னையும், காயத்ரியையும் வெளிய எடுக்க, என்ன செய்யாமின்னு வக்கீல பார்த்து பேசிட்டு தான் வர்றேன். ஆம்பள, நீயே இப்படி இருந்தா.. பாவம் காயத்ரி, எப்படி இத தாங்கிப்பான்னு யோசிச்சியா..?!” என கேட்ட பின்பே,
‘அதானே, தனக்கே இப்படி என்றால், இது போன்ற பேச்சுக்களை கேட்கும் காயத்ரியின் நிலையை நினைத்து இப்போது பெரும் வேதனையாகி போனது ஆரனுக்கு.. !’ இதுவரை தன்னை மட்டுமே யோசித்தவனுக்கு, அவளின் நிலை தன்னைவிட மோசம் என்பது விளங்க, தன்னையே மீட்டுக் கொண்டவன்..
“ப்பா .. வக்கீல் என்ன சொன்னாங்க?!” என திடத்தோடு கேட்க, “இருப்பா, காயத்ரியும் வரட்டும், அப்புறமா சொல்றேன்!” என்று சொல்லும் போதே, அங்கு இந்த சில தினத்திலேயே பாதியாகி, வாழ்க்கையே வெறுத்து போய் நடைபிணம் போல வந்த காயத்ரியை பார்க்க ஆரன், சாமுவேல் இருவரும் மனமே ஆரவில்லை.
அவளிடமும் சிறிது ஆறுதலாய் பேசியவர், வக்கீல் சொன்ன முதல் ஐடியாவை சொல்ல, “ச்சீ! என்னப்பா இது.. ” என அருவருப்பை ஆரன் வெளிப்படையாய் காட்டினான் எனில், காயத்ரியோ பார்வையாலேயே காட்டிட,
“நானும் அந்த யோசனை வேணாமின்னு தான் சொன்னேன். அப்ப தான் அவரு வேற ஒன்னு சொன்னாரு.. அதாவது.. அது வந்து..!” என அதை எப்படி சொல்வது என்ற தயக்கத்தோடு இழுத்தவரை, கேள்வியாக இருவரும் பார்க்க,
தைரியத்தை வரவழைத்து கொண்டவர், “காயத்ரி, ஒரு டெஸ்ட்டுக்கு ஒத்துக்கிட்டா.. இந்த கேஸை வேற மாதிரி கொண்டு போயிடலாமின்னு வக்கீல் சொல்றாரூ..!” என சொல்ல,
கேட்ட இருவருக்கும், எதுவும் புரியாது ‘என்ன டெஸ்ட்?! அதான் அன்னைக்கே எடுத்தாங்களே!’ என்பது போல பார்க்க, காயத்ரியின் முகம் பார்க்காமல் திரும்பிய படி, “அது வந்து.. காயத்ரி இன்னும் கன்னி பொண்ணு தான்னு, ப்ரூப் பண்ணறதுக்கு வெர்ஜுன் டெஸ்ட் எடுத்து கொடுத்தா.. நீங்க அன்னைக்கி தப்பு செய்யலைன்னு நிருபிக்கலாமின்னு வக்கீல் சொன்னார்” என்ற சாமுவேலின் வார்த்தையில், முதலில் ஆரன் அதிர்ந்தாலும், தங்களின் மீதான குற்றத்தை துடைக்க, இது சரியான வழி தான் என்பது புரிய, காயத்ரியை எதிர்பார்ப்போடு பார்த்தான்.
அப்போது அவளின் கண்ணில் தெரிந்த அச்சமும், பதட்டமும் ஆரனுக்கு எதையோ உணர்த்த, அவளையே கூர்ந்து பார்த்தவனின் பார்வைக்கு பதிலாக, ‘ஆம்!’ என தலையசைத்தாள் காயத்ரி.
சட்டென, தனது நெற்றியில் அறைந்து கொண்ட ஆரனின் செயலில் வேறு புறம் பார்த்திருந்த சாமுவேல் திரும்பிட, “ப்பா, அந்த ஐடியாவ தவிர, வேற எதாவது இருக்கான்னு வக்கீல கேளுங்க?!” என வெடுக்கென சொல்ல, “இல்லப்பா, ஆரா! இது சரியா..” என ஆரம்பித்தவரை தொடரவிடாமல் இடையிட்டு, “இது சரிவராது. வேற பாருங்க!” என அழுத்தமாய் சொன்ன, ஆரனின் பதிலில் அவருக்கும் விசயம் லேசாய் புரிய, “இப்படி செஞ்சிட்டையேடா!” என காயத்ரியை கண்களாலே கேட்டவர்,
‘ம்ஹும்!’ என்ற பெருமூச்சோடு, “சரிப்பா, நா அவர்கிட்ட பேசிட்டு, எவ்வளவு சீக்கிரம் வெளிய எடுக்க முடியுதுன்னு பார்க்கறேன்!” என விடை பெற,
“ப்பா, அப்படியே, கௌதம் ஜெர்மன்ல இருந்து வந்துட்டானான்னு பாருங்க. அவனுக்கு விசயம் எப்படி கண்வே ஆகியிருக்குன்னு தெரியல. அவன் இன்னும் வரலைன்னா, அவங்க ஆபீஸ்ல சதாசிவம் சார போய் பார்த்து, அவன காண்டாக்ட் பண்ணுங்க. அவன் வந்தா எல்லாமே சரியாகிடும்ப்பா..” என சொன்னவனின் வார்த்தையிலேயே, கௌதமை எவ்வளவு தேடுகிறான் என்பது தெளிவாகி போனது சாம்வேலுக்கு.
தாயை பற்றி கூட கேட்காது, தோழனை தேடும் அவனின் மனம் புரிய, “சரி செல்லம். நீ பார்த்தது இரு. எதையும் மனதுல போட்டு குழப்பிக்காத..உனக்கும் சேர்த்து தான் சொல்றேன் காயத்ரி, தேவையில்லாம மனச போட்டு குழப்பிக்காத!” என்று சொல்லி விடை பெற்றார்.
காயத்ரியோ, கௌதமின் பெயரை கேட்டதும், கண்ணில் நீர் வடிய நின்றவள், சாமுவேலுக்கு தலையசைத்த படியே தனது அழுகையே தொடர, “காயு, இங்க பாரு. நடந்தது நடந்திடுச்சு, இனி அதை சரி பண்ண தான் பார்க்கணுமே ஒழிய, அதுலையே மூழ்கிட கூடாது. போ, அதான் அப்பா பார்த்துக்கறேன்னு சொல்லிட்டாங்களே… டேக் கேர்!” என்றவன், மனதிலேயே கௌதமை வருத்தெடுத்த படி, தனது பகுதிக்கு சென்றான்.
////
சாமுவேலின் நீண்ட போராட்டத்திற்கு பின், ஒருவழியாய் ஜாமினில் இருவரும் வெளி வர பத்து நாட்கள் ஆகியிருந்தது.
ஜெயிலிலிருந்து வெளிவந்ததும் முதலில் ஆரன் கேட்ட கேள்வியே, “கௌதம காண்டாக்ட் பண்ணீங்களா?! அவன் ஏன் என்னையும் காயத்ரியும் பார்க்க வரல?!” என்பதே. ஆரன் வார்த்தையால் கேட்டதையை, கண்களில் பிரதிபலிக்க நின்றிருந்தாள் காயத்ரி.
“வா ஆரா, காருல போகும் போது சொல்றேன்!” என்று இருவரையும் அழைத்து வந்தவர், “நீ சொன்னதுல இருந்து, அவனோட நெம்பருக்கு கால் பண்ணிட்டு தான் இருக்கேன், இதுவரை பேச முடியல. அவனோட வீடு, ஆபிஸ்ல போய் விசாரிச்சேன்டா. கௌதம் இன்னும் வரலைங்கற, தகவல் மட்டும் தான் சொல்றாங்க. சதாசிவத்த பார்க்க கூட, அலோவ் பண்ணல என்னை!” என சொன்னதும், ஒரு நொடி திகைத்தாலும்,
“ப்பா, கௌதம் இல்லாத நேரத்துல, அவரு தானே எல்லாத்தையும் பார்க்கணும். அந்த டென்ஷன்ல சொல்லியிருப்பாரு. நா போய், நாளைக்கி அவர பார்த்துட்டு.. கௌதம் பத்தி தெரிஞ்சிட்டு வர்றேன்!” என காயத்ரியை பார்த்தவாரே சொன்னான், அவளின் எதிர்பார்ப்பை உணர்ந்தது போல…
வீட்டிற்கு வந்து இறங்கியதும், காரிலிருந்து இறங்கிய ஆரனை தழுவிக்கொண்ட ஜெனி.. “இப்படி ஆகவாடா.. அவ்வளவு செல்லமா உன்ன வளர்த்தேன்!” என கதற..
“ஜெனிம்மா… அதான் வந்துட்டேனே.. நல்லபடியா..!” என அவரே தேற்றியவன், “வாங்க உள்ள போலாம்” என்று சொல்லிவிட்டு, “காயத்ரி வா.. !” என அழைக்க, அதுவரை பொறுமையாய் மகனின் மீது இருக்கும் பாசத்தை காட்டியவராய் இருந்தவர், “யார கூப்பிடற உள்ள..! இந்த ********* யா?!” என சொன்ன வார்த்தையில் அதிர்ந்த ஆரன்,
“அம்மா…!!! என்ன வார்த்த சொன்ன..?! எப்படிம்மா… இவள பார்த்து, இப்படி ஒரு வார்த்த சொல்ல முடுஞ்சுது உங்களால..?!” என பதட்டத்தோடு கேட்டபடியே, காயத்ரியே பார்க்க, ஏற்கனவே இது போன்ற பல பேர்களை கேட்டு கேட்டு நொந்து போய் வந்தவள், ஜெனியின் வார்த்தையில் மேலும் துவண்டு போக, அந்த இடத்திலேயே மயங்கி சரிந்தாள்.
“காயத்ரி..!” என்றபடி அவளிடம் விரைந்தவன், அவளின் தலையை மடியில் தாங்கி, கன்னத்தை தட்டி எழுப்ப செய்த முயற்சியாவும் வீணாகி போக, சாமுவேலும், ஜெனியின் வார்த்தையில் அதிர்ந்து நின்றவர், இப்போது அதை பேசும் நேரமில்லை என்பதை உணர்ந்து, “ஆரா, காயத்ரிய காருல ஏத்து ஹாஸ்பிடல் கொண்டு போயிடலாம்..!” என்ற படி காரில் ஏற, கார் பக்கத்திலிருந்த தனியார் ஹாஸ்பிடலை நோக்கி பறந்தது.
அங்கு காயத்ரியை பரிசோதித்த மருத்துவர் சொன்னதை கேட்டதும் ஆரனுக்கும், சாமுவேலுக்கும் எப்படி அதை எடுத்துக்கொள்வது என்றே புரியவில்லை.
மெல்ல கண்விழித்த காயத்ரி, தான் இருக்கும் இடத்தை உணர்ந்து கேள்வியாய் ஆரனை பார்க்க, வேறு வழியின்றி.. “நீ அம்மாவாக போற.. காயத்ரி..!” என சொல்ல, ‘ஒரு நொடி, சந்தோஷத்தில மிதந்தவள், தனது வயிற்றில் கை வைக்க, அடுத்த நொடி இப்போது தான் சுமக்கும் அவபெயரோடு இந்த சிசுவும் சேர்ந்தால்..!’ என்ற எண்ணம் எழ.. வாய்விட்டுச் சொல்ல முடியாத அவளின் நிலையை, அவளின் கதறல் வெளிப்படுத்தியது கண்டு, அந்த அறையிலிருந்த, இரு ஆடவருமே உயிரோடு மரித்த நிலைக்கு போயினர்.
மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வரும் போது மீண்டும், ஜெனி பிரச்சனை செய்ய, ஆரன் மற்றும் சாமுவேலின் கண்டிப்பினால் வாயை மூடிக்கொண்டாலும், வார்த்தையால் அவ்வப்போது வதைப்பதை வாடிக்கையாக்கி கொண்டார். வந்த ஒரே நாளில் கேட்க கூடாத வார்த்தை அனைத்தையும் கேட்டவள், அங்கே இருப்பது, இன்னும் கோவலமாய் தோன்ற.. யாருக்கும் சொல்லாமல் இரவோடு இரவாக மாயமாகி போனாள்..