SY16
SY16
சரி © 16
பெண் பார்க்க சம்யுக்தாவின் வீட்டிற்குச் சென்ற சித்தார்த்தின் குடும்பம், ராஜசிம்மன் வருகைக்குப் பின், நாள் நன்றாகவும், வளர்பிறையாகவும் இருப்பதாகக் கூறி, நிச்சயதார்த்தத்தையே முடித்துவிட்டனர்.
மதுரையில் இருந்து வந்திருந்த, சித்துவின் தாய், தந்தை, பெரியப்பா, பெரியம்மா, ரித்திகா மற்றும் அவள் பையன்கள் அனைவரும் புறப்பட்டனர். சென்னை, கோயம்பேடு வரை சித்துவும், யோகியும் அவர்களுடன் சென்று, அவர்களை வழியனுப்பிவிட்டு தங்கள் அறைக்குத் திரும்பினர். சந்தோசமும், சீண்டலும் நிறைந்த பேச்சுக்கிடையே, அறையில் இருந்த சிறுசிறு வேலைகளை முடித்துவிட்டு ஓய்வாக அமர்ந்தனர்.
“ஒரு வழியா ஒன்னோட மேரேஜ் ஃபிக்ஸ் ஆயிடுச்சு”, யோகி.
“ஆமா மச்சி! ஆனா இந்த பெரிசுகள்லாம் சேர்ந்து என்ன ஒரு வழி பண்ணிட்டாங்கடா!”, சித்து.
“ஆனாலும் நல்லதுதான செஞ்சிருக்காங்க மச்சி! உண்மையிலேயே சந்தோசமாவும், பெருமையாவும் இருக்குடா உங்க சொந்தங்களப் பாத்தா”
“சரி, என்னவிடு மச்சி. அது ஓரளவுக்கு ஆரம்பமாயிருச்சு! அதுக்கு ஒரு இன்டர்வெல் விடுவோம். ஒன்னோட ஃப்யூச்சர் பத்தி சொல்லு?”
“ஃப்யூச்சர்னா? நீ எதப் பத்தி கேக்குற?”, யோகி சற்று தயங்கினான்.
“அட எத வேணா சொல்லேன். நா இப்ப எல்லாத்தையுமே கேக்குற மூடுல இருக்கேன் மச்சி, சந்தோசமா!”, சித்து.
“இன்னும் ஒரு வாரத்துல கஃபே திறந்திடுவாங்க. அத முழு மூச்சோட முன்னேத்திக் காட்டணும்! அதான் என்னோட ஃபஸ்ட் எய்ம்!”
“ஓ! எப்பவுமே ஃபஸ்ட் எய்ம்னாலே, அடுத்து செகன்ட், தேர்டுன்னு இருக்குமே! அதெல்லாம் என்ன?”, சித்து.
“மொதல்ல இத முடிச்சிக்கிறேன்டா. அப்பறம் அடுத்ததப் பாப்போம். டேய்! ஒனக்கொன்னு தெரியுமா? அந்த கஃபேயோட மாடில இன்டோர் கேம்ஸ் அரேஞ் பண்றோம்! அதுல ஹைலைட் என்னன்னா, நம்மோட ஃபேவரிட் டேபிள் டென்னிஸ்தான்!”
“டேபிள் டென்னிஸ்! இது யாரோட ஐடியா? ஒன்னோடதா, இல்ல ஒங்க பாஸோடதா?”
“பாஸ்தான், ரிதுவோடதுன்னு சொன்னார்”, யோகி.
‘இப்பத்தான்டா மச்சி லைனுக்கு வர!’, என்று சித்து உள்ளுக்குள் சிரித்துக்கொண்டு, “ரிதுவுக்கு எப்படிடா மச்சி ஸ்போட்சப் பத்தில்லாம் திங்க் பண்ண முடிஞ்சது?”
“அதான்டா மச்சி! நாம பீச்சுக்கு போயிருக்கும்போது பேசிக்கிட்டிருந்தோம்ல, அத மனசுல வச்சு சொல்லி இருக்கும்னு நெனக்கிறேன்”, யோகி.
“அதுக்கு இவ்ளோ செலவா பண்ணப் போறாங்க?”
“இதெல்லாம் செலவில்ல மச்சி. இன்வெஸ்ட்மென்ட்! ஒரு சொதப்பலான ஐடியாவ ரிது சொன்னா, கேக்கவா போறாரு எங்க பாஸ்? நெவர்!”
“அதுவும் சரிதான்! ஆனால், ரிது எப்பப் பாத்தாலும் ஒன்னப் பத்தியே நெனக்கிற மாதிரி இருக்கே?”
“சேச்சே, அப்படியெல்லாம் இருக்காது மச்சி! ஆமா, ஏன்டா திடீர்னு இப்படி ஒரு டவுட் ஒனக்கு வந்துச்சு?”
“நிறைய சொல்லலாம் மச்சி! இப்ப என்னோட மேட்டரையே எடுத்துக்கோயேன்! எப்பவுமே, எனக்குக் கால் பண்ணாம, ஒனக்குக் கால் பண்ணிதான் எனக்கு மெஸேஜ் வருது, கவனிச்சியா? ஈவன் அந்த பெசன்ட்நகர் பீச், அப்பறம் அவங்க வீட்டுக்கு வரச் சொன்னது. அதெல்லாம் விடு, சம்யுவோட எங்கேஜ்மென்ட் விசயத்தக்கூட, உனக்கு கன்வேப் பண்ணி, அப்பறம்தான் நான் தெரிஞ்சிகிட்டேன்!”, என்று குற்றம் கண்டுபிடித்தவன் போல் பேசினான் சித்து.
“இவ்ளோ நோட் பண்ண நீ, ஒரு மேட்ர விட்டுட்டியே மச்சி!”
“என்ன?”
“எப்பவுமே, சம்யுவத் தவிர, யாஷிகாவோ, ரிதுவோ ஒனக்குக் கால் பண்றதில்ல! அது ஏன்?”, யோகி.
“…”, பதில் தெரியவில்லை என்பதுபோல், ஏதோ யோசித்தவாறே அருகில் இருந்த தன் குளிர் கண்ணாடியை எடுத்துப்போட்டுக்கொண்டிருந்தான் சித்து.
“அது ஏன்னா, அவங்களுக்குள்ள உள்ள எழுதப்படாத அக்ரிமெண்ட்! லேடீஸ்கு எப்பவுமோ பொசஸிவ்நஸ் இருக்கும். அது சம்யுவுக்கும் இருக்கறதால, அதப் புரிஞ்சகிட்ட மற்ற ரெண்டுபேருமே ஒனக்கு கால் பண்றதில்ல. அதுனாலதான், ஒன்னோட கான்ட்டாக்ட்ல இருக்குற எனக்குக் கால் பண்ணியே, எல்லாம் கன்வே ஆகுதுடா என் டிடக்டிவ் மூளை நண்பா!”
“சரி விடு மச்சி! நா நேரடியாவே கேக்குறேன், உனக்கு ரிதுவ பிடிச்சிருக்கா?”, சித்து.
இந்தக் கேள்வி இன்றில்லை என்றாலும், என்றாவது ஒரு நாள் இவன் கேட்பான், அல்லது வேறு யாராவது கேட்பார்கள் என்று அவன் எதிர்பார்த்ததுதான். யோசித்தான், யோசித்துக்கொண்டிருந்தான்.
“ஹலோ மச்சி, பதில் அவ்ளோ பெரிசா என்ன! ரொம்ப நேரமா திங்க் பண்ற?”, சித்து அவசரப்படுத்தினான்.
“எனக்கு பிடிச்சிருக்கு மச்சி! ஆனா, சம்திங் ராங்! அப்படின்னு தோனுது”, என்று யோகி எழுந்து, அருகில் இருந்த தன் குளிர் கண்ணாடியை எடுத்து அணிந்தவாறே, சிந்தித்துக்கொண்டு, பேண்ட் பாக்கெட்டில் கைகளை நுழைத்து, அறையின் குறுக்கும் நெடுக்கும் மெதுவாக நடக்க ஆரம்பித்தான்.
“இத நா ஏற்கனவே கேட்டேன்! அப்பவும் இப்படித்தான் குழப்பமா ஏதோ சொல்லி, என்ன கன்ஃபியூஸ் பண்ணிட்ட. இப்பவும் பிடிக்குதுன்ற, ஆனா ‘ராங்’அப்படிங்கற! ஒரு முடிவுக்கு சீக்கிரம் வந்துரு மச்சி. ஏன்னா அந்தப் பக்கம் கிரீன் சிக்னல் விழுந்துட்ட மாதிரி இருக்குது!”, சித்து.
“என்னடா மச்சி சொல்ற! க்ரீன் சிக்னலா? ஒனக்கெப்படி தெரியும்!”
“ஒனக்கும் தெரியும்! ஆனா, நீ அத உணரல, காரணம் அப்பறம் சொல்றேன். சரி, இப்ப நீ என்ன நினைக்கிற, அதச் சொல்லு”, சித்து.
“இதுல எனக்கு கொஞ்சம் குழப்பமாதான் இருக்கு மச்சி! இதப்பத்தி ரிதுகிட்டயே பேசிறலாம்னு, நாம ஊருக்குப் போறதுக்கு முன்னாடிகூட தைரியமா, ரிது வீட்டுக்கே போனேன். ஆனா பேச முடியல”
“இந்த விசயம் மட்டும், தனக்குன்னு வரும்போது எல்லாருக்குமே குழப்பம் வரும். ஆனா, சில பேர் தெளிவா முடிவெடுத்துருவாங்க! சில பேர் தப்பான முடிவுக்கு போவாங்க! சில பேர் நம்மளமாதிரி ஃப்ரண்ட்ஸ்கிட்ட டிஸ்கஸ் பண்ணுவாங்க! நானும் இதே பொசிசன்ல ஒங்கிட்ட கேட்டேன், ஞாபகம் இருக்கா மச்சி?”, சித்து.
“ம், இருக்கு! சரி மச்சி! நா டைரக்டாவே ஒங்கிட்ட கேக்குறேன், என்னோட குழப்பத்துக்கு என்ன செய்யலாம்?”, யோகி.
“குழப்பமே வேண்டாம் மச்சி! ஒரே ஒரு கேள்வி கேக்குறேன். அதுல இருந்து நீ திங்க் பண்ணு, ஒனக்கு எல்லா குழப்பமும் ஒன் பை ஒன்னா தீரும்! சரியா?”, சித்து.
“கேளு மச்சி!”, என்று ஆர்வமாக, ஆழமாக சித்துவையே பார்த்தான் யோகி.
“நீ சம்யு வீட்டுக்கு, பாஸ்கூட கார்ல வந்து எறங்குனப்ப அங்க பக்கத்துலதான், பாக்குற தூரத்துலதான் நான் நின்னேன். ரெண்டு பேரும் இறங்கினீங்க, அதுல நீ முன் சீட்டுல இருந்துதான் எறங்குன இல்லையா?”, சித்து.
“ஆமா!”
“ஆனா ரெண்டு பேரும் டிஸ்கஸ் பண்ணிட்டு வந்தீங்க!”
“ஆமா!”
“ஒரே விசயத்த, அவரோட நல்லதுக்காக ஒங்கிட்ட டிஸ்கஸ் பண்ணும்போதுகூட, முன் சீட்டுதான் ஒன்னோட பொசிசன் மச்சி! புரிஞ்சுக்கோ”, என்றான் சித்து.
சித்து கூறியதுபோல், அதிலிருந்து யோசிக்க ஆரம்பித்தான் யோகிதாஸ். தனக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தாலும், ஒரே இருக்கையில், சமமாக அமர்ந்து பேச மறுக்கும் நிலைதான் தன்னுடையது என்பதை நன்கு உணர்ந்தான்.
இந்த மாதிரி நிகழ்வுகள் எப்போதும் நடப்பதுதான். அவன் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள முடியாது. காரணம், ரிதுவின் தகப்பனார் ராஜசிம்மன், தன் முதலாளி. அதனால் அப்படித்தான் இருப்பார், இருக்க வேண்டும் என்பதே அவன் கருத்து.
‘ரிதுவிடம் என் காதலைச் சொல்லி, அவ ஏத்துக்கிட்டு அல்லது அவ காதலைச் சொல்லி நா ஏத்துக்கிட்டு, கல்யாணம் பண்ணிக்கிட்டா இந்த நிலை மாறுமா?’, என நீண்ட நேரம் யோசித்தான் யோகி.
‘மாற வாய்ப்பிருக்கு! ஆனால், அது சரியான முறையில கெடச்ச மாற்றமாக, முன்னேற்றமாக இருக்காது! அதுனால இதெல்லாம் ஒத்துவராது!’, என்ற முடிவுக்கு வந்த யோகி அருகில் இருந்த சித்துவைப் பார்த்தான், அவன் தூக்கத்தின் துவக்கத்தில் இருந்தான்.
©©|©©
எதிர்பார்த்ததுபோல் ஒரு வாரகாலத்திற்குள் டி-நகரில் புதிய கஃபே திறக்க ஏற்பாடுகள் எல்லாம் முடிந்தது. யோகியின் ஈடுபாடுடன் கூடிய, அயராத உழைப்பே அதற்கு முக்கிய காரணம் என்பதை ராஜசிம்மன் அறிவார்.
அதனால், அந்த கடைக்கு பெயர் வைப்பதிலும், அவனை ஈடுபடுத்திக்கொண்டார். எப்போதும் ரிது மற்றும் திலோவை மட்டுமே கேட்பார். ஆனால் முடிவு அவர்தான் எடுப்பார். இம்முறை அவர் மாளிகையில், கூடுதலாக யோகியும் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தான்.
ரிது புதிய, கவர்ச்சியான பெயர்களாக கூறினாள். ஆனால், யோகி ஏஆர் என்ற பெயரே இதற்கும் வைத்தால், சுலபமாக மக்கள் மத்தியில் பிரபலமாகிவிடும் என்று கருத்துச் சொன்னான்.
ராஜசிம்மனுக்கு அது சரி என்று தோன்றியது. ஏனென்றால் அந்த பெயரை அவர் மிகவும் விரும்புபவர், அப்பெயரில் வெற்றிகளையும் கண்டவர். திலோத்தமை இதில் கணவனின் முடிவே தன் முடிவு என்று ஒத்துப்போய்விட்டார். இறுதியாக ஏஆர் கஃபே கார்னர் என்ற பெயர் முடிவானது.
அன்று திலோத்தமை, யோகியை அங்கேயே சாப்பிட்டுச் செல்லுமாறு கட்டாயப்படுத்தினார். ஆனால், யோகிதாஸ் ஏதோ மழுப்பலான காரணம் கூறி, ஒரு நிமிடமும் தாமதிக்காமல், சாப்பிடாமல் கிளம்பிவிட்டான்.
அவன் அங்கு சென்றது முதல், யோகி ரிதுவிடம் வழக்கம்போல் பேசிக்கொண்டிருந்தான். அவன் கிளம்பியவுடன், ரிதுவும் வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தாள்.
©©|©©
மாலை கொஞ்சம் விரைவாகவே அறைக்கு வந்துவிட்ட சித்து, மடிக்கணினியுடன் மன்றாடிக்கொண்டிருந்தான். அவனது அன்றைய வேலை சற்று இழுபறியாக போய்க்கொண்டிருந்தது. தன் அலைபேசியிலிருந்து வந்த ஒலியைக் கூட கேட்டும், அதிக அக்கறை காட்டாமல் வேலையில் மும்முரமாக இருந்தான்.
சிறிது நேரம் கழித்து அவனை அறியாமல் அனிச்சையாக, கை அந்த அலைபேசியை எடுத்தது. அழைப்பு சம்யுக்தாவிடமிருந்துதான் வந்திருந்தது. பார்த்தவுடன் கண்களில் ஒரு பளிச் மின்னல் வந்தது. அவளை அழைத்தான்.
“ஹலோ, என்ன! சார் ரொம்ப பிஸியா?”, மறுமுனையில் சம்யு சற்று கோபமாகக் கேட்டாள்.
“ஹாய் ஹனி! கோச்சுக்காத! கொஞ்சம் பிஸி, ஆஃப்டர் நூன்ல இருந்து ட்ரைப் பண்றேன், இத முடிக்க முடியல. அதான் ரூமுக்கு வந்தும், கன்ட்டினியூ பண்ணிகிட்டிருக்கேன்”, சித்து.
“எங்கேஜ்மென்ட் முடிஞ்சதும், ஐயாவுக்கு எங்க காலக் கண்டா பேசத் தோனலையோன்னு நெனச்சேன்!”, சம்யு.
“காலென்ன! விரலக் கண்டாலே சந்தோசப்படுவேன்!”
“அய்யோ! நா அந்த காலச் சொல்லல”
“அப்ப எந்தக் கால்!”
“மொதல்ல இந்த கால விடுங்க. விசயத்துக்கு வறேன்”
“கமான்யா”
“நம்ம மேரேஜ் டிரஸ் பத்தி டிஸ்கஸ் பண்ணலாமா?”
“இப்பவா?”
“என்ன இப்பவா? முன்னாடில்லாம் எதுமே இல்லன்னாக்கூட ஏழு மணி நேரம் பேசுவீங்க! இப்ப என்னடான்னா”, என்று சம்யு ஆரம்பிக்கும் முன் இடைமறித்தான் சித்து.
“பேசுவோம்! பேசுவோம்! பேசுவோம் சம்யு. எவ்வளவு நேரம் வேணும்னாலும் பேசுவோம்! ஓக்கேயா? சொல்லு, என்ன மாதிரி எடுக்கலாம்?”
“இன்னும் நா டிசைட் பண்ணல. ஒங்கட்டக் கேட்டு, அப்பறமா அந்த டிரஸ்ல ஒரு டூயட் போகலாமேன்னு கால் பண்ணா, நீங்க ரொம்பதான் பிஸியா இருக்கீங்க!”
“இல்ல சம்யு! சொல்ல வந்தத சொல்லிறேன்! வாட்ஸ் யுவர் ஐடியா எபோட் இட்?”, சித்து.
“இல்ல, இப்ப வேணாம். நீங்க ஒங்க வேலையெல்லாம் நல்லபடியா முடிங்க. அப்பறம் ரிலாக்ஸ் பண்ணிட்டு எனக்கு கால் பண்ணுங்க. நா எப்ப வேணா எடுக்கறேன், ஓக்கேயா!”, என்று சிணுங்கலுடன் வைத்தாள் சம்யு.
சித்துவுக்கும் அவள் கூறியது சரி என்றே தோன்றியது. இந்த விசயத்தைப் பொருத்தமட்டில் நாம் தெளிந்த மனதுடன் இருந்தால்தான் நன்றாயிருக்கும் என்று சம்யுக்தாவின் பேச்சைக் கேட்டு அழைப்பைத் துண்டித்தான்.
©©|©©
மதுரையில் யோகியின் தாயார் சரண்யாவுடன், அவரது அண்ணன் சுந்தரம் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார்.
“என்னம்மா உம்பையன்ட்ட பேசினியா? வைஜிக்கு வேற ஒர வரன் வந்திருக்கு”, சுந்தரம்.
“ஆமாண்ணே! போன வாரங்கூட, இங்க வந்திருந்தப்ப இதப் பத்தி பேச ஆரம்பிச்சேன். ஆனா, அவன் அவனோட ஃப்ரண்டு கல்யாணத்தப் பத்தி பேசிட்டு, கிளம்பிட்டான்!”, சரண்யா.
“ஓ! அப்படியா. இங்க அடிக்கடி சில பேர் கேட்டு வருவாக. நாந்தான் தள்ளிப் போட்டுகிட்டே வந்தேன். ஆனா, இன்னமும் நல்லாருக்காதுன்னு தோனுது. பொண்ணுக்கும் வயசாகுதில்லமா!”, என்றார் சுந்தரம்.
“சரிண்ணே! இன்னக்கி ரெண்டுல ஒன்னச் சொல்லுன்னு கேக்குறேன்! நீ ஒன்னும் மனசுல வச்சுக்கிறாத”
“சரிம்மா, நா போன வைக்கிறேன்”
அவர் அலைபேசியை வைத்தவுடன், சரண்யா தன் மகன் யோகியை அலைபேசியில் அழைத்தார். ஆனால், மறுமுனையில் யோகி, அழைப்பை எடுக்கவில்லை!
©©|©©
“ஹாய் மச்சி! இன்னிக்கு சீக்கிரமே வந்துட்டமாதிரி தெரியுது!”, யோகி.
“ஆமா, மச்சி! கம்பெனில மூட் அவுட்டாவே இருந்துச்சு! அதான் கிளம்பி ரூமுக்கு வந்துட்டேன். ஆனா, இங்கயும் மைன்ட்செட் ஆகல!”, சித்து.
“என்னாச்சு! சம்யுகிட்டருந்து பூஸ்டர் பேக் இன்னும் வரலையா?”, யோகி.
“அய்யோ! அது வரும்போதுகூட நா பிஸில எடுக்காம விட்டுட்டேன். அதுவேற தப்பாப்போச்சு!”
“ம், அப்பறம் என்னாச்சு?”
“வேலையெல்லாம் முடிச்சிட்டு, மைன்ட் ஃப்ரீயான பின்னாடி ஃபோன் பண்ணுங்கன்னு சொல்லிட்டு வச்சிட்டா”
“ஆனா, இன்னும் ஒனக்கு மைன்ட் செட்டாகல, வொர்க் டென்ஷன்!”
“ஆமா மச்சி! அதுவும் ரொம்ப முக்கியமான விசயம் பேச வந்தப்ப நா மைன்ட் சரியில்லன்றத கேப்சர் பண்ணிட்டு, அப்பறம் பேசலாம்னு சொல்லிட்டா!”
“உண்மையிலேயே குடுத்துவச்சவன்டா மச்சி நீ! இந்த மாதிரி வேலை நேரத்துல டிஸ்டர்ப் பண்ணாத வயிஃப் கிடைக்கறது ரொம்ப அபூர்வம்!”, சித்து சம்யுவை சற்று புகழ்ந்தான்.
“ஆமாடா மச்சி! அந்த வகையில எனக்கு சந்தோசந்தான்!”
“என்ன விசயமாம்?”, யோகி.
“டிரஸ் பத்திக் கேட்க வந்தா, நாதான் மூட்அவுட் பண்ணிட்டேன் போல”, சித்து.
“ஓ! நல்ல விசயந்தான! ஒனக்கு இப்ப மைன்ட் ரிலாக்ஸ் பண்றதவிட, மைன்ட் டைவர்சன்தான் வேணும். வா மாடிக்குப் போய் கொஞ்சம் ஸ்போர்ட்ஸ்ல கான்சன்ட்ரேட் பண்ணுவோம்”, என்று யோகி பேசிக்கொண்டே உடை மாற்றிவிட்டு, வண்டியில் வந்துகொண்டிருக்கும்போது தன் தாய் அழைத்திருந்த அழைப்பை எடுத்து, அவன் அழைத்தான்.
“ஹலோ, அம்மா! வண்டில வந்துட்டிருந்தேன். அதான் எடுக்க முடியல. என்ன விசேசம் சொல்லுங்க”, யோகி.
“விசேசமா நா என்னத்த சொல்றது! சித்து அம்மாதான் நம்ம வீட்டுக்கு வந்து பல விசேசங்களச் சொல்லிட்டுப் போனாங்க!”, என்றார் தாய் சரண்யா.
“சொல்லிட்டாங்களா? அதத்தான் நான் அன்னக்கே ஒங்கட்ட சொல்ல வந்தேன், அப்பறம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சதுக்கப்பறம் சொல்லுவோம்னு இருந்துட்டேன்”, யோகி.
“நீ இப்ப வரைக்கும் சொல்லலையேப்பா!”
“நல்லபடியா முடியுமான்னே சந்தேகம் வந்திருச்சும்மா! அதான் ஒன்னுமே சொல்லிக்கிறாம கிளம்பி வந்துட்டேன். இல்லன்னா ஒங்கட்டச் சொல்லாமலா? ஆனா, சித்து வீட்ல, சம்யு வீட்லனு எல்லாரும் ஒன்னாச் சேந்து எங்களுக்கு ரொம்ப சர்ப்ரைஸ் குடுத்துட்டாங்கம்மா”, யோகி.
“அதெல்லாம் அவனோட நல்ல மனசுக்கு எல்லாம் நல்லபடியா நடக்கும்பா! நீ என்ன சொல்ல வர்றன்னுதான் கேக்குறதுக்காக போன் பண்ணேன்”, என்று சரண்யா பேச்சை ஆரம்பித்தார்.
“என்ன சொல்லனும்? எதப் பத்தி சொல்லனும் தாயே?”
“சித்துவோட சேத்து ஒனக்கும் ஒரு கல்யாணத்தப் பாக்க வேண்டாமா நா? எங்களுக்கும் ஆசை இருக்காதா?”
“அட அவனுக்கு மொதல்ல முடியட்டும்மா, அப்பறம் பாக்கலாம். நா இன்னும் அதப் பத்தி யோசிக்கவே இல்லையே!”
“படிக்கிறது, வெளையாடறது, வேலைக்குப் போறதுன்னு எல்லாம் ஒன்னாவே பண்ணிகிட்டீங்க! கல்யாணம் மட்டும், அப்பறம்தானா? அதயும் ஒன்னாவே பண்ணிக்க வேண்டியதுதான ராசா!”
“இல்லம்மா, கம்பெனில நிறைய வேலை இருக்கு. அப்பறம் சித்துவோட கல்யாணத்துல நா வேலைபாக்கணும். என்னோட கல்யாணத்துல அவன் வேலை பாக்கணும். அப்பத்தான சரியா இருக்கும்! ரெண்டு பேருக்கும் ஒரே நேரத்துல கல்யாணம்னா, வேலை எல்லாம் யாரு பாக்குறது?”
“சரி விடு, அப்பறம் பாக்கலாம்! ஆனா பொண்ணு பாத்து நிச்சயம் மட்டும் பண்ணிக்குவமா?”, சரண்யா.
“ஏம்மா, இப்ப இவ்ளோ அவசரப்படுத்துறீங்க”, என்று சற்று கடிந்துகொண்டான் யோகி.
“இல்லப்பா, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் மாமா போன் பண்ணுச்சு. வைஜிக்கு வரன் வந்திருக்காம். நம்மட்ட ஒரு வார்த்த கேட்டுட்டு அப்பறம் பேசலாம்னு இருக்காகலாம்”
“நல்லபடியா முடிச்சிறச் சொல்லுங்க. மொற செய்ய வேண்டியது எதுவும் இருந்தா சிறப்பா செஞ்சிருவோம்”
“ஒன்னோட மொறப்பொண்ணுப்பா அவ! அதான் ஒனக்கே முடிச்சிறலாம்னு கேக்கிறேன். நீ என்னடான்னா கழுவுற மீன்ல நழுவுற மீனா இருக்கியே!”
“நா நழுவவே இல்லம்மா. முடிவாச் சொல்றேன் எனக்கு இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம். அதுவும் வைஜிய எனக்கு கட்டி வக்கணும்னு நெனைக்காதீங்க”
“ஏம்பா, வைஜிய ஒனக்குப் பிடிக்கலையா? நல்ல பொண்ணுதான!”, சரண்யா.
“அய்யோ! அதெல்லாம் இல்லம்மா. வைஜி நல்ல பொண்ணுதான். ஆனா, எனக்கு ஆரம்பத்தில இருந்தே அந்த மாதிரி எண்ணம் கெடையாதும்மா”, யோகி.
“ஆனா, ஆரம்பத்தில இருந்தே அவ ஒன்னத்தானப்பா நெனச்சுகிட்டு இருந்துருக்கா!”
“…”
“என்னப்பா ஒன்னுமே சொல்ல மாட்டேங்குற!”
“என்னத்த சொல்ல? வைஜி நெனச்சதுக்கு நா என்னமா பண்ண முடியும்? இந்த விசயத்துல என்னைய கட்டாயப்படுத்தாதீங்க, ப்ளீஸ்!”
“சரிப்பா, நா சொல்லிறேன். நீ ஒன்னும் டென்சன் ஆகாத. நா போன வச்சிறேன்”, என்று சரண்யா அலைபேசியை வைத்தார் எதிர்முனையில்.
பேசிக்கொண்டே விடுதியின் மேல் தளத்திற்கு வந்திருந்தான் யோகி. உடன் சித்துவும் கையில் சிலம்பம் சுற்றும் கம்புகளுடன் வந்து நின்றான்.
“என்ன மச்சி! இப்ப ஒனக்கு மூட் அவுட் ஆகிருச்சா?”, சித்து.
“ஆமாடா மச்சி! வா ஒரு ஆட்டம் போடுவோம்!”, என்று அலைபேசியை ஓரமாக வைத்துவிட்டு, சித்துவிடமிருந்து ஒரு கம்பை வாங்கிக்கொண்டான்.
இருவரும் சிலம்பை கையில் வாகாகப் பிடித்துக்கொண்டு, கலைக்கு வணக்கம் வைத்து ஆடத் தொடங்கினர்!
இனி இருவரின் ஆட்டமும் தொடரும்!
©©|©©