TholilSaayavaa-5
TholilSaayavaa-5
5
***
அன்று மாலை மாப்பிள்ளை வீட்டார் வருவதாகச் சொல்லியிருக்க பாதி நாள் விடுப்பெடுத்து வீட்டிற்குப் புறப்பட்டாள்.
பைரவ், குறுஞ்செய்தியில், “ஆல் தி பெஸ்ட். மாப்பிள்ளை எப்படின்னு மெசேஜ் பண்ணுடா. ஃபிகரை பார்த்துட்டு பிரெண்டை கயட்டி விட்டுடாதே” என்று குறும்பாய் அனுப்பியிருந்ததைப் பார்த்தவள் சிரித்தபடி
“நீ என் செல்லக்குட்டிடா” என்று மாயா அனுப்பியிருந்த பதிலைப் பார்த்துச் சிரித்துக்கொண்டவனோ “சரி அப்புறம் பேசு நேரமாகிட போகுது கிளம்புடா” என்று பதில் அனுப்பிவைத்தான்.
மாயாவின் வீட்டில்:
கீதா சோகமாக அமர்ந்திருக்க, கிருஷ்ணன் அவரைத் தேற்றிக் கொண்டிருக்க, மாதவனோ,
“விடுமா! இவன்தான் உலகத்துலயே ஒரே பையனா? நம்ம மாயா குட்டிக்கு இவனைவிட நல்ல குணமுள்ள பையனா அமைவான் பாத்துட்டே இரு” பொருமிக்கொண்டிருந்தான்.
மெல்ல ஓசைப்படாமல் வீட்டிற்குள் சென்ற மாயா, மாதவனிடம் ஜாடையாய் ‘என்ன?’ வென்று கேட்க,
தங்கையை எதிர்பார்க்காத மாதவனோ “ஸ்ஸ்! உனக்கு ஃபோன் பண்ண மறந்துட்டேன் பட்டு” நெற்றியில் அடித்துக்கொண்டான்.
“என்னாச்சு? புட்டுக்கிச்சு போல” கேள்வியாய் தந்தையைப் பார்த்தாள்.
அவரோ அதிர்ச்சியுடன் “உனக்கெப்படி?” என்று கேட்டதில் சிரித்தவள்,
“இதுக்கு பெரிய திறமைலாம் வேண்டாம். என் அறிவே போதும்.
அம்மா கொடம் கொடமா அழுதமாதிரி இருக்கு, நீ சமாதானம் சொல்றே, இவன் என்னடான்னா போருக்குப் போறவன் மாதிரி நிக்கிறான்…
இதெல்லாம் வச்சு பாத்தா…அந்தப் பையன் என் போட்டோவைப் பார்த்து பயந்து நான் வேண்டாம்னு சொல்லிட்டான் கரரெக்ட்டா?” சிரித்தபடி அன்னையின் அருகில் அமர்ந்து அவரைச் சமாதானம் செய்யத் துவங்கினாள்.
“கொஞ்சம் வாடா…” தங்கையைத் தனியாகத் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றான் மாதவன்.
“என்னடா ஆச்சு? எதுக்கு இப்போ இவளோ ரகளை?” அவள் சாதாரணமாகத்தான் கேட்டாள்
“அந்தப் பய உன்னைப் பத்தி தப்பா சொல்றான் டா!” மாதவனின் குரல் கோபத்தில் நடுங்கியது.
அவன் சொன்னதை உள்வாங்கச் சிலநொடிகளானது மாயாவிற்கு,
“என்ன?” வினவினாள், கேட்டது சரியா என்று தெரிந்துகொள்ள
“நீ யார்கூடவோ ஆபிஸ்ல தப்பா…” பேச்சு தடைபட்டு கண்கள் சிவந்தவன் “விடுமா அவன் கெடக்கான் எதோ உளாறிட்டு போறான்” கோவமும் ஆதங்கமும் அவனை வாட்ட
“டேய் ஒழுங்கா சொல்லு” மெல்லிய கோபம் தலைதூக்க
“நீ யாரையோ ஆஃபீஸ்ல லவ் செஞ்சுகிட்டு திரியிரியாம், அவன் இளிச்சவாய் இல்லையாம். இன்னும் என்னென்னவோ, கேட்கவே எனக்குப் பிடிக்கல போனை வச்சுட்டேன்” கோபமாகச் சொன்னவன், மாயாவின் தலையைச் செல்லமாக வருடி
“விடுடா. உன்னை எங்களுக்குத் தெரியும். சாரி உன்னை டிஸ்டர்ப் பண்ணிட்டோம். நீ போப்போய் ரெஸ்ட் எடு” என்றவன், அவள் முன் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த அரும்பாடுபட்டான்.
“லூஸ்ல விடு. யார்னே தெரியாதவனுக்காக நான் ஏன் பீல் பண்ண போறேன்? அப்போ நான் ஆபிஸ் களம்பறேன்” என்றவள் அவர்கள் வேண்டாமென்று சொல்லியும் வேலை இருப்பதாய் சென்றுவிட்டாள்.
நடந்ததை நண்பர்கிடம் எளிதாகப் பகிர்ந்தவள், பைரவிடம் சொல்ல ஏனோ தயங்கி மாலை வேலைநேரம் முடிந்தபின் கூடத் தன் இருக்கையிலேயே அமர்ந்திருந்தாள்.
அவள் இருக்கையைத் தாண்டித்தான் பைரவ் அலுவலகத்தை விட்டு வெளியேற முடியும், அவள் வீட்டிற்குச் சென்றிருப்பாள் என்று அறிந்தும் எப்பொழுதும்போலப் பார்வையை அவள் இருக்கையை நோக்கி வீசியவன்,
டேபிளில் தலைவைத்து படுத்துக்கொண்டிருந்த மாயாவைப் பார்த்து, அவளை நெருங்கி
“ஆழாக்கு வீட்டுக்குப் போல?” அவள் குரலில் எழுந்தவள் முகம் வட்டியிருப்பதைக் கண்டு,
“என்னடா ஆச்சு? வீட்டுக்குப் போகல?” அவன் குழப்பமாய் கேட்க
அவனிடம் பொய்யுரைக்க முடியாமல் தயங்கியபடி, நடந்ததைச் சொன்னாள்.
அவள் சொன்னதைக் கேட்ட பைரவின் சிவந்த முகம் குங்குமமாய் சிவக்க,
“ *** !” மிகமோசமான வார்த்தையால் அவனைத் திட்டியவன், “அவன் யாரு என்னன்னு சொல்லு, இந்த பேச்சு பேசின அவன் வாய ஒடச்சுட்டு வரேன்” உறுமினான்,
“ப்ளீஸ் கத்தாதீங்க…யாரவது கேட்டா என்ன நெனப்பாங்க? இதுக்குதான் உங்ககிட்ட சொல்லக்கூடாதுனு நெனச்சேன்” தலை கவிழ்ந்தாள்
“ஒ அபப்டிவேற எண்ணம் இருக்கா? நீ தேறமாட்டே நான் மாதவன் கிட்ட பேசிக்கிறேன் நீ கிளம்பு….இல்ல வேண்டாம் என்கூட வா நான் டிராப் பண்றேன். கூட்டி இங்கயே இருக்கட்டும்” அவளை மிரட்டிப் பலவந்தமாகத் தானே அவள் வீட்டிற்கு அழைத்துச்சென்றான்.
ஓரளவிற்கு மனம் தேறி இருந்தவர்கள் பைரவின் வருகையை எதிர்பார்க்கவில்லை. ஏதும் சொல்லாமல் அவனை அன்பாய் வரவேற்றவர்கள் நலம் விசாரிக்க, சிறிது நேரம் இயல்பாய் பேசியவன், மாயாவிடம்
“எதன்னை நாளுக்கப்புறம் உங்க வீட்டுக்கு வந்துருக்கேன். போ சூடா ஒரு கப் உங்க சாக்லேட் மில்க் கொண்டுவா ஓடு” அவளைச் சமையலறைக்கு துரத்தியவன், மாதவனிடமிருந்து அவினாஷ் பற்றிய விவரத்தைத் தெரிந்து கொண்டான்.
விடைபெறும் நேரம் வாயிலில் மாயாவிடம், “எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு, ராத்திரி மெஸேஜ் பண்ணலைன்னா தப்பா எடுத்துக்காத, தூங்கு. எதுவும் யோசிக்காம நல்ல பொண்ணா இருப்பியாம். நான் உன்னை நாளைக்கு பேய் படத்துக்குக் கூட்டிக்கிட்டு போவேனாம்”
“ஹை என்ன படம்? *** ?” அவள் கண்கள் விரிய
“அதே அதே. உள்ள போ, கொசுவே கொசுவை கடிச்சு வைக்கப்போகுது” கிண்டல் செய்தவன் செல்லமாக அவளிடமிருந்து தோளில் அடிகளை வாங்கிக்கொண்டு புறப்பட்டான்.
அதுவரை மனயிருக்கத்தில் இருந்த மாயா, பைரவுடன் பேசியதிலிருந்து வழமைக்குத் திரும்பினாள்.
அவளின் மாறுதலை உணர்ந்த குடும்பத்தினரும், தங்களைச் சமாதானம் செய்துகொண்டனர்.
மாயாவின் வீட்டிலிருந்து நேராக அவினாஷை காணச் சென்ற பைரவ், வெற்றி புன்னகையுடன் வீடு திரும்பினான்!
துள்ளிக்குதித்துச் சிரித்தபடி கார் சாவியை மேலே எறிந்து எறிந்து பிடித்த படி வீட்டிற்குள் நுழைந்த மகனை அதிசயமாகப் பார்த்தார், அவன் அன்னை. பிக்ஸெல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் திருமதி வாணி விஸ்வநாத்.
சில மாதங்களாக மகனிடம் காணப்படும் மாறுதல்களை முதலில் வியந்து பார்த்தவர், பின்பு அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இன்று அவர் கேள்விப்பட்ட விஷயம் அவரைக் கலக்கத்தில் ஆழ்த்தி இருந்தது.
அது அவன் அங்கு வேலை செய்யும் ஒரு பெண்ணை காதலிப்பதாக அவர் காதுவரை வந்த கிசுகிசுவே.
மாயாவைப் பற்றி அனைத்தையும் மகன் தன்னிடம் ஏற்கனவே பகிர்ந்திருந்தாலும், ஏனோ மனதின் ஒரு ஓரத்தில் அப்படியும் இருக்குமோ என்ற சந்தேகம் தலைதூக்கத் துவங்கியது.
மனதில் வைத்துக்கொள்ள விரும்பாதவர், மகனிடம் கேட்டுத் தெளிந்து கொள்ள அவனை அழைத்து அருகில் அமர செய்தார்,
“என்னப்பா ஒரே சந்தோஷமா இருக்க? என்ன சொல்லேன் அம்மாவும் சந்தோசப்படுவேனே”
“ஆமா ரொம்ப ஹேப்பியா இருக்கேன். ஒருத்தன் வாய அடிச்சு ஒடைச்சுட்டேன்!” உரக்கச் சிரித்தான்
“என்ன?” அரண்டவர், மகனைக் கேள்வியாய் பார்க்க
“ஆமா மா மாயாவை பத்தி தப்பா பேசினான். அதான் மூஞ்சிலயே நாலு பன்ச் விட்டேன்” காற்றில் குத்தவிட்டுக் காட்டியவன், “பய இனி பேச பல வாரமோ மாசமோ ஆகும்” சிரித்தபடி இருக்க
“டேய்! விளையாடாம விஷயத்தை சொல்லு”
அன்னையின் குரலிலிருந்த கண்டிப்பை உணர்ந்தவன், விளையாட்டைக் கைவிட்டு நடந்ததைச் சொல்ல, இப்பொழுது வாணிக்குத்தான் சங்கடமாக இருந்தது.
அவன் மாயாவின் மேல் கொண்ட அன்பினை உணர்ந்தவர், தயக்கம் தடுத்தாலும் துணிந்து,
“கண்ணா நான் கேக்குறேனு அம்மா மேல கோச்சுக்க கூடாது. கேட்கவா?”
“எதுக்கு இவளோ பீடிகை கேளு கேளு’ அவர் மடியிலிருந்த மடிக்கணினியை எடுத்து மேஜையில் வைத்தவன், அன்னையின் மடியில் படுத்துக்கொண்டு அவர் கையைத் தலைமீது வைத்து,
“தலையை கோதிவிடுமா ஒரே ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு” கண்களை மூடிக்கொண்டான்.
மகனின் சிகையை மென்மையாக வருடியபடி, பேச்சை எப்படித் துவங்குவதென்று அவர் யோசித்திருக்க,
“மா…”
“ம்ம்ம்”
“கேளு”
“கோவப்படக் கூடாது…”
“வாக்கெலாம் கொடுக்க முடியாது. நீ கேளு” புன்னகையுடன் சொன்னவன், “ஓவரா யோசிச்சா உடம்புக்கு ஆகாது. டபால்னு கேட்டுடு பாப்போம்” என்றான்
“நீயும் மாயாவும் லவ் பண்றிங்களான்னு…” மகனைப் புண்படுத்தக் கூடாதென்று நினைத்தவர் அதோடு நிருக்கொள்ள,
சிரிக்க துவங்கினான், “அப்படியா? சொல்லவேல்ல ?” சிரிப்பதை நிறுத்தவில்லை
“டேய் நான் சீரிய கேக்கறேன் சிரிக்கிற?”
“மக்கு பிளாஸ்திரி! நான் லவ் பண்ணா உன்கிட்ட சொல்லாம வேற யார் கிட்ட சொல்லப்போறேன்? மக்கு மக்கு” இன்னும் வாகாகப் படுத்துக்கொண்டான்.
“விளையாடாத பா. நீங்க நட்பா பழகர்த்து நிறைய பேருக்கு இப்படித்தான் தோணுது. சில பேர் ஒருபடி மேல போய், மாயா காசுக்காக உன்கூட பழகர்த்தா சொல்ராங்க. எனக்கே கேக்க பிடிக்கலை தெரியுமா” வருந்தினார்
“பிடிக்கலைன்னா கேட்காத. சிம்பிள்” அவன் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை
“பைரவ் விளையாடாத” கோவம் வாணிக்கு
“அம்மா அவ காதலிச்சா தான் நான் சம்பாதிக்கிறதெல்லாம் அவளுக்கு தருவேன்னு யார் சொன்னா? அவ இப்போ கேட்டாலே கொடுத்துடுவேன். ஆனா அவ அதெல்லாம் எதிர்பாக்குறவ இல்லைனு உனக்கே தெரியுமே!”
“நான் அவளை ஏண்டா தப்பா சொல்லப்போறேன் ? காதுல விழற விஷயத்தைச் சொன்னேன்.”
“அப்புறம் என்ன. விடு வேண்டாததை ஏன் பேசணும்?”
“டேய் இது அவ வாழ்க்கைடா. பாரு இன்னிக்கி அவளைத் தப்பா பேசித் தவிர்த்துருக்காங்க. நம்மளால யாருக்கும் நன்மை இல்லைனாலும் பரவால்ல, கஷ்டம் மட்டும் வந்துட கூடாது டா கண்ணா. எனக்கும் சங்கடமா இருக்கு ஆனா எனக்காக நீ…” தயங்கியவர், “அவ கூடப் பழகர்த நிறுத்…” அவர் முடிக்கும் முன்பே அவர் கையை தட்டிவிட்டு எழுது நின்றான் பைரவ்
“ஸ்டாப்…ஒரு வார்த்தை இனி இதப்பத்தி பேசாத. எவனோ வேலை இல்லாதவன் பேசற கீழ்த்தனமான புரளிக்கு நான் என் மாயாவை விட முடியாது. அவ என்னக்கு தோழியோ காதலியோ அதை யாருக்கும் போய்ப் புரியவைக்க வேண்டிய அவசியம்…எனக்கு இல்ல.
உனக்கு என் மேல நம்பிக்கை இருக்கா இல்லையா அதைமட்டும் சுத்திவளைக்காம இப்போவே சொல்லு” தாயை நோக்கித் தீர்க்கமாகக் கேட்டவன் முகம் கோவத்தில் சிவந்திருக்க
“நான் உங்க ரெண்டு பேரையும் மனசார நம்பறேன்” கண்கள் கலங்கிடச் சொன்னவர் “அதுக்கேண்டா என் கையை திட்டிவிட்ட ?” முகத்தைத் திருப்பிக்கொண்டார்
“பின்ன உன்புள்ளய பத்தி தப்பா சொன்னா அவங்க வாயிலேயே நாலு போடாம? என் பிள்ளை அப்படி இல்லைனு சொல்லாம? வந்து என்கிட்டே கேட்டுக் கிட்டு இருக்க. இதுல கேனத்தனமான அட்வைஸ் வேற” அவனும் முறுக்கிக்கொண்டான்
“உனக்கு ரொம்ப தெரியுமோ ?”
“என்ன தெரியணும் ?”
“வதந்தி பரப்பினது யாருன்னு கண்டுபிடிக்க சொல்லிருக்கேன்”
கோவம் மறைந்து புன்னகைத்தவன் தன் தாய்க்குத் திருஷ்டி கழிப்பதைப் போல் பாவலா செய்து, “உனக்கு இவளோ புத்திசாலித்தனம் இருக்கும்னு தெரியாம போச்சே வாணிமா” பாராட்ட
“தேங்க்ஸ் டா” என்றவர் அவன் சிரிப்பதைப் பார்த்ததும்தான் அவன் தன்னை கேலி செய்வதை உணர்ந்தார்
“அடிச்சேன்னா படவா” போலியாகக் கடிந்துகொள்ள
“பின்ன எவன் ஒத்துப்பான் புரளி பேசுறேன்னு? இவனுங்களுக்கு வேற வேலை இல்ல. இது ஒரு மேட்டர்ன்னு என்கிட்டே பேசிகிட்டு. நான் எவளோ சந்தோஷமா வந்தேன் உன்னை டின்னருக்கு கூட்டிகிட்டு போலாம்னு… வேணாம்னா போ” போலியாகச் சொன்னவன் தன் அறையை நோக்கிச் செல்ல
“டேய் டேய் போலாம்டா நான் வாயே திறக்கமாட்டேன் ப்ளீஸ் டா” வாணி கெஞ்ச, சிரித்துக்கொண்டே திரும்பியவன்
“சும்மா தமாஷ் ! ஓடு ரெடியாகு நான் பிரெஷ் ஆகிட்டு வரேன்.” விறுவிறுவெனப் படிகளேறி சென்ற மகனின் உறுதியான நட்பைக் கண்டு பெருமை கொள்வதா? அவன் மாயாவின் மேல் கொண்டுள்ள அதீத உரிமையைக் கண்டு அச்சம் கொள்வதா? இல்லை அவர்களைத் தவறாய் பேசும் அல்ப ஜீவன்களை எண்ணி கோவப்படுவதா? எதுவுமே புலப்படாமல் தவித்தார்.
விஸ்வநாதன் காலம்சென்ற பின்னர், ஒற்றை ஆளாய் மகனை வளர்த்தவர், நிறுவனத்தையும் தன் மன உறுதியால் வளர்த்தார். மெல்ல மெல்ல பொறுப்புகளை மகனிடம் கொடுக்க நினைத்தவர் அவன் படிப்பு முடிந்ததும் தன் நிறுவனத்தில் சேர்த்துக்கொண்டார். சில வருடங்களில் நிறுவனத்தின் சூட்சமங்களைத் தெரிந்து கொண்டவனை CEO வாக நியமித்து அவன் ஆளுமைத் திறனையும் மெருகேற்றிக் கொண்டிருக்கிறார்.
தாயின் நிழலில் வளர்ந்தவன், இப்பொழுது அவருக்குப் பெரிய பாதுகாப்பு அரணாய் நிற்கிறான். பணத்திற்காக அவர்களிடம் போலியான பாசம் காட்டி பழகிய உறவுகளை மெல்ல மெல்ல நாசுக்காகத் தங்கள் வாழ்க்கையிலிருந்து அப்புறப் படுத்தினான்.
மகனின் எதிர்காலம் தேவையற்ற வதந்திகளால் பாழாவதை அவர் விரும்பவில்லை, அதேநேரம் மாயாவின் வாழ்க்கை தன் மகனால் கேள்விக் குறியாவதையும் அவர் விரும்பவில்லை. அதற்குத் தீர்வாகத்தான் அவர்கள் நட்பைவிடச் சொல்லி மகனிடம் பேச விழைந்தார்.
அவன் பிடிவாத குணத்தை அறிந்தவர் அவன் அதை ஏற்க மாட்டான் என்பதையும் முன்கூட்டியே யூகித்திருந்தார்.
நடப்பது அவன் செயல் என்று கடவுளிடம் விட்டவர் அதன் பின்பு அதைப் பற்றி நினைக்கக் கூடாதென்று முடிவெடுத்துக்கொண்டார்.
***
மாயா பைரவை தேடி அவன் செக்ரட்டரி கீர்தனவிடம்,
“கீர்த்து, பாஸ் எங்க? எப்போ வருவார்?”
பைரவிடம் கையெழுத்து வாங்கவேண்டிய கோப்புகளை அடுக்கிக் கொண்டிருந்த கீர்த்தனா புன்னகையுடன்,
“உனக்கே தெரியாட்டி பாவம் பிஏ, எனக்கா தெரியும்?” வம்பிழுக்க
“அய்யோடா! உன்கிட்ட தானே அவர் அப்பாயிண்ட்மெண்ட் லிஸ்ட் இருக்கு. பாத்து சொல்லு ப்ளீஸ்டா” கெஞ்சினாள்
“அவர் பர்சனலா வெளில போயிட்டு வர்தாதான் கிளம்பினார். மத்தபடி எனக்குத் தெரியாது டா” வேலையைத் தொடர்ந்தபடி கீர்த்தனா சொல்ல
“நம்பிட்டேன்! நீ தெரிஞ்சா மட்டும் சொல்லவா போற? விசுவாசத்துக்கு மறுபெயர் கீர்த்தனாவாச்சே. உன்னை மாதிரி அபூர்வ பிறவிகள் இருக்கறதால தானோ இன்னும் மழை பெய்யுது.
சரி நான் வந்துட்டு போனேன்னு மட்டும் பாஸ் கிட்ட சொல்லிடு” என்று புன்னகைத்து கிளம்பியவள்,
மறுபடி கீர்த்தனாவிடம் “மறந்துட்டேன். வினோத் உன்னைக் கால் பண்ணச் சொன்னான். நீ அவனைப் பிளாக் பண்ணிட்டியாமே”
“அவன் பண்ற வேலைக்குப் பிளாக் பண்றதோட விட்டேன்னு சந்தோஷ படச்சொல்லுபா. சரியான டியூப்லயிட்” வேலையை நிறுத்தி மாயாவை முறைத்தாள்
“என்ன செஞ்சான் இப்ப? உங்க சண்டை நேத்தே சமாதானம் ஆனதா சொன்னானே”
“இது வேற” கீர்த்தனா முகம் வாட
“உங்க சண்டையை தீர்த்துத் தீர்த்து எனக்கு தலை சுற்றுகிறது. ஒரு லவ்வர்ஸ் எப்போவாது சண்டைபோட்டு எப்போவும் காதலிக்கனும் நீங்க எப்போவும் சண்டை போட்டு எப்போவாது காதலிக்கிறீங்க.
உங்க கல்யாணத்த மண்டபத்துல, இல்ல பாக்ஸிங் ரிங்லதான் நடத்தணும்” என்று சிரித்தவள்
“சொல்றேன் அவனை வர சொல்றேன். பை.” தன் இருப்பிடத்திற்குச் சென்றாள்
வினோத் ஆர்வமாக மாயாவின் வருகைக்காக வழியிலிருந்த பிரேக் அறையில் காத்திருந்தான். கடந்து சென்றுகொண்டிருந்த மாயாவைக் கையை பிடித்து உள்ளே இழுத்தவன்
“போனியா? பேசினியா ? என்ன சொன்னா? கோவமா இருகாழா? ஏதாவது சொல்லேண்டி…” கடுகடுதான்
“நீ பேசிக்கிட்டே இருந்தா நான் எப்படி பதில் சொல்றது?”
“ம்ம் சொல்லு?” அவசரப்படுத்தினான்
“கோவமா தான் இருக்கா. எப்போதும் போலச் சமாதானம் ஆகிடப்போறா இதுக்கெல்லாம் ஓவரா சீன போட்டுக்கிட்டு. சேச்சே இந்த காதலர்கள் கொசுத்தொல்லை தங்கலடா” அலுத்துக்கொண்டாள்
“எல்லாரும் உன்னை மாதிரியா?” குரல் வரத் திரும்பியவள் முகம் இறுகியது, அங்குப் பணிபுரியும் வேதாவிற்கு அசலே மாயாவை ஏனோ பிடிக்காது,
இப்பொழுது அவள் பைரவுடன் கொண்டிருந்த நட்பு மெல்லப் பரவ துவங்கி இருக்க இன்னும் அவள்மேல் வெறுப்பை வளர்த்துக்கொண்டிருந்த வேதா, சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் வார்த்தைகளால் மாயாவைச் சுட முயன்று கொண்டே இருந்தாள்.
வேதாவை கண்ட வினோத் கிளம்பிவிட, மாயாவை இடைமறித்தவள்,
“வந்தவுடனே அவரைக் கைக்குள்ள போட்டுக்கிட்ட, டிசைன் பண்ண முதல் கேரக்க்டர் ப்ரொடக்க்ஷன் போக வச்சுட்டே. இது பிரெண்ட்ஸுன்னு நாடகம். எதுக்கு இந்த கேவலமான வேலை உனக்கு?” வேதாவின் கண்களில் வெறுப்பு அப்பட்டமாகத் தெரிந்தது
அவளை ஒருபொருட்டாகவே மதிக்காத மாயா,
“அவர் எனக்கு பாஸா, பிரெண்டா, லவ்வரா இல்லை வேற ஏதாவதா…இதெல்லாம் உனக்கு சொல்லவேண்டிய அவசியம் எனக்கு இல்ல. இதுல மூக்கை விட்றதுக்கு முன்னாடி வாங்குற காசுக்கு வேலையும் கொஞ்சம் பாக்கணும்னு யோசிச்சா நல்லா இருக்கும்.”
நிற்காமல் அவளைத்தாண்டிச் சென்றுவிட, அவள் தன்னை அவமதித்ததாகக் கூட்டாளிகளிடம் முறையிடத் துவங்கினாள் வேதா.
மதிய உணவின் பொழுது, பைரவ் கைப்பேசியில் அழைக்க, எப்பொழுதுபோல் தனியாகச் சென்றவள்,
“எங்கப்பா போனீங்க? காலைலேந்து தேடறேன் தெரியுமா?”
“போலீஸ் ஸ்டேஷன்ல இருந்தேண்டா அதான் உன் கால் அட்டென்ட் பண்ணமுடியால”
“அடப்பாவி அங்க எதுக்கு போன?”
“பின்ன ஒருத்தன் பல்லை ஒடச்சா பாராட்டு பத்திரமா தருவாங்க? சின்னப்புள்ள தனமால்ல இருக்கு”
“என்ன சொல்றே? யார் பல்லை…” கேட்கும் போதே அவளுக்குப் புரிந்துவிட, விழுந்து விழுந்து சிரிக்கத் துவங்கினாள்,
“நான் போலீஸ் ஸ்டேஷன் போயிட்டு வந்தேன்னு சொல்றேன் நீ சிரிக்கிற?” அவன் கடுகடுக்க
“நீ வீரன் டா! தப்பா பேசினவன் பல்லை உடைச்சே பாரு, அங்க நிக்கிறே. நீ சிங்கம்டா! என் தளபதி டா!” அவள் அடுக்கிக்கொண்டே போகச்
சிரித்தவனோ, “போதும் போதும் லிஸ்ட் பெரிசா போகுது” என்று மேலும் சிரிக்க
“வீராதி வீரனே தாங்கள் பல்லுடைத்த கதையைக் கேட்க ஆவலுடன் காத்திருக்கிறேன்”
“சொல்றேன் சொல்றேன் மொதல்ல வயித்துக்கு அப்புறம் உன்செவிக்கு. சாப்பிட்டு வரேன்” காரை ஒட்டியபடி சொன்னவன், “ஆமா நீ சாப்டியா?”
“இல்ல இனிமேதான்”
அவளைக் கீழே வரச்சொன்னவன், அவளை அழைத்துக்கொண்டு உணவகத்திற்குச் சென்றான். சாப்பிட்டபடி பேசத்துவங்கிவள்,
அவனைத் தேடிச் சென்றதையும், வழியில் வேதாவிடம் வம்பு வளர்த்ததையும் சொல்லிச் சிரிக்க, சாப்பிடுவதை நிறுத்தித் தட்டை வெறித்தவன், யோசனையில் மூழ்க,
“அங்கே என்ன தெரிகிறது ?” அவள் கிண்டலாகக் கேட்க
“ஆழாக்கு…” ஏனோ கண்களை மூடிக்கொண்டவன் முகமே சொல்லியது, தன் உணர்வைக் கட்டுப்படுத்த முயல்கிறானென்று.
‘ஆச்சு….வேதாளம் முருங்கை மரம் ஏறிடுச்சு. சே அவன் சாப்பிடுறவரை என் திருவாயை மூடிக்கிட்டு இருந்திருக்கணும்’ தன்னை நொந்துகொண்டவள்
“பாஸ் சாப்பிடுங்க”
“நாம பிரெண்ட்ஸா இருந்தா அவங்களுக்கென்ன?” பற்களை நறநறவென கடித்தான்
“அப்படிதான்…”
“என்ன?”
“பல்லை இதோ இப்போ கடிக்கிறியே அப்படிதான், என்ன நடுவுல கொஞ்சம் சாப்பாட்டை வச்சா போதும்”
சிரித்துவிட்டவன், “ஆழாக்கு…ஆழாக்கு…நீ இல்லாட்டி எல்லாரையும் அடிச்சு மண்டையை ஒடச்சுருப்பேன்”
“நான் இருந்துருக்காட்டி அதுக்கான தேவையே இருக்காதே! என்னாலதான பாஸ் உனக்கு ப்ராபளம்” முகம் வாடியவள், சாதத்தில் கோலம்போட
“வேண்டாம் பசில இருக்கேன், அப்படியே எழுந்து போயிடுவேன்” அவன் முறைக்கவும்,
“ஓகே சாப்டு, எனக்கு அடுத்த வேலை காண பிரீபிங் (briefing) இருக்கு. லேட் ஆனா வெங்கட் என்னை கடிச்சு துப்பிடுவான்” வேகமாகச் சாப்பிடத் துவங்கினாள்
அவளை இறக்கிவிட்டவன் காரை பார்க் செய்யச் சென்றுவிட, மாயா வேகமாக மீட்டிங் அறைக்கு ஓடினாள்.
சற்று தாமதமாகிவிட வெங்கட் எப்பொழுதும்போல முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு அவளுக்கான புதிய வேலையைக் கொடுத்துவிட்டு, மீட்டிங் முடிந்ததும்
மாயாவின் காது கிழியும் வரை திட்டித் தீர்த்து கோவமாகச் சென்றுவிட, அவன் சென்றதும், காதுகளைத் தேய்த்துக்கொண்டவள்,
“பத்மா காதுல ரத்தம் வருதா பாரு…” என்று தன் காதை காட்ட,
பத்மாவோ ஆதங்கத்துடன், “ஏண்டா அவன்கிட்ட வாங்கி கட்டிக்கிறே? எங்க போன சாப்பிடக்கூட வராம?”
“பாஸ் கூட சாப்பிடபோனேன்”
“அதை வெங்கட்கிட்ட சொல்லுறதுக்கென்ன ? இவளோ வசவு வாங்கியிருக்க வேண்டாம்ல?”
“அது வேறு இது வேறு! பெர்சனல் வேற ஆபீஸ் வேற, பாஸ் பேர யூஸ் பண்ணி தப்பிச்சுகிட்டா அது தப்பு…” என்று கன்னத்தில் போட்டுக்கொண்டவள்,
“இப்போ சீட்டுக்குப் போக நேரமாச்சுன்னா வெங்கட் உன்னையும் சேர்த்து திட்டுவார் பரவாயில்லையா ?”
“வம்பே வேண்டாம் கிளம்பு” பத்மா சிரிக்கப் பெண்கள் இருவரும் தங்கள் இடத்திற்கு விரைந்தனர்.
வேலையில் கவனம் இருந்தாலும், மனதில் ஒரு ஓரத்தில் தன்னால் பைரவ் காவல் நிலையம் சென்று வந்தது மாயாவின் மனதை வாட்டியது.