வானவில் வாழ்க்கை 4 (3)
மாதத் தேர்விலும் அந்தப் பசங்க ஜஸ்ட் பாஸ் தான். அடுத்து வந்த காலாண்டிலும் , அரையாண்டிலும் அதே நிலை தான். ஆசிரியர்கள் சிலபஸை சீக்கிரம் முடித்து விட்டு ரிவிசன்,பிராக்டிக்கல் எக்ஸாமுக்கும் தயார் படுத்தினர். ரிக்கார்டு நோட்டு வேலை வேறே. என்னால் முன்னைப் போல் அப்பாவிற்கு உதவ முடியவில்லை. வீடு துடைக்க, பாத்திரம் கழுவ, துணி துவைக்க என்று ஆயாவைப் போட்டுவிட்டார் அப்பா.
நான் நிறைய கண் விழித்துப் படிக்க வேண்டிருந்தது. சில நேரம் டேபிலிலேயே தூங்கி விடுவேன். அப்பா தான் எழுப்பிப் படுக்கச் சொல்வார். நாங்க ரிவிசன் என்பதால் ஏதாவது மரத்து நிழலில் தான் உட்கார்ந்து சாப்பிட்டுப் படிப்போம். அப்படி ஒரு நாள் நாங்கள் மரத்தடியில் அமர்ந்து சாப்பிடுவதற்காக வந்தோம்.
கை கழுவி விட்டு வருவதற்குள் எங்களுடைய டிபன் பாக்ஸைக் காணோம். சுற்றி முற்றிப் பார்க்கும் போது அந்த நால்வர் கையிலும் எங்கள் டிபன் பாக்ஸ் இருந்தது. அதுவும் அதைத் திறந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
எங்களுக்கு செம கடுப்பு. நாங்கள் “ கொஞ்சம் கூட மேனர்ஸ் “, இல்லாமல் சாப்பிடுறதைப் பாரு. அனகோண்டா, நீர் யானை, எருமை, காட்டுப் பன்றினு திட்டினோம். சரி படிப்போம்னு உட்கார்ந்தோம். அன்னிக்கு யார் முகத்திலே முழிச்சோம் என்று தெரியவில்லை. திடீர்னு பிரின்சிப்பால் இவனுகளோட அப்பா நிர்வாகி எல்லாரும் வந்து எங்களிடம் பேசினார்கள். தப்பா எடுத்துக்காதீங்க அம்மா. அங்கே சரியில்லைனு தான் இங்கே கூட்டிட்டு வந்தோம்.
இங்கேயும் டியூசனுக்குப் போன இடத்தில் அவர்கள் மண்டையை உடைச்சிட்டு வந்துட்டானுகம்மா. அதனாலே நீங்க ஐந்து பேரும் சொல்லிக் கொடுங்கனாங்க.
ஆனால் அமிர்தாவும், அமலாவும் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. எல்லாருமே பயந்து போய் இல்லை சார் “ பார்க்கிறவங்க. ஏதாவது தப்பா பேசப் போறாங்க” சார் என்றோம். அதெல்லாம் உங்களுக்கு ஒரு பிரச்சனையும் வராது என்று கூறினர்.
இல்லை சார் எங்க வீட்டிலே கேட்டுட்டு சொல்கிறோம் என்று கூறினோம். நாங்களே கேட்டுச் சொல்கிறோம் என்று கூறி நிர்வாகியே போய் பேசிட்டு வருகிறேன் என்று கூறி சென்றார். அவர் திரும்பி வந்து எல்லாரும் உங்க வீட்டிலே ஒத்துக்கிட்டாங்க என்று கூறினார்.
நாங்கள் அதை உண்மை என்று நம்பியது தான் தவறு. வீட்டில் கேட்டிருக்க வேண்டும். அப்படிச் செய்யாதது எவ்வளவு பெரிய தவறு என்று புரியும் போது எல்லாமே என் கை மீறிப் போய் விட்டது.
நாங்களும் கற்றுக் கொடுத்தோம். அவர்களும் எந்த விதப் பிரச்சனையும் பண்ணாமல் நன்றாகக் கற்றுக் கொண்டார்கள். அதற்குப் பிறகு ரிவிசன் தேர்வு எல்லாவற்றிலும் நல்ல மதிப்பெண் வாங்கினார்கள். எக்ஸாம் ஹாலிடே வந்தது. அவரவர் படிப்பில் தீவிரமாக இறங்கினோம். எக்ஸாம் வந்தது.
எல்லாத் தேர்வும் முடிந்தது. அடுத்து எங்கே சேர்வது என்று பேசி முடிவெடுத்தோம். பிறகு அனைவரும் ஐஸ்கிரீம் சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு வந்தேன். அப்பா அன்று அதிசயமாக வீட்டில் இருந்தார். என்னப்பா வீட்டில் இருக்கீங்க என்று கேட்டேன். அவர் ஒன்றும் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தார். என்னப்பா உடம்பு சரியில்லையா என்றுகேட்டேன். அதற்கும் பதில் இல்லை. அப்பா இந்த தடவையும் நாங்க ஐந்து பேரும் ஸ்டேட் பர்ஸ்ட் வருவோம். அப்புறம் ஸ்டெல்லாமேரீஸ் காலேஜில் சேரலாம்னு இருக்கோம்ப்பா என்றேன்.
அவ்வளவு தான் கன்னம் திகுதிகுவென்று எரிந்த போது தான் தெரிந்தது. அப்பா என்னை அடித்திருக்கிறார் என்று. என்னப்பா என்றேன். அவ்வளவு தான் அடி கன்னத்தில் விழுந்தது. பெல்ட்டை உருவினார்.
எதுக்கு என்னை அடிக்கிறீங்க. நான் என்னப்பா தப்பு செய்தேன் என்று கேட்டேன். நீ கண்டவனோட கூத்தடிச்சிட்டு ஒன்னும் தெரியாதது போல நடிக்கிறே. உனக்காக நான் எவ்வளவோ பேர் சொல்லியும் நான் வேறு ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கலை.
ஆனால் உனக்குப் பதினெட்டு வயசுலே காதல் கேட்குதா என்று கோபத்துடன் கேட்டார். எனக்கு ஒன்றுமே புரியலை. நான் என்ன சொன்னாலும் அவர் கேட்கிற நிலைமையிலும் இல்லை. அதோட அமைதியா நின்றேன். அவர் ஆத்திரம் தீர பெல்ட்டால் அடி பின்னிவிட்டார்.
அவர் ஆத்திரம் தீர அடித்து விட்டு இனி உனக்குப் படிப்பும் கிடையாது. வெளியேயும் எங்கேயும் போகக் கூடாது. உன்னை முதல்லே எவன் தலையிலையாவது கட்டி வைத்து விட்டுத் தான் எனக்கு நிம்மதியா மூச்சு விட முடியும் என்று சொன்னார்.
நான் அமைதியா எனக்குக் கல்யாணம் பண்ணி வைத்தால் தான் உங்களுக்கு நிம்மதினா அதையே செய்யுங்கப்பா என்று கூறிவிட்டு நடக்க முடியாமல் நடந்து என் அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக் கொண்டேன்.
அவர் வெளியே கதவைப் பூட்டிவிட்டு சென்றதைப் பார்த்தேன். அப்போ தான் எனக்கு அம்மா இல்லையே என்ற வருத்தமே வந்தது. என் மனசு அம்மா மடி தேவை என்பதை முதன் முதலில் உணர்ந்தேன்.
அதற்கப்புறம் அம்மா போட்டோவும் புடவையும் தான் துணை. ஒரே வாரத்தில் ஒரு கும்பல் என்னைப் பெண் பார்க்க வந்தது. அடுத்த முகூர்த்தத்திலேயே முதல்” நிச்சயதார்த்தமும்,” மறு நாள்” திருமணம்”, என்றும் முடிவு செய்தனர்.
ஆயா எவ்வளவோ அப்பாவிடம் வாதாடினார்கள். ஐயா நம்ம பொண்ணு அப்படிப்பட்ட பொண்ணு கிடையாது என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள்.
ஆனால் “அப்பா அதைக் காதில் வாங்கவில்லை”, நம்பவும் இல்லை. நான் ஆயாவிடம் விடு ஆயா என் தலையெழுத்து எப்படியோ அப்படியே நடக்கட்டும் என்று கூறிவிட்டேன். திருமணப் பத்திரிக்கையைப் பார்த்து என் தோழிகள் பதறி அடித்து ஓடி வந்தார்கள். அவர்கள் அப்பா அம்மா எல்லோரும் அப்பாவிடம் பேசினார்கள்.
அவ்வளவும் செவிடன் காதில் ஊதிய சங்கு போலாயிற்று.
என் தோழிகள் அழுது அரற்றி அவர்கள் அப்பாவை நிர்வாகியைப் பார்த்துப் பேசச் சொல்லி அனுப்பினார்கள். ஆனால் அவர்கள் வருவதற்குள் என் கழுத்தில் தாலி ஏறிவிட்டது.
யாரிடமும் எதுவும் பேசாமல் என் அப்பாவின் முகத்தை ஏறிட்டுக் கூடப் பார்க்காமல் அவனுடன் சென்றேன். அப்பாவைப் பிடித்து நிர்வாகி அவருடைய மகன்கள் எல்லாரும் சேர்ந்து திட்டியிருக்கின்றனர்.
அந்தக் குடும்பம் முதலில் நார்மலாகத் தான் இருந்தது. அவனும் வீட்டில் இருந்தபடியே லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தான். இரண்டு மாதம் ஓடி விட்டது. அப்போது தான் கவனித்தேன்.
அந்த வீட்டில் நிறைய ஆண்கள் வருவதும் இரவில் அந்த வீட்டுப் பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொண்டு செல்வதும் எனக்கு நெருடலாக இருந்தது. திடீர்னு ஒரு நாள் என் கணவர் நான் வெளியூர் போறேன், வரப் பத்து பதினைந்து நாளாகும் என்று கூறிச் சென்றார்.
நான் ஏங்க நானும் உங்களோட வருகிறேன் என்றேன். எனக்கு இங்கே இருக்கப் பயமாயிருக்கு என்றேன். என்ன பயம் எல்லாரும் இருக்காங்க என்றார். அதற்கு மேல் பேசவில்லை.
ஆனால் இரவில் படுக்கும் போது கதவை நல்லா தாழ்ப்பாள் போட்டு விட்டு முகம் வரை போர்வையை மூடிக் கொண்டு படுத்திருந்தேன். நடு ஜாமத்தில் தண்ணீர் தாகம் எடுக்க தண்ணீர் பாட்டிலில் தண்ணீர் இல்லை.
சரி கீழே போய்க் குடித்து விட்டு வரலாம் என்று கதவைத் திறந்து வெளியே வந்தேன். படியில் இறங்கக் கால் வைக்கும் போது “ என் கணவர் பேசும் சத்தம் கேட்டது”, நான் அதிர்ந்து போய் நின்றேன். என்னடா இன்னும் பொண்டாட்டி மோகம் தீரலையோ, இன்னும் எத்தனை நாளைக்கு இங்கேயே அடைந்து கிடப்பது. சீக்கிரம் தள்ளிவிடப் பாரு என்றாள்.”
எனக்கு ஹார்ட் அட்டாக்கே வந்து விடும் போல் இருந்தது. அதற்குள் எனக்குப் புருசன் என்று சொன்னவன்
“ ஏய் இப்போ தான் இவளை ஐம்பது இலட்சத்துக்கு விலை பேசியிருக்கேன். மும்பைலே ***** அவள்கிட்டே போய் விட்டால் அவளுக்கு இவளாலே கோடிக் கணக்கிலே பணத்தை சம்பாதிச்சுடுவா. நாளைக்கு இந்த வீட்டில் நாம இருந்தோம் என்கிற அடையாளமே இருக்கக் கூடாது, சரியா என்றான்.
அவ்வளவு தான் சப்த நாடியும் ஒடுங்கி விட்டது. வேகமாக என் அறைக்குள் ஓடித் தாழ்ப்பாள் போட்டு விட்டு அப்படியே அம்மா போட்டோவை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு அழுதேன்.
இது அழுகிறதுக்கான நேரமில்லை என்பதை உணர்ந்து எப்படி தப்பிக்கிறது என்று நான் இருந்த அறையைச் சுற்றிப் பார்த்தேன்.
பால்கனிக் கதவைத் திறந்தேன். இரண்டு மூன்று சேலைகளைக் கட்டி பால்கனியில் இருந்த ஆனியில் கட்டிவிட்டு அதைப் பிடித்துக் கொண்டு இறங்கினேன். தப்பித்து விட்டோம் என்று நினைத்து மெயின் கேட்டை நோக்கி ஓடினேன்.
ஆனால் திடீர்னு யாரோ என் முடியைப் பிடித்து இழுத்து கன்னத்தில் பளார் பளார்னு அறைந்தார்கள். நான் சுதாரித்து எழுந்து தாக்கும் முன்னே என் முகத்தில் ஏதோ ஸ்பிரே அடிக்கப்பட்டது. அவ்வளவு தான் தெரியும். விழித்துப் பார்க்கும் போது இங்கே இருந்தேன்.
சூழ்நிலையை உணர்ந்து கொண்டேன். அந்த சூனியக்காரியிடம் காலில் விழுந்து அம்மா எனக்கு நல்லா பாடி ஆடத் தெரியும். நான் அப்படி சம்பாதிச்சுக் கொடுக்கிறேன். கொஞ்சம் கருணை காட்டுங்கம்மா என்று அழுதேன். என் நேரம் நல்லா இருந்ததோ என்னவோ அந்த அரக்கிக்குள்ளும் கொஞ்சம் இரக்கம் இருந்து ஒத்துக் கொண்டாள்.
வெளியிடங்களுக்குப் போகும் போது ஒரு சில நல்ல மனிதர்கள் டிரைவராக இருந்தார்கள். அவர்கள் மூலம் கார் ஓட்டக் கற்றுக் கொண்டேன். எனக்குத் தேவையானதையும் அவர்களே வாங்கிக் கொடுத்தார்கள். அது தான் இன்று நம்மால் தப்பிக்க முடிந்தது என்று கூறி முடிக்கவும் வண்டி சென்னை அடையவும் சரியாக இருந்தது.
வானவில் வளரும்