வேந்தனிடம் கூறியதோடு, அவன் பதிலுக்காகக் காத்திராமல், வாணியை வீட்டோடு அழைத்துக் கொண்டார் அனுசியா.
வாணிக்கு தயக்கம் காரணமாக, பிடிவாதமாய் மறுத்தாலும், அனுசியா விடவில்லை.
உண்மையில் வாணி பேச்சோடு கூறியதைப் பிடித்துக் கொண்டு, பெண்ணை சாதூர்யமாக வீட்டோடு அழைத்துக் கொண்டிருந்தார்.
அனுசியா, வாணியின் பொழுதுகள் இனிமையாகவே சென்றது.
அனுசியாவின் முழங்கால் வலிக்கு மருந்து தேய்த்து விடுவதாகட்டும், லச்சுமியை மேல் வேலைக்கு வைத்துக் கொண்டு சமைப்பதாகட்டும், தனது படிப்பாகட்டும், வேந்தன் சகோதரர்களின் பிள்ளைகளோடு நேரம் செலவளிப்பதாகட்டும், அனைத்தையும் திறமையாகக் கையாளத் துவங்கினாள்.
மருத்துவமனைக்கு அனுசியாவோடு சென்று வந்தாள்.
முழுங்கால் வலிக்கு உரிய பயிற்சிகள் அளிக்குமிடம் பற்றிக் கூறிய மருத்துவர், அங்கு சென்று பயிற்சிகளைக் கற்றுக் கொண்டு, மருந்துகளையும் உட்கொண்டால் வலி சற்றுக் குறையலாம் என்று கூறியிருந்தார்.
அனுசியா, தன்னோடு வாணியையும் அழைத்துச் சென்றிருந்தார். சிறு சிறு பயிற்சிகள் அறிமுகம் செய்யப்பட்டு, மெதுவாக செய்யும்படி பணித்தனர்.
பயிற்சிகள் செய்யத் துவங்கிட, வலி சற்று மட்டுப்பட்டிருப்பதாக அனுசியா கூறினார்.
‘எல்லாம் வாணியோட ராசி’, என வருவோர் போவோரிடமெல்லாம் கூறினார். ஆனால் வேந்தனிடமும் அதே வார்த்தையைக் கூறி மகிழ ஆசை. ஆனால் வேந்தன் வேலை, வேலை என காலில் சக்கரம் கட்டிக் கொண்டு திரிந்தான்.
அத்தோடு தன்னோடு நேரம் செலவளித்திட முடியாதபடி வேந்தன் வேலையாக இருப்பதைக் கண்டு, ‘இவன் ஒருத்தனைப் பத்தின கவலைதான் எனக்கு. மத்த புள்ளைங்க எல்லாம் குடும்பம் குடும்பமா அதது நிறைவா வாழறதைப் பாத்து மனம் நிறைஞ்சிருச்சு. ஆனா இவன் ஒருத்தனை கடவுள் இப்டி மத்தவங்களுக்காகவே ஓடவிட்டுப் பாக்கறானே. எம்புள்ளைக்கு நல்ல வாழ்க்கைய ஆண்டவன் தந்து அதைப் பாக்கற கொடுப்பினையே இல்லாம இருக்கேனே! என்னிக்கு எம்புள்ளை முகத்துல சந்தோசத்தைப் பாப்பேனோ தெரியலையே’, என வாணியிடமே புலம்பியிருந்தார்.
வாணிக்குமே வேந்தனை எண்ணி வருத்தமே! ஆனால் அதைப்பற்றி யாரிடமும் கூற, பகிர்ந்து கொள்ள இயலாத நிலை அவளது.
சிலவற்றைக் கடக்க, அனுசியா எவ்வளவு கூறினாலும் கேட்காமல், எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தாள் வாணி.
“லச்சுமி இருக்காள்ல. இதையெல்லாம் எதுக்கு நீ இழுத்துப் போட்டுக்கற”, என கடிந்தாலும், “எல்லாம் செஞ்சு பழகிக்கணுமில்ல பாட்டீமா”, என தன்மையாக பதில் கூறி வாயடைத்துவிடுவாள்.
வேந்தன் தனித்துவிடப்பட்ட மனநிலைக்கு வந்திருந்தான். முன்பும் பெரும்பாலும் அப்படித்தான் என்றாலும், முன்பைக் காட்டிலும் தற்போது தாயோடு செலவிடக்கூடிய நேரம் குறைந்திருந்தது. அதை வாணிக்காக விட்டுக் கொடுத்திருந்தான். அதில் வருத்தமில்லை.
முழுக்க அலுவலகம், அவனுடைய வெளி வேலைகள் என ஓய்வில்லாது ஓடினான்.
வேந்தனுக்கு பெரும்பாலும் வெளித்தங்கல் என்றாகியிருந்தது.
எப்போது வீட்டிற்கு வருகிறான், எப்போது போகிறான் எதுவுமே வாணிக்குத் தெரியவில்லை.
மதிய உணவிற்கு வருவதையும் குறைத்ததாக அனுசியா புலம்ப, மற்ற அவனது சகோதர்களை கவனிக்கத் துவங்கினாள் வாணி.
அனுசியா பேசியதைக் கொண்டு ஓரளவு அனைத்தையும் அனுமானித்திருந்தாள்.
வேந்தனது சகோதரர்கள், சரியாக பத்து மணிக்குமேல் கிளம்பி, மதிய உணவிற்கு டான் என வீடு வருவதும், ஐந்து மணிக்கு மீண்டும் ஸ்டோர்களுக்குச் சென்றுவிட்டு, இரவில் எட்டு அல்லது ஒன்பது மணிக்குள் திரும்புவதையும் கண்கூடாகக் கண்டாள்.
ஆனாலும் இவையெல்லாம் கவனத்தில் கொண்டாலும், எதுவும் வாயைத் திறந்தாளில்லை.
கல்லூரிக்கு சென்று வந்த நேரம்போக, அனுசியாவோடு வாணியின் நேரம் இறக்கை கட்டிப் பறந்தது.
விடுதியில் இருக்கும்போதுதான் அவ்வப்போது வேந்தனைக் காண மனம் ஏங்கும். ஆனால் வீட்டிற்கு வந்தும் அதே நிலை தொடர்ந்தது.
வாணிக்கு நெருடல் இருந்தது.
தான் இங்கு வந்ததால் வேந்தன் வீட்டில் தங்குவதில்லையோ என்று.
மனதில் தோன்றுவதை மறைக்காமல் கேட்டே பழகியிருந்த வாணி, “மாமாவையே பாக்க முடியலையே பாட்டீமா. இப்ப ஊருல இல்லையா?”, என்பதுபோல விசாரிக்க, “முன்ன நான் தனியா இருப்பேன். அதனால வந்து அப்பப்போ தலையக் காட்டுவான். இப்ப எனக்குத் துணைக்கு நீ இருக்கல்ல. பய அத்தோட வேலைய விரட்டிகிட்டு அது பின்னாடியே திரியறான்”, என்றிருந்தார்.
வாணிக்கு அவளது படிப்பு, பிறகு சிறிது நேரம் அனுசியாவோடு தொலைக்காட்சி பார்ப்பது, இரவு உணவிற்கு எதாவது செய்வது என அன்றைய பொழுது சென்றிருந்தது.
உறக்கம் வரும்வரை இருவருமாக ஹாலில் அமர்ந்திருப்பர். அதன்பின் தனதறைக்குள் சென்றவள், வேந்தனுக்கு அழைத்தாள்.
இரவு நேர கட்டிட வேலையில் மேற்பார்வைக்கு ஆளை நியமித்திருந்தாலும், உடன் தானும் நின்றிருந்தான் வேந்தன்.
வாணியிடமிருந்து அந்நேர அழைப்பை எதிர்பாராதவன், உடனே அழைப்பை ஏற்றிருந்தான்.
“எங்க மாமூ இருக்கீங்க”, என்றிட
பின்னிரவு நேரத்தில் வாணியிடமிருந்து அழைப்பை எதிர்பார்த்திராதவன், “கொஞ்சம் வேலை வாணி. என்ன விசயம். இந்நேரத்தில கூப்பிட்டுருக்க?”, என்றிட
“இன்னும் ட்வெண்டி டேஸ்குள்ள இந்த அபார்ட்மெண்ட ஓபனிங் இருக்கு. அதான் வேலை கொஞ்சம் டைட்டா போகுது. அப்புறம் ஃபீரிதான்”
“கே மாமூ, அப்ப மார்னிங் டைனிங்க்ல பாக்கலாம்!”, என அலைபேசியை துண்டித்திருந்தாள்.
வாணி அலைபேசியை வைத்ததும், ஏனோ மனம் அவளைக் காண ஏங்கியது.
வீட்டிற்கு தற்போது கிளம்பினாலும், ஐம்பது நிமிடங்களுக்கு குறையாமல் ஆகும். அதற்குள் பெண் உறங்கிவிடுவாள். ஆனாலும் இருப்புக் கொள்ளாமல் கிளம்பியிருந்தான் வேந்தன்.
நீண்ட நாளுக்குப்பின் இரவு வீட்டிற்கு வரத்தோன்றியதற்கான காரணம் வாணியின் பேச்சு என்பதை யோசித்தபடியே கிளம்பியிருந்தான்.
அறைக்குள் இருந்தவளுக்கும் வேந்தனைப் பற்றிய சிந்தனைதான்.
உறக்கம் வராது படுக்கையில் புரளவே, ஹாலில் சென்று கையில் ஒரு புத்தகத்தோடு அமர்ந்தாள்.
///////
வேந்தனுக்குள் எழுந்த விடை தெரியாத வினாக்கள் மனதோடு முகாமிட்டிருக்க, அதைப் பற்றிய சிந்தனையோடு வண்டியை இயக்கிக் கொண்டிருந்தான்.
வேணியைக் கொண்டே வாணியைக் கண்டதும், வேந்தன் தன்னை நினைவுகளால் புதுப்பித்து ஆரம்பத்தில் உற்சாகமாக வலம் வந்தான்.
பெண்ணது வயதை அறிந்ததும், தனது நோக்கம், எதிர்பார்ப்பு தவறு என தன்னையே கடிவாளமிட்டு முடக்கியிருந்தான்.
ஆனாலும், வாணியையே சிந்திக்கத் துவங்கிய மனதை அவனால் கடிவாளமிட இயலவில்லை.
வாணியது நினைவுகள் மேலெழத் துவங்கி ஆக்ரமித்திட, வேணியின் நினைவுகள் மெல்ல மறையத் துவங்கியதை வேந்தனும் உணர்ந்தான்.
ஆனாலும் வம்படியாக, வேணியைச் சந்தித்த தருணத்தை மீளச் செய்திட மனம் உந்தியது.
அவளைப் கொண்டுதானே இன்று வாணியை உள்ளம் ஆராதிக்க ஆவல் கொள்கிறது. அந்த பழைய நினைவுகளை அசைபோட்டபடியே வாகனத்தை செலுத்தினான்.
அப்போது, வேந்தனது வீட்டின் குடும்ப நிலை காரணமாக, மேற்கொண்டு வேந்தனைப் படிக்க வைக்கலாமா, வேண்டாமா என யோசித்தே காலம் தாழ்த்தியிருந்தனர்.
அவர்களது வீட்டிற்கு வருகை தந்திருந்த அனுசியாவின் சகோதரர், “ஆம்பளைப் புள்ளைய ஒரு டிகிரிகூட படிக்க வைக்கலைன்னா வர்ற காலத்தில ரொம்பக் கஷ்டம். அதனால நம்ம வீட்ல தங்கிக்கூட காலேஜ் போயிட்டு வரட்டும்மா, மார்க்கெல்லாம நல்லா இருந்தா கண்டிப்பா கவர்மெண்ட் காலேஜ்ல சீட்டுக் கிடச்சிரும். அதனால அங்க போட்டுப் பாக்கலாம்”, என வேந்தனது மதிப்பெண்ணைப் பார்த்து சகோதரியிடம் கூறியதோடு, அப்ளிகேசனை உடனடியாகப் போடச் செய்திருந்தார்.
கலந்தாய்வு தேதிக்கான அழைப்பு வந்திடவே, வீட்டிலும் அரைமனதாகச் சம்மதித்ததால், கல்லூரியில் சேர்ந்திருந்தான்.
தாய்மாமன் வீட்டில் தங்கியிருந்தபடியே கல்லூரிக்கு சென்று வர முடிவு செய்யப்பட்டது.
கல்லூரிக் கல்வி கானல் நீராகி விடுமோ என மனதிற்குள் குமுறிக் கொண்டிருந்தவனுக்கு, கிட்டிய பொன்னான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள ஆர்வத்தோடு கல்லூரிக்கு சென்று வரத் துவங்கியிருந்தான்.
மொழிப்பாட வகுப்புகளின்போது, சில துறைகளை இணைத்து வகுப்பெடுப்பது அக்கல்லூரியில் வழக்கமாக இருந்தது.
வகுப்பெடுத்துக் கொண்டிருந்த ஆசிரியரிடம், புதிதாகச் சேர்ந்தவர்களின் பெயர் பட்டியல் அலுவலகத்திலிருந்து தரப்பட்டு, பதிவேட்டில் சேர்க்கும்படி பணிக்கப்பட்டிருக்க, வருகைப் பதிவேட்டை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.
சற்று நேரத்திற்குப் பின், “எந்த வருசத்திலயும் இல்லாத அருமையான தமிழ் பெயர்களா, இந்த பேட்ஜ்ல அமைஞ்சிருக்கு!”, என்றவர், “முகில், எழில். செழியன்னு வித்தியாசமா அருமையான தமிழ்ப் பெயர்களா இருக்கு” என மாணாக்கர்களோடு பகிர்ந்து கொண்டிருந்தார்.
அப்போது அதை சாதாரணமாகத்தான் எடுத்துக் கொண்டிருந்தான் வேந்தன்.
பெயர் கொண்டு பரிச்சயமான முகமாகியிருந்தனர் மூவரும்.
பின்வரும் நாளில், எழிலிடம், ‘முகில், செழியனையும் உதவிக்கு கூப்பிட்டுகோ’ என ஆசிரியர் அழைத்து ஒரு வேலையைக் கூறிட, முகிலைத் தேடினான்.
செழியன், எழில் மட்டுமே ஆண்கள். முகில் என அழைக்கப்பட்டது முகில் வேணி எனும் பெண் என்றும், அப்பெண்ணுமே வேறு துறையைச் சேர்ந்தவள் என்பதும் அன்றுதான் வேந்தனுக்கு தெரிய வந்திருந்தது.
அதன்பின் எழில் வேந்தனும், செழியனும் சேர்ந்து சென்று அவர்கள் துறை சார்ந்த பணியை செய்திருந்தனர்.
அதுமுதல் முகில் வேணி எனும் பெயருக்குரியவளைக் காண வேந்தனது உள்ளம் ஏங்கியது, அதன்பின் சிலநாள் கழித்து அவளை அறிந்து கொண்டது. அந்த பருவத்திற்கே உரிய ஆர்வம். ஆனால் பேச்சுகள் எதுவும் இல்லை.
வகுப்புகளின் போது சந்திக்கும் வாய்ப்புகள் இருந்தாலும் பேச இருவருமே முயன்றதில்லை.
பெண் செல்லும் அதே பேருந்து வழித்தடத்தில்தான் வேந்தனும் செல்வான். ஆகையால் பெண்ணைத் தொடர்ந்தோ, முன்னோ செல்ல வேண்டிய நிர்பந்தம்.
ஆனால் அவரவர் துறையைச் சார்ந்த நண்பர்கள், எழிலை, முகில் என அழைப்பதும், முகிலை, எழில் என அறியாமல் அழைப்பதும் தொடர்ந்தது.
பிறகு அறிந்து கொண்டபின் அதுவே கிண்டல் அழைப்பாக மாறியிருந்தது. அந்தக் கிண்டலை இருவருமே பொருட்படுத்தியதாக தெரியாதபடி அவர் உண்டு, அவர் வேலையுண்டு என நாள்கள் சென்றது.
முகில் வேணியின் அமைதியும், அதிராத பேச்சும், அலுங்காத நடையும், அவளின் ஆகர்ஷிக்கும் முகமும் வேந்தனை ஈர்த்திட, நண்பர்களின் கிண்டலும் அவ்வப்போது சேர்ந்து கொள்ள, அழியாத ஓவியமாக அவனது மனதில் அந்த முகம் ஆசையாகப் பதியத் துவங்கியிருந்தது.
அது என்ன உணர்வு என்பதே ஆரம்பத்தில் புரியாமல், ஆனாலும் அவ்வுணர்வில் உண்டான மகிழ்ச்சியை மனதோடு கொண்டாடி மகிழ்ந்திருந்தான் வேந்தன்.
முன்னே சென்றால் பெண்ணைத் திரும்பிப் பார்க்கும்படி இருக்குமென எண்ணி, அதன்பின் முகிலை பின் தொடர்வதையே வழக்கமாக்கியிருந்தான்.
தனது மாற்றத்திற்கான காரணம், இனக் கவர்ச்சி என்பதே வேந்தனது அப்போதைய எண்ணம்.
பெரும்பாலும் நீள கிங்க் சைஸ் நோட்டு மற்றும் டிபன் பாக்ஸ் மட்டுமே இருபால மாணாக்கர்களும் அப்போது கல்லூரிக்கு எடுத்துச் செல்வது வழக்கம்.
ஆண்கள் உணவைத் தவிர்த்து நோட்டை மட்டும் கையில் எடுத்து வருவர்.
அதுபோல கல்லூரி முடிந்து பேருந்திற்காக அவசரமாகச் செல்லும்போது, வேணியின் நீள நோட்டிலிருந்த பேப்பர் ஒன்று கீழே விழ, பின்னோடு வந்து கொண்டிருந்த வேந்தன் அதைக் கண்டிருந்தான். வேந்தன் அந்தப் பேப்பரில் என்ன இருந்தது எனப் பார்க்காமல், அதை எடுத்து வந்து வேணியின் கையில் பேருந்துல் ஏறும்போது ஒப்படைத்ததுதான் கடைசியாக நடந்த நிகழ்வு. அதன்பின் வேந்தன் முகில் வேணியைக் காணவே இல்லை. முகில் வேணி கல்லூரிக்கு அதன்பின் வரவே இல்லை.
அவள் துறையைச் சார்ந்த, அவளோடு இருந்த தோழிகளிடம் விசாரித்தபோது, அவர்களும் சரியான பதிலைத் தரவில்லை.
ஆனால் அந்த ஆசை முகம் வேந்தன் மனதோடு இன்றளவும் பதிந்து போயிருந்தது.
இனக் கவர்ச்சி என எண்ணியிருந்தது அப்டியல்ல என வேந்தன் அறிந்து கொள்ளும் நிலை வந்தபோது காலம் கடந்திருந்தது.
மறக்க நினைக்கவில்லை. ஆனாலும் மறந்து போகவில்லை.
திருமணத்திற்கு வற்புறுத்திய தாயிடம் சம்மதம் கூற மனம் ஒப்பாமல் போனதும் அதே ஆசை முகத்தால்தான்.
நிச்சயம் வேணிக்குத் திருமணமாகி இருக்கும் என்றாலும், ஏனோ வேந்தனது மனதை விட்டு அகலமாட்டேன் என பச்சை குத்தினாற்போல அந்த முகம் பதிந்து போயிருந்தது.
அதன்தாக்கமே வேறு எதையும் யோசியாமல், அவனை தொழிலின் பின்னே இப்படி வெளி கொண்டு ஓடச் செய்திருந்தது.
திருமணத்தைத் தவிர்க்கச் செய்திருந்தது.
ஆனால் இன்றோ, வேணியின் நினைவுகள் மங்கலாக இருப்பதுபோல உணர்ந்தான். அதே மனம்தான் தற்போது வாணியின் பின்னே கிறங்கி, கிறுக்காகக் தெரிகிறது.
அதிலிருந்து மீள இறுதியாக மருத்துவ நண்பனைச் சந்திக்க முடிவு செய்திருக்கிறான்.
மனதில் இருந்த சில ஏற்பற்ற தன்மைகளைக் களைந்திடவும், தயக்கத்தை வேரறுக்கவும், சில நல்ல முடிவுகளை துணிந்து எடுக்கவும், அது உதவிடும் என்பதால் மனதை அதற்குத் தயார் செய்து வருகிறான்.
தற்போதிருக்கும் பணிகளுக்கு இடையே சென்று வர இயலாததால், அபார்ட்மெண்ட் திறப்பு விழாவிற்குப் பிறகே அதற்கென நேரம் ஒதுக்கிட முடிவு செய்திருந்தான்.
அந்த எண்ணத்தோடு அவர்களது வீடு இருந்த பகுதிக்குள் வண்டியை செலுத்தியிருந்தான்.
/////////////
மூவரது வீடும் அடுத்தடுத்து ஒரே காம்பவுண்டுக்குள் இருக்க, வாயிலில் ஒலித்த ஹாரன் ஒலி, பூட்டிய வீட்டிற்குள் புத்தகம் படித்துக் கொண்டிருந்த வாணிக்கும் கேட்டது.
வாணி “இந்நேரத்துல யாரு”, என தனக்குள் கேட்டபடியே எழுந்தமர்ந்து நேரம் பார்த்தாள்.
மணி பன்னிரெண்டாக இன்னும் பத்து நிமிடங்கள் என அந்த கடிகாரம் காட்டியது.
காரை பார்க் செய்யும் சத்தம் கேட்டது.
பிறகு, தங்களது வீட்டின் வெளி கேட் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. உடனே வாணி எழுந்து வந்து கதவைத் திறந்தாள்.
அதற்குள் கேட்டைத் திறந்து உள்ளே வந்தவன், அதைப் பூட்டிக் கொண்டு சிட்டவுட்டிலிருந்த படியில் தனது தளத்தை நோக்கி ஏற முனையவும், கதவு திறந்த சத்தம் கேட்டது.
துப்பட்டா இல்லாமல், ஷ்ரக் மட்டுமே அணிந்திருந்ததால் யோசித்தபடியே மெதுவாக கதவை திறந்தவள், அதன் வழியே சிட்டவுட்டில் யார் எனப் பார்க்க பார்வையை விட்டாள் வாணி.
வாயிலில் யாரும் இல்லை. ஆனால் வந்த நிழலைக் கொண்டு படியை நிமிர்ந்து நோக்கினாள் பெண்.
கதவு திறந்த சத்தத்தில் தாய் அனுசியாதான் இரவில் தூக்கம் வராமல் வந்து எட்டிப்பார்க்கிறார் என நினைத்து வேந்தன் படியில் ஏறிய நிலையில் நின்றபடியே கதவைத் திரும்பி நோக்கவும், வாணி சற்று கதவைத் திறந்து தலையை வெளியே நீட்டவும் சரியாக இருந்தது.
வாணியை அந்நேரத்தில் நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை வேந்தன்.
“இன்னும் தூங்கலையா வாணி?” வேந்தன் வாணியிடம் வினவ
சோர்ந்திருந்த முகம், படியில் இருந்த விளக்கு வெளிச்சத்தில் தெரிய, “இல்ல மாமூ. எப்பவும் இவ்ளோ லேட்டாதான் வருவீங்களா?”
“இல்லை, லேட்டானா அங்கேயே தங்கிப்பேன்”
பெண் பேச்சை வளர்க்கவும், அங்கிருந்தபடி பேசுவதை தவிர்க்க எண்ணி, மாடிப் படியில் இருந்த விளக்கை அணைத்துவிட்டு, இறங்கி வீட்டிற்குள் வந்தான்.
“சாப்டீங்களா?”, என வாணி கேட்டாள்.
“ம்ஹ்ம்”
“பாத்தா அப்டித் தெரியலை. ரொம்ப டயர்டா தெரியறீங்க. என்ன சாப்டீங்க”
“ஷவர்மா சாப்டேன்”
“அது எப்டிப் பத்தும்”
“சிக்கன் ஷவர்மானால போதும். பசிச்சா நான் பாத்துக்கறேன்”
“பாட்டீய எழுப்பவா?”
“எதுக்கு?”
“ம்ஹ்ம். நான் கேட்டதாலதான வேணானு சொல்றீங்க. அவங்க வந்து எதாவது குடுத்தா சாப்டுவீங்களா இருக்கும்”, குத்தலா, வருத்தமா வாணியின் குரலில் தெரியவில்லை வேந்தனுக்கு.
அனுசியாவின் அறையை நோக்கி வாணி செல்ல, “ஏய்… அம்மாவ எழுப்பாத! நீ என்ன குடுத்தாலும் சாப்பிடறேன்!”, என வழிக்கு வந்தவன்,
“ஃபிரெஷ்ஷப் பண்ணிட்டு வந்திரேன்”, என தனது அறைக்குள் நுழைந்தான்.
பாலை வெதுவெதுப்பாக காய்ச்சி எடுத்து வந்ததோடு, ஒரு வாழைப் பழத்தையும் கையில் எடுத்து வந்தாள்.
வேந்தனிடம், “எதுவுமே சாப்பிடாம வெறும் வயித்தில படுக்கக் கூடாதுன்னு பாட்டீமா சொல்லுவாங்க. உங்களை பட்டினியா விட்டது தெரிஞ்சா அவ்ளோதான்”, தான் உண்ணக் கூறியமைக்கான காரணத்தைக் கூறியபடியே வந்தவள், “இது போதுமா?”, என பாலையும், பழத்தையும் காட்டிக் கேட்க
கலைந்திருந்த முடிகள் புதிய சோபையைத் தந்திட, களையான தோற்றத்தில் இருந்த தனது ஆசை முகத்தைப் பார்த்தபடியே, புன்னகையோடு கையிலிருந்ததை “போதும்”, என வாங்கிக் கொண்டான்.
“தோசை மாவு இருக்கு. வேணுனா ஊத்தித் தரவா!”, எனக் கேட்டவளிடம், மறுத்தவன், டைனிங்கில் அமர்ந்தபடியே மெதுவாக பாலை அருந்தினான்.
பெண் அடுக்களையை ஒதுக்கி, விளக்கை அணைத்து வருவதற்குள் தம்ளரை சிங்கில் கொண்டு வந்து வைத்தவன், பழத்தை உண்டவாறே, “இவ்ளோ நேரம் ஏன் முழிச்சிருக்க?” என்றான்.
பேச்சு எங்கோ செல்வதை உணர்ந்தவன், “காலையில சீக்கிரமா வெளிய போகணும், குட் நைட் வாணி”, என்றபடி வாணியிடம் விடைபெற்றான்.
ஒருவருக்கொருவர் அருகாமையை வேண்டினாலும், பெண் தனது எண்ணத்தை பகீரங்கமாக்கியிருக்க, மறுத்தவன் மனதோடு மல்லுக்கட்டியபடி மறைத்திட இன்பம் எட்டாக் கனியாகி இருந்தது.
வாணிக்கு, வேந்தன் தன்னிடமிருந்து தப்பித்துச் செல்ல நினைத்தது போன்ற செய்கை கவலையைத் தந்தது.
தனக்குள் ஒரு முடிவு செய்தவளாக வாணியும் அறைக்குள் நுழைந்தாள்.