TK 36
TK 36
அத்தியாயம் – 36
திருமணத்திற்கு ஒரு நாள் முன்னரே டெல்லியில் இருந்து பிளைட்டில் திருச்சி வந்து சேர்ந்தாள் மின்மினி.. சரியாக நான்கு மணிநேரத்திற்கும் மேலாக டிராவல்.. முதலிலேயே புக் பண்ணி வைத்திருந்த ஹோட்டல் ரூமிற்கு சென்று படுத்து உறங்கிவிட்டாள்..
மறுநாள் காலை அவளின் செல் சிணுங்கும் சத்தம்கேட்டு தான் கண்விழித்தாள் மின்மினி.. அலைபேசியின் திரையைப் பார்த்துவிட்டு, “ஐயோ..” என்று தலையில் அடித்துக்கொண்டு, “என்னோட அம்முகுட்டி இல்ல.. தயவுசெய்து திட்டாதே.. இப்போ கல்யாணத்தை பார்த்ததும் கிளம்பிவிடுவேன்..” என்று பயத்துடன் பதில் கொடுத்தாள்..
“………………..” மறுபக்கத்தில் இருந்து பதில் வர, “சரி போனை வை.. முகூர்த்தத்திற்கு நேரம் ஆகிறது..” என்று போனை வைத்துவிட்டு குளித்துவிட்டு அழகாக பட்டுசேலை கட்டிக்கொண்டு கண்ணாடியில் தன்னுடைய முகம் பார்த்தாள்..
சேலையில் அவளின் அழகு இன்னும் அதிகமாக இருக்க, “மினி வர வர உன்னோட அழகு அதிகமாகிட்டே போகிறதே..” என்று தன்னை தானே கிண்டலடித்து கொண்டாள்..
பிறகு மணியைப் பார்த்துவிட்டு, “இதற்கு மேல் லேட் பண்ண மண்டபத்திற்கு போக ரொம்ப லேட் ஆகிவிடும்..” என்று வேகமாக அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.. ஹோட்டலுக்கு வெளியே வந்து டாக்சி ஒன்றைப் பிடித்தவள் மண்டபத்தின் பெயரை சொல்ல கார் கிளம்பியது..
பொழுது விடியலை நோக்கி பயணிக்க மினி மண்டபத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தாள்.. காலை நேரத்தில் குளிர் தென்றல் அவளின் முகத்தில் மோத உற்சாகமாக உணர்ந்தாள்.. அவள் வெளியே வேடிக்கைப் பார்த்துக்கொண்டே வர ரேடியோவில் பாடிய பாடல் அவளின் மனத்தைக் கவர்ந்தது..
“ஆணின் பாதி பெண்மை என்று வேதம் சொல்லியது..
எந்த பாதி எங்கு சேரும் யார்தான் சொல்லுவது..
தெய்வம் ஒன்று சேர்த்த சொந்தம் இங்கே சேர்க்கிறது..
வேள்வி தீயில் சுயநலங்கள் வெந்து தீய்கிறது..
நிலவினை கிரகணம் தீண்டியது.. மறுபடி பௌர்ணமி தோன்றியது..
விதியும் புதியது.. கதையும் புதியது.. காலத்தின் தீர்ப்பு இது.. தெய்வத்தின் சேர்ப்பு இது..” என்ற பாடல் வரிகளை கேட்டு அவளின் உதட்டில் புன்னகை அரும்பியது.. அந்த பாடல் வரிகள் கூறிய விஷயம் அவளின் மனதினைக் கவர்ந்தது..
பிறந்து வளர்ந்த ஊர் என்ற காரணத்தால் அவளுக்கு திருச்சி பற்றி எந்த பயமும் இல்லை.. திருமண மண்டபம் பக்கத்திற்கும் அவள் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கும் அரைமணி நேரம் டிராவல்.. சொந்த ஊர் என்ற காரணத்தில் மனம் சந்தோஷத்தில் திருமண மண்டபம் சென்றார்..
திருச்சியில் பெரிய மண்டபத்தில் பிரபாகரன் – ஜெயக்கொடியின் திருமணம் ஏற்பாடு செய்யபட்டிருந்தது.. காலையில் விடியும் முன்னரே மகளையும், ருக்மணியும் எழுப்பிய சுகந்தி, “நேரம் ஆகிறது.. காலை ஆறு மணியிலிருந்து எழுமணிக்குள் முகூர்த்தம் இன்னும் என்ன தூக்கம்..” என்று மகளை எழுப்பிவிட்டார்..
அவள் சென்று குளித்துவிட்டு வரவே உறவினர்கள் எல்லாம் குளிக்க சென்றனர்.. உறவு பெண்கள் ருக்மணி மற்றும் விஜி அனைவரும் இணைந்து அவளை அலங்காரம் செய்தனர்.. அவர்கள் ஒன்று சேர்ந்து ஜெயாவை ஒரு வழி செய்தனர்..
“ஜெயாவிற்கு சும்மாவே மேக்கப் போட்ட பிடிக்காது.. இன்னைக்கு நீங்க பண்ண போற அலங்காரத்தில் அவள் எனக்கு திருமணமே வேண்டாம் என்று சொல்லிவிட்டு மணமேடையை விட்டு இறங்கி வந்தாலும் ஆச்சர்யம் இல்ல..” என்று தோழியை கிண்டலடித்துக் கொண்டிருந்தாள்..
அவள் பொம்மை போல அமர்ந்திருக்க இதழ்களில் மட்டும் கசந்த புன்னகை மலர்ந்திருக்க, ‘திருமணம் நிற்க போவது தெரிந்தும் மணமேடை போகும் ஒரே மணமகள் நானாகத்தான் இருப்பேன்..” என்றவளின் பார்வை ஜன்னலை பார்த்தாள்..
இருள் மெல்ல விலகி வானத்தில் வெளிச்சம் பரவ இரைதேடி பறவைகள் கிழக்கு நோக்கி பறந்து செல்ல, ‘இந்த விடியல் யாரின் வாழ்க்கையை இருளாக மாற்ற விடிகிறது..’ என்ற கேள்வியுடன் கண்ணாடியைப் பார்த்தாள்..
நேரான வகிடு எடுத்து பின்னபட்ட தலையில் மல்லிகை பூக்கள் மணந்து மனம் வீசியது.. மைதீட்டப்பட்ட விழிகளும், மூக்கில் மூக்குத்தி அழகாக மின்னி போட்டிபோட்டது.. அவள் அணிந்திருந்த நகைகளும், மயில் கழுத்து நிறத்திலிருந்த சேலையில் அவளின் அழகிற்கு அழகு சேர்த்தது..
மணப்பெண் அலங்காரம் அழகாக இருந்தாலும் உள்ளம் எதையோ எதிர்நோக்கி காத்திருக்க அவளின் மனநிலை அறியாதது, “அண்ணா உன்னை இந்த அலங்காரத்துடன் பார்த்த அவ்வளவுதான்..” என்றனர் ருக்மணியும், விஜியும்..
அதையெல்லாம் உணரும் நிலையில் அவள் இல்லை.. அப்பொழுது அவளை நோக்கி ஓடிவந்த நேத்ரா, “அக்கா இந்த பாட்டு நல்ல இருக்கு இல்ல..” என்றதும், “என்ன பாட்டுடா செல்லம்..” என்று புன்னகையுடன் கேட்க, நேத்ரா பாடலை ஒலிக்கவிட அது ஜெயாவின் மனநிலையை பிரதிபலித்தது..
“காத்திருக்கும் சீதைக்கெல்லாம் ராமன் கிடைப்பத்தில்லை..
ராவணர்க்கு சீதையென்று பிரம்மன் எழுதவில்லை..
புதியபாதை போட்டுக்கொள்ள எவரும் மறுப்பதில்லை..
பழிகள் கேட்கும் பழமை தன்னை யாரும் பொறுப்பதில்லை..
பெண்ணுக்கு பெண் இங்கு எதிரியில்லை..
பெண்மையைக் காட்டிலும் தெய்வம் இல்லை..” என்று பாடல் பாட அவளின் முகமே மாறிப்போக, “நிஜமாவே சூப்பர் பாட்டுதான் குட்டிம்மா..” என்றாள் ஜெயா..
அவளைச்சுற்றி எல்லோரும் சந்தோஷமாக இருக்க ஜெயா மட்டும் நேரத்தைக் கணக்கிட்டுக் கொண்டே இருந்தாள்.. கோபிநாத் பெரிய பிஸ்னஸ்மேன் என்பதால் திருமணத்திற்கு பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் வந்துருந்தனர்.. கண்ணன் திருமண வேலைகளை ஓடி ஓடி கவனித்தான்..
அதே நேரத்தில் பிரபா தன்னுடைய அறையில் திருமணத்திற்கு தயாராக பட்டுவேட்டி சட்டையில் தயாரானான்.. அவன் அதிகமாக எதிர்பார்த்த நாள் இது என்றாலும் அது அவனின் விருப்பம் போல இல்லாமல் போனதுதான் சோகத்தின் உச்சகட்டம்..
‘ஜெயாவுடனான திருமணம் நின்றாளே போதும்..’ என்ற முடிவுடன் அவன் இருக்க அவனின் மனமோ, ‘மின்மினி கண்டிப்பாக வருவாளா..?’ என்ற கேள்வியுடனும் குழப்பத்துடனும் தயாரானவன் முகம் களையிழந்து போயிருந்தது..
அவனின் அறைக்குள் வந்த கோபிநாத் பிரபாவின் முகம் பார்த்ததும், “பிரபா நல்ல இருக்கிற கண்ணா.. பட்டுவேட்டி சட்டையில் உன்னைப் பார்க்க மனசு நிறைஞ்சிருக்கு..” என்றவர் நிறைவுடன் கூறினார்.. அவன் தீவிரமான சிந்தனையில் இருந்தனர்..
“மதன் இப்போதான் கண்ணா போன் பண்ணினான்.. முக்கியமான மீட்டிங் கல்யாணத்திற்கு வரமுடியவில்லை.. என்றதும் நிமிர்ந்து அவரின் முகம் பார்த்தான்..
‘அவனோட கல்யாணத்திற்கு நான் வராமல் போனது என்னோட சூழ்நிலை.. இப்பொழுது அவன் வராமல் இருப்பதற்கு என்னோட செயல் மட்டுமே காரணம்..” என்று நினைத்தவன் மெளனமாக இருந்தான்..
அவனின் வருத்தம் உணர்ந்து, “பரவல்ல கண்ணா.. அவன் இன்னொரு முறை வரும் பொழுது வீட்டிற்கு வருவான்.. இந்த முதலாளிகளுக்கு மட்டும் ஓய்வே இருக்காது.. இதெல்லாம் தெரிந்த விசயம்தானே..” என்றவர் எடுத்துக் கூறினார்..
அதற்குள் அறையின் உள்ளே வந்த நண்பன் ஒருவன், “பிரபா மணமேடைக்கு மாப்பிள்ளையை அழைத்து வர சொன்னார் ஐயர்..” என்றதும், “இந்த பிரபா இந்த மாலையைப் போட்டுட்டு மணமேடைக்கு போ..” என்றார்..
‘என்ன நடந்தாலும் சரி..’ என்ற முடிவுடன் மணமேடையில் போய் உட்கார்ந்துவிட்டான் பிரபா.. ஐயர் மந்திரங்களை சொல்ல சொல்ல மண்டபத்தின் வாசலைப் பார்த்த வண்ணம் மந்திரத்தை சொன்னான் பிரபா.. நேரம் சென்றுகொண்டே இருக்க, மினி வரும் வழியைக் காணோம்..
“பொண்ணை அழச்சிட்டு வாங்க..” என்ற ஐயரின் குரல்கேட்டது.. உடனே ஜெயாவின் கழுத்தில் மாலையை அணிவித்து மணமேடைக்கு அழைத்து வந்தனர் ருக்மணியும், விஜியும்..!
ஜெயா தலையைக் குனிந்தவண்ணம் மணமேடை வர, முழு அலங்காரத்தில் இருந்த மகளைப் பார்த்து பூரித்து போனார் சுகந்தியும், ஆனந்த்தும்..! கண்ணன் மனம் உற்சாகத்தில் துள்ளிட பிரபாவின் அருகில் நின்றிருந்தான்..
ஜெயாவின் விழிகளில் தேடல் இல்லை.. மணமகளுக்கு உண்டான வெக்கமோ நாணமோ இல்லாமல் கடமைக்காக மணமேடை வந்து பிரபாவின் அருகில் அமர்ந்தாள்.. அவளின் பார்வையும் வாசலை தொட்டு மீண்டது.. அவனின் மனம் முழுவதும் கவலை மட்டுமே குடிக்கொண்டு இருந்தது..
உயிருக்கு உயிராக காதலித்த பெண் மணமேடை வரும் நாள் இது.. அவளை ஆசையுடன் அள்ளி பருக நினைக்கும் விழிகள் என்று எதிர்பார்ப்புடன் தன்னவளை சுற்றி வரும்.. ஆனால் பிரபாவோ கல்மாதிரி முகத்தை வைத்துகொண்டு கடமைக்காக மந்திரம் சொன்னான்..
“கெட்டிமேளம்.. கெட்டிமேளம்..” என்று ஐயர் தாலியை எடுத்து பிரபாவின் கையில் கொடுக்க அவனின் பார்வை வாசலை நோக்கியது.. அங்கே மினி வராமல் இருக்க ஜெயா தலை குனிந்து அமர்ந்திருந்தாள்..
அவளாக நினைத்திருந்தால் நிறைந்த சபையில் எழுந்து நின்று எனக்கு திருமணமே வேண்டாம் என்று கத்தியிருக்க முடியும்.. அவளை எடுத்து வளர்த்த ஆனந்த் மற்றும் சுகந்தியின் முகம் பார்த்தவளால் அது முடியாமல் போனது..
“மாப்பிள்ளை தாலி கட்டுங்க..” என்ற ஐயரின் குரல்கேட்க ஜெயாவின் நிலை மோசமானது.. தாய், தந்தையை மீறி மணமேடையைவிட்டு எழுந்து கொள்ள முடியாமல் முள்ளின் மீது அமர்ந்திருப்பது போன்ற உணர்வுடன் அமர்ந்திருந்தாள் ஜெயா..
அவளின் கணக்கு அங்கே பொய்யாக போக அவனின் கரத்தில் தாலியை நோக்கியது அவளின் விழிகள்.. அந்த தாலியை அவளின் கழுத்தில் காட்ட முடியாமல் தாலியையும் வாசலையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டிருந்தான் பிரபா..
தன்னால் இரண்டு பெண்களின் வாழ்க்கை வீணாகுமே என்று அவனின் உள்ளம் துடித்தாலும் இப்பொழுது எனக்கு திருமணம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு பிரபா எழுந்தாலும் ஜெயாவின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் என்று உணர்ந்தான்..
அவனின் உள்ளம் இதற்கும் அதற்கும் ஊஞ்சலாட, இருவரின் வாழ்க்கையும் அங்கே கேள்வி குறியாக மாறும் தருணத்தில் அவனின் அருகில் வந்த கோபிநாத், “பிரபா தாலியைக்கட்டு..” என்று அவனைக் காட்டாயபடுத்த வேறு வழியில்லாமல் வாசலைப் பார்த்துவிட்டு ஜெயாவின் கழுத்தில் தாலிகட்டி இரண்டு முடிப்போட, ‘எல்லாமே முடிஞ்சி போச்சு..’ என்று நினைத்த ஜெயாவின் விழிகள் கலங்கியது.
ஆனந்த், சுகந்தி, கண்ணன், விஜி, ஜீவன், ரேகா, ருக்மணி, கோபிநாத் அனைவரும் நிறைந்த மனமுடன் அவர்களுக்கு அர்ச்சதை தூவினர்.. அவள் கலங்கிய விழிகளுடன் நிமிர்ந்து பிரபாவைப் பார்க்க, ‘உன்னைத் திருமணம் செய்யும் நாளை எதிர்நோக்கி காத்திருந்தேன்..’ என்றவனின் விழிகள் அதை பிரதிபலிக்கவில்லை..
‘இப்போ உன்னோட கலங்கி விழிகளைத் துடைக்க கூட தகுதி இல்லாமல் இருக்கிறேன் பனிமலர்..’ என்றவனின் உள்ளம் வலித்தது.. நிறைந்த சபையில் இருமனங்கள் இணையும் முன்னே திருமணம் என்ற ஒன்று நடந்தேறிட பெற்றோர்கள் உள்ளம் பூரித்து போனது.. அப்பொழுது வாசலில் கார் வந்து நின்றது..
காரில் இருந்து இறங்கிய மின்மினி, “ஐயோ திருமணமே முடிஞ்சி போச்சு..” என்ற பதட்டத்துடன் மண்டபத்தின் உள்ளே நுழைந்தாள்.. ஜெயாவின் விழிகள் அதை கவனிக்கும் முன்னே நாத்தனார் முடிச்சை விஜி போட்டு முடித்தாள்..
அவனிடம் குங்குமத்தைக் கொடுத்த ஐயர், “இந்த குங்குமத்தை பொண்ணோட நெற்றியில் வைங்க..” என்றதும் அவள் நெற்றில் குங்குமம் வைத்துவிட்டு அவன் நிமிர்ந்து பார்க்க மின்மினி புன்னகை முகமாக அவர்களின் எதிரே நின்றிருந்தாள்..
மணமேடையில் தம்பதிகளாக அமர்ந்திருந்த இருவரையும் பார்த்து அவளின் கண்கள் சந்தோஷத்தில் கலங்கியது.. அப்பொழுதுதான் நிமிர்ந்த ஜெயா மினியைப் பார்த்தும் அடையாளம் கண்டுகொண்டாள்..
அவளின் கலங்கிய விழிகளை கண்டு மனதிற்குள் நொந்துபோனவள், ‘உன்னோட வாழ்க்கையில் நானாக குறுக்கே வரவில்லை மினி..’ என்று வலியுடன் நினைக்க பிரபாவின் முகம் களையிழந்து போனது.. இருவரும் சேர்ந்து அக்னியை சுற்றிவந்து பெரியோர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்கள்..
அப்பொழுதுதான் மினியைக் கவனித்த கோபிநாத், “வாம்மா மினி.. திருமணத்திற்கு வந்துவிட்டாயா..” என்றவர் சந்தோஷமாக அவளை வரவேற்றார்..
“நான் நல்ல இருக்கிறேன் அங்கிள்..” என்றவளை நோக்கி வேகமாக வந்த ருக்மணி, “மினிக்கா.. நீங்க சாரி கட்டியிருக்கீங்க.. என்னால என்னோட கண்ணையே நம்ப முடியல..” என்றவளை அனைத்துக் கொண்டாள்..
“நல்ல இருக்கிறாயா ருக்மணி..” என்றவள் விசாரிக்க, “ருக்மணி..” என்ற தாயின் குரல்கேட்டு, “அக்கா இருங்க இதோ வரேன்..” என்று சொல்ல, “ம்ம் போயிட்டு வா..” என்றவள் புன்னகையுடன்..
மினியின் பார்வை ஜெயாவின் மீது கேள்வியாக படிய, “ஹலோ மேடம் என்னை கொஞ்சம் நிமிர்ந்துப் பாருங்க..” என்றவள் கேலி பேசினாள்.. ஆனால் சிரிக்கும் நிலையில் அவள் இல்லை.. அதற்குள் ரிசப்ஷன் மேக்கப் என்று ஜெயாவை அழைத்து சென்றார்கள்..
மினி அவர்களை பின் தொடர்ந்து அறைக்குள் நுழைய படுக்கையில் அமர்ந்து கழுத்தில் இருந்த தாலியைக் கையில் ஏந்திக்கொண்டு கண்ணீரோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.. அவளின் அருகில் சென்ற மினி அவளின் தோளை தொட, அவளின் விரல்வழியே உணர்வு பெற்ற ஜெயா நிமிர்ந்து மின்மினியை நேருக்கு நேராக பார்த்தாள்..
“மினிக்கா ஏன் இப்படி செஞ்சீங்க..” என்றவள் மனம் பொறுக்காமல் கேட்க, “நீ எதற்கு இப்போ அழுகிற.. நான் என்ன செய்தேன்..” என்றவளின் விழிகளைத் துடைத்துவிட்டாள் மின்மினி..
“உங்களோட வாழ்க்கையை எனக்கு விட்டு கொடுத்துட்டு என்னக்கா இது விளையாட்டு.. எனக்கு குற்ற உணர்ச்சியாக இருக்கு..” என்றவள் அழுகையுடன்..
அவளின் மனநிலை உணர்ந்த மினி, “என்னோட முடிவில் மாற்றம் இல்ல.. என்னோட வாழ்க்கையில் நீயும் குறுக்க வரல.. உன்னோட வாழ்க்கையில் நானும் குறுக்கே வரல.. எல்லாமே விதியின் விளையாட்டு ஜெயா..” என்றவளுக்கு புரிய வைத்தாள்..
“ஒரு பெண்ணாக உங்களோட வாழ்க்கையை நான் தட்டி பறித்துவிட்டேனோ என்று தோணுது..” அவளின் உதட்டில் கசந்த புன்னகை மலர்ந்தது..
“நான் கல்யாணத்தை நிறுத்த வரல ஜெயா.. கல்யாணத்தைப் பார்க்கத்தான் வந்தேன்.. நீ என்னை தவறாக புரிஞ்சிக்கிட்ட..” என்று புன்னகையுடன் கூறியவளை கேள்வியுடன் பார்த்தாள் ஜெயா..
“வாழ்க்கை உனக்கு முன்னாடி ஒரு பெரிய கேள்வியை உருவாக்கி வெச்சிருக்கு.. விடையை கண்டுபிடிக்க வேண்டியவள் நீதான்.. நான் அல்ல..” என்றவள் ஜெயாவிற்கு புதிர்போட்துவிட்டு, “விஷ் யூ ஹாப்பி மேரேஜ் லைப்..” என்று புன்னகைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டாள்..
அவளின் செயல்களில் ஏதோவொரு மாற்றம் இருப்பதை உணர்ந்த ஜெயாவின் புருவங்கள் முடிச்சிட, ‘இந்த அக்கா என்ன என்னைக் குழப்பிவிட்டு போறாங்க..’ என்றவளின் மனதில் சந்தேகம் எழுந்தது..
அவள் அறையைவிட்டு வெளியே வர எதிரே வந்த பிரபாவைப் பார்த்ததும், “ஹாய் புது மாப்பிள்ளை..” என்று கேலியுடன் அவனை நெருங்கிய மின்மினியின் முகம் பார்க்க முடியாமல் குற்ற உணர்ச்சியில் நின்றிருந்தான்..
பிறகு, “ஸாரி மினி.. நீ வருவாய் என்று நான் கடைசி நிமிஷம் வரை எதிர்பார்த்தேன்..” என்றதும், “நான் வேண்டும் என்றுதான் லேட்டாக வந்தேன்..” என்றவள் புன்னகைத்தாள்..
அவன் அவளை கேள்வியாக பார்க்க, “மினியோடமுடிவில் என்றும் மாற்றமே இல்ல..” என்றவள், “ஹாப்பி மேரேஜ் லைப் பிரபா..” என்று சொல்லிவிட்டு மற்ற யாரிடமும் சொல்லாமல் மண்டபத்தில் இருந்து கிளம்பிவிட்டாள் மின்மினி..
அவள் சென்றபிறகு ரிசப்ஷன் நடைபெற மற்ற வேலைகள் சீரான வேகத்தில் நடந்தது.. முதல் முறையாக மகளை பிரியும் தாய், தந்தை இருவரும் கலங்கி நின்றனர்.. கண்ணனுக்கு அக்காவை அனுப்ப மனமே இல்லை.. ஆனாலும் அவளின் வாழ்க்கையை நினைத்து விலகி நின்றான்..
அவர்களை விட அதிகமாக கலங்கிய ஜெயா அவர்களை எல்லாம் பிரிந்து கணவனுடன் காரில் ஏறினாள்.. தம்பதிகளை அழைத்துக் கொண்டு பெங்களூர் சென்றார் கோபிநாத்.. கார் சீரான வேகத்தில் செல்ல பிரபாவும், ஜெயாவும் மௌனமாகவே கழிந்தது..
வீடு வந்தும் கோபிநாத் சென்றதும் சுந்தரியம்மா அவர்களை நிற்க வைத்து ஆரத்தி எடுத்து வீட்டின் உள்ளே அழைத்துச் சென்றார்.. வீட்டிற்கு வந்த மருமகளை பூஜை அறைக்கு அழைத்து சென்ற சுந்தரிம்மா, “விளக்கு ஏற்று ஜெயா..” என்றதும் பொம்மை போல அவர்கள் சொன்னதை செய்தாள்..
அதன்பிறகு இருவரையும் அழைத்து சென்று தனியறையில் தங்க வைத்தனர்.. அன்று பொழுது சாய இரவு இருவருக்கும் முதலிரவு ஏற்பாடு செய்தனர் பெரியவர்கள்..!
அவர்கள் ஜெயாவிற்கு அலங்காரம் செய்துவிட, “அண்ணி இங்கே சொன்னது எதையும் மறக்காதீங்க..” என்று கிண்டலடித்தவளை நிமிர்ந்து பார்த்தாள்.. அவள் என்ன பேசினால் என்றே ஜெயாவிற்கு தெரியாது என்றாலும் கூட சரியென தலையாட்டினாள்..
அவளை அழைத்து சென்று பிரபாவின் அறைக்குள் விட்டுவிட்டு கதவை சாத்திவிட்டு வந்தனர்.. தனியறையில் பிரபாவை நேருக்கு நேர் சந்தித்த ஜெயாவின் விழிகள் இரண்டும் கோபத்தில் சிவந்திருந்தது..