am1

am1

ஆசை முகம் 1

 

பனிரெண்டாம் வகுப்பு தேர்வு நடைபெறுவதால் அந்தப் பள்ளி வளாகமே குண்டூசி விழும் சத்தம் கேட்குமளவிற்கு அமைதியாகக் காட்சியளித்தது.

இரண்டு மணி நேரம் அதேபோலத் தொடர்ந்திருந்த காட்சிகள், அடுத்து நேரம் செல்லச் செல்ல சற்றே மாறத் துவங்கியது.

விடுதியோடு இணைந்த பெண்கள் பயிலும் பள்ளி அது.

எழுதிவிட்டேன் என பேப்பரைக் கொடுக்க வேண்டி, ஒரு மாணவி எழுந்தபோது மணி சரியாக பனிரெண்டு.

அறைக் கண்காணிப்பாளர், “      ஃபிரண்ட் பேஜ் செக் பண்ணு!  உன்னோட நம்பர் கரெக்டா இருக்கானு பாரு!  குவஷின் நம்பர் சரியா போட்ருக்கியா! எல்லாம் எழுதிட்டியானு பாரும்மா!”. விரட்டினார்.

அடுத்த ஐந்தே நிமிடத்தில் மீண்டும் எழுந்து நின்றவளின் அருகே வந்தவர், “எல்லாம் அட்டெண்ட் பண்ணியா!”, என பேப்பரை வாங்கிப் பார்த்தார்.

சுமாராகத்தான் எழுதியிருந்தது அப்பெண்.

“ட்வெல்வ் தேர்ட்டி வரை வயிட் பண்ணு!”, என்றுவிட்டு அருகே இருந்த அறையின் கண்காணிப்பாளரைக் காண விரைந்தார்.

அடுத்த பத்து நிமிடத்தில் மீண்டும் வந்து, “த்தா பேப்பரை!”, என சரிபார்த்து வாங்கிக் கொண்டதுதான் தாமதம்.

அடுத்தடுத்து எழுந்த மாணவிகளைத் திகைப்போடு நோக்கினார்.

தேர்வை எப்டி எழுதினோம் என்பதே தெரியாத அளவிற்கு வீட்டிற்குச் செல்லும் வேட்கையில் பேப்பரைக் கொடுத்துவிட்டு வெளியேறுவதிலேயே குறியாக இருந்தனர், அவ்விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவிகள்.

அருகில் இருந்த ஆசிரியையின் கருத்தைக் கேட்டதும், தனது அறையில் பேப்பரைக் கொடுக்க வந்த மாணவியிடம், “ஏம்மா! வீடு எங்க போகப் போகுது!  ஆனா இந்த எக்சாம்தான் உங்க ஃபியூச்சரை டிசைட் பண்ணும்! அப்டியென்ன தலைபோற அவசரம்னு இத்தனை பேரும் அடுத்தடுத்து கிளம்பிப் போறீங்க!”, ஆச்சர்யத்தோடு கேட்டார்.

தேர்வைக் கண்காணிக்க வந்திருந்த வேறு பள்ளி ஆசிரியரிடம் பரிச்சயமில்லாததால், சிரிப்பை மட்டுமே பதிலாக்கிவிட்டு விரைந்தார்கள் மாணவிகள்.

“எப்பவும் இதேதான் இந்த ஸ்கூல்ல பண்ணுவாளுங்க!  வருசம் முழுக்க கஷ்டப்பட்டு படிச்சது எல்லாம் கடைசி எக்சாம் அன்னிக்கு மறந்துருவாளுங்க! ஒரே நினைப்பு வீட்டுக்குப் போறது மட்டுந்தான்!”, அருகே உள்ள அறையின் கண்காணிப்பு ஆசிரியை ஒருவர்.

“இது எப்படி உங்களுக்கு தெரியும்?”, அருகே உள்ள மற்றொரு அறையின் கண்காணிப்பு ஆசிரியரைப் பார்த்து வினவ

“இந்த ஸ்கூலுக்கு இதுக்கு முன்ன ஒரு முறை சூப்பர்வைசிங்கு வந்தப்போ, இதே கூத்துத்தான் பண்ணாளுங்க!  என்னடா இதுன்னு, ஒரு புள்ளைக்கிட்ட கூப்பிட்டுக் கேட்டேன்.  அப்பத்தான் இந்த விசயம் தெரிய வந்தது!”

ஆனால் விதிவிலக்காக மிகவும் சிரத்தையோடு எழுதிக் கொண்டிருந்தாள் அதே விடுதியில் தங்கிப் பயிலும் எழில்வாணி!

ஐந்தரை அடி உயரம்! ஒடிசலான ஆனால் அது தெரியாத தேகம்! சந்தன நிறம்! காண்பவரை ஒரு கனம் நின்று பார்க்கத் தூண்டும் முகவசியம்! அவரவர் வயதிற்கேற்ப அந்த முகவசியம் மிக்கவளைக் கொண்டாட எண்ணுமளவிற்கான பொலிவான தோற்றம்!

தாய், தகப்பன் அரவணைப்பின்றி வளர்ந்திருந்தாலும் அத்தனை பொலிவு!

எழில்வாணி பெயருக்கு ஏற்றாற்போல எழிலில் எந்தக் குறையுமின்றி, அந்தப் பிரம்மதேவனால் படைக்கப்பட்டவள். அதேபோல படிப்பிலும் புலி!

பள்ளிப் படிப்பு நிறைவடையும் வரை விடுதியிலேயே தங்கிப் படித்தவளுக்கு, வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றவுடன் சந்தோசம் எழவில்லை. மாறாக சங்கடமாகவே உணர்ந்தாள்.

கடந்த பத்து நாள்களாகவே விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவிகள் அவரவர் உடைமைகளை சேகரித்து, முறையாக அட்டைப் பெட்டிகளிலும், ட்ரங்க் பெட்டிகளிலும், சூட்கேஸ்களிலும் எடுத்து வைத்தபடி இருக்க, எதையும் செய்யாமல், படிப்பை மட்டுமே கவனத்தில் கொண்டு இருந்தவள் எழில் மட்டுமே.

அவளின் பரபரப்பற்ற தன்மை ஏனையோருக்கு ஆச்சர்யத்தை வரவழைத்திட, “ஏண்டி, ஊருக்குப் போறோம்கிற சந்தோசமே எப்பவுமே உனக்கு வராதா?”

“..”, எதுவும் பதில் பேசாமல் நடப்பவளை, வேற்றுக் கிரகவாசியைப்போல பார்த்தபடியே கடந்தனர்.

யாருடனும் நெருக்கமில்லை.

என்னவென்று கேட்டால், பதில் அவ்வளவே! அதுவும் படிப்பு சார்ந்த வினாக்களுக்கு மட்டுமே!

அதற்காக முசுடு அல்ல!

ஆனால் மற்ற மாணவிகள் அப்படித்தான் பேசிக் கொள்கின்றனர்.

“சரியான முரட்டு முசுடுடீ அவ! அவக்கிட்ட கேக்கறதுக்கு அந்த மரத்திட்ட போயி நீ பேசிருக்கலாம்!”

“என்னைக்காவது வாயத் திறந்து எதாவது பேசுறாளா! சரியான அமுக்குனிடீ அவ!”

“போயி, உம்புக்கில எதாவது சந்தேகம் கேளு, நம்ம டீச்சரையே மிஞ்சிருவா!”

“அது ஒரு புத்தகப் புழு! அதுக்கு புக்கை விட்டா வேற எதுவுமே தெரியாது!”, எள்ளலாகவும், கிண்டலாகவும் பேச்சுகள் பல வந்தாலும், எதற்கும் அசையவில்லை.

இதுபோல பேச்சுகளை கேட்டதாகவே காட்டிக் கொள்ளாமல் கடந்துவிடுவாள் எழில்.

யாருடனும் எந்த விவாதத்திற்கோ, விளையாட்டிற்கோ செல்ல என்றுமே விரும்பியதில்லை.

அதனால் இதுவரை தனது வீட்டு விசயங்களை யாரிடமும் பகிர்ந்து கொண்டதில்லை.

அவளுக்குள் நிறைய கேள்விகள் உண்டு. அதற்காக பாட நேரம் தவிர்த்து, ஏனைய நேரங்களில் நூலகத்தில் அடைந்து கிடப்பாள்.

‘என்ன புத்தகத்தை அப்டி எடுத்துப் படிக்கிறாள்!’ என்று அவ்வப்போது மற்ற மாணவிகள் அவளைக் கவனத்தோடு, கண்காணித்ததுண்டு,

கதை புத்தகம் மட்டும் என்றில்லாமல், பொதுக்கருத்துகள் கூறும் புத்தகங்கள், சங்க இலக்கியங்கள், சமூக ஆர்வலர்களின் புத்தகங்கள், பண்டைய தமிழக வரலாறு, இந்திய வரலாறு, உலக வரலாறு, ஆன்மிக தகவல்கள் என இன்னும் பட்டியல் நீளுமளவிற்கு ஒவ்வொரு முறையும் ஒரு புத்தகத்துடன் அமர்ந்திருப்பாள்.

புத்தகத் தேர்வு, அன்றைய அவளின் அப்போதைய மனநிலை சார்ந்தது!

ஓரளவிற்கு உலகைப் பற்றிய ஞானம் பெற, பொழுதுபோக்க, புத்தகம் உதவியது என்பதில் எழிலுக்கு மாற்றுக் கருத்தில்லை.

அவளின் நம்பிக்கை வாய்ந்த ஒரே துணை அது மட்டுமே!

தேடல் இருக்கிறது!

அவளின் கேள்விகளுக்கு விடை என்றாவது அதில் இருந்து கிடைத்துவிடும் என பெண் முழுமையாக நம்புகிறாள்.

எழில் தேர்வை எழுதி முடித்து வருவதற்குள், பலர் அவரவர் பெற்றோர் அல்லது காப்பாளருடன் விடுதியை விட்டே கிளம்பியிருந்தனர்.

இறுதித் தேர்வும் எழிலின் மனம்போல மனநிறைவாய் முடிந்தாயிற்று.

விடுதியை நோக்கிச் சென்றபோது வெறுச்சோடிக் கிடந்தது.

நிதானமாய் மதிய உணவை உண்டுவிட்டு, யாருமற்ற அந்த விடுதியில் ஒற்றையாய், அவளது பொருள்களை எடுத்து வைக்கத் துவங்கினாள்.

எழிலைப் பற்றி அறிந்திருந்தமையால், அவளை அழைத்துச் செல்ல, மாலை நான்கு மணிக்கு மேல்தான் முத்துரங்கன் வருவார்.

முத்துரங்கன் எழிலின் தாய்மாமா!

காப்பாளர்!

பாட்டி, தாத்தாவிற்குப் பின் அவளது பொறுப்பை தட்டிக் கழிக்காமல், மனமுவந்து ஏற்றுக் கொண்டிருந்தார்.

கடந்த வருடம் பிளஸ்டூ வகுப்புகள் துவங்கிவிட்டதால், ஒரு வாரம் மட்டுமே ஊருக்குச் செல்லும்படி நேர்ந்தது.

ஆனால் தற்போது தனது நிலையை எண்ணி அவளுக்கு வருத்தமே எழுந்தது.

இன்னும் இரண்டு மாதங்கள் அனைத்தையும் பொறுத்துக் கொண்டு அந்த வீட்டில் இருந்தே ஆக வேண்டிய கட்டாயம்.

எழில்வாணிக்கு வெறுப்பு மண்டிக்கிடக்க, காரணங்கள் நெஞ்சுக் குழிக்குள் கொட்டிக் கிடந்தது.

ஆனாலும் வேறுவழி இருக்கிறதா என்று யோசித்து ஓய்ந்து போனாள்.  எதற்கும் வழியில்லை.

அனைத்தையும் ஒழுங்குபடுத்தி எடுத்துவைத்து எழில் நிமிரும்போது மணி மூன்றே கால் ஆகியிருந்தது.

பள்ளிச் சீருடை மாற்றி, உடமைகளை எடுத்துக் கொண்டு கிளம்ப ஆயத்தமானாள்.

தேர்வினை நன்கு எழுதியிருந்தாலும், அதைப்பற்றி கேட்கவோ, பேசவோ, தான் எடுக்கும் மதிப்பெண்ணைக் கண்டு சிலாகிக்கவோ, தன்னை சீர்தூக்கவோ யாருமில்லாத இடத்திற்குச் செல்ல அறவே வெறுத்து வந்தது எழிலுக்கு.

மாமன் பெரும்பாலும் அலுவலகமே கதியென்றிருப்பார்.

கடமையாய் பெண்ணைப் படிக்க வைக்கிறார்.  கவனித்துக் கொள்கிறார்.  ஆனாலும் அவளின் எதிர்பார்ப்பு ஏதோ நிர்க்கதியாய் இருக்கிறது. 

அவளுந்தான்!

எழில் வீட்டில் தங்கும் அந்த சில நாள்களுக்கு வீட்டை அடை காப்பார்.  அவ்வளவே, பெண்ணை வெளியூர் அனுப்பிவிட்டால் பழையபடி மாறிவிடுவார்.

மாமன் வீட்டிற்குச் சென்றால், அத்தையின் வசவுகள் ஒருபுறம்.  மாமனின் அளவற்ற பாசம் மறுபுறம்.

மாமனின் மக்கள் இருவருமே எழிலைக் காட்டிலும் பெரியவர்கள்.

மணியாய் இருந்தாலும், தனக்காக எதுவும் பேச முன்வராத மாமன் மகன்கள்.

அவரவர் உண்டு, அவர் வேலையுண்டு என்றிருப்பர்.

——————-

முத்துரங்கன் மருமகளோடு வீடு நோக்கிப் பயணத்தைத் துவங்கினார்.

வீட்டிற்கு சென்றுவிட்டால் எழிலோடு இத்தனை இலகுவாகப் பேச இயலாது.

ஆகையால் செல்லும் வழியில், எழிலுக்கு மேற்கொண்டு என்ன படிக்க வேண்டும் என அவளது விருப்பத்தைக் கேட்டபடியே, “வீட்ல இருந்தே நம்ம ஊருப்பக்கத்தில இருக்கிற காலேஜ்கு போயிட்டு வரலாம்ல!”, மிகுந்த எதிர்பார்ப்போடு கேட்டார்.

“அங்க ஹாஸ்டல் ஃபெசிலிட்டி இல்ல மாமா!  இதேமாதிரி ஹாஸ்டல் இருக்கிற காலேஜா பாத்து சேந்துக்கறேன்!”

தற்போதுவரை அருகே உள்ள மாவட்டத்தில் உள்ள பள்ளியில் படித்து வந்தாள்.

“ம்ஹ்ம்…”, என சற்று நேரம் யோசித்தவர், மனைவியின் குணமறிந்தவராய், “நீ சொல்றதும் சரிதான்!  ஆனா இப்ப ஹாஸ்டல் இருக்கிற காலேஜா பாக்கணுமேம்மா! அப்ப தூரமா, வேற ஊருக்கில்ல உன்ன அனுப்பற மாதிரி இருக்கும்!”

“அதுக்கென்ன மாமா! நான் விசாரிச்சு வச்சிருக்கேன்.  ரெண்டு, மூனு காலேஜ்ல அப்ளை பண்ணி வைப்போம்.  கிடைக்கிற எடத்தில படிச்சிக்கிறேன்!”

பள்ளிப் பருவத்திலேயே உதவிக் கட்டணம் தரக்கூடியவற்றை ஆராய்ந்து, சில தேர்வுகளை எழுதி அதன் மூலம் வரும் கணிசமான வருவாயில்தான் இதுவரை படித்து வந்தாள் எழில்.

விடுதிக் கட்டணம் மட்டுமே முத்துரங்கனுக்கு.

“எப்பவும்போல இதையும் நீயே பாத்துக்கற!”, என மருமகளின் தலையை ஆட்டி, பெண்ணது சமயோசித புத்தியை ஆமோதித்தவர்

மேற்கொண்டு எழிலின் படிப்பிற்கு ஆகும் செலவினங்களுக்கு தான் என்ன செய்யலாம் என யோசிக்கத் துவங்கியிருந்தார் முத்துரங்கன்.

அதே சிந்தனைதான் பெண்ணுக்கும்!

………..

எழிலுக்கு, அவளின் தாய்வழி பாட்டி வீடுதான் அது.

அதனால் அங்கு வரும்போது, தனது தாயின் அறையில் தங்கிக் கொள்வாள்.

அறை மிகவும் சுத்தமாக இருந்தது.

எழிலுக்கு, அவளின் தாய் மற்றும் இதர விட்டுப்போன உறவுகளின் நினைவு வந்துவிடக் கூடாது என்பதால் அங்கு அவர்களது எந்த படங்களும் இல்லாமல் பார்த்துக் கொள்வார் முத்துரங்கன்.

அனைத்து உடமைகளோடு வந்தவளை முகம் சுருக்கிப் பார்த்த அத்தை சுகுணாவை, “அத்தை நல்லாயிருக்கீங்களா?”, என தானாகவே வலியச் சென்று நலம் விசாரித்தாள் எழில்.

இல்லையென்றால் அதற்கும் எதாவது கூறுவார்.

“ம்ஹ்ம்… சட்டி பொட்டியக் கட்டிக்கிட்டு வந்திட்டில்ல! இனி என்னத்தை நாங்க நல்லாயிருந்தோம்!”, என்ற சுகுணாவின் பேச்சில் முகம் வாடினாலும், அமைதியாக பதில் பேசாமல் உள்ளே சென்றுவிட்டாள்.

அவர் எப்பொழுதுமே அப்படித்தான்.  அதனால் எழிலுக்கு வருத்தம் எதுவும் வந்ததில்லை.

முத்துரங்கன் பின்னோடு வந்தவர், “வந்தவுடனேயே ஆரம்பிச்சிட்டியா?  உனக்கும் உம்பிள்ளைகளுக்கும் இந்த வீட்ல என்ன உரிமை இருக்கோ.  அதே உரிமை அந்தப் புள்ளைக்கும் இருக்கு!  அத மனசில வச்சி நடந்துக்கோ!  வந்தததும் வராததுமா உன் வேலையக் காட்ட நினைச்ச நான் மனுசனா இருக்க மாட்டேன்! ஆமா சொல்லிப்புட்டேன்!”, என காரமாகப் பேசிட

“இப்ப மட்டும் என்ன வாழுதாம்!”, என்றவர், “என்னத்தைச் சொன்னேன்.  வாயத் திறக்குமுன்னேயே இப்டி வள்ளுனு வந்து விழுறீங்க!”

“நீ சொன்னதையெல்லாம் கேட்டுட்டுத்தான் பேசறேன்!” என அடுத்தடுத்து வார்த்தைகள் நீள, அன்றே வீடு போர்க்களமாக மாறத் துவங்கியிருந்தது.

……………

அறைக்குள் சென்று அறையில் தனது பொருள்களை எடுத்து வைத்துவிட்டு, குளித்து முடித்து, அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தாள் எழில்.

வெளியில் பேச்சு சத்தம் மிக உச்சத்தில் சென்று படிப்படியாகக் குறைந்து வீடே அமைதியாக இருந்தது.

இரவு எட்டு மணியளவில், “எழிலு, வாம்மா சாப்பிட!”, என முத்துரங்கன் அழைத்ததுமே வெளியில் வந்தாள்.

சுகுணா சமையல்கட்டில் நுழையமாட்டேன் என தர்ணாவில் ஈடுபட, அன்று இரவு சமையல் முத்துரங்கன் என்றாகிப் போனது.

அதுவரை வெளியில் நடந்ததை அறிந்திராமையால் உண்ண வந்தவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

“அவளுக்கு நேரஞ் சரியில்லையாம்!  அதான் நானே சமைச்சேன்.  பாரு எல்லாம் நல்லாயிருக்கானு!”, மருமகளிடம் ஒரு தட்டை நீட்டினார்.

மாமனின் பேச்சில் அதிர்ந்தபடியே வாங்கிக் கொண்டவள், “ஏம்மாமா! அத்தைக்கு முடியலைனா என்னைக் கூப்பிட்டுருக்கலாம்ல!”

பெண்ணுக்கு அவளின் பாட்டி இருக்கும்போதே சமையல் பற்றிய நுணுக்கங்களை படிப்பித்திருந்தார்.

“இன்னிக்குத்தான் வந்த!  அதுக்குள்ள உன்னை அடுப்படிக்குள்ள விட்டா அம்புட்டுத்தான்! உஞ்சோலி அதுதான்னு பண்ணிருவா அந்த மூலி!”, என கிசுகிசுத்தவர், “இன்னும் அந்தப் பயலுக வரல!  நீயாவது நான் சமைச்சதை சாப்பிடு!  அவனுக அறவே வேணானு போயிருவானுங்க!”, என சோகமாக உரைத்திட

“நல்லா சமைச்சிருப்பீங்க மாமா.  இதைப் போயி யாராவது வேணானு சொல்லுவாங்களா?”, என்றபடியே வாயில் வைத்தவளுக்கு, வைத்த கவளத்தை முழுங்க முடியாமல் சிரமப்பட்டாள்.

இது எழில் வரும்போது அவ்வப்போது நடக்கக் கூடியதுதான்.  இருந்தாலும் சில நேரங்களில் நன்றாகவே செய்திருப்பார். ஆனால் இன்று ஏனோ ருசி காலை வாரியிருந்தது.

ஒருவழியாக உண்டதாகப் பெயர் பண்ணி எழவும், மாமனின் மூத்த மகன் இளமாறன் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.

“எப்ப எழில் வந்த?”, என ஆர்வமாய் அத்தையின் மகளைக் கண்ணில் நிறைத்தபடியே கேட்க

“ம்ஹ்ம்.. நஅஅ…”, என ஆரம்பிக்கும் முன்பே அலறல் சத்தம் சுகுணாவின் அறையிலிருந்து..

“ம்மாஆஅஅஅ….”, என்றபடியே மாறன் அறையை நோக்கி ஓட,

அதே நேரம் முத்துரங்கன், “மாறன் உங்கிட்ட வந்து பேசுனதும் அங்க அவளுக்கு எரிஞ்சிருக்கும்.  வெத்துச் சிறுக்கி! நாடகமாடுறா! அவளைப் பத்தி எனக்குத்தான் நல்லாத் தெரியும்!”, என இருந்த இடத்திலிருந்தபடியே அசையாமல் விட்டேத்தியாகக் கூறிக் கொண்டிருந்தார்.

ஆனால் மாமனின் பேச்சை நின்று கேட்டவள், எப்படி இருந்தால் என்ன என எழிலும் மாறனின் பின்னே சென்றிருந்தாள்.

அடுத்த அத்தியாயத்தில்…

 

Leave a Reply

error: Content is protected !!