பல்லவன் கவிதை
பல்லவன் கவிதை
- Posted on
- shanthinidoss
- January 8, 2021
- 0 comments
பல்லவன் கவிதை 21
ஒரு வாரம் கடந்து போயிருந்தது. காஞ்சி கோட்டையை அண்மித்திருந்த அகழி திடலில் அசாத்திய அமைதி நிலவியது.
அதற்கு எதிர் மாறாக கோட்டைக்குள்ளும் கோட்டையைச் சூழ்ந்திருந்த காட்டுப்பகுதியிலும் மக்களின் சலசலப்பு அதிகமாக இருந்தது.
கோட்டைக்குள்ளே இருந்த மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தார்கள் என்றால் காட்டுக்குள் இருந்த வீரர்களும் தங்கள் அன்றாட வாழ்க்கையிலேயே ஈடுபட்டிருந்தார்கள்.
காஞ்சி மாநகரை எதிரிகள் சூழ்ந்து அன்றோடு இரண்டு நாட்கள் ஆகின்றன. எதிர்பார்த்ததற்கு எதிர் மாறாக படைவீரர்கள் மிகவும் திறமையாகவும் ஒழுங்காகவும் ஒரு கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து கோட்டைக்குள் இருந்த மக்கள் வியந்து போனார்கள்!
புலிகேசி மன்னரின் படை என்றாலே நாசம் விளைவிப்பதில் சிறந்தவர்கள் என்ற கருத்து அக்காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்ததால் காஞ்சி மக்கள் அந்த படையெடுப்பினால் அதிகமாக கலவரப்பட்டுப்போய் கிடந்தார்கள்.
ஆனால் அத்தகைய தீவிரமான செயல்களில் ஈடுபடாமல் நகரை அண்மித்திருந்த பகுதிகளில் வசித்த மக்களை ஏறெடுத்தும் பாராமல் தங்கள் காரியங்களில் ஈடுபட்டிருந்த வாதாபி வீரர்கள் மக்களுக்கு பெரும் விந்தையாக இருந்தார்கள்.
ஏற்கனவே மகேந்திர மன்னரின் ஆணைப்படி கோட்டையை அண்மித்து வசித்த மக்களில் பெரும்பான்மையினர் தங்கள் வசிப்பிடங்களை விட்டு தூரத்தே இருக்கும் தங்கள் உறவினர்கள் வீட்டிற்குக் குடிபெயர்ந்திருந்தார்கள். இன்னும் பலர் வேறு இடங்களுக்குக் குடிபெயர்த்த பட்டிருந்தார்கள்.
இருந்தாலும், ஆங்காங்கே ஒன்றிரண்டு குடும்பங்கள் வருவது வரட்டும் என்று அசிரத்தையாக தங்கள் வீடுகளிலேயே தங்கி விட்டார்கள். அந்த மக்களுக்குக் கூட வாதாபி வீரர்களால் எந்த தீங்கும் ஏற்படவில்லை.
கோட்டைக்கு வெளியே நிலைமை இப்படி இருக்கும்போது கோட்டைக்குள் இருக்கும் மக்களைக் கேட்கவும் வேண்டுமா? தங்கள் கோட்டையை எதிரிப்படைச் சூழ்ந்திருப்பதைப் பற்றி லவலேசமும் கவலைப்படாமல் இயல்பு வாழ்க்கையோடு இணைந்திருந்தார்கள்.
காட்டு முகப்பில் வாதாபியின் ராட்சத சைனியம் தண்டு இறங்கி இருந்தது. கருங்குன்றுகளைப் போல யானைகள் கண்ணுக்கெட்டிய தூரம் வரைத் தெரிந்தன.
நெடுகிலும் தெரிந்த கூடாரங்களில் வாதாபியின் வராக கொடி வானைத் தொட்டபடி காற்றில் அசைந்தாடி கொண்டிருந்தது. கூட்டம் கூட்டமாக குழுமியிருந்த வீரர்கள் காட்டில் வேட்டையாடிய பட்சிகளைச் சமைப்பதற்காக வன்னி மர துண்டுகளை நன்றாக சூடு பறக்க தேய்த்து பொறிகளைக் கிளப்பி நெருப்பு மூட்டி கொண்டிருந்தார்கள்.
இன்னொரு புறமாக கறுப்பு, வெள்ளை, பழுப்பு என பல வித நிறங்களில் புரவிகள் காணுமிடம் எல்லாம் காட்சி அளித்தன. படைத்தலைவர்களின் கூக்குரல்கள் நாலாபுறமும் ஓங்கி ஒலித்தன. வீரர்களை ஊக்குவித்தும் அவர்களுக்கான ஆணைகளை இட்டபடியும் புரவிகளில் வலம் வந்து கொண்டிருந்தார்கள்.
இவை எல்லாவற்றையும் தாண்டி காட்டின் மத்தியில் இருந்த ஒரு பெரிய கூடாரத்தில் புலிகேசி மன்னர் தனது சேனாதிபதி, உப சேனாதிபதி, படைத்தலைவர்கள் சகிதம் மந்திராலோசனையில் இறங்கி இருந்தார்.
கூடாரத்தின் தரையில் விரிக்கப்பட்டிருந்த பட்டு கம்பளங்களில் அனைவரும் அமைந்திருக்க, மன்னர் தனது இடைக்கு அணையாக வைக்கப்பட்டிருந்த திண்டில் சாய்ந்திருந்தார்.
“மார்த்தாண்டா! நிலைமை எப்படி இருக்கிறது?” போர்க்கவசம் அணிந்து இடையில் தொங்கிய பெரு வாளோடு சற்று அப்பால் நின்றிருந்த மார்த்தாண்டனை பார்த்து கேட்டார் புலிகேசி மகாராஜா.
“சத்யாச்ரயா, வந்து சேர வேண்டிய நம் படைகள் அனைத்தும் உரிய நேரத்தில் வந்து சேர்ந்துவிட்டன, நாம் திட்டமிட்டபடி எங்கெங்கே எந்தெந்த படை நிறுத்தப்பட வேண்டுமோ அங்கங்கே கனகச்சிதமாக படைகள் நிறுத்தப்பட்டுள்ளன.”
“நல்லது, நெடுந்தூரம் பயணம் செய்து வந்திருக்கும் நம் படைகள் இரண்டு நாட்கள் தங்களை ஆசுவாசப்படுத்தி கொள்ளட்டும்.” சொல்லிவிட்டு புலிகேசி மன்னர் இப்போது சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்தார்.
“சேனாதிபதி, கோட்டையின் நிலவரம் என்ன?”
“கோட்டைக்கும் காட்டிற்குமான இடைவெளி சமீபத்தில் அதிகரிக்கப்பட்டிருக்கிறது சத்யாச்ரயா!” சேனாதிபதி பேசி முடிப்பதற்கு முன்பாகவே புலிகேசி வாய்விட்டு நகைத்தார்.
“பரவாயில்லை, மகேந்திர வர்மனுக்கு நம் யானைப்படையின் பலம் தெரிந்திருக்கிறது, அதனாலேயே முன்னேற்பாட்டைப் பலமாக செய்திருக்கிறார்.” மீண்டும் மன்னர் சிரிக்க இப்போது அங்கிருந்த அனைவர் முகத்திலும் புன்னகை மலர்ந்தது.
“மன்னவா, இத்தனை முன்னேற்பாடு நடந்திருக்கும் போது நாமும் இன்னும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.”
“அதில் சந்தேகமில்லை சேனாதிபதி, நம் யானைப்படையைத் தகர்த்தெறிய பெரிய தந்திரங்களை வகுத்திருப்பார் மகேந்திரர், கோட்டை மதில்களில் சதா வீரர்களின் நடமாட்டம் தெரிகிறதா?”
“ஆமாம் மன்னவா.”
“எதிர்பார்த்ததுதான்…” இப்போது திருப்திக்கு அடையாளமாக தன் தலையை ஆட்டிக்கொண்டார் மன்னர்.
“போரை எப்போது ஆரம்பிக்கலாம் மன்னவா?” படைத்தலைவர் ஒருவர் மிகவும் பணிவாக கேட்க புலிகேசி மன்னர் இப்போது மார்த்தாண்டனை பார்த்தார்.
“மார்த்தாண்டா, இதில் உனது அபிப்பிராயம் என்ன?”
“சத்யாச்ரயா, இங்கு நடந்திருக்கும் ஏற்பாடுகளைப் பார்க்கும் போது கோட்டைக்குள் இருக்கும் மக்கள் மட்டுமல்ல, கோட்டைக்கு வெளியே இருக்கும் மக்கள் கூட ஒரு பெரும் போரை எதிர்பார்த்திருக்கிறார்கள் என்று புரிகிறது.”
“ஆமாம்.”
“மக்களே இத்தனை முன்னேற்பாடோடு இருக்கும் போது மன்னர் மட்டும் அசிரத்தையாக இருந்திருப்பாரா?”
“இல்லையில்லை… நிச்சயமாக இல்லை.”
“அதனால் எதிரியின் நகர்வு எப்படி இருக்கிறது என்று பார்த்து அதற்கேற்ப நாம் நடவடிக்கை எடுப்பது நல்லது.”
“ம்…” மார்த்தாண்டனின் பதிலில் புலிகேசி மகாராஜாவின் கண்கள் சிந்தனையில் லேசாக சுருங்கியது.
“கோட்டையும் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது, அகழியின் ஆழத்தையும் இன்னும் அதிகப்படுத்தி இருப்பதை அங்கு குவிந்திருக்கும் மணல் திட்டுகளே காட்டி கொடுக்கின்றன.” இது சேனாதிபதி.
“ஆமாம், அதை நானும் கவனித்தேன்.” பதில் சொன்னாலும் மன்னரின் குரல் சிந்தனையின் வசமே இருந்தது.
“கோட்டைக்குள் நிகழும் சாதாரண சூழ்நிலையைப் பார்க்கும் போது மக்கள் இந்த படையெடுப்பினால் அத்தனைத் தூரம் கலவரப்படவில்லை என்றுதான் தோன்றுகிறது.” சொன்ன உப சேனாதிபதியின் குரலில் கவலைத் தெரிந்தது.
“இந்த காஞ்சி கோட்டையின் கதவுகளை நம் யானைகள் துவம்சம் செய்யும் போது மக்களின் கலவரத்தைக் கண் நிரம்ப காணலாம் உப சேனாதிபதி!”
“சத்யாச்ரயா, இதில் இன்னுமொரு விஷயம் இருக்கிறது.”
“சொல்லுங்கள் சேனாதிபதி.”
“கோட்டைச் சுவரில் சதா பாதுகாவலுக்கு நிற்கும் வீரர்களின் கையில் வேல்கள் இருக்கின்றன.”
“சரி… அதனால்?”
“சாதாரணமாக கோட்டையைச் பாதுகாக்கும் வீரர்கள் விற்களும் அம்புகளும் வைத்திருப்பதுதான் வழக்கம், ஆனால் இங்கே வீரர்கள் வேல்களை வைத்திருப்பதைப் பார்க்கும்போது அவர்கள் நமது யானைப்படைக்குக் குறி வைப்பது போலவே தெரிகின்றது.”
“யானைகளுக்கு வேலை எறியும் பட்சத்தில் அது நமக்கு எதிராகவே திரும்பிவிட வாய்ப்புகள் அதிகம், பல்லவ சக்கரவர்த்தியின் நோக்கம் அதுவாகத்தான் இருக்கும் என்று நானும் நினைக்கிறேன்.” தன் கருத்தைச் சொல்லிவிட்டு தன் பெரிய தந்தையைப் பார்த்தான் மார்த்தாண்டன்.
“மகேந்திர பல்லவனை பற்றி என் செவிகளுக்கு வந்த செய்திகளைக் கேட்ட போது அவர் பெரிய கலைப் பித்தன் என்றல்லவா நான் நினைத்தேன்!”
“ஆமாம் மகாராஜா! வீணை வாசிப்பதில் அசகாய சூரராம், அவராகவே புதிதாக ஒரு வீணைத் தயாரித்திருக்கிறாராம், அதன் பெயர் கூட பரிவாதனியாம்!” படைத்தலைவர் ஒருவர் அக்கம் பக்கமுள்ள கிராம மக்களிடம் தான் சேகரித்த தகவல்களைச் சபையில் கூற புலிகேசி மன்னர் சட்டென்று உஷாரானார்.
“படைத்தலைவரே! வீணைக்கு என்ன பெயர் சொன்னீர்?”
“பரிவாதனியாம் மன்னா.”
“பரி…வாதனி… இந்த பெயரை நான் எங்கேயோ கேள்விப்பட்டிருக்கிறேனே…” இப்போது மார்த்தாண்டனுக்கு தூக்கிவாரி போட்டது. தன் பெரிய தந்தைக்கு அந்த பெயர் இன்னும் நினைவில் இருக்கும் என்று அவன் கனவிலும் நினைத்திருக்கவில்லை.
“மகேந்திர பல்லரின் கலைத் திறமை எப்படி இருந்தால் நமக்கென்ன? நாம் இப்போது விவாதிக்க வேண்டியது அவரின் போர்த்திறமையைப் பற்றி அல்லவா?” சட்டென்று இடையில் புகுந்து அவசரமாக பதில் சொன்னான் மார்த்தாண்டன்.
புலிகேசி மன்னரின் கவனம் இளையவன் பேச்சில் சிறிதே திசைத் திரும்பினாலும் அந்த முகத்தில் சிந்தனை ரேகை இன்னும் தெரிந்தது.
“சரிதான்… எனக்குச் சிந்திப்பதற்குச் சற்று அவகாசம் கொடுங்கள், இன்றைக்கு இரவு மீண்டும் ஆலேசனைச் சபைக் கூடும், எல்லோரும் இப்போது கலைந்து செல்லுங்கள்.” மன்னர் சொல்லி முடிக்க அத்தனைப் பேரும் எழுந்து வெளியே போனார்கள்.
“மார்த்தாண்டா!”
“சத்யாச்ரயா!”
“நீ சற்று பொறு, உன்னோடு நான் பேச வேண்டும்.”
“ஆகட்டும் மன்னவா.” அனைவரும் கலைந்து சென்ற பிறகு மார்த்தாண்டன் தனது பெரிய தந்தையின் அருகில் வந்தான். எங்கே மீண்டும் ‘பரிவாதனி’ என்ற பெயரைப் பற்றி பேச ஆரம்பிக்க போகிறாரோ என்று மார்த்தாண்டனின் மனம் அடித்துக்கொண்டது.
“சொல்லுங்கள் தந்தையே.” என்றான் மனதின் படபடப்பை மறைத்தபடி.
“மார்த்தாண்டா… நடப்பது எல்லாம் எனக்கு விசித்திரமாக இருக்கிறது!”
“ஏன் அப்படி சொல்கிறீர்கள் தந்தையே?”
“இல்லை… நமக்குக் கிடைத்த தகவலின் படி இந்த மகேந்திர வர்மன் ஆடல், பாடல், கோயில் கட்டுவது, சிலை வடிப்பது, வீணை வாசிப்பது… இதில்தானே சிறந்தவன், இவனுக்கெப்படி இத்தனைப் போர் தந்திரங்கள் தெரிந்தது?”
“மகேந்திர பல்லவர் பற்றிய என்னுடைய கருத்து முற்றிலும் மாறுபட்டது தந்தையே.” விஷமமாக சிரித்தான் மார்த்தாண்டன்.
“ஆஹா! அப்படியா சொல்கிறாய்?”
“ஆமாம் தந்தையே… அதற்குத்தான் என்னிடம் ருசு இருக்கிறதே!”
“ருசுவா? என்ன ருசு?” அதிசயமாக கேட்டார் புலிகேசி மகாராஜா.
“கொற்கையில் நடந்த சம்பவம்! அதையே சற்று ஆராய்ந்து பாருங்கள்.”
“ம்…”
“நாங்கள் கொற்கைக்குச் சென்ற இரண்டொரு நாட்களிலேயே மகேந்திர வர்மருக்கு ஒற்றர்கள் மூலம் சேதி போயிருக்க வேண்டும், இல்லாவிட்டால் அத்தனைத் துரிதமாக அவர் படைத்தலைவர் கொற்கைக்கு வந்திருக்க முடியுமா?”
“முடியாது முடியாது…”
“அதனால்தான் சொல்கிறேன் தந்தையே, மகேந்திர வர்மர் மேம்போக்காக கலைகளில் ஆர்வமுள்ளவர் போல தோன்றினாலும் போர் தந்திரத்திலும் வல்லவர்.”
“ஆனால் அவர் பொழுது முழுவதும் ஏதோ கடற்கரை ஓரமாக கோவில் கட்டுவதில் கழிவதாகத்தானே தகவல்கள் வந்தது!”
“அவருக்குக் கோவில் கட்டுவதிலும் ஆர்வம் இருக்கிறது, போர் புரிவதிலும் திறமை இருக்கிறது, நாம் திறமை மிக்க ஒரு வைரியைச் சந்திக்க போகிறோம் தந்தையே!”
“புரிகிறது மார்த்தாண்டா, நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் நிதானமாக வைக்க வேண்டும்.”
“ஆமாம்.”
“மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது?”
“நம் வீரர்களை நான் மிகவும் கண்டிப்பாக எச்சரித்து வைத்திருக்கிறேன் தந்தையே, மக்களிடத்தில் எத்தனைத் தூரம் மரியாதையாகவும் கண்ணியமாகவும் நடக்க முடியுமோ அத்தனைத் தூரம் நடந்து கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறேன்.”
“ஓஹோ! பல்லவ குடிகள் மீது உனக்கு ஏது இத்தனை அக்கறை மார்த்தாண்டா?!”
“பல்லவ குடிகள் மீது மட்டுமல்ல தந்தையே, நம் ஆட்சியின் கீழ் இருக்கும் எந்ந குடியாக இருந்தாலும் அவர்கள் மனதில் நம்மைப் பற்றிய நல்லெண்ணம் இருப்பது அவசியம், இல்லாவிட்டால் நம் ராஜ்ஜியம் அரைக்காசு பெறுமா?”
மார்த்தாண்டனின் வாதத்தில் அத்தனைப் பெரிய உடன்பாடு இல்லாவிட்டாலும் பேசுவது தன் பிரியத்திற்குரிய தம்பி மகன் என்பதால் அமைதியாக கேட்டபடி இருந்தார் மகாராஜா.
அத்தோடு தான் இன்னும் வெற்றி பெறாத பல்லவ சாம்ராஜ்யத்தின் குடிகளை நம் ஆட்சியின் கீழ் இருக்கும் குடி என்று மார்த்தாண்டன் சொல்லியது அவரை வெகுவாக சந்தோஷப்படுத்தி இருந்தது.
அதற்கு மேல் எதுவும் பேசாமல் மார்த்தாண்டனும் மெதுவாக நகர்ந்து விட்டான்.
***
தன் புரவியை அந்த மாளிகையின் முன்பாக நிறுத்திவிட்டு இறங்கினார் மகேந்திர பல்லவர். மனது அலைமோதி கொண்டு பழைய நினைவுகளை மீட்டி பார்த்தது.
ஒரு காலத்தில் இதே மாளிகைக்கு வருவதற்கு முடியாமல் வேஷம் போட்டுக்கொண்டு மாளிகைக்குப் பின்னால் இருக்கும் சிறிய கோவிலுக்கு வந்தது பசுமையாக இன்னும் நினைவில் இருந்தது.
ஆனால் இன்றைக்கு எந்த தடையும் இல்லை… மனது மாத்திரம் அன்றைக்கு விட இன்றைக்கு கனத்தது. புரவியை வாசலிலேயே விட்டுவிட்டு உள்ளே நுழைத்தார் மகேந்திரர். உள்ளே யாரும் இருப்பது போல தெரியவில்லை.
மாளிகையின் முதற்கட்டைத் தாண்டி இன்னும் உள்ளே நடந்தார் மன்னர். அங்கே அவர் கண்டதெல்லாம் மடியில் வீணையைச் சுமந்து கொண்டு கண்களில் கண்ணீரைச் சுமந்திருந்த பரிவாதனியைத்தான்.
சோக சித்திரமான அந்த காட்சி மகேந்திர வர்மரின் மனதை வாள் கொண்டு அறுத்தது. சற்று நேரம் அரவம் ஏதும் செய்யாமல் அமைதியாக தன் காதலியைப் பார்த்தபடியே நின்றிருந்தார்.
எத்தனையோ போராட்டங்களுக்குப் பிறகு உபாத்தியாயரும் காஞ்சிக்கே போய்விடலாம் என்று கட்டளை இட்ட பிறகுதான் மீண்டும் இந்த மாளிகைக்கு வர சம்மதித்தார் பரிவாதனி.
பரிவாதனியை மீண்டும் காஞ்சிக்கு அழைத்து வந்துவிட்ட படியால்தான் மகேந்திர வர்மரால் போர் நடவடிக்கைகளில் முழு மூச்சாக இறங்க முடிந்தது.
இத்தனைக் காலமும் மனதில் உறுத்திக்கொண்டிருந்த ஏதோவொன்று விலகியது போல இப்போதெல்லாம் உணர்ந்தார் மகேந்திர வர்மர். இத்தனைக்கும் கொற்கையில் நடந்த எதையும் தன் பட்டமகிஷியிடம் அவர் மறைக்கவில்லை!
எப்படி வாழ்ந்திருக்க வேண்டிய பெண்! தன் பிடிவாதத்தால் தன் வாழ்க்கையைத் தானே இப்படி அழித்து கொண்டாளே! அவரைப் பொறுத்தவரை பரிவாதனி செய்த தியாகம் அவருக்குப் பிடிவாதமாகவே பட்டது.
பல்லவ குலத்தின் ராணியாக பார்போற்றும் மகேந்திர வர்மரின் பட்டமகிஷியாக காஞ்சியின் அரச மாளிகையில் வாழ வேண்டியவள்! இன்றைக்கு பெண்ணையும் தொலைத்துவிட்டு அனாதைப் போல கண்ணீரோடு காலம் கழிக்கிறாள். இதெல்லாம் எதற்காக? யாருக்காக?
என்மேல் கொண்ட காதலினால் அவளையும் வருத்தி என்னையும் மீளா துயரில் ஆழ்த்திவிட்டாளே! இதை எப்படி நான் சரி செய்வேன்? இந்த பாவத்தை எந்த கங்கையில் நான் கரைப்பேன்?
நொடிகள் கடந்து கொண்டிருக்க இப்போதும் பரிவாதனி தன் அன்பரின் வரவை அறிந்து கொள்ளவில்லை. கண்கள் எங்கோ ஒரு சூனியத்தை வெறித்திருக்க மடியில் இருந்த வீணையை இப்போது தடவிக்கொடுத்தார்.
மகேந்திரரும் யோசனைகளை விட்டுவிட்டு பெண்ணின் அருகில் சென்று அமரப்போனார். அப்போதுதான் சுற்றுவட்டாரத்தைக் கவனித்த பரிவாதனி அவசரமாக எழப்போக அவர் தோளிரண்டிலும் கைகளை வைத்துத் தடுத்து பெண்ணை மீண்டும் பழையபடி அமர வைத்தார் மன்னர்.
“பல்லவேந்திரா!” பெண்ணின் அழைப்பை அலட்சியம் செய்தவர் அவள் பின்னே தானும் நிலத்தில் நெருங்கி
அமர்ந்து கொண்டார்.
“ஐயையோ! பல்லவேந்திரா! இது என்ன? வெறும் தரையில் உட்கார்ந்துவீட்டீர்களே! நான் இதோ பட்டுக்கம்பளத்தை எடுத்து வருகிறேன்.” பரிவாதனி அவசரமாக எழப்போக அவரை இப்போதும் தடுத்து இருத்தினார் சக்கரவர்த்தி.
“இரண்டு ராஜ்ஜியங்களின் சொந்தக்காரி… நீயே தரையில் அமர்ந்திருக்கும் போது எனக்கு என்ன வந்தது பரிவாதனி?” மகேந்திர வர்மரின் குரலில் கவலை அளவுக்கு அதிகமாகவே கொட்டிக்கிடந்தது.
“இரண்டு ராஜ்ஜியங்களுக்குச் சொந்தக்காரியா? நானா? இது என்ன பிதற்றல் அன்பரே?” லேசாக சிரித்தபடி கேட்டது பெண். உரிமையான அந்த அழைப்பில் சக்கரவர்த்தியின் மனது லேசாக ஆனந்தத்தை அனுபவித்தது.
“ஏன் இல்லை? வாதாபியின் முடிக்குரிய இளவரசி, மகேந்திர வர்மரின் பட்டமகிஷி… சரிதானே?” சக்கரவர்த்தியின் வாயிலிருந்து ‘பட்டமகிஷி’ என்ற வார்த்தை உதிர்ந்த போதுதான் தன்நிலை உணர்ந்த பரிவாதனி சட்டென்று எழப்போனார். ஆனால் மகேந்திர பல்லவரின் கை அவரைத் தடுத்தது.
“ஏன்?”
“பல்லவேந்திரா… நீங்கள் இங்கே வந்திருப்பது…”
“யாருக்குத் தெரிய வேண்டுமோ அவர்களுக்குத் தெரியும், நீ கவலைப்படாதே.”
“பல்லவேந்திரா…”
“அது ஊருக்கு… உனக்கல்ல, இதை ஏற்கனவே உன்னிடம் நான் சொல்லி இருக்கிறேன்.” வார்த்தைகள் சற்று காரமாகவே வந்து வீழ்ந்தன.
“அன்பரே… இது நியாயமல்ல.”
“நீ அறிந்த நியாயத்தை விட எனது நியாயம் ஒன்றும் அத்தனை மோசமானது அல்ல.”
“புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள்.”
“எதைப் புரிந்து கொள்ள வேண்டும் பரிவாதனி?”
“என்னோடு சண்டைப் போடத்தான் கிளம்பி வந்தீர்களா?” கோபத்தோடு இருந்த மன்னரை இந்த வார்த்தைகள் மனமிரங்க செய்தன.
எதுவும் பேசாமல் பரிவாதனிக்கு பின்னால் அமர்ந்த படியே கையை நீட்டி வீணையை லேசாக மீட்டினார் மகேந்திரர். அந்த நொடியின் இன்பத்தை உணர்ந்து கொண்டது போல வீணையும் இன்ப நாதம் கிளப்பியது.
உச்ச ஸ்தாயியில் ஒரு ஸ்வர கட்டை மன்னர் வாசிக்க, அதே ஸ்வர கட்டை கீழ் ஸ்தாயியில் வாசித்தது பெண். மன்னரின் முகத்தில் இப்போது இளநகைப் பூத்தது. சட்டென்று அவர் விரல்கள் ஒரு கீதத்தை மீட்ட ஆரம்பிக்க பரிவாதனி வீணையிலிருந்து கையை அகற்றிக்கொண்டாள்.
மன்னரின் மனம் அப்போது எத்தனைப் பரவசத்தில் இருக்கிறது என்பதை அவர் வாசிப்பே சொல்லியது. அந்த இடத்தையே இசை வெள்ளம் ஆக்கிரமிக்க பரிவாதனி தன்னை மறந்து தன் அன்பரின் தோளில் இருந்த படியே சாய்ந்து கொண்டார்.
வீணையைப் பெண் சுமந்திருக்க பெண்ணை மன்னர் சுமந்திருந்தார். அன்றைக்கு அடர்ந்த காட்டில் அவர்கள் இருவரும் சுகித்த இன்பத்திற்குச் சற்றும் குறையாத இன்பத்தை இப்போதும் அவர்கள் மனது அனுபவித்தது.
காலத்தை மறந்து இருவரும் வெகுநேரம் அப்படியே அமர்ந்திருந்தார்கள். தொலைந்து போன இன்பத்தை, காலத்தைத் திரும்ப பெற்றவர்கள் போல அந்த நொடியை அணுஅணுவாக அனுபவித்தார்கள்.
“பரிவாதனி…” மகேந்திர வர்மர்தான் முதலில் தன்னை மீட்டுக் கொண்டார்.
“ம்…” இது வீணையின் நாதமா… இல்லைப் பெண்ணின் குரலா?!
“காஞ்சி கோட்டையின் வாசலில் என் மைத்துனர்கள் வந்திறங்கி இருக்கிறார்கள்.” மகேந்திரரின் கேலியில் திடுக்கிட்டு நிமிர்ந்தார் பரிவாதனி. பெண்ணின் முகத்தைத் தனக்காக திருப்பி அவள் கண்களை உற்று நோக்கினார் சக்கரவர்த்தி.
“எது நடக்க கூடாது என்று நீ என்னையே தியாகம் செய்தாயோ… அதுவாக நம் வாசல் தேடி வந்து நிற்கிறது பரிவாதனி…” ஒரு புன்முறுவலோடு சக்கரவர்த்தி சொல்ல பெண்ணின் கண்கள் கலங்கியது.
“கலங்காதே பரிவாதனி… அன்றைக்கும் நீ என்னை நம்பவில்லை, இன்றைக்கும் நீ என்னை நம்பவில்லை.”
“அப்படியில்லை அன்பரே.”
“வேறு எப்படி பரிவாதனி? உன் செய்கையால் இன்றைக்கு என் பெண் கூட என்னை எதிர்த்து நிற்கிறாள்… அது தெரியுமா உனக்கு?” இதை மன்னர் சொன்னபோது பரிவாதனியின் முகம் கோபத்தால் சிவந்து போனது.
“அது ஒரு காலமும் நடக்காது அன்பரே! உங்களை எதிர்ப்பது யாராக இருந்தாலும் அவர்கள் முடிவு என் கையால்தான்!” ஆவேசமாக பெண் சொல்ல அவளை முரட்டுத்தனமாக இழுத்தார் மகேந்திர வர்மர்.
“பரிவாதனி! ஒன்றை மட்டும் நன்றாக நினைவில் வைத்துக்கொள்! என் மகளை இதுவரை நான் பார்த்ததில்லை, போர்க்களத்தில்தான் அவளை நான் பார்க்க நேர்ந்தால் அதுவும் எனக்கு சந்தோஷம்தான், என் முடிவு அவளால்தான் என்றால் அதையும் நான் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வேன்… இனிமேலாவது எனக்கும் என் பெண்ணிற்கும் குறுக்கே வராதே! அப்படி ஏதாவது செய்தி என் காதுகளை எட்டினால் மகேந்திரனின் இன்னொரு முகத்தை நீ பார்ப்பாய்!” கோபமாக சொன்ன சக்கரவர்த்தி பெண்ணை உதறிவிட்டு சட்டென்று வெளியே போய்விட்டார்.
பரிவாதனி ஒரு கணம் எதுவும் புரியாமல் உறைந்து போய் அமர்ந்திருந்தார்.