Nan Un Adimaiyadi–EPI 5

Nan Un Adimaiyadi–EPI 5

அத்தியாயம் 5

அன்றாடம் அலைந்து எங்கேயும் தேடி

கண்டேனே எனக்கு தோதான ஜோடி

வந்தாச்சு காலம் நேரம் மாலை இடத்தான் (முத்துக்காளை)

 

தவமங்கையின் இடுப்பைப் பிடித்து சொர்க்கத்துக்கு டிக்கேட் வாங்கியிருந்தவன், குழந்தையின் அழுகுரலில் தடாலடியாக பூலோகத்துக்கு ரிடர்ன் வந்தான்.

சட்டென கையை முன்னே இழுத்துக் கொண்டவன், ஹேண்டலைப் பிடித்தப் படியே கீழே இறங்கி நின்றிருந்தான். அவன் இறங்கி நிற்க தவமங்கையும் இறங்கிக் கொண்டாள். குழந்தையின் அம்மாவோ பிள்ளையை சமாதானம் செய்துக் கொண்டிருக்க, லேசாக தவமங்கையைத் திரும்பி ஓரக்கண்ணால் பார்த்தான் காளை. அங்கே கோபத்தில் முகம் செவசெவவென சிவந்துக் கிடந்தது.

‘ரைட்டு! பிட்டப் போட்டுடுடா முத்துக்காளை!’ என தனக்கு தானே சொல்லிக் கொண்டவன், பிள்ளையைக் கொஞ்சிக் கொண்டிருந்த பெண்மணியை பார்த்து பொரிய ஆரம்பித்தான்.

“ஏன்கா, புள்ளய இப்படித்தான் நடு ரோட்டுல ஆட உடுவியா? நான் மெதுவா வரவும் ஆச்சு! இல்லைனா என்னாகிருக்கும்? வரிசயா புள்ளைங்கள பெத்துப் போட்டா மட்டும் போதாது, பொறுப்பா அதுங்கள பாத்துக்கவும் தெரியனும்!”

அதற்குள் வீட்டில் இருந்து அவளது கணவன் வெளியே வந்திருந்தான்.

“என்ன காளை பேச்சுலாம் ஒரு மார்க்கமா போகுது! பல்லு இருக்கறவன் பக்கோடா சாப்படறான்! நான் பொண்டாட்டி கட்டிக்கிட்டேன் வரிசையா பெத்துப் போடறேன்! இதுல ஒனக்கு என்ன காண்டு? நீயும் பக்கோடா வாங்கிக்கோ, மென்னு தின்னுக்கோ! அத உட்டுப்புட்டு என் தெறமை மேல கண்ண வைக்கற! நல்லா இல்ல சொல்லிப்புட்டேன்!”

“வாடா என் வெண்ட்ரு! என்னமோ பெரிய சாதனைய செஞ்சுப்புட்ட மாதிரி பேச்சப்பாரு, எடக்கப்பாரு, எகத்தாளத்தப்பாரு! எங்களுக்கு பக்கோடா சாப்படத் தெரியாம இல்ல! அதுக்கெல்லாம் நேரம் காலம் வரும் நாங்களும் கடிச்சு மென்னு ரசிச்சு ருசிச்சு அசால்ட்டா சாப்புடுவோம்! வந்துட்டான், பெருசா படம் காட்ட!” என எகிறிக் கொண்டு அவனை அடிக்கப் போனான் முத்துக்காளை.

“யப்பா, யப்பா காளை! உடுப்பா! அந்தாளு உன் ஒரு அடிய தாங்குமா! இனிமே நான் புள்ளய பத்திரமா பாத்துக்கறேன்! நீ கெளம்புப்பா!” என அவனை சமாதானம் செய்தவர், தன் கணவனைப் பார்த்து,

“யோவ்! என்ன பெரிய பயில்வான்னு நெனைப்பா? காளை ஒரு அப்பு அப்புனான்னு வையி, பக்கோடா திங்க பல்லு இல்லாம போயிடும்! போயா உள்ளுக்கு” என சத்தம் போட்டார்.

அவர்கள் உள்ளே போக,

“டீச்சர்! எங்காத்தா மேல சத்தியமா நீங்க கீழ விழுந்துட போறிங்களோன்னு பயத்துல தான் இடுப்பப் புடிச்சேன்! என்னை நம்புங்க டீச்சர்!” என வண்டியின் ஹேண்டலைப் பார்த்தவாறே பேசினான் காளை. அவளிடம் இருந்து பதில் வராமல் போகவும், மெல்ல நிமிர்ந்துப் பார்த்தான்.

அவள் சிரிப்பை அடக்க பெரும்பாடு படுவதைப் பார்த்து இவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

முத்துக்காளை இடுப்பைப் பிடிக்கவும் தவமங்கைக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. குழந்தையைக் காப்பாற்றத்தான் பிரேக் அடித்தான் என தெரிந்ததும் அந்தக் கோபம் மட்டுப்பட்டிருந்தது. அதன் பிறகு ஆண்கள் இருவரும் பக்கோடாவை வைத்து டபுள் மீனிங்கில் பேசிக் கொண்டதில் அவளுக்கு சிரிப்பை அடக்கவே முடியவில்லை. அவன் முன்னே சிரித்து வைத்தால் தன் கெத்து என்ன ஆவது என சிரிப்பை அடக்கினாள் தவமங்கை.

“போகலாம் மிஸ்டர் காளை!” என மட்டும் சொன்னாள்.

அவள் திட்டவில்லை என்பதே சந்தோஷத்தைக் கொடுக்க, வண்டியில் ஏறி அமர்ந்தான் காளை. அவளும் ஏற வேறு எந்த அசம்பாவிதமும் நடக்காமல் டவுனுக்கு சென்று சேர்ந்தனர். இரண்டு வரிசையில் கடைகள், பேருந்து நிலையம் ஒன்று, தபால் ஆபிஸ், ஒரு மருத்துவமனை என இருந்தது அந்த இடம். சுற்று வட்டார கிராமத்துக்கு எல்லாம் அதுதான் ஷாப்பிங் இடம் என்பதால் கூட்டம் அலை மோதியது. பைக்கை நிறுத்திப் பூட்டியவன்,

“பக்கத்துலயே நடந்து வாங்க டீச்சர்! கடை கிட்டக்கத்தான்” என நடக்க ஆரம்பித்தான். சைக்கிள், இரு சக்கர வாகனம் என விற்கும் செகண்ட் ஹேண்ட் கடைக்கு அழைத்துப் போனான் முத்துக்காளை. ஆர்டர் கொடுத்தால் புது வண்டியும் கிடைக்கும் அங்கே.

“வா காளை! பார்த்து ரொம்ப நாள் ஆச்சு!” என வரவேற்றார் கடையின் உரிமையாளர்.

“வேலை ரொம்பண்ணே! போன்ல சொல்லி இருந்தேனே ஸ்கூட்டி விஷயம், அதுக்குத்தான் வந்துருக்கோம். இவங்கதான் நான் சொன்ன டீச்சர்!”

“வாங்க டீச்சர், வாங்க வாங்க!” என சொன்னவர் இருவரையும் உள்ளே அழைத்து சென்று அந்த ஸ்கூட்டியைக் காட்டினார். நீல நிறத்தில் அழகான ஹோண்டா ஆக்டிவா நின்றிருந்தது அங்கே. நெருங்கிப் போய் பார்த்தாள் மங்கை. அங்கிங்கே லேசான கீறல்களைத் தவிர ஸ்கூட்டி புத்தம் புதுசு போல இருந்தது.

“புதுசு மாதிரி இருக்கே!”

“ரெண்டு வருஷம் ஆச்சாம் டீச்சர்! நல்ல கண்டிஷன்ல இருக்குன்னு சொன்னாரு! உங்களுக்குப் புடிச்சா எடுத்துக்கலாம்”

வண்டியைத் தடவிக் கொடுத்தாள் தவமங்கை. என்னவோ அதைப் பார்த்ததும் பிடித்து விட்டது அவளுக்கு. வண்டியைப் பற்றியெல்லாம் அவ்வளவாக தெரியாது மங்கைக்கு. அதெல்லாமே அவளின் அப்பாவின் சாய்ஸ் தான். இதுதான் உனக்கு சரி வரும் என அவளின் முதல் சைக்கிளில் இருந்து ஸ்கூட்டி வரை அவர் தான் பார்த்து பார்த்து செய்திருக்கிறார் இவளுக்கு.

“ஓட்டிப் பார்க்கலாமா?”

“ஓ தாராளமா ஓட்டிப் பாருங்க டீச்சர்!” என்றவர் வண்டி சாவியை அவளிடம் கொடுத்து,

“தம்பி டேய்! டீச்சர் கூட போய்ட்டு வா!” என கடைப்பையனை அழைத்தார்.

“இல்லண்ணே, நானே போறேன்! டீச்சருக்கு இடம் புதுசு! இந்தப் பொடி பையன எல்லாம் நம்பி அவங்கள தனியா விடமுடியாது”

இவன் ஏறினால் ஸ்கூட்டி தாங்குமா என்பது போல பார்த்தாள் தவமங்கை. அவ்வளவு நேரம் அவளையேப் பார்த்திருந்தவன், அவள் பார்க்கும் நேரம் ஸ்கூட்டியில் பார்வையைப் பதித்திருந்தான்.

இவன் ஸ்கூட்டியை வெளியே தள்ளி வந்து நிறுத்த, அதில் அமர்ந்து ஸ்டார்ட் செய்தாள் தவமங்கை! அவள் பின்னால் அமர்ந்துக் கொண்டான் காளை. முடிந்த அளவு அவளை ஒட்டாமல் தான் வந்தான். இவளுக்குத்தான் தான் அவன் அருகாமை அவஸ்தையாய் இருந்தது. அவன் போட்டிருந்த பவுடரின் மணம் வியர்வை வாசத்தில் கலந்து இவள் மூக்கில் மோதியது.

“என்ன பவுடர் யூஸ் பண்ணறீங்க மிஸ்டர் காளை?” என கேட்டாள்.

“ஜெண்டில்மேன்(யார்ட்லி) பவுடர் டீச்சர்! நல்லா வாசமா இருக்குல்ல! பவுடர் டப்பா என்னை மாதிரியே கருப்பா இருந்தாலும், அதுல இருக்கற பவுடர் வெள்ளையா என் மனசு போலவே இருக்கு டீச்சர்! நம்ம தோஸ்த்து சிங்கப்பூருக்கு போனப்போ வாங்கிட்டு வந்தான். எதாச்சும் விஷேசத்துக்கு மட்டும்தான் போட்டுக்குவேன்!”

அவளோடு வருவதே அவனுக்கு விஷேசமாம்! சொல்லாமல் சொல்லியவனை கண்ணாடி வழி பார்த்தாள் தவமங்கை. அடித்த காற்றில் முடி களைந்து பரட்டையாக இருக்க, முறுக்கி விட்ட மீசையில் ஐயனார் மாதிரி இருந்தான். கண்களில் கனிவு தெரிய, முகம் மலர்ந்து கிடந்தது. அவன் பேசும் போது வெள்ளை வெளேரென வரிசைப் பற்கள் டாலடித்தது.

“போதும் மிஸ்டர் காளை! கடைக்குத் திரும்பிடலாம்”

“ஏன் டீச்சர்! இன்னும் கொஞ்சம் தூரம் போகலாமே! அப்போத்தானே உங்களுக்கு சரி வருமான்னு தெரியும்!” என ஆட்சேபித்தவனை கண்ணாடி வழி முறைத்தாள் தவமங்கை.

“சரி டீச்சர்! திரும்பிடலாம்” என அடக்கி வாசித்தான் காளை.

கடைக்கு வந்து எல்லா ஃபார்மாலிட்டியையும் முடித்துக் கொண்டு வெளியே வந்தார்கள். அப்போது அவர்கள் அருகே வந்து நின்றான் செவல.

“டீச்சர் இவன் தான் நம்ப நண்பன். பேரு செவலக்காளை!”

“வணக்கம் டீச்சர்” என வணக்கம் வைத்தவன் கையை நீட்டினான். அவனைக் கேள்வியாய் பார்த்தாள் மங்கை.

“சாவிய அவன் கிட்ட குடுங்க டீச்சர்! ஸ்கூட்டிய வீட்டுல கொண்டு போய் விட்டுருவான். அவளோ தூரம்லாம் நீங்க ஓட்டிட்டு வர வேணாம்! ஆத்தா வேற பார்த்து பத்திரமா உங்கள கூட்டிட்டு வர சொல்லுச்சு.”

“அதெல்லாம் வேணா! நானே ஓட்டிட்டு வருவேன்” என இவள் சொல்ல,

“இல்லல்ல! ரோட்டுல மணல் லாரிலாம் போகுது! நீங்க கவனமா வரீங்களான்னு பார்த்துக்கிட்டே வந்து நான் எங்கயாச்சும் மோதி வச்சுட்டா! என்னை நம்பித்தான் என் குடும்பமே இருக்கு டீச்சர்! சொன்னா கேளுங்க!” என அவன் சொல்ல,

“டேய் என்னடா காளை! இப்படிலாம் அபசகொணமா பேசாதடா! இன்னும் கல்யாணம் கச்சேரி கூட ஆகல, அதுக்குள்ள மோதி பேதின்னுகிட்டு!” என சத்தம் போட்டான் செவல.

“கொஞ்சம் நிறுத்துறீங்களா ரெண்டு பேரும்? இப்போ என்ன சாவிய குடுக்கனும், அவ்வளவு தானே? இந்தாங்க!” என கொடுத்தவள் நடந்து போய் காளையின் பைக் அருகே நின்றுக் கொண்டாள். அவளைத் தொடர்ந்து அவசரமாக வந்தான் காளை.

“போலாம் டீச்சர்” என்றவன் பைக்கில் ஏறி அமர்ந்தான். அவளும் பின்னால் ஏறிக் கொண்டாள்.

கடை வீதிகளைக் கடக்கும் போது,

“டீச்சர்” என அழைத்தான் காளை.

“ஹ்ம்ம்”

“காலையிலே சாப்பிட்டது!”

“ஹ்ம்ம்”

“லேசா பசிக்கற மாதிரி இருக்கு”

அவர்கள் வந்து வேலையை முடித்து இரண்டு மணி நேரம் தான் இருக்கும். அதற்குள்ளா சாப்பிட்ட ஊத்தப்பம் கரைந்துப் போயிருக்கும் என எண்ணியவள்,

“அதுக்கு?” என கேட்டாள்.

“இல்ல, எங்க ஊருல மாடு குட்டிப் போட்டாக் கூட ட்ரீட் வைப்போம். நீங்க ஸ்கூட்டிலாம் வாங்கிருக்கீங்க! எனக்கு ஒரு ட்ரீட் குடுக்க மாட்டீங்களா டீச்சர்?” என கேட்டான் காளை.

“என்ன வேணும்?”

“ரெண்டு பரோட்டா வாங்கிக் குடுங்க போதும்”

“சரி”

அவன் நீளமாக பேச இவளோ கடுப்பில் ஒற்றை இரட்டையாய் பதிலளித்தாள். அவள் ஒத்துக் கொண்ட சந்தோசத்தில் பைக்கை ஒடித்து திருப்பி, ஒரு ஹோட்டலில் கொண்டு போய் நிறுத்தினான் காளை.

“வாங்க டீச்சர்! இங்க சாப்பாடு ரொம்ப நல்லா இருக்கும்! டவுன்ல பெஸ்ட்டு இந்த ஹோட்டல்தான். போன தடவை ஷூட்டிங் வந்த விஜய் சேதுபதி கூட இங்கத்தான் சாப்டாருன்னா பாத்துக்குங்க!” என பேசியபடியே உள்ளே அழைத்துப் போனான். காளை இந்த ஹோட்டலுக்கெல்லாம் வந்தது கூட கிடையாது. வீட்டு உணவைத் தவிர இப்படியெல்லாம் வெளியே அவன் சாப்பிட்டது இல்லை. மங்கையுடன் இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாம் என தான் அதையும் இதையும் சொல்லி சாப்பிட அழைத்து வந்திருந்தான்.

இருவரும் ஒரு மேசையில் எதிரும் புதிருமாக அமர்ந்துக் கொண்டார்கள். பார்வையை மட்டும் அவள் மேல் பதிக்காமல் மற்ற எல்லாவற்றையும் பார்த்தான் காளை.

“வாங்கண்ணா” என்றபடி வந்து நின்றான் கடைப்பையன்.

“தம்பி, என்ன ஸ்வீட் இருக்கு?”

சுற்றும் முற்றும் பார்த்தவன் மெல்லிய குரலில்,

“ண்ணா, ஜாமுன் இருக்கு! ஆனா ஜீரால ஈ விழுந்துருச்சு! தூக்கிப் போட்டுட்டு எடுத்துட்டு வரவாண்ணா?” என கேட்டான்.

“வேணா, வேணா! வேற என்னடா இருக்கு?”

“ண்ணா, ஜாங்கிரி இருக்கு! போட்டு ரெண்டு நாளுத்தான் ஆச்சு! நேத்து ஆசையா ஒன்ன எடுத்து சாப்டுட்டேன், இன்னிக்கு காலையிலே புடுங்கிக்கிச்சுண்ணா! அத கொண்டு வரவா?”

மெல்ல ஓரக்கண்ணால் தவமங்கையைப் பார்த்தான் காளை. அவள் வேறு புறம் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் சிரிப்பை அடக்கிக் கொண்டிருப்பது இவனுக்கு பக்கவாட்ட போசிலேயே நன்றாக தெரிந்தது.

“உங்க கடை ஸ்வீட்டுல தீய வைக்க! பரோட்டா இருக்காடா?”

“பரோட்டா தீர்ந்துடுச்சு ஆனா சால்னா இருக்குண்ணா”

“வேறும் சால்னாவ வச்சு நான் நாக்கு வழிக்கவாடா? இட்டிலி?”

“அக்காவுக்கு பல்லு ஸ்ட்ராங்னா, இப்போவே போய் இட்லிய கொண்டு வரேன்”

“இல்லல்ல வேணா! பூரி?”

“பூரி எண்ணேயில நல்லா ஊறிக் கெடக்கு! பரவாயில்லையாண்ணா?”

“டேய் தம்பி, உங்க ஹோட்டல்ல மனுஷன் சாப்படற மாதிரி தோசையாச்சும் கிடைக்குமாடா?”

“ஓ கிடைக்குமே! அக்கா உண்டாகி இருக்காங்களாண்ணா?”

அவன் கேள்வியில் பதறிப் போனான் காளை.

“என்னடா கேள்வி இது? ஏன் அப்படிலாம் கேக்கற?”

“இல்லண்ணா! உண்டாகி இருந்தா வாய்க்குப் புளிப்பா கேக்குமாமே! நம்ம தோசை நல்லா புளிப்பா செம்மையா இருக்கும்! எடுத்து வரவாண்ணா?”

“அடேய்! எங்கடா உங்க ஓனரு? கூப்டுடா அவன, கிழிச்சு தோரணம் தொங்க உடறேன்” என கடுப்பாகி இவன் சத்தம் போட, தவமங்கை கலகலவென வாய் விட்டு சிரித்தாள். சில்லரையைக் கொட்டி விட்ட மாதிரி கேட்ட அவள் சிரிப்பொலியில் வாய் பிளந்து நின்றான் காளை. எப்பொழுதும் உர்ரென இருக்கும் அவள், கண்ணில் நீர் வரும் வரை சிரிக்க அதையே மெய் மறந்துப் பார்த்தப்படி நின்றான் முத்துக்காளை.

ஓனர் காலையிலேயே அவனைத் திட்டித் தீர்த்திருக்க அவரை பழி வாங்குகிறேன் பேர்வழி என வந்தவர்களிடம் இப்படித்தான் பேசி வியாபாரத்தைக் கெடுத்துக் கொண்டிருந்தான் கடைப்பையன்.

இத்தனை நாள் உள்ளுக்குள்ளேயே பல சோகங்களை அடைத்து வைத்துப் புழுங்கிக் கொண்டிருந்தவள், இவர்கள் இருவரின் பேச்சில் பொங்கி பொங்கி சிரித்தாள். சிரிப்புனூடே,

“தம்பி, ரெண்டு காபி கொண்டு வா போதும்” என சொல்லியவள், காளையைப் பார்த்து முகம் மலர புன்னகைத்தாள்.

“தேங்கஸ் மிஸ்டர் காளை”

“எதுக்கு டீச்சர்?”

“தெரியல! சொல்லனும்னு தோணுச்சு, சொன்னேன்” முகத்தில் இன்னும் சிரிப்பு இருந்தது.

காபி வர புன்னகையுடனே அருந்தி முடித்தாள். பூவென மலர்ந்திருந்த அவள் முகத்தை ஓரக்கண்ணால் பார்த்தப்படியே தனது காபியை அருந்தினான் காளை.

அவள் காபிக்கு பணம் கொடுத்ததும் வெளியே வந்தார்கள் இருவரும்.

“டீச்சர்! இங்கயே நில்லுங்க! நான் வந்துடறேன்” என ஹோட்டலின் உள்ளே மீண்டும் நுழைந்தான் காளை.

கடைப்பையனைத் தேடிப் போனவன், அவனை இறுக அணைத்து,

“தேங்க்ஸுடா பையா! என் தேவதைய சிரிக்க வச்சதுக்கு” என சொல்லி சட்டைப்பையில் கைவிட்டு, வந்த பணத்தை அப்படியே எடுத்து அவனிடம் கொடுத்து விட்டு வந்தான்.

வீட்டுக்கு வந்த இருவரையும் கூர்ந்து கவனித்தார் காமாட்சி. மங்கை சிரித்த முகத்துடன் வர, மகன் நடக்காமல் மிதந்தப்படி வந்தான்.

‘இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ தெரியலையே!’ என அவருக்கு பயந்து வந்தாலும், முறைப்படி மங்கையின் ஸ்கூட்டிக்கு பூஜை போட தவறவில்லை அவர். ஸ்கூட்டிக்கு பூஜை முடித்து மகனுக்கு தனியறையில் பூஜை போட்டது தவமங்கைக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சனி ஞாயிறு ராஜேஸ்வரி மற்றும் அவம் பிள்ளைகளுடன் ஆனந்தமாய் களித்தாள் மங்கை. அவள் கிளம்பியது தான் புத்தகம் திருத்துவதைக் கூட ஆரம்பித்தாள்.

இவள் ஸ்கூட்டியில் பள்ளிக்குப் போக ஆரம்பிக்க, முதல் நாள் சரியாக போகிறாளா என பின்னாலேயே வந்து சரிப்பார்த்துக் கொண்டான் காளை. மற்றப்படி மறைச்செல்வனின் தொல்லையைத் தவிர எந்த வித பிரச்சைனையும் இல்லாமலே போனது மங்கையின் நாட்கள்.

அன்று வெள்ளிக்கிழமை. எதற்கு அவன் முன்னே போவானேன், பின் குத்துது குடையுது என நோவானேன் என போர்வையைப் போர்த்திக் கொண்டு சீக்கிரமாகவே படுத்து விட்டாள் தவமங்கை.

இரவில் மெல்லிய சத்தம் கேட்க விழித்தெழுந்தாள் தவமங்கை. அவள் அறையின் கதவுதான் தட்டப்பட்டுக் கொண்டிருந்தது.

“எலிசு! எலிசு! முத்துக்காளைகிட்ட என்ன பார்க்கனும்னு சொன்னியாமே! எனக்கு என்னமோ தண்டனைக் குடுக்கனும்னு சொன்னியாமே! வா எலிசு! வெளிய வந்து இந்த மொரட்டுக்காளைக்கு வித விதமா தண்டனை குடு! வா எலிசு வா! மாமன் வெய்ட்டிங்”

“வாடி பொட்டப்புள்ள வெளியே

என் வாலிபத்த நோகடிச்ச கிளியே!!” என பாட வேறு செய்தான் காளை.

“இன்னிக்கு உனக்கு வெய்ட்டிங் இல்லடா, வெட்டிங்(வெட்டு) தான்!!” என கோபத்தில் முனகினாள் தவமங்கை.

 

(அடிபணிவான்)

error: Content is protected !!