அனல் பார்வை 04🔥

அனல் பார்வை 04🔥

அடுத்தடுத்தென்று வந்த நாட்களில் எடுக்கப்பட வேண்டிய மீதி காட்சிகள் எடுக்கப்பட்டு படமாக்கப்பட, படப்பிடிப்பின் கடைசி நாளன்று வெற்றிகரமாக படப்பிடிப்பு நடந்து முடிந்ததில் கேக் வெட்டி ஆரவாரமாக கொண்டாடினர் படக்குழுவினர்.

அடுத்த ஒரு வாரத்தில் படத்தின் சில அறிமுக காட்சிகளுக்காக படமாக்கப்பட வேண்டிய காட்சிகளை எடுத்துவிட்டு கொலம்பியாவிற்கு திரும்ப செல்ல படக்குழுவினர் முடிவு செய்திருக்க, லோஸ் ஏன்ஜல்ஸ்ஸிலுள்ள தன் வீட்டில் அந்த ஆளுயர புகைப்படத்திற்கு முன்னால் நின்றிருந்தாள் தீ அருவி.

ஒன்றரை வருடத்திற்கு முன் தாய் தந்தையுடன் அவள் எடுத்துக் கொண்ட புகைப்படம் அது.

அவளின் தந்தையின் புகைப்படத்தை வெறித்துப் பார்த்தவள், ‘சின்னவயசுல  இருந்து உங்க பாசத்தை உணராம இருத்தேன். என் வாழ்க்கையே சூனியமாகி நடைபொணம் மாதிரி நான் திரிஞ்சப்போ என் முன்னாடி வந்து நின்னீங்க. இப்போ நான் இந்த நிலைமையில இருக்க நீங்க தான் காரணம்.

ஆனா, ஏன் டாடி மறுபடியும் என்னை விட்டு போயிட்டீங்க. கூடவே அம்மாவும்… ஆசைப்பட்டதை அடைஞ்சும் மனசு வெறுமையா இருக்கு. படத்துல மட்டுமில்ல டாடி, தினமும் ஒவ்வொருத்தர் முன்னாடி நடிச்சிக்கிட்டு இருக்கேன்.’ என்று மானசீகமாக தன் தந்தையுடன் பேசியவளின் கண்களிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர் வெளியேற தயாராக, அதை கஷ்டப்பட்டு உள்ளிழுத்துக் கொண்டாள்.

வாய்விட்டு அழுவது கூட ஒரு சிறந்த மருத்துவம் தான். ஆனால், இவளோ அழுகையை அடக்க, அது என்னவோ இவளின்  மன அழுத்தத்தை தான் அதிகரிக்கின்றது.

புகைப்படத்திலிருந்து பார்வையை அகற்றிய அருவி, அறையிலிருந்து வெளியேற எத்தனிக்க, சரியாக கதவை தட்டிவிட்டு உள்ளே வந்தான் அவன். அவனை பார்த்தவள், “தாரக்” என்று அழைக்க, அவள் முன் சிரிப்புடன் வந்து நின்றான் அந்த ஆய்வுப் பயணம் செய்பவன்(explorer).

அருவியின் சித்தப்பா மகன் தான் தாரக். சிறுவயதிலேயே அவனுடைய பெற்றோர் இறந்துவிட, அருவியுடனே வளர்ந்தான். ‘எக்ஸ்ப்ளோரர்’ என்ற பெயரில் ஒரு குழுவை திரட்டி உலகம் பூராக ஆய்வுப் பயணம் செய்பவன்.

அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்தவனை பார்த்தவள், “நான் இங்க இருக்குறது உனக்கு எப்படி தெரியும்?” என்று ஒற்றை புருவத்தை உயர்த்தி கேட்டாள்.

“இதென்ன பெரிய கண்டுபிடிப்பா? நீ உன் டீம் கூட ஸ்டே பண்ண மாட்டா, லோஸ் ஏன்ஜல்ஸ்ல ஷூட்டிங்ன்னாலே பெரியம்மா, பெரியப்பபா கூட கடைசியா வாழ்ந்த இந்த வீட்ல தான் நீ இருப்பேன்னு எனக்கு தெரியாதா என்ன? ஆல் டீடெய்ல்ஸ் ஐ க்னோ…” என்று ‘தன் அக்காவை நான் அறிவேன்’ என்ற ரீதியில் தாரக் பேச,

கண்களுக்கு எட்டாத புன்னகையை சிந்திய அருவி, “உன் வேலையெல்லாம் எப்படி போயிக்கிட்டு இருக்கு? இன்னும் எக்ஸ்ப்ளோர், ரிசேர்ச்ன்னு ஊர் ஊரா திரிஞ்சிக்கிட்டு இருக்கியா?” என்று கேட்டாள்.

“ஓ கோட்!”

என்று சலிப்பாக தலையாட்டியவன், “என் கனவு என்னன்னு உனக்கு தெரியாதா இப்போ வரை மர்மமா இருக்குற அந்த தங்க நகரத்தை எப்படியாச்சும் கண்டுபிடிக்கனும். எல்-டேரேடோ…” என்று அந்த பெயரை அழுத்தி, நீட்டி முழக்கி சொல்லிக்காட்டினான்.

“அதெல்லாம் சுத்த பொய்! யூ க்னோ வட், இப்போ நான் நடிச்ச படத்தோட கான்செப்ட் ஏ இந்த லொஸ் சிட்டி ஆஃப் கோல்ட் தான். ரொம்ப இன்ட்ரஸ்டிங்! பட், ஐ டோன்ட் ப்ளீவ் இன் தட்” என்று சொன்னவள் தன் அப்பாவின் புகைப்படத்தை பார்த்து,

‘அதை கண்டுபிடிக்கிறேன்னு போய் தான் டாடி கூட அவரோட வாழ்க்கைய தொலைச்சாரு இல்ல?’ என்று மானசீகமாக தனக்குத்தானே கேட்டுக் கொண்டாள்.

“வாவ்! ஆல்ரெடி நிறைய படங்கள் இதே தங்க நகரத்தை கதைக்கருவா வச்சி எடுத்திருக்காங்க. பட், எதுவுமே அதை பத்தின உண்மைகளை சொன்னது கிடையாது. இன்ஃபேக்ட், ‘எல்-டேரேடோ’ அந்த நகரத்தோட பெயர் கிடையாது. அந்த மக்களை வழிநடத்துற தலைவன் இல்லைன்னா தலைவிய தான் அப்படி சொல்வாங்களாம். அவங்க தான் அந்த மக்களோட எல்-டேரேடோ” என்று தாரக் தான் இதுவரை செய்த ஆராய்ச்சிகளில் கிடைத்த தகவல்களை அவளுக்கு சொல்ல,

“ஓ கோட்! அத்தனையும் ஃபேக்” என்று சொல்லிக் கொண்டாள் அருவி.

“பார்க்க முடியாதது எல்லாம் பொய்யா இருக்கனும்னு அவசியம் இல்லை. பெரியப்பா கூட இதை தெரிஞ்சிக்க தான் அவ்வளவு கஷ்டப்பட்டாரு” என்ற தாரக்கை இடைவெட்டியவள், “அதனால தான் அவரோட இருபத்திரெண்டு வருஷ வாழ்க்கையையே இழந்துட்டாரு. அது அவர மட்டும் பாதிக்கல. என்னையும் சேர்த்து தான். சில ஆராய்ச்சிகள் மனுஷன பைத்தியமாக்கிரும்” என்று காட்டமாக சொன்னாள்.

“மே பீ… ஆனா, இது உண்மை தான். ஐ ட்ரூலி ப்ளீவ் என்ட், பெரியப்பா கூட அத்தனை வருஷமும் அந்த தங்க நகரத்து மக்கள்கிட்ட தான் சிறைப்பட்டு கிடந்திருப்பாரோன்னு தோணுது.” என்று அவன் தீவிரமான யோசனையுடன் சொல்ல,

“புல் ஷீட்! லுக் தாரக், டாடி இதை பத்தி எக்ஸ்ப்ளோர் பண்ணாரு தான். ஆனா, அவர் மாட்டிக்கிட்டது ஒரு காட்டுவாசி கும்பல்கிட்ட. அங்கிருந்து தப்பிக்க வழிதெரியாம தான் இத்தனை வருஷம் ஓடிருச்சி. இதை அவரே தான் சொன்னாரு.” என்று கோபமாக சொன்னாள் அருவி.

“ஓகே, அப்படியே வச்சிக்கலாம். ஆனா ஒன்னு, பெரியப்பாவுக்கு பெரிய தியாக செம்மல்னு நினைப்பு! எக்ஸ்ப்ளோர் ஆர் ரிசேர்ச் பண்ணும் போது அது மூலமா கிடைக்குற எதையுமே தனக்கு சொந்தமாக்கிக்க மாட்டாரு. அப்படியே அரசாங்கத்துக்கு தூக்கி கொடுத்திடுவாரு. அப்போ எதுக்கு இந்த ஆராய்ச்சி?” என்று கேட்டவனின் குரலில் ஏகத்துக்கும் எரிச்சல் மண்டிக் கிடந்தது.

தாரக் சொன்னதை கேட்டவளுக்கு, ‘ஒருவேள, வளங்கள திருடுற இந்த மனுஷ குலத்திலிருந்து தன்னை பாதுகாக்க தான் இயற்கையோட பல மர்மங்கள் இன்னும் மர்மமாவே இருக்குதோ என்னவோ?’ என்ற தன் மஹியின் வார்த்தைகளே நியாகத்திற்கு வந்தது.

தன்னவனின் நினைவில் தானாகவே அவள் இதழ்கடையோரம் புன்னகை எட்டிப்பார்க்க, அதை கவனித்த தாரக், “என்ன அரு, உன் மஹி நினைப்பா?” என்று கேலித் தொனியில் கேட்டதும், அதுவரை விரிந்திருந்த இதழ் சுருங்க, முகம் இறுகிப் போனது அவளுக்கு.

“நத்திங்” என்றுவிட்டு அவள் எழுந்து செல்ல, தாரக்கோ எப்போதும் போல் அந்த நகரம் தொடர்பான தன் ஆராய்ச்சி பற்றிய யோசனையில் ஆழ்ந்தான்.

இங்கு ராகவ்வோ தன் குழுவினருடனான கலந்துரையாடல், சில வேலைகளை முடித்து விட்டு தன் நண்பனை தான் தேடிச் சென்றான்.

“டேய் ஆகு, எனக்காக வெயிட் பண்ணாதன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். உன் இஷ்டத்துக்கு சாப்பிடாம கிளம்பி வந்துட்ட…” என்று அறைக்கதவை திறந்துக் கொண்டு உள்ளே சென்ற ராகவ் வியந்து தான் போனான்.

“வாவ் ஆகு! எப்படி டா உன்னால மட்டும் கண்ணை கட்டிக்கிட்டு இவ்வளவு அழகா வரைய முடியுது? என்ற ராகவ்வின் குரலில் வரைதலை நிறுத்திய அக்னி, கண்ணிலிருந்த கருப்புத்துணியை விலக்கி அவனை ஏகத்துக்கும் முறைத்தான்.

அக்னியின் முறைப்பிற்கான காரணம் புரிந்து, ‘ஹிஹிஹி…’ என்று அசடுவழிந்தவாறு மன்னிப்பு கேட்கும் விதத்தில் இரு காதுமடல்களை பிடித்து மன்னிப்பு கேட்டவனுக்கு தானே தெரியும்! தன் நண்பன் வரையும் போது அவனை தொந்தரவு செய்தால் அவனுக்கு பிடிக்காது என்று…

“எத்தனை முறை சொல்லியிருக்கேன் ராகு, வரையும் போது பேசாதன்னு… ஒரு அரைமணி நேரம் கழிச்சி நீ வந்திருந்தா இதை முழுசா முடிச்சிருப்பேன்” என்று தன் நண்பனை திட்டியபடி அக்னி தான் வரைந்ததை காட்டினான்.

“இதை நீ இப்படியே கொண்டு போய் வச்சாலும், இதுல இருக்குற உன் ஆளோட முகத்துக்காக வாங்குவாங்களோ, இல்லையோ? உன் திறமைக்காகவே வாங்க ரெடியா இருப்பாங்க. என்ட், இது…” என்றவாறு அவன் வரைந்திருந்த காட்சியை கூர்ந்து கவனித்த ராகவ், “இது இப்போ நாங்க வர்க் பண்ற படத்துல வந்த சீன் தானே? அதுவும், அருவி அந்த சிம்மாசனத்துல கெத்தா, நிமிர்வா உட்கார்ந்திருக்குற மாதிரியான காட்சி” என்று வியப்பாக சொன்னான்.

மென்மையாக புன்னகைத்தவன் ‘ஆம்’ என்ற ரீதியில் தலையசைக்க, “ஒருவேள, இது நிஜமும் ஆகலாம்ல?” என்ற ராகவ்வின் கேள்வியில் அக்னியின் முகமோ கற்பாறை போன்று இறுகிப் போனது. அதை கவனித்தவனுக்கு அப்போதே தான் பேசியது மூளைக்கு உரைக்க, ‘தன் வாயே தனக்கு சனி’ என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.

அவனின் மனநிலையை மாற்றும் பொருட்டு, “அக்னி, இன்னும் வன் வீக்ல நாம மெடல்லின்க்கு கிளம்புறோம். சோ, ஊர் சுத்தி பார்க்கலாமா? நைட் டைம்ல இந்த ஊரு சூப்பரா இருக்கும்” என்று ஆர்வமாக கேட்டான் ராகவ்.

சுற்றி தங்கத்திலான பொருட்கள் மின்ன, தங்க ஆபரணங்களில் குளித்தது போல் உடல் முழுக்க தங்க ஆபரணங்களை பூட்டி, தங்க நிற சிம்மாசனத்தில் தன்னவள் வீற்றிருப்பது போன்று அவன் வரைந்திருந்த புகைப்படத்தை கரைகள் படிந்த கையால் லேசாக வருடிய அக்னி, தன் நண்பனுடன் வெளியே செல்வதற்கு தயாரானான்.

இரவு நேரத்தின் லோஸ் ஏன்ஜல்ஸ்ஸின் அழகை ரசித்தவாறு நடந்தனர் இரு நண்பர்களும்.

அக்னியோ விழிகளை விரித்து ஒவ்வொன்றையும் ஆர்வமாக பார்க்க, ராகவ்வோ அங்கிருந்த பெண்களை சைட் அடித்துக் கொண்டும், தன்னை கடந்து செல்வோருடன் உற்சாகமாக பேசியவாறும் நடந்தான் அக்னியின் கரத்தை தன் கைக்குள் அடக்கியவாறு.

அங்கிருந்த ஒரு பப்பிற்குள் ராகவ் நுழைய, “வேணாம் ராகு, மெடல்லின்க்கு போனதும் எவ்வளவு வேணாலும் குடிச்சிக்க! இங்க வேணாம்.” என்று தன் நண்பனை தடுக்க முயன்றான் அக்னி.

“ஆகு, ப்ளீஸ்… லோஸ் ஏன்ஜல்ஸ் வந்துட்டு சரக்கடிக்காம போனா எப்படி? கொஞ்சோண்டு தான். நிதானத்தை இழக்காத அளவுக்கு தான் குடிப்பேன். போதுமா?” என்றுவிட்டு ராகவ் ஒவ்வொரு மதுக்குவளையாக உள்ளே இறக்க, அக்னி தான் திணறி போனான்.

ராகவ் குடிக்க ஆரம்பித்தால் மூக்கு முட்ட குடித்தே மட்டையாகிவிடுவான் என்று அவன் அறிந்த விடயமல்லவா!

கொலம்பியாவில் வைத்து அவன் மது அருந்தி சுயநினைவு இழந்தாலும், ஏற்கனவே ராகவ் சொல்லி கொடுத்த வழியை கண்டுபிடித்து அவனை கைதாங்கலாக வீட்டுக்கு அழைத்து வந்துவிடுவான் அக்னி. ஆனால், இங்கு…?

அவன் எவ்வளவோ தடுத்தும் ராகவ் போதையின் பிடியில் அவனை கண்டுக்கொள்ளாது அருந்திக் கொண்டே போக, போதை உச்சத்தை தொட்டதும், அவனுடைய நிதானம் படிப்படியாக குறைந்தது.

“வன் மோர்…” என்று சொல்லி சொல்லியே அவன் அளவுக்கதிகமாக குடிக்க, ஒருகட்டத்தில் முடியாது தன் நண்பனின் கையை கெட்டியாக பிடித்துக் கொண்ட அக்னி, “போதும்…” என்று அடக்கப்பட்ட கோபக் குரலில் சொல்ல, அது என்னவோ ராகவ்வை சற்று அசைத்துப் பார்த்தது.

இரு பக்கமும் சலிப்பாக தலையாட்டியவாறு பணத்தை செலுத்திவிட்டு ராகவ் தள்ளாடியபடி வெளியே செல்ல முற்பட, அவனை கைதாங்கலாக பிடித்துக் கொண்டு வெளியே அழைத்து வந்தான் அக்னி.

“டேய் ஆகு! அந்த மாஷ்மெல்லோ மண்டையன் என்னை எப்படியெல்லாம் திட்டுறான் தெரியுமா டா? கூடவே அந்த டிரெக்டர் சைக்கோவும். அவனுங்க மட்டும் இப்போ என் கையில கிடைச்சானுங்க…” என்று வேலையின் போது வாங்கும் திட்டுக்களை நினைத்து இப்போது ராகவ் போதையில் புலம்ப ஆரம்பித்தான்.

போதையின் பிடியில் கைகளை அங்குமிங்கும் அசைத்து அவர்களை அடிப்பது போன்று பாவனை செய்து, கெட்ட கெட்ட வார்த்தையால் தனக்கு திட்டியவர்களை அர்ச்சித்துக் கொண்டே அவன் வர, அவன் பேசும் சில தமிழ் வார்த்தைகளின் அர்த்தம் புரியாத அக்னிக்கு தான் மண்டை காய்ந்தது.

“ஆகு, நான் ஏன்டா இன்னும் சிங்கிள்லாவே இருக்கேன்? உன் ஊர்லயாச்சும் எனக்கு பொண்ணு கிடைக்குமா?” என்று ராகவ் குளறியபடி கேட்க, அவனை முறைத்து பார்த்தவாறு, “கழுத்துல வெட்டு வாங்கினா தான் அடங்குவ போல?” என்று கோபமாக சொன்னவனின் கண்களில் தென்பட்டது அந்த காட்சி.

ஒரு வயதானவரை ஒருவன் தள்ளிவிட்டு தனக்கு இருக்கும் வேலை அவசரத்தில் அதை கண்டுக்கொள்ளாது விறுவிறுவென செல்ல, அங்கு பக்கத்தில் இருந்தவர்கள் கூட அவருக்கு உதவி செய்ய வராது தொலைப்பேசியிலும், தங்கள் வேலைகளிலும் கவனமாக இருந்தனர்.

உலகத்தின் பரிணாமங்கள் மக்களின் வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி வளர்ச்சியை கண்டாலும், மனிதாபிமானத்தை அடியோடு அழிக்கத் தான் செய்கிறது. நோயுற்ற தன் அம்மா வேலை செய்வதை கண்டுக்கொள்ளாது, ‘தாயிற் சிறந்த கோவிலுமில்லை’ என்று வலைதளங்களில் கருத்துக்கள் பதிப்பிக்கும் நிலை தான் தற்போது.

அவரை கவனித்த அக்னி, “ராகு, இங்கேயே இரு” என்றுவிட்டு அந்த வயதானவரை நோக்கி ஓடினான். கஷ்டப்பட்டு தன் பொருட்களை அவர் எடுத்துக் கொண்டிருக்க, அவருக்கு உதவி செய்தவன், “எங்கேயும் அடி பட்டிருச்சா?” என்று கேட்டவாறு அவர் எழுந்து நிற்க உதவி செய்தான்.

அவரோ அவன் பேசுவது புரியாது விழித்தாலும், அவன் செய்த உதவிக்கு “தேங்க்ஸ்” என்றுவிட்டு செல்ல, மெலிதாக புன்னகைத்தவன் தன் நண்பனை நிற்க வைத்த இடத்தை நோக்க, அங்கு ராகவ் இருந்தால் தானே!

பதறிப்போய் அங்குமிங்கும் கண்களை சுழலவிட்டு அவனை தேடிய அக்னி, போதையில் தள்ளாடியபடி நடுவீதியில் சென்றுக் கொண்டிருந்தவனை பார்த்து பதறியே விட்டான்.

அதுவும், இந்த ஊருக்கு வருவதற்கு முன் இங்குள்ள கடுமையான சட்டங்களை பற்றி ராகவ் சொன்னது அவனுக்கு நினைவுக்கு வர, தன் நண்பன் ஏதேனும் பிரச்சினையில் சிக்கிவிடுவான் என்ற பயத்திலே அவனை நோக்கி வேகமாக ஓட எத்தனித்தான் அக்னி.

இவன் ஒரு அடி முன்னே வைக்க, அதற்குள்

வேகமாக வந்த கார் ஒன்று ராகவ்வை இடித்து செல்வதற்கு சரியாக இருந்தது.

சில நொடிகளில் நடந்து முடிந்த சம்பவத்தில் திகைத்துப் போய் நின்ற அக்னிக்கு, வீதி ஓரத்தில் இரத்த வெள்ளத்தில் கிடந்த தன் நண்பனை பார்த்து மூச்சே நின்றுவிட்டது

 

-ஷேஹா ஸகி

Leave a Reply

error: Content is protected !!