Alaikadal 7

ஏழு வருடம் முன்பு நடந்தவற்றை திரும்பிப் பார்க்கிறோம் என்பதை நினைவுபடுத்திக்கொள்கிறேன் தோழமைகளே.

அலைகடல் – 7

தேர்தலுக்கு நான்கு மாதங்களே இருக்க தேர்தல் ஆணையத்திற்கு இப்போது விண்ணபித்தால் மட்டுமே அடுத்து சின்னம் கிடைத்து தேர்தல் பிரசாரத்திற்கு சரியாக இருக்கும் என்பதால் அந்த வாரம் முழுவதும் ஆரவ்வின் வேகம் அசுரத்தனத்தை ஒத்திருந்தது.

அவனின் ரசிகர் மன்றங்களே தமிழ்நாட்டில் கிட்டதட்ட நூறைத் தொட அத்தனையும் கட்சி அலுவலகமாக ரசிகர்களின் சம்மதத்துடன் மாற்றினான். விருப்பம் உள்ள ரசிகர்களை வேட்பாளராகவும் தேர்வு செய்தான்.

ரசிகர் அல்லாத பொதுமக்களும் தேர்தலில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தான். முக்கிய தகுதியாக எவ்வளவு செலவு செய்ய முடியும் என்று பார்க்காமல் சேவை மனப்பான்மை இருந்தால் போதும் என்க மூத்த தலைமுறையினர் தானும் போட்டியிடலாமா? என யோசிக்க ஆரம்பித்தனர்.

மாறாக இளைய தலைமுறையினரோ யோசிக்கும் நேரம் கூட வீண் என்பது போல் அவனின் பால் உள்ள அன்பால் ஆண், பெண் பராபட்சம் இன்றி வேட்பாளராக போட்டியிட ஆர்வம் காட்டினர். அவனின் இந்த புதிய அவதாரத்திற்கு கிடைத்த வரவேற்பு ஆளும் கட்சியை பீதியில் ஆழ்த்தியது.
**************************************

அடையாரில் இருக்கும் முதலமைச்சர் அருள்ஜோதியின் ஜோதிபவன் இல்லம்.

சுற்றிலும் தோட்டம் பரந்து விரிந்திருக்க நடுவே வீற்றிருந்தது அந்த ஒற்றை பங்களா.

பழங்காலத்து அரண்மனையை நினைவுபடுத்தும் வகையில் தங்கமுலாம் பூசிய வாயிற்கதவு வழியாக உள்ளே நுழைய கிரானைட் கற்களின் பளபளப்பு கண்களை கூச செய்தது.

ஒவ்வொரு அணுவிலும் ஆடம்பரம் ஆர்ப்பாட்டமாக காட்சியளித்து வரவேற்க இரவு நேரத்திலும் பகலைத் தோற்கடிக்கும் அளவிற்கு ஒளிவீசியது.

பத்து பேர் தாரளமாக அமர்ந்துன்னும் மேசையில் குடும்பத்தினர் ஆறு பேரும் இரவு உணவிற்காக வந்து அமர்ந்திருக்க அவர்களின் முகமோ சுரத்தையின்றி ஏனோ தானோ என்றிருந்தது. அவரவர்க்கு வேண்டியதை எடுத்து வைத்து உண்டாலும் ஒவ்வொருவர் முகத்திலும் ஒவ்வொர் யோசனை.

ஒரு வாரமாகவே இப்படித்தான் சரியாகச் சொல்லப்போனால் ஆரவ் பேட்டிகொடுத்த தினத்தில் இருந்தே ஏற்பட்ட மனக்கிலேசத்தில் அருள்ஜோதி கட்சியின் முக்கிய தலைகளுடன் ரகசிய ஆலோசனை நடத்தி அதனை வீட்டில் இருக்கும் தந்தையுடனும் பகிர்ந்திருந்தார்.

பின்னே தாத்தன் தந்தையிடம் இருந்து வந்த பதவியாயிற்றே ஆண்டாண்டு காலமாய் கட்டி காத்த அரசியல் செல்வாக்கை புதிதாக ஒருவன் வந்து தட்டி பறிப்பதா? என்றிருந்தது.

அருள்ஜோதியின் தந்தை ஜோதிலிங்கமும் ஒரு காலத்தில் முதலமைச்சராக வீற்றிருந்து கோலோச்சியவர்தான். இருபது வருடங்களுக்கு முன் மனைவியையும் இழந்து சர்க்கரை நோயினால் புண் ஏற்பட்ட தன் வலதுகாலையும் இழந்ததும் பதவியை மகனிற்கு கொடுத்து உடல்நலம் பேண வீட்டோடு இருந்துவிட்டார். இப்போது செயற்கை கால் பொருந்தினாலும் எழுபத்து மூன்று வயது தள்ளாமையினால் நடக்க இயலாமல் சக்கர நாற்காலியின் உதவியுடன் வீட்டினுள் உலா வருகிறார்.

ஜோதிலிங்கம் தன் பெற்றோர், தங்கை, தங்கை கணவன் என கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தவர். தனக்கு வாரிசாக அருள்ஜோதி முதலிலும் அடுத்து சங்கரியும் பிறந்ததும் அவரின் தங்கையும் புருஷோத்தமனையும் அடுத்து வசந்தியையும் பெற்றெடுத்தார்.

சொந்தத்திலேயே திருமண முறையில் பிள்ளைகள் இருப்பதால் வெளியில் இருந்து வரன் எடுக்கும் வேலையும் மிச்சமாக பிள்ளைகளுக்கும் சிறு வயதிலேயே திருமணத்தை சொல்லி வளர்த்ததால் அருள்ஜோதியின் தங்கை சங்கரிக்கும் புருஷோத்தமனுக்கும் முதலில் திருமணம் முடிந்தது.

ஆனால் அருள்ஜோதியின் திருமணம் ஜாதகம் குரு பலன் போன்ற சில பல காரணங்களால் தள்ளிப்போக யாரும் எதிர்பாரா விதமாக வீட்டில் மரணங்கள் நிகழ்ந்தது.

ஜோதிலிங்கத்தின் பெற்றோர் அதாவது அருள்ஜோதியின் தாத்தா பாட்டி முதலில் மண்ணுலக வாழ்வை முடித்துச்செல்ல அடுத்தடுத்த வருடங்களில் வரிசையாக ஜோதிலிங்கத்தின் தங்கையும் தங்கை கணவனும் பின்னே சென்றனர்.

கூடவே ஜோதிலிங்கத்தின் மனைவி நோய்வாய்ப்பட்டார். அந்த நேரத்தில்தான் அருள்ஜோதி அரசியல் வாழ்க்கைக்குள் நுழைந்தது. பின் தாயின் உடல்நிலையிலும் அரசியலிலும் கவனம் செலுத்த கடைசியாக சில வருடங்கள் உயிரைப்பிடித்து வைத்த தாய் மரணப்படுக்கையில் இருந்து வற்புறுத்திய பிறகே அத்தைமகள் வசந்தியைத் திருமணம் செய்தார்.

ஆக இப்போது அமர்ந்திருந்தவர்கள் இவர்கள் ஐவரும் கூடவே புருஷோத்தமன் – சங்கரி வாரிசு அர்ஜுனும்தான். அவன்தான் அனைவரின் யோசனையையும் கலைத்தது.

“மாமா என்ன பண்ணலாம்னு இருக்கீங்க? நானும் ஒரு வாரமா கேட்டுட்டு இருக்கேன் அமைதியாவே இருந்தா என்ன அர்த்தம்? பேசாம போட்டு தள்ளிறவா அவனை” என எகிறினான்.

இவனின் எகிறலுக்கும் காரணம் இருந்தது. அருள்ஜோதிக்கு வாரிசு இல்லாமல் இருக்க அடுத்த அரசியல் வாரிசாகவும் குடும்பத்தின் ஒரே வாரிசாகவும் இருப்பவன் இவன் ஒருவனே.

“இருடா… அதெல்லாம் வேணாம். முதலில் பேசிப் பார்ப்போம் கூட்டணிக்கு ஒத்துக்கொள்கிறானான்னு. ஒத்து வரலைன்னா பிறகு யோசிப்போம்”

“இல்லை மாமா எனக்கென்னமோ அவன் ஒத்துக்கொள்வானு தோணலை பேசாம தேர்தல் ஆணையத்திடம் கட்சிக்கு அப்ரூவ் பண்ண வேண்டாம்னு சொல்லுங்க”

“அதெல்லாம் பண்ண முடியாது அர்ஜுன். அவனோட ஒவ்வொரு அசைவும் மக்கள் உன்னிப்பா கவனிக்குறாங்க அதனால நாம நேரடியா தலையிட வேண்டாம். என்னோட உதவியாளர் மாணிக்கத்தை விட்டு ஆரவ்வை நாளைக்கு கெஸ்ட் ஹவுஸ் கூப்பிட சொல்லிருக்கேன். என்ன சொல்றான்னு பாப்போம். நீ டென்ஷன் ஆகாத அர்ஜுன்”

“ஆமா அதான் உங்க மாமா சொல்றாருல பொறுமையா இருடா” என்றார் அவனின் தந்தை புருஷோத்தமன். பெண்கள் இருவரும் இந்த உரையாடல் எங்களுக்கு பழக்கம் என்பது போல் தங்கள் வேலையைப் பார்த்தனர்.

ஜோதிலிங்கம் அப்போதைக்கு ஒன்றும் கூறாமல் அனைவரும் எழுந்து அவரவர் அறைக்கு கிளம்புகையில், “பார்த்துக்கோ அருளு… முடியலன்னா விட்ரு வேற வழில பாத்துக்கலாம்” என்றார்.

“சரிப்பா” என்கையில் அவரின் உதவியாளர் வீட்டினுள் சற்று தயக்கத்தோடு நுழைந்தார்.

அவரைப் பார்த்ததும் அருள்ஜோதி, “சொல்லு மாணிக்கம். என்ன சொன்னான் அவன்?” என

“ஐயா…வந்து… வந்து அவருக்கு நேரம் இல்லையாம். நீங்க பார்க்கணும்னா அவரு நாளைக்கு தாஜ் ஹோட்டல்ல பார்க்கலாம்னு சொல்றாரு” என

“என்ன?” முதல்முறையாக கேள்விப்படும் மறுப்பில் சற்று அதிர்ந்துதான் போனார்.

“மாமா நான் சொன்னேன்ல அவன் எதுக்கும் ஒத்துவர மாட்டான்னு பாருங்க இப்பவே இப்படி” மீண்டும் குதித்தான் அர்ஜுன்.

“நான் எப்படி வந்து பார்க்க முடியும்?”

“நானும் அதையேதான் கேட்டேன் ஐயா அதுக்கு…” மேலும் தயங்கினார்.

“அதுக்கு…? என்ன சொன்னான்?” ஓரளவு யூகித்திருந்தார் அவர்.

“ரூம்ல யாருக்கும் தெரியாம வேணா பார்த்துக்கலாம் அதுக்கும் இஷ்டம் இல்லன்னா வரவே வேண்டாம். நான் ஒன்னும் வந்தே ஆகணும்னு யாரையும் கட்டாயப்படுத்தலை. அவரைப் பார்த்தே ஆகணும்ங்கற சூழ்நிலையும் எனக்கில்லை” ஆரவ்வின் வார்த்தைகள் அப்படியே சொல்லப்பட அது அருள்ஜோதியை கொதிப்படையச் செய்திருந்தது.

“அருளு இவன் கூட்டணிக்கு ஒத்துவரமாட்டான். வேற வழிதான் யோசிக்கணும்” ஜோதிலிங்கம் தீர்க்கமாகக் கூறியவாறு தன் சக்கர நாற்காலியை உருட்டிச் செல்ல

“மாணிக்கம் இதை அப்படியே விட்ரு. அவனை நான் பார்த்துக்குறேன். ராஸ்கல் நேத்து முளைச்ச காளான் இவன் ஆனா என்னமோ பழம் தின்று கொட்டைபோட்ட கணக்கா கொழுப்ப பாரு. எனக்கும் அவனைப் பார்க்கணும்ங்கற சூழ்நிலை இல்லை” என்றுவிட்டு மாடியேறினார் அருள்ஜோதி.

அர்ஜுனோ தாடையைத் தடவியபடி யோசனையில் ஆழ்ந்தான்.
**************************************

அதிகாலை ஆறு மணி இருக்கும்.

ஈஸிஆர் மெயின் ரோட்டில் இருந்து பிரிந்த கிளை சாலையில் சற்றுதூரம் சென்றதும் அகப்பட்டது நேதாஜி தெரு. அதில் முதலில் உள்ள தனிவீட்டின் வெளியே சாந்தா லேடீஸ் டைலர்ஸ் என்ற பலகை சிறிது பழசாகி காட்சியளிக்க உள்ளே அடுப்படியில் சமைக்க ஆயுத்தமானார் சாந்தா.

அதே சாந்த முகம்தான் ஆனால் கணேசன் சென்ற இந்த ஆறு வருடத்தில் அதன் சோபையை இழந்திருந்தது.

குடியிருக்க சொந்த வீடு, மாதம்பிறந்தால் வரும் இன்சூரன்ஸ் பணத்தின் வட்டி என அன்றாட ஜீவனுக்கு கடினமின்றியே வாழும்படி கணேசன் முன்பே ஏற்பாடு செய்திருந்தார்.

படிப்பிற்கும் பணம் இருந்தாலும் அதனை சாந்தா பிள்ளைகள் இருவரின் பெயரிலும் டெபாசிட் போட்டுவைத்து அரசுப்பள்ளியில் சேர்த்ததோடு பூங்குழலியின் கல்லூரிக்கு மட்டுமே அப்பணத்தை செலவு செய்தார்.

வீட்டில் தனக்குள்ளே தன் எண்ணங்களில் மூழ்கி எங்கே மனநோயாளி ஆகிவிடுவோமோ என்றஞ்சியே ஊரில் கற்றிருந்த தையற்தொழிலை மீண்டும் கையில் எடுத்திருந்தார்.

பூவேந்தன் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்க பூங்குழலியோ இன்னும் இருமாதங்களில் கல்லூரி படிப்பை முடிக்க போகிறாள். கடந்த ஒரு வருடமாகவே வானூர்தி பொறியியல் தேவைப்படும் துறைகளில் வேலைக்கான முயற்சியை சலிப்பின்றி முன்கூட்டியே மேற்கொண்டிருக்கும் புத்திசாலி.

தாய் எழுந்த அரவம் கேட்டதும் பூங்குழலி புருவம் சுருக்கி தூக்கத்தை விரட்ட அசைந்தாலென்றால் அருகே படுத்திருந்த எட்டு வயது பூவேந்தனோ ஒருபக்கம் சரிந்து கன்னத்தைக் கைகளில் தாங்கியவாறு வலது காலை அவளின் மீது போட்டு சுகமாய் அதிகாலை தியானத்தை அனுபவித்து செய்துக்கொண்டிருந்தான்.

அவனின் காலை செல்லமாய் அடித்து உறக்கம் கலையாமல் தள்ளிவிட்டவள் எழுந்து அம்மாவிற்கு உதவ வேலைகள் கடகடவென்று முடிய ஆரம்பித்தது.

“போதும் குழலி தாளிச்சு கொட்டுறதை நான் பாத்துக்குறேன். போ போய் உன் தம்பிய எழுப்பு மணி ஏழு தாண்டிருச்சி” என

“ஏன் நீங்க எழுப்பினா என்னவாம்?” பதிலுக்கு வாயடித்தாள் மகள்.

“சொல்றதை கேட்டுப் பழகு குழலி. அதென்ன எதிர்த்து எதிர்த்து கேள்வி கேட்கிற பழக்கம்” சட்டென்று குரல் உயர்ந்தது தாயிற்கு.

“சரி சரி… நானே போறேன் அதுக்கேன் காலங்காத்தால கோபப்படுறீங்க” இரு கைகளை உயர்த்தி அசைத்தவாறே தம்பியை எழுப்பச் சென்றாள் பூங்குழலி.

சட்டென்று குரலை உயர்த்தியதும் சாந்தாவிற்கு இதயத்தை ஏதோ ஒன்று அழுத்தியது. முயன்று சிறிது நேரம் தடவி அமைதியாய் இருந்தவர் பின்பே தாளிக்க ஆரம்பித்தார்.

பிள்ளைகளுக்கு அனைத்தும் பார்த்துப் பார்த்து செய்வார்தான் ஆனால் கணவன் இறந்த துன்பத்தில் மகனை ஒதுக்கியதும் இரு வருடங்கள் அவனை தேவையற்று கண்டுக்காமல் இருந்ததும் அவரை குற்றஉணர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. அதுவே மீண்டும் பூவேந்தனிடம் நெருங்க இப்போது தடையாக இருக்க இதெல்லாம் மகளிடம் கூற முடியுமா என்ன?

தந்தை இறந்தபின் தாயின் இயல்பு மாறிவிட்டது என்று குழலி எண்ண அவரின் ஆழமன எண்ணங்கள் ஆழமான இடத்திலேயே இருந்தது.

கூடவே பிள்ளைகள் இருவரும் நெருங்கி தங்களுக்கே தங்களுக்கான உலகத்தை உருவாக்கி வாழப் பழகிவிட அதில் தாயை குழலி இப்போது இழுத்ததைப்போல் இழுத்தாலும் வராமல் தள்ளி இருந்தே ரசிக்கப் பழகிக்கொண்டார்.

“குட்டா… பூக்குட்டா எந்திரி ஸ்கூல்க்கு போகணும்ல” என முதுகில் தட்டி எழுப்ப

“பூம்மா நீ போம்மா. இன்னும் கொஞ்ச நேர….ம்” சொல்லிமுடிக்கும் முன் தூங்கிவிட

இப்படி கொஞ்சுனாலாம் வேலைக்கே ஆவாது என்றெண்ணி, “டேய் அம்மா உன்னையே முறைச்சி பாக்குறாங்கடா சீக்கிரம் எந்திச்சி ஓடு” படபடவென தம்பியைப் பிடித்து உலுக்க அடித்து பிடித்து எழுந்தமர்ந்தான் அவன்.

“ஹாஹா ஹாஹா தொப்பி தொப்பி” தமக்கையின் கிண்டலில் தூக்கம் பறிபோன துக்கம் சிறுபையனான அவனுக்கு வெறியாக மாற அவளின் மீது பாய்ந்தான். இருவரும் கட்டிலில் ஒரு குட்டி அடி பிடி சண்டை நடத்த சின்ன கைகால்கள் என்பதால் வழக்கம் போல் பூவேந்தன் குழலியிடம் சிக்கிக்கொண்டான்.

அவனை அப்படியே தூக்கிச் சுற்றியவாறு பாத்ரூமில் தள்ளியவள், “போதும் விளையாண்டது சீக்கிரம் கிளம்பி வர. நான் வேணா குளிக்க வைக்கவாடா. கழுத்துல நல்லாவே சோப்பு போட மாட்டிகுற” என்றவாறு உள்ளே நுழைய

“பூம்மா நோ நோ உள்ள வராத. நானே நல்லா சோப்பு போடுறேன் மிஸ்கிட்ட ப்ரிண்ட்ஸ் கிட்டலாம் நானே குளிப்பேன்ன்னு சொல்லிட்டேன். ஐ அம் அ பிக் பாய்” என அலற

“டேய் டேய் இப்போவும் அப்படியே சொல்லுடா நான் குளிக்க வச்சேன்னு தெரியவா போகுது”

“ஐயே பேட் கேர்ள் நீ. பொய் சொல்லக்கூடாதுன்னு சொல்லிக்குடுத்துட்டு இப்போ நீயே பொய் சொல்ல சொல்ற பாத்தியா?”

“ஐயோடா!” தலைக்கு மேல் கையுயர்த்தி அவனைக் கும்பிட்டவள் “நீ அரிசந்திரன், காந்தி தாத்தாவோட அடுத்த வெர்சன்னு தெரியாம உன்கிட்ட சொல்லிட்டேன்டா பூக்குட்டா அக்காவ விட்ரு” போலியாக அலற

“ஹிஹிஹி அது பூக்குட்டி” என்று கெத்து காண்பிக்க

“அடிங்” என்று தமக்கை அடிக்க வரவும் அவளிடமிருந்து தப்பிக்க கதவைச் சாற்றியவன் உள்ளே வாய்விட்டு சிரிக்க அவனின் சிரிப்பிற்கு இணையாக வெளியே பூங்குழலியின் சிரிப்பு கிண்கிணி நாதமாக ஒலித்துக்கொண்டிருந்தது.

வாழ்க்கை இப்படியே சென்றிருந்தால் நன்றாகதான் இருந்திருக்கும். பல்வேறு வியப்புகளையும் விசித்திரங்களையும் தன்னுள்ளே அடக்கிய மனித வாழ்க்கை அப்படியேச் செல்லவிடாமல் தடுத்து ஒருநாள் அர்ஜுன், ஆரவ், பூங்குழலி மற்றும் பூவேந்தனை ஒரே நேர்கோட்டில் சந்திக்க வைத்தது.

அந்த சந்திப்பானது மெல்லிய பூப்போன்ற பூங்குழலியின் மனதை பொங்குகடலாகவும் பெரும்புயலாகவும் மாற்றி சுட்டுப் பொசுங்கச் செய்திருந்தது.