NNA4A

NNA4A

நீயும் நானும் அன்பே

அன்பு-4A

 

தந்தையை பயணம் அனுப்பிவிட்டு திரும்பி வந்தவளுக்கு உலகமே இருண்டது போல இருந்தது.

 

இரவு உணவை மறுத்ததால், பாலை வற்புறுத்தி குடிக்கச் செய்தார் முல்லை.

 

ஆச்சியின், அன்பான அமிர்தாஞ்சன் தடவலிலும், இதமான முதுகு தட்டலிலும் நவீனா சுகமாக உறங்கியிருத்தாள்.

 

உறக்கத்தினிடையே ஆழ்மனத் தடுமாற்றம் காரணமாக எழுந்த உடல் விதிர்ப்பால், நடுநிசிக்குமேல் பெண் விழித்திருந்தாள்.

 

விடைபெற்றிருந்த மனஇறுக்கம், மீண்டும் தனது அன்றைய நிலையை நினைக்க மீண்டிருந்தது.  மனஇறுக்கத்தால், உடல் புழுக்கமாக உணரத் துவங்கினாள். 

 

நல்ல காற்றோட்டமான அறையில் திறந்து வைத்திருந்த ஜன்னல் வழி வந்த வேப்ப மரத்தின் காற்று ஒருபுறம், சீலிங்கில் எலெக்ட்ரானின் தடையற்ற ஓட்டத்தால் சீவனோடு வேகமாக ஓடிக்கொண்டிருந்த உஷா ஃபேனின் உபயத்தாலும், இதுவரை உறங்கியவளுக்கு, மிச்சமில்லாமல் உறக்கம் தொலைந்திருந்தது.

 

இனி இலகுவில் உறக்கம் வராது என்பது புரியவே, சும்மாவே படுத்திருக்க முடியாமல், ஆத்திர அவஸ்தையை அடக்காமல் எழுந்து போனவள், வேலையை முடித்துவிட்டு நிதானமாக வந்து படுத்தாள்.

குண்டூசி விழுந்தால் கேட்கும் அளவிற்கான நிசப்தம் ஏனோ சஞ்சல உணர்வைத் தந்தது.

 

உறக்கம் வராத இரக்கமில்லா இரவாக போனதால், பழைய நினைவில் மொட்டை மாடிக்கு தனித்து கிளம்பினாள்.

 

ஓருமுறை இங்கு வந்திருந்தபோது, நிலாச்சோறு உண்ண மாடிக்கு வந்திருந்த நினைவில், துணிந்து தனியே கிளம்பியிருந்தாள் பெண்.

 

நிதான அடியெடித்து வைத்து, பூனை நடை நடந்து படியேறினாள். 

 

தேக்கு மரத்தாலான படி அவளின் தேகம் தாங்கும் போது, குளிர்ந்து, மகிழ்ந்து, அதனுள் எழுந்த இனிமையை ஒரே ரிதமாக வெளியிட்டது.

 

பிரபஞ்சத்தில் எல்லையற்றதான நட்சத்திரங்கள் நிரம்பிய கருநீலநிற வானைப் பார்த்தபடியே, மாடியை அடைந்திருந்தாள்.

 

மாடியின் மறுபுறத்தில் வெளிச்சம் இருக்க, ‘யாரோ லைட்ட போட்டுட்டு ஆஃப் பண்ணாம எரியுது என்று எண்ணியபடியே அவர்கள் போர்சனில் இருந்த பல்பை எரியவிட எண்ணி கையை உயர்த்தினாள்.

 

நடுநிசியில் அங்கு யாரையும் எதிர்பார்த்திராதவள், நிசப்தத்தை கீறிக் கொண்டு வந்த, ‘யாரது எனும் ஆடவனின் முரட்டுக் குரலுக்கு நெஞ்சாங்குழியில் நெபுலா அளவு அதிர்ச்சி வாங்கி, துவங்க இருந்த வேலையை விட்டிருந்தாள்.

 

பயம் பீடித்திட, பதற்றத்தில், நடுங்கும் உடலோடு வேகமாக அவ்விடத்தில் இருந்து கீழே இறங்கத் திரும்பியிருந்தாள்.

 

வந்த வேகத்தை விட, அட்ரினலின் அதீத தூண்டுதலால் நாற்பது மடங்கு அதிக வேகத்தில் ஓட்டத்தைத் தொடரத் துவங்கியிருந்தாள்.

 

தரைத்தளத்திற்கு போக படிகளை நோக்கி ஓடத் துவங்கியளை, அவளைவிட வேகமாக வந்து கையைப் பிடித்து நிறுத்தியிருந்தான் குரலின் நாயகன்.

 

எதிர்பாரா சத்தத்தில் பயந்து வேகமாகக் கீழிறங்க முயற்சித்தவளை, மூர்ச்சையாகும் அளவிற்கு வந்து இறுகப் பிடித்திருந்தான்.

 

கையைப் பிடித்தவுடன், இழுத்த வேகத்தில், திடமான உருவத்தின் திண்மையான மார்பில் வந்து தண்மையாக மோதியிருந்தாள் பெண்.

 

மோதலில் இதமாக தன்மீது வந்து விழுந்தவளை, அணைவாகப் பிடித்து விழாமல் தடுத்திருந்தான்.

 

அணைப்பைக் கண்டு மேலும் பயந்தவள், அலறத் துவங்க செவ்வாயைத் திறக்க,

 

அவன் பிடித்தவுடன் கத்தி சத்தமெழுப்ப முனைந்த வாயையும், தனது மற்றொரு கரத்தால் மூடியிருந்தான்.

 

அருகில் வந்தவுடனேயே மாடிதேடி வந்த உருவம் யாரெனத் தெளிவாகத் தெரிந்து கொண்டிருந்தான்.

 

 

பெண்ணவள் தன்னைப் பிடித்தது இன்னும் யாரெனத் தெரியாத பீதியில் இருக்க, அவளின் இதயத்தின் சத்தத்தை வெஸ்டன் இசையின் ரிதமாகக் கேட்டிருந்தான்.

 

நவீனாவை அங்கு அவன் முற்றிலும் எதிர்பார்த்திருக்கவில்லை.

 

வாயை மூடிய கையை பெண்ணின் வாயிலிருந்து மெதுவாக எடுத்தவன், மிகவும் தணிந்த குரலில், அவளின் காதோரம் வந்து, ‘ஸ்… கத்தாத…, என்று கூறினான்.

 

எடுத்த கையைக் கொண்டு, பெண் விட்ட வேலையை முடித்திருந்தான்.  குண்டு பல்பின் ஒளியில் அந்தப் பகுதியும் வெளிச்சத்திற்கு வந்திருந்தது.

 

ஜெய்சங்கரின் குரல் இன்னும் பரிட்சயமாகாததால், யாரென்று நவீனாவிற்கும் குரலைக் கொண்டு அடையாளம் அறிந்து கொள்ள முடியவில்லை.

 

மிரள மிரள தன்னை மெதுவாகத் திரும்பிப் பார்த்தவளைக் கண்டவன், ‘இவ்வளவு பயம் இருக்கறவ இன்னேரத்துல இங்க எதுக்கு வரணும்?, என்று வார்த்தைகளை பல்லுக்கு இடையில் கடித்து துப்பியவாறு வினவியிருந்தான்.

 

அணைப்பிலிருந்து மெதுவாக வெளிவந்தவள் அவனிமிருந்து விலக எத்தனிக்க, தன்னை விட்டு அவள் விலகுவதால், தொலைந்த இதத்தை தாங்க முடியாமல், கைகளைப் பிடித்திருந்தான்.

 

முன்னிரவில் அவளது அறையில் சென்று அழைத்தும் எழாமல் சண்டித்தனம் செய்தவள், தற்போது மாடிக்கு வந்ததற்கான காரணத்தை அறிய எண்ணினான்.

 

தன்னைப் பிடித்து நிறுத்தியது சங்கர் என்பதைக் கண்டு ஆசுவாசம் கொண்டவள், இரும்புப் பிடியாகப் பிடித்திருந்தவனை கண்டு வலி தாங்காமல் பாவமாகப் பார்த்திருந்தாள். 

 

ஆனாலும் அவன் கேட்ட எந்த கேள்விக்கும் பதில் வாயைத் திறந்து பெண்ணவள் பதில் சொல்லியிருக்கவில்லை.

 

பெண்ணுக்கு மிக அருகில் நின்றவாறு, “யாரு என்ன கேட்டாலும் இப்டித்தான் பதில் சொல்ல மாட்டியா?”, நவீனாவைத் தெரிந்து கொள்ளக் கேட்டான் சங்கர்.

 

அவளின் பிஞ்சுக் கைகளை உலக்கை போன்ற கையால் உடும்பு போல அழுத்திப் பிடித்தபடியே கேட்டவனை,

“விடுங்க…! கை வலிக்குது!, என முகத்தை மறுபுறம் திருப்பியவாறு கையை அவன் பிடியிலிருந்து உருவ முயற்சித்தாள்.

 

விடாமல் பிடித்திருந்தவன், “ஏ புள்ள, கேட்டதுக்கு பதில் சொல்ற பழக்கமே கிடையாதா உனக்கு!, என்று தன்னை நோக்கி மறுகையால் பெண்ணின் முகத்தைத் திருப்பினான்.

 

குண்டு பல்பின் வெளிச்சத்தில் நவீனாவை வெகு அருகாமையில் கண்டவனுக்கு, அவளின் அழுது களைத்த வதனத்தோடு, தூங்கியெழுந்த தாக்கமும் அதில் தெரிய, அது அவளின் மனதை தெளிவாகக் கூறியது.

 

தனது பிடியினால் உண்டான வலியை மறைத்தவாறே, பதில் பேசாமல் இருந்தவளைக் கண்டவன், அவளின் முகத்தை தன்னை நோக்கித் திருப்பிய கையை எடுத்திருந்தான்.

 

‘ஏன் பதிலைச் சொன்னா விட்டுறப் போறேன்,  அப்டியென்ன பிடிவாதம் இவளுக்கு!, என நினைத்தவாறே நவீனாவின் முகம் பார்த்திருந்தான். 

 

ஆனால் அவளின் கரம் பிடித்திருந்த கையை விடாமல் முன்னைக் காட்டிலும் அழுத்தமாகப் பிடித்திருந்தான்.

 

“ஸ்… ஆஆ… கைய விடுங்க முதல்ல…! அப்புறம் ஆன்சர் பண்றேன்!”, வலியின் அளவு கூடியதால் கண்களில் நீர் எட்டிப் பார்த்தது.

 

நவீனாவின் நயனங்களில் உண்டான மின்னலுக்கு, தனது இறுக்கமான பிடியினால் பெண் விழிகளில் உண்டான நீரே காரணம் என்பதை உணர்ந்து, பிடியை விட்டிருந்தான்.

 

“எனக்கு பேரில்லையா? எதுக்கு புள்ளை புள்ளைனு சொல்றீங்க?, என்று சங்கரைப் பார்த்து கோபமாகக் கேட்டாள் பெண்.

 

“மூணாம் மனுசங்ககிட்ட பேசற மாதிரி மொட்டையா என்ன பேச்சு இது?, என்று பெண்ணிடம் தனது எதிர்பார்ப்பைப் பகிர்ந்தவன்,

 

“கைய விடுங்க மச்சான், எனக்கு பேரில்லையா மச்சான்னு, அழகா, மரியாதையா கேளு!  அதைவிட்டுட்டு இதென்ன மொட்டைத் தாத்தா குட்டையில விழுந்த மாதிரி, என அவளின் பேச்சைப் பற்றிய கருத்தைக் கூறினான்.

 

சங்கரின் பேச்சைக் கேட்டு அசராதவள் கண்களைச் சுருக்கிவாறு, “எதுக்கு அப்டி சொல்லனும்?”, தனக்கு அதில் விருப்பமின்மையை வினவினாள்.

 

“அப்ப என்னை எப்டி கூப்பிடுவ?”, அவனுக்கு புதிராக இருந்தாள் பெண்.

 

“உங்களை எதுக்கு நான் கூப்பிடனும்?”, பெண்ணின் கேள்வியில் சற்றுநேரம் அமைதியானவன், மனதில் எழுந்த ஏதோ ஒரு உணர்வை உணர முடியாமல் திணறி, தன்னைச் சுதாரித்த பிறகு,

 

“எங்கிட்ட பேசும்போது, இனி இப்டி மொட்டையாதான் பேசப் போறீயா?”, வருத்தமாக வார்த்தைகள் வந்திருந்தது.

 

“உங்ககிட்ட நான் எப்டி பேசணும்னு என்னை நீங்க ஃபோர்ஸ் பண்ணக்கூடாது அண்ட் தென் கைட் பண்ணவும்கூடாது. அது என் இஷ்டம்!, தெளிவாக உரைத்தாள் பெண்.

 

சங்கரின் கையிலிருந்து வெளிவந்த தனது கையினை அவன் பிடித்திருந்த இடத்தை தனது துணியால் துடைத்துக் கொண்டிருந்தவளை கேள்வியாக பார்த்தான்.

 

அவளின் பேச்சில் இதுவரை மலைப்போடு கூடிய எரிச்சல் சங்கருக்கு உண்டாகியிருந்தது.

 

தற்போது அவளின் செயலைக் கண்டவனுக்கு என்னவென்று புரியாமல் விழித்தான்.

 

“அப்ப புள்ளைனு கூப்பிடறதும் வேறு என்ன சொல்லிக் கூப்பிடறதும் இனி என்னிஷ்டம்!, என்று முடித்தவன், அவளின் செயல் கண்டு, 

 

“எதுக்கு அந்தக் கையப் போட்டு இந்தத் துடை துடைக்கிற?”, அவளின் பேச்சினால் எழுந்த எரிச்சல் அவனது வார்த்தைகள் மூலம் வெளிப்பட்டது.

 

“ம்… ஒரே அழுக்கு!”, என முகத்தைச் சுருக்கியபடியே அவளின் கையில் கவனம் வைத்தவாறே கூறினாள் பெண்.

 

“எதுல அழுக்கு!”, அழுக்கு என்ற பெண்ணின் வார்த்தையில் தனது கையில் எதுவும் இருக்கிறதோ என ஒரு கனம் திருப்பிப் பார்த்து, அதில் ஒன்றுமில்லை என உணர்ந்தபின் கேட்டிருந்தான்.

 

“ம்… உங்க கையிலதான்!”, யோசியாமல் பேசியிருந்தாள் பெண்.

 

“நல்லா பாரு…! எங்க எங்கைல அழுக்கு இருக்கு?”, கையை விரித்து, நவீனாவின் முகத்துக்கு நேராகக் காட்டியவாறு, தன் பல்லைக் கடித்து தனது கோபத்தை காட்டமால் இருக்க முயன்றபடியே கேட்டான்.

 

பார்த்தவள் விழித்தாள்.  இருபுறமும் அவனது கையை திருப்பித் திருப்பிக் காட்டியிருந்தான்.

 

குண்டு பல்பின் வெளிச்சத்தில், புறங்கை சற்று நிறம் குறைந்தும், உள்ளங்கை நல்ல வெண்மையாக இருக்கக் கண்டவளுக்கு, அவனது நிறத்தைத்தான் இவ்வளவு நேரம் அழுக்கு என்று தான் கூறியிருக்கிறோம் என்பது புரிந்தாலும், ஏனோ மனதில் அந்த நிறம் அழுக்கான நிறமாகப் பதிந்ததை தானறியாமல் வாய்விட்டிருந்தாள்.

 

நவீனாவின் வீட்டில் அனைவரும் நல்ல நிறம்.  அவளது பள்ளித் தோழிகள், விளையாட்டு நண்பர்கள் அனைவரும் ஓரளவு நிறமானவர்களாகவே இருப்பார்கள்.

 

எப்படி நிறத்தில் இருந்தாலும், யாரையும் தன்னைத் தொட்டுப்பேச அனுமதிக்க மாட்டாள் பெண்.

 

அவர்களின் சுத்தம் பற்றி நம்பகத்தன்மையில்லாத காரணத்தால் சிறுவயது முதலே அவ்வாறு வளர்ந்திருந்தாள் பெண்.

 

சுத்தம், சுத்தம் என்று விபரமறிந்த நாள் முதலாய் வித்தியாசமாக வளர்ந்திருக்கிறாள்.

 

தினசரி புதிய ஆடைகளை அணிவதில் அலாதியான விருப்பம் அவளுக்கு.

 

பளிச்சென்றிருக்கும் வண்ண உடைகளை விட, வெண்மையான உடைகளை அணிவதையே பெரும்பாலும் விரும்புவாள்.

 

சில மங்கிய நிறங்களை அணியச் சொன்னால், ‘அது அழுக்கும்மா என்றுவிடுவாள் பெண்.

 

புஷ்பாவோ, “உனக்கு அடர்நிறமான ட்ரெஸ் போட்டாதான் உங்கலருக்கு எடுக்கும் நவீனா.  ஏன் எப்பவுமே இப்டி சாண்டல் இல்லைனா, வயிட் கலர் காம்பினேசன்லயே செலக்ட் பண்ற?, என்று அலுத்துக் கொள்ளுவார்.

 

மகளின் விருப்பம் அறிந்து வெற்றியும், அதேபோல எடுத்து வந்து தருவார்.

 

அது இதுநாள் வரை குற்றமாக்கப்பட்டதில்லை.  இன்று முதன்முறையாக நிறம் ஒரு பொருட்டானது.

 

“அழுக்கு எங்க இருக்குன்னு எங்கைல காட்டு!, என ஒரு காட்டு அவளுக்கு காட்டும் எண்ணத்துடன் கேட்டிருந்தான்.

 

என்ன சொல்வதெனத் தெரியாமல் விழித்தவள், “சாரி!, என சரணடைந்து கூற

 

“ஒழுங்கா எஸ்கேப்பாகாம பதிலைச் சொல்லுடீ…! நல்லா இருக்குற கையப் பாத்து அழுக்குன்னு சொன்னதுக்கு என்ன அர்த்தம்?”, குறையாத கோபத்துடன் நவீனாவை நோக்கிக் கேட்டான் சங்கர்.

 

“…”, ‘என்ன சொல்ல? பதில் சொல்லலைனா விடமாட்டாங்க போலயே.  மனுசனுக்கு பெரிய புலன் விசாரணை விஜயகாந்துன்னு நினைப்பு!, என அமைதியாக நின்றிருந்தாள்.

 

“நல்லாத்தானே பேசிட்டு இருந்த, இப்ப என்ன ஆச்சு, வாய நகைக்கடையில அடகு வச்சிட்டியா?”, நக்கலாகக் கேட்டான்.

 

‘என்ன பேச்சுடா இது என்பதாக சங்கரைப் பார்த்தவள், “ம்… தெரியாம சொல்லிட்டேன்!, என்று அறியாமையை அவனிடம் சமர்ப்பித்துவிட்டு, கிளம்பத் திரும்பினாள் பெண்.

 

நிறங்களைக் கொண்டு மனிதர்களை இதுவரை ஒதுக்கியவள், மனதில் ஒட்டாத போதும், வெட்டாமல் இருக்கப் பழக முடிவு செய்திருந்தாள்.

 

தெரியாமல் அவள் சொன்னதைவிட, தன்னை பொருட்டாக மதியாமல், பெண் கிளம்பியதில் தன்னை அறியாமலேயே வாயை விட்டிருந்தான் சங்கர்.

 

“ஏய் எங்கடீ அதுக்குள்ள போற! ஒழுங்கா பதிலைச் சொல்லு.  நாங்கருப்பா இருக்கேன்னு தானா, நான்தொட்ட இடத்தை தோலுறியற அளவுக்கு இப்ப துடைச்ச?”, விடாக்கண்டனாக வினவியனின் வார்த்தையில் அவன் கண்டு கொண்டதை அறிந்தவள்,

 

“ஆஹான்என ஒரு கனம் வாய்பிழந்தவள், “அதுதான் தெரியுதுல்ல!  அப்புறம் எதுக்கு நிக்க வச்சிக் கேட்டுக்கிட்டு!, என்று வாயினுள் கூறியவள், அத்தோடு விடாமல் குரலை சற்று உயர்த்தி,

 

“இந்த ‘டீ போட்டு பேசற வேலையெல்லாம் எங்கிட்ட இனி வச்சிக்காதீங்க!, என்று அவளால் முடிந்த அளவு தைரியமாகவே வலக்கையை சங்கரின் முகத்துக்கு முன் ‘பத்திரம்என ஆட்காட்டிவிரலை நீட்டிக் கூறியிருந்தாள்.

 

அவளின் நீட்டிய நீளமான விரலைப் பார்த்திருந்தவன், நமட்டுச் சிரிப்போடு நீட்டிய விரலோடு அவளின் கையை தனது கைகளுக்குள் பிடித்திருந்தான்.

 

“நான் அப்டித்தான்டீ பேசுவேன்! உன்னால என்ன செய்ய முடியுமோ செய்துக்க!, என்று வம்பாகக் கூறினான் சங்கர். 

 

இதுவரை இப்படி யாரிடமும் வம்பு வளர்த்திராதவன் திடீரென்று எப்டி இவ்வாறு ஆனான் என அவனுக்கே புரியவில்லை.

 

“நீங்க என்னை டீ போட்டு பேசினா,  அப்புறம் உங்களை டா போட்டுதான் பேசுவேன், என்று பெண்ணியம் பேசியவள் அவனின் கைகளுக்குள் இருந்த தனது கையை வெடுக்கென உருவியிருந்தாள்.

 

“நான் உன்னை விட மூத்தவன்.  உன்னை டீ போட்டு கூப்பிடாம, டீச்சரம்மானா மரியாதையா கூப்பிடுவாங்க?, என்று பேசியவன் அத்தோடு நிறுத்தாமல்

 

“… அதுக்கு பதிலுக்கு என்னை ‘டா போடுவியா!  ‘டா போட்டா வாயிலயே போட்ருவேன்,  பாத்துக்க!, என்றான்.

 

அத்தோடு விடும் எண்ணமில்லாமல், மீண்டும் பழையபடி முருங்கை மரம் ஏறியிருந்தான்.

 

“சரி! நான் கேக்கறதுக்கு முதல்ல பதிலைச் சொல்லு! இப்ப எதுக்கு இங்க வந்த?”, என்று கேட்டிருந்தான்.

 

“நீங்க எதுக்கு இங்க வந்தீங்கனு நான் கேட்டனா? இல்லைல!  அப்புறம் எதுக்கு நீங்க மட்டும் என்னைக் கேக்கறீங்க?, என்றவாறே அங்கிருந்து திரும்பினாள்.

 

நவீனாவின் பேச்சைக் கேட்டு, இப்படி எந்த அத்தையின் மகள்களும் தன்னிடம் பதிலுக்குப் பதில் பேசியிறாத நிலையில், சட்டென மூண்ட கோபத்தில், சென்றவளின் கையை மீண்டும் பிடித்து நிறுத்தியிருந்தான்.

 

புரியாமல் திரும்பி சங்கரை நோக்கியவளை, “ஏய்… நில்லுடீ முதல்ல… சின்னப் புள்ளைனு பாத்தா ரொம்ப பேசற. ஒழுங்கா பதில் சொல்லிட்டுப் போடீ!, என்று விடாமல் கேட்டான்.

 

“நீங்க எதுக்கு வந்தீங்களோ அதுக்குத்தான் நானும் வந்தேன்.  போதுமாடா!, என்றபடி சங்கரின் இலகுவான பிடியில் இருந்து தனது கையை வேகமாக மீண்டும் உருவியவள்,

 

“இனி இந்தத் தொட்டுப் பேசறது, கையை பிடிக்கறது இதெல்லாம் எங்கிட்ட வச்சிக்கக் கூடாது.  ஆமா சொல்லிட்டேன்”, என்றவள் அங்கிருந்து அவசர வேகத்தில் கிளம்பிப் போன வேகத்தில் மீண்டும் நின்றிருந்தவனை திரும்பி நோக்கியவள்

 

“டா போட்டா வாயில போடுவீங்களோ!  அதுவரை எங்கையி என்ன கைட் விடவா போகும்.  நானும் பதிலுக்கு திருப்பிக் கொடுப்பேன்டா, என்றவாறு கீழே போயிருந்தாள்.

///////////////

நிறுத்தி வம்பு வளர்த்தவனின் செயல்கள், வார்த்தைகள் வந்து மனதில் புதிதாக குடியேறியிருக்க, பெற்றோர்களின் பிரிவால் உண்டாகியிருந்த மனக்கலக்கம் அப்போது முற்றிலும் மறைந்திருந்தது.

 

சங்கரின் பேச்சிலும், வம்பிலும் மனத்தை செலுத்தியவாறே படுக்கையில் சென்று படுத்திருந்தாள்.

 

சற்று நேரம் சங்கரை வைதவள், அதன்பிறகு அவளறியாமலேயே உறங்கியிருந்தாள்.

 

உறங்குமுன் சங்கரைப் பற்றிய எண்ணத்தோடு உறங்கியதாலோ என்னவோ, வந்த கனவுகள் அனைத்திலும், அவளோடு சண்டைக்கு நின்றிருந்தான் சங்கர்.

 

கனவு என்று தெரியாமலேயே, கனவில் அவனோடு சண்டையிட்டு, மல்லுக்கட்டி, களைத்திருந்தாள் பெண்.

 

இதுவரை இதுபோன்ற நிகழ்வுகள் நேர்ந்திராதவளுக்கு, சங்கரின் மிரட்டும் தொனியும், டீ போட்டு பேசும் முறையும், பெயர் கூறாமல் புள்ளை என அழைத்துப் பேசுவதும் கோபத்தை அவன்மீது கொண்டு வந்திருந்தது.

 

அன்று இரவில் நடந்ததை தற்போது நினைத்தவளுக்கு, தனது செயல் ஒன்றும் இதுவரைத் தப்பாகத் தோன்றவில்லை.

 

ஆனால் அன்று சங்கரின் மனதில் தோன்றிய பலவிதமான உணர்வுகளை அவள் மனம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

///////////////////////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!