Naan Un Adimayadi–EPi 11

Naan Un Adimayadi–EPi 11

அத்தியாயம் 11

அட பொன்னான மனசே

பூவான மனசே

வெக்காத பொண்ணு மேலே ஆச (முத்துக்காளை)

 

கட்டிலில் படுத்து விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தான் காளை. நேரம் இரவு இரண்டைத் தாண்டி இருந்தது. மெலிதாக தண்ணீர் சத்தம் கேட்டது. பெருமூச்சு ஒன்றை இழுத்து விட்டான். அவனது அறை பாத்ரூமுக்கு கொஞ்சம் தள்ளி இருந்தாலும், தண்ணீர் ஊற்றுவது, புழங்குவது எல்லாம் அவன் பாம்பு காதுக்கு நன்றாகவே கேட்கும்.                                                               

‘என்னை மட்டும் கண்ணாலம் பண்ணிக்கிட்டனா, ரூமுக்குள்ளாறயே உனக்கு பாத்ரூம கொண்டு வந்துடறேன் எலிசு! இப்போ கூட உன் ரூமுல கட்டிக் குடுப்பேன், ஆனா எங்காத்தா எனக்கு கன்னங் கன்னமா குடுக்குமே எலிசு! என்ன பண்ண!!! நான் இன்னும் எங்காத்தாக்குத்தானே புள்ள, உனக்கு புருஷன் இல்லையே’ நினைக்கும் போதே லேசாக கண் கலங்கியது காளைக்கு.

இனி அதற்கு வழியே இல்லை எனும் போது அவனும் தான் என்ன செய்வான்! மங்கையின் அப்பாவோடு தோப்பில் உலாத்திக் கொண்டிருந்தவன் நினைக்கவில்லையே அந்த உலாவல் அவன் வாழ்க்கையில் வர வேண்டிய குலாவலை குலைக்கும் என்பது.

“காளை”

“சொல்லுங்க டீச்சரப்பா!”

“உன் தோட்டத்து மாங்காய் நல்ல இனிப்பா இருக்குப்பா! ஊசிப் போட்டு பழுக்க வைக்கறாங்க அப்படி இப்படின்னு சொல்லவும் எனக்கு மாங்காய் சாப்பிடறதுனாலே ஒரு பயம். ஆனா இயற்கை முறையிலே நீ விளைவிக்கற இந்த மாங்காய் டேஸ்டியா இருக்கு”

அவர்கள் அமர்ந்து ஓய்வெடுக்கும் கொட்டகையில் அவரை அமர வைத்து மாங்காய் வெட்டிக் கொடுத்திருந்தான் காளை. சுகந்தமான காற்றை அனுபவித்தப்படி மாங்காயை ருசித்துக் கொண்டிருந்தார் அஜய்.

“நமக்கு லாபமும் முக்கியம்தான்! ஆனாலும் மனுஷன் வயித்தக் கெடுத்து வர லாபம் தேவையில்ல டீச்சரப்பா”

“நீ ரொம்ப நல்லன் காளை! எனக்கு உன்னை ரொம்பப் புடிச்சிருக்கு”

உடனே உச்சிக் குளிர்ந்து விட்டது காளைக்கு. வெட்கமாய் புன்னகைத்தான்.

“சரி சொல்லு! எப்போ எங்களுக்கு கல்யாண சாப்பாடு போட போற?” என கேட்டார் அவர்.

‘நீங்க ஹ்ம்ம்னு சொன்னா இந்த நொடியே போட்டுடுவேன் மாமோய்!’ மனதில் சொன்னவன்,

“இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும் டீச்சரப்பா” என வெளியே சொன்னான்.

“இந்தக் காலத்துப் புள்ளைங்களுக்கு காலாகாலத்துல கல்யாணம் செய்யனும், குழந்தைக் குட்டிப் பெத்துக்கனும்னு தோண மாட்டுது. என்ன செய்ய, காலம் அப்படி! கேரியர் பின்னாடி ஓடுறாங்க, வயது பிந்தி கல்யாணம் பண்ணுறாங்க. ஒத்தப் புள்ளையப் பெத்த கையோட நாற்பதுலேயே ஹார்ட் அட்டாக் வந்துடுது! பொண்ணுங்களுக்கு மெனேபொஸ் வந்துடுது! அப்புறம் வாழ்க்கையில என்ன இருக்கு சொல்லு அனுபவிக்க!’ என சொல்லி பெருமூச்சு விட்டார் அவர்.

“நீங்க சொல்லறதும் நியாயம் தான் டீச்சரப்பா”

“எல்லாம் நல்லபடி நடந்திருந்தா எங்க அம்முவும் இன்னேரம் புள்ளக் குட்டின்னு நிறைவா வாழ்ந்துருப்பா” என சொல்லி பெருமூச்சு விட்டார் அவர்.

இவனுக்குத்தான் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

“என்ன சொல்லுறீங்க டீச்சரப்பா?”

“உங்க கிட்டலாம் ஒன்னும் சொல்லிருக்க மாட்டாளே! எங்க அம்மு எதையும் சட்டுன்னு வெளிய சொல்லிட மாட்டாப்பா! அமுக்குனி!” என சொன்னவர் தன் மகளின் நிச்சயக் கதையை சொல்ல ஆரம்பித்தார்.

“நாங்க பட்டணத்துக்காரங்க. சொந்தபந்தம்லாம் கிராமத்துல இருக்காங்க! நம்ம அம்மு படிப்பு, வேலைன்னு எங்க கூட கிராமத்துக்கு அவ்வளவா வந்தது இல்ல. ஒரு தடவை சொந்தக்காரங்க கல்யாணம்னு குடும்பமா போயிருந்தாம் ஊருக்கு. அங்க வச்சு இந்தப் பையனப் பார்த்துட்டுப் பிடிச்சிருக்குப்பான்னு என் கிட்ட சொன்ன! விசாரிச்சுப் பார்த்ததுல முறைதான். பையனும் போலீஸ் டிபார்ட்மெண்ட்ல இருந்தான். அம்மு அம்மாவும் சரின்னு சொல்லிட்டா! மாப்பிள்ளை வீட்டுல ஆள் வச்சுப் பேசனோம். சரின்னு சொல்லவே டைம் எடுத்துக்கிட்டாங்க! அப்போவே நான் சுதாரிச்சிருக்கனும். நிச்சய டேட் ஃபிக்ஸ் பண்ணோம். இவ போன் நம்பர் வாங்கி அந்தப் பையன் கிட்ட பேசிட்டுத்தான் இருந்தா போல! ஆனா கல்யாணப் பொண்ணுக்குள்ள கலகலப்பு இல்ல. சாதாரணமாத்தான் நடமாடிட்டு இருந்தா. நிச்சயமும் கோலாகலமா வச்சோம். சேர்ந்து கூட ஆடனாங்க!”

“அப்புறம் என்னாச்சு டீச்சரப்பா?”

“என்ன சொல்ல! திடீர்னு இந்தக் கல்யாணம் நடக்காதுப்பா, முடிச்சு விட்டருங்கன்னு வந்து நின்னா! இதென்ன பொம்மைக் கல்யாணமா? எவ்ளோ செலவு பண்ணோம்! பத்திரிக்கைலாம் மாடல் பார்த்துக் குடுத்துட்டோம். அவங்க சைட்ல டேட் குடுக்கறது மட்டும்தான் மிச்சம். ஆசை ஆசையா சாமுத்திரிகா பட்டுலாம் ஆன்லைன்ல பார்த்து வச்சா என் பொண்ணு! இப்போ வேணாம்னா என்ன அர்த்தம்னு நான் கைய நீட்டிட்டேன்!”

“ஏன் டீச்சரப்பா அடிச்சீங்க? பெத்துட்டா அடிக்க உரிமை வந்துருதா?” என்ன முயன்றும் கோபம் எட்டிப் பார்த்தது அவன் குரலில்.

“அதான்பா காளை, நான் முதலும் கடைசியுமா அவளை அடிச்சது! எனக்கு மட்டும் என் அம்முவ அடிக்கனும்னு ஆசையா! ஊரக்கூட்டி வச்சு நிச்சயம் பண்ணிட்டு இப்போ நிறுத்திடுங்கன்னு சொல்றாளேன்னு கோபம்! கை நீட்டிட்டேன்! அதுக்கு வருந்தாத நாளில்ல! ஒரு துளி கண்ணீர் விடலியே இவ! கல்லு மாதிரி அப்படியே நின்னா! அந்தப் பையனுக்கு சின்ன வயசுக் காதல் இருந்ததாம். இந்தம்மா ஆசீர்வாதம் பண்ணிட்டு வந்துருக்கா! இவளுக்கு என்ன பிரச்சனையோ, என்ன குறையோ அவன் கல்யாணத்த நிறுத்திட்டு இன்னொருத்திய கட்டிக்கிட்டான்னு எங்க சொந்தபந்தமே தண்டோரா போட்டுட்டாங்க! வெளிய தலைக் காட்ட முடியல.”

“சீச்சீ! என்ன மனுசங்க இவங்களாம்!” என கொதித்துப் போனான் காளை.

“இவ அம்மா வேற!” என இன்னும் என்னவோ சொல்ல வந்தவர் அப்படியே பேச்சை மாற்றினார்.

“அம்முவ முன்னால போக விட்டு பின்னால பேசி சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க சொந்தக்காரங்க. அவ அழகா இருக்கா, நல்லா படிச்சு நல்ல வேளையில இருக்கால்ல! அந்தக் காண்டு. இப்படி மட்டம் தட்டி மனச ஆத்திக்கிட்டாங்க! நிம்மதி இல்லாம தூரமா வந்துட்டா! விடமாட்டேன்ன்னு சொன்ன என் கிட்ட கெஞ்சி ரெண்டு வருசம் டைம் கேட்டா! நான் பார்த்த மாப்பிள்ளைத்தான் சரியா வரல, இனிமே நீங்க சொல்லற யாரா இருந்தாலும் கட்டிக்கிறேன்னு சொல்லிட்டு கிளம்பி வந்துட்டா என் மக!” என சொல்லி முடித்தார்.  

“டீச்சரோட நல்ல மனசுக்கு அவங்க பாதத்த தரையில நடக்க விடாம தாங்கற மாப்பிள்ளைக் கிடைப்பான் டீச்சரப்பா”

மெல்ல புன்னகைத்தவர்,

“கிடைச்சிட்டான் காளை!” என சொன்னார்.

“என்னாது கிடைச்சிட்டானா?”

“ஆமா! இங்க வந்ததே அம்மு கிட்ட இந்த விஷயத்தை சொல்லத்தான். ஆனா அவ இன்னும் இறுக்கமாவே இருக்கா! பழசெல்லாம் இன்னும் மறக்கலப் போல! அதான் அவ கிட்ட ஒன்னும் சொல்லாமலேயே கிளம்பறேன். அவ மேல அக்கறை வச்சிருக்கிற உன் கிட்ட சொல்லனும்னு தோணுச்சு! அதான் சொல்லிட்டேன்! இந்த முறையாச்சும் எந்தத் தடங்களும் இல்லாம அம்முவ புறம் பேசுனா சொந்தங்க முன்னுக்கு என் மகளை சீரும் சிறப்புமா கட்டி வைக்கனும்! ஒரு தகப்பனா என் மக பட்ட அவமானத்த துடைச்சி அவ அழகுக்கும் அறிவுக்கும் ஏத்த பையனை கட்டி வச்சு நல்லா வாழ வைப்பேன் காளை.”

சட்டென வேறு புறம் திரும்பிக் கொண்டான் காளை. அழகு எனும் வார்த்தையில் குப்புற விழுந்த அவன் மனம், அறிவு எனும் வார்த்தையில் சேற்றையும் பூசிக் கொண்டது. ஆண் மனது ஒரு ஆணுக்குத் தெரியும் என்பது போல அவன் மனதில் தன் மகள் இருக்கிறாள் என தெரிந்துத்தான் இந்தக் குண்டைப் போட்டாறோ இல்லை தெரியாமலே போட்டாறோ அவர், அணுகுண்டை விட சக்தி வாய்த குண்டாக நெஞ்சைத் துளைத்து மூளை முடுக்கெல்லாம் இருந்த எலிசின் பிம்பத்தை சர்வ நாசமாக்கியது.

“காளை!”

“சொல்லுங்க டீச்சரப்பா” குரல் கரகரவேன வந்தது.

“இந்த ஊருல உன்னையும் உன் குடும்பத்தையும் நம்பித்தான் என் மகள விடறேன்! அவ இங்க வந்த புதுசுல ஒரே கலக்கமா இருந்துச்சு! உங்கள பத்திலாம் அவ நல்லபடியா சொல்லவும்தான் நிம்மதியாச்சு! அம்முவா பத்திரமா பார்த்துக்கப்பா!”

“அதெல்லாம் சொல்லனுமா டீச்சரப்பா! நாங்க பார்த்துப்போம்”

‘என் கண்ணுக்குள்ள வச்சிப் பார்த்துப்பேன் அவங்கள! ஆனா அந்தக் குடுப்பிணை இந்தக் காட்டானுக்கு இல்லையே’ மனம் ஊமையாய் அழுதது.

“அம்முவ மாப்பிள்ளையேப் பார்த்துப்பாரு! ஆனாலும் நீங்களாம் கூட இருக்கறது எனக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு! இனி ஹேப்பியா கிளம்பி போவேன்” என சிரித்தார் அஜய், இங்கொருத்தனின் சிரிப்பை அழித்து விட்டது தெரியாமல்.

நீர் புழங்கும் சத்தத்தில் நடப்புக்கு வந்தான் காளை. மணியைப் பார்த்தான், காலை நான்கு என காட்டியது. இப்படி எழுந்து எழுந்து வந்தா எப்படி நிம்மதியான ராத்தூக்கம் இருக்கும் என டீச்சருக்காக மனம் வருந்தியது அவனுக்கு! தனக்கு இல்லை எனத் தெரிந்தும் பாசம் வைத்த மனம் பாவைக்கு இறங்கியது. அவளைப் போலவே தானும் விழித்து விழித்து தூங்குவது எல்லாம் அவனுக்குப் பெரிதாக தோன்றவில்லை.

கண்ணை இறுக மூடிக் கொண்டான் காளை. இன்னும் அரை மணி நேரத்தில் எழுந்து மங்கைக்கு சுடுதண்ணீர் போட வேண்டும். கல்யாணம் ஆகாவிட்டால் போகிறது, கொண்ட கடமையை விட மாட்டான் இந்தக் காளை. புரண்டுப் புரண்டு படுத்தவன், மெல்ல எழுந்து அமர்ந்தான். இப்பொழுதெல்லாம் போனில் அடிக்கடி கேட்கும் பாடலை மீண்டும் ஒலிக்க விட்டான் முத்துக்காளை.

“எடுத்து வச்சப் பாலும்

விரிச்சு வச்ச பாயும்

வீணாகத்தான் போகுது” பாடலோடு சேர்ந்து மெல்லிய கண்ணீர் குரலில் பாடினான் காளை.

அன்று செவலையுடன் பரோட்டா கடையில் அமர்ந்திருந்தான் காளை. மூன்று நாள் மழிக்கப்படாத தாடியுடன் பரதேசி கோலத்தில் இருந்தவனை மேலும் கீழும் பார்த்தான் செவல.

“தாடி வுட்டாத்தான் காதல் தோல்வின்னு ஓலை சுவடில எழுதி வச்சிருக்காங்களா மச்சி?”

“ம்ப்ச் போடா!”

“இல்ல காளை! காதல் தோல்வினா சரக்கடிக்கனும், நாய் பக்கத்துல படுக்கனும்! அதான் காலம் காலமா தமிழ் சினிமா சொல்லிக் குடுத்த வழக்கம். அங்க குட்டி சுவருகிட்ட கால தூக்குதே அந்த நாய் ஓகேவா பாரு?”

“என்னடா நக்கலடிக்கிறியா? சிங்கம் சீக்குல விழுந்தா சிப்பன்சி அது முன்னுக்கு சிலுக்கு டான்சு ஆடுமாம். ஓங்கி ஒன்னு விட்டா மொகரை பேந்துக்கும் பார்த்துக்கோ”

“சிங்கம், சிப்பன்சி, சிலுக்கு… அடடடா! பின்ரடா காளை”

“இப்போ நீ வாய மூடல, உன்னைப் பின்னறேன் பாரு! என் காதல் அப்படியே உசுரோடத்தான் இருக்கு! என்ன தீ வச்சு கருக்கிடாமா, சவப்பெட்டியில போட்டு மூடி மண்ணுக்குள்ள போட்டு வச்சிருக்கேன்! அங்கேயே அது ஓய்வு எடுக்கடும். காளை வாழ்க்கையில காதல், கல்யாணம் எல்லாத்தையும் போட்டு மூடியாச்சு! இனி அருணு, அதிதின்னு, மாங்காய் தோப்புன்னு காலத்த ஓட்டிட வேண்டியதுதான் ” சோகமாக சொன்னவன் டீயை மெல்ல உறிஞ்சிக் குடித்தான்.

அப்பொழுதுதான் அங்கே வந்தான் நம் பக்கோடா பாண்டியன். அவனோடு வாடகை ரூம் மாடசாமியும் ஆஜர். கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த காளையைப் பார்த்த இருவருக்கும் நக்கல் சிரிப்பு.  

“அப்புறம் மாடசாமி, நிலவரம்லாம் எப்படி இருக்கு?”

“எந்த நிலவரத்த கேக்கற பாண்டி?”

“அதான்யா ஊருக்குள்ள சில பேரு ஃப்ரீயா பக்கோடா சாப்படறாங்களாம்! அந்த விஷயம் உனக்குத் தெரியுமா?”

“இதென்னாடா புது கதையா இருக்கு? நெசமாலுமா?”

“அட ஆமான்றேன்! வீட்டுல, தோப்புலன்னு ஒரே பக்கோடா மாயமாம்! கூடிய சீக்கிரத்துல பக்கோடா திம்பது எப்படினு புஸ்தகமே போட்டுடுவான் பய புள்ளைன்னு ஊரெல்லாம் பேச்சா இருக்குன்னா பாரேன்”

“இதென்னா கூத்தா இருக்குது! இதெல்லாம் அடுக்குமா? சிவசிவா”

“அட நீ என்னடா சிவன கூப்புடறே! அவருக்கே ஓம் பக்கோடாய நமஹன்னு நம்ம பய பாடம் சொல்லிக் குடுப்பான்.” என சொல்ல அங்கே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த அனைவரும் கொள்ளென சிரித்தனர்.

இது எதையும் கண்டுக் கொள்ளாமல் தன் சோகத்தில் முழுகி டீயை சரக்காக நினைத்துக் குடித்துக் கொண்டிருந்தான் காளை. தங்கள் பேச்சுக்கு எதிர்வினை வராமல் போக கடுப்பாகிப் போயினர் இருவரும்.

“மாடசாமி, திடீர்னு புள்ள கிள்ள வச்சிட்டா என்னாடா பண்ணுவாங்க?”

“அட நீ வேற! டீச்சர் என்ன கிராமத்து ஆளா, ஒன்னும் தெரியாம வயித்துல வாங்கிக்க! படிச்சவங்க, படிச்சுக் குடுக்கறவங்க, அதெல்லாம் கரீக்டா பாடம் எடுத்துருப்பாங்க” என சொல்லி வாய் மூடும் முன் கடை வாயில் ரத்தம் ஒழுக கீழே விழுந்துக் கிடந்தான் மாடசாமி.

“எம்புட்டு ஏத்தம் இருந்தா, அறிவு கண்ண தொறக்க வந்த டீச்சரப் பார்த்து இப்படி அறிவுக்கெட்டத்தனமா பேசுவீங்க?”

அடுத்து மூக்கில் ரத்தம் ஒழுக பாண்டியும் கீழே விழுந்துக் கிடந்தான். ஆத்திரத்தில் காளை சீறிப் பாய்ந்து பரோட்டா கடையையே துவம்சம் செய்தது. சிரித்தவர்கள் எல்லாம் தெறித்து ஓட, துரத்தி துரத்தி அடித்தான் காளை.

“இப்படிலாம் அந்த தேவதைப் பொண்ணு மேல அபாண்டமா பழி சொல்லுவீங்களாடஆ? சொல்லுவீங்களா?” என கேட்டு கேட்டு மிதித்தான். ஐந்து பேர் சேர்த்துப் பிடித்துக் கூட திமிறிக் கொண்டுப் போய் அடித்தான். வீட்டுக்கு நியூஸ் பறக்க, அங்மே மங்கை மட்டும்தான் இருந்தாள். காளையின் ஆக்ரோசத்தைக் கேள்விப்பட்டு ஓடிவந்தாள் மங்கை.

அத்தனை பேர் பிடித்தும், தடுத்தும் அவன் ஆத்திரம் அடங்கவேயில்லை. ஓடி வந்தவள் மூச்சு வாங்க அவன் பின்னேப் போய் நின்றாள்.

“காளை, காளை விடுங்க”

அவள் குரல் அவன் செவியில் நுழையவேயில்லை.

“காளை” என கத்தியவள், சட்டேன எல்லோர் முன்னும் அவன் கையை இறுக பற்றினாள். புடைத்துக் கொண்டு நின்ற நரம்புகள் அவள் தொடுகையில் அப்படியே அடங்கிப் போயின. விறைத்துக் கொண்டு நின்றவன், அப்படியே இளகினான். அவன் அமைதியானதும் தான் அவனை நன்றாகப் பார்த்தாள் மங்கை. கண்கள் சிவந்துக் கிடக்க, முகம் இறுக்கமாக இருந்தது. கையில் வேறு ரத்தம் வந்துக் கொண்டிருந்தது. சட்டேன தனது துப்பட்டாவை எடுத்து ரத்தக் காயத்தில் அழுத்தினாள் மங்கை.

“என்ன இது சின்ன பசங்க மாதிரி சண்டை? நம்ம வீட்டுக்குப் போகலாம் வாங்க” என அவன் கையைப் பிடித்து இழுத்தாள் தவமங்கை.

ஆக்ரோஷமாக பந்தாடியவன், அவள் இழுப்பில் ஆட்டுக் குட்டிப் போல பின்னால் போனான். அவனிடம் அடி வாங்கியவர்களும், சண்டையைத் தடுக்கப் போய் ஒரு பக்கம் கன்னம் வீங்கி இருந்த செவலையும் போய் கொண்டிருந்தவனையே ஆச்சரியமாகப் பார்த்திருந்தனர்.

“டீச்சர் கையைப் புடிச்சதும் மந்திரிச்சு விட்டவன் மாதிரி போறான் பாத்தியா? ரெண்டுப் பேருக்கும் ஒன்னும் இல்லாமயா அடங்கிப் போறான்?” என ஊரே கொரொனாவின் இரண்டாவது அலை ஆரம்பித்திருப்பது போல இரண்டாவது அலை புரளியைப் பரப்ப ஆரம்பித்தார்கள். அது ஊரை விட்டு ஊர், நாட்டை விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம் பரவ ஆரம்பித்தது. அது எப்படி என்றால் இங்கே உள்ளவவர்கள் வாக்கப்பட்டுப் போன அடுத்த ஊரு புள்ளையிடம் சொல்ல, அடுத்த ஊரில் உள்ளவர்கள் துபாய்க்கு வேலைக்குப் போன புள்ளைக்கிட்ட போன போட்டு சொல்ல, இப்படி கொரொனாவ விட படு வேகமாக பரவியது #(ஹேஸ்டேக்) டீச்சர் காளையை வச்சிருக்காங்க டோய் எனும் கரேண்ட் நியூஸ்.

இந்த ட்ரேண்டிங் நியுஸ் பொட்டியுள் கிடக்கும் காளையின் காதலை உயிர்ப்பிக்குமா, இல்லை மண்ணோடு மண்ணாக்குமா……. மீ டூ வேயிட்டிங் ஆவலாக!!!!!!

 

(அடி பணிவான்)

error: Content is protected !!