NNA4B
NNA4B
நீயும் நானும் அன்பே…
அன்பு-4B
பள்ளி துவங்கும் நாளுக்கு முந்தைய தினமே வீட்டில் இருந்த கூட்டம் மூன்றில் ஒரு பங்காகக் குறைந்திருந்தது.
வராவிற்கும் வருத்தம். அவள் உள்ளூர் பள்ளியிலேயே படிப்பதால் இவர்களோடு தங்கவோ, சென்று வரவே இயலாது என்கிற நிதர்சனத்தில், வராத அழுகையை வந்ததாக்கி, அவர்கள் வீட்டிற்கு கிளம்பியிருந்தாள்.
செல்லுமுன், “எப்டினாலும் இன்னும் அஞ்சு நாளுதான் ஸ்கூலு, அப்புறம் இங்க வந்திருவேன்”, என்று கணக்கு போட்டு கிளம்பியிருந்தாள்.
சாந்தனுவிற்கு இன்னும் பள்ளி துவங்கியிருக்கவில்லை.
மற்ற நால்வரும் பள்ளி சென்று வரத் துவங்கியிருந்தனர்.
பள்ளிக்குச் செல்லத் துவங்கியவளை, மற்ற பேரன் பேத்திகளோடு தங்களது காரிலேயே சங்கருடன் சென்று முதல்நாள் விட்டுவிட்டுத் திரும்பியிருந்தார் தங்கவேலு.
பேத்தியின் ஒவ்வொரு தேவைகளையும் முன்னின்று கவனித்துக் கொண்டார் பெரியவர்.
சில நேரங்களில் மனைவியை ஏவினார்.
“ஏய் முல்லை, நவீனாக்கு எதாவது வேணுமானு கேட்டுச் சொல்லு”, என்று காரைக்குடி கிளம்புமுன் கேட்டவரை மற்ற பேரன் பேத்திகள் வித்தியாசமாக பார்த்தனர்.
“எங்களையெல்லாம் இப்டி கவனிச்சதே இல்லையே ஐயா” என்று மகன் பிள்ளை பேரப்பிள்ளைகளும், “ஆமாம் தாத்தா” என வழிமொழிந்த பெண் மக்கள் வழி பேரப்பிள்ளைகளும் கோரசாகவே கூறியிருந்தனர்.
அத்தோடு, “அந்தப் புள்ளை மட்டும் எங்களை விட அப்டி என்ன உசத்தி”, என்று தங்களது மனதில் உள்ளதை நேரடியாகவே வந்து கேட்டனர்.
நவீனாவின் பெற்றோர் புஷ்பா, வெற்றி இருவரும் உடனில்லாததால், நாம் தானே நவீனாவைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று புரியும்படி எடுத்துக் கூறியதுதான் தாமதம்.
அவரவர் பங்குக்கு நவீனாவை நன்றாகவே கவனித்துக் கொள்ளத் துவங்கினர். வயது வித்தியாசமின்றி, சாப்பிட்டியா? படிச்சியா? என்ன வேணும்? என நேரத்தைப் பொறுத்து, அன்பின் கேள்விகள் அவளை அரவணைத்திருந்தது.
அனைவரின் அன்பில் நவீனாவிற்கு மூச்சு முட்டியது. இது சுகமான உணர்வாக இருந்தது. தலைவலி வரவில்லை. மகிழ்ச்சியாக உணர்ந்தாள்.
பெற்றவர்களை அதிகம் நினைக்கவே இல்லை.
சங்கர் கல்லூரிக்குச் செல்லும் வரை, அவனே சிறியவர்களை பள்ளிக்கு கொண்டு விடுவது, கூட்டி வருவது இரண்டையும் தனது பொறுப்பில் எடுத்துக் கொண்டிருந்தான்.
அதன்பிறகு வழக்கமாக வரும் ட்ரைவரைக் கொண்டு அனுப்பிவிட முடிவு செய்திருந்தனர் பெரியவர்கள்.
நாட்கள் இனிமையாகவே சென்றது. அவ்வப்போது தந்தை மட்டும் தொலைபேசியில் அழைத்து மகளிடம் ஓரிரு வார்த்தைகள் பேசுவார்.
தாய், வாரம் ஒரு கடிதம் எழுத, நவீனாவும் பதில் கடிதம் எழுத பயிற்சி மேற்கொள்கிறாள்.
சாந்தனுவிற்கும் பள்ளி திறந்து, ஐவரும் ஒன்றாகவே பள்ளி செல்லத் துவங்கியிருந்தனர்.
ஐவருமாக மாலையில் வீடு திரும்புவது. சற்று நேரம் விளையாடுவது. பிறகு தங்களுக்கான வீட்டுப் பாடங்களைச் செய்வது என பொழுது போனது.
சாந்தனு தனது படிப்பில் நேர்த்தியாக இருந்தான்.
நவீனாவிற்கு உண்டாகும் ஐயங்களை இலகுவாக விளக்குவான்.
சாந்தனுவிடம் வந்திருந்த இலகுத்தன்மை சங்கரிடம் தனக்கு வரவில்லை ஏன் என்பதையும் அவ்வப்போது எண்ணிப் பார்ப்பதுண்டு.
இரவு நேர உரையாடலுக்குப் பிறகு, நவீனாவிடம் அதிகம் பேச்சு வைத்துக் கொள்ளவில்லை சங்கர்.
கல்லூரி துவங்கிவிடவே சங்கரும் மதுரைக்கு கிளம்பியிருந்தான். தற்போது ட்ரைவரே பள்ளிக்கு அழைத்துச் சென்று, அழைத்து வருகிறார்.
——————
சங்கருடைய அமைதிக்குப்பின் ஆயிரம் விடயங்கள் இருந்தது.
அன்றிரவு, பெண் போகும் வழியையே பலவித கலவையான உணர்வுகளோடு பார்த்திருந்தான் சங்கர்.
பெண்ணின், தன்மீதான அலட்சியம், கண்டிப்பான பேச்சு அவனுக்கு புதிது என்பதை விட ‘டா’ போட்டு அவனைப் பேசியது முற்றிலும் புதிது. அவளின் ‘டா’ அவனை முதலில் கோபமுறச் செய்தது.
பெண்களை ‘டீ’ போட்டு எளிதில் பேசும் வழக்கம் இல்லாதவன்தான் சங்கர். நவீனாவின் செயலில் தன்னை மீறி அங்ஙனம் பேசியிருந்தான்.
என்றாவது ஒருநாள் தனது மற்ற அத்தை மகள்களிடம் இதுபோல் ‘டீ’ போட்டு பேசியிருக்கிறான்தான். அது கோபத்திலோ அல்லது விளையாட்டாகவோ, வேடிக்கையாகவோ மட்டுமே.
‘டீ’ போட்டு, நவீனாவை இனி பேசினால், பெண் இன்னும் என்ன செய்வாள்? என்கிற எண்ணமும் மனதில் ஓங்க, அவளின் வயதை உத்தேசித்து, சிறுவயது என்பதால் இன்னும் விளையாட்டாக அப்படி நடந்து கொள்கிறாளோ என்கிற குழப்பமும் வந்தது.
அதைவிட தான் ‘டீ’ என்று அழைத்துப் பேச, அத்தை மகள்கள் அனைவரும் காத்திருக்க, இவள் தன்னை ‘டீ’ போட்டு பேசக்கூடாது என்று மறுத்துக் கூறியது மனதை வதைத்தது.
எதோ தூரமாகிப்போன உணர்வு.
அத்தோடு விடாமல் தன்னையே ‘டா’ என்று பேசிச் சென்றதை இன்னும் அவனால் ஏற்றுக் கொள்ள இயலாமல் இருந்தான்.
‘அவக்கிட்ட இனி பாத்து பேசணும், இல்லைனா மரியாதையை காத்துல பறக்க விட்டுருவா போல’, என அவளின் ‘டா’வில் வந்து மனம் சுணங்கியிருந்தான்.
நியாயம் பேசிச் சென்ற பெண்மையைப் பற்றி யோசித்தவனுக்கு, நாம் தான் முதலில் ‘டீ’ என்று பேசி வாயை விட்டோம். அதன்பிறகே அவள் தன்னை ‘டா’ போட்டு பேசினாள் என்கிற உண்மை உரைத்திருந்தது.
இனி எந்த அத்தை மகளையும் ‘டீ’ போட்டு பேசக்கூடாது என்கிற முடிவுக்கு சங்கரை ஒரே இரவில் ஒரு வார்த்தையில் வரவைத்திருந்தாள் பெண்.
அப்படி அவன் மற்ற அத்தைகளின் பெண்களைப் பேசியபோதும் சண்டைக்கு இதுவரை யாரும் வராத நிலையில், முதன் முதலாக வந்து நியாயம் கேட்ட நவீனா அவனுக்கு புதிது.
அன்று வந்தவள் மட்டும், அவன் வாழ்வில் புதிதல்ல! அவளது செயல்கள் ஒவ்வொன்றும் அவனுக்குப் புதிது!
புதிது, புரியாத புதிராய் அவனை ஈர்த்தது.
நவீனாவின் துடுக்குத்தனமான பேச்சில், ஈர்க்கப்பட்டான். ஈர்ப்பில் தன்னை மீறி அவளை எதுவும் செய்து விடுவோமோ என்று, கீழே அவளுடன் செல்லத்துடித்த கால்களை கட்டுப்படுத்தி நின்றிருந்தான்.
அத்தைமார்கள் ஒவ்வொரு வீட்டிலும் பெண்கள் இருக்க, அத்தைகளும் சரி, அவரது பெண்களும் சரி, இதுவரை அவனை கோபியர் கொஞ்சும் கண்ணன் ரேஞ்சிற்கு வைத்திருக்க, தன்னைச் சட்டை செய்யாமல் செல்பவளைக் கண்டு, ஏனோ கண்மண் தெரியாத கோபம்கூட மனதில் கரை புரண்டு வந்தது.
நிறத்தை கொண்டு அவள் செய்த செயலில் மனதால் நிறைய அடி வாங்கிய உணர்வு வந்திருந்தது.
தனது நிறம் அவளை, அவளிடமிருந்து தன்னை தள்ளி நிறுத்தச் செய்யுமோ?
எதனால் பெண் அங்ஙனம் பேசிச் சென்றாள்? என்கிற எண்ணம் கேள்வியாக வந்து வந்து போனது.
அத்தையின் மகள்கள் அனைவரும் அவனது பார்வைக்கு ஏங்கி வரமிருக்க, தன்னை நெருங்காதே என்று தள்ளி நிறுத்தியவளை எண்ணியவாறே அங்கு அமர்ந்து விட்டான்.
தொட்டுப் பேசக் கூடாது என்று அவள் கூறியபிறகு தான் அப்போது அவனது செயல் புரிய வந்தது.
இதுவரை எந்த பருவப் பெண்களையும், அப்படித் தொட்டுப் பேசி அவனுக்கு நினைவில்லை.
வாயிக்கு வாய் எதிர்த்து, பெண் தன்னிடம் பேசியதால் வந்தவினை இது என்பது அவனுக்கு புரிய வந்திருந்தது.
ஆனால் தான் தொட்டுப் பேசியதை வன்மையாக அவள் கண்டித்ததை அறிந்தவன், ‘சின்னப்புள்ளை இல்லை! அது விவரந்தான்’, என நவீனா பற்றிய விவரத்தை தனக்குள் கூறிக்கொண்டான்.
பெண்ணவள் சென்ற பாதையை வைத்த கண் வாங்காமல் பார்த்தபடியே இருந்தவன், கண்களை விட்டு பெண் மறைந்தும், அவள் நினைவுகளை அசைபோட்டபடியே அமர்ந்திருந்தான் சங்கர்.
காலையில் மானாமதுரை சந்திப்பில் பெண்ணை முதன் முதலாகக் கண்டபோது உண்டான எண்ணம், சற்றுமுன் அவள் பேசிச் சென்றதில் முற்றிலுமாக மாறியிருந்தது.
‘பாக்கத்தான் ச்செய்ல்ட் ஃபேசு… ஆனா உண்மையிலேயே டேஞ்சரஸ் பீசு அது!’ என நவீனாவைப் பற்றி ஒரு முடிவுக்கு வந்திருந்தான்.
இதுவரை அனைவரும் தன்னை ஒரு இளவரசனாக அந்த வீட்டில் தாங்கி நடத்தியிருக்க, வந்த ஒரே நாளில் தன்னை கால் தூசிக்கும் மதிக்காது சென்றவளை எண்ணியவாறே மாடியில் அமர்ந்திருந்தான்.
எண்ணம் முழுவதும் அவள் பேசிச் சென்ற வார்த்தைகளிலேயே நின்றது. அவளின் தைரியமான, நிமிர்வான பேச்சுகள் பிடித்திருந்தது.
அவனையறியாமாலேயே அவள் பேச்சை ரசித்திருந்தான்.
தந்தை தாஸினை மறந்து, தன்னை ஆட்கொண்ட நவீனாவின் நினைவுகளோடு, இன்பமாகவே மொட்டை மாடியில் அன்று கண்ணயர்ந்திருந்தான்.
***
சங்கர் அன்றைய இரவை இன்னும் மறவாததால், பெண் முன் வரும்போது போலி முறைப்பால் இடைவெளியினை தற்காலிகமாக்கி இருக்கிறான் என்பதை பெண் அறியவில்லை.
பெண்ணிடம் தன்னைக் காட்டிக் கொள்ள, அவளின் வயது ஏனோ தடுத்தது.
தன்னை, தன் மறை கழண்ட மனதை மறைக்க, முறைப்பை ஆயுதமாக்கி அவள்முன் நின்றிருந்தான் சங்கர்.
மூக்கணாங்கயிறு இல்லாமல், அடங்கா காளையை வார்த்தைகளால் வீழ்த்தியவளை, விழியால் சிறை செய்து, கல்லூரிக்கு சென்றவன், வார இறுதிநாளை எதிர்நோக்கி காத்திருக்கத் துவங்கியிருந்தான்.
பதினைந்து நாட்களுக்கு ஒரு முறையோ, அல்லது தாய், ஆத்தா இருவரில் யாராவது அழைத்தால் மட்டுமே ஊருக்கு வருபவன், வாரம் தவறாமல் வெள்ளியன்று வந்துவிட்டு, திங்களன்று அதிகாலையில் மதுரைக்குச் செல்கிறான்.
///////////////
முளைக்கொட்டு உற்சவங்கள் கிராமங்கள் தோறும் ஆடி மாதம் துவங்கி, புரட்டாசி வரை நடைபெறும்.
இதுவரை இதுபோன்ற நிகழ்வுகளைக் கண்டதில்லை நவீனா.
வரா, முளைக்கொட்டு பற்றி தனது அனுபவங்களை ஆஹா, ஓஹோ என பகிர்ந்து கொண்டிருந்தாள்.
கள்ளம் புகாத மனதாள் நவீனாவும், முளைக்கொட்டை ஆவலோடு எதிர்பார்த்திருந்தாள்.
மூவர் வீட்டிலும், புத்தாடைகளை நவீனாவிற்கு வாங்கிக் குவித்திருந்தனர்.
தன்னிடம் ஏற்கனவே நிறைய ஆடைகள் இருக்க இதேதற்கு என்று கேட்டவளை, “ச்சு… அப்டி வீடு தேடி வர்ற லெட்சுமிய மறுக்கக் கூடாது”, என்று வாயை அடைத்திருந்தனர்.
நவீனா மறுத்ததற்காக உண்மையான காரணம், அவள் இதுவரை அணிவது போல ஃபிராக், சுடி, மிடி என்றில்லாமல், பாவடை தாவணி, சேலை என்று எடுத்திருந்தனர்.
மாமன் மனைவிகள், அவளுக்கு அளவாக, எடுப்பான நிறங்களில் துணியெடுத்து தைத்து வந்து கைகளில் தந்திருந்தனர்.
முளைக்கொட்டு விழாவும் வந்தது.
முத்து பரப்புதல் நிகழ்விற்கே மொத்த குடும்பமும் வந்திருந்தார்கள்.
அடுத்து இன்னும் பத்து நாட்கள் அங்குதான்.
வீடு மீண்டும் களை கட்டியது.
கூட்டம் ஏனோ நவீனாவிற்கு அலர்ஜியாக இருந்தது.
மற்றவர்களுக்கு குறைவான எண்ணிக்கையில் புது உடைகள் இருக்க, நாளொரு புது உடை அணியும் பாக்கியம் பெற்றிருந்தாள் பெண்.
முதன் முறையாக பாவாடை, தாவணியில் பெண் வலம் வந்தாள்.
முல்லை மட்டுமன்றி, அன்னம்மாள், மற்றும் சாரதா என ஆச்சிகள் மூவருமாகவே பேத்திக்கு மாறி மாறி திருஷ்டி கழித்தனர்.
தாஸின் சகோதரிகளான, உமையம்மை, நாகம்மை, மணியம்மை, கனகம்மை நால்வரும் தங்களது குடும்பத்தோடு வந்திருக்கவே சசிகலா இடைவிடாத பணியோடு அல்லாடினார்.
மகன் ஊருக்குச் சென்றுவிட்டாள், நவீனா அழைத்துச் சென்று வைத்துக் கொள்வார்.
நவீனாவிடம் மனம் விட்டு பேசுவார். அவளுக்கு தலைவாரல், பூச்சூடல், அலங்கரித்தல் என நவீனா இங்கு வந்தது முதல் சசிகலாவின் உலகம் மகிழ்ச்சியில் சஞ்சரித்திருந்தது.
வந்திருந்த வராவிடம், “வருசா வருசம் இப்டி பண்ணுவாங்களா வரா”, வினவியிருந்தாள்.
“ஆமாக்கா, எல்லாரும் வருவாங்க. இதுவரை நீ, பெரியம்மா எல்லாரும் மட்டுந்தான் வந்ததில்லை”
வராவின் வார்த்தைகளைக் கேட்டு, மழைக்காலத்தில் வரும் இரயில் பூச்சியைப் போல மனம் சுருண்டிருந்தாள்.
அனைவரும் இதுபோன்ற விழாக்களில் ஒன்று கூடி களித்திருக்க, தனது குடும்பம் இதுவரை இதுபோன்ற விழாக்களில் பங்கேற்காதது ஏன் என கேள்வி வந்திருந்தது.
தாயிடம் இதுபற்றி கண்டிப்பாக கேட்க வேண்டும் என மனதில் குறித்துக் கொண்டாள்.
அனைவரும் குடும்பத்தோடு இருக்க, தான் மட்டும் தனிமையாக இருப்பதுபோல உணர்ந்தால் பெண்.
அறையை விட்டு வெளியே வராமல் அறைக்குள் அடைந்தவளுக்கு, ‘ஏன், நம்ம அம்மா மட்டும் இப்டி எதுக்கும் இங்க வராம, நம்மளையும் இதுவரை கூட்டிட்டு வராம’, என்று யோசிக்காமல் இருக்க முடியவில்லை.
வருத்தத்தில் வாடியவள், அறைவாசல் தாண்டி வெளிவரவில்லை.
ஆச்சி, வந்தவர்களை வரவேற்பதிலும், அவர்களைக் கவனிப்பதிலும் கவனம் செலுத்தினார்.
தாத்தா, வந்திருந்தவர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
வரா, வந்திருந்த உறவினர்களுடன் இயல்பாகக் கலந்து பேசியவாறும், பெரியவர்களின் பேச்சை அங்கங்கு நின்று கேட்டவாறும், அங்குமிங்கும் குதூகலமாகத் திரிந்தாள்.
நிற்க நேரமில்லாமல் வரா எல்லா இடங்களிலும் ஓடி, ஆடித் தெரிந்தாள்.
அவரவர் வயதொத்தவர்களுடன் இணைந்து கதைத்தனர்.
வந்திருந்தவர்களுக்கிடையே காணாமல் போன தன்னவளைத் தேடி அலுத்த சங்கர், வார்த்தைகளை கோர்வையாக்கி எழுதத் தெரியாததால், மனதில் தோன்றியதை நினைவில் எழுதினான்.
“புதிரான எனது வாழ்வில்
புதையலாக வந்த
புதினமே!
ஏக்கமாக வந்தவனை
முகப்புப் படத்தை
மூடிவைத்து…
ஏமாறச் செய்த என்
ஏவாளே!
வாசிக்கும் வயதில் (அவன்)
வாசிக்க இயலாத
புத்தகமாக நீ!
சுவாசத்தில்
மணம் பரப்பாத
பிராணன் போல
உன் நினைவடுக்கில்
நிர்மூலமாக நான்!
புரட்டாத புதினத்தில்
புதையலை உள்ளடக்கிய
பக்கங்களாக நீ!
வார்த்தைகளை
வாசிக்கத் துடிக்கும்
வாசகனாக நான்!
என்று தணியும்
என் வாசிக்கும் வேட்கை!
வாசிக்க வரம் தருவாயா?
நேசிக்க மனம் விழைவாயா?
பூசிக்கும் பக்தனாக
பூவை உனக்காக
பூமியில்
பூவண்டாகக் காத்துக் கிடக்கிறேன்!
////
அறைவாசலில் கேட்ட, ‘நவீனா’ என்றழைப்பில் வெளிவந்தவளை, “தனியா எதுக்கு இப்டி ரூமுக்குள்ள அடஞ்சிருக்க, வா… அங்க வந்து அத்தையோட இரு! வா…!”, என்று அன்போடு அழைத்த சசிகலாவை மறுக்க இயலாமல் மலங்க மலங்க விழித்தவறே மறுக்க இயலாமல் உடன் கிளம்பினாள் பெண்.
உடன் சென்றவளை அன்னம்மாள் என்றும்போல அரவணைத்துக் கொண்டார்.
ஆனால் பெரியம்மா லிஸ்டில் இருந்தவர்களின் முகம்போன போக்கை நவீனா கவனிக்கவில்லை.
கவனிக்க வேண்டியவன் கவனித்திருந்தான்.
அத்தையோடு அடுக்களையிலும், மற்ற பணிகளிலும் உடன் நின்ற நவீனாவைக் கண்டு,
“ஏய், நீ கூடமாட உங்கத்தைக்கு போயி ஒத்தாசை பண்ணு”, என்று மணியம்மை தன் மகளை விரட்ட
“இப்பவே மாமியாவ காக்கா புடிக்க சொல்லிக் குடுக்கிறியாடீ, என்னனாலும் எம்மகளைத்தான் சங்கருக்கு எடுக்கனும், ஆமா சொல்லிட்டேன்”, என உமையம்மை உரிமைக் குரல் எழுப்பவும்
“அது எப்படி? எம்மகதான உம்மகளைவிட மூத்தவ! அவளைத்தான் சங்கருக்கு கட்டனும்!”, என்று நாகம்மை கூறவும்
“அது எம்பேரன் யாரைப் பிரியப்பட்டு கை நீட்டுறானோ, அவளைத்தான் கட்ட முடியும், நீங்களா எதுக்கு புள்ளைகளுக்கு ஆசையத் தூண்டி விடுறீங்க!
வர தடவையெல்லாம் நீங்களும் சாடை பேசுறீங்க, நானும் சத்தியத்தை சொல்லுறேன்.
இதுனால மனஸ்தாபம் வரக்கூடாது!
அவன் ஒருத்தனா பிறந்தவன்!
உங்க அப்பா போனதுக்கு அப்புறம், கூடப்பிறந்தவன் பண்ண வேண்டியதை, பதினெட்டு வயசிலயே அவந்தலையில ஏத்துக்கிட்டு, அன்னிலேருந்து உங்களுக்கு நல்லது, கெட்டது எல்லாத்தையும் எந்தக் குறையில்லாம பாக்குறான்.
அவனை சங்கடப்படுத்தீறாதீங்க!”, என அன்னம்மாள் சத்தம் போடவும் மகள்கள் அமைதியாகியிருந்தனர்.
இளையவரான கனகம்மையோ, மூவரின் மகள்களை சங்கர் வேண்டாமென்றுவிட்டால், தனது மகளை எடுக்க கட்டாயப்படுத்தலாம் என நினைத்தபடியே அமைதியாக இருந்தார்.
மானகிரி விஜயகாந்துக்கு வந்த வாழ்வை எண்ணி சிரித்திருந்தாள், மனதிற்குள்.
(நிறத்திற்காக விஜயகாந்தை ஒப்புமை செய்திருக்கிறேன்)
நவீனாவும் அனைத்தையும் காதில் கேட்டவாறே அத்தையோடு பணியில் ஐக்கியமாகியிருந்தாள்.
சசிகலா ஸ்டோர் ரூமில் சில பொருட்களை எடுத்துவர நவீனாவை அனுப்பினார். சென்று எடுத்து திரும்பும் நேரம், அங்கு வந்து முற்றுகையிட்டவர்களை முற்றிலும் எதிர்பாராதவள், வந்தவர்களின் மனமறியாமல் அவர்களைப் பார்த்து இளநகை புரிந்தாள்.
வந்திருந்த மூவருமே இவளை விட வயதில் மூத்தவர்கள்.
“இப்டி சிரிச்சே மச்சானை மயக்கிற பிளான்ல இருக்கா போல?”, என எள்ளி நகையாடும் குரலில் ஒருத்தி
“என்ன, எங்கையோ இருந்து திடீர்னு குதிச்சு, பக்கத்துலயே வந்து உக்காந்துட்டு, எங்க மச்சான் மனசைக் கலைச்சு கைக்குள்ள போட்டுக்கலாம்னு இருக்கியோ! பகல் கனவு காணாத! சங்கரு மச்சான் எனக்குத்தான்! எனக்கில்லைனா மச்சான் வேற யாருக்குமில்லை!”, மனமெங்கும் குரூரம் நிரம்பிய குரலில் மற்றொருத்தி
“சங்கரு மச்சான் முன்ன மாதிரி எங்கட்ட பேச மாட்டிகறாங்க! எல்லாம் உன்னாலதான்! எப்போ பாரு அவங்க பாக்கற பக்கமாவே போயி போயி முன்ன நீ நின்னுக்கிற!”, இன்னொருத்தி நியாயம், அநியாயம் தெரியாதவளாக நவீனாவிடம் உக்கிரமாகப் பேசியிருந்தாள்.
கன்னிகளின் கன்னிவெடி வார்த்தைகளைக் கேட்டவளுக்கு, நினைவடுக்கில் ஒளிந்து கொண்ட மூவரின் பெயரைக் கூட நினைவில் கொண்டு வர இயலாமல் பேச்சிழந்து நின்றிருந்தாள் பெண்.
தன் இளநகையை, கூம்பச் செய்தவர்களின் வார்த்தைகளைக் கேட்டு நவீனா என்ன செய்தாள்?
அடுத்த அத்தியாயத்தில்…