Jeevan Neeyamma–Epi 3

171916099_840757923178210_3424615682123961255_n-ef3795ba

அத்தியாயம் 3

 

உனக்குப் பிடித்த வாசனைத் திரவியம் எதுவென கேட்டால், உன் மேனி வாசம்தான் என்பாள்! யாரவள்? என் ஜீவனவள்!

 

“ஏன்டா உன் தங்கச்சிய கூட்டிட்டு வந்த? பொம்பள புள்ளைங்கல எல்லாம் ஆட்டத்துல சேர்த்துக்க முடியாது போடா!” என தன் நண்பன் ஆறுமுகத்தைப் பார்த்து கத்திய ரஹ்மான் மீனாட்சியை வெறுப்பாகப் பார்த்தான்.

ரஹ்மானுக்கு மீனாட்சியைக் கண்டால் ஆகவே ஆகாது. அடிக்கடி அவனது வகுப்பறையின் ஜன்னல் அருகே வந்து நின்று இவன் அருகில் அமர்ந்திருக்கும் தனது அண்ணன் ஆறுமுகத்துக்கு தாளில் செய்த ராக்கேட்டை விடுவாள். அது அடிக்கடி இவனையும் குத்தி விட்டுப் போகும். ஆறுமுகம் திரும்பி தங்கையைப் பார்ப்பான். அங்கே கண்ணெல்லாம் கலங்கிப் போய் நின்றிருப்பாள் சின்னவள். பெருமூச்சுடன்,

“ரஹ்மானு!!!” என அழைப்பான்.

“என்னடா? இப்ப என்னவாம்? ரப்பரா பென்சிலா?” என கடுப்பாக கேட்பான் ரஹ்மான்.

பென்சிலை அடிக்கடி தொலைத்து விடுவாள் மீனாட்சி. ரப்பரும் அவளிடம் தங்காது. அது என்னவோ அம்மா செய்து கொடுக்கும் பலகாரங்களை விட ரப்பரைக் கடித்து சாப்பிடுவது அவளுக்கு ருசியாய் இருந்தது போல.

“ரெண்டையும் குடுடா! அப்பா புதுசு வாங்கியாந்தா ஒனக்குத் திருப்பிக் குடுத்துடறேன்!” என்பான் ஆறுமுகம்.

அவனிடமும் பென்சில், ரப்பர் ஒன்று தான் இருக்கும். தங்கைக்கு இன்னொன்று கொடுக்க அவனும் எங்கு போவான்! ரஹ்மான் அவனது பொருட்களை பத்திரமாக வைத்திருப்பான். அவன் அப்பா வீட்டில் பென்சில், ரப்பர், கலர் பென்சில், ரூலர் என மொத்தமாக வாங்கி வைத்திருப்பார். அதோடு இதையெல்லாம் வைத்துக் கொள்ள அமீனா அழகாக பென்சில் கேஸ் தைத்துக் கொடுத்திருந்தார். தன்னிடம் இருக்கும் எஸ்ட்ரா பென்சிலையும் ரப்பரையும் எடுத்து நண்பனிடம் கொடுப்பான் ரஹ்மான்.

“திருப்பிலாம் ஒன்னும் குடுக்க வேணா! உன் பாப்பா கிட்ட இனிமே ஒழுங்காப் பார்த்துக்க சொல்லிக்குடு போதும்”

“என்னடா புது பென்சில் குடுக்கற! நீ பாவிச்சது குட்ரா”

“மத்தவங்களுக்கு உதவின்னு ஒன்னு செய்யறப்ப நல்லதா செய்யனும்னு எங்க ஆயா(இது மலாயில் அப்பாவைக் குறிக்கும். பாப்பா எனவும் அழைப்பார்கள்) சொல்லிக் குடுத்திருக்காரு. போய் குடு போ” என்பவன் ஜன்னலோரம் நிற்கும் சின்னவளை முறைத்துப் பார்ப்பான்.

பென்சிலைக் காணோம் என வாத்தியார் அடித்ததில் அழுதபடி நின்றாலும், தன்னைப் பார்த்து முறைக்கும் ரஹ்மானுக்கு நாக்கைத் துருத்தி அழகு காட்ட மறப்பதில்லை இவள்.

“சைத்தான்!” என கோபத்தில் முனகிக் கொள்வான் இவன்.

அதனாலேயே மீனாட்சியை அறவேப் பிடிக்காது ரஹ்மானுக்கு.  

அந்த எஸ்டேட்டில் இருக்கும் திடலில் தான் பையன்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து விளையாடுவார்கள். பெண் பிள்ளைகள் வீட்டின் அருகிலேயே சடுகுடு, கிட்டிப்புள்(இங்கே கவுன்டா கவுன்டி என்பார்கள்), ஒத்தை ரெட்டை என விளையாடுவார்கள். காபி தோட்டத்தில் இருந்து சீக்கிரம் வந்துவிடும் நாட்களில் முருகனும் ஆறுமுகமும் திடலுக்கு வந்து பையன்களோடு விளையாட்டில் சேர்ந்துக் கொள்வார்கள். மீனாட்சியோ களிமண்ணில் சட்டிப் பானை செய்வது, கோழியைத் துரத்திப் பிடித்து விளையாடுவது என தன் தாயின் கண் பார்வையில் தான் விளையாடிக் கொண்டிருப்பாள்.

அன்று அவர்கள் சொந்தத்தில் பூப்படைந்த பெண்ணுக்கு சடங்கு சுற்றும் வைபவம் இருந்தது. அதற்கு மாமியார் மருமகள் இருவரும் சென்றிருந்தனர். இந்த மாதிரி நிகழ்வுகளுக்கு வயதுக்கு வராத பெண் பிள்ளையை அழைத்துப் போகக் கூடாது என ராக்கு சொல்லிவிட்டதால், அண்ணன்கள் இருவரின் பொறுப்பாகிப் போனாள் மீனாட்சி.

“வீட்டுல இவள ஒண்டியா விட்டுட்டு வெளையாட வந்தா எங்கம்மா என் தோலை உரிச்சு உப்புத் தடவிடுவாங்கடா! அதான்டா கூட்டிட்டு வந்தேன். ப்ளிஸ்டா ரஹ்மானு!” என நண்பனிடம் கெஞ்சினான் ஆறுமுகம்.

முருகன் அன்போடு கொஞ்சம் கண்டிப்பையும் காட்டுவதால் அவனோடு அதிகம் ஒட்ட மாட்டாள் மீனாட்சி. அவளை பாப்பா என அழைத்து பாசமாய் பார்த்துக் கொள்ளும் ஆறுமுகத்தின் பின்னாலேயேத்தான் சுற்றுவாள் அவள்.

அவர்கள் யாரிடமும் இல்லாத டென்னிஸ் பந்து ரஹ்மானிடம் இருப்பதால் அவன் தான் அவர்களின் குழுவுக்குத் தலைவன். டென்னிஸ் பந்து, காற்பந்து, படபடவென சத்தம் போடும் துப்பாக்கி, சின்னதாய் பச்சை வர்ணத்தில் இருக்கும் சிப்பாய் பொம்மை செட் என பல விளையாட்டுப் பொருட்கள் வைத்திருந்தான் ரஹ்மான். நண்பர்களிடம் கொண்டு வந்து காட்டி பெருமை அடித்தாலும், தொட்டுப் பார்க்கவும் விளையாடவும் அனுமதிப்பான் அவன். அதனாலேயே அவன் சொல்வதுதான் சட்டம் அவர்களின் குழுவில். முருகன் இவர்களோடு சேராமல் அவன் வயது பையன்களுடன் விளையாடப் போய் விடுவான்.

“டேய் ரஹ்மானு! வேளாட்டுல சேர்த்துக்கோடா என்னை” என கெஞ்சினாள் மீனாட்சி.

அவள் அம்மாவும் பாட்டியும் இல்லாத நாட்களில் தான் இப்படி ஆறுமுகத்துடன் வரமுடியும் அவளால். மற்ற நாட்களில் வீட்டை சுற்றியேத்தான் விளையாடுவாள். டென்னிஸ் பந்தைத் தொட்டு விளையாடும் ஆர்வம் அவள் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.

“உங்கண்ணனை மாதிரி நெனைச்சு டேய், வாடா, போடா சொன்ன அடிச்சிடுவேன் பாத்துக்கோ!” என கையை ஓங்கினான் ரஹ்மான்.

எங்கே அடித்து விடுவானோ என கண்களை இறுக்க மூடிக் கொண்டாள் சின்னவள். யாரையும் கை நீட்டி அடிக்கக் கூடாது என தாய் சொல்லிக் கொடுத்தது நினைவு வர, ஓங்கிய கையை சட்டென கீழே இறக்கினான் ரஹ்மான்.

“போய் உங்கண்ணா கேங்ல சேந்துக்கோ” என வேண்டா வெறுப்பாக விளையாட்டில் சேர்த்துக் கொண்டான் அவளை.

பந்தால் டின்னை அடிக்கும் இந்த விளையாட்டுக்கு பந்தை எறிபவர்கள், பந்தைப் பிடிப்பவர்கள் என இரண்டு குழுக்கள் வேண்டும். முதலில் கீழே ஐந்து, அதற்கு மேல் நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று என பால் டின்களை அடுக்க வேண்டும். பந்தௌ எறியும் குழுவில் ஒருவர் தூரத்தில் இருந்து எல்லா டின்களையும் பந்து கொண்டு அடித்து சாய்க்க வேண்டும். எல்லா டின்னும் சாய்ந்து விட்டால் எறிந்தவர் அணியினர் சீக்கிரமாக மறுபடி டின்களை அடுக்க வேண்டும். பந்தைப் பிடிக்கும் குழுவினர் அந்தப் பந்தைக் கைப்பற்றி எறிந்த குழுவில் உள்ளவர்களை தாக்கி விட்டால், பந்துப் பட்டவர், விளையாட்டில் இருந்து விலக்கப்படுவார். இப்படியே எல்லோரும் அவுட்டாகும் வரை விளையாட்டுப் போய் கொண்டே இருக்கும். ஓடி, ஒளிந்து, கத்தி, அடித்துப் பிடித்து ஆர்ப்பாட்டமாய் விளையாடுவார்கள் இந்த கேமை. ரஹ்மான் டென்னிஸ் பந்து கொண்டு வரும் வரை செறுப்பைத்தான் பந்தாக பயன்படுத்தி விளையாடினார்கள் அனைவரும்.

முதலில் ரஹ்மானின் அணி பந்தை எறிய ரெடியானார்கள். தலைவனாக ரஹ்மான் தான் பந்தை எறிந்தான். அவன் பந்து வீச்சில் எல்லா டின்களும் கீழே விழுந்தன. புயல் போல் ஓடி பந்தைக் கைப்பற்றிய மீனாட்சி, பட்டென பந்தை ரஹ்மான் மேல் வீசி அவனை முதல் ஆட்டத்திலேயே அவுட்டாக்கினாள். இவள் சந்தோஷத்தில் கைத்தட்டி குதித்து ஆர்ப்பாட்டம் செய்ய, மற்ற எல்லோரும் கப்சிப்பென அமைதியாக இருந்தனர்.

“பாப்பா, ஏன்டி அவன அவுட்டாக்குன? அவன் கோச்சிக்கிட்டு பந்தை எடுத்துக்கிட்டு வீட்டுக்குப் போயிட்டா எப்படிடி வெளைடாறது? கிறுக்கச்சி!” என தங்கையை மெல்லக் கடிந்துக் கொண்டான் ஆறுமுகம்.

“பந்து அவனதுனா, அவன் என்ன பெரிய இவனா!” என சிலிர்த்துக் கொண்டாள் இவள்.

ரஹ்மானோ ஆத்திரத்தில் கொதித்துக் கொண்டு இருந்தான்.

“பாபீ பெத்தூல்!”(பன்னி என திட்டுவது)

அந்த வார்த்தையைப் பயன்படுத்தவேக் கூடாது அவன். அவர்கள் இனத்தில் பன்றி இறைச்சியை உண்ண மாட்டார்கள். அது ஹராம்(மலாய் வார்த்தை—பூமி அழியும் சூழ்நிலை வந்து உயிர் வாழ உணவே இல்லாமல் போனால் மட்டுமே அதை உண்ண முடியும் என அவர்கள் வேதம் சொல்கிறது). அந்த வார்த்தையை இவன் சொன்னான் என தெரிந்தால் பொறுமையாக போகும் அப்துல்லாவே மகனின் வாயில் மிளகாயை வைத்துத் தேய்த்துவிடுவார்.

அவன் கோபத்தைப் பார்த்த மற்ற தோழர்கள், அவன் அவுட் இல்லை. மீனாட்சி செய்ததுதான் தப்பு என தீர்ப்பளித்தார்கள். ஆகவே அவளை விளையாட்டில் இருந்து ஒதுக்கி வைத்தார்கள். இவளுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

“பாப்பா! இங்கயே ஓரமா உட்காரு! இன்னும் ரெண்டு செட் முடிஞ்சதும் வீட்டுக்குப் போகலாம்” என தங்கையை சமாதானப் படுத்தி அமர வைத்தான் ஆறுமுகம்.

மீண்டும் விளையாட்டில் சேர்ந்துக் கொண்ட ரஹ்மான் மிதப்பாக மீனாட்சியைப் பார்த்தான். அவனை முறைத்தப்படியே அமர்ந்திருந்தாள் அவள். கண்களில் கண்ணீர் முட்டி நின்றது. இரண்டு கையிலும் எதையோ வைத்து தேய்த்தப்படி இருந்தாள். இரண்டு செட் ஐந்தாக ஆனது. பொறுமையாக ஆட்டத்தைப் பார்த்தப்படி அமர்ந்திருந்தாள் சின்னவள். பந்து அவள் அருகே வந்து விழ, அதை எடுக்க வந்தான் ரஹ்மான். அவளை நெருங்கி குனிந்தவன்,

“அடோய்!!!!!!!!!!!” என ஒற்றைக் காலைத் தூக்கியபடி அலறினான்.

அவனைப் பார்த்து,

“என் கிட்ட வச்சிக்காதடா ராங்கிப் புடிச்ச ரஹ்மானு!” என கத்தியபடி ஓடியே போய் விட்டாள் மீனாட்சி.

கண்கள் கலங்கிப் போக அப்படியே கீழே அமந்து விட்டான் இவன். ரஹ்மான் அருகே ஓடி வந்த ஆறுமுகம் கண்டது கொப்பளித்துப் போயிருந்த அவனது தொடையைத்தான்.

“வச்சிட்டாளா சூடு! திமிர் புடிச்ச கழுதை! இவளுக்கு இதே வேலையாப் போச்சு!” என்று வெகுண்டவன், எச்சிலை கையில் துப்பி நண்பனது தொடையில் தேய்த்து விட்டான்.

“கொஞ்ச நேரத்துல வலி நல்லாப் போயிடும்டா! அழாதே! அவள வெளுத்துடறேன் இன்னிக்கு”

“யாரு நீ? உன் தங்கச்சிய வெளுக்கப் போற? நீ ‘தட்டிப் பார்த்தேன் கொட்டங்கச்சின்னு’ தங்கச்சிப் பாசத்துல பாடிட்டுத் திரியறவன்! நீ அவள அடிக்கப் போறியா? போடா போடா!” அந்த வலியில் கூட நண்பனை பார்த்து நக்கலடித்தான் ரஹ்மான்.

அவன் சொன்னதில் அசடு வழிந்தான் ஆறுமுகம்.

ரப்பர் மரத்தில் இருந்து விழும் ரப்பர் கொட்டைகளை சேகரித்து ஒத்தை ரெட்டை விளையாட்டுக்கோ, பல்லாங்குழி விளையாடவோ பயன்படுத்துவார்கள் எஸ்டேட் பிள்ளைகள். மீனாட்சியோ யார் மேலேயாவது கோபம் இருந்தால், அந்த ரப்பர் கொட்டையை, பாவாடை பாக்கேட்டில் வைத்திருக்கும் சின்ன கல்லில் சூடு வர உரசி, மற்றவர் உடம்பில் தேய்த்து விடுவாள். அது பட்டால் தோல் கொப்பளித்துப் போகும் அல்லது சிவந்துப் போகும். அவ்வளவு வீரியமானது அது. அதைக் கொண்டு தான் ரஹ்மானுக்கு சூடு வைத்து விட்டு பறந்திருந்தாள் அந்த சேட்டைக்காரி.

முருகன் திட்டி விட்டான் என ஒரு தடவை அவனுக்கு இவள் சூடு வைக்க, ஈஸ்வரி மகளை அடி வெளுத்து விட்டார். அடி வாங்கியும் அடங்கவில்லை அவள்.

அந்த தரமான சம்பவத்தோடு அன்று அவர்களின் விளையாட்டு நேரம் முடிந்துப் போனது. நண்பனின் அருகில் அமர்ந்து அவன் தொடையை ஊதி விட்டான் ஆறுமுகம்.

“சாரிடா ரஹ்மானு!” என சொன்னபடியே இருந்தான் ஆறுமுகம்.

“விடுடா! இப்போ வலிக்கல! ஆனா என்னைக்காச்சும் என் கிட்ட செம்மையா வாங்கப் போறாடா உன் தங்கச்சி!”

“டேய் ரஹ்மானு! என் தங்கச்சி மேல கைய வச்ச, ஒனக்கு மொத எதிரி நான்தான்டா” என சிரிப்புடன் சொன்னான் அண்ணன்காரன்.

“அதையும் பார்ப்போம்டா!” என சிரித்தவன்,

“ஆறு! நீ எச்சித் துப்பி சூட்டுக் காயத்துல வச்சப்போ எனக்கு ஒரு பாட்டு ஞாபகம் வந்திடுச்சுடா” என்றான்.

“என்ன பாட்டுடா ரஹ்மானு?”

“யே மச்சி

அவ துப்புனா எச்சி” என ரஹ்மான் பாட,

எழுந்து நின்று மீத பாடலை ஆடியபடியே பாடினான் ஆறுமுகம்.

“நீங்க கல்லூரி பொண்ணுங்களா

இல்லை கஸ்தூரி மானுங்களா?”

ஆறுமுகத்தோடு அவனது மற்ற கூட்டாளிகளும் சேர்ந்துக் கொள்ள, ஒரே ஆட்டம் பாட்டமாக மாறிப் போனது அந்த இடம்.

அன்று ரஹ்மானைக் குளிக்க வைத்த அமீனா கொப்புளித்துப் போன காயத்தைப் பார்த்து பதறிவிட்டார்.

“என்னடா தம்பி இது?”

“இன்னைக்கு ரப்பர் கொட்டை வச்சு வெளாடுனோம் ஈபூ! அதுல காயம் பட்டிருச்சு”

“பார்த்து வெளையாடனும்பா! இந்த மாதிரி காயமெல்லாம் பட்டுக்கிட்டு வந்தீனா, இனிமே வெளையாடவே போக வேண்டாம்”

“இல்ல ஈபூ! இனிமே இப்படிலாம் ஆகாது” என தன் அன்னையைக் கெஞ்சி கொஞ்சினான் ரஹ்மான்.

மகன் உடை உடுத்தி வந்ததும் அவனது காயத்துக்கு மருந்து போட்டு விட்டவர், அவனை கடிந்துக் கொள்வதை மட்டும் நிறுத்தவில்லை. அம்மாவை இறுக்கமாய் கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தம் பதித்தவன்,

“மாஹாப் ஈபூ!”(மன்னித்து விடுங்கள் அம்மா) என பல முறை சொன்னான்.

நண்பன் தங்கையின் வேலை என சொன்னால், அவர்களோடு விளையாடவே போகக் கூடாது என சொல்லி விடுவாரோ என உண்மையை மறைத்தான் ரஹ்மான். வேதத்தில் பொய் சொல்வது தப்பு என இருக்க, தன்னைப் பொய் சொல்ல வைத்த மீனாட்சியின் மேல் இன்னும் கோபம் கூடியது அவனுக்கு.

“குட்டி சைத்தான்!” என மனதினுள்ளே அவளைத் திட்டித் தீர்த்தான் அவன்.

அங்கே மீனாட்சியின் வீட்டில், மாலையில் கறந்துக் கொண்டு வந்திருந்த பாலை சுண்டக் காய்ச்சிக் கொண்டிருந்தார் ஈஸ்வரி. காய்ச்சியப் பாலை குவளையில் ஊற்றி வைத்து விட்டு ராக்கு கூப்பிடுகிறார் என கோழிகளை அடைத்து வைக்கும் இடத்துக்கு சென்றிருந்தார் அவர். கமுக்கமாக பூனை நடையிட்டு அடுப்பருகே போன மீனாட்சி, பால் காய்ச்சியப் பானையை கையில் எடுத்துக் கொண்டு தரையில் சம்மணம் இட்டு அமர்ந்தாள். சுற்றி முற்றிப் பார்த்தவள், அதில் கைவிட்டு பானையின் அடியில், ஓரத்தில் எல்லாம் அப்பிக் கிடந்த பாலாடையை வழித்து சாப்பிடலானாள்.  

அவளருகே வந்த முருகன் நங்கென தலையில் கொட்டினான்.

“அப்பா!!!!!!” என கத்தியவளின் வாயைப் பொத்தியவன்,

“எருமைகடா! இன்னிக்கு என்னோட முறை தானே! நேத்து அழுது அழிச்சாட்டியம் பண்ணி ஆறுமுகத்துகிட்ட இருந்து பானையைப் புடுங்கிகிட்ட. இன்னிக்கு எனக்குத் தெரியாம திருட்டுப் பூனை மாதிரி வழிச்சு நக்கிட்டு இருக்கியா?” என கண்ணை உருட்டி கோபப்பட்டான்.

அந்த வீட்டில் பால் காய்ச்சிய பானையை வழித்து சாப்பிட அட்டவணை உண்டு. ஒரு நாள் ராக்குவுக்கு, ஒரு நாள் முருகனுக்கு, ஒரு நாள் ஆறுமுகத்துக்கு, மற்ற நாட்கள் எல்லாம் மீனாட்சிக்குத்தான். அப்படி இருந்தும் தில்லுமுள்ளு செய்து இப்படி மாட்டிக் கொள்வாள் இந்தக் குட்டிக் கேடி!

சமையல் கூடத்துக்கு வந்த ஈஸ்வரி கண்டது அழுது கொண்டிருந்த மகளையும், மிரட்டிக் கொண்டிருந்த மகனையும்தான்.

“ஏன்டா பெரியவனே, தங்கச்சிய அழ விடற! அப்பா வர நேரமாச்சுடா! இவ கண்ணைக் கசக்கிட்டு இருந்தா அம்புட்டுத்தான், கச்சேரி இல்லாமலே பரதநாட்டியமாடிருவாரு!” என மகனை கண்டித்தவர்,

“சும்மா கண்ணைக் கசக்கக் கூடாதுடி மீனு! பொண்ணுங்க கண்ணீரு விலை மதிக்க முடியாத பொக்கிஷம் அத சும்மா சும்மா தொறந்து விட்டா, அதுக்கு மதிப்பேயில்லாம போயிடும்! என் ராசாத்தில்ல, போ, போய் மூஞ்ச கழுவிட்டு வா! அம்மா பாலுல நெறைய சீனி போட்டு அப்பாவோட ஹோர்லிக்சு கொஞ்சம் கலந்து தரேன்!” என மகளைப் பார்த்து சொன்னார்.

ஹார்லிக்ஸ் என்றதும் கண்ணீர் பட்டென நிற்க, முகம் கழுவ ஓடினாள் சின்னவள்.

“பெரியவனே, நம்ம வீட்டு மகாலெட்சுமிடா அவ! அவ கண்ணுல ஒரு துளி கண்ணீரு வந்தாலும் துடிச்சுப் போகனும், அதான் ரத்த உறவு! அத விட்டுப்புட்டு நீயே அழ வைக்கலாமா? அண்ணன்னா தப்பு செய்யறப்ப அடிக்கறதுக்கு மட்டும் இல்ல, அன்பு காட்டனும், அரவணைச்சுக்கனும், கலங்கி நிக்கறப்போ ஆதரவு தரனும். எங்க காலத்துக்கு அப்புறம் நீங்க ரெண்டு பேரும் தூணா நின்னு அவள தாங்குவீங்கன்னு கனவு காணறோம் நானும் உங்கப்பாவும்! எங்க கனவுல மண்ணைப் போட்டுறாத ராசா”

“ம்மா! கோபத்துல கொட்டிப்புட்டேன்மா! இனிமே அப்படி செய்யமாட்டேன்மா!” என குரல் உடைய பேசியவனை அணைத்துக் கொண்டார் ஈஸ்வரி.

“என்ன, அம்மாவும் மவனும் ஒரேடியா கொஞ்சிக்கறீங்க!” என கேட்டப்படியே வந்தார் அழகு.

“நீங்க ஒங்க மகள கொஞ்சற அளவுக்கெல்லாம் இங்க யாரும் கொஞ்சிக்கல!” என நொடித்துக் கொண்டார் ஈஸ்வரி.

அதற்குள் முகம் கழுவி விட்டு ஓடி வந்த மீனாட்சி, தகப்பனைப் பார்த்து,

“யப்பா, பெரியண்ணா…” என வத்தி வைக்கப் போக, அவள் கையைப் பிடித்து,

“உள்ளுக்கு மேசையில ஹார்லிக்ஸ் வச்சிருக்கேன் பாரு” என திசைத் திருப்பி விட்டார் ஈஸ்வரி.

முருகன் அப்பொழுதுதான் நிம்மதியாய் மூச்சை இழுத்து விட்டான். உள்ளே ஓடியவன், தான் ஒளித்து வைத்திருக்கும் புளிப்பு மிட்டாயை தங்கையிடம் லஞ்சமாய் கொடுத்து தந்தையின் கண்டனத்தில் இருந்து தப்பித்தான் அன்று.

மீனாட்சியை சுற்றி சுழன்றது இவர்களின் உலகம்.

ரஹ்மானை மையமாய் வைத்து நகர்ந்தது அவர்களின் உலகம்.

இந்த இரு உலகங்கள் மோதிக் கொண்டால் என்னவாகும்????

 

(ஜீவன் துடிக்கும்…)

 

(ஒவ்வொரு எபிக்கும் நான் கடந்து வந்த எஸ்டேட் வாழ்க்கையில சந்திச்ச சுவாரசியமான விஷயங்கள போட்டோ போடற மேய்ன் பேஜ்ல பகிர்ந்துக்க முயற்சி செய்யறேன்.  எல்லாத்தையும் கதையில நுழைக்க முடியாது. டாக்குமென்டரி மாதிரி ஆகிடும் அப்புறம். போன எபிக்கு லைக், காமேண்ட் போட்ட அனைவருக்கும் நன்றி. லவ் யூ ஆல். ஸ்டே சேப்)