Nee Enaku Uyiramma–EPI 2

Nee Enaku Uyiramma–EPI 2
அத்தியாயம் 2
“சைனா ஊரு மண்ணு எடுத்து
இந்தியால இருந்து தண்ணிய விட்டு
சேர்த்து சேர்த்து செஞ்சதிந்த பொம்மை
இந்த பொம்மை ஒரு நாறிப் போன பொம்மை” எனும் கணீர் குரலுக்குப் பின்,
“தந்தானே தந்தானே தந்தானக் குயிலே
சாமி தந்தானே தந்தானே இந்த பன்னாடை பயலே!” என பல குரலில் கோரஸ் கேட்டது.
அந்தப் பாட்டுச் சத்தத்தில் பல்லை நறநறவென கடித்தான் நேதன். நிமிர்ந்து மேல் மாடியைப் பார்க்க அங்கே ஆள் நடமாட்டமே இல்லை. குரலை வைத்தே அது அம்சவேணியும் அவள் கேங்கும் தான் என கண்டுக் கொண்டான் அவன்.
அம்சவேணி அந்தப் பள்ளியின் ரவுடி சங்கத் தலைவி. டை அடித்து ஏற்றிக் கட்டிய குதிரை வால் முடிதான் அவளது ப்ளஸ் பாயிண்ட். கூந்தலுக்கு டை அடித்துப் பள்ளிக்கு வரக்கூடாது என சட்டம் இருக்க, அந்த ப்ரவுன் வர்ணம் அவர்கள் மூதாதையர் யாருக்கோ இருந்தது தனக்கும் பரம்பரையாக வந்திருக்கிறது என சாதிப்பாள். டிசிப்ளின் டீச்சர் அவள் முடியை பல தடவை வெட்டி விட்டும், மறுபடி மறுபடி டை அடித்துக் கொண்டுதான் வருவாள். ஒல்லியான உடல்வாகு, முட்டைக் கண், மாநிறத்துக்கும் கொஞ்சம் குறைவான நிறம், நெடு நெடுவென வளர்த்தி, எதற்கும் அஞ்சாதவள், சண்டை சச்சரவு என்றால் அலாதி பிரியம். இதுதான் நம் அம்சவேணி. ஐந்தாம் படிவத்தின் கடைசி கிளாசில் இருந்தாள் அவள்.
பல தடவை பள்ளியை விட்டு நீக்குவதற்காக பல ஆசிரியர்களால் பரிந்துரைக்கப்பட்டும், உடற்பயிற்சி ஆசிரியரின் தயவால் இன்னும் பள்ளியில் நிலைத்து நிற்கிறாள். படிப்பு இவளிடம் வரமாட்டேன் என ஓட்டம் பிடித்தாலும், ஓட்டப் பந்தயம் இவளை உடும்புப் பிடியாய் பிடித்துக் கொண்டது. பள்ளியை பிரதிநிதித்து தடகள போட்டிகளில் பங்கெடுத்து பல வெற்றிக் கோப்பைகளை அசால்ட்டாய் தட்டி வருவாள் இவள். அதனாலேயே அவள் செய்யும் சில பல அட்டகாசங்களைப் பொறுத்து போனது அந்தப் பள்ளி.
இதில் ஹெட் ப்ரிபேக்டாக (தலைமை மாணவன்) இருக்கும் நேதனுக்கும் அம்சவேணிக்கும் அடிக்கடி மாட்டிக் கொள்ளும். பள்ளி அசெம்பளி முடித்து திடிரென ஸ்பாட் செக் வைப்பார்கள். அதற்கு தலைமைத் தாங்குபவன் இவன் தான். நகங்களை கூர்மையாக வளர்த்து, நகச்சாயம் வேறு பூசி இருக்கும் நம் அம்சாவுக்கு இந்த ஸ்பாட் செக் என்றாலே அலர்ஜி. தனது முறை வருவதற்குள் அவசர அவசரமாக நகத்தைக் கடித்துத் துப்ப ஆரம்பிப்பாள். அவள் மேலேயே கண் வைத்திருக்கும் இவன், டிசிப்ளின் டீச்சரிடம் காட்டிக் கொடுத்து விடுவான். அவர் அம்சாவின் அம்சமான விரல்களில் மர ரூலராலே நன்றாய் போடுவார்.
“வலிக்குது சார், வலிக்குது சார்” என ஒவ்வொரு அடிக்கும் இவள் கத்துதைப் பார்த்து நமுட்டு சிரிப்பு சிரிப்பான் நேதன்.
“டேய் டிஷூ பேப்பர், இன்னிக்கு உன் சைக்கில பஞ்சர் ஆக்கல என் பேரு வேணி இல்லடா!” என அவன் அருகே போய் மிரட்டி விட்டுப் போவாள் இவள்.
அந்தக் காலகட்டத்தில் சீனர்கள் பலர் கழுவ வேண்டியதைக் கழுவாமல் டிஷூ பேப்பரில் துடைத்து விட்டுப் போவார்கள் என பரவலாக நம்பப்பட்டது. அவர்களை அவமானப் படுத்த இந்தியர்கள் மற்றும் மலாய்காரர்கள் அந்த வார்த்தையை சொல்லிக் கேலி செய்வார்கள். பல இனங்கள் மலேசியாவில் கூடி வாழ்ந்தாலும், இந்த மாதிரி ஒருத்தரை ஒருத்தர் இன்சல்ட் செய்துக் கொள்வது இங்கு வழமையே. சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தையிடம், இந்தியர்களிடம்(மலேசிய தமிழ், தெலுங்கு, மலையாள மக்களை இந்தியர்கள் எனதான் அழைப்பார்கள்) பிடித்துக் கொடுத்து விடுவேன் என சீனர்கள் மிரட்டுவதும் (நாம் கலர் கொஞ்சம் குறைவாக இருப்போமே, அதனால்தான்) இங்கே சகஜமாக நடக்கும் நிகழ்வு.
அந்த இரண்டு மாடி பள்ளி கட்டிடத்தில் வலது மூலையிலும் இடது மூலையிலும் படிக்கட்டுக்கள் இருந்தன. குரல் இடது பக்கம் இருந்து வர, இவன் சத்தம் செய்யாமல் வலது பக்கமாக படி ஏறி மெல்ல அவர்களை நோக்கி நடந்தான். காரிடர் சுவர் மறைத்திருக்க, கீழே குத்துக்கால் இட்டு அமர்ந்து அவளும் அவளது அடிபொடியும் இன்னும் இன்னும் அவனை பல கெட்ட வார்த்தைகளால் அர்ச்சித்துக் கொண்டிருந்தனர். வேகமாய் அவர்களை நெருங்கியவனின் காலடி சத்ததில் தெறித்து ஓடினர் அவளின் கூட்டாளிகள். ஓட முயன்ற வேணியின் வலது கையைப் பிடித்துக் கொண்டவன், அவள் தலையிலேயே நொங்கு நொங்கென கொட்டினான்.
“திமிர் புடிச்சவளே! நான் நாறிப் போன பொம்மையா? சொல்லுவியா, இனிமே சொல்லுவியா?” என கேட்டப்படியே கொட்டினான்.
“சொல்லுவேன்டா! கண்டிப்பா சொல்லுவேன்! எங்க வழியில வராம ஒதுக்கிப் போய்டு. அதான் உனக்கு நல்லது! இல்லைனா போன தடவை உன் சைக்கில பஞ்சர் பண்ண மாதிரி, இந்த தடவை உன்னையே பஞ்சர் பண்ணிடுவோம்.”
“நீ பஞ்சர் பண்ணற வரைக்கும் நாங்க பூப்பறிச்சுக்கிட்டு இருப்போமா? இனிமே ரிசஸ் டைம்ல என் பேக்ல தவக்களையப் புடிச்சுப் போடறது, என்னோட நோட்ஸ கிழிச்சு வைக்கிறது, வாட்டர் பாட்டில்ல இங்க் கொட்டி வைக்கிறதுன்னு சின்னப்புள்ளத்தனமா எதாச்சும் செஞ்சு வை, மூஞ்சுரு மாதிரி இருக்கற மூஞ்சுல கீறல் போட்டுருவேன்” என மிரட்டினான் நேதன்.
அப்பொழுதும் அடங்காமல் திமிறிக் கொண்டு,
“போடேன், போட்டுத்தான் பாரேன்!” என சண்டைக்கு வந்தாள் அம்சவேணி.
“சீச்சீ! உன்னை மாதிரி லோ கிளாஸ் ஆளுங்க கிட்ட எனக்கு என்ன சண்டை! டிஸ்கஸ்டிங்” என்றவன் கடைசியாய் ஒரு முறை ஓங்கிக் கொட்டி விட்டு அவள் கையை விட்டான்.
“போடா போடா! நான் லோ கிளாஸாவே இருந்துட்டுப் போறேன்! இப்போ மட்டும் என்ன செருப்புக்குத் தமிழ் பேசற நீ? எப்போவும் உன் சீன கூட்டாளிங்க கூட சேர்ந்து சீஞ்சொய்லா சீன கத்திரிக்கான்னு சீன் போடுவ! தெரியும்டா நீ பெரிய ஹை கிளாஸ்னு! என்னமோ தமிழ்ப் பசங்க நாங்க எல்லாம் குப்பைத் தொட்டில இருந்து வந்த மாதிரியும் நீ குவின் எலிசபெத் பக்கத்து வீட்டுக்காரன் மாதிரியும் பந்தா பண்ணிட்டு சுத்திட்டு இருக்காதே! என் ஆள் கிட்ட சொல்லி நீ ஸ்கூல் முடிஞ்சு போறப்ப கையைக் கால ஒடைக்க சொல்லிடுவேன் பார்த்துக்கோ” என கோபமாகக் கத்தியவள், அவனை பலம் கொண்ட மட்டும் தள்ளிவிட்டு ஓடினாள்.
திடீரென அவள் தள்ளவும் நிலைத்தடுமாறி கீழே விழுந்தான் நேதன்.
தூக்கத்தில் இருந்து பட்டென எழுந்து அமர்ந்தவன், எங்காவது அடிப் பட்டிருக்கிறதா என தன் உடலைத் தடவிப் பார்த்தான். பின்புதான் உணர்ந்தான் அம்சவேணியை நினைத்துக் கொண்டே தூங்கி இருக்க, இருபத்து மூன்று வருடத்திற்கு முன்பு நடந்தது எல்லாம் கனவாய் வந்திருப்பதை. மெலிதாக நகைத்தவன், போர்வையை விலக்கி விட்டு எழுந்து நின்றான். மணியைப் பார்க்க, விடிகாலை மூன்று என காட்டியது.
‘இத்தனை மணிக்கு எழுந்து நான் என்னத்த கிழிக்கப் போறேன்!’ என மனம் சலித்துக் கொள்ள, ரூமில் இருந்து வெளியாகி கீழ் தளத்துக்குப் போனான். அவன் வசிப்பது டபுள் ஸ்டோரி செமி டி(செமி டிடாச்ட்) வீடு. இரண்டு வீடுகள் ஒட்டிக் கட்டப்பட்டிருக்கும். வலது புற வீட்டில் இவனும், இடது புற வீட்டில் மலாய் குடும்பம் ஒன்றும் வசிக்கிறார்கள். நடுவில் சுவர் வைத்து இரு வீடும் பிரிக்கப்பட்டிருக்கும். குட்டி பங்களா போல மிக அழகாக இருக்கும் இவனது வீடு. சின்னதாய் ஒரு ஸ்வீம்மிங் பூலும் இருக்கும். இண்டீரியர் டிசைனர் வைத்து வீட்டையும், ஸ்வீம்மிங் பூலை சுற்றிய தோட்டத்தையும் அழகாய் வடிவமைத்திருந்தான் நேதன்.
கிச்சனில் பால் சூடு காட்டிக் குடிக்கலாம் என போனவனுக்கு, வயிறு லேசாக பசிப்பது போல இருந்தது. உணவுப் பொருட்களை அவன் தங்கையும் அம்மாவும், வாரத்திற்கு ஒரு முறை வந்து வாங்கி அடுக்கி வைத்து விட்டுப் போவார்கள். வீட்டை சுத்தம் செய்யவென வாரம் ஒரு முறை கிளினீங் சர்விஸில் இருந்து வருவார்கள். மற்றப்படி வைத்தது வைத்த இடத்தில் இருக்கும். வெளியேவே உணவை முடித்து விட்டு வந்து விடுவதால் சமையலுக்கு என ஆள் வைத்துக் கொள்ளவில்லை இவன்.
உணவு பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பேண்ட்ரி கதவைத் திறந்து லைட்டைப் போட்டான் நேதன். துரித உணவு கேன்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன அங்கே.
“மஸ்ரூம் சூப், ட்யூனா, பேக்ட் பீன்ஸ், ராமேன்” என சொல்லிக் கொண்டே வந்தவன் ராமேன்(கப் நூடல்ஸ்) கப்பைக் கையில் எடுத்துக் கொண்டான்.
சுடுநீரும் குளிர் நீரும் தரும் வாட்டர் ஃபில்டர் மெசினில் சுடுத்தண்ணீர் பிடித்து ராமேன் கப்பில் ஊற்றி மூடி வைத்தான் நேதன். போனை எடுத்து நெட்பிளிக்ஸ் திறந்து எப்பொழுதும் அவன் விரும்பிப் பார்க்கும் ‘சூட்ஸ்’ எனும் சீரியலை ஓட விட்டு அதில் ஆழ்ந்துப் போனான். ராமேன் வெந்ததும், ச்சாப் ஸ்டிக் கொண்டு சாப்பிட்டவாறே சீரிஸீல் கவனம் வைத்தான் நேதன். அவன் அம்மா சின்ன வயதில் இருந்தே காரம் சாப்பிட பழக்கி இருந்ததால் அவனால் அசால்ட்டாக கார உணவை சாப்பிட முடிந்தாலும் முகம் மட்டும் வியர்த்து சிவந்துப் போய்விடும். டிஷூ பேப்பர் வைத்து முகத்தைத் துடைத்தவனுக்கு, தன்னை டிஷூ பேப்பர் என அழைக்கும் அம்சவேணியின் ஞாபகம் அழைக்காமலே வந்தது.
“என்ன வேணும் செல்லம்?” என்ற குரலில் திகைத்து சில நிமிடங்கள் நின்றவனுக்கு, கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
“ஹேய்! கஸ்டமர் கிட்ட இப்படித்தான் செல்லம் வெல்லம்னு பேசுவியா? அறிவு இல்ல?” என ஆங்கிலத்தில் பொரிந்து தள்ளி விட்டான்.
அவன் கோபத்தில் அதிர்ந்துப் போன கடைப் பெண்,
“ஐயோ! சாரி, சாரி சார்! நான் உங்கள அப்படி கூப்பிடல! என் மகன் அழுதுட்டே இருந்தான்! அவன கொஞ்சிட்டு நிமிர்ந்தப்போ நீங்க வந்து நிக்கறீங்க! சாரி சார்” என பல சாரிகளை அள்ளித் தெளித்தவள், கீழே குனிந்து தனது மகனையும் தூக்கி அவனிடம் காட்டினாள்.
“இவனத்தான் சார் என்ன வேணும்னு கேட்டேன்”
அவள் இடுப்பில் அமர்ந்தப்படி ஈயென மேலிருக்கும் இரண்டு பல்லையும், கீழிருக்கும் இரண்டு பல்லையும் காட்டியபடி சிரித்தான் குழந்தை. குழந்தையின் சிரிப்பில் அவன் கோபம் மட்டுப்பட,
“இட்ஸ் ஓக்கே!” என்றவன் திரும்பி நடந்தான்.
“சார், சார்! ப்ளிஸ் நில்லுங்க!” என்றவளின் குரலில் தலையை மட்டும் திருப்பிப் பார்த்தான் நேதன்.
“உங்கள அப்செட் பண்ணிட்டேன் போல! ஒரு கப் காபி குடிக்கறீங்களா? இட்ஸ் ஆன் தி ஹவுஸ்” என புன்னகைத்தாள் அவள். கையில் இருந்த குழந்தையும் கையைக் கையை ஆட்டியது.
கையைத் தூக்கி மெல்ல அதற்கு பதிலாக ஆட்டியவனின் முகத்திலும் மெல்லிய புன்னகை. குழந்தைகளைப் பார்த்தால் மயங்காதோர் தான் உண்டோ!
“என்ன ட்ரிங்க் வேணும்?” என கேட்டாள் அந்தப் பெண்.
“ப்ளாக் காபி, அப்படியே ஒரு ஸ்ட்ராபெரி டோனாட்” என்றான் இவன்.
குழந்தையை இறக்கி கிழே விட்டாள் அவள். உள்ளே குழந்தைக்கான கூடை அல்லது ப்ராம் இருக்கும் போல. கீழிருந்து பார்த்தவனுக்கு ஒன்றும் தெரியவில்லை. குழந்தையின் மெல்லிய சிணுங்கல் மட்டும் கேட்டது. இடுப்பில் இருந்து இறக்கி விட்டது பிடிக்கவில்லை போல!
அவன் கேட்ட பானத்தை தயாரித்தவள், டோனட்டையும் அழகாய் பேப்பர் பேக்கில் மடித்துக் கொடுத்தாள். அவன் பணம் கொடுக்க முயல,
“இல்ல பரவால்ல சார். உங்கள அப்செட் பண்ணதுக்கு என்னோட மன்னிப்பா வச்சிக்கோங்க” என்றாள் அவள்.
நன்றாக அவள் முகத்தை நிமிர்ந்துப் பார்த்தவன்,
“இப்படி பிஸ்னஸ் பண்ணா சீக்கிரம் மூடிட்டுப் போக வேண்டியதுதான்” என சொன்னவன் விலைப் பட்டியலைப் பார்த்து பணத்தை எடுத்து வைத்தான்.
அதன் பிறகு பிகு செய்யாமல் பணத்தை வாங்கிக் கொண்டவள்,
“உங்கள எங்கயோ பார்த்த மாதிரியே இருக்கு” என்றாள்.
‘இதென்னடா இது! நாப்பது வயசுல நமக்கு பிக் அப் லைன்லாம் வருது’ என மனதில் நினைத்துக் கொண்டவனுக்கு சிரிப்பு வரப் பார்த்தது.
அவளைப் பார்த்து மூக்கை அறுப்பது போல பேச வந்தவன், யோசனையாய் சுருங்கி இருந்த அவள் முகத்தை நன்றாகப் பார்த்தான்.
“அம்சவேணி!”
“டிஷூ பேப்பர்” என இருவரும் ஒரே நேரத்தில் சொன்னார்கள்.
அவளது விளிப்பில், கடுப்பாய் முறைத்தான் இவன்.
“சாரி, சாரி! சட்டுன்னு உன் பட்டப்பேருதான் ஞாபகம் வந்துச்சுடா நேதன்” என்றவளுக்கு முகமெல்லாம் புன்னகை.
இருபத்து மூன்று வருடங்கள் இருவரின் உடலிலும் பல மாற்றத்தைக் கொண்டு வந்திருந்தது. ஒல்லிக்குச்சி உடம்புக்காரி இப்பொழுது கொஞ்சம் பூசினாற் போல இருந்தாள். ஒட்டிப் போன கன்னங்கள் இப்பொழுது ஆப்பிள் போல வீங்கிக் கிடந்தது. ஸ்பேக்ஸ் வேறு அணிந்திருந்தாள்.
பள்ளியில் எதிரிகளாய் அடித்துக் கொண்டிருந்தாலும், பல வருடங்கள் கழித்துப் பார்த்துக் கொள்வதால் இருவருக்கும் கசப்புக்கள் பின்னால் போய் சிரிப்பு மட்டுமே முன்னால் வந்தது.
“எங்கடா மண்டை மேல ஒன்னையும் காணோம்” என கேட்டாள் இவள்.
“இப்படி இருக்கிறதுதான் நியூ ஸ்டைல்” என சொன்னான் இவன்.
“போடா போடா! ஸ்கூல்லயே உன் முடிதான்டா சினிமா ஸ்டார் மாதிரி அவ்ளோ அழகா இருக்கும். அதை போய் மொட்டைப் போட்டு வச்சிருக்கியே!” என்றாள் ஆதங்கமாக.
‘ஐயோ! அப்போலாம் இதப் பத்தி ஒன்னும் சொல்லாம, எல்லாம் கொட்டிப் போனதும் வந்து அழகா இருக்கும், அழுக்கா இருக்கும்னு வயித்தெரிச்சல கெளப்பறாளே!’ என மனதில் புலம்பினான் நேதன்.
“எனக்கு உன்னை அடையாளமே தெரியல போ! கன்னம் ரெண்டும் நீ விக்கிற டோனாட் மாதிரி வீங்கிக் கிடக்கவும் கண்டுப்பிடிக்கவே முடியல” என சிரித்தவன் மேலே ஸ்ட்ராவைத் தூக்கி வீசினாள் அம்சவேணி.
“கொஞ்சமா உடம்பு போட்டுருச்சு! அதுக்கு இப்படிலாம் கலாய்க்கற பார்த்தியா!”
ஆங்கிலத்தில் ஆரம்பித்து இருவரும் தமிழிலேயே பேச ஆரம்பித்திருந்தனர். அதற்குள் இன்னொரு கஸ்டமர் வர, அவள் வேலையைப் பார்த்தாள் வேணி. முகத்தில் புன்னகையுடன் வியாபாரம் செய்யும் அவளையே இமைக்காமல் பார்த்திருந்தான் நேதன். கஸ்டமர் சென்றதும், மீண்டும் சற்று நேரம் பழைய கதைகளை அசைப் போட்டனர் இருவரும். இவனோடு பேசிக் கொண்டே குழந்தையையும் கொஞ்சிக் கொண்டாள் வேணி. ரவுடி ரங்கம்மா, அருமையான அம்மாவாக உருமாறி இருந்ததை ஆச்சரியமாகப் பார்த்தப்படி இருந்தான் நேதன்.
அதற்குள் அவனுக்கும் வேலை விஷயமாகப் போன் வர, பிறகு பேசலாம் என கிளம்பி விட்டான் அவன். இரவு பத்து மணிக்கு மேல் வேலைகளை முடித்துக் கிளம்பியவன், பார்க்கிங்கில் இருந்து தனது காரை எடுத்தான். அந்த ‘சோல் கபே’வை கடக்கும் போது கண்கள் அவனை அறியாமலே அவ்விடத்தை நோட்டமிட்டது. கடையை அடைத்துக் கிளம்பி இருந்தாள் அவள்.
அவள் நினைப்பாகவே வீடு வந்து உறங்கியவனைத்தான் அந்தக் கனவு எழுப்பி அமர வைத்திருந்தது.
“காலையிலேயே போய் அவள பார்க்கனும்! நெறைய விஷயங்கள கேட்ச் ஆப் பண்ணனும்! அவ புருஷன் என்ன வேலைப் பார்க்கறான்னு எல்லாம் கேக்கனும்!” என எண்ணிக் கொண்டே ஒரு நீச்சலைப் போடலாம் என நீச்சல் குளத்துக்குப் போனான் நேதன்.
(போன எபிக்கு லைக், கமேண்ட், மீம் போட்ட அனைவருக்கும் நன்றி டியர்ஸ். இந்த கதை செவ்வாய் அண்ட் வெள்ளி வரும்னு சொன்னேன். இன்னிக்கு வெள்ளின்னு இப்போத்தான் ஞாபகம் கமீங்! சோ போட்டுட்டேன்! லவ் யூ ஆல்)