Mohana punnagaiyil 11
Mohana punnagaiyil 11
மோகனப் புன்னகையில் 11
பாத்ரூமை விட்டு வெளியே வந்தாள் சுமித்ரா. விஜயேந்திரன் இன்னும் ஆழ்ந்த உறக்கத்தில் தான் இருந்தான். கலைந்திருந்த தலைமுடி நெற்றியில் புரள குழந்தை போல உறங்கிக் கொண்டிருந்தவன் முகத்தில் அத்தனை மென்மை.
மென்மைக்கு மட்டும் அவன் சொந்தக்காரன் அல்ல என்று நேற்றிரவு அவளுக்குக் காட்டி இருந்தான்.
மனம் மலர்ந்து புன்னகைத்தாள் சுமித்ரா. கூந்தல் ஈரமாக இருக்கவும் கை அது பாட்டில் உலர்த்திக் கொண்டிருந்தது. கூந்தலைப் பின்னல் போடாமல் தளர்த்தி விட்டால் விஜயேந்திரனுக்கு அவ்வளவு பிடிக்கும்.
குங்குமத்தை வைத்து விட்டு நிமிர கதவு தட்டும் ஓசை கேட்டது. அவசரமாக எழுந்து போய் கதவைத் திறந்தாள். கங்கா தான் நின்றிருந்தாள். வழமை போல கையில் ஒரு கப் காஃபி.
“கங்கா!”
“சொல்லுங்கம்மா?”
“ஐயாக்கும் சேர்த்து காஃபி கொண்டு வர்றியா?” சுமித்ரா சொன்னது முதலில் கங்காவிற்குப் புரியவில்லை. புரிந்த போது வாயெல்லாம் பல்லாகிப் போனது.
“ஐயா இப்போ தூங்குறாங்க. கெட்டில் ல கொண்டு வா.”
“சரிம்மா. அப்போ பூ?” இப்போது குறும்பாகக் கண் சிமிட்டினாள் கங்கா.
“அடி வாங்கப் போறே நீ!” இவள் அடிக்கக் கையை ஓங்கவும் காஃபியோடு ஓடி விட்டாள் கங்கா.
“என்ன காலங்காத்தால ரெண்டு பேரும் ஓடிப் பிடிச்சு விளையாடுறீங்க?” கேட்டபடியே சுமித்ராவின் ரூமிற்குள் எப்போதும் போல நுழைந்தார் கோதை நாயகி. மருமகனை அங்கே அவர் எதிர்பார்க்கவில்லை.
கட்டிலின் திரைக்குப் பின்னால் விஜயேந்திரன் தூங்குவது தெரியவும் ஒரே ஓட்டமாக வெளியேறி விட்டார் கோதை நாயகி.
“நான் அப்புறம் வர்றேன் சுமித்ரா.” வாய் தானாகச் சொல்லி இருந்தது.
சுமித்ராவிற்குத் தான் என்னவோ போல் ஆகிவிட்டது. அத்தனைக்கும் காரணமானவன் நிம்மதியாகத் தூங்குகிறான். அவள் பாடுதான் திண்டாட்டம் ஆகிவிட்டது.
சத்தம் செய்யாமல் லேசாக ஒப்பனை பண்ணிக் கொண்டாள். புடவையை எடுக்கும் போதும் அழகானதொரு நீல நிறப் பட்டைத் தான் கை தேர்ந்தெடுத்திருந்தது.
கண்களுக்கு லேசாக மை தடவிக் கொண்டாள். இந்தக் கண்கள் தான் அவனைச் சுண்டி இழுக்கின்றதாம். இரவு முழுவதும் அவன் புலம்பிய வார்த்தைகள் இது.
கதவு மீண்டும் தட்டப்படும் ஓசை கேட்கவும் அவசரமாக ஓடிப்போய்த் திறந்தாள் சுமித்ரா. மீண்டும் கங்கா தான் நின்றிருந்தாள். கையில் ட்ரே இருந்தது.
வாங்கிக் கொண்டு இவள் உள்ளே நுழையும் போது விஜயேந்திரன் விழித்திருந்தான்.
“குட்மார்னிங் அம்மு.”
“குட்மார்னிங்.” குரலே எழும்பவில்லை சுமித்ராவிற்கு. டேபிளில் ட்ரேயை வைத்தவள்,
“காஃபி.” என்றாள். கட்டிலின் திரையை மெதுவாக விலக்கி விட்டாள்.
“அதை இப்படியா சொல்லுவாங்க?”
“வேற எப்படிச் சொல்லுவாங்க?”
“காஃபி, டீ, ஆர் மீ? இப்படிச் சொல்லுவாங்க.” எட்டி அவள் கையைப் பிடித்தவன் அவளை இழுத்துத் தனக்குப் பக்கத்தில் போட்டுக் கொண்டான். விடுபட அவளால் முடியவில்லை.
“நேரம் எட்டு மணி.”
“இருக்கட்டும், பரவாயில்லை.”
“சித்தி வேற வந்தாங்க.”
“என்னவாம்?”
“தெரியலை. வந்தாங்க… உங்களைப் பார்த்ததும் விழுந்தடிச்சிக்கிட்டு ஓடிட்டாங்க.”
“ஹா… ஹா… பரவாயில்லை… நம்ம மருமகன் தேறிருவான்னு நினைச்சிருப்பாங்க.” பேசிய படியே அவன் கை எல்லை மீறவும் தவித்துப் போனாள் சுமித்ரா.
“ப்ளீஸ்… போய் குளிச்சிட்டு வாங்க. கங்கா கூட கேலி பண்ணிட்டுப் போறா.” அவள் கெஞ்சவும் புன்னகைத்தவன் அவள் கூந்தலுக்குள் கை விட்டு அதன் மென்மையைச் சில நொடிகள் ரசித்தான்.
“காஃபியைக் குடிச்சிட்டுப் போகட்டுமா?”
“ம்…” காஃபியை அவள் நீட்ட வாங்கிக் கொண்டவன் அவளையும் சேர்த்தே பருகினான். அந்தப் பார்வையின் வீரியத்தைத் தாங்க சுமித்ராவால் முடியவில்லை. ட்ரேயில் கங்கா வைத்திருந்த பூவை எடுத்துக் கொண்டு கண்ணாடி முன் சென்று நின்று கொண்டாள்.
விரித்திருந்த கூந்தலைத் தளரப் பின்னியவள் அதில் பூவை வைத்துக் கொண்டாள். காஃபியை முடித்தவன் அங்கிருந்த டவலை எடுக்க,
“அது இல்லை. உங்களோடது இங்க இருக்கு.” அவள் அலமாரியைத் திறக்க அதைக் கணக்கில் கொள்ளாதவன் அவளின் ஈர டவலோடு பாத்ரூமிற்குள் நுழைந்தான்.
அங்கிருந்த பெரிய அலமாரியில் அவனுக்கான பொருட்களும் அடுக்கப்பட்டிருந்தன. வந்த முதல் நாளே அதைக் கவனித்திருந்தாள் சுமித்ரா. இன்று தான் அவற்றிற்கெல்லாம் தேவை வந்திருந்தது.
காலை உணவும் அறைக்கே வந்து சேரவும் இருவரும் உண்டு முடித்தார்கள்.
“அம்மு, எனக்கு இன்னைக்குக் கொஞ்சம் வேலை இருக்கு. வர லேட் ஆகலாம். ஈவ்னிங் உங்க வீட்டுக்குப் போகணும் ரெடியா இரு.”
“ம்…” சொன்னவள் முகத்தை ஆழ்ந்து பார்த்தான் விஜயேந்திரன்.
“என்னாச்சு? ஏதாவது சொல்லணுமா அம்மு?”
“எனக்கு… எனக்கு அத்தான் கூடப் பேசணும்.”
“என்ன திடீர்னு?”
“இல்லை… என்னதான் அத்தான் குடும்பம் குழந்தைன்னு வாழ்ந்தாலும் அவங்க மனசுல நான் சந்தோஷமா இல்லையேங்கிற கவலை நிறையவே இருக்கு.”
“ம்…” மேலே சொல் என்பது போல அவளையே பார்த்திருந்தான் விஜயேந்திரன்.
“அத்தான் கிட்ட… அத்தான் கிட்ட சொல்லணும். நீங்க கவலைப் படாதீங்க அத்தான்னு சொல்லணும்.” தலையைக் குனிந்த படி அவள் தயங்கித் தயங்கிச் சொல்ல விஜயேந்திரனின் முகத்தில் புன்னகை அரும்பியது.
ஒற்றைக் கையை நீட்டி அவள் கன்னத்தை வருடிக் கொடுத்தவன்,
“ஏற்பாடு பண்ணுறேன்.” என்றான்.
விஜயேந்திரன் ரூமை விட்டு வெளியே வரவும் சுமித்ராவும் வாசல் வரை கூட வந்தாள். மனைவியிடம் தலையசைத்து விடைபெற்றுக் கொண்டவன் வெளியே வர எதிரே நின்று பேசிக் கொண்டிருந்தது அமிழ்தவல்லி. கூடவே நின்றது கோதை நாயகி.
மருமகன் அந்தப் புரத்தில் இருப்பது கோதைக்குத் தெரிந்திருந்தாலும் அமிழ்தவல்லியிடம் அதை அவர் பகிர்ந்து கொள்ளவில்லை.
மகனைக் கண்ட மாத்திரத்தில் அமிழ்தவல்லியின் முகம் மலர்ந்து போனது. கோதை நாயகியைத் திரும்பிப் பார்க்க அவர் ‘எனக்குத் தெரியும்’ என்பதைப் போலப் புன்னகைத்தார்.
“கோதை!” சற்று உரக்கவே அழைத்தார் அமிழ்தவல்லி. வேட்டியை ஒரு கையால் உயர்த்திப் பிடித்த படி அவர்களைக் கடந்த விஜயேந்திரனின் நடையில் வேகம் குறைந்தது.
“அரண்மனையில, ஃபாக்டரியில, மில்லுல வேலை செய்யுற எல்லாருக்கும் துணி மணி எடுத்துக் குடுக்கணும். அதுக்கு ஏற்பாடு பண்ணச் சொல்லு உன்னோட மருமகன் கிட்ட.”
குரலில் அத்தனை உற்சாகம். செய்தி தனக்கானது என்று புரிந்து கொண்ட அரண்மனைக் காரன் ஒரு புன்னகையோடு நகர்ந்து விட்டான். சுமித்ரா தான் திகைத்துப் போனாள்.
‘என்ன நடக்கிறது இங்கே? பேசுவது தனது மாமியார் தானா?’ முழித்துக் கொண்டு நின்றவளை ஒரு பார்வை பார்த்து விட்டு நகர்ந்து விட்டார் அமிழ்தவல்லி.
“சுமித்ரா.” அவளை நோக்கி வந்த கோதை நாயகி அவள் கன்னம் வழித்து முத்தமிட்டுக் கொண்டார்.
“ரொம்ப சந்தோஷமா இருக்கு ம்மா.” அவர் சொன்னதின் அர்த்தம் புரிய தலையைக் குனிந்து கொண்டாள் இளையவள்.
“அண்ணியோட சந்தோஷத்தைப் பார்த்தியா?”
“ஆச்சரியமாத்தான் இருக்கு சித்தி!”
“ம்ஹூம்… அது அப்படி இல்லைம்மா. எல்லா அம்மாவுமே தன்னோட குழந்தைங்க சந்தோஷமா இருக்கணும்னு தான் எதிர் பார்ப்பாங்க. என்ன? இவங்க கொஞ்சம் பாரம்பரியம், குடும்பம், தராதரம் இதெல்லாம் பார்ப்பாங்க. மத்தப்படி கெட்டவங்க கிடையாதும்மா.”
“சரி சித்தி.”
“பார்த்தியா! சொல்ல வந்ததைச் சொல்லாம என்னென்னவோ பேசிக்கிட்டு இருக்கேன்.”
“சொல்லுங்க சித்தி.”
“நானும் மங்கையும் இன்னைக்கு ஊருக்குக் கிளம்பலாம்னு இருக்கோம் ம்மா.”
“ஐயையோ! ஒரு வாரம் இருப்பேன்னு சொன்னீங்களே சித்தி?”
“சொன்னேன் தான். ஆனா இப்போ மங்கையோட அப்பாக்கு உடம்புக்குக் கொஞ்சம் முடியலையாம் சுமித்ரா. லேசான காய்ச்சல் தான். இருந்தாலும் நான் போனா நல்லா இருக்கும் டா.”
“போய்ட்டு வாங்க சித்தி.”
“சரி டா. இப்போ உனக்கு இந்த அரண்மனை கொஞ்சம் பழகிடுச்சு தானே சுமித்ரா? நீ சமாளிச்சிடுவே. அதுவும் என் மருமகன் இப்போ உன்னை நல்லாப் பார்த்துக்குவான்.” கண் சிமிட்டிய படியே சிரித்தார் கோதை நாயகி.
அந்தப் புன்னகை சுமித்ராவையும் தொற்றிக் கொண்டது. கோதை நாயகியும் மங்கையும் மதியத்துக்கு மேல் கிளம்பி விட்டார்கள். விஜயேந்திரன் மதியமும் வீடு திரும்பி இருக்கவில்லை.
‘தோட்டத்துல வேலை அதிகமா இருக்கிறதால தம்பி வரல்லை மா’ என்று கணக்கர் தான் தகவல் சொன்னார். ஒரு நான்கு மணி போல கங்கா வந்து நின்றாள்.
“அம்மா! ஐயா உங்களை மாடிக்கு வரச் சொன்னாங்க.”
“கங்கா!” சேதி சொல்லிவிட்டு நகர்ந்த கங்காவை நிறுத்தினாள் சுமித்ரா.
“என்னம்மா?”
“மேலே போய் உங்க ஐயாவை இங்க வரச்சொல்லு.” சுமித்ராவின் பேச்சில் ஆச்சரியப்பட்டாள் கங்கா. ஐயாவை அவர் அம்மா கூட இப்படி அதட்டியது இல்லையே!
“போ கங்கா.”
“சரிங்கம்மா.” கங்கா ஓடி விட சற்று நேரத்தில் வந்து சேர்ந்தான் விஜயேந்திரன்.
“அம்மு… என்னாச்சு? ஏதாவது ப்ராப்ளமா?”
“சாப்பிட்டீங்களா?”
“ஆமாண்டா. வீட்டுல இருந்து எனக்கு சாப்பாடு வந்திச்சு.”
“ஆனா எனக்கு ஒரு தகவலும் தெரியலை.”
“ஓ… அரண்மனைக்கு அடிக்கடி வர முடியாது சுமித்ரா. அதனால நான் எங்க இருந்தாலும் சாப்பாடு அங்க வந்திரும்.”
“சரி… நீ சாப்பிட்டியான்னு கேக்க மாட்டீங்களா?”
“ஏய்! நீ இன்னும் சாப்பிடலையா?”
“சாப்பிட்டேன்… ஏதோ பெயருக்கு…” குறை பட்டுக் கொண்டவளின் அருகில் வந்தவன் அவள் கன்னத்தை வருடினான்.
“என்ன வேணும் என் அம்முக்கு?”
“எங்க வீட்டுல எல்லாம் அப்பா வீட்டுக்கு வரும் வரை அம்மா சாப்பிட மாட்டாங்க. அது எவ்வளவு நேரம் ஆனாலும் சரிதான்.”
“என்னால அப்படி வேலையை விட்டுவிட்டு வர முடியாதுடா.”
“வரவேண்டாம். அட்லீஸ்ட் என்ன பண்ணுறீங்க? எங்க இருக்கீங்க? சாப்பிட்டீங்களா? ஏதாவது சொல்லி அனுப்பலாம் இல்லை? இன்னைக்கு நான் சாப்பிடாம உக்காந்திருக்கவும் கங்கா என்னை விசித்திரமாப் பார்க்கிறா.”
மனைவியை இழுத்து அணைத்துக் கொண்டான் விஜயேந்திரன். அவளின் தேடல் அவனுக்குப் புரிந்தது. மகிழ்ந்து போனான்.
“இத்தனை நாளும் இதுதான் பழக்கம். தகவல் சொன்னா சாப்பாடு வந்திரும். ஆனா இனி அப்படி இருக்காது. மாத்திக்கிறேன். முடிஞ்ச வரைக்கும் இனி என் பொண்டாட்டி கூட உட்கார்ந்து சாப்பிடுறேன். இல்லைன்னா அவளே எனக்கு சாப்பாடு அனுப்புற மாதிரி பார்த்துக்கிறேன், சரியா?”
“ம்…”
“இப்போ ரெடி ஆகுறீங்களா?” கேட்டவன் குரலில் கேலி.
“ம்…”
அழகான சிவப்புப் பட்டுடுத்தி ஆபரணங்கள் அணிந்து தலை நிறையப் பூவுமாக வெளியே வந்தாள் சுமித்ரா. கூடவே வேஷ்டி சட்டையில் விஜயேந்திரன்.
அமிழ்தவல்லியின் ரூமைக் கடக்கும் போது கணவனின் கை பிடித்துத் தடுத்தாள் சுமித்ரா. அவன் முகத்தில் மறுப்பிருந்தது. ஒரு கெஞ்சல் பார்வை பார்த்து விட்டு அவள் மட்டும் உள்ளே போனாள்.
மனம் தடதடத்தது. வலிக்க ஏதாவது சொல்லி விடுவாரோ என்று பயந்தாலும் சொல்லாமற் போக அவளுக்கு மனம் இடம் கொடுக்கவில்லை.
அமிழ்தவல்லி என்ன நினைத்தாரோ! வாசலில் நின்ற மகனையும் அலங்காரத்தோடு நின்றிருந்த மருமகளையும் ஒரு நொடி பார்த்தவர்,
“போயிட்டு வாங்க.” என்றார். அவர் கால் தொட்டு ஆசீர்வாதம் வாங்கிய சுமித்ரா விட்டால் போதும் என்று ஓடி வந்து விட்டாள்.
விஜயேந்திரன் அவளை முதலில் போஸ்ட் ஆஃபீஸுக்குத்தான் அழைத்துச் சென்றான். ‘என்ன?’ என்பது போல அவள் பார்க்க,
“அதான் காலையில அத்தான் கிட்ட பேசணும்னு சொன்னீங்களே.” என்றான் விஜயேந்திரன் தனது அம்பாஸிடரை நிறுத்திய படி.
இவர்கள் இருவரும் உள்ளே போக அனைத்து வசதிகளும் செய்து கொடுத்தார் போஸ்ட் மாஸ்டர். கரிகாலனோடு ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசிய விஜயேந்திரன் சுமித்ராவை பேசச் சொல்லி விட்டு வெளியே வந்து விட்டான்.
அவர்கள் தனிமையில் குறுக்கிட அவன் விரும்பவில்லை. காரில் சாய்ந்த படி அமைதியாக நின்றிருந்தான். வாழ்க்கை வண்ண மயமாகத் தோன்றியது.
சுமித்ரா சுமித்ரா என்று மனம் கிடந்து அரற்றியது. இத்தனை சீக்கிரமாக அவள் தன்னை ஏற்றுக் கொள்வாள் என்று அவன் நினைத்திருக்கவில்லை.
முதலில் அவளை நெருங்கவே பயப்பட்டான் விஜயேந்திரன். ஆனால் அவன் மேல் அவள் காட்டிய உரிமை அவனுக்குத் தைரியம் கொடுத்திருந்தது.
நேற்று இரவு கூட அவள் சட்டென்று விலகவும் அத்தனை ஏமாற்றமாக இருந்தது அரண்மனைக் காரனுக்கு. வெளியே போய்விடத்தான் திரும்பினான்.
ஆனால் கை பிடித்துத் தடுத்தவள் அவனிடமே தஞ்சமடையவும் அந்தக் காதல்க் கணவன் கள்வனாகிப் போனான்.
இரண்டு கைகளையும் உயர்த்தி சோம்பல் முறித்துக் கொண்டான் விஜயேந்திரன். உடம்பெல்லாம் புது ரத்தம் பாய்ந்தது போல ஒரு உணர்வு.
அந்தக் கருவிழிகள் இரண்டும் கதைபேச அவள் அபிநயம் பிடித்த பொழுதுகளை நினைத்துப் பார்த்தான். அந்தக் கண்களிலும் கால்ச் சதங்கையிலும் தான் அவன் உயிர் இருக்கிறது என்று அவளுக்குச் சொன்னால் புரிந்து கொள்வாளா?
மனமே இல்லாமல் தான் தோட்டத்திற்குக் கிளம்பிப் போனான். முக்கியமான லோட் ஒன்று ஏற்ற வேண்டி இருந்தது. இவன் கூடவே நிற்க வேண்டிய நிலைமை.
“போகலாமா?” மனைவியின் குரலில் கலைந்தான் கணவன்.
“பேசி முடிச்சாச்சா?”
“ம்…” அந்த முகத்தில் அத்தனை மலர்ச்சி. காரை ஸ்டார்ட் பண்ணியவன் நேராக சுமித்ராவின் வீட்டிற்கு முன்னால் நிறுத்தி இருந்தான்.
தில்லை வடிவு பாய்ந்தோடி வாசலுக்கு வந்தார். மருமகளும் மாப்பிள்ளையும் வரப்போகும் தகவல் ஏற்கெனவே தெரிவிக்கப் பட்டிருந்ததால் தடல்புடல் பண்ணி இருந்தார்.
நெய் வாசம் வந்தவர்களை வரவேற்றது. அக்கம் பக்கத்தில் இருப்பவர்களையெல்லாம் வீட்டுக்கு அழைத்திருந்தார். விருந்தும் ஒரு புறம் ஆயத்தமாகிக் கொண்டிருந்தது.
“சுமித்ரா!” தன்னை மறந்து பாய்ந்து மருமகளைக் கட்டிக் கொண்டவர் சட்டென்று சுதாரித்துக் கொண்டார். சேலைத் தலைப்பை இழுத்து தோளை மூடிக் கொண்டவர்,
“வாங்க மாப்பிள்ளை.” என்றார் பவ்யமாக. சங்கரனும் அடைக்கல நம்பியும் வாசலுக்கு வந்து வரவேற்றார்கள். பக்கத்து வீட்டுப் பெண்மணிகள் வாசலில் போட்டிருந்த கோலம் அமோகமாக இருந்தது. ஆரத்தி எடுத்து முடிக்கவும் பெண்ணும் மாப்பிள்ளையும் உள்ளே போனார்கள்.
புத்தம் புதிய தாலி கழுத்தில் மின்ன பூவோடு போட்டி போட்ட மலர்ச்சியும் பொட்டோடு போட்டி போட்ட நாணமுமாக நின்ற மகளைப் பார்த்த தமிழ்ச்செல்வி ஆனந்தத்தில் அழுதே விட்டார்.
“செல்வி! பொண்ணு முதல்முதலா வீட்டுக்கு வந்திருக்கா. எதுக்குக் கண்ணைக் கசக்கிறே?” வடிவு போட்ட சத்தத்தில் தமிழ்ச்செல்வி கண்களைத் துடைத்துக் கொண்டார்.
வீடு ‘ஜே ஜே’ என்று இருந்தது. பெண்கள் அத்தனை பேரும் சுமித்ராவைச் சூழ்ந்து கொண்டார்கள். அரண்மனை பற்றிக் கேட்க அவர்களுக்கு ஆயிரம் கேள்விகள் இருந்தன.
“ஏம்மா சுமித்ரா? உன்னோட மாமியார் எப்படி? நல்லாப் பழகுறாங்களா?” இது பக்கத்து வீட்டுப் பெண்மணி.
“ஆமா மாமி. அவங்க ரொம்ப நல்ல மாதிரி. அரண்மனையில நடக்கிற எல்லா நல்லதுக்கும் என்னத்தான் முன்னிறுத்துறாங்க.”
“அப்படியா! பார்த்தா கொஞ்சம் கரடு முரடான ஆள்மாதிரித் தெரியுறாங்க. இதுக்குத் தான் வெளித்தோற்றத்தை வெச்சு எதையும் எடை போடக்கூடாது ன்னு சொல்லுறது.”
“சுமிம்மா! மாப்பிள்ளை எப்படி?” இது எதிர்வீடு.
“இது ஒரு கேள்வின்னு கேக்குறயே. ஆசைப்பட்டுக் கட்டிக்கிட்ட மனுஷன். நம்ம சுமித்ராவை உள்ளங்கைல வெச்சுத் தாங்க மாட்டார்.” இன்னொரு வீடு சொல்ல அதற்கு அத்தனை ஆமோதிப்பு.
கூடியிருந்த அனைவரும் காஃபி பலகாரம் சாப்பிட்டு விட்டுக் கிளம்ப வீடு கொஞ்சம் அமைதியானது. விஜயேந்திரன் கொஞ்சம் சங்கடப் பட்டாலும் எல்லாவற்றையும் ரசித்தான்.
சாயம்பூசாத இயல்பான மனிதர்கள். அரண்மனைக் காரன் அடைக்கல நம்பி வீட்டு மருமகனானதில் அவர்களுக்கு அத்தனை மகிழ்ச்சி.
இரவு நெருங்கவும் பெண்ணையும் மாப்பிள்ளையையும் அருகமர்த்தி விருந்து பரிமாறினார்கள். குடும்பமாகக் கூடியிருந்து உண்பது விஜயேந்திரனுக்குப் புது அனுபவமாக இருந்தது.
“இங்கேயே தங்கலாமே மாப்பிள்ளை.” இது நம்பி.
“இல்லை மாமா. இன்னொரு நாள் தங்கிற மாதிரி வர்றோம். இப்போ இன்னொரு இடத்துக்கும் போக வேண்டி இருக்கு.” சொன்ன விஜயேந்திரன் எல்லோரிடமும் விடைபெற்றுக் கொண்டான்.
“கிளம்பலாமா சுமித்ரா?”
“ம்…” தலையாட்டியவள் காரில் ஏறிக் கொண்டாள்.
“அடிக்கடி வந்து போங்க மாப்பிள்ளை.”
“சரிங்க மாமா.” கார் லேசாக வேகமெடுத்தது.
“ரொம்பத் தொல்லை பண்ணிட்டாங்களோ?” சுமித்ரா சங்கடமாகக் கேட்டாள்.
“சேச்சே! அப்படியெல்லாம் இல்லை சுமித்ரா. நான் ரொம்பவே என்ஜாய் பண்ணினேன். மாமனார் வீட்டுக்கு அடிக்கடி வரணும்.” சிரித்தான் விஜயேந்திரன்.
குடும்பத்தை உட்கார வைத்து விருந்து பரிமாறிய பெண்கள், கணவனிடம் கண்களாலேயே ‘சாப்பாடு நன்றாக இருக்கிறதா?’ என்று ஐயம் தீர்த்துக்கொண்ட பெண்கள் என இன்று ஒரு வித்தியாசமான உலகத்தைப் பார்த்திருந்தான் விஜயேந்திரன்.
அரண்மனையில் எல்லாவற்றிற்கும் வேலைக் காரர்கள் தான்.
“இப்போ எங்க போறோம்?” கார் ஊரைத் தாண்டிப் போய்க் கொண்டிருக்கவும் ஆச்சரியமாகக் கேட்டாள் சுமித்ரா.
“அது சர்பிரைஸ்.” சொன்னவன் காரை ஆர்க்கிட் தோட்டத்திற்கு முன்னால் நிறுத்தினான். சுமித்ராவிற்கு ஒன்றும் புரியவில்லை.
கூடாரம் போன்ற அமைப்புக்களைப் பார்த்த போது ஏதோ தோட்டம் என்று மட்டும் விளங்கியது.
நிலா வெளிச்சம் நன்றாக இருந்ததால் விஜயேந்திரன் லைட்டைப் போடவில்லை. ஒரு கூடாரத்தைத் திறந்து அவளை உள்ளே அழைத்துச் சென்றான்.
வண்ண வண்ணப் பூக்கள் பல வடிவங்களில். காகிதங்களைச் சுருட்டி வைத்தாற் போல தினுசு தினுசாக இருந்தது. மலைத்துப் போனாள் பெண்.
“என்ன பூ இது? வித்தியாசமா இருக்கு!”
“ஆர்க்கிட் சுமித்ரா.”
“ஓ…”
“புதிசா ஆரம்பிச்சிருக்கேன். இப்போ தான் பூக்கத் தொடங்குது. அப்படியே வெளிநாட்டுக்கு ஏற்றுமதி பண்ண எல்லா ஏற்பாடும் நடக்குது.”
“அப்படியா!”
“ம்…” வாய்பிளந்த மனைவியை தன்னருகே இழுத்துக் கொண்டான் கணவன்.
எங்கும் ஏகாந்தம் பரவி இருக்க மனைவியின் கழுத்து வளைவில் முகம் புதைத்தான் விஜயேந்திரன்.
“அத்தான் கிட்ட என்ன பேசினேன்னு கேக்க மாட்டீங்களா?”
“எதுக்கு டா? முக்கியமான தகவல்னா நீயே சொல்லப் போறே.” அவன் முகம் இப்போது அவள்க் கூந்தல்க் காட்டில் மலர் வாசம் பிடித்தது.
“உங்களைப் பத்தியே பேசினாங்க.”
“என்னவாம்?”
“மூச்சுக்கு முந்நூறு தடவை ராஜா ராஜா. இது மட்டும் தான் அத்தான் வாயில இருந்து வந்தது.” நிமிர்ந்து அவள் கண்களைப் பார்த்தான் விஜயேந்திரன்.
“கரிகாலனுக்கு நான் ராஜா. உனக்கு யாராம்?”
“எனக்கு… அரண்மனைக் காரர்.”
“அடியேய்! நான் உன்னோட வீட்டுக்காரன் டி.”
“என்னோட வீடு ஏது?”
“அரண்மனை.”
“அப்போ சரிதானே.” அவள் சொல்லவும் வெடிச் சிரிப்புச் சிரித்தான் விஜயேந்திரன்.
“இது செல்லாது. பெயர் சொல்லு.”
“ஐயையோ!”
“என் பெயர் ஐயையோ வா?”
“நல்லாருக்காது.”
“ஏன்? விஜயேந்திரன் நல்ல பெயர் தானே?”
“நீங்க வேணும்னே வம்பு பண்ணுறீங்க.”
“சரி… பண்ணலை. நீ சொல்லு அம்மு. விஜயேந்திரன்… விஜயன்… ம்… இப்படி ஏதாவது.”
“வேணாம்.”
“ஏன்?”
“நான் ஒன்னு சொல்லுவேன். அது உங்களுக்குப் பிடிக்காது.”
“பிடிக்குமா பிடிக்காதான்னு நான் முடிவு பண்ணுறேன். நீ முதல்ல சொல்லு.”
அவள் வெகுவாக பிகு பண்ணவும் அவள் தோள்களைப் பிடித்தவன்,
“ஏய்! இப்போ நீ சொல்லப் போறியா இல்லையா?” என்றான் அழுத்தமாக.
“வேணாம் விஜி. அதை நான் சொன்னா நல்லா இருக்காது விஜி.”
“நீ முதல்ல சொல்லு…” பேச ஆரம்பித்த பிறகுதான் அவள் சொல்லி விட்டது இவனுக்குப் புரிந்தது. அவன் புரிந்து கொண்டதை இவள் அறிந்த போது மெதுவாக விலகிக் காரை நோக்கி ஓடி விட்டாள்.
“உன்னை எனக்குப் பெயர் செலெக்ட் பண்ணுடீன்னு சொன்னா நீ என் பொண்ணுக்கு பெயர் செலெக்ட் பண்ணுறியோ! இதோ வர்றேன்.” புன்னகைத்தபடி காருக்குப் போனான் அரண்மனைக் காரன்.
அந்த அம்பாஸிடர் அல்லோல கல்லோலப் பட்டது.
ஏகாந்த வேளை – இனிக்கும்
இன்பத்தின் வாசல் – திறக்கும்
ஆரம்பப் பாடம் – நடக்கும்
ஆனந்த கங்கை – சுரக்கும்…