emv12a
emv12a
எனை மீட்க வருவாயா! – 12A
தாய் வெளியே கிளம்பியதிலிருந்து கிருபா வருவதற்குள், வாயிலுக்கும், வீட்டிற்குமாய் குறைந்தது நூறு முறையேனும் நடந்திருப்பாள் திவ்யா.
கிருபா கண்டிப்பாக வருவான் என்கிற நம்பிக்கை ஒருபுறம், தனது தாய் அதற்குள் வீட்டிற்கு திரும்ப வேண்டுமே என்கிற எதிர்பார்ப்பு மறுபுறம். இரண்டும் சேர்ந்து இலக்கில்லாமல் அவளை நடக்கச் செய்திருந்தது.
மொத்தத்தில், மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவிப்போடு இருந்தாள்.
தனது தாய் வரவேண்டுமே என்கிற வேண்டுதலோடு நடந்து கொண்டிருந்தவளை, வீட்டருகே கேட்ட கிருபாவின் குரல் நடப்பிற்கு கொண்டு வந்தது.
தனது தாயின் பெயரைக்கூறி விசாரிக்கும் கிருபாவின் குரலைக் கேட்டு, சட்டென வாயிலுக்கு விரைந்தாள்.
கிருபாவை வரவேற்பதில் முழுமையான சந்தோசம் இல்லை.
தாய், ஏன் தற்போது வெளியே சென்றார் என்கிற மனக் குழப்பத்தோடு, வீட்டு வாயிலில் வந்து நின்ற, தனது எல்லாமுமாய் எண்ணியிருந்த எதிர்காலத்தை சுரத்தேயில்லாமல், “வா… வா… கிருபா” என வரவேற்றாள்.
கிருபாவிற்கு, திவ்யாவைத் தவிர வேறு யாரையும் அங்கு தெரியாத நிலையில், சுற்றிலும் பார்த்தபடியே, “வீட்ல யாரெல்லாம் இருக்காங்க” என மெல்லிய குரலில் வினவினான்.
“வா.. வீட்டுக்குள்ள போயி பேசிக்கலாம்”
திவ்யாவின் அழுத்தமான பதிலில், அதற்குமேல் தாமதிக்காது, அவளின் பின்னே சென்றான் கிருபா.
“அம்மா, இப்பதான் கடையில இருந்து போன் வந்துச்சுன்னு கிளம்பிப் போனாங்க!”
“ரொம்ப லேட்டா வந்துட்டேனோ” தனது கைக்கடிகாரத்தைப் பார்த்தபடியே கேட்டவனுக்கு, ஏதோ புரிந்தாற் போலிருந்தது.
தன்னைத் தவிர்க்க ஒருவேளை சென்றிருக்கலாமோ என்பதுதான் அது.
“சேச்சே.. அப்டியில்ல.. இந்நேரத்தில அம்மாக்குத்தான் எதிர்பாராம ஏதோ திடீர்னு வேலை..” சமாளித்தாள் திவ்யா.
திவ்யாவின் சமாளிப்பு புரியாதபோதும், அவளின் முகமே சொன்னது, அவனுக்கு அங்கு நடந்ததை. ஆனாலும் கேட்காமல், காட்டிக் கொள்ளாமல் இருந்தான்.
ஹாலில் இருந்த சோபாவில், அவனை அமரச் செய்தவள், “உக்காரு கிருபா” என்றுவிட்டு, உள்ளே சென்று தண்ணீரை எடுத்து வந்து நீட்டினாள்.
வீட்டில் யாருமில்லை என்பதை அனுமானிக்க முடிந்தது அவனால்.
வாங்கி அருந்தியவனிடம், “டீயா, காபியா, கிருபா”
“அதெல்லாம் ஒன்னும் வேணா டீடீ. இப்டி உக்காரு. உங்கம்மா வரவரை வயிட் பண்ணி, அவங்க வந்ததும் பேசிட்டே கிளம்பறேன்” தனது அருகே உள்ள இடத்தைக் காட்டி அமரும்படி சொன்னவனை
“நல்லா வருவடா நீயி. ஆனாலும் எங்கேயிருந்து உனக்கு இவ்ளோ தைரியம் வருதுண்ணே தெரியலை” என சிரித்தபடியே எதிரே சென்று அமர்ந்தவள், “சாரி கிருபா. என்னோட கேர்லெஸ்னால உன்னையும் சிரமப்படுத்திட்டேன்” என்க
“எப்டினாலும் தெரிய வேண்டிய விசயம்தான டீடீ” என்றபடியே எழுந்தவன், அவளமர்ந்திருந்த ஒற்றை சோபாவில் ஈடுக்கிக் கொண்டு, அவளோடு நெருக்கியபடி அமர முனைய, அவளோ “ஏய் என்ன விளையாட்டுடா இது” எனப் பதறியபடி எழ, எழ முடியாமல் கையை இறுகப் பற்றி இழுத்து அமர வைத்தபடியே, தோளோடு சேர்த்தணைத்துப் பிடித்துக் கொண்டான்.
“வேற யாருகூட விளையாடச் சொல்ற?”
“ம்ஹ்ம்.. இது உனக்கே பேராசையாத் தெரியலையாடா”
“எது பேராசை.. இதுக்கேவா”
“ஆமா”
“உங்கம்மா உன்னை மட்டும் பெத்ததுக்கு, கூட இன்னொரு பொண்ணையும் பெத்திருக்கலாம்னு, நானே கவலையில இருக்கேன்” முகத்தை சோகமாய் வைத்துக்கொண்டு உரைத்தான்.
“எதுக்குடா?”
“ம்ஹ்ம்… உனக்கு ஒரு தங்கச்சி இருந்து, அவகூட விளையாண்டா இன்னும் சும்மா… ஜில்லுனு இருக்குமுள்ள” என்றவனை
“நேரங்காலந் தெரியாம எப்டிடா உன்னால இப்டியெல்லாம் பேச முடியுது” என்றபடியே “உனக்கு நான் ஒருத்தி போதாதா” என தலையில் கொட்ட வர,
“சும்மா சொல்றதுக்கே இவ்ளோ கோபம் வருதா உனக்கு” என்றபடி அவனது தலை அவளது கையிக்கு கிட்டாதபடி, கழுத்தை மாறி மாறி நகர்த்த, வேறு வழியின்றி அவனது இரண்டு தொடைகளிலும் செல்லமாய் அடித்தவள், நடப்பிற்கு வந்து, தனது வருத்தத்தைப் பகிர்ந்தாள்.
“இவ்ளோ சீக்கிரம் தெரிஞ்சதால, நம்ம சொல்றதை அக்செப்ட் பண்ணிப்பாங்களோ, மாட்டாங்களோனு பயமா இருக்கு கிருபா”
“பயப்படறதுக்கு நாம என்ன தப்பா செஞ்சோம்”
“அப்டிச் சொல்றியா?”
“தைரியமா இரு. உங்கம்மாகிட்ட, உண்மையச் சொல்லி டைம் கேப்போம்”
“ஒத்துக்கலைனா..”
“அப்டியேன் நெகடிவ்வா யோசிக்கிற?”
இருவரும் பேசிக் கொண்டிருந்தபோதே பக்கத்து வீட்டிலிருக்கும் திவ்யாவின் சித்தியின் குரல் அவர்களது வீட்டு வாயிலில் கேட்கவே, பதறியவள் எழுந்து வேறு சோபாவில் சென்றமர்ந்தாள்.
கிருபா மையலாய் சிரிக்க, ‘உனக்கு என்னோட நிலமை சிரிப்பாத்தான் இருக்கும்’ என செய்கையில் காட்டியபடியே, தனது முகத்தை இயல்பாகக் காட்ட முயன்றாள்.
போனில் பேசியபடியே உள்ளே நுழைந்து, சோபாவில் அமர்ந்திருந்தவனை நோக்கி, செய்கையாலேயே வா என உபசரித்ததோடு, “இதோ நம்ம திவ்யாகிட்ட குடுக்கிறேன்கா” என திறன்பேசியை அவளிடம் நீட்ட
வாங்கியவள், “சரிம்மா.. சரிம்மா” என்ற குரலே தர்மசங்கடமாய், கிருபாவைப் பார்ப்பதைத் தவிர்த்தபடியே, குனிந்து, எதிர்திசையில் திரும்பி நின்றபடியே பதில் கூறினாள்.
பேசி முடித்து, அவளது சித்தியின் கரங்களில் அதை ஒப்படைத்தவள், இருவரையும் மாறிமாறிப் பார்த்தபடியே, “அம்மாவால இன்னும் ஒரு மணி நேரம், எங்கயும் அசையவே முடியாதாம். இன்னொரு நாள் வந்து பாக்க முடியுமானு கேக்கறாங்க” ஒருவழியாய் தாய் பேசியதை, நாசூக்காய், தர்மசங்கடத்தோடு கூற
“ஒன்னும் பிராப்ளம் இல்லை திவ்யா. இன்னொரு நாள் சொல்லச் சொல்லு. நான் வந்து பாக்கறேன். இல்லை இன்னும் ஒன் அவர் வயிட் பண்ணி இன்னைக்கே பாக்கறதா இருந்தாலும், எனக்கு ஓகேதான்” என்றிட
மீண்டும் சித்தியிடம் வாங்கிய திறன்பேசியின் வாயிலாக தாயிக்கு அழைத்து, கிருபா கூறுவதைப் பற்றிக் கேட்க, ஈஸ்வரியும் சரியென்றிட, கிருபா உடனே விடைபெறும் நோக்கோடு எழுந்தான்.
“தம்பிக்கு சாப்பிட எதாவது குடுத்தியா?”
“இல்ல சித்தி” கைகளைப் பிசைந்தபடியே கூறினாள்.
“என்ன புள்ளை நீ. வந்தவங்களுக்கு ஒரு வாய் டீகூட குடுக்காம..” உரிமையோடு திவ்யாவை வைதபடியே
“தம்பி, செத்த(சிறிது) நேரம் பொறுங்க. அஞ்சே நிமிசத்தில டீ குடிச்சிட்டு கிளம்பலாம்” என்றிட
இருவரிடமும் மறுத்தவன், நிதானித்து, தனது திறன்பேசியை எடுத்து, திவ்யாவின் நம்பரை கூறி, “இதுதான உங்கம்மா நம்பர்” எனக் கேட்க
ஆமென கிருபாவிடம் ஆமோதித்த திவ்யாவிற்கு அவனது அந்தச் சந்தேகமே, குற்றவுணர்வில் தள்ளியது.
எல்லாம் தனது தாயின் செயலால் வந்தது என நினைத்தவளுக்கு, முன்னைப்போல கிருபாவிடம் முகம்கொடுத்துப் பேச இயலவில்லை.
திவ்யாவின் நிலையை யூகித்தவனுக்கு, அவளின் நிலை புரிய, அருகே அவளது சித்தி நந்தியாய் இருக்க, அதற்குமேல் என்ன பேசுவது எனப் புரியாமல், “பாக்கலாம்” என விடைபெற்று நடந்து செல்பவனையே, கேட்டில் நின்றபடி கவனித்தவளுக்கு, உள்ளமெங்கும் குமுறல்.
‘ச்சே.. இந்த அம்மா வரச் சொல்லிட்டு, இப்டி ஏன் கிருபாவை அலைக்கழிக்கணும்’ கோபமெழுந்தாலும், யாரிடமும் காட்ட இயலாத நிலை, கழிவிரக்கமாய் மாறி, அழுகையில் கொணர்ந்து நிறுத்தியது திவ்யாவை.
அதேநேரம் அவளின் சித்தி, ஈஸ்வரிக்கு அழைத்து பேசியபடியே சற்றுநேரம் திவ்யாவைக் கவனித்தபடியே நின்றிருந்துவிட்டு, தனது வீட்டிற்குள் நுழைந்தார்.
கண்கள் கலங்கியபடி தனதறைக்குள் சென்று முடங்கியவளுக்கு, ‘ஈசு, வேற எதோ பிளான் பண்ணுது’ என மனம் அடித்துச் சொல்ல, அழுகை பீறிட்டுக் கிளம்பியது.
…………………………………….
ஒரு மணி நேரத்தில், சாலை நெடுக நிதானமாய் நடந்தவனுக்குள் அசைபோட ஆயிரம் விசயங்கள்.
சாவகாசமாய் தேனீரை அருந்தி, பசித்த வயிறுக்கு தின்பண்டத்தையும் காணிக்கை கொடுத்து, சற்று நேரம் முக்கிய சாலையில், வேடிக்கை பார்த்தபடியே சொற்ப நேரத்தை கடத்திவிட்டு, சரியான நேரத்தில் ஈஸ்வரிக்கு அழைத்தான்.
முதல் அழைப்பு ஏற்கப்படவில்லை. தொய்வில்லா மனதோடு மீண்டும் அழைத்தான்.
கடைக்கு வரும் வழி தெரியுமா என ஈஸ்வரி கேட்க, தெரிந்தாலும், மீண்டும் கூறும்படி கேட்டுக் கொண்டு, அடுத்த பத்தாவது நிமிடம் அவர்முன் நின்றான்.
கடையில் வேலை பார்க்கும் இருவரைத் தவிர, ஈஸ்வரி மட்டுமே இருந்தார்.
ஒற்றைப் பார்வையிலேயே, தனது பெண் எதனால் அவனைத் தேர்ந்தெடுத்திருப்பாள் என்பதை யூகித்தவர், தலையை அசைத்து, வரவேற்றார்.
தான் பார்த்திருக்கும் கிராமத்து மாப்பிள்ளையைக் காட்டிலும், தற்போதைய இளம்பருவத்தினருக்கு கண்டவுடன் பிடிக்கும் வகையில், நல்ல பரிச்சயமான சிரித்த முகமாய் எதிரில் நின்றவனை ‘நல்லாத்தான் இருக்கான். அதான் புள்ளை மயக்கத்துல இருக்கு’ நினைத்துக் கொண்டார்.
கல்லா(பணப்பெட்டி) இருந்த சிறிய தடுப்பு அறைக்குள் அழைத்துச் சென்று அமரச் செய்தவர், “உக்காருங்க தம்பி” அங்கிருந்த பழைய நாற்காலியைக் காட்ட
“இல்ல இருக்கட்டும்” தயங்கினான் கிருபா.
“சும்மா உக்காருங்க. இதோ வந்திரேன்” வெளியே சென்று, பணியில் இருந்தவர்களிடம் ஏதோ கூறிவிட்டு, அந்த அறைக்குள் பிரவேசித்தார்.
கிருபாவின் மனநிலை, ‘பாத்தா, திவ்யாவைக் காட்டிலும் சின்னவங்களா தெரியறாங்க. உண்மையிலேயே இது அவங்க அம்மாதானா. இல்லை வேற யாருமா?’ என்பதாக இருந்தது.
ஏனெனில் முப்பத்து எட்டு வயதே நிரம்பிய ஈஸ்வரி, எத்தனை இடர்பாடுகளைக் கடந்து வந்திருந்தாலும், அதற்கான சோக வடுக்கள் வதனத்திலோ, தேகத்திலோ, தோற்றத்திலோ இல்லாமல், இளமையாக இருந்ததே காரணம்.
தனது தமக்கைகளைக் காட்டிலும் இளமையாக தோற்றமளித்தவரை, திவ்யாவின் தாயார் என நம்பமுடியாத நிலையில் அமர்ந்திருந்தான் கிருபா.
எப்படியும் சமாளிக்கலாம் என்கிற மனோபாவத்தோடு, “திவ்யா.. நீங்க வரச் சொன்னதா சொல்லுச்சு..” கிருபாவே துவங்கிவிட்டான்.
“ம்ஹ்ம்.. அப்ப.. நான் எதுக்கு வரச் சொல்லியிருக்கேன்னு, உங்களுக்கு எதுவும் தெரியாதா?”
“தெரியும்..” இழுத்தான்
“ஹ்ம். தம்பிக்கு கூடப் பிறந்தவங்க எத்தனை பேரு. பெத்தவங்க என்ன பண்றாங்க”
கிருபா, ஈஸ்வரியின் கேள்விகளுக்கு உரிய பதிலைத் தந்தபடியே, ஈஸ்வரியின் தொலைநோக்கு கேள்விகளைக் கொண்டே, ‘இது திவ்யாவின் அம்மாதான்போல’ என்கிற முடிவுக்கு வந்திருந்தான்.
“கல்யாணங்கிறது விளையாட்டுக் காரியமில்ல தம்பி. இப்ப திவ்யாவுக்கு இருவதுதான் ஆகுது. அவளோட படிக்கிறதால உங்களுக்கும் அப்டித்தான இருக்கும்”
“ஆமா” அதைக் கூறும்போது அசிங்கமாய் உணர்ந்தான்.
“உங்க அக்கா ரெண்டு பேரு கல்யாணத்துக்கு இருக்கும்போது, திவ்யாவ கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி, உங்கட்ட கேக்கறது எனக்கே நியாயமாப்படலை” இப்படிச் சொன்னதும், கிருபாவிற்கே ஒவ்வாத உணர்வு உண்டானது தனது செயலை எண்ணி.
இப்டியெல்லாம் ஒரு பேச்சு வரும் என்கிற கோணத்தில் இதுவரை அவன் யோசித்ததில்லை. அதனால் உண்டான உணர்விது.
“…”
“அதுக்காக, அவங்க ரெண்டு பேரும் கல்யாணமாகிப் போறவரை, என்னால திவ்யாவையும் வீட்ல சும்மா வச்சிருக்க முடியாது”
சட்டெனத் துவங்கியவன், “ரெண்டு வருசம் திவ்யாவை பீஜி படிக்க வச்சா, ரெண்டு பேரும் கோர்ஸ் முடிச்சிட்டு, வேலைக்குப் போயிருவோம். அப்புறம் கல்யாணம்னா.. நல்லாருக்கும்னு யோசிச்சோம்” கிருபா தயக்கமாய் முடித்தான்.
“யோசிச்சோம்னா?”
“ரெண்டு பேருக்கும் அப்டித்தான் ஐடியா” சட்டென மனதைத் திறக்க முடியாதளவு, ஏதோ ஒன்று அவனைத் தடுத்தது.
“நல்லாத்தான் யோசிக்கிறீங்க இந்தக் காலத்துப் புள்ளைங்க. படிக்க வைக்க பெத்தவுக வேணும். செலவழிக்க பெத்தவுக வேணும். கல்யாணத்துக்கு மட்டும் அவங்களோட சம்மதமோ, வேற எதுவுமே வேணானு யோசிக்கறீங்க. மத்த எல்லாத்துக்கும் நாங்க வேண்டியிருக்கு. ஆனா இந்த காதல்னு வந்துட்டா, நீங்க நினைக்கிறதை சட்டமாக்கணும்னு நினைக்கிறீங்க. அப்புறம் எதுக்கு நாங்க காசைக் கொட்டிப் படிக்க வைக்கணும். இல்ல தெரியாமதான் கேக்கறேன், காசு என்ன மரத்திலயா காய்க்குது? நீங்க கேக்கக் கேக்க வாரிக் குடுக்க?”
“…”
“அப்டிக் குடுத்தாலும் உங்க மனம்போல வாழ நினைக்கணும்னு மட்டுந்தான் தோணுது. நமக்காக நல்லது பண்ணவங்க இந்த விசயத்துலயும் எந்தக் குறையுமில்லாமப் பாப்பாங்கங்கிற நம்பிக்கை ஏன் எங்கமேல வரமாட்டிங்குது”
“…”
“நீங்க யோசிக்கறது எல்லாம் உங்களுக்கு நல்லாத்தான் இருக்கும். ஆனா பின்னாடி எதாவது கஷ்டம்னா, பெத்து வளத்த எங்க நிம்மதியே போயிரும்”
“அப்டியெல்லாம் நடக்க விடமாட்டோம்” என உரைத்தான்.
“எங்க அந்தஸ்துக்குத் தக்கன வேற நல்ல எடத்துச் சம்பந்தமெல்லாம் இப்பக் கேட்டு வருது. இப்பவே முடிச்சிக் குடுத்துட்டா, கடமை முடிஞ்ச நிம்மதியில அக்கடான்னு(நிம்மதியாய்) அடுத்த வேலையப் பாப்பேன். இன்னும் ரெண்டு வருசம் காத்திருந்து உங்க வீட்ல வேணானு சொன்னா, கேட்டு வந்த சம்பந்தமெல்லாம் கைவிட்டுப் போயிருக்கும். அப்பப்போயி மாப்பிள்ளைக்கு நான் எங்கிட்டு அலையறது. சொல்லுங்க” பணிவாய் கேட்டவரைக் கண்டதும், தனது தாயை நினைத்தான். ‘எங்கம்மா காரியம் சாதிக்க எப்டி பேசுவாங்களோ, அதுக்குமேல இப்டி நல்லவங்களா பேசினா.. நான் என்னத்தைச் சொல்வேன்’ என அவனது எண்ணமே அவருக்காய் கொடிபிடிக்க, தன் நிலையை யோசித்து அலறியது.
ஆனாலும் தான் இந்த இடத்தில் பேசாதிருந்தால், திவ்யாவை இழக்க நேரிடுமோ என்கிற பரிதவிப்பில், “இல்ல.. என்னோட விருப்பத்துக்கு, எங்க வீட்ல யாரும் மறுக்கமாட்டாங்க”
“அது நீங்களா சொல்றீங்கப்பா. நீங்க சொல்றதை வச்சி, நான் எப்டி நம்பறது. உங்க வீட்டுப் பெரியவுக சொன்னாலுமே, அதை நம்பி, எந்த நம்பிக்கையில பொண்ணைப் பெத்தவ வச்சிருக்க முடியும் சொல்லுங்க.”
“…”
“இல்ல.. இப்ப உங்க வீட்டுலயும் சரினு சொல்லி, நானும் நம்பி வச்சிருந்து, ரெண்டு வருசம் போனபின்ன, உங்க வீட்டு ஆளுங்களும், நீங்களும் ஏதோ காரணத்தைச் சொல்லி மறுத்துட்டா… அப்ப எம்புள்ளையோட நிலமை..”
“…” ‘இப்டி இடக்கா கேட்டா என்னத்தைச் சொல்ல’ என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தான்.
“இப்பவே உங்க வீட்ல பேசி, எல்லாத்துக்கும் ஒரு முடிவு தெரிஞ்சிட்டாலும், எதாவது ஒப்பந்தம்போல கைப்பட ரெண்டு சைடிலயும் எழுதிக்கற மாதிரி முடிவெடுத்துக்கலாமா?” நயமாய் கேட்பதுபோல, நங்கூரமாய்த் துவங்கியிருந்தார் ஈஸ்வரி தனது இலக்கை நோக்கி.
‘ஏதே’ இப்டித்தான் கத்தத் தோன்றியது கிருபாவிற்கு. ஆனால் சூழல் கருதி அமைதியாக இருந்தான்.
இதை கிருபா எதிர்பார்க்கவில்லை. தனது தமக்கைகள் இருவர் இருக்க, தனக்காய் இப்போது போய் பேசினால் நன்றாகவா இருக்கும் என அவனுக்கே அதில் உடன்பாடில்லை.
அதைக்காட்டிலும் ஒப்பந்தம் என்று போய் தந்தையிடம் நின்றால் அவ்வளவுதான் என்பதையும் அறிந்து பதற்றம் வந்திருந்தது அவனுக்கு.
“இல்ல… அது…” தயங்கினான்.
“அப்ப இதையெல்லாம் யோசிக்காமத்தான் ரெண்டுபேரா முடிவெடுத்திருக்கீங்க”
“…”
“ஏன் இவ்ளோ தயக்கம்னு நான் தெரிஞ்சிக்கலாமா?”
“இல்ல.. அக்கா ரெண்டு பேரு கல்யாணத்துக்கு இருக்கும்போது.. இப்போ என்ன எங்கல்யாணத்துக்கு அவசரம்னு யோசிச்சேன். அத்தோட ஒப்பந்தமெல்லாம்னா..” உள்ளதை உரைக்க இயலாமல், தவித்தவனைக் கண்டவர் சட்டெனப் பேசியிருந்தார்.
“அப்ப… உங்க வீட்டுப் பொம்பிளைப் புள்ளைகளுக்கு பாதிப்பு வரக்கூடாதுன்னு யோசிக்கறவன், எம்புள்ளை எப்பிடிப் போனாலும் பரவாயில்லனுதான யோசிச்சிருக்க”, சட்டென ஒருமைக்கு தாவியிருந்தார் ஈஸ்வரி.
“…” நியாயமாகத் தோன்றிட கேட்டுக் கொண்டானே அன்றி, பதில் பேச முயலவில்லை.
“இனி… போனுல பேசறதோ, வேற எந்த இதுவும் வச்சிக்க வேணாம். உம்போக்குல நீ போ. எம்புள்ளைய எங்க தகுதிக்கு ஏத்த இடத்தில பாத்து கட்டிக் குடுத்துக்கிறேன்” சட்டென வெட்டிக் கொண்டு பேசியதோடு, கையெடுத்து கும்பிட்டவரைப் பார்த்தவனுக்கு, வருத்தமாய்ப் போனது.
“இல்ல… கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க.. ரெண்டு பேருக்குமே பிடிச்சிருக்கு…”
இடையிட்டவர், “இது சரியா வரும்னு தோணுதா?” கேள்வியாய் கிருபாவை நோக்கினார் ஈஸ்வரி.
“…” பரிதாபமாய்ப் பார்த்திருந்தான்.
“இல்ல.. இதுக்கு மேலயும், நாலு காவாலிங்களைக் கூட்டிட்டு வந்து, எம்புள்ளையக் கூட்டிட்டுப் போயிரலாம்னு நினைச்சா.. அதுக்கும் நான் அசரமாட்டேன். ஆனா.. நீ அப்டி நினைச்சு கல்யாணம் பண்ணிட்டாலும், கண்டிப்பா உங்குடும்பம், அக்கா, தங்கச்சி, அப்பா, அம்மானு எல்லாத்தையும் அத்தோட மறந்திரணும்”
‘என்னாது சொர்ணாக்கா கணக்கா பேசுறாங்க’ எனப் பார்த்திருந்தான்.
ஈஸ்வரியின் பேச்சைக் கேட்டு அதிர்ந்தாலும், அதைக் காட்டாது அமைதியாக நின்றிருந்தவனிடம், “அப்டி நீ முடிவு பண்ணா நான் சொல்றபடித்தான் நடக்கும். அது எப்டினு எல்லாம் யோசிக்காத.. ஆறு மாசத்துக்குள்ள எம்பொண்ணுகூட நீயும் வீட்டோட மாப்பிள்ளையா வந்து சேரத் தயாரா இரு” ஆணித்தரமாய் உரைத்தவர்
“நாத்தானார் இருக்கற எடத்துல, எம்பொண்ணை ஒருக்காலும் கட்டிக் குடுக்கவே எனக்கு விருப்பமில்லை. அப்டியிருக்க எப்டி, அப்டி ஒரு வீட்ல வாழ வைக்க நினைப்பேன். எனக்கு அதுல சுத்தமா விருப்பமில்ல. அதனால.. நான் நினைச்ச மாதிரி நீ ஒதுங்கிட்டா.. அத்தோட யாருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்ல. இல்லைனா.. இது எல்லாத்துக்கும் நீ சரிப்பட்டு வந்தேயாகனும். வரலைன்னு நீ சொன்னாலும், வரவைப்பேன். பாத்து முடிவெடு” பிசிரில்லாமல் வெடிகுண்டாய் வார்த்தைகளை உதிர்த்துவிட்டு, கடைப் பையனின் இரண்டாவது அழைப்பிற்கு சாதாரணமாய், திரும்பிப் பார்த்தார்.
அதற்குள் டீ வாங்கி வந்தவன் “க்கா.. டீ ஆறிரப் போவுது” என்க
எடுத்து வந்து கிருபாவிடம் நீட்ட, “இல்ல இப்பத்தான் குடிச்சேன்” என மறுக்க
“சும்மா குடிப்பா”
“இல்ல” மறுத்தவன், அதற்குமேல் தாமதிக்காமல் கிளம்பிவிட்டான்.
கிருபா வருமுன்பே, விக்னேஷ் மற்றும் தான் விசாரிக்க ஏற்பாடு செய்திருந்த நபர்களின் மூலம், கிருபாவைப் பற்றி, அவனது குடும்பத்தைப் பற்றி முழுமையாக கேட்டறிந்திருந்தார் ஈஸ்வரி.
அவரின் கணவன் முரளியின் குடும்பத்திற்கு இணையான அந்தஸ்தில் இருந்த கிருபாவிற்கு, திவ்யாவைக் குடுக்க மனமிருந்தாலும், அவர்களின் வீட்டிற்கு தன் மகளை மருமகளாய் அனுப்பும் எண்ணம் துளியுமில்லை ஈஸ்வரிக்கு.
இதேபோலத்தான் இரண்டு நாத்தனார்களால் தனது வாழ்வு மிகவும் சீரழிந்தது என்பது, நினைவில் இல்லாமல் எப்படி மறந்துபோகும் ஈஸ்வரிக்கு.
ஆகையினால், என்ன பேசினால் கிருபா அமைதியாவான் என்பதைக்கூட, கேட்டறிந்து கொண்டு அதற்கேற்ப பேசி அனுப்பி வைத்திருந்தார் ஈஸ்வரி.
அடுத்து மகளை சமாளிக்க வேண்டும். அது எப்படி என யோசித்தவர், அன்றே ஜெகனுக்கு அழைத்துப் பேசினார்.
“நெறைய இடம் கேட்டு வருது. அதான் இப்ப உங்களுக்கு உடனே தோதுன்னா பொண்ணை வச்சிருக்கேன். இல்லைனா கேக்கறவங்களுக்கு குடுத்திரலாம்னு இருக்கேன். அத்தைகிட்டயும் இது சம்பந்தமா பேசிருக்கேன். பேசிட்டுச் சொல்லுங்க” என வைத்திருந்தார் ஈஸ்வரி.
கிருபா விசயம் வெளியே தெரிந்தால், வரன்களின் வீட்டில் மகளை பெண்ணெடுக்க யோசிப்பார்கள் என்பதைவிட, தனது பந்தங்களுக்கு பாந்தமாய் செய்தியைப் பரப்பி, ஒன்றை நான்காகத் திரிப்பதோடு, மகளின் எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்கி விடுவார்கள் என்பதை அறிந்து அதைப்பற்றி மூச்சு விடவில்லை.
திவ்யாவின் தாய் பேசியது, கணேசன் பேசியது அனைத்தையும் தனது பயணத்தின்போது மாற்றி, மாற்றி யோசித்தபடியே, ஒரு முடிவோடு வீட்டை அடைந்திருந்தான் கிருபா.
………………………….