emv4

emv4

எனை மீட்க வருவாயா! – 4

“திணிப்புகள்… சில நேரங்களில்…

மறுப்பான திணறலையும்,

சில நேரங்களில்

மயக்கமான தித்திப்பையும் தரவல்லது!”

காளியம்மாள் ஒரு சுற்று அனைத்து வீடுகளுக்கும் சென்று வந்திருக்க, தாயை அழைத்துக் கொண்டு வீடு வந்த ஜெகன், “என்னம்மா எதாவது தேறுமா?”

“இந்தப் பயணம் போயிட்டு வா.  பாப்போம்” சோர்வுடன் இயம்பினார்.

“ஏன் எதுவுமே தேறலையா?” நமுட்டுச் சிரிப்பாய் கேட்டான்.

“ரெண்டு வருசம் செண்டுதான வருவ.  அதுக்குள்ள நானாச்சு!”

அதற்குமேல் தாயிடம் எதுவும் கேட்டானில்லை.

கடந்து முறை வெளிநாடு செல்வதற்கே, வட்டிக்கு ஈஸ்வரி மூலமாகத்தான் கடன் வாங்கியிருந்தார்கள்.  அதேபோல இந்த முறையும் கேட்க எண்ணியபோது, “கொஞ்சம் கையில வச்சிக்கிட்டு, விதைக்கக் குடுத்துருக்கலாம் நீயி… இப்ப பாரு… கடனுக்குனு போயி நிக்கணும்.  அப்புறம் அதைக் கட்டணும்”

“விரயம்னா யோசிக்கலாம்.  விதைக்கக் கேக்கும்போது வேற என்ன செய்யச் சொல்றம்மா”

“சரி வாங்குவோம்.  வேற என்ன செய்ய?”

“அத்தாச்சிட்டயே கேட்டுப் பாப்போம்”

“அது வீட்லயும் ரெண்டு புள்ளைக இருக்கு.  வந்து மூனு மாசத்துல அந்தப்பக்கமே எட்டிக்கூடப் பாக்கலை. ஆனா, கடனுக்குன்னு மட்டும் போயி நின்னா நல்லாவா இருக்கும்” காளியம்மாள் தயங்க

“அன்னைக்கே ஒரு எட்டு, நீ போயிட்டு வந்திருக்கலாம்ல!”

“புத்தியில்லாமத்தான் இருந்துருக்கேன்” என்றவர், “அப்டியிருந்தும் அந்தப் புள்ளைய, அன்னைக்கு அது கடையில வச்சிப் பாக்கத்தான் செஞ்சேன்” சிரித்தவர், “அதுவுமே ரொம்ப சடைச்சிக்குச்சு” அன்று நடந்ததை மகனிடம் விளக்க

“ஆமா, காரியம்னா மட்டும் போனா, கேக்காம, வேற என்ன செய்வாக?”

“அது, அன்னைக்கு இப்டியாகும்னு நினைக்கலயே”

“சரி, இனி நேரங்கிடைக்கிறப்போ, ஒரு எட்டுப்போயி பாத்துட்டு வாம்மா”

“வெறுங்கையோடயா போகச் சொல்ற?”

“இந்தா இந்தக் கவரைக் குடுத்துட்டு, பாத்துட்டு வாம்மா” என்று ஜெகன் தந்ததை வாங்கிப் பிரித்துப் பார்த்தார் காளி.

ஆண்களுக்கான சட்டைத் துணியோடு, டைகர் பாம் ஒன்று மட்டுமே இருந்தது.

காளியம்மாளுக்கு அதை மட்டும் கொண்டுபோய் கொடுத்துவிட்டு, கடன் கேட்க மனமில்லை.

………………….

அன்றைய தினம் முழுமைக்குமே எரிச்சல், கோபம் என வலம் வந்தாள் திவ்யா.  அவள் இருக்குமிடமே தெரியாது என்பதுபோல பெயர் வாங்கியிருக்க, அன்று அதற்கு மாறாக நடந்து கொண்டிருந்தாள்.

“வாட் ஹேப்பண்ட் திவ்யா?” பேராசிரியருமே வினவ

அப்பொழுதுதான் அவளுக்கு தனது நிலை உணரப் பெற்றாள்.  மலங்க விழித்தபடியே “ஐ’ம் ஆல்ரைட் மேம்” என்றவளுக்கு குரலே கம்மிப் போயிருந்தது.

யாரும் கேட்கும்படி இதுவரை நடந்து கொள்ளாதவளுக்கு, இன்றைய தனது அத்தனை அவலங்களுக்கும் காரணமானவனை நினைத்து, கொலைவெறி உண்டானது.

மாலையில் விக்னேஷ் திவ்யாவைக் கண்டதுமே, “என்னாச்சுல.. ஏன் ஒரு மாதிரியா இருக்க?”

“இன்னும் ஒன்னுமாகலை” சிடுசிடுப்பான பதிலில், யோசனையோடு அமைதியானான்.

கல்லூரியில் நடந்த விசயத்திற்காக மாறியிருக்கிறாள் என யோசிக்காதவன், வழமைபோல ஈஸ்வரியிடம் சென்று, “என்னத்தை, திவ்யாவைப் பேசலைனா உனக்கு தூக்கமே வராதா?” என்றிட

“…” புரியாமல் பார்த்தார் ஈஸ்வரி.

“என்னத்தை, புரியாத மாதிரி பாக்குற.  நீதான எதாவது திட்டியிருப்ப?”

“நா ஒன்னும் அவளைப் பேசலையடா?” ஈஸ்வரிக்கும் புரியவில்லை.

முதல் கோணல் முற்றும் கோணல் என்பதுபோல கல்லூரியிலிருந்து வீட்டிற்கு வந்தும் அவளின் நிலை இன்னும் மோசமாகியிருந்தது.

அவனது பேச்சால் விளைந்தது சிறிதுதான்.  அதன்பின் விளைந்த அனைத்து செயல்களுமே, தான் அதையே நினைத்துக் கொண்டு, விழிப்பில்லாது செய்தது என்பதை வாகாய் மறந்திருந்தாள் திவ்யா.

மனித மனம் விந்தையானது.  அடுத்தவர்கள்மேல் பழிபோட்டு தப்பிக்கவே எண்ணும்.  அதுக்கு திவ்யாவும் விதிவிலக்காகாது இருந்தாள்.

பாத்திரங்களை கையாளும்போது கைவிட்டாள்.  வேலையில் சுத்தமில்லை. முழுக்க அதே சிந்தனைதான். 

ஈஸ்வரி வந்தது முதலே, மகளையே கவனித்திருந்தார்.

அவரின் பதினான்காவது வயதில் இதுபோலச் செய்தது நினைவில் முட்டி மோதி பரிகாசம் செய்தது.

புரிந்துவிட்டிருந்தது ஈஸ்வரிக்கு.

முரளி, அதாவது திவ்யாவின் தந்தை.  முதன் முதலில் ஈஸ்வரியைச் சந்தித்து காதலைச் சொன்னபோது, இதுபோல தான் நடந்து கொண்ட தருணங்கள் நினைவில் வந்தது அந்தத் தாய்க்கு.

அமைதியாகவே கவனித்தார்.

படுக்கைக்குச் செல்லும்வரை கவனித்தவர், தனியறையில் உறங்கச் சென்றவளிடம், “அம்மாவோட இன்னைக்குப் படுத்துக்கோ திவ்யா”

அதற்குமேல் மறுக்கும் தைரியம் திவ்யாவிற்கு இல்லை.

படுத்தவள் நீண்ட நேரம் உறங்காது, திரும்பித் திரும்பிப் படுத்ததையும் பேசாமல் கவனித்துக் கொண்டார்.

விடியலில் களைப்பில் உறங்கிய மகளை, எழுப்பவே இல்லை.  தாமதமாக எழுந்தவளை எதுவும் கேட்கவில்லை.

ஆச்சர்யமாக இருந்தது திவ்யாவிற்கு. தனது தாயா இது என்று.

மற்ற நாள்களில் எல்லாம், “வயசுப் புள்ளைக்கு, விடிஞ்சதுக்குப் பின்னாடி என்னா தூக்கம்” எனத் துவங்கி, விடாமல் பேசுவார்.

திவ்யாவிற்கு தற்போது முந்தைய தின கிருபாவின் பேச்சு மறந்திருந்தது.  தாயின் மாறான செயலை, பேச்சை எண்ணிய பதற்றத்தில் கவனிக்கத் துவங்கினாள்.

தனது தாய் வழக்கம்போல இல்லை என்பது தெளிவாய்ப் புரிந்தது. அதேநேரம் கல்லூரிக்கு கிளம்பி வந்த விக்னேஷ், “என்ன ரெண்டு பேரும் ராசியாயிட்டீங்களா?” என்றபடியே உள்ளே வந்தான்.

இருவரும் அமைதியாக, திவ்யா இன்னும் கல்லூரிக்கு கிளம்பாமல் இருக்கவே, “என்னானு தெரியலை விக்கி, திவ்யாவுக்கு உடம்புக்கு முடியலைபோல. இன்னிக்கு அவ வரமாட்டா.  நீ கிளம்பு” ஈஸ்வரி

“ஏந்தை, பாக்க நல்லாத்தானே இருக்கு”

“பாக்க நல்லாத்தான் இருக்கா.  என்னானு தெரியலை.  ரொம்ப லேட்டாத்தான் எந்திருச்சா”

திவ்யாவிடம் வந்தவன், “முடியலைன்னா இரு.  நாளைக்கு பாக்கலாம்” அவளின் முகத்தை ஆராய்ந்தபடியே ஈஸ்வரியை நாடிச் சென்றவன், மிகக் குறைந்த குரலில், “என்னாத்தை நடக்குது.  அது வாயே தொறக்காம இருக்கு.  நீ என்னனா இவ்ளோ சாஃப்டா டீல் பண்ற?”

வாயில் விரல் வைத்து மெதுவா எனக் காட்டியவர், “சரி விக்கி.  நாளைக்குப் பாக்கலாம்” வழியனுப்பியிருந்தார்.

அதிகாலையில் எழுந்து, அனைத்து வேலைகளையும் முடித்து வைத்துவிட்டு ஆறு மணிக்கெல்லாம் கடைக்கு கிளம்பி நிற்கும் தாய், இன்னும் இங்கு சாவகாசமாய் இருப்பது, சங்கை நெறிப்பதுபோல இருந்தது திவ்யாவிற்கு.

குளித்து, கிளம்பி நின்ற மகளிடம், “இட்லி அவிச்சிருக்கேன்.  எடுத்து வச்சி சாப்பிடு.  யாராவது கடையில மாத்த வந்தா, வீட்டுக்கு வரேன்” எனக் கிளம்பிவிட்டார்.

தலையை ஆட்டி ஆமோதித்து, தாயை அனுப்பியவள், அதன்பின் மிகுந்த மனஉளைச்சலோடு எதிலும் கவனமின்றி, ‘அவன் வந்து சொன்னது தெரிஞ்சா, அம்மா இனி என்னைய படிக்க அனுப்பாதோ’ எனும் குமைச்சலோடு இருந்தாள்.

இடையில் வீட்டிற்கு வந்த ஈஸ்வரி மகளிடம் வந்தவர், “பன்னிக்குட்டிகூட பருவத்துல அழகா இருக்கும்னு சொல்வாங்க” மகளைப் பார்த்தபடியே பேசத் துவங்கியிருந்தார்.

அம்மா, மகள் இருவரையும் சேர்த்து பார்ப்பவர்கள் ‘ரெண்டு பேரும் அக்கா, தங்கச்சியா’ என்றே கேட்கும் அளவிற்கு இளமையாகக் காட்சியளிப்பார் ஈஸ்வரி.

“…” திவ்யாவிற்கு தாயின் பேச்சைக் கேட்டதும், ‘இது என்ன பேச்சு’ என யோசித்தாலும், குப்பென வியர்க்கத் துவங்கியது. 

“கொஞ்சம் பார்வைக்கு நல்லா இருந்தா, நாளு பேரு பாக்கத்தான் செய்வானுங்க! புள்ளைககிட்ட பேசறதுக்கு, பழகறதுக்கும்னே, ஒரு கூட்டம் அலையத்தான் செய்யும்”

‘இந்த லூசு அம்மா, இப்ப என்னா சொல்ல வருது’

“நாதாரிங்க, நாக்கைத் தொங்கப் போட்டுட்டு பின்னாடியே திரியும்.  பொறம்போக்குங்க சீண்டிப் பாக்கும். பொசகெட்ட பய, ஜொல்லு விடுவான்.  நல்லவன் பாத்திட்டு நாலடி தள்ளி நிப்பான்!”

‘ஆத்தாடீ! அதுக்குள்ள இதுக்கு என்னவோ தெரிஞ்சிருச்சோ… என்னையக் கொல்லப் போகுது இப்ப’ பதறிய முகத்தோடு தாயைப் பார்த்திருந்தாள் திவ்யா.

“அதுக்காக, பொண்ணா பிறந்த பாவத்துக்கு, வீட்டுக்குள்ளயே அடைஞ்சு கிடக்க முடியுமா? இவனுக தொந்திரவு இல்லாத எடமே கிடையாது. கேவலப் பயலுக… கேப்பு எங்கடா கிடைக்கும்னு தெரிவானுக”

பெருமூச்சொன்றை விட்டவாறு திருதிருவென விழித்தபடியே அமர்ந்திருந்தாள் திவ்யா.

“எல்லாத்தையும் துச்சமா நினைச்சு, நம்ம வேலையில கண்ணும், கருத்துமா இருக்கப் பாக்கணுமே தவிர, அவனுங்களுக்கு பின்ன புத்தி போச்சுன்னா, நாசமாத்தான் போகணும்”

‘கடவுளே, நீதான்பா என்னை காப்பாத்தணும்’ வேண்டுதலோடு திவ்யா.

“கட்டுப்பாடோட இருந்து, கண்ணுங் கருத்துமா ஒழுங்கா படிக்க முடியும்னா காலேசுக்கு போ.  இல்லை… எனக்குப் பயமா இருக்கு.  என்னால முடியலை, எவனையும் துணிஞ்சு ஒதுக்கிட்டு, நான் நினைச்சதை சாதிக்க முடியாதுன்னா வீட்லயே இரு.  ரெண்டு வருசம் சென்டு மாப்பிள்ளை பாத்து கட்டிக் குடுக்கறேன்” என்றவர்

“என்னடா, அதுவா வந்து ஏதேதோ பேசிச்சு.  எதுவும் கேக்காம அதுபாட்டுக்கு கிளம்புதுன்னு நினைக்கறியா?”

தாயின் கேள்விக்கு என்ன பதில் சொல்லவெனத் தெரியாமல் நின்றிருந்தாள் திவ்யா. 

“மொகரைக்கட்டையப் பாத்தாலே தெரியுதே! என்ன நடந்திருக்கும்னு” சிரித்தபடியே வாயிலுக்கு விரைந்தார்.

“…” 

“அதுக்குத்தான் ஒரு பயபுள்ளைகிட்டயும் எதுவும் வாங்கிக் திங்காதன்னு சொல்றேன்”

“…”

“நாலு நாளைக்கு தீனி வாங்கிக் குடுக்கறது, உடுப்பு எடுத்துக் குடுக்கறது, நகை நட்டுனு பாத்ததையெல்லாம் வாங்கிக் குமிச்சு, கரெக்ட் பண்ற வித்தையெல்லாம், அந்த மொள்ளமாரிங்களுக்கு கைவந்த கலை!” என்றுவிட்டு, “பாத்து பத்திரமா இருந்துக்கோ.  சித்திக்கிட்ட சொல்லிட்டுப் போறேன்” என அதற்குமேல் எதுவும் பேசாமல், கடைக்கு கிளம்பிவிட்டார் ஈஸ்வரி.

———————

மதியத்திற்குமேல் மகனோடு கடைக்கு நேரில் வந்த காளியம்மாளை, “வாங்கத்தை, வாங்க தம்பி” என ஈஸ்வரி வரவேற்றார்.

கடையில் வியாபாரமாக இருந்தவரிடம் தக்க நேரம் பார்த்து, கடன் வாங்கித் தரும்படி கேட்க, “டீ வாங்கியாரச் சொல்லியிருக்கேன்.  குடிச்சிட்டு இருங்க.  அதுக்குள்ள நான் போனைப் போட்டு கேட்டுப் பாக்கறேந்தை”

சற்று நேரத்தில் வந்த டீயையும் குடித்துவிட்டு காத்திருந்தார்கள்.

அடுத்தடுத்து அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிவிட்டு, “எல்லாருமே நாளைக்குத்தான் தர முடியுங்கறாங்க”

தாயும், மகனும் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.

“நாளைக்குன்னா வந்து பாக்குறீங்களாத்தை”

“இதுக்குமேல போயிட்டு, திரும்ப வந்துகிட்டுன்னு யோசிக்க வேண்டியதா இருக்கு” காளி தயங்க

“எதுக்கு அலைஞ்சிகிட்டு.  நம்ம வீட்ல இன்னைக்கு தங்கியிருந்துட்டு, நாளைக்கு காச வாங்கிட்டுப் போங்க”

மகனிடம் திரும்பிப் பேசியவர், “சரித்தா.  அப்ப இருந்து வாங்கிட்டே போறோம்” என ஒரு முடிவுக்கு வந்திருந்தார்கள்.

வீட்டிற்கு வந்தவர்களை, திவ்யா வழமைபோல வரவேற்று உபசரித்தாள்.

“வாங்க அப்பத்தா, வாங்க சித்தப்பா”

“என்னத்தா நல்லாருக்கியா?  உங்கண்ணனை கடையிலயும் காணோம்.  வீட்லயும் காணோம்” காளி

“அவன் வெளியூருல தங்கிப் படிக்கறான்னு அத்தாச்சி போன தடவையே சொல்லுச்சில்லம்மா” என ஜெகன் நியாபகப்படுத்த

“அது ரெண்டு வருசத்துக்கு முன்னல்ல”

“ஆமா.. இப்பத்தான் மூனாவது வருசம்.  இன்னும் ஒன் இயர் இருக்கு”, திவ்யா

இதுபோல பேச்சுகள் இயல்பாகப் பேசிட, மனதின் கனம் குறையப்பெற்றவளாய் திவ்யா இலகுவாக மாறியிருந்தாள்.

வந்தவர்களுக்கு டீயைப் போட்டு வந்து தர, “குடிக்க கொஞ்சம் தண்ணி தாத்தா..” ஜெகன்

“இதோ எடுத்துட்டு வரேன் சித்தப்பா” அடுக்களைக்குள் விரைந்தாள்.

வந்தவளிடம், “இந்தா, இதுல நாட்டுக் கோழி முட்டை எடுத்தாந்தேன்.  பத்திரமா எடுத்து வச்சி, வீணாக்காம தினம் ஒன்னு அவிச்சு சாப்பிடு” எடுத்து தந்த காளியம்மாள்,  “இதுல இந்த வருசம் போட்ட மிளகா வத்தல், மல்லியெல்லாம் இருக்கு” மற்றொரு சாக்கு பொட்டலத்தையும் தர

“எல்லாம உங்க வயல்ல விளைஞ்சதா அத்தை” என்றபடியே உள்ளே நுழைந்தார் ஈஸ்வரி

இப்படி, இருவரது குடும்ப விசயங்களும் சற்று நேரம் பரிமாறிக் கொள்ளப்பட்டது. மறுநாள் தொகையையும் வாங்கிக் கொண்டு இருவரும் கிளம்பினார்கள்.

…………………………….

ஈஸ்வரியும், அவளின் கணவன் முரளி இருவருமே மாநிறம்தான்.  அப்படியிருக்க, இருவரைவிட நல்ல நிறத்தில் பிறந்த மகள் திவ்யாவை கொண்டாடவில்லை ஈஸ்வரி. 

மாறாக, ‘என்னோட லச்சணத்துக்கே சந்தி சிரிச்சேன்.  இது இப்டி வந்து அழகா பிறந்து தொலைச்சிருக்கே.  இதைக் காபந்து பண்ணி, கரை சேக்கறதுக்குள்ள, என்னென்ன அக்கிரம, அதிசயத்தையெல்லாம் பாக்கப் போறேனோ, ஆண்டவா!’ எனும்படியான புலம்பலே எழுந்தது.

சிறு வயதில் குறைவாக இருந்த புலம்பல், பெண் பருவமெய்தியதும் பலமடங்காகிப் போயிருந்தது.

திவ்யா, முரளியைப் போன்ற முகவெட்டுடன் இருந்தாள்.  நிறம், சாயல் அனைத்தையும் ஒருமித்துப் பார்த்தால், அவளின் அத்தையைப் போன்றிருந்தாள்.

ஈஸ்வரி, முரளி திருமணமான புதிதில், மாமியார் கொடுமையைக் காட்டிலும், நாத்தனார்கள் கொடுமையை அதிகம் அனுபவித்திருந்தாள். குறிப்பாக ஜான்சி எனும் நாத்தனார் செய்த கொடுமைகள் ஏராளம். 

அனைத்து வேலைகளையும், ஈஸ்வரி ஒருத்தியைக் கொண்டே செய்ய வைப்பாள்.  தாய் வந்து, “ஏண்டி, மசக்கையா இருக்கா.  சாப்பிட்டு வேலை செய்யச் சொல்லு.  ஒன்னு கிடக்க, ஒன்னு ஆயிரப் போவுது”

“எனக்கு எல்லாம் தெரியும்மா.  நீ போயி உன் வேலையப் பாரு” என தாயிடமே மரியாதையற்ற பதில்கள்தான் வரும் ஜான்சிக்கு.

முரளியிடம் கூறினால், “எந்தங்கச்சியப் பத்தி எனக்குத் தெரியும்” ஒரே வார்த்தையில் வாயை அடைத்து விடுவான்.

அதற்குமேல் ஒரு வார்த்தை பேசினாலும், “தங்கச்சியப் பத்தி ரொம்பப் பேசுன, வாய உடச்சிருவேன்” என்பான்.

ஈஸ்வரி வாழ்ந்த காதல் வாழ்க்கை, காதலை வெறுக்கச் செய்திருந்தது.  காதலின் பெயரால் நடந்த கொடூர நரகத்திலிருந்து, தாய் வீடு வந்த பின்னேதான், நிதர்சனத்தை உணரும் நிலை ஈஸ்வரிக்கு வந்தது. அதுவரை எதையும் சிந்திக்க இயலாத சிறை வாழ்க்கைதான்.

மாமனார் மட்டுமே அனுசரணை. அவளின் நலுங்கிய ஆடைகளைக் கண்டதும், “கோடீஸ்வர வீட்டு மருமக மாதிரியா, அந்தப் புள்ளைய வச்சிருக்கீங்க. வர வேலைக்காரிகூட நல்லாத்தான் உடுத்தி வருது.  பாக்கியம், நீயாவது அந்தப் புள்ளைய கவனிக்கக் கூடாதா” மனைவியை விரட்டி, ஈஸ்வரியின் துயரம் துடைப்பார்.

இப்படியான துன்பங்களைக் கடந்து வந்தவருக்கு, காதலென்றாலே கசந்ததில் தப்பென்றிட முடியுமா?

ஆனால் இத்தனை நாள் தரித்திருந்த முகம் மறைத்து, இன்று வந்து பேசிய தாயின் வேறுபாடு திவ்யாவை யோசிக்கத் தூண்டியது.

‘ஏதோ அரைலூசு மாதிரி எனக்குத் தெரியாமயே ஏதோ பண்ணிருக்கேன்போல.  அதான் ஆத்தா சைலண்டா கண்டு பிடிச்சு, கைன்டா அட்வைஸ் பண்ணிட்டு போயிருக்கு. அது சொர்ணாக்காவ மாறுற மாதிரி நிலைமையக் கொடுத்துராத மாரியாத்தா… என்னைக் கிருபா பயகிட்ட இருந்து காப்பாத்தி கரை சேத்திரு’ எனும் பிராத்தனையோடு தனது பணிகளில் மனதைச் செலுத்த முயன்றாள் திவ்யா.

கிருபாவை நினைத்தவள், ‘சூரியனைப் பாத்து நாயி குலைச்சா யாருக்குக் கேடுன்னு, அவனைப் பாத்தா இனி கண்டுக்காம போக வேண்டியதுதான்’ எனும் முடிவுக்கு திவ்யா வந்திருந்தாள்.

……………………………

தன்னை நிதானப்படுத்திக் கொண்டு, தெளிவாக கல்லூரிக்குள் அடியெடுத்து வைத்தாள் திவ்யா.

“டேய் விக்கி, அங்க படிக்கற எடத்துல, எதுவோ அது மனசுக்கு புடிக்காம நடந்திருக்கு.  அதுதான் இந்தப் புள்ளை புத்தியக் கடங்குடுக்கப் போற மாதிரி, உள்ளுக்குள்ளயே போட்டு குழப்பிக்கிட்டு இருந்துச்சு.  நீயும் ஒழுங்கா பாத்துக்க” என்று ஈஸ்வரி விக்னேஷை அழைத்துப் பேசிவிட்டே, திவ்யாவை கல்லூரிக்கு அனுப்பியிருந்தார்.

பேருந்திலிருந்து இறங்கியவளிடம், “ஏன் திவ்யா.  நேத்து ஒரு மாதிரியா இருந்த”

“ஒன்னுமில்லடா”

“இன்னைக்கு ஓகேவா”

“ம், விக்கி”

“எதுனா எங்கிட்ட சொல்லுடீ”

“சரிடா” என விடைபெற்று தங்களின் வகுப்பறைக்குள் நுழைந்திருந்தாள்.

‘எதுனாலும் இன்னைக்கு தடுமாறாம ஃபேஸ் பண்ணனும்’ எனும் உறுதியோடு சென்று வகுப்பறையில் அமர்ந்தாள்.

பத்து நிமிடங்கழித்து புயல் உருவில் வந்தான் கிருபா.

வந்தவன், “ஹாய் பியூட்டி” அலைப்பறையாய் அறைக்குள் இவளைக் கண்டதும் கூறியபடி நுழைய

‘பூட்டி, ஓட்டினு… ஆளும் மூஞ்சியயும் பாரு’ என்பதுபோல பார்த்தாள்

“என்னாச்சு? நேத்து ஏன் வரலை?”

“…”

“சரி சொல்லலைனா போ” அவனது இடத்திற்குச் செல்லாமல், அவளின் சிட்டிங் பெஞ்சிலேயே, கயல் அமரும் இடத்தில், அவளின் அருகே வந்து அமர்ந்திருந்தான்.

அதுவரை இருந்த தைரியம் குறையத் துவங்கியதை அவளும் உணரத் துவங்கிய தருணமது. கிருபா அருகே வந்தமர்ந்ததும் தாறுமாறாய் இதயத்திற்கு இரத்தம் பீறிட்டுப் பாய, எழுந்த உணர்வில் பதற்றமும், யாரும் தனதருகே அமர்ந்தவனைக் கண்டிருப்பார்களோ எனும் அச்சமும் ஒருங்கே சேர, சர்வங்கமும் ஆட்டம் காணத் துவங்கியிருக்க, இடத்தைவிட்டு சட்டென எழுந்திருந்தாள் திவ்யா.

எழுந்தவளை, “சிட் பேப்” என கூலாக கையைப் பிடித்து இழுக்க, மறுத்தவளிடம், “உக்காரு, எதுக்கு நமக்குள்ள மரியாதையெல்லாம்” என்றிட, முறைத்தபடியே சட்டென அமர்ந்திருந்தாள் திவ்யா.

எப்படி சமாளித்தாள்?

………………..

Leave a Reply

error: Content is protected !!