அழகியே 23
அழகியே 23
- Posted on
- shanthinidoss
- July 29, 2021
- 0 comments
அழகு 23
அம்மாவின் கேள்வியில் வருண் ஆடிப்போய்விட்டான். இத்தனைக் காலம் கழித்து அம்மாவிற்கு ‘மயூரி’ என்ற பெயர் ஞாபகம் இருக்கும் என்று அவனெங்கே கண்டான்!
“அம்மா, கொஞ்ச நேரம் அமைதியா இருங்கோ.”
“உண்மையைச் சொல்லு தம்பி, அன்டைக்கு அந்த கேப்டன் சொன்ன பொண்ணு இந்தப் பொண்ணுதானோ?” ராகினியின் கேள்வியில் விஷாகாவும் மயூரியும் வருணை பார்த்தார்கள்.
“…………….” வருண் அமைதி காத்தான்.
“இந்தப் பிள்ளை மேல ஆசை இருந்ததாலதான் நான் பார்த்த எல்லாக் கலியாணத்தையும் வேண்டாம் என்டு சொன்னனீயோ?” இந்தத் தகவல் அங்கிருந்த மற்றைய இரண்டு பெண்களுக்கும் புதிய தகவல்.
“…………….” இப்போதும் வருண் அழுத்தமாக அமர்ந்திருக்க ராகினிக்கு கோபம் வந்தது.
“எங்க உன்ட ஃபோன்? அந்த கேப்டனுக்கு ஒரு காலைப் போடு, அந்தக் கல்லுளி மங்கனுக்குத்தான் உன்ட வண்டவாளம் எல்லாம் தெரியும்.” சொன்னவர் மகனின் ஃபோனை எடுத்து டாமினிக்கை அழைத்தார்.
“அம்மா ப்ளீஸ்… இப்ப என்னத்துக்கு அந்த மனுஷனை டிஸ்டர்ப் பண்ணுறியள்?” வருணின் பேச்சை அவர் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.
டாமினிக்கிற்கு கால் பறந்தது. அதுவும் சாதாரண கால் அல்ல, வீடியோ கால். டாமினிக்கும் சட்டென்று அழைப்பை ஏற்றான், ஆர்ப்பாட்டமாக.
“ஹலோ விபி!” கலாட்டாவாக அழைத்தவன் திரையில் விபி யின் அம்மாவைக் காணவும் திகைத்தான்.
“ஆன்ட்டி? எப்பிடி இருக்கீங்க? விபி எங்க?” கேப்டன் ஆச்சரியப்பட்டான்.
“ஏன் கேப்டன், உன்னையும் நான் என்ட பிள்ளை மாதிரித்தானே இத்தனை நாள் நினைச்சனான்? இவ்வளவு பெரிய விஷயத்தை நீ என்னெட்ட இருந்து எப்பிடி ஐயா மறைக்கலாம்?” ராகினி இப்போது அழுதார்.
“ஆன்ட்டி?! என்னாச்சு ஆன்ட்டி? ஏன் அழுறீங்க?!” டாமினிக் அங்கே பதறினான்.
“இது யாரு கேப்டன்?” தன் புறமாக இருந்த வீடியோவை இப்போது மயூரியின் புறமாக மாற்றினார் ராகினி. டாமினிக் அதிர்ச்சியில் உறைந்து போனான்.
“ஆன்ட்டி?! மயூரி… மயூரி… எப்பிடி?”
“ஆக… உனக்கு எல்லாமே தெரிஞ்சிருக்கு… எங்கிட்ட நீ எதுவுமே சொல்லேயில்லை?” ராகினியின் குற்றம் சாட்டும் பார்வையில் டாமினிக் சிறிது நேரம் அமைதியாக இருந்தான். மயூரி குனிந்த தலை நிமிரவில்லை.
“இங்க நடந்திருக்கிற கூத்தையெல்லாம் பார்த்தா நீ ஆடிப்போயிருவாய் தம்பி.”
ஆன்ட்டி… சம்பந்தப்பட்டவனே வாயைத் திறக்காம இருக்கும் போது நான் என்னத்தை உங்கக்கிட்டச் சொல்ல முடியும்னு சொல்லுங்க?”
“அந்த விசரன்ட கதையை விட்டுப்போட்டு நீ எங்கிட்ட எல்லாத்தையும் சொல்லி இருக்கலாம்தானே?”
“இப்போ விபி எங்க?”
“அவன் எங்க இருந்தா உனக்கென்ன தம்பி, நீ விஷயத்துக்கு வா.” ராகினி நடந்தவற்றை அறிந்து கொள்ளும் ஆவலில் மற்றையது எதையும் பேச மறுத்தார்.
ஆனால் தன்னைப் பார்க்காமல் கேப்டன் வாயைத் திறக்க மாட்டான் என்று புரிந்த வருண் சட்டென்று எழுந்து அம்மாவின் அருகில் வந்தான்.
இப்போது திரையில் வருணின் முகம் தெரிய டாமினிக் அவனைக் கண்களாலேயே கேள்வி கேட்டான். வருண் எதற்கோ அனுமதி கொடுக்க டாமினிக் இப்போது தடையின்றிப் பேச ஆரம்பித்தான்.
“நான் அன்னைக்கே மயூரி பத்தின பேச்சை எடுத்தேனே ஆன்ட்டி, உங்களுக்கு ஞாபகம் இருக்கா?”
“ஆனாப் பிறகு நான் கேட்டப்ப நீ இல்லையென்டுதானே தம்பி சாதிச்சாய்?”
“ஆன்ட்டி… உங்க பையனுக்கு மயூரியை ரொம்பப் புடிக்கும், முதல்ல அவனுக்கே அது புரியலை, நாம சொன்னாலும் அவன் ஏத்துக்க மாட்டான்.”
“ஏன் ஏத்துக்க மாட்டான்?”
“ஏன்னு கேட்டா அவ அழககோனோட பொண்ணுன்னு சொல்லுவான்.”
“ஓ…” இப்போது திகைத்தது ராகினி மட்டுமல்ல விஷாகாவும்தான்.
“ஷிப்ல இருக்கும் போதே நான் பல தடவை விபி கிட்ட சொல்லி இருக்கேன், மயூரி கண்ணுல உன்னைப் பார்…”
“கேப்டன்! என்னைப் பத்தி மட்டும் பேசுங்க, வேற எந்தப் பேச்சும் இங்க வேணாம்.” சட்டென்று டாமினிக்கின் பேச்சை வருண் தட்டிவிட்டான்.
ராகினி தன் மகனை இப்போது புரியாத பார்வைப் பார்த்தார். மயூரிக்கு முகமெல்லாம் சிவந்து போனது. மயூரியை தன் தாயிடமிருந்து மறைத்தாற் போல வந்து நின்று கொண்டான் வருண்.
“இன்னமும் ஏதாவது என்னெட்ட மறைக்க இருக்கோ கேப்டன்?” ராகினி மீண்டும் கலங்கினார்.
“ஆன்ட்டி… எனக்குத் தெரிஞ்சதெல்லாம் ஒன்னுதான், விபி க்கு மயூரியை பிடிக்கும், ஆனா அதை இப்பக்கூட ஏத்துக்க மாட்டான், இல்லைன்னா நீங்க பார்த்த பொண்ணுங்களையெல்லாம் எதுக்கு வேணாம்னு சொன்னாராம் சார்?!”
“அதானே!” ராகினியும் இப்போது அதிசயித்தார்.
“சரி, அதையெல்லாம் விடுங்க, எதுக்கு லோரா வை வேணாம்னு சொன்னாராம்?”
“லோரா வோ? அது யாரு?” ராகினி திடுக்கிட, மயூரி வருணை அண்ணார்ந்து பார்த்தாள். வருண் இப்போது தலையில் அடித்துக் கொண்டான்.
“யோவ் கேப்டன்! இது எத்தனை நாளைய கோபம்யா? இன்னைக்கு எம்மேல சரமாரியா கொட்டுறே?” மரியாதை காற்றில் பறக்கப் பாய்ந்தான் விபி. டாமினிக் அந்நப்புறம் இடி இடியென சிரித்தான்.
“ஆன்ட்டி, லோரா எங்கக்கூட ஷிப்ல வேலை பார்த்த பொண்ணு, லண்டன் பொண்ணுதான், உங்க பையன்னா அவளுக்குப் பைத்தியம், பின்னாடியே அலைஞ்சு பார்த்தா, உங்கப் பையன் அசைஞ்சு குடுக்கலையே!”
“ஓ…” ராகினி இப்போது பெருமூச்சு விட்டார். மயூரி முகத்தைச் சட்டென்று வேறு புறமாகத் திருப்பிக் கொண்டாள்.
“அப்பக்கூட நான் உங்க பையன் கிட்ட சொன்னேன், இந்த லோரா இல்லை, வேற எந்தப் பொண்ணையுமே உன்னால திரும்பிக் கூடப் பார்க்க முடியாது, பேசாம மயூரிகிட்ட போயிடுன்னு, கேட்டாத்தானே!”
“……………..”
“உங்க பையன் என்னைக்காவது உங்களை ஷாப்பிங் கூட்டிட்டுப் போயிருக்கானா ஆன்ட்டி?” கேப்டன் இன்றைக்கு ஒரு முடிவோடுதான் இருந்தான்.
“ஷாப்பிங்கா? என்னையா?!” ராகினி விழித்தார்.
“ஆங்… அப்பிடிக் கேளுங்க! பெனாங் ல நம்ம விபி ஒரு நாள் பூரா மயூரி கூட ஊர் சுத்தி ஷாப்பிங் பண்ணினாரு! அன்னைக்கு ஐயா எவ்வளவு செலவு பண்ணினாரு தெரியுமா?” இப்போது ஆச்சரியப்பட்டது விஷாகா. வருணுக்கு தன் மகளைப் பிடிக்குமா?!
“கேப்டன்! போதும் போதும் நிறுத்துங்க, விட்டா இன்னைக்கு முழுக்கப் பேசுவீங்க போல இருக்கு?” வருண் இடையில் குறுக்கிட்டான்.
“விபி, உன்னை வெச்சு செய்ய இன்னைக்கு அருமையா ஒரு சான்ஸ் கிடைச்சிருக்கு, விடுவேனா?” ஆர்ப்பாட்டமாக டாமினிக் சிரிக்க, இது நேரம் வரைத் திகைத்துப்போய் அங்கே நின்றிருந்த சரவணனும் சிரித்தான்.
மேடமுக்கு சாரை பிடிக்கும். இது சரவணனுக்கு தெரியும். ஆனால் சாருக்கும் மேடமை இவ்வளவு பிடிக்கும் என்று இப்போதுதான் அவனுக்குத் தெரியும்! மகிழ்ந்து போனான்!
அதற்கு மேல் கேப்டன் அதிக நேரம் பேசவில்லை. தன்னால் முடிந்த அளவு வருணை நன்றாக மாட்டிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.
இப்போது அங்கே ஒரு அசாத்திய அமைதி நிலவியது. யாருக்கு என்னப் பேசுவது என்று ஒன்றுமே புரியவில்லை.
ராகினி தான் அமர்ந்திருந்த நாற்காலியில் அப்படியே அமர்ந்திருந்தார். எல்லோரும் அவரவர் இடத்தில் உறைந்தது போல நின்றிருந்தார்கள்.
ஏதோ அரவம் கேட்க சட்டென்று திரும்பினார் ராகினி. அவர் பார்வைத் திரும்பிய இடத்தில் அனுவும் ஆர்யனும் நின்றிருந்தார்கள்!
இது நேரம் வரைச் சண்டை, சச்சரவு, ஆர்ப்பாட்டம் என்று இருந்த பெரியவர்கள் தூங்கும் குழந்தைகளைக் கவனிக்கவில்லை.
பெரியவர்களின் சத்தத்தில் குழந்தைகள் எப்போதோ கண்விழித்திருந்தார்கள். ஆனால் யாரும் வந்து தங்களைக் கவனிக்காததால் சிறிது நேரம் பொறுத்தும் பார்த்துவிட்டு தாங்களே எழுந்து வெளியே வந்துவிட்டார்கள்.
ராகினிக்கு சரவணன் வாய் மூலமாகக் குழந்தைகள் விஷயமும் தெரிய வந்திருந்தது. ஆனால் மகனைப் பார்த்தவுடன் கோபம், ஏமாற்றம், இயலாமை என பல அலைகளால் அடிக்கப்பட்டவர் குழந்தைகளை மறந்து போயிருந்தார்.
குழந்தைகள் அங்கே வந்த போது அனைவரது பார்வையும் ராகினியிடமே பாய்ந்தது. இப்போது அவரது ரியாக்ஷன் எப்படி இருக்குமோ என்று பயந்து போயிருந்தார்கள்.
வருணிற்கும் அந்தப் பயம் இருந்திருக்கும் போலும். அமைதியாகத் தன் தாயின் அருகில் வந்தவன் அவர் அமர்ந்திருந்த நாற்காலியின் அருகில் மண்டியிட்டு அமர்ந்தான்.
சில நொடிகள் மூச்சுவிட மறந்து அமர்ந்திருந்தார் ராகினி. அம்மாவின் நிலையைப் புரிந்து கொண்ட வருண் அவர் கையைப் பிடித்து லேசாக அசைத்தான்.
“அம்மா…” ராகினி பதிலேதும் சொல்லவில்லை. இமைக்கக் கூட மறந்து அப்படியே அமர்ந்திருந்தார்.
“அம்மா…” மீண்டும் அம்மாவை அழைத்தான் மகன். அந்த நொடி ராகினியின் கண்களில் இருந்து அருவி கொட்டியது.
தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தவர் வருணை இப்போது சரமாரியாக அடிக்க ஆரம்பித்தார். வருண் அப்படியே அசையாமல் அமர்ந்திருந்தான்.
யாரும் எதுவும் பேசாமல் அவரவர் இடத்தில் அமைதியாக நின்றிருந்தார்கள். தன் அம்மா அவர் கோபம் தீருமட்டும் தன்னை அடித்துக் கொள்ளட்டும் என்று வருணும் அவரைத் தடுக்கவில்லை.
ஆனால், குழந்தைகள் இரண்டும் தங்கள் தந்தையிடம் ஓடி வந்தன. தங்கள் தந்தையை இரண்டு நாட்களுக்கு முன்பாகத்தான் தாங்கள் பார்த்தோம் என்பது அவர்களுக்கு மறந்து போனது.
ஜென்மாந்திர உறவு அல்லவா அது! புதிதாக வீட்டுக்கு வந்திருக்கும் யாரோ தங்கள் தந்தையை அடிப்பதை அவர்களால் தாங்கிக் கொள்ள இயலவில்லை.
இத்தனைக்கும் ஆர்யன் தன் தந்தையை அவ்வளவு தூரம் நெருங்காதவன். அவன் கூட இப்போது பாய்ந்து வந்து தன் தந்தையின் பக்கத்தில் அரண் போல நின்று கொண்டான்.
ஆனால் அந்தப் பொடுசு முழங்காலிட்டு அமர்ந்திருந்த தன் தந்தையின் மேல் ஏறி அவரின் கழுத்தைக் கட்டிக் கொண்டது.
அதோடு மாத்திரம் நிறுத்தாமல் புதிதாக வந்திருக்கும் அந்தப் பெண்மணியைப் பார்த்து முறைத்தது, கண்களாலேயே எரித்தது.
ராகினி அதிர்ந்து போனார்! என்ன நடக்கிறது இங்கே? குழந்தைகளைப் பார்த்த அதிர்ச்சி அந்த நொடி காணாமல் போயிருக்க, தன் மகனை அவர்கள் தன்னிடமிருந்தே காத்து நின்ற காட்சியே மனதுக்குள் பதிந்து போனது.
சட்டென்று ராகினியின் பார்வை மயூரியிடம் போனது. உதட்டைக் கடித்த படி தலைகுனிந்து நின்றிருந்தாள்.
ராகினியின் மனதுக்குள் சட்டென்று ஒரு வெறுமை வந்து உட்கார்ந்து கொண்டது.
‘இதுவரை தனக்கு மட்டுமேயாக இருந்த வருண், இனி அப்படி இல்லையா?! அவனுக்கென்றொரு குடும்பம் வந்துவிட்டதா?!’ எண்ணத்தின் போக்கு இன்றைக்கு விசித்திரமாக இருப்பதை உணர்ந்தார் ராகினி.
ஏனோ தெரியவில்லை, அந்த நொடி தன்னைக் கடைசி வரை வெறுத்து ஒதுக்கிய மாமியாரின் முகம் ஞாபகம் வந்தது.
‘நானும் அவரைப் போல ஒரு சாதாரண மாமியாராகத்தான் இருக்கப் போகிறேனா?!’ அப்படி நினைத்த மாத்திரத்தில் ராகினியின் உடம்பை ஏதோ செய்தது.
அத்தனைக் கோபமும் வருண் மேல் திரும்பியது. இவன் எல்லாவற்றையும் முறைப்படி செய்திருந்தால் தனக்கு இப்படியொரு நிலை வந்திருக்குமா என்ற சுய பச்சாதாபம் தோன்றியது.
தன்னை ஆசையோடு நெருங்க வேண்டிய பேரக் குழந்தைகளே தன்னை எதிரியாகப் பார்க்கும் நிலைக்கு இவன் கொண்டு வந்து விட்டானே என்று மறுகிப் போனார்.
“சரவணா!” சத்தமாக அழைத்தார் ராகினி. சரவணன் விரைந்து வந்தான்.
“இவன் இனி இங்க இருக்கக்கூடாது சரவணன், போகச் சொல்லுங்கோ, என்ட கண்ணுல படாம எங்கயாவது போகச் சொல்லுங்கோ!”
ராகினியின் வார்த்தைகளில் அத்தனைப் பேரும் திகைத்துப் போனார்கள். வருணும் முதலில் திடுக்கிட்டாலும் பிற்பாடு சிரித்துக் கொண்டான்.
***
சீகிரிய குன்றின் முன்பாக நின்றிருந்தார்கள் வருணும் சரவணனும். ராகினி அத்தனைக் கோபமாகப் பேசவும் அதன் பிறகு வருண் அங்கே தாமதிக்கவில்லை.
குழந்தைகளைச் சமாதானம் பண்ணி மயூரியிடம் கொடுத்துவிட்டு சரவணனோடு கிளம்பி வந்து விட்டான்.
“சார்… என்னை மன்னிச்சிடுங்க சார்.” சரவணன் மிகவும் வருத்தத்தோடு சொன்னான்.
“பரவாயில்லை விடுங்க சரவணன், எப்ப இருந்தாலும் தெரிய வேண்டிய விஷயந்தானே.”
“நான்… சொல்லணும்னு சொல்லலை சார், திடீர்னு ஃபோன் பண்ணினாங்க.”
“ம்…”
“ஏதாவது வெளியே போற வேலை இருக்குமாக்கும்னு நினைச்சுத்தான் போனேன், ஆனா பிடிபிடின்னு பிடிச்சுட்டாங்க சார்.”
“ஓ…”
“என்னால எதுவுமே பண்ண முடியலை, ஏதாவது ஏடாகூடமா ஆகிறதை விட நானே கூட்டிட்டு வர்றது பெட்டர்னு தோணிச்சு சார்.”
“புரியுது சரவணன்.”
“வர்ற வழியெல்லாம் ஒரே யோசனையிலேயே இருந்தாங்க, இடையிடையே மேடமை பத்தி குழந்தைங்களைப் பத்தி விசாரிச்சாங்க.”
“ம்…”
“ஆனா ஒரு மாதிரி இறுகிப் போய் உட்கார்ந்திருந்தாங்க, பார்க்கவே பயமா இருந்துச்சு சார்.” இப்போது வருண் பெருமூச்சு விட்டான்.
“ஹோட்டல்ல ரூமை புக் பண்ணிடுங்க சார்.” சரவணன் சாதாரணமாகச் சொல்ல வருண் திகைத்தான்.
“எதுக்கு சரவணன் ரூம்?”
“இன்னைக்கு நைட் நீங்க தங்கணுமில்லை சார்? இந்த சமயத்துல வீட்டுக்குப் போறது நல்லதில்லை, நாம கிளம்பும் போது மேடமோட அம்மாவும் அதைத்தான் எங்கிட்டச் சொன்னாங்க சார்.”
“என்னன்னு?”
“கொஞ்சம் அக்காவோட கோபம் அடங்கட்டும், அதுக்கப்புறம் நீங்க வீட்டுக்கு வரலாம்னு சொன்னாங்க.”
“என்ன ஆளாளுக்கு விளையாடுறீங்களா? நான் எப்பிடி என்னோட பொண்டாட்டி, புள்ளைங்களை விட்டுட்டு இருக்கிறது?” வருணின் இந்தக் கேள்வியில் இப்போது சரவணன் திகைத்தான்.
‘ஏதோ வருடக்கணக்காகக் குடும்பம் நடத்தியவர் போல இது என்ன பேச்சு?!’
“சரவணன், இன்னைக்கு ஒன்னைக் கவனிச்சீங்களா?” முகம் முழுவதும் புன்னகையில் மகிழ்ந்து விகசிக்க வருண் பேச ஆரம்பித்த போது சரவணன் ஆர்வமாக வருணின் முகத்தைப் பார்த்தான்.
“எதை சார்?”
“அம்மா என்னைத் திட்டுறாங்க, அடிக்கிறாங்க…” அந்த நிமிடங்களுக்கே மீண்டும் போய் விட்டவன் போல வருண் பேசிக்கொண்டிருந்தான்.
“ப்ரதாயினி அம்மாவை எதிர்த்துப் பேச முடியாம பல்லைக் கடிச்சிக்கிட்டு நிக்கிறா…” சரவணன் குறுக்கிடாமல் வருணை பேச விட்டான்.
“ஆர்யனுக்கு எங்கிட்ட இன்னும் அவ்வளவு நெருக்கம் வரலை, ஆனாலும் எங்கிட்ட வந்து பக்கத்துல நின்னான்.”
“கவனிச்சேன் சார்.”
“ஆனா அனுவை பார்த்தீங்களா? பாய்ஞ்சு வந்து என் கழுத்தைக் கட்டிப் புடிச்சாப் பாருங்க!” வருணின் குரல் லேசாகக் கலங்கியது.
“ராட்சசன் மாதிரி நின்ன அந்த க்ரூஸ்ல ஒத்தை ஆளா கேப்டன்னு போய் நின்னப்ப கூட எனக்கு இவ்வளவு பெருமையும் கர்வமும் வரலை சரவணன்.” சொல்லிவிட்டு வருண் அழுது விட்டான்.
“சார்!”
“அவ எம்பொண்ணு சரவணன்… எம் பொண்ணு!” பேசிப் பேசி அழுத வருணை சரவணன் இறுக அணைத்துக் கொண்டான்.
மனதெல்லாம் நிறைந்து போனது சரவணனுக்கு. வருண் இந்த மண்ணில் காலை வைத்த நொடி முதல் அவனுக்கு வருணை தெரியும்.
ஒரு கஸ்டமரை போல நினைக்காமல் தன் உடன்பிறப்பைப் போலத்தான் வருணை அவன் நினைத்திருக்கிறான்.
அதே போலத்தான் வருணும், இவ்வளவு பெரிய பதவியில் இருந்தும் சரவணனை என்றைக்கும் அவன் ஒரு ட்ரைவர் போல நடத்தியதில்லை.
குடும்ப விஷயங்கள் முதற்கொண்டு அனைத்தையும் சரவணனிடம் பகிர்ந்து கொள்வான். மேடமும் சாரும் ஒன்று சேர்ந்துவிட மாட்டார்களா என்று அவன் நிரம்பவும் ஆசைப்பட்டதுண்டு.
இன்றைக்கு அதே சார் மேடம் மூலமாக இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையாகி, தான் ஒரு தந்தை என்பதையும் மனதளவால் உணர்வது அவனுக்கு மிகவும் திருப்தியாக இருந்தது.
***
வீடு மிகவும் அமைதியாக இருந்தது. வருண் வீட்டை விட்டு வெளியே போன பின்பு ராகினி விஷாகாவை கட்டிக்கொண்டு ஓவென்று அழுதார், புலம்பினார்.
வயது போன இரு பெண்களும்
அவரவர் கவலைகளை மனம் விட்டுப் பேசிக்கொள்ள, மயூரி குழந்தைகளை அழைத்துக்கொண்டு ரூமிற்கு வந்துவிட்டாள்.
குழந்தைகள் இருவரும் ராகினியின் அருகில் கூட நெருங்கவில்லை. விஷாகா எவ்வளவு முயன்றும் குழந்தைகள் தன் தந்தையின் தாயிடம் போகவேயில்லை.
பெயருக்கு உண்டார்கள். மயூரி எதற்காகவும் ராகினியின் முன்பாக நடமாடவே இல்லை. அவரின் முழுக் கோபமும் தன்மேல்தான் இருக்கும் என்பதில் அவளுக்கு ஐயமில்லை!
ராகினியும் குழந்தைகளை ஆசையோடு பார்த்தாரே ஒழிய அவர்களை நெருங்க முயலவில்லை.
அது அவர்களைக் கலவரப் படுத்தக் கூடாது என்ற அவரது எண்ணம் என்று அவளுக்குப் பிற்பாடுதான் புரிந்தது.
குழந்தைகள் இரண்டும் உறங்கிய பிற்பாடு மயூரியின் ரூமிற்கு விஷாகாவோடு வந்தவர் அவர்களைத் தடவிப் பார்த்து மகிழ்ந்தார். உச்சி முகர்ந்தார்.
விஷாகா குழந்தைகளைப் பற்றி ஒவ்வொன்றாகச் சொல்லச் சொல்ல ஆவலோடு கேட்டுக் கொண்டார்.
மயூரி அப்போது அங்கே இருக்கவில்லை. ரூமை விட்டு வெளியே வந்து விட்டாள்.
நேரம் இரவு பத்தைத் தாண்டி இருந்தது. பெரியவர்கள் இருவரும் உண்டுவிட்டு விஷாகாவின் ரூமிலேயே படுத்துக் கொண்டார்கள்.
மனதளவில் இரண்டு பேரும் இன்றைக்கு வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்ததால் உடம்பும் அயர்ந்து போனது. தூங்கிப் போனார்கள்.
மயூரிக்கு இப்போது வருணின் ஞாபகம் வந்தது. எந்த ஹோட்டலில் தங்குகின்றானோ தெரியாது. மாற்றுடை கூட எதுவும் எடுத்துக்கொண்டு போகவில்லை.
ஃபோனை போட்டு விசாரிக்கலாம் என்று அலைபேசியை எடுத்தாள். அதே நேரம் வருண் அவளை அழைத்துக் கொண்டிருந்தான்.
“அத்தான்! எங்க இருக்கீங்க அத்தான்?” மயூரி படபடத்தாள்.
“கதவைத் திற ப்ரதாயினி.”
“என்ன?!” மயூரிக்கு தூக்கிவாரிப் போட்டது.
“எதுக்கு இவ்வளவு ஷாக் ஆகிற? கதவைத்தானே திறக்கச் சொன்னேன்!”
“ஐயோ அத்தான்! உங்கம்மா தூங்குறாங்க.”
“அதான் தூங்குறாங்க இல்லை, நீ கதவைத் திற.”
“அத்தான்! நீங்க புரிஞ்சுதான் பேசுறீங்களா?!”
“யாருடி இவ?! என்னோட பொண்டாட்டி, புள்ளைங்களை நான் பார்க்க வர்றது தப்பா? இப்போ நீயா கதவைத் திறக்கிறியா… இல்லை நான் உங்கம்மாக்கு ஃபோனை போட்டு கதவைத் திறக்கச் சொல்லவா?” வருணின் மிரட்டலில் மயூரி மிரண்டு போனாள்.
‘இவன் செய்தாலும் செய்வான்!’ பிள்ளைகள் இருவரும் உறங்கிக் கொண்டிருந்ததால் லைட்டை ஆன் பண்ணாமல் இருட்டில் பதுங்கிப் பதுங்கிப் போனாள் மயூரி.
‘அம்மாவும், மாமியும் இப்போதுதான் உறங்கியதால் இப்போதைக்கு எழுந்து கொள்ள மாட்டார்கள்.’ அந்த நம்பிக்கையில் வீட்டின் வாசல் கதவைத் திறந்தாள்.
புயல் போல உள்ளே வந்தான் வருண். வந்ததோடு நில்லாமல் பெண்ணை இறுக அணைத்திருந்தான்.
“அத்தான்! என்னப் பண்ணுறீங்க?! ஐயோ! உங்கம்மா எந்திருச்சு வந்தா என்ன ஆகுறது?!” மயூரி கிசுகிசுத்தாள். பயத்தில் அவளுக்கு உடம்பெல்லாம் நடுங்கியது.
“வந்தா வரட்டும்.” அசட்டையாகப் பதில் சொன்னவன் அவள் முகம் முழுவதும் முத்தமிட்டான்.
“விடுங்க அத்தான்!” அவனைக் கொஞ்சம் பலமாகத் தள்ளிவிட்டவள் வீட்டுக்கதவை மூடினாள்.
“உங்கம்மா என்னைச் சும்மாவே முறைக்கிறாங்க, இதுல உங்களுக்குக் கதவைத் திறந்து விட்டேன்னு தெரிஞ்சுது… அவ்வளவுதான்!” மீண்டும் கிசுகிசுப்பான குரலில் பேசியபடி நடந்த பெண்ணின் கைப்பிடித்து நிறுத்தினான் வருண்.
“அம்மா ஏதாவது சொன்னாங்களா?”
“உஷ்… அத்தான்! மெதுவாப் பேசுங்க.” மயூரி இப்போது அவசரமாக அவர்கள் அறைக்குள் போய்விட்டாள். வருணும் பின் தொடர்ந்தான்.
“அம்மா உன்னை ஏதாவது சொன்னாங்களா?”
“ம்ஹூம்…”
“பொய் சொல்லாதே!”
“பேசவே இல்லையே! இதுல எங்க இருந்து ஏதாவது சொல்ல?”
“ஓ… அதெல்லாம் இன்னும் ரெண்டு நாள்ல சரியாயிடுவாங்க.”
“சரி சரி, நீங்க கிளம்புங்க அத்தான்.” அவள் அவசரப்பட்டாள்.
“என்னது?! கிளம்பவா? எங்க கிளம்பச் சொல்றே?!”
“உங்கம்மா பார்த்தா அவ்வளவுதான், சீக்கிரமாக் கிளம்புங்க அத்தான்.”
“ஏய்… என்ன விளையாடுறியா? இதுக்குத்தான் இவ்வளவு கஷ்டப்பட்டு வந்தேனா?”
“அத்தான் ப்ளீஸ்…” விட்டால் அந்த நொடியே மயூரி அழுது விடுவாள் போல இருந்தது. வருண் புன்னகைத்தபடி அவளை மீண்டும் இழுத்து அணைத்துக் கொண்டான்.
“அத்தான்…”
“அன்னைக்கும் இதே மாதிரித்தான் ஸேரியில இருந்த இல்லை!” அவன் குரல் இப்போது மாறி இருந்தது. மயூரிக்கு உள்ளுக்குள் திக்கென்றது. நெஞ்சுக்குள் கிலி பரவியது!
“என்னைக்கு?” என்றாள் குரலே எழும்பாமல்.
“கேப்டனோட பர்த்டே அன்னைக்கு.”
“……………..”
“அத்தானுக்கு அன்னைக்குத்தானே விருந்து வெச்சீங்க!”
“………………” அவன் கைகள் அத்துமீற ஆரம்பிக்க மயூரி தவித்துப் போனாள். ரூம் கதவு வேறு திறந்து கிடந்தது.
“இன்னைக்கும் அதே மாதிரி ஸேரி… காலங்காத்தாலயே புடவையைக் கட்டிக்கிட்டு வந்து நின்னு மனுஷனை சும்மா சீண்டி விடுறது.”
“இல்லை… அது…”
“நான் எவ்வளவு ஆசையா இருந்தேன் தெரியுமா? அதுக்குள்ள அம்மா வந்து எல்லாத்தையும் கெடுத்துட்டாங்க!”
பேசியபடியே குறைப்பட்டவன் இப்போது அவள் இதழ்களில் வந்து நின்றிருந்தான். மயூரி விலக எவ்வளவோ முயன்று பார்த்தாள். ஆனால் அது நடக்கவில்லை.
அவள் உயிர் வரை ஊடுருவிய முத்தம்! அவள் உயிரையே உறுஞ்சிய முத்தம்! மயூரி மயங்க ஆரம்பித்தாள். கால்கள் பலமிழந்து போக அவன் மேலேயே சரிந்தாள்.
“ப்பா…” அந்த இருட்டில் ஒரு சின்னக் குரல்! வருண் ஒரு நொடி நிதானித்தான்.
“அப்பா…” மீண்டும் அதே குரல்! வருணுக்கு இப்போது தேகம் சிலிர்ந்தது. மனைவியைச் சட்டென்று விடுவித்தான்.
இவ்வளவு நேரமும் அவனை ஆக்கிரமித்திருந்த காதல்… அந்த நொடி காணாமல் போனது! காமம்… இருந்த இடம் தெரியாமல் தொலைந்து போயிருந்தது.
வருண் ஓடிப்போய் லைட்டை ஆன் பண்ணினான். கட்டிலில் அனு எழுந்து உட்கார்ந்திருந்தாள்.
“அனுக்குட்டி! சின்னக்குட்டி!” பாய்ந்து வந்து சின்னவளை அள்ளி அணைத்தான் வருண்.
அன்று முழுவதும் குழந்தைகளுக்கு ‘அப்பா’ என்று அழைக்கக் கற்றுக் கொடுத்திருந்தான். மயூரி வேலையிலிருந்து வந்த பிற்பாடு அதைச் சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தான்.
எல்லாவற்றையுமே தலைகீழாக ஆக்கி இருந்தார் ராகினி. ஆனால் அந்தப் பொடுசு தன் தந்தையை அந்த இருளில் உணர்ந்து கொள்ளும் என்று யார் நினைத்தார்கள்!
குழந்தை தன் அப்பாவை இறுக அணைத்துக் கொண்டது, இனி உன்னைத் தவறவிட மாட்டேன் என்று சொல்வது போல!
“குட்டிம்மா என்னைத் தேடினீங்களா? அப்பாவைத் தேடினீங்களா செல்லம்?” மனைவி ஒருத்தி அங்கே இருப்பதையே மறந்து வருண் பேச ஆரம்பித்தான். ஆர்யன் நல்ல தூக்கத்தில் இருந்தான்.
மயூரி நடக்கும் நாடகத்தை இமைக்க மறந்து பார்த்திருந்தாள். அனு இத்தனைத் தூரம் வருணோடு ஒட்டிக் கொள்வாள் என்று அவள் கூட எதிர்பார்த்திருக்கவில்லை.
‘அப்பா என்று அழைக்கிறாளே?!’
வருண் இப்போது சின்னவளைத் தூக்கிக்கொண்டு மனைவியிடம் வந்தான். முகம் முழுக்கப் புன்னகை அப்பியிருந்தது.
“பார்த்தியா… அனுக்குட்டி என்னை எப்பிடிக் கூப்பிட்டான்னு பார்த்தியா? என்னோட பட்டுக்குட்டி என்னை அப்பான்னு கூப்பிட்டா பார்த்தியா?” ஏதோ உலக சாதனைப் படைத்தவன் போல ஆர்ப்பரித்தான் வருண். குழந்தையைத் கொஞ்சித் தீர்த்தான்.
மயூரிக்குமே அது ஆச்சரியமாக இருந்தது. சட்டென்று அவள் பார்வைக் கதவை நோக்கிப் போக விறைத்துப் போனாள் பெண்.
மனைவியின் மாற்றத்தை உணர்ந்து வருணும் திரும்பிப் பார்த்தான். அங்கே ராகினி நின்றிருந்தார்.
பயத்தில் உறைந்து போனது மயூரிதான். ஆனால் வருண் வாய்விட்டுச் சத்தமாகச் சிரித்தான்.
குழந்தையை அணைத்தபடி தன் தாயின் அருகில் போனவன் அவரையும் ஒரு கையால் அணைத்துக் கொண்டான்!
ராகினியின் கண்கள் கலங்கிப் போயின!