இதயத்தின் ஓசைதான் காதல்

இதயத்தின் ஓசைதான் காதல்

அத்தியாயம் – 13

ஸ்ரீ வீட்டை விட்டு வெளியே வந்த வைஷுக்கு ஒருநிமிடம் எங்கே செல்வது என்று புரியவில்லை.

அவனின் வீட்டைவிட்டு மிகவும் தயக்கமாகதான் வெளியே இறங்கினாள்.

‘வீட்டுக்கு சென்றால், ஏன்… என்னாச்சு? எதுக்கு இப்பவே வந்த?’ என்பதான கேள்விகள் கோதைநாயகியிடம் இருந்து அதிகமாக வரும் என்பது அவள் அறிந்த விசயம்.

ஒருநொடி யோசித்தவள் உடனே கோவில் பக்கமாய் நடையை கட்டினாள்.

எப்பொழுதும் அவளுக்கு துணை அந்த தாயே, இப்பொழுதும் அவளை நோக்கிதான் சென்றாள்.

இவள் கோவில் நோக்கி செல்வதைக் கண்ட வசந்த், தனது புது சைக்கிளுடன் அவளின் பின்னே வந்திருந்தான்.

“க்கா… எங்க போற?”

“கோவிலுக்குடா”

“இப்பவே வந்துட்ட ஏன்?”

“வேலை முடிஞ்சது வந்துட்டேன், நீ எங்க வர்ற?”

“நான் உன் துணைக்கு கோவிலுக்கு வாரேன். அன்னைக்கு மாதிரி யாராவது உன்னை பேசினா நான் அவங்ககிட்ட சண்டை போடுறேன் நீ கவலைப்படாத” பெரிய மனிதனாய் அவன் பேச,

“யாரு? நீயா பேசுவ?”

“ஆமாக்கா, நான் இப்போ வளந்துட்டேன். வைஷாலியை நான்தான் ஸ்கூல் கூட்டிட்டு போறேன் மறந்துட்டியா என்ன?”

“சரி… சரி… நீ வளந்துட்டதான்” என்றாள் சிரித்துக் கொண்டே.
அதற்குள் கோவிலும் வந்திருக்க,

“வாடா உள்ளே போகலாம்”

“இல்ல… நீ போ, யாராவது சண்டைக்கு வராங்களான்னு நான் இங்க நின்னு பாக்குறேன்”

“சரிதான்” சிரித்தபடி உள்ளே சென்றாள்.

கோவில் வளாகத்தில் கால் எடுத்து வைக்கவும் அழையா விருந்தாளியாக இருவரும் பேசியது நினைவில் வந்தது.

அவனை அவளுக்குப் பிடிக்கும், அது எந்தவரை என்றால், அன்று விக்ரமிடம் நடந்தப் பேச்சில், விக்ரம் அவளை தொடர்ந்து வராததில்.

மேலும், அவளுக்கு நல்ல முதலாளி, ஷிவானிக்கு நல்ல அண்ணன், அப்பாவுக்கு நல்ல தம்பி, தாத்தாவுக்கு நல்ல பேரன் இப்படியான சின்ன சின்ன விசயத்தில் அவனை மிகவும் பிடித்தது.

அவனை பிடிக்காதது ஒன்றே ஒன்றுதான் அன்று அவளிடம் பேசியது!

இப்பொழுது அதையும் யோசித்துப் பார்த்தால் ‘அது அவன் வரையில் சரியாக இருக்கலாம் ஆனால் அவளிடம் பேசியது தவறு!’

யோசித்தபடியே சாமி முன் வரை வந்தவள், அந்த கடவுளையே பார்த்திருந்தாள்.

‘எனக்கு நிறைய ஆசை இருக்குது, என் தங்கச்சி, தம்பி ஆசைப்பட்டதை நான் படிக்க வைக்கணும், என்னை அப்பா நல்ல நிலைமைக்கு கொண்டு வந்தமாதிரி நான் அவங்களை கொண்டு வரணும்,

இன்னும் அவங்களுக்காக உழைக்க அப்பாவால முடியாது. நானும் அப்பாக்கு பக்க பலமா இருக்கணும், அதுவரை நான் எங்க வீட்டுல இருக்கணும். இப்போதான் கொஞ்சமாய் சேவிங்கஸ்னு ஒன்னு ஆரம்பிச்சிருக்கோம்.
அவங்க படிப்புக்கு இன்னும் நான் சேர்க்கணும்’ என்பதான வேண்டுதல் அவள் மனதில் இருக்க அப்படியே கண்களை மூடி நின்றிருந்தாள்.

***

வைஷ்ணவி கோவிலுக்கு வரவும், அவளின் பின்னே ஸ்ரீயும் கிளம்பினான். ‘அவளிடம் பேசவேண்டும், தன்னை, தன் மனதை அவளிடம் உணர்த்தவேண்டும்.’ என்பதான யோசனையுடன் சென்றான்.

கோவில் வாசலில் வசந்த் நிற்க அவன் அருகே பைக் நிறுத்தினான்.

வசந்த் இவனைக் கவனிக்கவே இல்லை. அவன் சைக்கிளில் அமர்ந்திருந்து, கோவிலையே பார்த்திருந்தான்.

“இங்க என்ன பண்ணுற வசந்த்?”

“அக்கா, உள்ளே போயிருக்கா, அதுதான் வெயிட் பண்ணுறேன்”

“உன் அக்காக்கு துணையா நீ?”

“ஆமா, அன்னைக்கு மாதிரி யாராவது அக்கா கிட்ட சண்டைக்கு வந்தா நான் அவங்ககிட்ட சண்டை போடுவேன்” என்றான் சிறுவனாய்.

“யாரு நீயா? உன் அக்காக்கு துணையே வேண்டாமேடா, அவளே போதுமே” என்றான் கேலியாய்.

அவனைப் பார்த்து வசந்த் முறைக்க,

“சரி… சரி… முறைக்காதடா” என்றபடி அவனது சைக்கிளைப் பார்க்க,

அப்பொழுது அவனது கண்களில் பட்டது, “சக்ரா சைக்கிள்” என்ற எழுத்து.

அதைப் பார்த்தவன் கண்கள் அப்படியே அதில் நிலைத்து நிற்க, பழைய நினைவுகள் அவன் மனத்தை சுழற்றியது.

பல வருடங்களுக்கு பிறகு இன்றுதான் பழைய நினைவுகள், மறக்க வேண்டும், மீண்டும் நினைக்க வேண்டாம் என்ற நினைவுகள் அலையலையாய் எழுந்து மனத்தை எதுவோ செய்தது.

அதற்கு மேலும் அங்கு நிற்க முடியாமல் மனதை எதுவோ பிசைய கிளம்பிவிட்டான்.

இதற்க்கு மேலும் இங்கு நின்றால் அவன் மனதை அவனாலையே கட்டுப்படுத்தமுடியாது எனவே கிளம்பிவிட்டான்.

வைஷ்ணவியிடம் பேசவேண்டும் என்பதையும் மறந்து அப்படியே சென்றுவிட்டான்.

***

“தாத்தா… தாத்தா” ஸ்ரீகரணை அழைத்தபடியே அவரை நோக்கி சென்றாள் ஷிவானி.

போனையே பார்த்திருந்தவர், “என்ன ஷிவானி” என அவளை நோக்கி திரும்ப,

“என்ன பண்ணுறீங்க தாத்தா?’

“இல்ல… ஒன்னும் இல்ல. என்ன விஷயம்?” முகத்தில் எதுவோ சொல்லமுடியாத உணர்வு.

“அதுவந்து… அன்னைக்கு ஒரு பொண்ணு பார்தீங்கல்ல அந்த பொண்ணோட போன் நம்பர் தாங்க”

“எதுக்கு ஷிவானி ஏதாவது பிரச்சனையா? ஸ்ரீ கேட்டானா?”

“ஏன் தாத்தா இப்போ டென்ஷன் ஆகுறீங்க. அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை, நீங்க தாங்க நான் பேசணும்”

“என்னாச்சு ஷிவானி”

“அந்த பொண்ணு ஸ்ரீண்ணா யாரையோ கட்டி பிடிச்சிட்டு நின்னாங்கன்னு சொல்லிசில்ல அதுதான் அது யாரு, உங்களுக்கு எப்படி தெரியும்னு கேட்கணும்”

“அதுதான் அவங்க தங்கச்சி நல்லா சொல்லுதாமே ஷிவானி”

“அவங்க தங்கச்சி சொன்னா நாம நம்பிடணுமா? அதெல்லாம் அப்படி விடமுடியாது தாத்தா, நீங்க நம்பர் தாங்க நான் கேட்குறேன்?”

“வேற என்ன கேட்கணும் உனக்கு என்கிட்ட கேளு நான் சொல்லுறேன்?” அவளையே பார்த்தபடி கூற,

“அது… அது…”

“என்ன சொல்லு?” அவளையே பார்த்திருக்க,

“அதுவந்து தாத்தா, அந்த பொண்ணுகிட்ட அது நம்ம ஸ்ரீதான்னு சொல்ல ஆதாரம் இருக்கான்னு கேட்கணும்”

“எதுக்கு ஆதாரம்? அது அவன்தான்னு நல்லா தெரிஞ்சுதான் சொல்லுறாங்க”

“அப்போ நீங்களும் அவங்க சொல்லுறதை நம்புறீங்களா தாத்தா, நம்ம ஸ்ரீ அப்படி எல்லாம் பண்ணுவானா?”

“இதுவரை பண்ணல, இப்போ பண்ணிட்டானே” என்றார் கோபமாய்.

“ஏன் தாத்தா கோபப்படுறீங்க?”

“பின்ன கோபப்படாம என்ன பண்ண சொல்லுற? அவன் பண்ணிருக்க வேலை நம்ம குடும்பத்துக்கு ஆகுமா? இதெல்லாம் அவன் யோசிக்க வேண்டாமா?”

“ஏன் தாத்தா ஆகாதா?” அவளை மீறி வந்தன வார்த்தைகள்.

“என்ன சொன்ன?”

“என்னாச்சு… என்ன தாத்தா?”

“ஒன்னும் இல்ல நீ போ, நான் பாத்துக்கிறேன்”

“எதை தாத்தா?”

“இதை” என்றபடி அவளிடம் போனை நீட்டினார் ஸ்ரீ கரண்.

போனை உற்றுப் பார்க்க, ஸ்ரீ வைஷுவை கட்டிபிடித்தபடி இருந்த போட்டோ அதில் இருக்க, ‘அடபாவி ஸ்ரீ’ அவள் வாய் தன்னைப் போல விரிந்தது.

“என்ன பார்த்துட்டியா? இதுதான் இப்போ மதுரையில சுத்துது போல, பக்கத்து கடைக்காரன் எடுத்து அனுப்புறான் எனக்கு, இனி எவன் இவனுக்கு பொண்ணு குடுப்பான். காட்டுபய இப்படி நடுரோட்டுல நின்னு கட்டிபிடிச்சிருக்கான்”

“இது பத்திதான் நானும் உங்க கிட்ட பேசவந்தேன் தாத்தா?”

“இதை பத்தியா, அதுக்குள்ள உனக்கும் அனுப்பிட்டாங்களா?”

“இல்ல தாத்தா, ஸ்ரீக்கு ஏற்கனவே அவளை பிடிக்கும் போல, ஆனா, ஏனோ அதை மறைக்குறான் என்னதுன்னு தெரியல, அவ மனசுல இருக்கதுனாலதான் அந்த கீர்த்தனா போனதுக்கும் அவ்வளவா அவங்க வீட்டுல பேசல போல,

இவனுக்கு அவளை பிடிக்கும்கிறது வைஷுக்கு தெரியாது போல, இவன்தான் லூசு மாதிரி அவ பின்னாடி சுத்துறான் போல, உங்களுக்கு பிடிக்காதுன்னு உங்ககிட்டையும் சொல்லாம மனசுல வச்சு அழுத்துறான் போல” இப்படி பல போலக்களைப் போட்டு,
ஸ்ரீ காதல் விஷயத்தையும், உங்களுக்கு மரியாதை தந்து காதலை மறைகிறான் என்றும் அவனின் ஆசையையும், இவரின் மனதையும் அப்படியே உரைத்தாள் ஷிவானி.

அவளையே யோசனையாக பார்த்திருந்தார் அவர். அவருக்கு இதில் கொஞ்சமும் விருப்பம் இல்லை. ஆனால் ஸ்ரீக்காக கண்டிப்பாக செய்வார்.

அவர் அவளையே பார்த்திருக்க,

“என்னாச்சு தாத்தா?’

“இல்ல… இந்த விசயத்தை நான் பாத்துக்கிறேன். நீ போ, என்கிட்ட பேசினதை அவன் கிட்ட சொல்லவேண்டாம்”

“சரி தாத்தா” என கூறி அப்படியே நிற்க,

“என்ன நிக்குற போ நான் பாத்துக்கிறேன்” என்றார் சிரித்தப்படியே.

மனம் மகிழ்ச்சியில் திளைக்க, துள்ளி குதித்து சென்றாள் ஷிவானி.

***

திருமணம், காதல் இதை பற்றி இதுவரை வைஷ்ணவி சிந்திக்க கூட இல்லை, ஆனால் இருவரது பேச்சும், அவனது காதலும் அவளை கொஞ்சம் சிந்திக்க, யோசிக்க வைத்திருந்தது.

அதற்காக அவனது காதலுக்கோ, அவனோடான திருமணதிற்கோ சம்மதம் சொல்லும் எண்ணம் கொஞ்சமும் அவளுக்கு இல்லை.
இப்படியான யோசனையில் அவள் அமர்ந்திருக்க அவளை நோக்கி வந்த சிவா,

“ஏன் வைஷு என்னை வர சொன்ன?” என்றபடி எப்பொழுதும் போல் அவள் அருகில் இருந்த சேரில் அமர்ந்தான்.

வைஷ்ணவி அமர்ந்திருந்து வேலைப் பார்த்துக் கொண்டிருந்த அறையைப் பார்த்தபடி ஷோபாவை நகர்த்தி ஸ்ரீ கரண் அமர்ந்திருந்தார்.

அவருக்கு எதிரே ஸ்ரீ அமர்ந்திருந்தான். ஏதோ கோவில் பணியைப் பற்றிக் கூறிக் கொண்டிருந்தார்.

ஆனால் அவனது யோசனை அவரிடம் இல்லாமல் எங்கோ இருந்தது.

சக்ரா சைக்கிளைப் பார்த்ததில் இருந்து அவனுள் பல போராட்டம்.

‘நான் இன்னும் உயிருடன்தான் இருக்கிறேன்’ என்று அவர்களின் முன் நின்று கத்தவேண்டும் போல் இருந்தது.

ஆனால் மீண்டும் அவர்கள் முன் சென்று நிற்கும் மனம் வரவில்லை. அது என்றாவது ஒருநாள் வரும் என்ற எண்ணம் மலையளவு அவனிடம் இருந்தது.

வைஷ்ணவியை பற்றிய யோசனைதான் அவனில் ஓடுகிறது என்பதான யோசனை அவரிடம். ஆனாலும் அவனை கண்டுக் கொள்ளாதவர் போல் அவனிடம் கோவிலைப் பற்றிக் கூற தலையை ஆட்டிக் கொண்டிருந்தான்.

அதே நேரம் சிவாவும் வர, அவனது கவனம் வைஷ்ணவி இருந்த அறைப் பக்கமாய் திரும்பியது.

வைஷ்ணவி இவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவனது முகத்தில் ஏறிய கடுப்பைப் பார்க்க அவளுக்கு சிரிப்பு வரும் போல் இருந்தது.

சிவா கம்ப்யூட்டரில் எதுவோ செய்துக் கொண்டிருந்தான்.

‘இந்த பையன் எப்போதிலிருந்து இப்படி மாறிப்போனான்’ என்பதாய் ஸ்ரீ கரண் அவனை பார்த்திருந்தார்.

‘இவள் ஏன் தன்னைப் பார்த்து சிரிக்கிறாள்?’ என்பதான யோசனை அவனிடம்.

இவன் பார்க்கவும் முகத்தை கடினமாய் மாற்றிக் கொண்டாள் வைஷ்ணவி.

‘அதென்ன இவனுக்கு என்னைப் பார்க்க எப்படி தெரியுதாம்? எனக்கு தெரியாமலே என்னையே சைட் அடிப்பானாம்? வேற யார்கிட்டையாவது நான் பேசுனா என்னையே திட்டுவானாம்? இதுல பொண்ணு வேற பார்க்க போவானாம்.

இவன் பெரிய இவன். கல்யாணம் பண்ண கேட்டா உடனே நாங்க ஓகே சொல்லிடுவோமா? அப்படி ஒரு கனவு இருக்கும் போல, இந்த வைஷுவை என்ன நினைச்சுட்டான் அவன். அன்னைக்கு எப்படி பேசினான். இவனுக்கு பதில் குடுக்காம விடக்கூடாது. பொண்ணு மட்டும் கேட்க வரட்டும்’ முகத்தை கடுகடுவென வைத்துக் கொண்டு மனதில் அவனை வறுத்துக் கொண்டிருந்தாள்.

“வைஷு, இதுல எல்லாமே கரெக்ட்டாதானே இருக்கு, ஈஸியா டேலி ஆகுதே… என்னை எதுக்கு வர சொன்ன?”

“அதில்லை சிவாண்ணா, இதோ இதுதான் சரியா வரல” என ஏதோ ஒன்றை காட்ட.

“எல்லாம் சரியாதான் இருக்கு. நான் வாரேன் எனக்கு அங்கு மில்லில வேலை இருக்கும்” என்றபடி அவன் கிளம்ப,

இவளை நோக்கி வந்தான் ஸ்ரீ.

“எதுக்கு என்னை பார்த்து கிண்டலா சிரிக்குற? அப்புறம் முறைக்குற உனக்கு என்னாச்சு?” என்றான் நேரடியாக.

“பாஸ்! உங்களைப் பார்த்து யாராவது கிண்டலாச் சிரிக்கத்தான் முடியுமா? முறைக்கத்தான் முடியுமா? நீங்க எவ்ளோ பெரிய ஆளு”

இப்பொழுது உண்மையாகவே அவள் கிண்டல் செய்வதுப் போல் தோன்றியது.

‘என்னாச்சு இவளுக்கு? ஒருநாளும் இப்படி பண்ணமாட்டாளே?’ என்பதாய் அவளைப் பார்த்திருந்தான்.

அவர்கள் பேசியதை அவள் கேட்டிருப்பாளோ என்ற கோணத்தில் ஸ்ரீ யோசிக்கவேயில்லை. அப்படி யோசித்திருந்தால் ஒருவேளை அவளின் பேச்சுக்கு காரணம் கண்டுக் கொண்டிருக்கலாம். அவளைப் பார்த்தாலே இவன் இவனாக இல்லையே. எப்பொழுதும் போல் இதையும் கோட்டைவிட்டான்.

அவன் அவளையேப் பார்த்துக் கொண்டிருக்க,

’ நீ பார்த்தா நாங்க பயந்துடுவோமா? ஹே.. நாங்கெல்லாம் யாரு போடா போ’ என்பதாய் பதில் பார்வைப் பார்த்தாள்.

‘இல்ல… இல்ல… இவ இன்னைக்கு சரியே இல்லை’ இவன்தான் பார்வையை விலக்க வேண்டியதாய் இருந்தது.

‘இவன் பார்த்தா நாங்க பயந்துடுவோமா? இனிதான் உனக்கு இருக்கு, இவரு பார்ப்பாரம் நாங்க அப்படியே பயந்து நடுங்கிடுவோமா? இனி தெரியும் நான் யாருன்னு.
சைட் அடிக்கிறான் அதை இவரு சொல்லமாட்டாராம், அதை தூது சொல்ல இவருக்கு ஒரு ஆளு… பக்கி பைய… இடியட்’ அவனை பயங்கரமாக திட்டி பயங்கரமாக முறைத்தாள்.

இருவரையும் யோசனையாகப் பார்த்திருந்தார் ஸ்ரீ கரண்.

அவர் இருவரையும் கவனிக்கிறார் என்பதை அறியாத ஸ்ரீ, அவளைப் பார்த்து

“வேலையை சீக்கிரம் முடி” எனக் கூற,

“சரிங்க பாஸ்” என வேகமாய் இவள் கூற,

‘ஏதோ ஒரு முடிவோடதான் இவ இருக்கா’ எண்ணி, அவளிடம் தலையாட்டி வெளியே சென்றான்.

‘உனக்கு இப்போ என்னதான் பிரச்சனை? அவன் உன்னை சைட் அடிச்சதை உன்கிட்ட சொல்லாததா? இல்லை அன்னைக்கு உன்னை திட்டினதா?’ அவள் மனம் கேள்வி கேட்க.

‘ரெண்டுமே இல்லை… அவன் எப்படி என்னை லவ் பண்ணலாம்? நான் என்ன அவனுக்கு அவ்ளோ ஈஸியா போயிட்டானா? இந்த வைஷு அவ்ளோ சீக்கிரம் யாருக்கும் கிடைக்கமாட்டா.’ கடுகடுவென முகத்தை வைத்திருந்து வேலையைப் பார்க்க,

இதை ஸ்ரீ மட்டும் கேட்டிருந்தால், ரத்தகண்ணீர் வடித்திருப்பான். அவளை நினைத்து அவன் பட்டபாடு அவனுக்குதானே தெரியும்.

அவளையே யோசனையாகப் பார்த்திருந்தவர். நேராக மாறனிடம் பேச தோட்டத்தை நோக்கி சென்றார்.

***

சைக்கிளை அழுத்தி வேகமாக வீட்டுக்கு வந்திருந்தார் மாறன். வீட்டின் முன் வேகமாய் ஸ்டாண்ட் போட்டபடி, “கோதை… கோதை” அழைத்தபடியே உள்ளே நுழைய,

“என்னங்க… என்னாச்சு ஏன் இப்படி வேகமாய் வர்றீங்க” அவருக்கு மேல் வேகமாய் இவர் கேட்க,

“எனக்கு கையும் ஓடல காலும் ஓடல எப்படி சொல்லுவேன் நான்” புலம்ப,

“என்னாச்சுங்க, கீழே எங்கையாவது விழுந்துடீங்களா? கை, கால்ல அடி பட்டிருக்கா?” என்றபடி அவரது கையை ஆராய,

“இவ எவடி… நல்ல நேரத்துல அபச குணமா பேசுறது?” முறைக்க,

“என்னாச்சு?” என்றார் நிதானமாய்.

“அப்படி கேளு” என்றவர் அங்கிருந்த சேரில் அமர்ந்தபடியே,

“இன்னைக்கு தோட்டத்துக்கு என்னைப் பார்க்க ஸ்ரீ கரண் ஐயா வந்திருந்தாரு”

“அவரு தோட்டம் அவரு வர போறாரு. இதுல உங்களுக்கு என்ன சந்தோசம்?’

“கொஞ்ச நேரம் உன் திருவாயை வச்சுக்கிட்டு சும்மா இரேன் கோதை”

“சரி சொல்லுங்க, வந்தாரு… அப்புறம்?”

“நம்ம வைஷுவை அவங்க பேரனுக்கு கேட்டாங்க”

“என்ன உளருறீங்க! அந்த பையனுக்கா? ஏன் வேற பொண்ணு கிடைக்கலியாமா? நம்ம பொண்ணு என்ன இளிச்சவாயா? அந்த வீணா போனவனுக்கு குடுக்க, ஏற்கனவே ஒன்னு ஓடிப் போச்சு, இப்போ இங்க எதுக்கு கேக்குறாங்களாமாம்? என்னத்துக்காம்?”

“ஏன் கோதை இப்படி பேசுற? அந்த தம்பி நல்ல தம்பி. நீதான் ஏதோ தப்பா பேசுற”

“நான் ஒன்னும் தப்பா பேசல உள்ளதைத்தான் சொல்லுறேன். அங்க சுத்தி இங்க சுத்தி ஒன்னும் கிடைக்காம இங்க வரும்போதே தெரியுது அந்த பையனுக்கு ஏதோ குறை இருக்குன்னு. நீங்க வேண்டாம் சொல்லிடுங்க. நம்ம பொண்ணுக்கு நல்ல படிச்ச பையனா பாக்கலாம்”

“ஏன் இந்த தம்பிக்கு என்ன குறைச்சல்? நான் ஐயா கிட்ட சரி சொல்லிட்டேன். மறு பேச்சே கிடையாது. அதிர்ஷ்டம் எப்பவும் நம்மளை தேடி வராது. வர நேரம் அதை எட்டி உதைக்க கூடாது.

அந்த தம்பி நல்லவர்ங்கிறதுனாலதான் நம்ம வைஷு இன்னும் அங்க வேலைப் பாக்குறா, நானும் அங்க வேலைப் பாக்குறேன் அதை முதல்ல நியாபகம் வச்சுக்கோ”

“அதெல்லாம் என் பொண்ணு வேற இடத்துல வேலைப் பார்ப்பா, இங்கதான் பார்க்கனும்னு எந்த கட்டாயமும் இல்லை”

“இன்னும் எத்தனை வருசம் அவளை வேலைக்கு விடணும்னு நினைச்சுட்டு இருக்க நீ, இன்னும் அவளுக்கு பின்னாடி நமக்கு பசங்க இருக்காங்க.

அவங்களையும் படிக்க வைக்கணும், கல்யாணம் கட்டிக் குடுக்கணும்.
நம்ம வைஷு மட்டும் எப்படி படிச்சா? என் ஒரு ஆள் சம்பளம் வச்சு மூனு பேரையும் படிக்க வச்சுருக்க முடியுமா? அந்த தம்பிதான் நம்ம வைஷு படிப்புக்கு நிறைய உதவி பண்ணிருக்கு, அது எப்பவாது உனக்கு தெரியுமா?

அது செய்யுறதை யாருகிட்டயும் சொல்லாது, நம்மளையும் சொல்ல விடாது அந்த தம்பியை போய் தப்பா பேசுறியே கோதை.
அவங்க உயரம் என்ன? நம்ம உயரம் என்ன? அவங்களே கேட்டு வந்திருக்காங்கன்னா, நம்ம பொண்ணை ஏதோ ஒரு விதத்துல அவங்களுக்கு பிடிச்சிருக்கு அதுதான் அவங்களே வந்திருக்காங்க.

அன்னைக்கு வந்தாங்களே விக்ரம் வீட்டுல இருந்து அவர் சொல்லுறார் நம்ம அந்தஸ்துக்கும், அவங்க அந்தஸ்துக்கு சரி வராதாம் நம்ம பொண்ணுக்கு சீக்கிரம் வேற கல்யாணம் பண்ணி வைக்கணுமாம்.

வசதி இருக்கவன் எல்லாரும் இப்படி இருக்கான். நம்மளை தேடி வரவங்களை நாம எட்டி உதைக்க கூடாது, இதுக்கு மேல உன் இஷ்டம். நம்ம பொண்ணு நல்லா இருக்கணும்னு நீ நினைச்சா இந்த தம்பிக்கு கட்டி குடுக்கலாம்” என் பேச்சு முடிந்ததுப் போல் எழுந்து செல்ல,

அப்படியே யோசனையாக நின்றிருந்தார் கோதை.

அதற்குள் பிள்ளைகள் வந்திருக்க,
பேசாமல் அறைக்கு சென்ற வைஷுவை அழைத்தவர்,

“வைஷு அப்பா ஏதோ சொல்லுறாங்களே உனக்கு ஏதாவது தெரியுமா?”

“எனக்கு எதுவும் தெரியாதும்மா” அவளின் பதிலை கேட்டவர், பேசியதை எல்லாம் கேட்டுவிட்டாள் என்பதை அறிந்து, “என்ன சொல்லட்டும் வைஷு” என,

“நான் என்னம்மா சொல்லட்டும்?” அவள் கூறிக் கொண்டிருக்கும் பொழுதே,

வைஷுவின் குரலைக் கேட்டு, அறையை விட்டு வெளியே வந்த மாறன். வைஷுவை நோக்கி

“பாப்பா” என,

“என்னப்பா”

“உனக்கு வாழ்க்கை புரியாம இருக்காது பாப்பா… இந்த அப்பா உங்களுக்காக பணம் எதுவும் இதுவரை சேர்த்து வைக்கல. அப்பா உனக்குன்னு சேர்த்தது இந்த படிப்பு மட்டும்தான். அந்த படிப்பை வச்சு நீ வேலைக்கு போனதினால்தான் நல்ல சம்மந்தம் உனக்கு வந்திருக்கு.

உனக்கு பின்னாடி இன்னும் ரெண்டு பேர் இருக்காங்க, எனக்கும் வயசாகிட்டு. அவங்களுக்கும் நான் உன்னைப் போல படிப்பாவது குடுக்கணும்.
நீ நினைக்கலாம், நான் இருக்கேன்பா நான் வேலைக்கு போய் அவங்களைப் படிக்க வைக்குறேன்னு அது சொல்ல நல்லாருக்கும் வைஷு. ஆனா நடைமுறை வாழ்கைக்கு சரி வராது.

உன்னை ஒரு நல்ல இடத்துல கட்டி குடுத்தாதான் எங்களுக்கும் நிம்மதியா இருக்கும். உன் தங்கச்சிக்கும் உன் தம்பிக்கும் நல்ல இடத்துல வாழ்க்கை அமையும். நல்ல யோசிச்சு ஒரு முடிவெடு. அவங்க எவ்ளோ பெரிய இடம்னு உனக்கு நல்லாவே தெரியும். உன் வாழ்க்கை எப்படி நல்லா இருக்கும்னும் உனக்கு தெரியும்.

அவங்க வீட்டுலதான் நீ வேலைப் பார்த்துட்டு இருக்க, உனக்கு அவங்களைப் பத்தி நல்லாவே தெரியும் நல்ல முடிவா சொல்லு”

‘அவன் பெரிய இடம் அதுதான்ப்பா என்னை லவ் பண்ணுனதைக் கூட அவன் என்கிட்ட சொல்லாம இருக்கான். நாம அவ்ளோ குறைஞ்சு போய்டோமா?’ மனதில் நினைத்தவள் வெளியில் கூறவில்லை.

“உங்க இஷ்டம் அப்பா” என்றவள் அறைக்கு திரும்ப,

“நல்லா யோசிச்சு பதில் சொல்லு வைஷு” என கோதை கூற,

“இதுல யோசிக்க என்னம்மா இருக்கு. அப்பா சொன்னா சரியாதான் இருக்கும்”

“நான் எப்பவும் உனக்கு நல்லதுதான் செய்வேன் பாப்பா”

“தெரியுப்பா” என்றவள் அவரைப் பார் த்து புன்னகைக்க,

அவளின் அந்த புன்னகை எல்லாரையும் தொற்றிக் கொண்டது.

Leave a Reply

error: Content is protected !!