Nee Enaku Uyiramma–EPI 13

189613085_863389437581725_4803627891963141566_n-209dfb32

அத்தியாயம் 13

நெருங்கிய சொந்தங்கள் சூழ கவர்மேண்ட் ரிஜிஸ்ட்ரேஷன் ஆபிசில் கையெழுத்துப் போட்டு திருமணத்தை அஃபிசியலாகப் பதிந்துக் கொண்டனர் நேதனும் வேணியும். அங்கேயே மோதிரமும் மாற்றிக் கொண்டனர் தம்பதிகள். அதன் பிறகு பக்கத்தில் இருந்த கோயிலுக்குப் போய் ஆர்ப்பாட்டமில்லாமல் திருமணத்தை தாலி கட்டும் சடங்குடன் முடித்துக் கொண்டனர்.

மிஸ்டர் லிம் சொந்தங்களை வீட்டுக்கு அழைத்து சின்னதாய் ஒரு பார்ட்டி மட்டும் கொடுத்தார். வந்தவர்களும் மணமக்களை வாழ்த்தி உணவருந்தி விட்டு சென்றனர். நேதனின் செல்வ நிலையைக் கண்டு மிரண்டு போனார்கள் வேணியின் தம்பிகள். அதனாலேயே அவனிடம் பழக தயக்கம் காட்டினார்கள். இவனோ பந்தா இல்லாமல் விருந்திற்கு வந்தவர்களை நன்றாக கவனித்துக் கொண்டான்.

தங்களது தமக்கையையும் அவள் பெற்ற பிள்ளையையும் நேதன் அக்கறையாய் கவனித்துக் கொள்வதை இந்த சில நாட்களில் பார்த்துக் கொண்டுதானே இருந்தார்கள் இருவரும். தங்களோடு வந்து இருக்க மாட்டேனென தனித்து நிற்கும் அக்காவை நினைத்து அவர்களுக்கும் கவலைதான். தங்களது மனைவிமாரும் அக்காவோடு உரிமைப் போராட்டம் நடத்துவது இவர்களுக்குமே தலையிடியாய் தான் இருந்தது. இந்தப் போராட்டத்துக்கெல்லாம் முற்றுப் புள்ளியாக நேதன் வந்து சேர்ந்தது இவர்களுக்கு நிம்மதியாக இருந்தது. இனியாவது அவள் சந்தோஷமாய் இருக்கட்டும் என கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டனர்.

விருந்து முடிய நடு இரவாகியிருக்க, மணமக்களை அங்கேயே தங்கிக் கொள்ள சொல்லிவிட்டார் ஜானகி. நேதனின் அறையில், ஆட்கள் மாற்றி மாற்றி தூக்கி இருக்க, உடல் வலியில் சிணுங்கிக் கொண்டிருந்த மகனை சுடுநீரில் குளிப்பாட்டி இரவு உடையை அணிவித்தாள் வேணி. நேதன் இன்னும் மேலே ரூமுக்கு வந்திருக்கவில்லை. மகனை கட்டிலில் படுக்க வைத்துத் தட்டிக் கொடுக்க, சில நிமிடங்களில் உறங்கி இருந்தான் அவன். இவளும் சேலை அணிந்திருந்த கசகசப்பு போக குளித்து, நைட்டி ஒன்றை அணிந்துக் கொண்டு வந்தாள்.

அந்த நேரம் தான் உள்ளே நுழைந்தான் நேதன். அவளைப் பார்த்து புன்னகைத்தவன்,

“நானும் குளிச்சிட்டு வரேன் வேணி” என்றபடி குளியலைறைக்குப் போனான்.

இவள் அமைதியாக மகனின் அருகே அமர்ந்துக் கொண்டாள். குளித்து முடித்து ஷார்ட்ஸ் டீஷர்ட்டோடு வந்தவன், கட்டிலின் இன்னொரு புறம் வந்து அமர்ந்தான்.

“டயர்ட்டா இருக்கில்ல, படுத்துக்கோ வேணி” என்றவன் கேஷவின் மறுபக்கம் படுத்துக் கொண்டான்.

இவளும் பெட் சைட் லைட்டை அமர்த்தி விட்டு மகனின் இந்தப் பக்கம் படுத்துக் கொண்டாள். தலையணையில் தலை வைத்தவளை தூக்கம் அப்படியே வந்து அணைத்துக் கொண்டது. என்றும் இல்லாத நிம்மதி மனதில் நிறைந்திருக்க, மகனைப் போலவே குழந்தையாய் தூங்கிப் போனாள் பெண்.

அவளின் ஆழ்ந்த மூச்சின் சத்தம் கேட்க, மெல்ல எழுந்து அமர்ந்தான் நேதன். ஜன்னலின் வழியே தெரிந்த வெளிச்சத்தில், கேஷவ் புரண்டு போய் தாயின் மார்பில் முட்டியப்படி படுத்திருப்பது வரிவடிவமாகத் தெரிந்தது. அவர்கள் இருவரையும் புன்னகையுடன் பார்த்தப்படியே அமர்ந்திருந்தான் நேதன். மனம் பஞ்சைப் போல லேசாகிப் பறப்பது போன்ற உணர்வு அவனுக்குள்.

“என் மனைவி, என் மகன்” ஆசையாய் சொல்லிப் பார்த்தான்.

‘எவ்வளவு துன்பங்களை அனுபவித்திருக்கிறாள் இவள்! இனி இவளையும், மகனையும் பூப்போல தாங்கிக் கொள்வேன்’ என மனதினுள் சங்கல்பம் செய்துக் கொண்டான் நேதன்.

அன்று அவள் சொன்ன விஷயங்கள் இன்னும் கூட காதில் ஒலிப்பது போல இருந்தது அவனுக்கு.

“எங்கம்மா சரியில்லைத்தான். ஆனா அவங்க உயிரோட இருந்திருந்தா எனக்குன்னு ஒரு வழி காட்டிருப்பாங்க. தம்பிங்க, தம்பிங்கன்னு வாழ்ந்த எனக்கும் சுயநலமா காதல், கல்யாணம்னு வாழ்க்கைய அமைச்சுக்கத் தெரியல. என் வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்தா, குழந்தையா இருந்தப்ப தவிர எனக்காகன்னு நான் வாழவே இல்ல!”

வெளியே போய் கிளாசில் நீர் கொண்டு வந்து கொடுத்தான் நேதன்.

“குடிச்சிட்டு சொல்லு! ரொம்ப ரெஸ்ட்லெஸா இருக்க நீ”

மெல்ல அந்த நீரைக் பருகியவள், கிளாசை கொண்டு போய் வைத்து விட்டு வந்தாள். அவன் அமர்ந்திருந்த கட்டிலின் கீழே அமர்ந்துக் கொண்டாள் வேணி. படபடப்பாக இருந்தவளின் தோளை மென்மையாகப் பிடித்து விட ஆரம்பித்தான் இவன். அவன் கைகள் கொடுத்த இதத்தில் சற்று நேரம் அமைதியாக இருந்தாள் அவள்.

“சம்பிரதாயத்துக்காக எங்க வீட்டைப் பார்க்க வந்தாங்க பொண்ணு வீட்டுல இருந்து. அப்போத்தான் நான் இன்னும் கல்யாணம் ஆகாம இருக்கேன்னு கேள்விப்பட்டு பொண்ணு குடுத்து பொண்ணு எடுத்துக்கலாம்னு பேசனாங்க. கேஷவோட அப்பா பேரு மேகநாதன். அவருக்கு நம்மை விட ஒரு நாலஞ்சு வயசு அதிகமா இருக்கும். ஆனா ரொம்ப ஒல்லியா இருப்பாரு. முகம் கொஞ்சம் கிழடு தட்டன மாதிரி இருக்கும். அவரும் என்னை மாதிரி குடும்பத்துக்கு உழைச்சு ஓடா தேஞ்சவருன்னு சொன்னாங்க. பேசிப் பாருங்க, பிடிச்சா ப்ரோஷிட் பண்ணலாம்னு சொன்னாங்க”

“பேசிப் பார்த்தியா?”

“ஆமா! ஒரு நாள் ரெண்டு பேரும் வெளிய போனோம். உட்கார்ந்து பேசனோம். அவர் ரொம்ப அமைதியான குணம் போல. ரொம்ப சாப்டா பேசனாரு! வீடு இருக்கு, ஒரு கம்பேனில சூப்பர்வைசர் வேலைப் பார்க்கறேன்! தங்கச்சி தம்பிங்களுக்கு கல்யாணம் முடிச்சுட்டேன். பிக்கல் பிடுங்கல் இல்லாம நீ இருக்கலாம்னு சொன்னாரு! அவர பிடிச்சதோ இல்லையோ அவர் சொன்ன கடைசி வார்த்தை ரொம்பப் பிடிச்சது! இந்தக் கல்யாணம் நமக்கு ஒரு விடுதலைன்னு ஒத்துக்கிட்டேன்.”

இவனுக்கு மனது கலங்கிப் போனது. எவ்வளவோ காரணங்கள் இருக்கும் ஒருவர் கல்யாணத்துக்கு சம்மதிக்க. இவளோ பிக்கல் பிடுங்கல் இல்லாத வாழ்க்கை ஒரு வரமென்று அல்லவா சம்மதித்திருக்கிறாள்! தாய்க்கு தாயாய் தந்தைக்குத் தந்தையாய் தம்பிகளை வளர்த்து விட்டதுக்கு அவளுக்குக் கிடைத்த பரிசுதான் என்ன? மனக்கஸ்டமும், விதவை எனும் பதவியுமல்லவா! மனம் கசிந்தது அவள் பால்.

“கல்யாணமாகி இந்த வீட்டுக்கு வந்தேன். நாங்க ரெண்டு பேர் மட்டும்தான். சந்தோசமாத்தான் வாழ்க்கையைத் தொடங்கனோம்.”

அதற்கு மேல் பேச முடியாமல் கையைப் போட்டு பிசைந்தாள் வேணி.

“அவ்ளோ கஸ்டமா இருந்தா, இந்த விஷயத்த இதோட விட்டிடலாம் வேணி. எனக்கு உன் பழைய வாழ்க்கை எப்படி இருந்தாலும் கவலையில்ல! எதிர்காலத்த மட்டும் கைப்பிடிச்சு ஒன்னா எதிர் நோக்குவோம்” என்றான் நேதன்.

மறுப்பாகத் தலையாட்டியவள்,

“நீ எல்லாத்தையும் சொன்ன, நானும் சொல்லறதுதான் நியாயம்.” என்றவள் பெரிய மூச்சை இழுத்து விட்டு மீண்டும் ஆரம்பித்தாள்.

“இவர் என்னை ரொம்ப நல்லாப் பார்த்துக்கிட்டாரு, அன்பா இருந்தாரு. ஆனா அவரால என் கூட உறவு மட்டும் சரியா வச்சிக்க முடியல! வாரத்துல அஞ்சு தடவை முயற்சி செஞ்சா ஒரு தடவை மட்டும் நடக்கும். அதுவும் பட்டுன்னு முடிஞ்சிடும். வேலையிடத்துல ஆண் பெண் உறவ பத்தி ஜாடைமாடையா பேசுவாங்க! அப்போ நான் தெரிஞ்சுக்கிட்டது, ஒரு பொண்ணு ஆம்பளையோட உணர்ச்சிகள தூண்டற மாதிரி இருந்தாத்தான் அவங்களால உறவு வச்சிக்க முடியும்னு. எனக்கு என் மேலத்தான் என்னவோ தப்போன்னு தோண ஆரம்பிச்சிடுச்சு! நான் பார்க்க நல்லா இல்லையோ, என் மேல எதாவது கெட்ட ஸ்மெல் வருதோ, என்னோட உடலமைப்பு அவர கவரக் கூடிய அளவுல இல்லையோன்னு பல சந்தேகம். உள்ளுக்குள்ள உடைஞ்சுப் போயிட்டேன். அவர் தொட வந்தாலே ஒரு நடுக்கம், இன்னைக்கும் பாதியில நின்னுடுமோன்னு ஒரு பயம். அவர் செய்ய முடியாம தவிக்கறப்போ, எனக்கு அழுகை அழுகையா வரும், அடக்கிக்குவேன்! பால் பொங்கி வரப்போ பட்டுன்னு தண்ணிய தெளிச்சு அடக்கிடற மாதிரி, எனக்கு உணர்ச்சி கூடி வரப்போ பட்டுன்னு முடியலைன்னு எழுந்துப் போய்டுவாரு. நான் பாத்ரூம்ல உட்கார்ந்து சத்தம் போடாம அழுவேன். இந்த விஷயம் என் மனச ரொம்பப் பாதிக்க ஆரம்பிச்சது. ஒரு தடவை இப்படி மீண்டும் நடக்கவும் நான் கதறி அழுதுட்டேன். அவரும் என்னைப் பிடிச்சுக்கிட்டு அழுதுட்டாரு! நான் எவ்வளவோ முயற்சி பண்ணறேன், என்னால முடியல. என்னை மன்னிச்சிடுன்னு ஒரே அழுகை. எனக்கு அவர் அப்படி அழவும் ரொம்ப அதிர்ச்சி ஆயிடுச்சு. அவருமே உள்ளுக்குள்ள நொருங்கித்தான் போயிருக்காருன்னு அப்போத்தான் புரிஞ்சுக்கிட்டேன். இந்த மாதிரி விஷயங்கள் ஆண்களை எப்படி பாதிக்கும்னு நீ சொன்னப்போ என்னால நல்லா புரிஞ்சுக்க முடிஞ்சது. ஏன்னா இத நானே கடந்து வந்துருக்கேன். எனக்குள்ள ஒரு தாழ்வு மனப்பான்மைய இந்த உறவு உருவாக்கிடுச்சு நேதன். நீ கல்யாணத்துக்கு கேட்டப்போ நான் ரொம்ப பயந்ததுக்கு இதுவும் ஒரு காரணம். என்னால உன்னை எக்சைட் பண்ண முடியாதோன்னு ஒரு பயம். எப்படி சொல்லன்னு தெரியலடா! நான் அந்த உறவுக்கு லாயக்கு இல்லையோன்னு எனக்குள்ள ஒரு ஃபோபியா!”

காலை மடக்கி முட்டியில் தலை சாய்த்துக் கொண்டவளுக்கு கண்ணீர் மட்டும் நிற்கவில்லை. அழுது கவலையெல்லாம் தீர்க்கட்டும் என இவனும் விட்டுவிட்டான்.

“ரெண்டு பேரும் டாக்டர பார்க்கப் போனோம். அவருக்கு டைப் 2 டயபெட்டிஸ் இருக்குன்னு சொல்லிட்டாங்க. வெயிட் லாஸ், உறவு வச்சிக்க முடியாத நிலைமை, அடிக்கடி ஓன் பாத்ரூம் போறது இதெல்லாம் அதோட அறிகுறின்னு சொன்னாங்க. இன்சுலின் ஊசி போட்டே ஆகனும்னு சொல்லிட்டாங்க. அதோட கிட்னியும் லேசா பாதிக்க ஆரம்பிச்சிருக்குன்னு சொன்னாங்க. இடிஞ்சுப் போயிட்டாரு இவரு. நான் தான் அவர தேத்தி வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தேன். அவர் பட்ட மனக்கஸ்டத்தை கண் கொண்டு பார்க்க முடிலடா என்னால. என் வாழ்க்கையை வீணாக்கிட்டதா சொல்லி சொல்லி அழுதாரு. என்னால உனக்கு நல்லா புருஷனா இருக்க முடியலையேன்னு அழுகை. ஆண்கள் அழ மாட்டாங்கன்னு யார் சொன்னது? அவங்களுக்கும் மனசு விட்டுப் போகறப்போ அழுகை வரத்தான் செய்யும்னு நான் இவர பார்த்துத்தான் தெரிஞ்சுக்கிட்டேன்.”

தன் மனக் கொந்தளிப்பைக் கொட்டிக் கொண்டிருக்கும் வேணியையேப் பார்த்திருந்தான் நேதன்.

“கல்யாணத்துக்கு முன்னமே இந்த மாதிரி சீக்கு இருக்குன்னு தெரிஞ்சும் என்னை கட்டி இருந்தா அது அவர் எனக்கு செஞ்ச துரோகம். தெரியாமத்தானே கட்டிக்கிட்டாருன்னு மன்னிச்சி விடவும் மனசு வரல. உடம்புல சில பல மாற்றம் இருக்குன்னு தெரியறப்பவே போய் டாக்டர பார்த்து என்ன பிரச்சனைன்னு தெரிஞ்சிக்கறது இல்லையா? மலாய்காரங்களாம் இதனாலத்தான் கல்யாணம் செய்யற முன்ன மெடிக்கல் செக் அப் செய்றாங்க போல! கல்யாணத்துக்கு பத்து பொருத்தம் பார்க்கற நாம மட்டும், உடம்புல என்ன நோய் நொடி இருக்குன்னு பார்க்கறது இல்ல.”    

“உடல் சுகத்த விடு, எல்லாப் பொண்ணுங்கள மாதிரியும் கல்யாணம் ஆனதும் அடுத்து குழந்தைத்தான்னு எனக்கும் ஆசை இருக்காதா? இருந்தது நெஞ்சு முட்ட ஆசை இருந்தது. என் தம்பிக்கு குழந்தை பிறந்தப்போ சந்தோஷமா இருந்தாலும், இதெல்லாம் நமக்கு வாய்க்கலையேன்னு மனசு ஓரத்துல அவ்ளோ வலி. அந்த வரம் கிடைக்குமா கிடைக்காதான்னு தெரியாம நான் தவிச்சத் தவிப்பு எனக்குத்தான் தெரியும். இவர் கண் கலங்கி நிக்கறதையும் என்னால தாங்கிக்க முடியலடா! புருஷன்னு பாசம் வச்சிட்டேனே! என்னை இனிமே தோழியா மட்டும் பாருங்க, மனைவியா வேணாம்! மனைவியா நெனைச்சாத்தானே இவள சந்தோஷப்படுத்த முடியலைன்னு கலக்கம் வருது, இனிமே நாம நண்பர்களா இருந்துக்கலாம்னு சொல்லிட்டேன். அத சொன்னதும் எனக்குள்ளயும் ஒரு நிம்மதிடா! புருஷனா பார்க்கறப்போத்தானே எனக்கு இந்த சுகத்த இவரால தர முடியலையேன்னு கோபம், வருத்தம் எல்லாம் வரும். நண்பனா பார்க்க ஆரம்பிச்சதும் அவரோட துக்கமும் புரிஞ்சது, வேதனையும் தெரிஞ்சது. ஒருத்தருக்கு ஒருத்தர் ஆறுதலா இருக்க ஆரம்பிச்சோம்.”

“அப்போ கேஷவ் எப்படி வந்தாரு?” என கேட்டான் நேதன்.

“எங்களுக்கு குழந்தைப் பிறக்க வழியே இல்லையான்னு டாக்டர்ட்ட கேட்டப்போ ஐ.யூ.ஐ(ஆண் விந்தணுவை எடுத்து, செயற்கை முறையில் பெண் கர்ப்பப்பையில் செலுத்துவது) ட்ரை செய்யலாம்னு சொன்னாங்க! அது அவ்வளவு செலவு இல்ல. மூனு தடவை ட்ரை செஞ்சோம் பெயில் ஆகிடுச்சு. அடுத்தது ஐ.வி.எப் தான் முடியும்னு சொல்லிட்டாங்க. அதுக்கு கவர்மேண்ட்ல உதவி தொகை குடுக்கறாங்கன்னு கேள்விப்பட்டு எழுதி போட்டோம். அந்த உதவி கிடைக்க வெய்ட்டிங் லிஸ்ட்ல நிக்கனும். எங்களுக்கும் சில பல வருஷம் கழிச்சு உதவி கிடைச்சது. முதல் அட்டேம்ப்ட்லயே இவன் தங்கிட்டான். ஆனா எனக்கு அஞ்சு மாசம் இருக்கும் போது, இவர் ரெண்டு கிட்னியும் பெயிலிராகி இறந்துட்டாரு. அவரோட மகன கண்ணால பார்க்காமலே போயிட்டாரு!” என சொன்னவளுக்கு கண்ணீர் கன்னத்தில் வழிந்தது.   

இவனும் கீழே இறங்கி அமர்ந்தவன், அவளைத் தன் மடியில் சாய்த்துக் கொண்டான். மெல்ல அவள் தலையைத் தடவிக் கொடுக்க அவளது அழுகை மெல்ல மெல்ல அடங்கியது.

“இவ்ளோ கஸ்டப்பட்டிருக்கனுமாமா? ஏன் அவர நீ டிவோர்ஸ் பண்ணிட்டு உன் வழிய பார்த்துக்கல?”

“ஏன்னா எனக்குள்ள அந்தப் பாழாப்போன மனிதாபிமானம், இரக்கம், பாசம், பரிவு, அனுதாபம் எல்லாம் நிறைஞ்சுக் கிடக்கு. அதெல்லாம் இருக்கவும்தான் எப்படியோ கெட்டு ஒழிங்கடா, என் வாழ்க்கையை நான் பார்த்துக்கறேன்னு போகாம தம்பிகள தலையில தூக்கி சுமந்தேன். அஞ்சு நிமிஷம் கிடைக்கற அந்த சுகத்துக்காக, கலங்கி தவிச்சு நிக்கிற இந்த மனுஷன விட்டுட்டுப் போக மனசு வரலடா. நான் விட்டுட்டுப் போனா, அந்த துக்கமே அந்தாள பாதி கொன்னுடும். என்னை மாதிரியே குடும்பம், கடமைன்னு ஓயாம உழைச்சு, சரியான நேரத்துல சாப்பிடாம, உடம்ப பேணாம இருந்திட்ட அந்த மனுஷன் மேல எனக்கு கடலளவு பாசம் இருந்தது. எக்கேடோ கெட்டுப் போடான்னு விட்டுட்டுப் போக முடியலை! இப்படியே வாழ்ந்து முடிச்சிடுவோம்னு நெனைச்சேன். இப்படி சட்டுன்னு நெலமை மோசமாகி என்னை விட்டுட்டுப் போயிடுவாருன்னு நெனைக்கல!”   

ஐந்து நிமிட சுகத்துக்காக கணவரை விட்டுவிட்டுப் போக மனம் வரவில்லை என சொன்னவளை ஆழ்ந்துப் பார்த்தான் நேதன். அந்த ஐந்து நிமிட சுகமே தம்பதியரின் மொத்த வாழ்க்கையின் மகிழ்ச்சியை நிர்ணயிக்கக் கூடியது என பல உளவியல் சான்றுகள் கூறுகின்றன என அவளிடம் சொல்ல மனம் வரவில்லை இவனுக்கு. உடல் அளவில் மகிழ்ச்சி அடையாத கணவனோ மனைவியோ எப்படித்தான் சகித்துக் கொண்டு வாழ்ந்தாலும், மனதின் மூலையில் தன் துணையின் மேல் கண்டிப்பாக கசப்போ கோபமோ இருக்கத்தான் செய்யும். அந்த கோபமே வேறு வடிவில் பல சமயங்களில் வெளியே வந்து நிற்கும். குழம்பில் உப்பில்லாத போது ‘நீ எதற்குத்தான் பிரயோஜனமாய் இருக்கிறாய்?’ என இரட்டை அர்த்தத்தில் இவனும், வாங்கி வர சொல்லிய பொருள் சரியில்லாமல் போனால், ‘எந்த வேலையாச்சும் ஒழுங்கா செய்ய வருதா? துப்புக் கெட்ட மனுஷன்!’ என இவளும் சாடைமாடையாய் திட்டிக் கொண்டே காலத்தை ஓட்டுபவர்கள் எத்தனையோ பேர்!

தன் ஆண்மையை கேவலமாக்கிய ஒருத்தியால் மனதளவில் பாதிக்கப்பட்ட இவனும், தன் பெண்மையால் கணவனை கவர முடியவில்லையோ என மன உளைச்சலில் வெதும்பிப் போன இவளும் ஒன்று சேர்ந்து மனக்காயத்தை ஆற்றிக் கொள்வதுதான் இறைவனின் சித்தமோ!

மனைவியும் மகனும் உறங்குவதையே பார்த்திருந்தவன், எப்பொழுது தூங்கிப் போனான் என்பது அவனுக்கே தெரியாது.

 

(போன எபிக்கி லைக், கமேன்ட் போட்ட அனைவருக்கும் எனது நன்றி. இன்னும் ரெண்டு எபில கதை முடிஞ்சிடும். நாளைக்கும் , திங்அலும் போட்டு முடிச்சிடுவேன்.. படிச்சிட்டு உங்க கருத்த பகிர்ந்துக்குங்க. லவ் யூ ஆல்)